மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அணுசக்தியும் – இந்திய அரசியலும்


நயவஞ்சகமான (சிவில் நியூக்கிளியர் லையபிலிட்டி பில்) சமூக பயன்பாட்டு அணுசக்தி பொறுப்பு மசோதாவை சட்டமாக்க மன்மோகன்சிங்கும், பா.ஜ.க தலைவர்களும் நடத்திய நாடகமும், நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் முன்வைத்த விஞ்ஞான தகவல்களோடு கூடிய விவாதங்களும், இடதுசாரிகளின் விமர்சனங்கள் பத்திரிகைகளில் வரவே, பா.ஜ.க பல்டி அடிக்க நேர்ந்ததும் நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன. இன்னும் மக்களுக்குத் தெரிய வேண்டிய பல உண்மைகள் ரகசியப் பாதுகாப்பு சட்டத்தால் (அபிசியல் சீக்ரெட்ஸ் ஆக்ட்) மறைக்கப்பட்டுள்ளன.

நமது அயலுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவை அனைத்தும் நேரு காலத்திலிருந்து அரசின் பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. மக்களை ஆட்டு மந்தைகளாகக் கருதி அவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பது தெரியாது. தலைவனை தேர்ந்தெடுக்க மட்டுமே தெரியும் என்ற கருத்தே ஆளுவோரை தன்னிச்சையாக நடக்க வைத்தது. நேரு காலத்தில் அணுசக்தி கொள்கையை உருவாக்குவதில் நாடாளுமன்றத்திற்கே பங்கில்லை. மக்களின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற உணர்வு கம்யூனிஸ்ட் டுகளைத் தவிர இதர நடாளுமன்ற உறுப்பினர் களுக்கு அன்றே இல்லை. அதன் பிறகு 13 பிரதமர்களில் 7 பேர் வெவ்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் நாட்டை ஆண்டனர். இடதுசாரி கட்சிகள் அரசின் கொள்கைகளை உருவாக்குவதற்கு நாடாளு மன்ற விவாதத்தை  அவசியமாக்க எடுத்த முயற்சிகள் எல்லாம்  2004 வரை தோல்வியை சந்தித்தன. இடதுசாரிகளின் ஆதரவை நம்பி நின்ற காலத்தில் தான் அணுசக்தி போன்ற விவகாரத்தை விவாதிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு வந்தது. அதன் விளைவாக இந்தோ – அமெரிக்க ராணுவ ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதிக்க வாய்ப்புக் கிடைத்தது.

போபால் விஷவாயு புயல் போன்ற பேரிடர் நேர்ந்தால் அரசாங்க உத்திரவு அல்லது அவசர சட்டம் என்ற கடந்த கால நிலைமாறி அணுசக்தி சம்பந்தமாக நாடாளுமன்றம் விவாதித்து ஒரு சட்டம் வந்தது ஒரு முன்னேற்றமே. ஆனால் அந்தச் சட்டம் பல திருத்தங்களுக்கு உட்பட வேண்டியிருக்கிறது. அப்பொழுது தான் அது  அணுசக்தி மலிவு விலையில் பாதுகாப்போடு  மக்களுக்கு பயன்படும். எனவே சட்டத்திருத்தப் போராட்டம் தொடர வேண்டும். இவ்வாறு சட்டம் உருவாகும் முன்னர் மக்கள் அறிய நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு நேரு காலத்திலிருந்து போராடி வந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இது முதல் வெற்றி.

ஆகஸ்ட் 2010 மாத நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் முன் மொழிந்த திருத்தத்தை ஒட்டி நடந்த வாக்கெடுப்பில்  ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 252 வாக்குகளும் பெற்று திருத்தம் தோல்வியை சந்தித்தது. 252 வாக்குகள் பெற்றதால் சட்டம் நிறைவேறியதாக அறிவித்தனர். அதே வேளையில் 530 தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 278 பெரும்பான்மை உறுப்பினர்கள் அரசு முன்மொழிந்த சட்டத்திற்கு ஆதரவு இல்லை என்பது வாக்கெடுப்பின் இன்னொரு பக்கமாகும். மக்களின் கருத்துக்கு பயந்து பெரும்பான்மை உறுப்பினர்கள் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் நின்றனர். இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் லட்சணம் பெரும்பான்மைக்கு மதிப்பு கொடுப்பதல்ல, பெருமுதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது மீண்டும் அம்பலப்பட்டது. அந்த நிகழ்வு போக்கினை இக்கட்டுரை அலச முயற்சிக்கிறது

பொறுப்பை தட்டிக்கழிக்க ஒரு சட்டம்

முன்னாள் அட்வகேட் ஜெனரல் சோலி சொராப்ஜியும், புகழ் பெற்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரும், இச்சட்டம் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் மக்களின் அடிப்படை உரிமைக்கான பிரிவில் உள்ள 21-ஆம் ஷரத்திற்கு விரோதமானது. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டமெனக் கருத்துக் கூறியுள்ளனர்.

