ஏழைகளின் படைத்தளபதி தோழர் ஏ.கே.ஜி.


இந்திய விடுதலைப் போராட்டத்திலிருந்து துவங்கி விடுதலைப் பெற்ற இந்தியாவில் 30 ஆண்டுகள் நாடெங்கிலுமுள்ள மக்கள் போராட்டத் தளங்களில் புயலாய், பரந்த மக்கள் தலைவராக இருந்தவர் தோழர் ஏ.கே. கோபாலன். போராட்டம் என்ற சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்ந்த வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் அவர்.

1904 அக்டோபர் முதல் நாளில் பிறந்து, பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்னரே சமூக ஆர்வம் கொண்டு இயங்கத் துவங்கினார். 10ஆம் வகுப்பு முடித்து ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய காலம் சமூகப் பிரச்சனைகளில் ஈடுபட்டு, தீண்டாமை மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத் துவங்கினார்.

1927இல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 1930இல் ஆசிரியர் வேலையை உதறிவிட்டு, சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டார். கண்ணூர், வேலூர் சிறைகளில் அடைக்கப்ட்டார்.

1913இல் தலித் மக்களுக்கு நடந்து செல்லவும் உரிமை மறுக்கப்பட்ட வடக்கு மலபார் மாவட்டம் பய்யன்னூரில் சாலையில், அவர்களை ஒன்று திரட்டி நடந்து சென்றமைக்காக சாதி வெறியர்களின் கொடூரமான தாக்குதலுக்குள்ளானார்.

அதே ஆண்டில், புகழ் பெற்ற குருவாயூர் கோயில் நுழைவுப் போராட்டத்தில், தொண்டர்படை தளபதியாக இருந்து பெரும் பணியாற்றினார். கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர், கண்ணூர், கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார்.

1932இல், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி துவங்கப்பட்ட போது அதில் இணைந்தார். 1936இல் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘பட்டினி ஜாதா’வுக்கு தலைமையேற்று கண்ணூரிலிருந்து சென்னை வரை 27 தொண்டர்களுடன் நடைபயணம். 750 மைல்கள் நடந்து சென்று ஒரு மாத காலம் மக்களிடையே பிரச்சாரம் செய்து, சென்னை வந்து சேர்ந்த இந்த பயணம் அன்றைய சென்னை மாகாணத்தில் மலபார் மற்றும் தமிழகப் பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1938இல் திருவாங்கூர் மக்களின் போராட்டங்களுடன் ஒருமைப்பாடு தெரிவித்து, தடையை மீறி நடத்திய திருவாங்கூரை நோக்கிய பயணத்தை ஒட்டி கைது செய்யப்பட்டார். ஏ.கே.ஜி.யின் தலைமையில் நடைபெற்ற இந்த பயணத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர், தோழர் வி.பி. சிந்தன். மன்னராட்சிக்குட்பட்ட திருவாங்கூரில் நடைபெறும் கிளர்ச்சிகளுக்கு வலுவூட்ட, மலபார் பகுதியின் காங்கிரஸ் சோசலிஸ்டுகளின் திட்டம் தான் இந்தப் பேரணி!

1939 இறுதியில், காங்கிரஸ் சோசலிஸ்டுகள் கம்யூனிஸ்ட்டாக மாறும் காலத்தில், முன்னணியில் நின்று செயல்பட்டார். 1940 மார்ச் மாதம் முதல் தலைமறைவு வாழ்க்கை. 1941 மார்ச்சில் கைதானார். 1941 செப்டம்பர் 25இல் வேலூர் சிறையிலிருந்து தப்பித்தவர், நான்கு வருடங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து, மக்கள் இயக்கங்களை வழி நடத்தினார்.

இத்தனைப் போராட்டங்களையும் நடத்தி, தேச விடுதலைக்காக முன்நின்றவர். 1947 ஆகஸ்ட் 15 அன்றும் சிறையிலேயே தான் இருந்தார். சிறையில், தேச விடுதலை நாளன்று, தேசியக் கொடியை பறக்கவிட்டு, கொடூரமானத் தாக்குதலுக்கு உள்ளானார். அக்டோபர் 24 அன்று தான் சிறையிலிருந்து வெளிவந்து, சுதந்திர இந்தியாவை தரிசிக்க முடிந்தது!

