போபால் விஷவாயுப் புயல்- மர்மங்களின் புதையல்
1984 டிசம்பர் 2ஆம் தேதி நடு இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையில் இருந்த 40 ஆயிரம் கிலோ “மீதையில் ஐசோசயனைட்” (சுருக்கமாக, எம்.ஐ.சி) என்ற விஷவாயு புயலாகி போபால் நகரில், 40 (அரசு கூறுவது) – 65 (ஆய்வாளர்கள் கணிப்பு) சதுர கிலோமீட்டர் பரப்ப ளவில் பரவி வெட்ட வெளியி லும், கதவற்ற குடிசைகளிலும், வீடுகளுக்குள்ளும், ரயில், பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையத்திற்குள் இரவு நுழை ந்த ரயில்களிலும் தூங்கிக் கொண்டிருந்த பல ஆயிரம் மக்களை கொன்று குவித்த தையும் பல லட்சம் பேரை குருடாக்கியதையும், சுவாசக் கோளாறுகளால் நடைப்பிணமாக்கியதையும், தோலுரிந்து அவதிப்பட வைத்ததையும் எதிர்பாராத விபத்து எனக் கூற முடியுமா? அல்லது யூனியன் கார்பைடு நிர்வாகமும், நிறுவனத்தின் உப தலைவராக இருந்த பிரொவ்னிங் ஜாக்சனும் சாதித்ததுபோல், ஆத்திரமடைந்த ஒரு தொழிலாளி எம்.ஐ.சி ஸ்டோரேஜ் டாங்கில் தண்ணீரை கொட்டிய சதியால் விளைந்தது என்று கூறமுடியுமா?
வழக்குகளும் வேதனைகளும்
அமெரிக்காவிலும், இந்தியாவிலும் 26 வருடங்களாக முடிவிற்கு வராமல் நடக்கிற வழக்குகள் மூலம் கிடைக்கிற தகவல்கள், மறைக்கப்படும் தகவல்கள், கசியும் தகவல்கள் இவைகளை வைத்து விடை தேடினால் விஷவாயுப் புயல், ஊழியரின் சதியால் அல்ல, லாப வெறியாலும், நன்கு திட்டமிட்ட ஒரு ராணுவ ரகசிய திட்டத்தின் விளைவாலும், மக்களை மரக்கட்டைகளாக கருதும் ஒரு அரசாலும் ஏற்பட்ட கொடுமையான நிகழ்வே இது என்ற முடிவிற்கே பொது அறிவுள்ள எவரும் வருவர். கீழே கண்ட ஆதாரப்பூர்வமான தகவல்களை மனதில் போட்டு முடிவிற்கு வாருங்கள். ஏகாதிபத்தியவாதிகள் இப்படியெல்லாம் செய்வார் களா என்று கேட்போருக்கும், ஜனநாயக நாட்டில் மக்களை மரக்கட்டைகளாக ஒரு அரசு கருத இயலுமா என்று ஐயம் கொள்வோருக்கும் விடை பின்னர்.
ஆன்டர்சனை காப்பாற்றிய அமெரிக்க ஜனாதிபதி
“மீதையில் ஐசோசயனைட்டை” ரசாயன ஆயுதமாகவும் ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்தப் பொருளை தயாரிப்பது மற்ற ரசாயன ஆயுதங்களான “மஸ்டர்டு வாயு” போன்ற விஷ வாயுக்களைவிட செலவு குறைவானது. இப்பொருள் இல்லாமல் வேறு வழியிலும் பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யமுடியும். (ஆதாரம் விக்கிபீடியா). 1969 முதல் 1979 வரை வேறுவழியில் பூச்சிக் கொல்லி மருந்து தயாரித்து வந்ததை மாற்றி மீதையில் ஐசோசயனைட்டை பயன்படுத்தும் புதிய முறையைக் கொண்டு வந்த யூனியன் கார்பைடு அதிபர் ஆன்டர்சனை அன்றைய ஜானாதிபதி ரீகன் தலையிட்டு ராஜிவ் காந்தியோடு பேசி கோர்ட்டிற்கு வெளியே கைதிகள் பரிவர்த்தனை மூலம் கிரிமினல் வழக்கிலிருந்து விடுவித்தார்.
(பிசினஸ் லைன் செய்தி- முன்னாள் மைய அரசின் உள்துறை அதிகாரி எழுதியது)
1991-இல் மக்களின் போராட்டத்தால் உச்சநீதி மன்றத்தில் மறுபரிசீலனைக்கு வந்தபொழுது கிரிமினல் வழக்கு புதுப்பிக்கப் பட்டது. அதே நேரம் குற்றச்சாட்டு ஷரத்தை, ஆரம்பத்தில் இருந்த கொலைக்குற்ற ஷரத்தின்கீழ் கொண்டு வர உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.
2010-ஆம் ஆண்டில் போபால் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் தண்டனை பெற்றவர்கள் பட்டடியலில் ஆண்டர்சன் பெயர் சேர்க்கப்படவில்லை. அவருக்கு அமெரிக்க அரசு பாதுகாப்பு இன்றும் கொடுத்து வருகிறது. அதே நேரம் 1988இல் போபால் கோர்ட் கொடுத்த கைது வாரண்ட் இன்றும் சி.பி.ஐயின் கையில் இருக்கிறது.
இவைகளையும் ஆலைக்குள் நடந்தவைகளையும் சேர்த்துப் பார்த்தால் போபால் விஷ வாயுப் புயல், ராணுவ அரசியல் மர்மங்களின் புதையல் என்பதில் சந்தேகமே எழாது. இந்திய அரசு இந்தக் கோர சம்பவத்தை, விபத்தாக சித்தரிப்பதில் காட்டுகிற அக்கறையில் லட்சத்தில் ஒரு பங்காவது ஏகாதிபத்திய சதிகளை அறியக் காட்டியிருந்தால் இந்த சம்பவம் நேர்ந்து இருக்காது.