இதே கருத்தை சமூக உணர்வுள்ள விஞ்ஞானிகளும் பிரதிபலிக்கின்றனர். செர்னோபில் அணுமின்நிலைய விபத்து, அமெரிக்காவின் திரீமைல் ஐலன்ட் அணுசக்தி நிலைய விபத்து, அணுசக்தியை கவனக்குறைவாக கையாண்டதால் கல்பாக்கம் அணுசக்தி அமைப்பில் கனநீர் வெளியேறியதால் ஏற்பட்ட விபத்து போல் இந்திய அணுசக்தி நிலையங்களில் ஏற்படும் விபத்துக்கள் மட்டுமல்ல கதிர் வீச்சுக் கழிவுகள் டெல்லி கடைகளுக்கு வந்து மக்களை பாதித்த நிகழ்வுகள், பழைய கப்பல்களை உடைக்கிற பொழுது கருவிகளின் கதிர்வீச்சு பொருள்கள் சிதறி ஏற்பட்ட பாதிப்பு  இவைகளை அறிந்த நிபுணர்கள் ஒருமித்த குரலில் கவனத்தோடு அணுசக்தியை பயன்படுத்த, மக்களின் ஆரோக்கியத்தை காக்க இச்சட்டம் திருத்தப்படவேண்டும் என்கின்றனர்.

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் (26, ஆகஸ்ட்2010) இந்தச் சட்டம் பற்றி இரண்டு பவூதிகப் பேராசிரியர்கள் எழுதியது:

“சமீபத்தில் டோயோட்டா நிறுவனம் லட்சக்கணக்கான கார்களை திரும்பப் பெற நிர்பந்தம் ஏற்பட்டது. வண்டி ஓடுகிற பொழுது வேகம் கூடி விபத்துகளுக்கு காரணம் உற்பத்தியில் உள்ள குறை என்று ஏற்று அந்த நாட்டுச் சட்டப்படி கார்களை திரும்பப் பெற்றது. இந்திய அரசு கொண்டு வந்த அணுசக்தி பொறுப்புச் சட்டம் போல் ஜப்பானிய சட்டம் இருந்திருந்தால் பொறுப்பை தட்டிக் கழித்து விபத்துக்கு காரணம் ஓட்டுனர்களே, அவர்கள் தான் நட்ட ஈட்டிற்கு பொறுப்பு என்று கூறி டோயோட்டோ தப்பியிருக்கும். அதைவிட எவ்வளவு இழப்பு என்ன வகையான இழப்பு என்று தெரியாத நிலையில் இழப்பீட்டுத் தொகைக்கு வரம்பு கட்டுவது விவேகமான செயலல்ல என்று சுட்டிக்காட்டுகின்றனர்.”

(பல ஆயிரம் பேரைக் கொன்ற போபால் விஷவாயு விபத்து வழக்கில் அமெரிக்க தாய் நிறுவனம் யூனியன் கார்பைடு இது மாதிரி வாதாடியே தப்பியது என்பதை நினைவு கூறுக)

இந்த சட்டம் ஓரவஞ்சகமானது நயவஞ்சகமானது என்பதற்கு பத்திரிகைகள் இன்னொன்றையும் சுட்டிக் காட்டுகின்றன.

1957-இல் அமெரிக்க அரசு கொண்டு வந்த சட்டம் (பிரைஸ் ஆன்டர்சன் ஆக்ட்) சொல்கிறது:

அணு சக்தி விபத்து ஏற்பட்டால் (10 பில்லியன் டாலர்) சுமார்46 ஆயிரம் கோடி ரூபாய் வரை  இழப்பீட்டை உற்பத்தியாளர் ஏற்க வேண்டும். அதற்கு மேல் உள்ள நட்ட ஈட்டை அரசு ஏற்கும் என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த பொறுப்பை ஏற்றுத்தான் அமெரிக்க முதலாளிகள் 100க்கும் மேற்பட்ட  அணுமின் நிலையங்களை அங்கு ஓட்டி வருகின்றனர். அமெரிக்கச் சட்டத்தில் அணுசக்தி எந்திர அமைப்பின் கோளாறுகளுக்கு அதை உற்பத்தி செய்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெளிவாக உள்ளது. அந்த அமெரிக்க சட்டத்தை காப்பி அடித்த இந்திய சட்டமோ யார் பொறுப்பு என்பதை தெளிவாகச் சொல்லாமல் விடுகிறது. பொறுப்புத் தொகையும் குறைவாக நிர்ணயிக்கிறது. இந்த சட்டம் இவ்வாறு ஓரவஞ்சகமாக அமைய இந்திய பெருமுதலாளிகள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் நிர்பந்தமும் காரணம் என்று பத்திரிகைகளின் விமர்சனத்திற்கு  மன்மோகன் சிங்கிடம் பதிலில்லை.

