மூலதனம் உயிரற்ற உழைப்பாகும். அது இரத்தம் குடிக்கிற பிசாசாக உயிருடனான உழைப்பை ஓட்ட உறிஞ்சுகிறது. இப்படி உறிஞ்சு வதன் மூலமே அப்பிசாசு தனது சீவனைத் தக்க வைத்துக் கொள்கிறது.” – காரல் மார்க்ஸ் மாருதி கார் தொழிலாளர்களின் அண்மைய 14 நாள் வேலைநிறுத்தம் தேசத்தின் கவனத்தை வெகு வாக ஈர்த்த நிகழ்வாகும். தலைநகர் டெல்லியில் இருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள ” சாட்டிலைட் நகரமே” மாருதி கார் தொழிற்சாலை அமைந் துள்ள குர்கவான் ஆகும். 1997 ல் ஜெனரல் எலெக்ட்ரிக் அடியெடுத்து வைத்த பின்னர் , அமெரிக்கன் ஏர்லைன்ஸ், பேங்க் ஆப் அமெ ரிக்கா, கொக்க கோலா, எரிக்சன், ஹீரோ ஹோண்டா, ஐ.பி.எம், மைக்ரோ சாப்ட், நோக்கியா, ஆரக்கிள், டி.சி.எஸ் என பன்னாட்டு அரக்கக் கம்பெனிகளும், இந்தியப் பெரும் தொழிலகங்களும் குர்கவானில் வந்து குவித் துள்ளதால் உலகம் அறிந்த நகரமாக அது மாறிப் போயிருக்கிறது. குர்கவான் என்கிற சமஸ்க்ரிதப் பெயருக்கு ” குருவின் கிராமம்” என்று அர்த்தம். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் மகாபாரதத்தில் ஆசிரியராகத் திகழ்ந்த துரோணரின் கிராமம் இது என்பதே நம்பிக்கை.
அன்று துரோணர் ஏகலைவன் தான் கற்ற வித்தையைக் கொண்டு விடுதலை தேடிவிடக் கூடாது என்பதற்காக கட்டைவிரலை கேட்டார், இன்று ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக அரசுகள் ஏகலைவர்களின் உரிமைகளை காக்கும் சங்கம் சேரும் உரிமை என்ற கட்டை விரலை காவு கேட்கின்றனர், ஏகலைவர்களின் தொழில் நுட்பம் செறிந்த உழைப்பு முதலாளிகளுக்கே என்கின்றனர், இந்த உண்மையை மாருதி வேலை நிறுத்தம் அப்பட்டமாக எடுத்துக்காட்டி யுள்ளது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் பாரபட்சங்களை, ஜனநாயக மறுப்பை, உள் ளார்ந்த முரண்பாடுகளை கூர்மையாக வெளிக் கொணர்ந்துள்ள மற்றொரு நிகழ்வாக இது அமைந்துள்ளது.
பற்றிப் பரவிய நெருப்பாய் …
மாருதி வேலைநிறுத்தத்தின் திரட்டல், எழுச்சி, தாக்கம் ஆகியன தொழிலாளர் இயக் கத்தின் சீரிய அனுபவங்கள் ஆகும். முதலாவ தாக, இந்தியாவின் மிகப் பெரிய கார்த் தொழிற் சாலையில் நடைபெற்றுள்ள வேலைநிறுத்தம் இது. குறிப்பிட்ட நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாருதியின் இதர துணை நிறுவனங்களின் ஊழியர்களும் இணைந் ததும், பதவி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லா ஊழியர்களும் ஒன்று திரண்டதும் முக்கியமான நிகழ்வாகும். இரண்டாவது, அமைதியான முறையில் திரட்டல் நடந்தேறி குர்கவானின் பிற தொழிலகங்கள் மட்டுமின்றி குர்காவனுக்கு வெளியேயும் தாக்கத்தை, ஆதரவு இயக்கங்களை உருவாக்கிய போராட்டமாக இது பரிணமித்தது. மூன்றாவது, நிர்வாகம் பேச்சு வார்த்தை மேசைக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதும், பெருமளவு பணிநீக்கங்கள் திரும்பப் பெறப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது. இவையெல்லாம் உலகமய யுகத்திலும் தொழி லாளர்கள் ஒன்றுபட்டு நின்றால் சட்டப்படியான உரிமைகளை பாதுகாக்க முடியும் இயக்கம் போராட முடியும்; முன்னேற முடியுமென்கிற நம்பிக்கையை ஏற்படுத்திய