2004-ஆம் ஆண்டில் கான்பூர் ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் வெளிவந்த ஒரு உண்மை, விபத்து நடந்த மறுநாள் இந்திய அரசின் விஞ்ஞானிகளும், நிர்வாகமும் இணைந்து “ஆபரேஷன் பெயித்” என்ற செயலில் இறங்கினர். மீதமுள்ள எம்.சி.ஐ என்ற விஷப் பொருளை பூச்சிக் கொல்லி மருந்தாக (சேவின் என்ற கார்பைல்) ஒரு வாரம் தொழிற்சாலையை ஓட்டி டிசம்பர் 16-க்குள் தயாரித்து முடித்தனர். அவைகளை விற்று நிர்வாகம் காசும் சேர்த்துவிட்டது. இந்த ஒரு வாரகாலத்தில் ஊரே வெறிச்சோடி கிடந்தது. விபத்து நடந்த பிறகும் ஆலை வேலை செய்தது. ஆனால் இந்திய அரசின் விஞ்ஞானிகளும், யூனியன் கார்பைடு நிர்வாகமும் உற்பத்தியில் கவனம் செலுத்தியது போல் இதர விஷ ரசாயனப் பொருளை அகற்ற முயற்சிக்கவில்லை. அவைகளை பிளாஸ்டிக் பாயால் போர்த்தி மறைத்து விட்டனர். உற்பத்தி நடக்க உடனிருந்து உதவிய இந்திய விஞ்ஞானிகள், மற்ற விஷப்பொருளை அகற்ற அக்கறை கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
நிர்வாகமும், எல்லாவிதமான விஷப்பொருள்களையும் 20 லட்சம் டாலர் செலவழித்து அப்புறப்படுத்தியதாக கூறியது பொய். ஆலையை ஓட்டி தனது லாபத்தை பாதுகாத்துக் கொண்டது என்பதே உண்மை. சொந்த செலவில் விஷப்பொருளை அகற்ற அரசு செய்த இன்றைய அறிவிப்பே இதற்கு அத்தாட்சியாக உள்ளது. யூனியன் கார்பைடு நிர்வாகம், அகற்றியதாக கூறிய விஷப்பொருட்களின் பட்டியலையோ, யார் மூலம் அகற்றப்பட்டது, எந்த முறையில் அகற்றப்பட்டது என்பதையோ கூற மறுக்கிறது. நமது அரசும் கேட்க மறுக்கிறது. (ஆதாரம் 2004இல் நடந்த கருத்தரங்கம்)
கொடுமை என்னவெனில் கடந்த 26 வருடங்களாக 300 டன் விஷப் பொருட்கள் போபால் ஆலையில் முடங்கிக் கிடப்பதை அப்புறப்படுத்த இனிதான் அரசு முயற்சிக்கப் போவதாக அறிவித்துள்ளது, இத்தனை வருடங்களாக அந்த விஷ ரசாயனங்கள் நிலத்தையும், நீரையும், காற்றையும் கெடுத்து வருவதைப் பற்றி என்னவென்று சொல்வது! மக்களை மரக்கட்டைகளாக கருதுகிற அரசு என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். எனவே போபால் விபத்து முற்றிலும் எதிர்பாராதது அல்ல! ஆன்டர்சன் எதிர்பார்த்தது. ஊழியர் களின் எச்சரிக்கையை வேண்டுமென்றே உதாசீனப்படுத்தியதால் விளைந்த ஒரு கோர சம்பவம்.
யூனியன் கார்பைடின் பூச்சி மருந்து ஆலை
51.9 சதம் யூனியன் கார்பைடு முதலீடு, மீதம் கேசுப் மகேந்திரா போன்ற பெரிய முதலாளிகளும், இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை நிதி நிறுவனங்களின் முதலீட்டுடன் 1969-இல் துவங்கிய இந்த ஆலை 1979 வரை பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்க நாப்தால் குளோரோ பார்மேட் வழியை பயன்படுத்தியது. 1979-இல் சிக்கன சீரமைப்பு என்ற பெயரில் ரசாயன ஆயுதமாக பயன்படும் மீத்தையில் ஐசோ சயனைட்டை பயன்படுத்தி பூச்சிக் கொல்லி மருந்து செய்யும் வழிக்கு மாறியது. அதற்காக அந்த விஷ வாயுவான மீத்தையில் ஐசோ சயனைட்டை உற்பத்தி செய்து தேவையை விட கூடுதலாக பெரிய டாங்குகளில் ஸ்டாக் வைத்தது. (ஏன்?)
1925-இல் ஜெனிவா புரோட்டகால் முதல் 1972 வரை ஏற்பட்ட சர்வதேச நன்னடத்தை அறிவுறுத்தலின்படி ரசாயன ஆயுதமாக உதவும் விஷப் பொருள்களின் உற்பத்திக்கும், ஸ்டாக் வைப்பதற்கும் சர்வதேச ஒழுங்கு நெறி இருந்து வருகிறது. அந்த நெறிகள் எதையும் பின்பற்ற யூனியன் கார்பைடு நிர்வாகம் மறுத்தே வந்தது. (ஏன்?). அதன்படி ரசாயன ஆயுதமாக பயன்படும் மீத்தையில் ஐசோசயனைட்டைப் பற்றிய தகவல்களை யூனியன் கார்பைடு நிர்வாகம் மாநில அரசின் சம்மந்தப்பட்ட இலாகாவிற்கு கொடுத்திருக்க வேண்டும். அவர்களது கண்காணிப்பை ஏற்று இருக்க வேண்டும். ஆனால் தகவல் கொடுக்கவே மறுத்துவிட்டது. சம்மந்தப்பட்ட இலாகாவும் கண்டு கொள்ளவில்லை. வர்த்தக ரகசியம் என்ற போர்வையில் அது மறைக்கப்பட்டது.