அமெரிக்க சட்டத்தில் பொறுப்புத் தொகை 46 ஆயிரம் கோடியாக குறிப்பிடப்படுகிறது. இந்திய சட்டமோ ரூ. 1500 கோடி வரை பொறுப்பேற்றால் போதும் மீதியை பாதிக்கப்பட் டோர் ஏற்கட்டும் என்று எதுவும் சொல்லாமல் விட்டுவிடுகிறது. இடதுசாரி கட்சிகள் கொடுத்த பல திருத்தங்களை வாக்கெடுப் பிற்கு விட மறுத்து கூவியே நிராகரித்தனர். 10 ஆயிரம் கோடி ரூபாய் என்று பொறுப்பு வரம்பை உயர்த்த மார்க்சிஸ்ட்கட்சி கொடுத்த திருத்தத்தையும் வாக்கெடுப்பில் ஆளும் கும்பல் தோற்கடித்துவிட்டது. இதன் பொருள் போபால்  விஷவாயு விபத்தில் அரசு பின்பற்றியது போல் முதலாளி கொடுத்த சிறிய தொகையை பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்க பிரித்து கொடுத்து கடமையை நிறைவேற்றியதாக கருதுவது  போல் இதிலும் நடந்து கொள்ள அதிகாரத்தை இச்சட்டம் அரசிற்கு கொடுக்கிறது என்பதாகும்.

இந்த குறைந்த பொறுப்புத் தொகையை குறிப்பிடுவது கவனக்குறைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் பயப்படு கின்றனர். (அமெரிக்காவில் ஒரு கதை உண்டு; மாடுகளை மயக்கி அறுத்து மாட்டுக்கறி எடுத்து பதப்படுத்தும் தானியங்கி தொழிற் சாலையில், ஒரு தொழிலாளி கன்வேயர் பெல்ட்டில் விழுந்து விடுகிறான், அவனைக் காப்பாற்ற வேண்டுமானால் தானியங்கி எந்திரத்தை சில மணிநேரம் நிறுத்த வேண்டும், சில மணி நேரம் நிறுத்தினால் ஏற்படும் உற்பத்தி இழப்பால் ஏற்படும் நட்டத்தை விட, இறந்தால் கொடுக்க வேண்டிய சட்டப்படியான இழப்பீடு தொகை குறைவு எனக் கணக்குப் போட்ட முதலாளி எந்திரத்தை ஓட்ட உத்திர விடுகிறான். அறுபட்டு இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு வழக்காடி, காலம் கடத்தி சட்டப் படியான சொற்பத் தொகையை முதலாளி கொடுக்கிறான்) இந்த கதையில் நட்ட ஈடு கிடைத்து விடுகிறது. ஆனால் போபால் விபத்தில் இன்றும் நட்ட ஈடு கிடைக்காமல், சிகிச்சை பெற காசில்லாமல் தவிப்போர் எண்ணிக்கை பல ஆயிரங்களாகும். இந்திய அரசையும், முதலாளிகளையும் முறைப்படுத்தும் சட்டங்கள் இல்லையானால் மக்கள் நலன் உதாசீனப் படுத்தப்படும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்.