நிகழ்ச்சிகளாகும். அரசுகளின் விசுவாசம் யார்பக்கம் என்பதையும் இந்த போராட்டம் உழைப்பாளி மக்களுக்கு காட்டிவிட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக உலக மயம் என்பது மூலதனத்தின் லாபவேட்டைக் கான முதலாளித்துவப் பாதைதானே ஒழிய தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் “தாராளம்” ” சுதந்திரம்” என்ற உலகமயச் சொல் லாடல்கள் எல்லாம் வெற்றுப் பேச்சுக்கள்தான் என்பதை மாருதி பிரச்சினை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. மாருதி வேலைநிறுத்தம், நீறு பூத்த இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் கனன்று கொண்டிருந்த உணர்வுகளின் வெளிப் பாடு ஆகும். இந்தியா முழுவதும் பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழிலகங்கள், புதிய தலைமுறைத் தொழில்கள் ஆகியவற்றில் தொழி லாளர்களின் உரிமைகள் கிஞ்சித்தும் மதிக்கப் படுவதில்லை. பெரும்பான்மைத் தொழிலாளர் களை “கேசுவல் ஊழியத்தில்” வைத்திருத்தல், தொழிற்சங்கம் கூடாது,வேலைநேர வரையறுப் பின்றி பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுதல், ஓவர் டைம் ஊதியம் மறுக்கப்படல், தொழிலாளர் களின் போராட்ட உரிமைகளை மறுக்க “நன் னடத்தைப் பத்திரங்கள் ” போன்ற தாக்குதல் களைச் சந்திக்க நேரிடுகிறது. 2006 ல் கர்நாடகா டயோட்டா நிறுவனத்தில் 18 நாள் கதவடைப்பு, 2007ல் குர்கவானில் ஹோண்டா தொழிலா ளர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்து விட்ட கொடூரமான அடக்குமுறை, 2009 ல் உத்தர கான்ட் மாநிலத்தின் நெஸ்லே இந்தியா ஊழியர் கள் மேற்கொண்ட மூன்று வார வேலைநிறுத்தம் ஆகியன இந்தியா முழுவதும் உள்ள தாக்குதல் களின், எதிர்வினைகளின் அடையாளங்கள் ஆகும்.
1919ல் ஐ.எல்.ஒ உருவாக்கப்பட்ட போது அதன் உருவாக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. அப்போது அதில் வகித்த நாடுகளில் இந்தியா மட்டுமே “சுதந்திரமற்ற நாடாக” இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1948ல் ஐ.எல்.ஒவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண். 87 – சங்கம் அமைக்கிற உரிமை தொடர் பானது ஆகும். 1949ல் நிறைவேற்றப்பட்ட தீர்மான எண் 98 – கூட்டுப் பேர உரிமையை உறுதிப்படுத்துவது ஆகும். ஐ.எல்.ஒ வின் துவக்க காலத்தில் இருந்து 92 ஆண்டுகளாக உறுப்பின ராக இருந்து வருகிற இந்தியா இன்று வரை இத் தீர்மானங்களை அங்கீகரித்துச் செயல்படுத்த முன்வரவில்லை என்பதே நிலைமை. எனினும் இந்தியத் தொழிலாளர்களின் எழுச்சியினால் பல்வேறு சட்டபூர்வமான உரிமைகள் ஈட்டப் பட்டுள்ளன. ஆனால் அவற்றின் அமலாக்கத் திலும் கூட மத்திய, மாநில அரசாங்கங்கள் அக்கரையற்றவையாக மட்டுமின்றி மீறல் களுக்குத் துணை நிற்கின்றன. குர்கவானில் தொழிற்சங்கம் அமைக்க முயல்பவர்கள் சமுக விரோதிகள் மூலமாக மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதைகளாக உள்ளன. காசியாபாத்தில் ஒரு தொழிலுறவு மேலாளர் துப்பாக்கியை வைத்து தொழிலாளர்களை மிரட்டியதும், அப்போது ஏற்பட்ட மோதலில் அவர் மரணம் அடைந்ததும் சீர்கேட்டிற்கு உச்ச பட்ச எடுத்துக்காட்டாகும்.