சுதந்திர இந்தியாவில் சிறை வாழ்க்கை துவங்கியது, 1947 டிசம்பரில்! காவல்துறை ஆய்வாளரைக் கொலை செய்யப் போவதாக மிரட்டினார் என திரிச்சூரில், விய்யூர் சிறையிலும், தொடர்ந்து இராஜமுந்திரி சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இந்த காலத்தில் சிறையில் 26 நாள் உண்ணாவிரதமிருந்தார். அரசு வாக்குறுதியையொட்டி, உண்ணாவிரதம் முடித்தவர், வாக்குறுதிகள் மீறப்பட்டதால் மீண்டும் 10 நாட்கள் உண்ணாவிரதம்!

சிறை வாழ்க்கை தொடர்ந்தது. தடுப்புக் காவல் சட்டப்படி சிறையிலடைக்கப்பட்டதால் அந்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், பிறகு உயர்நீதிமன்றத்திலும் வழக்குகளை நடத்தி 1951இல் விடுதலையானார்.

1950இல், நடைபெற்ற ஏ.கே.ஜி.யின் உச்சநீதிமன்ற வழக்குதான், இந்திய அரசியல் சட்ட சரத்துகளுக்கு எதிரான முதல் வழக்கு! சட்ட மாணவர்களுக்கு இப்போதும் முக்கிய வழக்காக எடுத்துக்காட்டப்படும் வழக்கு இது.

1951இல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இறுதி நாள் வரை அந்தப் பொறுப்பு வகித்தார்.

1952 முதல் பொதுத் தேர்தலில் துவங்கி, 1977 வரை மக்களவை உறுப்பினராகத் தொடர்ந்தார். முதல் மக்களவையில் பிரதான எதிர்கட்சிக்குழுவின் தலைவராக இருந்தார். 1967 முதல், சிபிஐ(எம்) குழுத்தவைராக இருந்தார்.

இந்தக் காலத்தில் நாடெங்கிலும் நடைபெற்ற முக்கியமான மக்கள் இயக்கங்களுக்கெல்லாம் தனது நேரடி பங்கேற்பின் மூலம் உற்சாகமூட்டினார்.

தமிழகம், ஆந்திரா, பஞ்சாப், குஜராத், மேற்குவங்கம், இராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் மொழிவழி மாநில இயக்கம், அடக்குமுறை எதிர்ப்பு இயக்கம், விவசாயிகளின் கிளர்ச்சி, விலை உயர்வு எதிர்ப்பு போராட்டம் என பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்களுக்கு அவரது தலைமையும் வழிகாட்டுதல்களின் மூலம் ஏற்பட்ட எழுச்சிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1957 – 59 காலத்தில், இ.எம்.எஸ். அமைச்சரவை காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய, 1960ஆம் ஆண்டின் காங்கிரஸ் கூட்டணி முயற்சித்த போது, ஏ.கே.ஜி. தலைமையில், கேரள மாநிலத்தின் வட எல்லையிலிருந்து, தெற்கு தலைநகர் திருவனந்தபுரம் வரையில் நடைபயணத்தை தலைமையேற்று நடத்தி மக்கள் போராட்டங் களில் மீண்டும் வரலாறு படைத்தார்!

1964இல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திருத்தல்வாத எதிர்ப்புப் போராட்டத்தில் திருப்பு முனையாக, கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய 32 தோழர்களில் ஒருவர் தோழர் ஏ.கே. கோபாலன்!

1964இல் கட்சியின் 7வது மாநாட்டில், அரசியல் தலைமைக்குழுவாக தேர்வு செய்யப்பட்ட ‘நவரத்தினங்களில்’ ஒருவர் தோழர் ஏகேஜி!

1960களில் கேரள மாநிலத்தில், தோழர் ஏ.கே.ஜி.யின் நேரடித் தலைமையில் நடைபெற்ற நில வெளியேற்ற எதிர்ப்பு, நிலமீட்சிப் போராட்டங்கள், 10 சென்ட் குடிமனைப் போராட்டங்கள் அந்த மாநிலத்தின் மக்கள் இயக்க வரலாற்றில் என்றென்றும் மறக்க முடியாத எழுச்சிகளாக மாறியது.