விஷவாயு கசிவு ஏற்பட்டால் என்ன செய்யவேண்டுமென்ற எச்சரிக்கை அறிவிப்பு எதையும் யூனியன் கார்பைடு நிர்வாகம் விளம்பரப்படுத்தவில்லை (ஏன்?). ஈரத் துணியால் முகத்தை மூடினால் விஷ வாயுவின் கடுமையை குறைக்கமுடியும் என்ற உண்மையை, வர்த்தக ரகசியமாகவே வைத்துவிட்டது. இந்த உண்மை எப்பொழுது தெரிகிறது? விபத்து நடந்த பிறகே தெரியவருகிறது.
¨ விஷ வாயு போபாலை தாக்கிய அன்றிரவு ஒரு ரிக்ஷா தொழிலாளி குழந்தையைக் காப்பாற்ற ரிக்ஷாவில் குழந்தையை கிடத்தி, எரிச்சலை தவிர்க்க ஈரத்துணியால் தன் முகத்தை மூடிக் கொண்டு வேகமாக டாக்டர் வீட்டிற்கு ஓட்டுகிறார், ஈரத்துணியால் மூடாத குழந்தை செத்துவிடுகிறது, இவர் தப்பிவிடுகிறார். விவரத்தை அறிந்த டாக்டர் இதனை செய்தி ஆக்கிய பிறகே கண்களை இழந்த போபால் நகரமே இந்த எளிய உண்மையை அறிய நேரிடுகிறது.
¨ அந்த ஆலைக்குள் என்ன நடக்கிறது என்பதை விபத்திற்கு முன்னால் போபால் நகர மக்கள் அறிய வாய்ப்பே கிடைக்கவில்லை.அவர்கள் அறிந்ததெல்லாம் “சேவின்” என்ற பூச்சிக் கொல்லி மருந்து விளம்பரம் மட்டுமே, மக்களைப் பொறுத்தவரையில் மர்மங்களின் புதையலாக இந்த ஆலையின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன..
உண்மையைத் தேடி நடந்த போர் – கிரனடா தொலைக்காட்சி உதவி
போபால் விபத்து நடந்து கடந்த 26 வருடங்களில் மக்களின் போராட்டங்களாலும், டெல்லி சயின்ஸ் ஃபாரம் உட்பட 30க்கும் மேற்பட்ட தன்னார்வக் குழுக்களின் இடைவிடாத முயற்சியினாலும் இந்திய அரசு தொடுத்த வழக்குகளில் தலையிட்டு நீதிக்கு போராடியதாலும் மர்மங்கள் தவணை முறையில் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. கிரனடா (அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுத்த அரசு இருந்தது) தொலைக்காட்சி நிலையம், அமெரிக்காவில் இருக்கும் யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்தாலையில் உள்ள பாதுகாப்பு முறைகளையும், போபாலில் உள்ள ஆலையின் ஆபத்தான நிலையையும் ஒப்பீட்டுக் காட்டி ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.
ஆன்டர்சனின் நோக்கம் என்ன?
அமெரிக்காவில் யூனியன் கார்பைடு நிறுவன ஆலையில் செய்யப்பட்டிருக்கிற எந்தப் பாதுகாப்பு அமைப்பும் இங்கு இல்லை. விபத்து ஏற்படுமானால் என்ன செய்வது என்ற திட்டம் எதுவும் இந்த ஆலையில் இல்லை, ஊழியர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்படவில்லை. அரசின் சம்பந்தப்பட்ட இலாகாவிற்கு ரசாயனப் பொருட்களின் அளவு, தன்மை இவைகளையும் விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதும் சொல்லப்படவில்லை. 1979-இல் கட்டப்பட்ட விஷவாயு டாங்க் அலாரம் 1980-லிருந்து வேலை செய்யவில்லை. அமெரிக்க ஆலையில் 4 கட்ட கண்காணிப்பு மான்யுல் (ஆயரேயட) பயன்பாட்டில் இருந்தது. இங்கே ஒரே கட்ட மான்யுல் பயன்பாட்டில் வைக்கப்பட்டது. தலைமை நிர்வாகி தவிர மற்றவர்கள் பார்க்க முடியாது. இது கீழ்மட்ட ஊழியர்களுக்குப் புரியாது என்று கூறப்பட்டது. ரசாயனப் பொருட்கள் பற்றிய தகவல்களை மறைக்கும் நோக்கத்தோடு இந்த மான்யுல் ஒளித்து வைக்கப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. ஆன்டர்சனின் நோக்கம் இன்று வரை மர்மமாகவே உள்ளது.
¨ விபத்தன்று வெளியேறிய விஷ வாயுவின் அழுத்தம் பல மடங்கு அதனை தாங்கும் அளவிற்கு டவரும், ஸ்கரப்பரும் அமைக்கப்படவில்லை என்று விபத்து நடந்த பிறகு ஆய்வு செய்த குழு கண்டுபிடித்தது.
¨ விஷ வாயு டாங்கை மான்யுல் படி 4 டிகிரி சென்டிகிரேடில் குளிர்பதனம் செய்யப்படவில்லை, அதற்குப் பதிலாக 20 டிகிரி ரூம் டெம்பேரச்சரில் வை என்று வாரன் ஆன்டர்சன் என்ற அமெரிக்க தலைமை நிர்வாகி அறிவுறுத்தினார்.