தமிழகத்தில் ஹுண்டாய், பாக்ஸ்கான், பிரிக்கால் போன்ற தொழிலகங்களின் அனுப வமும் அதுவே. ஹுண்டாய் நிறுவனத்தில் தொழிற்சங்கம் பதிவு ஆகி மூன்றாண்டுகள் ஆகி இருந்தும் பேச்சு வார்த்தைக்கு மறுத்ததோடு, தற்காலிக பணிநீக்கம்,நிரந்தர நீக்கம் என நிர் வாகம் தொழிற்சங்கத்தின் முன்னணி ஊழியர் களை வேட்டையாடியது.மாநில அரசோ ஹுண்டாய் நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருந்த்தே தவிர முத்தரப்பு பேச்சுவார்த்தை என ஒரே மேசைக்கு அழைக்க அக்கறைகாட்ட வில்லை. தொழிலாளர் நல அமைச்சர் தனது கைப்பாவைச் சங்கத்தைப் பதிவு செய்ய வைத்து அங்கீகாரத்தையும் வழங்கி முதலாளிகளுக்கு விசுவாசத்தை காட்டினார். மாருதி பிரச்சினை யிலும் இதே உத்தியை அந்நிர்வாகம் கையாள முனைந்தது என்பதைப் பின்னர் பார்ப்போம். மலை சுமந்த மாருதி புராண மாருதி மலை சுமந்த தாகக் கதை உண்டு. ஆனால் மாருதி தொழி லாளர்கள் அயராது போராட்ட உணர்வுகளை சுமந்து சோதனைகளை மீறி முன்னேறிச் சென் றார்கள் என்பதே உண்மை. ஜூன் 4 முதல் அக் டோபர் 21 வரையிலான 140 நாட்களில் மூன்று கட்டங்களாக 62 நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தேறியுள்ளது. சங்கம் அமைக்கிற உரிமை, நன்னடத்தை பத்திரம், பணிப் பாதுகாப்பு என மூன்று கட்டங்களிலும் வெவ்வேறு பிரச் சினைகள் முன்னுக்கு வந்தது போல் தோற்ற மளித்தாலும் இவை எல்லாமே நிர்வாகத்தின் திட்டமிட்ட பன்முக அடக்குமுறைகளே ஆகும்.
மனேசாரில் உள்ள மாருதி சுசுகி தொழி லாளர்கள் ஜூன் 3 அன்று புதிய சங்கம் அமைப்ப தற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தனர். உடனே அடக்குமுறை நாகம் படமெடுக்க ஆரம் பித்து விட்டது. வெற்றுத் தாள்களில் தொழி லாளர்களின் கையெழுத்துக்களைப் பெற முனைந்தார்கள். ஏற்கனவே மாருதி உத்யோக் நிறுவனத்தில் உள்ள பொம்மைச் சங்கத்தை மனேசார் மாருதி சுசுகி தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நிர்வாகத் தின் எண்ணம். 11 ஆண்டுகளாக அந்தத் தலை யாட்டிச் சங்கத்தில் தேர்தல்களே நடத்தப்பட வில்லை என்பது தனிக்கதை.இந்நிலையில் புதிய சங்கம் அமைக்கப்படும் முயற்சியைச் சிதைப்பதற் காக 11 ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கத்திற்கு ஆளாக்கப்பட்டனர். ஜூன் 10 அன்று குர்க வானில் 2000 பேர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. அரியானா அர சாங்கம் வேலைநிறுத்தங்களை தடை செய்வதாக அறிவித்தது. எனினும் தொழிலாளர்களின் “கருவிகளை கீழே போடும்” வேலைநிறுத் தத்தைத் தடுக்க இயலவில்லை. குர்கவானின் இதரத் தொழிலகத் தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்தனர். முதலில் மிரட்டிய அரியானா அரசு வேலை நிறுத்தத்தைத் தள்ளிப் போட வேண்டுமென்று முதல்வரின் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்தது. பணித் தலத்தை விட்டு நகராமல் வேலை நிறுத்தத்தை நடத்திய தொழிலாளர்கள் 13 நாட்கள் தங்கள் உடைகளைக் கூட மாற்றிக் கொள்ளவில்லை. உணவு ஏற்பாடுகளை தொழி லாளர்களே செய்து கொண்டனர். ஆனால் நிர்வாகம் டூத் பிரஷ் உள்ளிட்டு வேறு எதையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஒரு வாரத்திற்கு 6400 கார் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், ரூ 220 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் நிர்வாகம் கணக்குகளை வெளியிட்டது. வேலைநிறுத் தத்தின் 14 வது நாளன்று உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. வெளியேற்றப்பட்ட 11 ஊழியர் களை மீண்டும் பணியமர்த்துவதாக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. சங்கம் பதிவு செய்யப் படுவதற்கான உரிய வழிமுறைகள் கையாளப்படு மென்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இரண்டாவது கட்டம், ஜூலை 28 ல் துவங்கியது. நிர்வாகம் ” நன்னடத்தைப் பத்திரம்” ஒன்றில் கையெழுத்திடுமாறு நிர்ப்பந்தித்தால் பிரச்சினை ஏற்பட்டது. தொழிலக வேலை நிலையாணைச் சட்டம் 1946 ன் படி மாருதி நிறு வனத்தின் நடவடிக்கை சரியே என ஆட்சியா ளர்கள் ஒத்து ஊதினார்கள். நிலையாணைச் சட்டத்தில் 28 வகையிலான பெரிய மீறல்களே பட்டியல் இடப்பட்டிருந்தன.ஆனால் மாருதி நிர்வாகம் நன்னடத்தைப் பத்திரத்தில் 103 வகை யிலான பெரிய மீறல்கள் இடம் பெற்றிருந்தன. கழிப்பறைகளுக்கு சென்று வருகிற நேரக் கடைப் பிடிப்பு கூட பெரிய மீறல் பட்டியலில் இருந்தது என்றால் அதன் லட்சணத்திற்கு வேறு சாட்சி தேவையா? 5 ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக் கத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.இதற்கிடையில் மாருதி சுசுகி ஊழியர் சங்கத்தின் பதிவு விண் ணப்பம் அரசால் நிராகரிக்கப்பட்டது என்பது தனித்த நிகழ்வாகவோ, தற்செயலானதாகவோ இருக்க இயலாது. ஆகஸ்ட் 29 முதல் வேலை நிறுத்தம் துவங்கியது.இவ்வேலைநிறுத்தத்தில் மாருதி பவர் ட்ரைன், மாருதி கேஸ்தடிங்க்ஸ் , சுசுகி மோட்டார் சைக்கிள் இந்திய ஆகிய நிறுவனங்களின் ஊழியர்களும் இணைந்தனர். இறுதியில் தொழிலாளர்கள் இறங்கி வர வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது. 33 நாள் வேலை நிறுத்தததிற்குப் பின்னர் நோ ஒர்க் , நோ பே என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் நிர்வாகம் சும்மா இருக்கவில்லை. நிர்வாகம் நினைத்த மாதிரி ஊழியர்களும் ஓய்ந்து போய் விடவில்லை.
மூன்றாவது கட்டம் அக்டோபர் 1 ல் துவங் கியது. தொழிலாளர்களின் பொறுப்புகள் நிர் வாகத்தின் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக் கப்பட்டது. ஊழியர்களுக்கு பணித்தலம் வரை யில் இருந்த பயண ஏற்பாடுகள் ரத்துச் செய்யப் பட்டன. 1000 கேசுவல் ஊழியர்களின் எதிர் காலமும் கேள்விக்குரியதாக ஆக்கப்பட்டது. சிறிய சிறிய தவறுகளுக்குத் தண்டனைகள் அறி விக்கப்பட்டது. 94 பேர் பணிநீக்கத்திற்கு ஆளா னார்கள்.காண்ட்ராக்டர்கள் மூலம் வேலைக்கு ஆள் அமர்த்த முயற்சித்தனர். அக் காண்ட்ராக் டர்கள் அடியாட்களாக ஊழியர்களை தாகவும் செய்தனர். அக்டோபர் 7 அன்று மாருதி சுசுகி நிறுவன வாயிலில் எதிர்பியக்கம் ஒன்றை தொழி லாளர்கள் நடத்த முனைந்த போது மாநில அரசாங்கம் அதைச் சட்ட்ட விரோதம் என அறிவித்தது. ஆனால் உயர்நீதி மன்றம் அரசின் முடிவை ஏற்காமல் 100 மீ தூரத்தில் எதிர்ப் பியக்கம் நடத்த அனுமதி அளித்தது. இப் போராட்டம் பெரும் ஆதரவைப் பெற்றது. அங்கன்வாடி, மத்திய உணவுத் திட்டம், கட்டு மானம், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் மாருதி வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகத் திரண்டனர். டெல்லியில் அரியானா பவன் முன்பும், மாருதி சுசுகி தலைமை யகம் முன்பாகவும் சி.ஐ.டி.யு , இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் ஆதரவு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன. ஊடகங்களின் கவனம் ஈர்க்கப் பட்டது. சர்வதேச அமைப்புகளின் ஆதரவுக் கரங்களும் நீண்டன. இத்தகைய பரந்த ஆதரவு தொழிற்சங்க இயக்கப் போராட வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