1974இல் இரயில்வே தொழிலாளர்கள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில், கொடூரமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு, இரயில்வே குடியிருப்புகள் அனைத்தும் சிறைக் கூடங்கள் போன்று ஆக்கப்பட்ட போது, இரயில்வே தொழிலாளர்களை துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி, பணிக்கு செல்லச் செய்ய ஆட்சியாளர்கள் முன்வந்தபோது, கேரளாவில் இரயில்வே தண்டவாளங்கள் வழியாகவே நடந்து சென்று தொழிலாளர்களையும் குடும்பத் தினரையும் சந்தித்து, பாசக்கரம் நீட்டி, ஆறுதல் கூறிய 70 வயது நிறைந்த தலைவர், இந்திய தொழிலாளர் வர்க்கத்தால் என்றென்றும் மறக்க முடியாதவராகிறார். அவரது போராட்ட வாழ்க்கையின் இறுதி நாட்களில், கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்த போதிலும், பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. எந்த சுதந்திரத் தையும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் வென்றெடுப் பதற்கு, அவர் வாழ்நாள் முழுவது  ம் போராடினாரோ, அந்த சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் வேட்டு வைக்கக் கூடிய நடவடிக்கைளை இந்திய ஆளும் வர்க்கம் மேற்கொண்டது.

1975 ஜூன் 25 இரவில் அவசரக் கால அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அரசியல் சட்டப்படியான உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு நாடே சிறைக் கூடமாக்கப் பட்டது. பத்திரிகைகளின் குரல்வளை நெறிக்கப்பட்டது. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பாசிச சக்திகளை எதிர்க்கிறோம், அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றவே அவசரக் காலம் என அறிவித்தது. “இந்தியா தான் இந்திரா, இந்திரா தான் இந்தியா” என காங்கிரஸ் கட்சித் தலைவர் கோஷங்களை முழங்கினார். ‘வாயை மூடு, வேiலையைச் செய்’ என்ற ஆட்சியாளர்களின் கட்டளைகளை முதலாளி வர்க்கமும் அவர்களது எடுபிடிகளாக செயல்பட முன் வந்தவர்களும் வரவேற்று புகழ் பாடினார்கள்.

‘பெண் இட்லர் பிறக்கிறார்’ என்பதே அவசரக் காலம் குறித்த ஏ.கே.ஜி.யின் முதல் கருத்தாக இருந்தது. ஜனநாயக மறுப்புக்கு எதிராக, நாடு சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லப் படுவதற்கு எதிராக களத்தில் இறங்கினார் ஏ.கே.ஜி.

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான தலைவர்கள், பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள், சட்டமன்ற –  நாடாளுமன்ற உறுப்பினர்கள், எண்ணற்ற ஊழியர்கள் தடுப்புக் காவல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொதித்தெழுந்து போராடிய கேரள மக்கள் மீது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அச்சுதமேனன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை, அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. ‘தோழர்கள் ஏ.கே.ஜி., இ.எம்.எஸ். உட்பட தலைவர்கள் தடையை மீறி ஊர்வலம் நடத்தி கைதானார்கள். அதற்கு முன்னதாகவே எண்ணற்ற தலைவர்களும் ஊழியர்களும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே நாடாளுமன்றக் கூட்டம் நடத்தி, அவசரக்  கால அறிவிப்புக்கு ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. தோழர் ஏ.கே.ஜி. விடுதலை செய்யப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் மக்களவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

சர்வாதிகாரப் பயணத்திற்கு சவால் விடுத்து, மக்களவையில், அவர் ஆற்றிய உரை அப்போது, எதிர்ப்பு இயக்கத்தின் பேராயுதமாக பயன்பட்டது. மக்களவைப் பேச்சுக்கள் கூட பத்திரிகைகளில் வெளிவர இயலாத நிலை. தோழர் ஏ.கே.ஜியின், நன்கு தயார் செய்யப்பட்ட உரை, நாடெங்கிலும் அனைத்து மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு, லட்சக்கணக்கான பிரதிகள் இரகசியமாக வினியோகிக்கப்பட்டன. நாடே சிறைக் கூடமாக்கப்பட்ட நிலையை சுட்டிக்காட்டி உரையாற்றிய தோழர் ஏ.கே.ஜி குறிப்பிட்டார்;