மீதையில் ஐசோ சயனைட்வழி (1)
நாப்தால்- குளோரோ பார்மேட் வழி(2)
பிளான்ட் அமைப்பே கோளாறு
¨ போபால் பூச்சிக் கொல்லி மருந்தாலையில் இந்த விஷ வாயு உற்பத்தி செய்யும் பிளான்ட் நிறுவப்படும் பொழுதே பாதுகாப்பு என்பதை கணக்கில் கொள்ளவில்லை. விஷ வாயு வெளியேறுமானால் அதை எரிக்கவும், விஷத்தை முறிக்கும் ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்த அமைக்க வேண்டிய டவர், ஸ்கரப்பர் அமைப்புகள் செயல்திறன் குறைவாகவே அமைக்கப்பட்டன.
¨ ஸ்கரப்பரில் காஸ்ட்டிக் சோடா என்ற சோடியம் ஹைட்ராக்சைடு நிரப்பப்படவில்லை. அது நிரப்பப்பட்டிருந்தால் விபத்து நடந்த நாளன்று வெளியேறும் விஷவாயுவின் விஷத்தன்மையின் கடுமையை குறைத்திருக்கும்.
¨ அப்படியே செய்யப்பட்டிருந்தாலும், அன்றைய தினத்தில் டாங்கு வெடித்து வெளியேறிய வாயுவின் 4இல் ஒருபங்கையே விஷமுறிவு செய்திருக்கும்.
¨ ஸ்டாக்வைக்கிற பொழுது,4 டிகிரி சென்ட்டி கிரேடுக்கு குளிர்பதனம் செய்வது, குழாய்களில் நீர் கசிவு ஏற்பட்டால் அது வாயு இருக்கிற இடத்திற்கு செல்லாமல் தடுக்க காட்ச் வால்வ் அமைப்பது தவிர்க்கப்பட்டது.
¨ மான்யுல்படி விஷ வாயு ஸ்டாக் வைக்கிற டாங்க் சிறிய அளவில் இருக்க வேண்டும் என்பதை தவிர்த்து, பெரிய டாங்கில் நிரப்பிவைத்தது. 40 ஆயிரம் கிலோ வரை விஷ வாயு ஒரே டாங்கில் தேக்கிவைக்கப்பட்டது, அதை விட வெப்ப நாடான இந்தியாவில் குளிர் பதனம் தேவை இல்லை என்று நிறுத்தியது அக்கிரமமானது.
¨ விஷவாயு கசிந்து வெளியேறினால் அதன் பரவலை தடுக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ஸ்ப்ரேயர், மான்யுல் படி அமைக்காமல் 13 மீட்டர் உயரத்திற்கும் குறைவான உயரத்தை எட்டும் அளவிற்கே அமைக்கப்பட்டது. காற்றில் விஷவாயு கலக்க நேரிட்டால் அதன் விஷத்தன்மையை தண்ணீர் வெகுவாக குறைக்கும் என்பதால் ஸ்ப்ரேயர் ஒரு முக்கியமான பாதுகாப்பு அமைப்பாகும்.
¨ 1981-இல் இந்த ஆலையை சுற்றிப்பார்த்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அமெரிக்க நிபுணர்கள் பெரிய டாங்குகளில் ஸ்டாக் வைப்பதையும், பாதுகாப்பு அமைப்புகள் பெயரளவிற்கே இருப்பதையும் சுட்டிக்காட்டி ஆபத்து குடியிருப்பதை எச்சரித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்து இருப்பதை கண்ட தொழிலாளர்களின் சங்கம் போராடியபொழுது அரசு உதவியுடன் ஒடுக்கியது. குறையைச் சுட்டிக்காட்டி வேலை செய்ய மறுக்கும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. பயிற்சி பெற்ற ஊழியர்கள் பயந்து வெளியேறியதால், கத்துக் குட்டிகளே வேலையில் இருந்தனர்.
ரகசியம் கசிந்தது!
26 வருடம் கழித்து ஒரு கீழ்கோர்ட் தீர்ப்பளித்த பிறகு மைய அரசின் ஒரு முன்னாள் அதிகாரி ஆதாரப்பூர்வமான ஒரு உண்மையை வெளியிடுகிறார். பிசினஸ் லைன் வெளியிட்ட இந்தத் தகவலை மற்ற செல்வாக்குள்ள பத்திரிகைகள் வெளியிட வில்லை. அமெரிக்க ஜனாதிபதி ரீகனும், இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியும் யூனியன் கார்பைடு நிர்வாகி ஆன்டர்சனை கைது செய்து பரிவர்த்தனை மூலம் விடுவிக்க ரகசிய ஒப்பந்தம் செய்து அந்த அடிப்படையில்தான் கோர்ட்டிற்கு வெளியே கிரிமினல் வழக்கை கைவிடுவது (இந்திய அரசு நீதிமன்றத்தில் நட்ட ஈடாக ரூ. 3800 கோடி ரூபாய் கோரியிருந்தது) 730 கோடி நஷ்ட ஈட்டை ஏற்பது என்ற முடிவு ஏற்பட்டது என்ற செய்தி வெளிச்சத்திற்கு வருகிறது.
ஏணியும்- பாம்பும்
பரமபத ஆட்டத்தில் ஏணியும், பாம்பும் போல் போபால் மக்களின் வாழ்க்கையில் இரண்டு சக்திகள் புகுந்தன. ஏணியாக டெல்லி சயின்ஸ் ஃபாரம் உள்ளிட்ட தன்னார்வக் குழுக்களும், பாம்பாக அரசும், நீதித்துறையும் அவர்களது வாழ்க்கையில் புகுந்தன. மாநில அரசின் தொழிலாளர் இலாகாவும், பாக்டரி சட்டங்களும், காவல்துறையும் மத்திய அரசின் உத்தரவு, ஆகியவை ஆன்டர்சன் செல்வாக்கல் இவையாவும் எம்.ஐ.சி வாயுவை சுவாசித்தது போல் நடைப் பிணங்களாக கிடந்தன. தன்னார்வக் குழுக்கள் எனும் ஏணிவழியாக மக்கள் நிவாரணம், சிகிச்சை, இவைகளை அடைய முயற்சிக்கிற பொழுது, அரசியல் அதிகாரம் என்ற பாம்பு நீதிமன்ற வடிவில் கீழே தள்ளியது. மைய அரசு, வழக்கை தொடுத்த சி.பி.ஐ, யூனியன் கார்பைடு நிர்வாகம், மூன்றும் கூட்டணி வைத்து நீதிமன்றத்தில் மக்களுக்காக வாதாடிய தன்னார்வக் குழுக்களுக்கு எதிராக நின்ற காட்சியை உலகமே பார்த்தது.