சமூக உணர்வுள்ள விஞ்ஞானிகள் நெடு நாட்களாக அணுசக்தியை வசப்படுத்தி பயன்படுத்தும் பொழுது உருவாகும் பேரிடர்களை தவிர்க்க இந்திய அரசு செய்ய வேண்டியவைகளை அறிவுறுத்தி வருகின்றனர். அந்த எச்சரிக்கைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டுவர செல்வாக்குள்ள தாய் மொழி பத்திரிகைகள் தவறுகின்றன என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இடதுசாரி கட்சிக்களைத் தவிர பிற கட்சிகள் இத்தகையப் பிரச்சனைகளில் அக்கறை காட்டுவதில்லை என்பதையும் கவனிக்க தவறக் கூடாது. எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபற்றிய பொது அறிவை பெற முயற்சிப் பார்கள் என்று கேட்டால் அன்னை, அம்மா, தலைவர் என்று திக்கு நோக்கி நிற்பவர்களே அதிகம் இருக்கும். சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் படைத்த நாடாளுமன்றமும், நாடாளுமன்றக் குழுக்களும் எவ்வளவு கவனக்குறைவாக உள்ளன என்பதை அறிய, அணுசக்தி மசோதாவை பரிசீலிக்க நியமித்த டாக்டர் சுபாராமரெட்டி தலைமையில் நாடாளு மன்றக் குழுவின் அறிக்கையை படித்தவர்களால் உணரமுடியும். நிபுணர்கள் கூறுவது என்ன?, சர்வதேச அணுசக்தி ஆணையமும், ஐ.நா.வின் உலக சுகாதாரக் கழகமும் இணைந்து செர்னோபில் அணுமின் நிலைய விபத்திற்குப் பிறகு பாதிக்கப் பட்ட மக்களைப் பற்றிய அறிக்கையை தயாரித்துள்ளனர். விபத்துக்களை தவிர்க்கவும் அதையும் மீறி விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு நோய்களுக்கு ஆளாகும் மக்களுக்கான சிகிச்சை முறைகளையும் கொண்ட அனுபவப் பொக்கிஷமாகும். அந்த அறிக்கையை நாடாளுமன்றக்குழு படிக்காமலே பரிசீலிக்க மறுத்துவிட்டது. அதைத் தொட வேண்டாம் என்று முதலாளிகள் சங்கம் சார்பில் கூறியதை இந்தக்குழு வேத வாக்காக எடுத்துக் கொண்டது. அணுசக்தி ஒரு தொழில், அதை வைத்து லாபம் சம்பாதிக்க வருவோரை விரட்டி அடித்து விடக் கூடாது. தொழில் வளராமல் போய்விடும் என்பதே இந்தக்குழுவின் கவலையாக இருந்ததே தவிர மக்களின் ஆரோக்கியம் ஒரு பொருட்டாக இவர்களுக்குத் தெரியவில்லை.

யாரைப்பாது காக்க ரகசிய பாதுகாப்பு சட்டம்

பிரன்ட்லைன் இதழில் ( ஏடிட. 16 :: சூடி. 06 :: ஆயச. 13 – 26, 1999) 11 வருடங்களுக்கு முன்னர் அணுசக்தி நிபுணர் டாக்டர் ஏ. கோபால கிருஷ்ணன் (சர்வதேச அணுசக்தி குழுமம் உருவாக்கிய அணுசக்தி பாதுகாப்பு முறையை வகிக்கும் குழுவின் தலைவராக செயல்பட்டவர்) எழுதிய கட்டுரையில்  அணுசக்தியை பயன்படுத்தும் அமைப்பு இருக்கிற இடத்தில் பாதுகாப்பு முறைகள் கறாராக அமல்படுத்த வேண்டிய இந்திய அரசு எவ்வளவு கவனக்குறைவாக, அதிகார வர்க்கப் போக்கில் நடந்து கொள்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார். அணுசக்தி ஆபத்தை விளைவிக்காமல் பயன்படுத்த தேவையான ஞானத்தை பிற நாடுகளோடு ஒத்துழைப்பதின் மூலம் பெறமுடியும். ஆனால் முட்டாள்தனமாக 1974 பொக்ரான் அணுகுண்டு சோதனை செய்து உலக நாடுகளின் ஒத்துழைப்பை சுத்தமாக இழந்து விட்டோம் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

அக்கட்டுரையில் அணு சக்தியை பெருமளவில் பயன்படுத்த மூன்று நிபந்தனைகளை வலியுறுத்துகிறார்;

(1)          பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனுபவங்களைப் பெற உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற வேண்டும்.

(2)          அணு சக்தியை பயன்படுத்தும் எல்லா அமைப்பு களையும் கண்காணிக்க சுயேச்சையாக இயங்கக் கூடிய கண்காணிப்பு குழுமம் உருவாக்கப்பட வேண்டும். இப்பொழுது இந்தக் குழுமம் அணுசக்தி இலாகாவின் கீழ் உள்ளதால் பல குறைபாடுகளை சரி செய்ய முடியவில்லை.

(3)          அணுசக்தி அமைப்பு பற்றிய விவரங்கள் ரகசிய ஆவணச் சட்டப்படி மக்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. தாங்கள் வசிக்கும் இடத்தருகில் அணுசக்தியை பயன்படுத்தும் அமைப்பு இருக்குமானால் அது பற்றிய தகவல்களை அறியும் உரிமையை பறிக்கக் கூடாது.