“நான் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட நிலையில் இங்கு வந்துள்ளேன். எனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிர்மாய் பாசு, நூருல் ஹூதா உட்பட 34 உறுப்பினர்கள் சிறையில் உள்ளனர். சிறைக் கூடத்தைக் கண்டு நான் அஞ்சுவதில்லை. 45 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் 17 ஆண்டுகள் சிறையில் தான் வாழ்ந்தேன். நாட்டின் விடுதலைக்காகப் போராடி, சிறை சென்றதோடு, துயரங்கள் பலவற்றுக்கும் ஆளான காங்கிரஸ்காரனாக இருந்தவன் நான். அப்படிப்பட்ட என்னிடம் ஏன் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் என்னை விடுவித்தார்கள். என்னை கைது செய்யும் போது, எனது தோழர்கள் தடுத்திராவிட்டால் காவல் துறையினர் எனது மண்டையை பிளந்திருப்பார்கள். எனது தோழர்கள் என்னைக் காப்பாற்றாமல் எனது உயிர் போயிருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். ஏனெனில், என்னைப் பொறுத்த மட்டிலும் அது முற்றிலும் சிறப்பானதொரு மரணமாக இருந்திருக்கும். தொழிலாளி வர்க்கத்திற்காகப் போராடுகிறபோது, நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகப் போர்க் களத்தில் உயிர் போவதாயற்றே!… துரதிருஷ்டமாக நான் இறக்கவில்லை. எனது சிந்தனைகளை வெளிப்படுத்த இதோ உங்கள் முன்னால் நிற்கிறேன்” என்ற முன்னுரை யோடு அவரது உரையைத் துவங்கினார்.

இந்திய அரசியல் நிலைமையை, அதன் வர்க்கப் பின்னணியோடு அவர் கீழ் வருமாறு விளக்கினார்.

“நாட்டின் பொருளாதார நிலை, சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வசதி படைத்தவன் மேலும் வசதி படைத்தவனாகிறான். ஏழை, மேலும் ஏழையாக மாறுகிறான். இதற்கெல்லாம் பொறுப்பான இந்திரா காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் ஆத்திரமடைந் துள்ளனர். அதை ஒடுக்குவதற்காகத்தான் அவசர நிலை. 1971ஆம் ஆண்டிலிருந்தே நாம் அவசரக் கால நிலையில் தானே உள்ளோம். அந்த நிலையிலேயே அரசாங் கத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் இருந்தன. பத்திரிகை சுதந்திரம் கூட அதற்கு உட்பட்டதாகத்தானே இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் ஓர் பிரகடனம். இது எதற்கு என புரியவில்லை. சிபிஐ(எம்) உட்பட எதிர் கட்சிகளை ஒடுக்கவும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் உயிர் மூச்சைப் பறிக்கவும் நீங்கள் அன்றைய காலத்தையும், ‘மிசா’வையும் பயன்படுத்தினீர்கள்.

திரிபுராவின் எதிர்க்கட்சி தலைவர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை, அரசு ஊழியர்களை அனைவரையும் நீங்கள் இந்த கறுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறையிலடைக்க வில்லையா? அன்றைய அவசரக் காலத்திற்கு இவ்வளவு உதாரணங்கள் போதாதா? ஒரு கட்சி எதேச்சதிகார ஆட்சிக்கும், எல்லையற்ற அதிகாரத் தன்மைக்கும் எதிராக, கடந்த மூன்று மாதங்களாக எங்களது கட்சி வெளியிட்ட முன்னெச்சரிக்கைகள் பொருள் பொதிந்தவை என இந்த அவசரக் கால அறிவிப்பு தெளிவுபடுத்தியுள்ளது. எதேச்சதிகாரம் ஜனநாயகத்தை ஓரம் கட்டிவிட்டது. அனைத்து அதிகாரங்களும் ஒரு கட்சியின் கைகளில் காங்கிரசின் ஒரு தலைவரது கைகளில் உள்ளது – இந்திராவின் கைகளில்.