வழக்குகளும், ஏமாற்றும்
சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்த பிறகே மைய அரசு அசைந்தது. 1985-இல் இந்திய அரசு போபால் வாயு கசிவு பேரழிவு (இழப்பிற்கு ஈடு கோருவதை முறைப்படுத்தும்) அவசர ஆணை பிறப்பித்தது. மார்ச் மாதத்தில் இந்த அவசர ஆணை நாடாளுமன்றத்தில் சட்டமாகியது. இதன்படி பாதிக்கப்பட்ட மக்களின் ஏகப்பிரதிநிதியாக மையஅரசு செயல்படும். நிவாரணம் பெற நீதிமன்றத்தில் வாதாடும் என்று அச்சட்டம் கூறியது. நமக்காக மைய அரசே வாதாடப் போகிறது என்று நம்பிக்கையோடு மூச்சுத் திணறலை தாங்கி அந்த மக்கள் எதிர் நோக்கினர். அந்த சட்டம் தவறு செய்த யூனியன் கார்பைடு நிர்வாகத்திற்கு எதிராக நட்ட ஈடு கோரும் வழக்கை வேறுயாரும் தொடுக்காமல் இருக்க தடை செய்ததே தவிர, யூனியன் கார்பைடு சொத்துக்களை கைப்பற்றி பாதிக்கப்பட்டோருக்கு வழங்கிட அதில் இடமில்லை. இந்திய சட்டங்களின்படி நடவடிக்கையை மேற்கொள்ள இச்சட்டத்தில் இடமில்லை. அமெரிக்க நீதிமன்றங்களில் வாதாட வக்காலத்தை இச்சட்டத்தின் மூலம் இந்திய அரசு எடுத்துக் கொண்டது.
அமெரிக்காவில் வழக்கு தள்ளுபடி
1985-இல் ஏப்ரல் 8இல் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி இந்திய அரசு வழக்குத் தொடுத்தது. ஏழு தவறுகளை சுட்டிக்காட்டி நட்ட ஈட்டைக் கேட்டிருந்தது
(அ) பன்னாட்டு நிறுவனம் என்ற பொறுப்பை தட்டிக்கழித்தது, (ஆ) தனக்கு சம்மந்தமில்லை என்று ஒதுங்கியது, (இ) உடலாலும் உள்ளத்தாலும் செய்த தவறு, (ஈ) ஊதாசீனம் செய்தது, (உ) கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றாதது, (ஊ) பொய்யை சாதிப்பது, (எ) பொது நலனை சேதப்படுத்தியது என்ற ஏழு குற்றங்களை அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட யூனியன் கார்பைடு செய்துள்ளது என்று இந்திய அரசு மனுவில் சட்ட நுணுக்கச் சொற்களை வைத்து எழுதியிருந்நது.
மே 13, 1985 நியூயார்க் நீதிமன்றம், நட்ட ஈட்டை அமெரிக்க நீதிமன்றம் தீர்மானிக்காது என்று வழக்கை 35 நாட்களில் விசாரித்து தள்ளுபடி செய்துவிட்டது. இந்தியாவில் நடந்த ஒரு கொடுங்குற்றத்திற்கு இங்கே நீதியை நிலை நாட்ட அதிகாரம் படைத்த இந்திய அரசு நீதியை தேடி அமெரிக்காவிற்கு போனதை அறியாமை என்பதா?, ஏகாதிபத்திய சார்பு அரசியல் என்பதா?. அறியாமை என்று சொல்ல முடியாது, பெருமுதலாளி வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு அரசியலே என்பதில் எள்ளவும் சந்தேகம் வேண்டாம்.
பேரழிவு நடந்து10 மாதங்கள் கடந்த பிறகே முதல் சிவில்வழக்கு (5-9-1985 )
அமெரிக்காவில் வழக்கு தள்ளுபடி செய்த பிறகு இந்திய அரசு செப்டம்பர் 5, 1985-இல் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நட்ட ஈட்டு வழக்கை தொடுத்தது. இந்திய அரசு, அமெரிக்க நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் நகலையே இங்கும் தாக்கல் செய்தது. அந்த மனுவில் நட்ட ஈட்டைப் பற்றியும் பாதிக்கப் பட்டோர் பற்றியும் எந்தவிதமான குறிப்புமில்லாமல் மனுவை அரசு தாக்கல் செய்திருந்தது. இடைக்கால நிவாரணம் பற்றி இந்த மனுவில் எந்த குறிப்புமில்லை.