என மூன்று முக்கிய நிபந்தனைகளை வலியுறுத்துகிறார். அந்த கட்டுரையில் அவர் ஒரு அதிர்ச்சி தரும் தகவலையும் பதிவு செய்துள்ளார். அணுசக்தி சம்பந்தமான நாடாளுமன்றக்குழு இத்துறை நிபுணர்களை அழைத்து கருத்து கேட்டது கிடையாது கருத்துக் கூற முன்வந்தாலும் மறுத்துவிடுவர் என்று குறிப்பிட்டு ள்ளார், 1994-இல் சர்வதேச அணுசக்தி குழுமம் அணுசக்தியைப் பாதுகாப்பாக பயன்படுத்த பின்பற்ற வேண்டிய முறைகளை உருவாக்க நியமித்த குழுவின் தலைவராக இவரை தேர்ந்தெடுத்தனர், 16 நாட்டு நிபுணர்கள் பங்கு பெற்ற அந்தக் குழு உருவாக்கிய பாதுகாப்பு முறைகளை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. இந்தியாவும் அதை ஏற்று கையெழுத்திட்டது. ஆனால் அதை அமலாக்க இன்னொரு ஆய்வு நடத்தி சிபாரிசுகளை கிடப்பில் போட்டதோடு கடமை முடிந்து விட்டதாக இந்திய அரசு கருதிவிட்டது.

இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள், ஆய்வு மையங்களில் பாதுகாப்பு கேவலமான நிலையில் இருப்பதை உணர்ந்த  இந்திய அணுசக்தி  ஆணையத்தின் முடிவுப்படி பாதுகாப்பு முறைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி உத்தரவாதப்படுத்த 1995-இல் அறிக்கை தயாரிக்க இவர் தலைமை தாங்கிய இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது. 130 பாதுகாப்பு பிரச்சனை களை தொகுத்து, அதில் 90 பிரச்சனைகள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என்று பட்டியலிட்டு அந்த ஆணையம் கொடுத்தது. இந்தியா சர்வதேச ஒழுங்குமுறைகளை ஏற்று கையெழுத்திட்ட நாடாக இருந்தும் இந்த பாதுகாப்பு முறைகளில் அக்கறை காட்டவில்லை என்று வேதனைப் படுகிறார். அவர் கட்டுரையை முடிக்கும் பொழுது ஒரு கேள்வியோடு முடிக்கிறார், செர்னோபில் திரீமைல் ஐலன்ட் போல் பேராபத்து நிகழ்ந்த பிறகுதான் இந்திய அரசிற்கு புத்திவருமா?

சர்வதேச அணுசக்தி குழுமம் வகுத்த பாதுகாப்பு முறைகளை பெயரளவிற்கு வைத்ததால், மக்களைப் பாதிக்கும் பல விபத்துக்கள் அதிகார வர்க்க நடைமுறைகளாலும், அரசாங்க ரகசிய பாதுகாப்புச் சட்டத்தாலும் மூடி மறைக்கப்படுகின்றன. மார்ச் 26,1999 அன்று கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தில் 4 டன் கதிர்வீச்சு கணநீர் வெளியேறியதால் ஏற்பட்ட விபத்தில் நிர்வாகம் தந்த கசிவு என்று தவறான தகவல்களைத் தவிர பல விவரங்களை மக்கள் அறியமுடியவில்லை. நம்பிக்கை இழந்த நிலையில் மக்கள் தவித்தனர். சுயேச்சையாக இயங்கும் கண்காணிப்பு குழுமம் இருந்திருந்தால் பாதுகாப்பு முறைகள் கறாராக அமலாகி விபத்தை தடுத்திருக்க முடியும். தகவல் அறிவதை ரகசிய ஆவணச் சட்டம் மூலம் தடுக்காமல் இருந்திருந்தால் மக்களின் தவிப்பை போக்கியிருக்க முடியும். அது பற்றி இப்பொழுதாவது அரசு அக்கறை காட்டியதா என்றால் இல்லை  இப்பொழுது கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டமும் பாதுகாப்பு முறைகளை கண்காணிக்கவோ, தொழிலாளர்கள் கதிர் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானாலோ சுற்றுப்புறச் சூழல் பாதித்தாலோ நிர்வாகத்தின் கடமைகளையும் பொறுப்புக் களையும் வரையறை செய்யவில்லை. தனியார் கைகளில் அணு சக்தி தொழில் போகிற சூழலில் இது தாவாக்களை உருவாக்கும், நீதியும் கடைச்சரக்காக விலை பேசப்படும்.