அக்டோபர் 21 அன்று உடன்பாட்டோடு வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. பணி நீக்கத் திற்கு ஆளானவர்களில் 64 பேர் மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். கேசுவல் ஊழியர் கள் மீண்டும் பதிவேடுகளுக்கு கெண்டு வரப்பட் டனர். 30 பேரின் பணி நீக்கங்கள் மட்டும் “பெரிய மீறல்கள்” உடையதாக இருப்பதால் விசாரணை அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றும் அறி விக்கப்பட்டது. ஒரு நீண்ட நெடிய போராட்டம் எவ்வளவு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதும், ஒன்றுபட்ட போராட்டம் மூலம் அபாயங்களைப் பின் னுக்குத் தள்ள முடிகிறது என்பதும், அங்குலம், அங்குலமாக முன்னேறுவதற்கு உறுதியோடு பயணிக்க வேண்டியுள்ளது என்பதும் மாருதி வேலை நிறுத்தம் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
மூலதனத்தின் உலகமயமே!
மாருதி வேலைநிறுத்தத்திற்கு எதிராக நிர் வாகத்தின் தரப்பில் ” கூடுதல் சம்பளம்’ என்கிற வாதம் முன்னிறுத்தப்பட்டது. குர்கவான் பற்றிய பொதுவான சித்திரமும் ஊடகங்களில் அப்படித் தரப்படுகிறது. தனிநபர் சராசரி வருமான அளவு களில் சண்டிகார், மும்பைக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் குர்கவான் உள்ளதாக புள்ளிவிவ ரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சராசரி மக் களின் நிலைமைகளை அறிய சராசரிக் கணக் குகள் உதவாது என்பதே தேசத்தின் அனுபவம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஊழியர் உள் ளடக்கத்தைப் பார்த்தாலே இவ்விவாதத்தின் போலித்தனத்தை உணர முடியும்.மொத்தமுள்ள 2300 ஊழியர்களில் 970 பேர்தான் நிரந்தர ஊழி யர்கள். 1100 பேர் காண்ட்ராக்ட் ஊழியர்கள்.300 பேர் அப்ரன்டிஸ் ஊழியர்கள். இப்படி வெவ் வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் ஒரே வேலைக்கு வெவ்வேறு சம்பளம் தருவதற்கான ஏற்பாடுதான். கீழ்க்காணும் பட்டியலைப் பாருங்கள் !
நிரந்தர ஊழியர்கள் – ரூ 15000 வரை காண்ட்ராக்ட் ஊழியர்கள்- ரூ 7000 வரை அப்ரன்டிஸ் ஊழியர்கள்.- ரூ 4000 வரை மாருதி சுசுகியின் சேர்மன் பார்கவா வார்த்தைகளில் இதுதான் ” நல்ல சம்பளம்”. சுசுகியின் தாயகமான ஜப்பானில் எவ்வளவு ஊதியம், என்ன வகையிலான ஊழியர்கள் என்ற ஒப்பீட்டைப் பாருங்கள்!
ரூ 82 நாடுகளில் 1500 நகரங்களில் உள்ள சுசுகி நிறுவனத்தில் எப்படி தொழிலாளர்களின் உழைப்பு ஓட்டச் சுரண்டப்படுகிறது என்பதற்கு இது உதாரணம். தமிழகத்திலும் ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி,மறைமலை நகர், ஓரகடம், சுங்குவார் சத்திரம், இருங்காட்டுக் கோட்டை எனப் பரவி வருகிற பல பன்னாட்டுத் தொழி லகங்களும், உள்நாட்டுப் பெருந்தொழில்களும் 90 சதவீதத் தொழிலாளர்களைக் காண்ட்ராக்ட் நியமனங்களாகவே வைத்துள்ளன. அப்ரன்டிஸ் ஊழியர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது எனச் சட்டங்கள் இருந்தும் அவை மீறப்படுகின்றன. சென்னை ஹுண்டாய் நிறு வனத்தில் விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் கூட ஏற்பட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் சங்கம் அமைக்கும் உரிமைகளை மறுதலிப்பதைப் போலவே உள்நாட்டுத் தொழிலகங்களும் உற் சாகமடைந்து அதே பாதையில் பயணிக்கின்றன.