இது அவர்களது வலிமையின் வெளிப்பாடல்ல, பலவீனத்தின் வெளிபாடு தான். கட்சியும், ஆளும் வர்க்கமும் நெருக்கடியிலிருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டு தான். பலவீனமான ஆளும் கட்சியையும் ஆளும் வர்க்கத்தையும் ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதற்கும் அவர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகளிலிருந்து மீளவும் தான் இந்தப் பாதை மாற்றம். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உழைப்பாளி வர்க்கம் மற்றும் மக்களுக்குள்ள உரிமைகள் ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக தெரிகிறது. அதனால் தான் தொழிற்சங்கங் களையும் உரிமைகளையும் முடக்குகிறார்கள். எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியிலிருக்க வேண்டுமென்றால், அரை பாசிச ஒடுக்குமுறையும், மேற்கு வங்க பாணி தேர்தல் மோசடிகளும் ‘மிசா’ போன்ற கறுப்புச் சட்டங்களும் தேவை என்றாகிவிட்டது.”

இவ்வாறு, இந்திய ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் எப்போதுமே ஆளும் வர்க்கத்திடமிருந்தே வருமென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை நிலையை, நாடாளுமன்றத்தில் தெளிவாக எடுத்துரைத்தார் தோழர் ஏ.கே.ஜி! அவர் மேலும் கூறினார்;

“மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட எங்களால் இயலாது. நாட்டின் ஜனநாயக அமைப்பு முறை பெயரளவிலானதாக்குவதற்கும் இசைவளிக்க இயலாது. இந்திய நாட்டின் ஜனநாயக நன்மதிப்புகளை, தனிநபர் சுதந்திரத்தை, கருத்துச் சுதந்திரத்தை அமைப்பு ரீதியாக திரள்வதற்கான சுதந்திரத்தை, நீதிமன்றத்தை அணுகு வதற்கான சுதந்திரத்தை, பத்திரிகைச் சுதந்திரத்தை, அரசாங்க செயல்பாடுகளை விமர்சிக்கவும், வேறு ஒரு மாற்று அரசை அமைக்கவும் பணியாற்றுவதற்கான சுதந்திரத்தை கைவிடுவது இயலாத விசயம். அரசாங்க செயல்களை முழுமையாக ஆதரிப்பதும், விமர்சிக்கா மலிருப்பதும் தான் சுதந்திரம் என அரசாங்கம் கூறுகிறது. அதனாலேயே நாங்கள் அந்தக் கருத்தோடு மாறுபடுகிறோம். சுதந்திரம் என்பது கருத்துச் சுதந்திரம். இந்த நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளும், காங்கிரசும் உட்பட்ட மக்கள் இந்த அரசாங்கம் குறித்து என்ன வேண்டுமானாலும் கருதட்டும். அதை எடுத்துச் சொல்லுவதற்கான சுதந்திரம் அவர்களுக்கு வேண்டும். அந்த சுதந்திரம் இருக்க வேண்டும். அந்த சுதந்திரம் தான் இங்கு தடுக்கப் பட்டுள்ளது.”

ஆளும் காங்கிரசின் ஜனநாயக விரோத நிலையை அம்பலப் படுத்திய அவர், காங்கிரசின் இரட்டை நிலைபாடு களைச் சாடினார். அவசர கால அறிவிப்போடு தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஆனந்தமார்க்க இயக்கங் களோடு காங்கிரஸ் கடைபிடித்த அணுகுமுறைகளை சுட்டிக் காட்டினார்.

“1965இல் இந்தியா – பாகிஸ்தான் யுத்த காலத்தில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தில்லியின் ‘மக்கள் பாதுகாப்பை’ ஆர்.எஸ்.எஸ். இடம் ஒப்டைத்தார் பாட்னா ரயில் நிலையத்தில் ஆனந்த மார்க்கத்தினர் ஜோதிபாசுவைக் கொலை செய்ய முயற்சித்தனர். அவருடன் இருந்தவர் கொலை செய்யப்பட்டார். இருப்பினும் ஆனந்த மார்க்கத்தினர் மீது நடவடிக்கை இல்லை. ஆனால் பங்களாதேச அகதிகளுக்கு உதவுவ தற்காக அவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டது.”