கதிர்வீச்சு கழிவும் சட்டமும்

அணுசக்தியை பயன்படுத்துவதில் உள்ள சிக்கலான தொழில்நுட்ப சவாலாக இருப்பது கதிர்வீச்சு கழிவுகளை அப்புறப்படுத்துவது சம்மந்தமானது. பாதுகாப்பாக பாறைகளில் ஆழமாக புதைக்கப்படவேண்டும். தனியார் கைகளிலும் அந்நிய நிறுவனங்கள் கைகளிலும் அணுசக்தி தொழில் போகிற பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை, குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் செலவைக் குறைக்கவும் விவரம் அறிந்த அமெரிக்க மக்களின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பவும் செய்கிற தில்லு முல்லுகளை உலகமறியும். கதிர்வீச்சுக் கழிவுகளை ஏற்றுமதி செய்து மூன்றாம் உலக நாடுகளில் கொட்டுவது வழக்கமாகி விட்டது. உடைபட இருக்கும் கப்பல்களில் கதிர்வீச்சை பயன்படுத்தும் கருவிகள் இருப்பதை  மறைத்து இந்தியாவிற்கு அனுப்பியதால் நம் கடற்பகுதி கதிர்வீச்சு கெடுதலுக்குட் பட்டதை அறிவோம், சுற்றுப்புற சூழல்பற்றி அக்கறையில்லாத இந்திய முதலாளிகளும் செலவைக் குறைக்கத் துடிக்கும் அந்நிய நிறுவனங்களும் இந்தியாவில் அணுமின் நிலையங்களை பெருமளவில் கட்ட அனுமதிக்கிற பொழுது கதிர் வீச்சுக்கழிவை அப்புறப்படுத்தும்  முறைகளும், கண்காணிப்பு ஏற்பாடும் தெளிவான சட்டம் இப்பொழுது இல்லை.   இப்பொழுது காற்று, நீர், நிலம்  இவைகளில் கதிர்வீச்சு மாசு இருந்தால் கண்டுபிடிக்கிற அதிகாரம், நடவடிக்கை எடுக்கிற அதிகாரம், அதற்கான கருவிகள், நிபுணர்கள், ஆய்வகங்கள் மத்திய அரசின் அணுசக்தி அமைச்சகத்திடம் மட்டுமே உள்ளது. அது மட்டுமல்ல “ரகசியப் பாதுகாப்பு சட்டப்படி” (அபிசியல் சீக்ரெட்ஸ் ஆக்ட் படி) அணுசக்தி சம்பந்தமான தகவல் பெறும் உரிமையும் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த அதிகாரம் பரவலாக்கப்படாமல் இருந்தால் கதிர்வீச்சு கழிவுகளை கண்ட இடங்களில் வீசுவதை தடுக்க முடியாது. கடலில் வீசினால் மீன் மற்ற ஜீவராசிகள் பாதிக்கும். மற்ற கழிவுகளைப்போல் ஆற்றிலோ, குப்பை மேட்டிலோ போட முடியாது   என்பதை இந்த சட்டத்தை கொண்டு வந்தவர்கள் உணரவில்லை. இந்த நிலை நீடித்தால்  இங்கே தொழில் நடத்தவரும் அந்நிய தனியார் நிறுவனங்கள் அவங்க நாட்டு கதிர் வீச்சு கழிவுகளையும் கொண்டுவந்து போடும் அதிகாரப் பூர்வமான குப்பைத் தொட்டியாக இந்தியாவை ஆக்கிவிடுவர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தூங்குவது ஏன்?

ஒரு அணு மின்நிலையம் கட்ட அதிகபட்சம் 5 ஆண்டுகள் ஆகலாம். 1988-இல் கூடங்குளம் அணுமின் நிலையத்தை கட்ட சோவித் யூனியனும் இந்திய அரசும் ஒப்பந்தம் செய்து 22 வருடங்கள் கடந்த பிறகும் இயங்வில்லை ஏன்?. பல தடைகளை அமெரிக்க ஆளும் வட்டாரம் போட்டது என்பதை மக்கள் அறிய வாய்ப்பில்லை. கட்டி முடித்த பிறகும் அது தூங்குவது ஏன்?.  முதலில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அணுசக்தி ஆபத்தானது என்ற பீதியை தமிழ் நாட்டில் தன்னார்வக் குழுக்கள் மூலம் பரப்பினர். 1986-இல் ஏற்பட்ட செர்னோபில் விபத்தை அறிந்த மக்கள் நியாயமாகவே பயந்தனர். அடுத்து கோர்பசேவ் போய் எல்ஸ்ட்டின் ரஷ்ய அதிபர் ஆனதும் அமெரிக்க சொல்லைக் கேட்டு எல்ஸ்டின் மின்நிலையம் கட்டுவதை தள்ளிப் போட்டார். ரஷ்யாவில் ஆட்சி மாறியவுடன் அணு மின்நிலையம் வேகமாக வளர்ந்தது. இப்பொழுது அமெரிக்கா, நியூக்ளியர் சப்ளையர் நாடுகளின் ஒப்பந்தம் மூலம் எரி பொருளுக்கு போடுகிற தடைதான் கால தாமதத்திற்கும், தூக்கத்திற்கும் காரணம் என்பதை சமூக உணர்வுள்ள அணுசக்தி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அணுசக்தியும் ஏகாதிபத்திவாதிகளும்