உலகமயம் மூலதனத்திற்கான சுதந்திரத் தைத்தான் அளிக்கிறதேயொழிய தொழிலாளர் களுக்கு அத்தகைய சுதந்திரத்தையும், வாய்ப்பு களையும் அளிப்பதில்லை என்பதை மாருதி சுசுகி பிரச்சினை அப்பட்டமாக வெளிப்படுத்தி யுள்ளது.
தலையிடா (?) அரசாங்கம்
உலகமயத்தின் தாரக மந்திரம் “அரசு விலகிக் கொள்வது’ என்பதுதான். ஆனால் உண்மையில் அதன் பொருள் என்ன? ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்ப தற்கு அரசு தலையிடக் கூடாது; தனியார்களுக் கான இடத்தை உறுதி செய்ய அரசின் முதலீடு களைப் பொதுத் துறைகளில் இருந்து விலக்கிக் கொள்ளவேண் டும். மூலதனத்தின் லாபவேட்டைக்கு குறுக்கே நிற்காமல் அரசு விலகிக் கொள்ளவேண்டும். இதுவே உலகமயம் சொல்கிற விலகிக் கொள்தல். மாறாக மூலதனம் மென்மேலும் குவிவதற்கும், மையமாதலுக்கும், தனியார்களின் வளர்ச்சிக் காகவும், முதலாளி – தொழிலாளி மோதல்களில் முதலாமவர்க்கு ஆதரவாக அரசு தலையிட வேண்டுமென்பதே அதன் உள்ளார்ந்த பொருள்.
அதுவே மாருதி சுசுகி பிரச்சினையிலும் வெளிப்பட்டது. மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் ” முதலீட்டாளர் சூழல் ” பற்றி வலி யுறுத்தியதும், இன்னொரு மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னான்டெஸ் நிர்வாகங்களின் அடாவடித் தனங்களை முதலில் கண்டனம் செய்துவிட்டு பின்னர் அறிக்கையை திரும்பப் பெற நேர்ந்ததும் இதன் வெளிப்பாடுகளே.
அரியானா அரசாங்கம் மாருதி சுசுகி ஊழியர் சங்கத்தைப் பதிவு செய்ய மறுத்த தென்பது மூலதனத்திற்கு வால்பிடித்த நட வடிக்கை ஆகும். மாருதி சுசுகி வேலை நிறுத் தத்தின் போது அதற்குத் தடையாணை பிறப் பித்ததும், தொழிலக வாயிலில் எதிர்ப்பியக்கம் நடத்துவதைச் சட்ட விரோதம் என அறிவித் ததும் “முதலீட்டாளர் சூழலை” உருவாக்குவதற் கான நடவடிக்கைகள் ஆகும். தொழி லாளர்களின்” கௌரவமான உழைப்பிற்கான சூழலை ”
உருவாக்குவது என்பது பற்றி வாயளவில் பேசுவதைக் கூட உலகமய காலத்தில் நிறுத்தி விட்டார்கள்.
சங்கத்தைப் பதிவு செய்வதில் அநியாய தாமதம் காண்பிக்கப்படுவது குறித்த விவாதம் தொழிலாளர் நல அமைச்சகம் கூட்டிய முத் தரப்புப் பேச்சுவார்த்தையில் எழுப்பப்பட்டது. விண்ணப்பம் அளித்து 45 நாட்களுக்குள்ளாக பதிவு செய்யப்படவேண்டுமென்று தொழிற்சங் கங்கள் அழுத்தமாக வலியுறுத்தின. அதே போல அக்டோபர் 17 , 2011 ல் நடைபெற்ற 44 வது தொழி லாளர் நிலைக்குழு கூட்டத்தில் சி.ஐ.டி.யு பொதுச் செயலாளர் தபன் சென் ‘ எட்டு மணி நேர வேலை’ முறைமை எவ்வாறு தொழில்,சேவைத் துறைகளில் மீறப்படுகிறது என்பதை ஆதாரங் களோடு எடுத்துரைத்தார்.ஆனால் அரசாங் கத்தின் காதுகளில் பிரச்சினை இல்லை. கைகள் தான் செய்ய மறுக்கின்றன. இடதுசாரி அரசாங் கங்கள் மட்டுமே விதிவிலக்காக உள்ளன. மத்திய அரசு கூட்டிய முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் கேரளாவின் முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசின் தொழிலாளர் நல அமைச்சர் கேரளத்தில் சங்கங்களுக்கு பதிவு தாமதம் ஆவ தில்லை என ஆணித்தரமாய் எடுத்துரைத்தார். அது போன்று மேற்கு வங்கத்தில் மிட்சுபிஷி கெமிக்கல் கார்ப்பரேசன் அனுபவம் வித்தியாச மானது. அது அதிர்ஷ்டம் -500 ( – 500 ) நிறு வனங்களில் ஒன்று. 50 நாடுகளில் 282 துணை நிறுவனங்களைக் கொண்ட அந்நிறுவனம் 1997 ல் ஹால்டியாவில் பாலிஸ்டர் தொடர்பான நிறு வனத்தை அது உருவாக்கியது. . அங்கு சி.ஐ.டி.யு சங்கம் மட்டுமின்றி ஐ.என்.டி.யு.சி சங்கமும் கூட உள்ளன.35000 டன் உற்பத்தித் திறனோடு துவக் கப்பட்ட அந்நிறுவனம் 100 சதவீத திறனை எட்டி 2003 ல் 47000 டன் , 2006 ல் 860000 டன் என உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொண்டது. சங்கங்கள் இருப்பது அதன் வளர்ச்சிக்கு தடை யாக இல்லை. அங்கு நன்னடத்தை பத்திரம் போன்ற சமாச்சாரங்கள் கிடையாது. மேலும் அரசியல் உறுதியும், உழைப்பாளி மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட அரசாங்கங்கள் இன்றையச் சட்டங்களின் குறைபாடுகளையும் மீறிக்கூட தொழிலாளர் உரிமைகளைப் பாது காக்க முனைந்துள்ளன எனபதற்கு இவை யெல்லாம் சாட்சியங்கள்.
ஆனால் ‘முதலீட்டாளர்களை ஊக்கு விப்பது’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், தடையற்ற மின்சாரம், குடிநீர் ஆகியன மலிவான விலையிலும், கோடானுகோடி ரூபாய் கள் வரிவிலக்குகள் என்ற பெயராலும் அள்ளி வீசப்படுகின்றன. இப்படி மூலதனத்திற்கு வாலாட்டுகிற அரசு இயந்திரம் தொழிலாளர் களைப் பார்த்துக் குரைப்பதும், குதறுவதும் இயல்பானதுதானே! மாருதி சுசுகி முடிந்த பின்னரும் தொழிற்சங்கத் தலைவர்களை விலை பேசுவது உள்ளிட்ட மலிவான உத்திகளை நிர் வாகம் தொடர்கிறது. அரசியல் உணர்வும், வழி காட்டலும் பெற்றவர்களாக தொழிலாளர்கள் மாற்றப்படும் போது இத்தகைய உத்திகளையும் முறியடிக்க முடியும்.
நம்பிக்கை வெளிச்சம் மாருதி சுசுகி வேலை நிறுத்தம் புதிய உற்சாகத்தை இந்திய தொழிற் சங்க இயக்கத்திற்கு தந்துள்ளது.விரிந்த ஒற்று மைக்கான வாய்ப்புகளை உணர்த்தியுள்ளது. உலகமயத்தின் உள்ளீடற்ற பிரமைகளை நொறுக்கியுள்ளது. சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமை, சட்டங்களின் அமலாக்கம், அரசின் வர்க்க பாரபட்சம் ஆகியனவற்றை விவாதத்திற்கு ஆளாக்கியுள்ளது. ஏற்கனவே அரியானா, உத்தரப்ரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் எழுந்துள்ள கிளர்ச்சிகள் நாடு தழுவியதாக பரிணமிப்பதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது, அரசுகள் முதலாளிகள் பக்கம் சாய்கிறபொழுது தொழிலாளர் நலன் அரசிய லாகிவிடுகிறது, அரசியலில் போதுமான பயிற்சி பெறுகிற பொழுது, உழைப்பாளி மக்களின் விடுதலை. சமூக விடுதலையோடு பிணைக்கப் பட்டிருப்பது தெரிய வருகிறது, இந்த ஞானம் வந்தபின் வேறென்ன வேண்டும்?
Leave a Reply