உருவாகியுள்ள புதிய சூழலின் வர்க்கத் தன்மையை தெளிவுபடுத்த அவர் கீழ் வருமாறு கூறினார்.

“உற்பத்திப் பெருக்கத்தின் பெயரால், தொழிலுடை யாளர்கள் தொழிலாளர்களை எப்படியும் வேலை வாங்கலாம், எப்போது வேண்டுமானாலும் வெளியேற் றலாம். சிறு அளவிலான எதிர்ப்பு வெளிப்பட்டாலும் தொழிலாளி வெளியேற்றப்படுவான். இந்த சுரண்டலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனுமதி யில்லை. விடுதலைப் பெற்றபின் முதன் முதலாக, பிர்லா போன்றவர்கள் ஊர்வலம் நடத்தி, இந்திராவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். வலதுசாரி பிற்போக்காளர்களுக்கு எதிராக என அறிவிக்கப்பட்ட அவசரக் காலத்தை பயன்படுத்தி, கட்சித் தலைவர்களை, ஊழியர்களை அடித்து உதைத்து சிறையிலடைத்ததிலும் ஆச்சரியம் ஏதுமில்லை. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த 15-ந் தேதி வரை (ஜூலை) கைது செய்யப்பட்டுள்ளனர்.”

அவர் மேலும் கூறினார்;

“ஏகபோகங்களையும் நிலப்பிரபுக்களையும் மீண்டும் மீண்டும் கொழுக்கச் செய்துள்ள 27 ஆண்டு கால காங்கிரஸ் அரசின் தவிர்க்க இயலாத விளைவு தான் இன்றைய நிலைமை. சோசலிசம், கரீபீ ஹடாவோ (வறுமையே வெளியேறு) என எத்தனை முழக்கங்கள். அனைத்தும் உதட்டளவில் மட்டுமே. இந்தக் காலம் முழுவதும் வளர்ச்சியடைந்தவர்கள் யார்? ஏகபோகங் கள் வளர்ந்தன. கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்களுக்கு கூடுதல் அதிகாரமும் செல்வமும் கிடைத்தது. நில வெளியேற்றங்கள் பெருகியது. நிலமற்றவர்களின் எண்ணிக்கை பெருகியது. கைவினைப் பொருட்கள், கைத்தறி, விசைத்தறி, கயிறு, சிறு தொழில்கள் அனைத்தும் அழிவைச் சந்திக்கின்றன. விலைவாசி விண்ணை முட்டுகிறது.”

உணர்ச்சி மிக்க, நீண்ட உரையின் இறுதியில் அவர் கீழ்வருமாறு கூறினார்;

“என்ன விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், அவசர காலம் என்பது மக்களை ஒடுக்குவதற்காகத் தான். மக்களுக்காகவும் ஏகபோகங்களுக்கு எதிராகவும் போராடுகின்ற ஜனநாயக சக்திகளை ஒடுக்கிவிட்டு, பிற்போக்காளர்களைத் தான் எதிர்கொள்கிறோம் என கூறினால் யார் தான் நம்புவார்கள்.

ஆனால், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர சில கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த பொய்ப் பிரச்சாரத்தில் சிக்கியுள்ளனர் என்பது துரதிருஷ்ட வசமானது.

நல்லதோர் எதிர்காலத்திற்காகப் போராடத் தயாராக உள்ள அனைவரையும் அழைக்கிறோம். என்ன தியாகம் செய்ய வேண்டியதாக இருந்தாலும் நாங்கள் இந்த போராட்டத்தில் தொடர்வோம். காரணம், சிபிஐ(எம்)-யைப் பொறுத்தமட்டிலும் மக்கள் நலன் என்பதைவிட வேறு எந்த நோக்கமும் இல்லை. மக்கள் நலனைக் காக்க அவசரக் காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அது ஜனநாயக உரிமைகளுக்கு வேட்டு வைக்கிறது. அதிகார வர்க்கத்தின் முன் நாங்கள் ஒரு போதும் அடிபணிய மாட்டோம். ஒரு போதும் மக்களையும் ஜனநாயக நன்மதிப்புகளையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாங்கள் குற்றவாளிகள் அல்லவென்று வரலாறு தீர்ப்பளிக்கும்”.

விடுதலைக்கு முன்னும் பின்னுமாக நாடெங்கிலும் மக்கள் போராட்டங்களுக்கு தலைமையேற்ற ஏழை மக்களின் அந்தப் படைத்தளபதி, இறுதி நாட்களிலும் உடல் நலம் குன்றிய நிலையிலும், தனது போராட்டப் பயணத்தை தொடர்ந்தார்.

1952இல் துவங்கி, 1971 வரையிலுமான அனைத்து மக்களவை தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார். 1977இல் அவர் போட்டியிடவில்லை. 1952 நேரு அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டபோது, அவர் மக்களவையில் பேசினார்; “நீங்கள் இந்திய மக்கள் மீது போர்த்தொடுத்துள்ளீர்கள். நாங்கள் அதை எதிர்கொள்வோம்”.

மக்களவையையும், மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பையும் எவ்வாறு பயன்படுத்தவது என்பதற்கு இலக்கணமாக செயல்பட்டவர் ஏ.கே.ஜி.

அவரது அந்தப் பணி குறித்து தோழர் இ.எம்.எஸ். கீழ்வருமாறு கூறுகிறார்.

“எங்கெல்லாம் ஆளும் வர்க்கங்களும் அவர்களது கையாட்களும் மக்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக் கிறார்களோ, அங்கெல்லாம் மக்களவை எதிர்கட்சித் தலைவர் பாய்ந்து வருவார். ஒவ்வொரு இடத்திலும் ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாகவும், மக்கள் துரோகிகளுக்கு பேய்க் கனவாகவும் மாறிய இந்த கம்யூனிஸ்ட் எம்.பி.யின் வாழ்க்கையும் செயல்பாடும் இதர எதிர்க்கட்சி தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது”.

காங்கிரஸ் ஊழியனாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, விடுதலைக்குப் பின் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போராடி, இறுதி நாள் வரை அந்தப் போராட்டத்தை தொடர்ந்த அவர் மறைந்தது 1977 மார்ச் 22.

அவசரக் காலத்தை அறிவித்து, இந்திய ஜனநாயக அமைப்பையே முடமாக்கிய ஆட்சியாளர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட்டு, கற்பித்து, பிரதமர் இந்திரா காந்தியும் அவரது கட்சியும் தேர்தலில் தோல்வி கண்டதான செய்தி வெளியான அதே நாளில் ஏ.கே.ஜி. மறைந்தார்.

தோழர் ஏ.கே.ஜி. அவரது சுயசரிதையில் எழுதிய கீழ்க்காணும் வரிகள், மக்கள் இயக்கங்கள் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

“எனது தேசத்தின் மண்ணின் மைந்தர்களோடு இணைந்து போராடி, வளர்ந்த எனக்கு அவர்களுடன் தொடர்ந்து இணைந்து நின்று, நல்வாழ்க்கைக்காகப் போராடுவதை விட மகிழ்ச்சியளிப்பதாக வேறு எதுவும் இல்லை. அதைவிட திருப்தியளிப்பதாக வேறு எதுவும் இல்லை.

இந்தப் போராட்டத்தில் முதியவனாகி விட்ட நான், கால் சருக்கி விழுந்து விடலாம்; லட்சியத்தை எட்ட எனக்கு முடியாமல் போகலாம்; ஆனால் எனது தோழர்கள், எனது பாதையில் கூடுதல் ஆவேசத்துடன் முன்னேறி லட்சியத்தை எட்டுவார்கள். இந்தியாவில் ஏழைகள், உழைப்பாளி மக்கள், துயருற்றிருக்கும் நடுத்தர மக்கள் பிரிவினர் அனைவருக்குமான வசந்த காலம் பிறக்கும். இந்த வசந்தப் பிறவியை மிகவும் விரும்பும் எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் வருத்தப்பட மாட்டேன். காரணம் எனது தோழர்களால் அதை காண முடியும். அது உறுதி”.

இதுவே அவர் நமக்களித்த வாழ்க்கைச் செய்தி. அவர் அடையாளம் காட்டிய பாதையில் பயணத்தை தொடர்வோம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s