ஏகாதிபத்தியத்தின் ஒரு அரசியல் நெம்பு கோல் அணுசக்தி என்பதை நினைவில் கொண்டு    கூடங்குளம் அணுமின் நிலையத்தை கட்டவிடாமல் ஏன் அமெரிக்கா தடுத்தது, பின்னர் அதே அமெரிக்கா இந்தியாவோடு அணு மின்நிலையம் கட்ட ஒப்பந்தம்  ஏன் போட்டது என்பதை அலசினால் அமெரிக்க அரசியலின் புதிர்கள் விளங்கிவிடும். ஏகாதிபத்தியவாதிகளை பொறுத்தவரை அரசியலுக்கு பயன்படும் தாதுக்கள் எந்த நாட்டிலிருந்தாலும் அதை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராமல் ஓயமாட்டார்கள். இந்தியாவின் கூட்டுச் சேரா கொள்கை மூன்றாம் உலக நாடுகளை ஒன்றுபடுத்தி தாதுக்களை வேட்டையாடுவதற்கு எதிர்ப்புகளை காட்ட வழிவகுத்தது. அந்த கொள்கையை புதைக்க வைக்க அமெரிக்கா எடுத்த நெடுநாள் ராஜதந்திர முயற்சியில் வெற்றி பெற்ற பிறகே அணுசக்தி பற்றி ஏகாதிபத்தியவாதிகள் பேசவே ஆரம்பித்தனர். இந்தியாவை ராணுவப் பங்காளியாக ஆக்கிய பிறகே, 123 அணுசக்தி ஒப்பந்தம் போடப்படுகிறது, இப்பொழுது சட்டமும் அவர்கள் விரும்பிய வண்ணம் வந்துவிட்டது. இதற்கு ஒரு வரலாறு உண்டு.

1995-இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஒரு பாதுகாப்பு ரகசியக் குறிப்பை அமெரிக்காவும் இந்தியாவும் பரிமாறிக் கொண்டனர். அமெரிக்காவின் ஆசிய தலையீடு களுக்கு இந்தியா உதவ வேண்டும். அதற்கு பதிலாக அவர்களிடம் உபரியாக இருக்கும் ஆயுதங்களை நமக்கு விற்பார்கள், அவர்களிடம் குறைவாகவும் நம்மிடம் உபரியாக இருக்கும் மனித சக்தியை ராணுவத்திற்கு பயன்படுத்த நாம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்பது தான் அந்த குறிப்பின் சாரம். இந்தக் குறிப்பும் இந்தியப் பெருமுதலாளிகளின் நிர்பந்தமும் நேருவின் அணிசேராக் கொள்கைக்கு நிரந்தர ஆப்பு வைத்தது. அதன் பிறகு வந்த பிரதமர்களில் குறிப்பாக வாஜ்பாய் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம், ஏகாதிபத்திய வாதிகளின் நண்பன் என்று பெயரெடுத்த மன்மோகன்சிங் கண்காணிப்பில் அமெரிக்க-இந்திய போர்வியூக பங்காளி ஒப்பந்தம், 123, அணுசக்தி ஒப்பந்தம், சமூக பயன்பாட்டு அணுசக்தி பொறுப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லையபிலிட்டி சட்டம்) ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விவகாரம் அரங்கேறியது.

அணு சக்தியும் – தனியார் மயமும்

அணுமின் நிலையங்களை தனியாரும், அந்நிய நிறுவனங்களும் கட்ட அரசு கதவை திறந்து விட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தங்கள் போடப்படுவதாக கூறப்படுகிறது. மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பது உட்பட பேசப்படுவதாக  கூறப்படுகிறது. கம்பி இழப்பு 40 சதம் வரை இருக்க அனுமதிக்கப் படுவதாக கூறப்படுகிறது. 60 வாட்டை கொடுத்தால் 100 வாட்டிற்கு காசு கொடுக்க வேண்டும். கொள்ளை லாபம் என்பதால் அணுமின் நிலையங்கள் வேகமாக வரும் என்று எதிர் பார்ப்பு மன்மோகன்சிங் வகையறாக்களை குஷிப்படுத்தலாம். ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் நோக்கம் கொள்ளை லாபமட்டுமல்ல.