தன்னார்வக் குழுக்கள் தலையீடு மனுவும் – இடைக்கால நிவாரணமும்
1985, நவம்பர் 16 அன்று சஹ்ரீலி காஸ் கான்ட் சங்கர்ஷ் மோர்ச்சா, ஜன ஸ்வஸ்த்திய கேந்திரா என்ற இரண்டு அமைப்புகளும், அரசு வழக்கில் தங்களையும் சேர்க்குமாறும், யூனியன் கார்பைடு நிர்வாகத்தை இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் தலையீடு மனுவை தாக்கல் செய்தது. இதற்கு பதிலளித்த யூனியன் கார்பைடு நிர்வாகம் நட்டம் வழங்குவது தனது பொறுப்பல்ல, விபத்திற்கும் தனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை. ஒரு தொழிலாளி செய்த சதி என்று எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. பாதிக்கப் பட்டோர் சார்பில் சட்டப்படி கேட்கும் உரிமை பெற்ற இந்திய அரசே இடைக்கால நிவாரணம் கேட்காத போது, இவர்களுக்கு யார் மனுப்போட அதிகாரம் கொடுத்தது என்ற வாதத்தையும் முன்வைத்தது.
தலையீடு மனு நீதிபதியை சிந்திக்க வைத்தது. கிரனடா டி.வி யில் அமெரிக்க ஆலையில் உள்ள பாதுகாப்பு போபால் ஆலையில் இல்லை என்பதை காட்டியிருந்த காட்சிகளையும் அவர் பார்த்தார்.
1987 பிப்ரவரி 2 போபால் மாவட்ட நீதிபதி திரு. டியோ, தன்னார்வக் குழுக்களின் தலை ஈட்டு மனுவில் கேட்டபடி இடைக்கால நிவாரணத்தை தனது கணிப்பின்படி 350 கோடி ரூபாய் என நிர்ணயித்து வழங்க உத்தரவிடுகிறார். இந்த சிவில் வழக்கை தொடர்ந்து கிரிமினல் கோர்ட்டில் சி.பி.ஐ ஒரு வழக்கை தொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
1988 ஜனவரி 29 (சரியாக 2வருடம், 28 நாட்கள் கடந்த பிறகே) அன்று தான் நட்ட ஈட்டுத் தொகையை ரூபாய் 3900 கோடி என்ற கணக்கையும் இதர ஆவணங்களையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. வாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்ட ஈடே தவிர, பொதுநல சேதாரம், வட்டி, வழக்குச் செலவு இதில் அடங்காது என்றும் குறிப்பிட்டு இருந்தது.
மூன்றாண்டு கடந்த பிறகு குற்றவழக்கு
டிசம்பர் 1, 1987 (சரியாக மூன்று வருடம் கடந்த பிறகு) சி.பி.ஐ., போபால் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் முன் யூனியன் கார்பைடு இந்தியா உள்ளிட்ட 12 குற்றவாளிகள் மீது வழக்கை தொடுத்தது. யு.சி.சி, யு.சி.இ, யு.சி.ஐ.எல் என்ற மூன்று நிறுவனங்களின் மீதும் அதன் 9 நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீதும் கொலை குற்றப்பிரிவில் (304-பார்ட் இரண்டு) குற்றப்புகாரை சி.பி.ஐ தொடுத்தது. அதில் முதல் குற்றவாளியாக வாரன் ஆன்டர்சன் பெயர் இருந்தது.
வழக்குகளுக்கு சமாதி கட்டிய ஒப்பந்தம்
ஏப்ரல் 4, 1988 மத்திய பிரதேச உயர்நீதி மன்றத்தில் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை பைசல் செய்த உயர் நீதிமன்றம் கீழ்க்கோர்ட் சொன்ன 350 கோடி இடைக்கால நிவாரணத் தொகையை 250 கோடியாக குறைத்தது!
பிப்ரவரி 14-15, 1989 விபத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை, எனவே இடைக்கால நிவாரணம் வழங்கும் பேச்சிற்கே இடமில்லை என்பதில் உறுதியாக நின்ற யூனியன் கார்பைடு நிர்வாகம், இந்த உயர்நீதிமன்ற உத்தரவையும் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில் தீர்ப்பே கூறாமல், இருதரப்பாரையும் பேசி ஒப்பந்தம் செய்யுமாறு உத்தரவிட்டது. அதனடிப்படையில் 3500 கோடி ரூபாய் நட்ட ஈடு + சேதாரத்தை ஈடுசெய்ய கேட்டு கீழ் கோர்ட்டில் வழக்குத் தொடுத்த இந்திய அரசு 750 கோடி ரூபாய் நட்ட ஈட்டை ஏற்றதோடு, கிரிமினல் வழக்கையும் கைவிட சம்மதித்தது. இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவெனில், யூனியன் கார்பைடு நிர்வாகத்திற்காக வாதாடிய வக்கீல் பத்மபூஷன் நாரிமன் ஆவார். இவர் முன்னாள் அஸிஸ்டென்ட் சாலிஸ்ட்டர் ஜெனரல் அரசாங்கத்திற்கு வாதாடிய வக்கீல், இப்பொழுது யூனியன் கார்பைடின் புளுகு மூட்டையை நீதிபதிகளின் தலையில் ஏற்றுமதி செய்யும் வக்கீலாக நின்றார்.
ஏன்! ஏன்!
ஏன் மேல் முறையீடுகளில் நீதிபதிகள் யூனியன் கார்பைடு வாதங்களை ஏற்று, மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங் களை குறைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடாக 3500 கோடி கேட்ட அரசு வெறும் 750 கோடிக்கு ஏன் சம்மதிக்க வேண்டும்? அப்படி சம்மதிக்கிற பொழுது, மக்களுக்காக வாதாடிய தன்னார்வக் குழுக்களின் கருத்தை ஏன் கேட்கவில்லை? பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதத்தை ஏன் பெறவில்லை? நிர்வாகம் “வர்த்தக ரகசியம்” என்று உண்மைகளை மறைப்பதை அறிந்த பிறகும் மேல் முறையீட்டு மன்றங்கள் ஆன்டர்சனுக்கு ஆதரவாக நின்றதேன்? நாரிமன் போன்ற திறமையான சட்ட நிபுணர்கள் ஆன்டர்சனைக் காப்பாற்ற மனசாட்சியை புதைக்க முடிந்தது எப்படி? இந்திய அரசு செய்த ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்டோர் 1,05,000 இதில் இறந்தவர்கள் 3,000 என்றும் அவர்களுக்கான நிவாரணம் என்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறைத்தே காட்டியது ஏன்?.
அதே நேரத்தில் 1-12-1987-இல் சி.பி.ஐ தொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் 5 லட்சத்திற்கு மேல் என்று குறிப்பிட் டுள்ளது. நீதிமன்றத்திடமே இந்திய அரசு ஏன் பொய் சொல்ல வேண்டும்?
இந்திய அரசின் பொய்க்கணக்கை எதிர்த்து பாதிக்கப் பட்டோர் நீதிமன்றங்களிலே வழக்குத் தொடுத்து பெற்ற வெற்றியால் பின் நாளில் பாதிக்கப்பட்டேர் எண்ணிக்கை 5,74,367 ஆனது. இந்திய அரசு நட்ட ஈட்டை அது போட்ட கணக்குப்படி கொடுக்காமல் ஒரு லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டிய தொகையை 5லட்சம் பேருக்கு பிரித்துக் கொடுக்க முடிவு செய்ததை என்ன வென்று சொல்வது?
கிரிமினல் வழக்கு உயிர் பெறுகிறது
1987 டிசம்பரில் 12 பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சாகடிக்க எடுத்த முயற்சிகள் அரசாங்க எந்திரத்தின் சூத்திரதாரிகளின் வர்க்கத் தன்மைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
பிப்ரவரி 4, 1988 வழக்கு விசாரணைக்கு போபால் நகர கோர்ட்டில் வருகிறது, இந்திய நிர்வாகிகள் ஆஜராகின்றனர். முதல் குற்றவாளி ஆன்டர்சன் வரவில்லை.
ஜுலை 6, 1988இல் அமெரிக்க அரசிற்கு நீதிபதி கடிதம் எழுதுகிறார். அமெரிக்க ஆலையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடு இங்கு இருக்கிறதா என்பதை கண்டறிய இந்திய சி.பி.ஐ. நிபுணர்களை அனுமதிக்கக் கோருகிறார்.
நவம்பர் 15, 1988 ஆன்டர்சனை பிப்ரவரி 9, 1989 கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவு போடுகிறார். ஜாமீனில் போகிற முறையில் கைது வாரண்ட் பிறப்பிக்கிறார்.
பிப்ரவரி 9, 1989 அன்று ஆன்டர்சன் நீதிமன்றத்திற்கு வராத நிலையில் தலைமறைவாகிவிட்டவர் என்று அறிவித்து அவரை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் மார்ச் 31, 1989-இல் நிறுத்துமாறு உத்தரவிடுகிறார்.
பிப்ரவரி 14 – அன்று அமெரிக்க நிர்வாகம் சி.பி.ஐக்கு அமெரிக்க தொழிற்சாலையை பார்வையிட அனுமதி அளிக்கிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்ற வராண்டாவில் இந்திய அரசிற்கும், ஆன்டர்சன் வகையறாவுக்கு மிடையே நடந்த ஒப்பந்தப்படி கிரிமினல் வழக்கு உயிரோடு புதைக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தன்னார்வக் குழுக்கள் ஒன்றிணைந்து மக்களை திரட்டியதோடு உச்ச நீதிமன்றத்தில் மறுபரீசிலனை வழக்கை தொடர்கிறது. மக்களின் தொடர் போராட்டத்தாலும், 30 தன்னார்வக் குழுக்களின் நாடு தழுவிய பிரச்சாரத்தோடு சரியான முழக்கத்தோடு வழிகாட்டியதாலும் புதிதாக வந்த வி.பி.சிங். அரசு இடைக்கால நிவாரணத்தை வழங்கவும் மேற்கொண்டு 370 கோடி ரூபாய் ஒதுக்கி வழங்கியது
அக்டோபர் 3 ,1991-இல் தன்னார்வக் குழுக்களின் மனுவை பைசல் செய்த உச்சநீதி மன்றம், நட்ட ஈட்டுத் தொகையை உயர்த்த மறுத்துவிட்டது, கிரிமினல் வழக்கை தொடரவும் முதல் குற்றவாளி ஆன்டர்சன் உட்பட தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து பாதுகாப்பு என்பதையும் ரத்துச் செய்தது.
இதனால் கிரிமினல் வழக்கு மீண்டும் உயிர் பெற்றது. நவம்பர் 11, 1991-இல் மீண்டும் போபால் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. முதல் குற்றவாளியும், 10வது, 11வது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்களும் ஆஜராகவில்லை.
1992 பிப்ரவரியில் அவர்களை பிடித்து நீதிமன்றத்தின் முன்னிறுத்த நீதிபதி உத்தரவிட்டார். சி.பி.ஐ அமெரிக்காவிற்கு போய் பாதுகாப்பு விவகாரங்களை ஒப்பு நோக்கவும் தகவல் சேகரிக்கவும் இல்லை. குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
1996 செப்டம்பர் 13, யூனியன் கார்பைடு நிர்வாகிகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கொலைக் குற்ற ஷரத்தை நீக்கி கவனக்குறைவால் ஏற்பட்ட குற்றச்சாட்டாக 304-ஏ பிரிவின் கீழ் விசாரிக்க வேண்டுமென உத்தரவிடுகிறது.
ஆன்டர்சன் சதி
எவ்வளவுதான் இந்திய அரசை கைக்குள் போட்டாலும் உலக அபிப்பிராயத்தை தடுக்க முடியாது, மக்களின் கோபத்தால் ஆட்சி அதிகாரம் தங்களது நண்பர்களாக இருப்பவர் களிடமிருந்து கை மாறிப் போனால் எல்லாம் பறிபோகும் என்று உணர்ந்த ஆன்டர்சன் போபால் ஆஸ்பிட்டல் டிரஸ்ட் என்ற அமைப்பை லண்டனில் உருவாக்கி தனது நிறுவனத்தின் பங்குகளை அதற்கு எழுதி வைத்து ஒரு மாபெரும் ஏமாற்றை நம் தலையில் கட்டிவிட்டான். அந்த டிரஸ்ட் ஒரு (அ) தர்ம மருத்துவமனையை நடத்தி வருவதுதான் வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சும் கொடுமை எனலாம்.
கோரமான வர்க்க உண்மைகள்
26 வருடம் கடந்த பிறகும் முடிவிற்கு வராத வழக்குகளும், முடிவிற்கு வராத மக்களின் வேதனைகளும், தொடுவானமாகி விட்ட நிவாரணங்களும், தவணை முறையில் வெளிச்சத்திற்கு வரும் உண்மைகளும் ஆளுவோர் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்திய விதமும், நமது நீதிமன்றங்கள் செயல்பட்ட விதமும் பெருமுதலாளி வர்க்கத்தின் கையில் அதிகாரம் இருக்குமென்றால் ஈவு இரக்கமற்ற பணப்பட்டுவாடா உறவே நீதியின் அடிப்படையாக இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
பெரு முதலாளி வர்க்க அரசியல் தலைவர்களுக்கு மக்களின் கஷ்ட, நஷ்டங்கள் ஒரு பொருட்டல்ல. அலங்காரச் சொற்களைக் கொண்ட ஆறுதல் அறிவிப்பிற்குள் இரக்கமற்ற பணப்பட்டுவாடா நடவடிக்கைகளை புதைத்து வைப்பர்.
ஏகாதிபத்தியமும் – ராணுவ அரசியலும்
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு, அணுகுண்டு வீசிய அமெரிக்க ஜனாதிபதி கூறியதென்ன?, “அணுகுண்டின் திறனை உலகமறியவும், அமெரிக்காவை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை சோவியத் உணரவும் வீசப்பட்டது. எதிரிகளை பயமுறுத்த அப்பாவி மக்களை கொல்வது தவறல்ல” என்பதுதான் அமெரிக்க ஜனாதிபதியின் வாதம். தற்காப்பு என்ற பெயரில் தாக்கலாம், ஆராய்ச்சி என்ற பெயரில் மக்களை கொல்லலாம், இன்னொரு நாட்டில் புகுந்து சூழ்ச்சி செய்யலாம், அதை மறைக்கலாம். இவைகள் ஏகாதிபத்திய ராணுவ அரசியல் யுக்திகளாகும். இந்தப் பின்னணியைப் பார்க்க வேண்டும்.
போபால் பூச்சிக் கொல்லி மருந்து ஆலையில் 1979-இல் பெருமளவு எம்.ஐ.சி உற்பத்திக்கு மாறியதேன்? அன்றைய உலக நிலையை பாருங்கள், அன்று சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானில் புரட்சி அரசிற்கு ஆதரவாக சென்றது, இது ஏகாதிபத்தியவாதிகள் விரும்பாத ஒன்று. ஈரானில் ஏகாதிபத்திய ஆதரவு அரசு தூக்கி எறியப்பட்டு அயோத்துல்லா கொமினியின் ஆட்சி வந்தது, தென்அமெரிக்காவிலும், கிரனடா போன்ற மத்திய அமெரிக்க தீவு நாடுகளிலும் ஏகாதிபத்திய சார்பு அரசியல் வாதிகள், சர்வாதிகாரிகள் ஓட்டம் எடுக்கும் நிலை இருந்தது. இந்தச் சூழலில் அணுகுண்டுவிற்கு ஈடாக பெருந்திரள் மக்களைக் கொல்லும் ஆயுதமாக விஷ வாயுக்களை தயாரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ரகசியத் திட்டமாக ஆக்கியதால், வந்தவினை தான் போபால் விபத்து. ஆன்டர்சனை ரீகன் காப்பாற்றியதும் இந்த ராணுவ அரசியலே, ஏகாதிபத்திய சார்புள்ள இந்திய அரசும் இந்த விபத்தின் பின்னுள்ள ராணுவ அரசியலை மறைக்க உதவி செய்ததே தவிர அம்பலப்படுத்த விரும்பவில்லை. இல்லையெனில் சி.பி.ஐ விசாரணையைக் கட்டிப் போட்டிருக்காது. கோர்ட்டிற்கு வெளியே ஒப்பந்தம் செய்திருக்காது. விபத்தின் கோரத்தன்மையை மறைக்க உதவியிருக்காது. எம்.ஐ.சி உற்பத்தியை கண்காணித்திருக்கும்.
மக்களின் நலன்களை விட மூலதனப் பெருக்கமே முக்கியம் என்று பெரு முதலாளி வர்க்கம் கருதுகிறது. எனவே அந்த வர்க்கத்தின் அரசாக இந்திய அரசு இருப்பதால் ஏகாதிபத்தியத்தின் நட்பை விட்டுக் கொடுக்க மறுக்கிறது. மக்களை மரக்கட்கைளாக கருதுகிறது. மக்களை ஏமாற்ற அது நாடகமாடலாம். ஆனால் எம்.ஐ.சி. உற்பத்தி மர்மங்களை அது மறைக்கவே செய்யும். நட்ட ஈட்டை பற்றி அது வாய் கிழியப் பேசும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை, பென்ஷன், உடல் நலன் பேணும் அகம் மலர முன்வராது. அது லாபம் சம்பாதிக்க விடப்பட்ட தொழில் எனக் கூறிவிடும். மக்களின் இயக்கமே அரசைப் பணியவைக்கும். நமது கடமை மக்களை திரட்டுவதே!
Leave a Reply