இந்திய அணுசக்தி வளர்ச்சி அவர்களது கண்ணை உறுத்துகிறது. இன்று இந்தியாவில் 19 அணுசக்தி நிலையங்கள் இயங்குகின்றன. கடந்த 20 வருடமாக இதற்கான யூரேனிய எரிபொருளை ரஷ்யா தான் தருகிறது. இந்தியா பொக்ரான் சோதனைக்குப் பிறகு ஏகாதிபத்தியவாதிகள் எரிபொருள் தர மறுத்து விட்டனர். அணுசக்தியை குண்டுகள் செய்ய பயன்படுத்திய காங்கிரஸ் அரசோ, பா.ஜ.க. அரசோ யூரேனிய சுரங்கங்களைப் பராமரிக்கவோ, புதியவைகளை தேடவோ தவறிவிட்டனர். ஏகாதிபத்தியவாதிகள் போட்ட தடையும் அரசின் கவனமின்மையும். நமது அணுசக்தி நிபுணர்களை புதிய எரிபொருளை தேட வைத்துவிட்டது. அதன் விளைவாக அணுசக்தியை பெற யூரேனிய உலோகம் மட்டுமல்ல, நமது நாட்டில் கிடைக்கும் தோரியம் போன்ற கதிர் வீச்சு உலோகத்தையும் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை நமது நிபுணர்கள் உருவாக்கிவிட்டனர். அணுசக்தியை பயன்படுத்த அவசியமான கண நீர் உற்பத்தியிலும் தேர்ந்து விட்டனர். ஏற்றுமதி செய்கிற அளவிற்கு உற்பத்தியை வளர்த்துவிட்டனர். இன்றையத் தேதியில் அணுமின் நிலையத்தை சொந்தமாகக் கட்டி இயக்கக் கூடிய தொழில்நுட்ப கைகளுன்டு. அந்நிய தொழில்நுட்பம் தேவையில்லை, சர்வதேச அளவில் இந்திய அணுசக்தி நிபுணர்கள் பல பொறுப்புக்களில் செயல்படுவதை காண்கிறோம். இதற்கு ஒரு காரணம் ஏகாதிபத்தியவாதிகளின் தடை. அது நம்மை சொந்தக்காலில் நிற்க வைத்துவிட்டது.

இச்சூழலில் இந்திய – அணுசக்தி, கதிர்வீச்சு தாது சுரங்கங்கள் இவைகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது போன்ற “பரந்த நோக்கமே” ஏகாதிபத்திய வாதிகளை இங்கே வரவழைத்தது. இந்திய அரசு இரு தரப்பிற்கும் பலனளிக்கும் முறையில் வர்த்தக ரீதியான ஒப்பந்தம் போட உறுதி காட்டியிருந்தால் அவர்கள் சம்மதிக்கும் உலக நிலைமை இன்றுள்ளது. ஆனால் நமது நாட்டு பெருமுதலாளிகளின் நிதி மூலதன விளையாட்டிற்கு மேலை நாட்டு சந்தையில் வாய்ப்பை அவர்கள் தர மாட்டார்கள். எனவே நாட்டு நலனைவிட பெருமுதலாளிகளின் நலன் முதலிடத்திற்கு வந்ததால் ராணுவ கூட்டும், 123 ஒப்பந்தமும் இந்த கேவலமானச் சட்டமும்,  நம் தலையில் விழுந்தன.

சட்ட விரோதமாகச் சுரங்கங்களைத் தோண்டி தாதுக்களை திருடும் கூட்டத்தின் மூலம் பெறுவதை விட இப்பொழுது நேரடியாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்து விட்டது. (2007-ஆம் ஆண்டில் வைகுந்தராஜன் என்பவரை மதுரை காவல்துறை தோரியத் தாதுவைக் கடத்தி ஏற்றுமதி செய்ததாக வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் குற்றவாளி கடைசி வரை எந்த நாட்டிற்கு இந்த தாது ஏற்றுமதி செய்யப் பட்டது என்பதை சொல்ல மறுத்துவிட்டார்.) அதுவும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற அறிவிப்பு அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விடுகிறது. அந்நிய நிறுவனங்கள் வெறும் கையோடு வந்து அணுமின்நிலையம் கட்டவும், சுரங்கங்களைக் கைப்பற்றவும் லாபம் சம்பாதிக்கவும் இன்று எளிதில் முடியும்.

ஒன்றை இந்திய மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். சமூக உணர்வுள்ள விஞ்ஞானிகள், நிபுணர்கள் கருத்துக்களை பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும். இந்திய மக்களின் கண்ணில் மண்ணைத்தூவும் நாடாளுமன்ற நடவடிக் கைகளை அம்பலப்படுத்த வேண்டும். ஆட்சியாளர் களைக் கொண்டு இந்தியப் பெருமுதலாளிகள் கூட்டம் சிலந்தி போல் மாட்டிக்கொள்ள வலை பின்னுவதை மக்களறியச் செய்ய வேண்டும். உலக அளவில் சிறிய நாடுகளை ஆட்டிப்படைக்க நமது தாதுக்களும், செல்வாதாரங்களும் ஏகாதிபத்திய வாதிகளின் கையில் போகிறது. இது இந்தியாவிற்கு கெட்ட பெயரை சம்பாதித்து கொடுக்கும். அமெரிக்காவோடு வர்த்தக உறவை நாடலாம், ராணுவப் பங்காளி உறவு கூடாது. பல துருவ உலகில் இது சாத்தியமே.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: