மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பெண்மை – ஆண்மை எனும் பொய்மைகள் (ஒரு சமூக விஞ்ஞான விளக்கம்)


சமீபத்தில் திக்கெட்டும் பரவிய “நிர்பயா” (பயமற்றவளே) என்ற சொல்லை உருவாக்கியவர்களின் நோக்கம் நாம் அறியோம். ஆனால் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த சொல் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதற்கு வித்தாகிவிட்டது. ஆண்மை என்றால் வீரம், பெண்மை என்றால் அச்சம், ஆண்மை என்றால் துணிச்சல், பெண்மை என்றால் நாணம், ஆண்மை என்றால் அறிவு பெண்மை என்றால் மடம்  ஆண்மை என்றால் தோள்வலி, பெண்மை என்றால் எதையும் தாங்க இயலாத இடை வலி. என்ற மூத்த பொய்மை சொற்களஞ்சியமான அகராதியை கிழித்தெறியும் போரில் புதிய கட்டத்தின் அறிகுறியே நிர்பயா என்ற சொல்.  இரு நூறு ஆண்டுகளாக உலகளவில் நடக்கும்  மாற்றங்களுக்கான போரட்டத்தின் தொடர்ச்சியாகும்.

தலை நகர் டெல்லியில் ஒரு பெண்ணை காம வெறியில் கூட்டாக சித்தரவதை செய்து குடலை உருவி குற்றுயிருடன் சாலையில் வீசியது ஊடக உதவியால் உலகையே குலுக்கியதோடு, இந்திய அதிகார மையத்தையும் சிறிது அசைத்துவிட்டது. “நீதிபதிகளின் பார்வை சிறிது மாற வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியையே கூறவைத்துள்ளது.

ஆண் – பெண் சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம் நெடிய பாரம்பர்யம் கொண்டது. முதலாளித்துவ அறிவு ஜீவிகள் “ஜனநாயகம்” பேசினாலும் முதலாளித்துவ பாலின சமத் துவத்தை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. 1680-களில் பூர்ஷ்வா புரட்சி துவங்கிய பிரிட்டனில் 1925-ஆம் ஆண்டுதான் பெண்களுக்கு வாக் குரிமை கிடைத்தது. கடும் போராட்டங்களுக்குப் பிறகு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் துவங்கிய  மாற்றங்களுக்கான போராட்டம் 1917ல் சோவியத் புரட்சிக்கு வித்திட்டது. சோவியத் புரட்சியின் தாக்கத்தால் பெண்ணுக்கு வாக்குரிமை என்பது சர்வதேச நியதியானது. சோவியத் புரட்சிக்குப் பிறகு ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமான மாக  இணைந்து மானுடம் காக்கும் போர்களமாக உலகம் மாறிவிட்டது. அதன் பிறகு அரசி யல், சமூக இயல், கலாசார இயல், வரலாற்று இயல், சட்ட அகராதி இயல், உயிரியல்,  உளவியல் இவைகள் எல்லாம்  பெண்ணை இழிவு படுத்துபவைகளை  எதிர்க்கும் போர் முனைக ளாகிவிட்டன. ஆணும் பெண்ணும் எந்த அள விற்கு இணைந்து இயக்கமாக நிற்கிறார்களோ அந்த அளவிற்கு இந்த யுத்தம்  முன்னேறுகிறது. தனிச் சொத்துரிமை அமைப்பான முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டத்தின் வர்க்கப் போராட்டத்தின் இணைபிரியா அம்சமாக பாலின சமத்துவ போராட்டங்களை வளர்த்தெடுப்பது இன்றைய தேவை. அந்த உலகளா வியப்போரில் நாம் எங்கிருக்கிறோம்  என்பதை சுருக்கமாக இங்கே காண முயல்வோம்.

“நிர்பயா” என்ற சொல்லை கேட்டவுடன் இந்த கட்டுரையாளரின்  நினைவோடையில்  காட்சிகள் பல ஓடின. சிதம்பரம் காவல் துறை யின் பாலியல் கொடுமைக்கு பலியானதால் கூனிக் குறுகி போகாமல் நீதிமன்றத்திலே நிமிர்ந்து நின்ற சிதம்பரம் பத்மினி (1992). காட்டு அதிகாரிகளும், காவல் துறையினரும் நடத்திய வன்புணர்ச்சி கொடுமைக்கு ஆட்பட்டதால் மானபங்கப்பட்டதாக மனஉளச்சலுக்கு ஆளாகி நடைப்பிணமாக வாழாமல் மூத்த பொய்மையை அழிக்க போராடிவரும் வாச்சாத்தி கிராம பெண்கள்(1992) . வர்னாசிரம தர்ம பழமைவாத நோய் பிடித்த காவல்துறையும், நீதிமன்றமும் “வன்புணர்ச்சியை தூண்டுகிற கவர்ச்சி இல்லாத தாழ்ந்த சாதி பெண்” என்று கூறி நீதிமறுப்பிற்கு பலியான ராஜ்ஸ்தான் பன்வாரி தேவி  (1992).  மகாராஷ்டிரா மாநில தேசாய்கன்ஞ் காவல் நிலையத்தில் வன்புணர்ச்சி கொடுமைக்கு பலி யான மதுரா( 1974) வழக்கு மேல் முறையீட்டால் உச்ச நீதிமன்றம் வந்தபொழுது “கூச்சல் போடாததால் சம்மத உறவு”  “பலரோடு உறவு கொள்பவள்“ என பெண்ணை குற்றவாளியாக்கி  குற்றவாளிகளான போலீசு‍களை விடுவித்த  தீர்ப்பு, அதனை கண்டித்து இயக்கம், அதனால் ஏற்பட்ட சட்ட திருத்தம். உரிமை கேட்டு  எழும் மக்களிடையே  பய உணர்வை தூண்ட  பெண் களை  பாலியல் துன்புறுத்தலுக்கு  அனுமதி வழங்கிய இந்திய  ராணுவ சிறப்பு சட்டத்திற்கு பலியான மனிப்பூர் மனோரமா.

2005ம் ஆண்டில் டெல்லியிலிருந்து 70 கீ.மீ தூரத்திலிருக்கும்  சர்த்தாவால் என்ற கிராமத்தில்  இம்ரானே என்ற பெண்ணை அவரது கணவரின் தந்தை  வன்புணர்ச்சியால் சித்தரவதை செய்தது மக்களின் கவனத்திற்கு வந்த தோடு ஆணாதிக்க கருத்தோட்டத்தை தடுக்கும் இயக்கமாக விரிந்த நிகழ்வு. ஊர்பிரமுகர்கள் கூடி இஸ்லாமிய சட்டப்படி தந்தையோடு உறவுகொண்டதால் இவரது கணவன் நூர் இலாகிக்கு தாய் ஆகிவிடு கிறார். அதாவது இவரது கணவன் இவருக்கு மகனாகிவிடுகிறார் . எனவே அந்த திருமணம் ரத்தாகி இனி இம்ரனே தந்தையின் மனைவியாக வாழவேண்டுமென தீர்ப்பு வழங்குகிறது. தன்னை வேதனை படுத்தியவனை தண்டிக்காமல் கண வனை பிரிந்து வாழ சொல்லும் தீர்ப்பை ஏற்க இம்ரனே மறுக்கிறார். கணவனோடு வாழ்கிறார். அதை அறிந்த உ.பி மாநில  “தருல் ஊலூம் தியோபான்ட்” என்ற இஸ்லாமிய அமைப்பு (ஒரு காலத்தில்  பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்த வரலாற்று பாரம்பரியம் கொண்ட அமைப்பு)   குரானை மேற்கோள் காட்டி தந்தையின் மனை வியை மகன் திருமணம் செய்யக் கூடாது  என்று கூறி இம்ரானாவை இம்சித்த மாமனாரோடு வாழ கட்டளை (பட்வா) இடுகிறது.  ஆனால்  அவர் மறுத்து கணவனோடு வாழ்கிறார். இஸ்லாமிய சட்டப்படி  கட்டளையை மீறுவதால் குற்றவாளி ஆகிறார். ஊடகங்கள் வாயிலாக அறிந்த பெண்களுக்கான நேஷனல் கமிஷன்  தலையிட்டு இம்ரானேயை இம்சித்த மாம னாரை கைது செய்து தண்டனை வழங்க மாநில அரசை கேட்டுக் கொள்கிறது. அதுவரை  இஸ்லாமிய வாக்கை இழக்க விரும்பாத முலயாம் சிங் அரசு “தருல்உலூம் தியோபான்ட்” தீர்ப்பை ஏற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. பின்னர்  பொது மக்கள் கவனம் இம்ரானேக்கு ஆதரவாக திரும்பவே இம்சித்த மாமனார் தண்டிக்கப்பட் டார். ஊடகங்களும், இதர அமைப்புக்களும் பிரச்சினையை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் இம்ரானே உயிர் தப்பினார். இல்லை யெனில் ஆணாதிக்க சிந்தனை வயப்பட்ட சில மத அடிப்படைவாதிகள் அவரைக் கொன்று புதைத்திருப்பர். மதகுருமார்களும் சாதி அமைப்பு களை கட்டிக் காப்போரும் பெண்ணுரிமையை மறுப்பதும் காலில் போட்டு மிதிப்பதும் நாம் அறிந்த அனுபவம் ’நிர்பயர்விற்கு ஏற்பட்ட துயரம்’ சாதி மறுப்பு திருமணங்களை ஏற்காத சாதி வெறியர்களின் கவுரவ கொலைகளுக்கு பலி யாகும் முகம் தெறியாத  பெண்களையும் மனத் திரையில் கொண்டுவந்து நிறுத்தியது.

மேலே குறிப்பிட்ட பெண்களின் பொது அம்சம் அதிகாரம் படைத்தோரின் “ஆண்மைக்கு” பலியாகி  உடலும் மனமும் அடைந்த  வேதனைகளை சகித்தவர்கள் என்பது மட்டு மல்ல, குரல் கொடுக்க நாதியற்றவர்கள் என்று கருதப்பட்ட ஏழை உழைப்பாளி குடும்பங்களை சார்ந்தவர்கள். உழைப்புதான் மானம் என்று உணர்கிறவர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், இவர்கள் இல்லாத இடத்தில் சமூக சீர்திருத்த அமைப்புகள், சமூக பொறுப் புணர்ந்த அறிவாளிகள், தன்னார்வ குழுக்கள், பத் திரிகைகள், ஊடகங்கள் இவர்களின் துணையால் இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஆதிக்க சக்திகளான, அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் அரசியல்வாதி கள் இவர்களில் யார், யார் எந்தபக்கம் என் பதையும் மக்கள் காணவும் நேர்ந்தது. டெல்லி நிகழ்விற்குப் பிறகு உலக மக்களின் கவனமும், பெரும் திரள் எதிர்ப்பும்    நம்பிக்கை ஊட்டினா லும் நாம் விரும்புகிற சமத்துவ பார்வையை பண் பாடாக மாற்ற கருத்துப் போரின் உக்கிரம் போதாது. அச்சத்தால் வேடிக்கை பார்க்கும் கூட்டம் விவேகமாக தலையிட தைரியம் போதாது.

இந்திய வன்புணர்ச்சி கலாசாரம்

இந்திய வன்புணர்ச்சி கலாசாரம்

2003ம் ஆண்டில் டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சிரிபோர்ட் பகுதியில் ஸ்வீடன் நாட்டு தூதரக பெண்ணை இருவர் வழிமறித்து, அவரது காரிலேயே அவரை வன்புணர்ச்சி சித்தரவதை செய்த செய்தி உலக அளவில் பரவி முதன் முத லாக இந்தியாவிற்கு அவமானத்தை சம்பாதித்து கொடுத்தது. குற்றவாளி ஆங்கிலத்தில் இந்திய கலாசாரத்தின் பெருமைகளைப்பற்றி  சொற் பொழிவாற்றிய பிறகு இந்த கொடுமையை இழைத்ததாக அந்த பெண் கூறியதாக  தகவல்கள் கூறுகின்றன.  இந்திய கலாசாரத்தில் குடியிருக் கும் பெண்ணடிமைக் கொடுமை வடிவங்களை ஆய்விற்கு  பிற நாட்டு நிபுணர்களையும் இந்த சம் பவம் ஈர்க்க வைத்துவிட்டது. தூதரகங்கள் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை செய்ய இந்திய ரேப் மேப் வெளியிட  துவங்கினர். சமீபத்தில் வால் ஸ்டீரீட் ஜர்னல் வெளியிட்ட படத்தை காணலாம்.

சில நிபுணர்கள் இந்திய வன்புணர்ச்சி கொடு மைகளை இரண்டு பிரிவாக பார்க்கின்றனர். முதல் பிரிவு சட்டமும், சம்பிரதாயமும் அனு மதிக்கிற ரகம், ராணுவம், காவல்துறை, அதிகாரி கள், இவர்களுக்கு சட்டமே அனுமதிக்கும் உரிமை . சம்பிரதாய அடிப்படையில் கிராமங் களில் நில உடமையாளர்கள், தாழ்த்தப்பட்ட வர்க்கபிரிவை சார்ந்தவர்களை வன்புணர்ச்சி கொடுமைக்கு ஆளாக்குவது, அரசில் பொருளா தார வறுமை சூழலால் சுய கட்டுப்பாட்டை இழந்த வெறியர்கள் ஈடுபடும் வன்கொடுமை. இரண்டாவது ரகம் குடும்பத்திற்குள் நடக்கும் வன்புணர்ச்சி கொடுமைகள். பெண்ணின் சம் மதம் பெறாத திருமணங்கள். இவைகளுக்கு பொதுவான அடிப்படை சில ஆயிரம் ஆண்டு களாக நீடிக்கும் இந்திய பண்பாடு. இந்த இரண்டு வகைகளுக்கும் பஞ்சமில்லாத நாடு இந்தியா.

1996-ல்  நடத்திய ஒரு ஆய்வு வன்புணர்ச்சி வேதனைக்கு உட்படும் நிகழ்வுகள் 54 நிமிடங் களுக்கு ஒன்று. அடித்து துன்புறுத்துவது 24 நிமிடங்களுக்கு ஒன்றாகவும், 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஈவ் டீசிங்கிற்கு உள்ளாவதாகவும், 43 நிமிடத்திற்கு ஒரு முறை பெண்கள் கடத்தத் படுவதாகவும், 103 நிமிடங்களுக்கு ஒருமுறை வரதட்சணை கொடுமையால் கொல்லப்படுவதாகவும் கூறுகிறது.

கார்டியன் பத்திரிகை சமீபத்திய டெல்லி சம்பவத்தை விவரிக்கையில்  ஒரு புள்ளி விவரத்தை தருகிறது. அதன்படி 2012ம் வருட காலத்தில் டெல்லி வட்டாரத்தில் மட்டும் 706 வன்புணர்ச்சி குற்றங்களை காவல்துறை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 23சதம் உயர்வு,  கசக்கி துன்புறுத்தும் வழக்குகள் 11சதம் உயர்வு, காவல் துறை கொடுத்த ஒரு புள்ளிவிவரப்படி 20 நிமிடங்களுக்கு  ஒரு வன்புணர்ச்சி கொடுமை இந்தியாவில் நிகழ்கிறது என்று குறிப்பிடுகிறது.

இந்த புள்ளி விபரத்திற்கும் பண்பாட்டிற்கும் என்ன உறவு? மிகையானதாக கருதுகிறவர்களுக்கு சில கேள்விகள்: அதிகார மையமோ, அல்லது செய்தி அமைப்புக்களோ அல்லது தகவல் பரப்பு சாதனங்களோ, இந்நிகழ்வுகளை நேரடி யாகவோ,  மறைமுகமாகவோ பெண்மீது குற்றம் சுமத்தாமல் ரிப்போர்ட் செய்ததாக சொல்ல முடியுமா? பரபரப்பூட்ட பயன்படும் சொற்கள் பெண்ணை சிறுமைபடுத்துபவைகளாக இருப்ப தேன்? இத்தகைய குற்றங்களை இந்திய சட்டம் எப்படி பார்க்கிறது?  சமத்துவ அடிப்படையிலா? அல்லது  பெண்ணை அடிமையாகவும், ஆணின் சொத்தாகவும், போகப் பொருளாகவும் பார்க்கும் மதங்களும் உடமை சமுதாயங்களும் கூறும் தர்ம அடிப்படையிலா?. மதுரா வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராடிய சட்ட இயல் பேராசிரியர் உபேந்திர பக்ஷி  “பெண்ணை இழிவுபடுத்துவதை இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் தடுத்திருந்தாலும், இந்திய அரசியல் அமைப்பையும், அரசாங்கமைப்பையும் வழி நடத்துவது பெண்களை பாலியல் ரீதியாக துன் புறுத்தும் கலாசாரம் (ரேப் கல்ச்சர்) என்கிறார். குஜராத் கலவரத்தில், ஆளும் கட்சியும், அரசாங்க எந்திரமும் பெண்களை துன்புறுத்துகிற நடவடிக்கைகளை  கையாண்டவிதத்தை சுட்டிக்காட்டுகிறார். இந்திய கலாசாரத்தில் ஒரு ஆண் பெண்ணை துன்புறுத்துவதற்கு காரணங்களும் தேவையில்லை, மன உறுத்தலுக்கும் இடமில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சட்டம் என்ன சொல்கிறது?

பாலியல் குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க 1860ல் பிரிட்டீஷ் ஆட்சியில் (இந்தியர் களும்,பிரிட்டீஷாரும் கலந்த) அதிகாரவர்க்கம் உருவாக்கிய சட்டமே இன்றும் உள்ளது. இந்த சட்டம் மத தர்மங்களை அடிப்படையாகவைத்து உருவான  அர்த பழசானது. இந்த சட்டம் வன் புணர்ச்சியை, பெண்ணை மானபங்கப்படுத்தும் செயலாக கருதுகிறதே தவிர, பெண்ணின் உடலையும், மனதையும் சித்தரவதை செய்யும்  கொடுமைச் செயலாக கருதவில்லை. இந்த சட் டத்தில் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களி லும் ராணுவம் செய்கிற வன்புணர்ச்சி கொடு மையை குற்றமாக விசாரிக்க இடமில்லை. காவல் துறையிடம் புகார் கொடுத்தால் வழக்கு தயாரிக்க அந்த பெண்ணை சோதனைகளுக்கு உட்படுத் தும் சட்டப்பிரிவு வன்புணர்ச்சிக்கு ஈடான கொடுமையானது. மக்களின் போராட்டம் காரணமாக அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் காலப்போக்கில் வந்திருந்தாலும் பெண்ணை இழிவாக பார்க்கும் உணர்வோடுதான் அந்த சட்டம் இன்றும் உள்ளது. மக்களின் எழுச்சி காரணமாக இப்பொழுது சட்டத்தை திருத்த நீதிபதி வர்மா தலைமையில் விசாரணைக் கமிஷன் போடப்பட்டு மின்னல் வேகத்தில் அறிக் கையையும் சமர்பித்துவிட்டது. ஆண் பெண் சமத்துவத்தை ஏற்கிற நிபுணர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஜனநாயகத்தில் நம் பிக்கையுள்ள  அரசியல் இயக்கங்களும் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளனர். அதனடிப் படையில் சட்டத்தை திருத்த வற்புறுத்துகின்ற னர். ஆனால் அதிகார மையத்தின் அக்கறை எப்படி இருக்கிறது? கமிஷன் விசாரணை நடக் கிற பொழுது, அது பற்றி பத்திரிகைகள் என்ன எழுதின. முக்கிய துறைகளின் அமைச்சர்களோ, உயர் மட்ட அதிகாரிகளோ அந்த பக்கமே எட் டிப்பார்க்கவில்லை. சம்மந்தப்பட்ட துறையின் எழுத்தர்களே கலந்து கொண்டுள்ளனர் என் கின்றன.
அதுமட்டுமல்ல வர்மா கமிஷன் பரிந்துரைகளில் பல முக்கியமானவற்றை நிராகரித்து அவசர கோலமாக பாராளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளையும் மீறி ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வர்மா கமிஷன் அறிக்கையை மக்கள் மறந்து விடுவர், பல ஆயிரம் ஆண்டுகளாக சீராட்டப் படும் பெண்ணடிமை கலாசாரம் மக்கள் மன திலே மீண்டும் குடியேறும் என்று அதிகார மையம் கருதுகிறதா? அல்லது இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தையே மதிக்காத நாங்கள் இந்த சிபாரிசுகளையா மதித்து சட்டத்தை திருத்த வேண்டுமா, எங்கள் வழியில் திருத்துவோம் என்ற ஆணவமா? மறக்க கூடாத வரலாறு ஒன் றுண்டு. ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத் தும் சட்டத்தை கொண்டுவர முயன்ற அம்பேத் கரை அமைச்சரவையிலிருந்து வெளியேற வைத் தனர். பல ஆண்டுகள் கழித்து போராட்டம் வலுக்கவே சொத்துரிமை பெறும் உரிமைக்கு சட்டத்தை திருத்தினர். பெண்களுக்கான இட ஒதுக்கீடு கிடப்பில் கிடப்பது எதைக் காட்டு கிறது? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மதங்க ளால் திணிக்கப்பட்ட பழைய அசமத்துவ கலா சாரத்தின் மிச்ச சொச்சம் இன்னும் அதிகார மையத்தை பிடித்தாட்டுகிறது என்பதையும் முத லாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசால் பாலின சமத்துவத்தை அங்கீகரிக்கவோ நடைமுறைப் படுத்தவோ இயலாது என்பதையும் காட்டுகிறது. இதற்கு மக்களின் விழிப்புணர்வே  பதில் சொல்ல இயலும். வர்மா சிபாரிசுகளை ஏற்று சட்டம் திருத்தப்பட்டாலும் அரசு எந்திரம் ஜனநாயக கட்டுப்பாட்டிற்குள் வராமல், இந்த சட்ட திருத்தங்கள் செயல்படும் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் மக்களின் போராட்ட அலைகளால்  மாற்றங்கள் மெதுவாக வருவதை காண மறுக்க கூடாது.

மானபங்கம் என்ற பார்வை

பெண் அடக்க ஒடுக்கமாக இருப்பது குறைந்து வருவதால் வன்புணர்ச்சி கொடுமைகள் நிகழ்வ தாக கருதுவதையும், வன்புணர்ச்சி வேதனைக்கு பலியானவளை மானப்பங்கபட்டவள் என்று ஒதுக்குவதையும் . மானுட சமூக இயல்  மறுக் கிறது. ஏன் படையெடுப்பில் முக்கியமாக ராணு வம் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறது, ஏன் காவல் துறை கலவரத்தை அடக்க , தேடுதல் வேட்டை நடத்த, ஏவப்படும் பொழுது பெண்களை வன் புணர்ச்சிக்கு பலியிடுகிறது இவைகளெல்லாம்  அடக்க ஒடுக்கமின்மை எனும் மூடநம்பிக்கை யால் விளக்கிட முடியமா? ஆணாதிக்க கலாச் சாரத்தன் முக்கிய பங்களிப்பு அதன்பின் உள்ளது.

பாலியல் உணர்வு  மானுட மனத்தின் கட்டுப் பாட்டிற்கு உட்பட்டது என்பது உடலியல்  விஞ் ஞானமாகும். ஒரு காருக்கு, ஸ்டியரிங், பிரேக் இருப்பது போல் மானுட மூளைக்கு பாலுணர்வை வழிநடத்தும் ஆற்றலை சமூக சூழலும், பண்பாடும் உருவாக்கிவிடுகிறது. எனவே பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமை களை பெண் மீதே சுமத்துவது அறிவீனம். பெண் களுக்கிழைக்கப்படும் கொடுமைகளை அடிமைத் தனத்தை புகுத்தும் முறையாக பார்ப்பது அவ சியம். அதன் விளைவாக பெண்களுக் கிழைக்கப் படும்  கொடுமைகள்  வர்க்க போராட்டத்தின் ஒரு அம்சமாக ஆகிவிடுகிறது. வரலாற்றை ஆராய்ந் தால் வேலை நிறுத்தங்களை அடக்க அரசு காவல்துறையை ஏவி உழைப்பாளி வீடுகளில் புகுந்து பெண்களை துன்புறுத்தியது தெறிய வரும். வாச்சாத்தி கிராம நிகழ்வும் இதையே உறுதி செய்கிறது. சந்தனக் கட்டையை தேட எடுத்த நடிவடிக்கை போல் இன்கம் டாக்ஸ் ரைடுக்கு போகிற இடத்தில் பாலியல் கொடுமை நடந்ததாக  சொல்ல முடியாது. வர்க்கப் பிரி வினை உள்ள சமூகம் பெண்ணடிமைத்தனத்தை புகுத்தியே உருவாகிறது. இது உலக வரலாற்று பொது அனுபவமாகும்.

மதங்களும் தர்மங்களும்

மதங்கள் பற்றி விஞ்ஞான அடிப்படையில் ஆராய்ந்தால் அது இரட்டை தன்மை கொண் டது என்பது புலப்படும். ஒரு பக்கம் காலம் கால மாய் மத சீர்திருத்தவாதிகளால் மனோபலத்தை கொடுக்கும் கருவியாக மாற்றும் முயற்சிகளின் வரலாறாகவும் அது இருக்கிறது, மறுபக்கம் அது மூடநம்பிக்கைகளின் ஒழுக்கரை பெட்டியாகவும் சுரண்டும் வர்க்கத்தின் கருவியாகவும் இருந்து வருவதையும் காணலாம். துவக்க காலத்தில் மக்கள் அறியாமை இருட்டில் இருந்தனர். அன்று அது வழிகாட்டியாக இருந்ததை வைத்து இன்றும் அதுதான் சமூக வழி காட்டியாக இருக்க வேண்டும் என்ற கருத்தே பல ஆபத்துக் களை கொண்டுவருகிறது.  மதம் என்பது தேவைப் படும் தனி நபரின் மனோ பலத்திற்கு ஊன்று கோலாக  இருப்பதை தாண்டி அரசியலில், மானுட உறவில், சமூக நெறியான சட்டஇயலில் அது வழிகாட்டியாக இருப்பது  ஆபத்து என்பதை வரலாறும் இன்றைய நிகழ்வுகளும் உணர்த்துகின்றன.

உற்பத்தி முறையில் மாற்றம் வந்தபொழுது, ஆடு, மாடுகள் தனி உடமையாக மாறி அதை கையாளுகிற ஆண் உயர்நிலை எடுத்து அதுவரை  மேல் நிலையிலிருந்த பெண்ணை கீழே தள்ளினான். கரடுமுரடான காட்டுமிராண்டி பெண்ணுக்கு முதலிடம் கொடுத்தான். ஆனால், மென்மையான ஆடு மேய்ப்பாளன் பெண்ணை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டான் என ஏங்கெலஸ் குறிப்பிடுவதிலிருந்து பெண் அடி மைத்தனம் எங்கே? எப்படி தோன்றியது? என் பதை புரிந்து கொள்ள முடியும். நிறுவனமய மாக்கப்பட மதங்கள் பின்பு அதற்கான இலக் கணத்தை உருவாக்கி அந்த அடிமைத்தனத்தை கெட்டிப்படுத்தியது.

எல்லா மதத்திலும் உள்ள சடங்குகளை கவனித்தால் குழந்தை பருவத்திலேயே  இந்த வித்தியாசமான உணர்வுகளை உருவாக்கும் சடங்குகள்  உள்ளன. ஆண்குழந்தையை ஆண் மைக்கு இலக்கனமாக்கும் சடங்குகள், பெண்ணை அச்சம் மடம் உணரவைக்கும் சடங்குகள் இல்லாத மதங்களே இல்லை.

வேத மதங்கள் அதனடிப்படையில் உருவான மனு தர்மம் குழந்தைப்பருவத்திலேயே ஆணுக்கு தீட்சை மூலமும், பெண்ணை புஷ்பவதி ஆகு முன்னேயே திருமணம் செய்வதின் மூலமும் ஆண்மை பெண்மை ஏற்றத்தாழ்வான உணர்வை விதைத்து விடுகின்றனர், சமூக கட்டுப்பாடு என்ற அடக்கு முறையால் அந்த தர்மம் காக்கப்படு கிறது. புஷ்பவதி ஆனவுடன் உனது கர்ப்பப்பை இனி கணவனுக்கு சொந்தம் என்று ஓதி கற்பின் சிறப்பை உணரச் செய்து உடன்கட்டை ஏறுகிற அளவிற்கு மனதை வசக்கிவிடுகின்றன.

இந்து குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் தாழ்வு மனப்பாண்மையில் வாழத் தள்ளப்படுகிறாள். உடன் கட்டை ஏறும் சடங்கு பெண்ணுக்கு இழைக்கப்படும் மிக கொடுமையான  சடங் காகும். அதைவிட கொடுமையான விதவை என்ற பட்டமும் ஒதுக்கலுமாகும். இறந்த கணவனோடு, உயிரோடு எரிப்பது அல்லது புதைப்பது, விதவை யாக ஒதுக்குவது  என்பது இந்திய கலாசாரம் என்று பெருமையாக கூறுபவர்கள் 21 ம் நூற் றாண்டிலும் வட மாநிலங்களில் அரசியல் செல் வாக்கோடு இருப்பதை காணமுடியும்.

ரூப்கன்வர் (1969-1987) 18 வயது பெண்ணை ராஜஸ்தான் கிராமத்தில் உடன் கட்டை ஏற வைத்த கொடுமையை உலகமறியும். அன்று உடன் கட்டை ஏறுவதை நியாயப்படுத்திய இந்து மத பீடங்கள், ஆர். எஸ். எஸ் அமைப்புகள், அஷிஷ் நந்தி போன்ற அறிவாளிகள் பேசியும், எழுதியும் வந்ததையும் மறப்பதிற்கில்லை. உல கமே இந்த சனாதன சடங்கை கண்டிக்க நேர்ந்த தால் அதிகாரமையம் வழக்கு பதிவு செய்தது, 1987ல் பதிவு செய்த வழக்கை இழுத்தடித்து 2004ல் குற்றவாளிகளை குற்றமற்றவர்கள் என்று தீர்ப் பளித்த  கொடுமையை வரலாறு பதிவு செய்துள் ளது. 18 வயது பெண்ணை தீயில் பொசுக்கிய நபர்கள் இந்து மத அடிப்படையிலான சடங்கு என்பதலாயே  தப்பினர்.

யூத, கிருத்துவ, இஸ்லாமிய மதங்களிலும் இத் தகைய  குழந்தை பருவ சடங்குகள் உண்டு, பெண் ணின் பிறப்புறுப்பை சிதைக்கும் கொடுமை இஸ்லாமிய பிரிவு ஒன்று இன்றும் பின்பற்றுவதை மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பிவரு வதை காணலாம். புனிதப் போரை போதிக்காத மதங்களே கிடையாது. பிற மதத்தினரை சகிக்கா மல் கொல்வதே புனிதப் போரின் இலக்கணமாகும்.

கிறித்துவ குருமார்கள் சொல்லும் கதை என்ன? ஒரு பாலியல் அடிமையை கல்லால் அடித்துக் கொல்ல சில ஆண்கள் சுற்றி நிற்கின் றனர், அந்த வழியாக செல்கிற ஏசு அந்த ஆண் களை பார்த்து உங்களில் யாராவது தப்பே செய் யாதவர்கள் இருந்தால் அவள் மீது கல்லெறியுங் கள் என்கிறார். ஆண்கள் வெட்கி தலை குனிந்து போவதாக கதை ஓடுகிறது. ஏன் ஏசு அந்த பெண்ணை பார்த்து உன்னை இப்படி பாலியல் அடிமையாக வாழ தள்ளியவர்களை கல்லால் அடி என்று சொல்லாமல் போனார். இசு‍லாம் மதவாதிகளும் இதற்கு சளைத்தவர்களல்ல! குரான் பெயரால் பெண்களுக்கு அத்தனை கட்டுப்பாடு விதிக்கின்றனர். பெண்களுக்கு அத் தனை கட்டுப்பாடு விதிக்கிறது.  அரூபியான அல்லாவை ஆணாக சித்தரிக்கிறது. வரலாற்றை கூர்ந்து தடையங்களை தேடினால் அடிமைப் பண்பை வளர்க்கும் கருவியாக மதங்கள் இருக் கின்றன என்பதும் அடிமைத்தனத்தை எதிர்த்து ஆதி காலத்திலிருந்தே பெண்கள் போராடி தியாகம் செய்ததும் தெரியவரும். பொதுவாக மதங்கள் தோன்றியகாலத்தில் அது அறியமை இருட்டிலே இருந்த மனிதனுக்கு வழிகாட்டியாக இருந்தது. விஞ்ஞானம் என்ற வெளிச்சம் வந்த பிறகு அது பழைய மூடநம்பிக்கைகளின் ஒழுக் கரை பெட்டியாகிவிட்டது.

வாக்குரிமை, சொத்துரிமை பெற்றாலும் பண் பாட்டு துறையில் பெண்சமத்துவம் மறுக்கப் படுகிறது. இன்றும் வன்புணர்ச்சி இம்சைக்கு ஆளானவளை பரிவோடு பாராமல் மானம் கெட் டவள் என்ற சனாதன  பார்வைக்கு  சமூகமே அடிமைப்பட்டு கிடப்பதை காண்கிறோம். சமீபத் தில் சில நிகழ்வுகள் இந்த பார்வைக்கு எதிரான  போராட்டங்கள் தொடங்கிவிட்டதை காட்டு கின்றன.  பாரிஸ் கம்யூனை உருவாக்கி உலகிற்கு வழி காட்டிய பிரான்ஸ்  இதிலும் வழிகாட்டி விட்டது எனலாம். பல முறை கூட்டு வண்புணர்ச் சிக்கு பலியான தோடு உற்றார் உறவினர் வெறுக்க மன உளச்சலில் தவித்த பிலிலி சமிராவின்  எழுத்தும், இயக்கமும் துணிச்சலும் பிரெஞ்சு மக்களின் சமத்துவ ஜனநாயாக உணர்வை தட்டி எழுப்பியது. பிரெஞ்சு அரசு அவரை நாட்டின் கவுரவ சின்னமாக அறிவித்ததின் மூலம் உலகின் கவனத்தை சனாதன பார்வைக்கு எதிராக திருப்பி விட்டது.

அல்ஜிரியாவில் பிறந்து பிரான்சில் வாழ்ந்த பிலிலில்  சமீரா 14 வயதில்  கூட்டு வண்புணர்ச்சி கொடுமைக்கு பலியானார். இது அவரது வாழ்வில் தொடர்கதையானது. மன உளச்சலி லிருந்து மீள முடியாமல் தவித்தார். பெற்றோர் கள் வீட்டை விட்டு துரத்தினர். உற்றார் உறவினர் கள் மானபங்கப்பட்டவள் என்று கேவலமாக பார்த்தனர். உயிரை மாய்ப்பது அல்லது  பெண்ணை இழிவுபடுத்தும் கலாசாரத்தை எதிர்த்து போராடி மடிவது இதில் ஒன்றை தேர்வுசெய்யத் தள்ளப்பட்டார். பின்னதை தேர்ந் தெடுத்தார். தன்னை போன்று பாதிக்கப்பட்டவர் களை திரட்டலானார்.  “பலரை கணவன்களாக ஏற்பவர்கள் அல்ல. கால் துடைப்பானு மல்ல” (neither slags nor doormats) என்ற ,இயக்கத்தை துவக்கினார்,  பாதிக்கப்பட்ட பெண்களை அதில் திரட்டினார்.பத்திரிகைகளில் எழுதினார்., (In The Hell Of Tournantes).  டோரன்டஸ் எனும் நரகத்தில் என்ற புத்தகத்தின் மூலம் பெண்ணை பாலியல் இம்சை கொடுத்து  அனுபவிக்கும் ஆண் உணர்விற்கு எதிராக தாக்குதலை தொடுத்தார். பாதிக் கப்பட்ட பெண்ணிற்கு பரிவு காட்டவும், சகஜ வாழ்க்கைக்கு திரும்பவும் சமூகத்தின் மனச் சாட்சியை தட்டி எழுப்பினார். ஒரு கட்டத்தில் ஆண்களை வெறுக்கும் பெண்ணியவாதியென தூற்றலுக்கும் ஆளானார். 31 வயதில் அகால மரணம் அடைந்தார். சாவதற்கு சில நாட்களுக்கு முன் கார்டியன் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த பொழுதுதான் ஆண்குலத்தை வெறுப்பவள் அல்ல, எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல, காதலுக்காக தான் ஏங்கியதாகவும்  பாதிக்கப் பட்ட பெண்களை பரிவோடும் சகஜமாகவும் நடத்த மக்கள் முன் வர வேண்டுமென்பதே தனது இலக்கு என்று அவதூறுகளை முறியடித்தார். பிரெஞ்சு மக்களின் மனசாட்சியை தட்டி எழுப் பியதால் 2005ல் பிரான்சு நாட்டு அரசு அவரை கவுரவ சின்னமாக அறிவித்தது. அவரது சிலையை நாடாளுமன்றத்தில் வைத்தது ,தபால் தலை, கரன்சியில் படம், பள்ளிகளின் பெயர் என்று பிரெஞ்சு அரசு  சமிராவை போற்றியதின் மூலம் பெண்ணை இழிவு படுத்தும்  உணர்வை முறியடிக்க உலகிற்கே வழிகாட்டிவிட்டது.

பாலியல் உணர்வும், மானுடமும்

பெண்ணடிமைத்தனம் கேட்பாரற்று கோலோச்சிய காலத்தில் வாழ்ந்த  வள்ளுவர் ஆண்மைக்கு இலக்கணம் கூற “பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு” என்றார் ( பிறன் மனை வியை காம இச்சையோடு பார்க்காமல்  இருப் பது  அறிவுள்ளவருக்கு பாதுகாப்பு மட்டுமல்ல, சிறந்த ஒழுக்கமாகும் என்பது இதன் பொருள்), இன்று அவர் இருந்தால் பெண்மையை மதிப் பவனே ஆணாவானே தவிர அந்த ஒழுக்கத்தை மீறுபவன்  இழிபிறவியாவான் என்று இதைவிட கடும் சொற்களைக் கொண்டு திருத்திவிடுவார். மிருகங்களின் காமம்  இனவிருத்தி நோக்கம் கொண்டதே தவிர பெண்மையை துன்புறுத்தும் ஆயுதமாக காமத்தை ஆக்குவதில்லை.  தாய்மை அடைய தயாரகும் தருணங்களில் மட்டுமே அவைகள் நெருங்கும்,  ஆண்மிருகங்கள் கூட் டணிவைத்து பெண்ணை சீண்டி, துன்புறுத்தி, உயிரை பறித்து ,மகிழ்வதில்லை. மயில் போன்ற பறவைகள் தோகைவிரித்தாடி கவனத்தை தன் பக்கம் திருப்பி தாக்கவரும் மிருகத்திடம்மிருந்து பெண்மயிலை காக்கும் பிறர் நலம் நாடும் குணம் கொண்டது என்பது ஆய்வாளர்கள் கண்ட உண்மை.

பாலியல் உணர்வு என்பது பரிணாம வளர்ச் சிப்படி இனவிருத்திக்கு மட்டுமல்ல இருவரும் அந்தரங்கமாக  களிப்புடன் இருக்க மானுடம் வளர்த்துக் கொண்ட இயல்பாகும். களிப்புடன் இருக்க மட்டுமல்ல அது  மனத்தையும் ஆரோக் கியத்தையும் உயர்வாக்க இருவரின் அந்தரங்க கூட்டு முயற்சியாகும். பெண்ணின் உடல் வாகு ஆணின் ரசிக்கும் ஆற்றலை உயர்வாக்கும் தன்மை கொண்டது. இது உயிரியல் தேவையின் அம்ச மாகும். இது பிறழ்வதற்கான காரணங்களை உள வியல் பிரச்சினையாக மட்டும் பார்ப்பதைவிட அரசியல், சமூகம், பண்பாடு மற்றும்  குடும்ப உறவுகளோடு தொடர்பு படுத்தி பார்ப்பது அவசியம். குழந்தை பருவத்திலேயே ஆணிற்கு கொடுக்கிற முக்கியத்துவம் பெண்ணுக்கு இருக் காது. இது ஆண் குழந்தை மனதில் ஆணவ உணர்வை வளர்த்து விடுகிறது.  பெண்ணை கட்டுப்படுத்துவது சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட அவசியம் என்ற அரசியல் கருத்து ஆணா திக்க சமூகத்தின் வெளிப்பாடாகும். சமூகம் ஏற்காது, சட்டமும் அனுமதிக்காது, கடுமையாக தண்டிக்கும் என்ற அச்சம் ஆண்கள் மனதிலே விதைப்பது பிரதான தீர்வாகாது. பாலின சமத்துவ விழிப்புணர்வு விரிவாக பரப்பப்பட வேண்டும்.

அரசியலும், ஆணாதிக்க பார்வையும்

சமீபத்தில் அமெரிக்க  அபிரகாம் லிங்கன் வளர்த்த கிரான்ட் ஓல்டு பார்ட்டியின்  செனட் டர் அக்கின் டோட்  என்பவர்  ஒரு பெண்ணிற்கு பாலியல் பலாத்காரத்தால் குழந்தை உண்டாகி யிருந்தால் அவள் வன்புணர்ச்சியை ஏற்றுக் கொண்டதாக பொருள். அது நியாயமான பாலியல் உறவாக கருதி  கருகலைப்பை தடை செய்ய சட்டம் வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். இந்த செனட்டரின் பேச்சு , ஆண் குழந்தை பெற மறுத்தாக கூறி பெண்குழந்தை பெற்ற ராணியை சிரச்சேதம் செய்த பிரிட்டீஷ் மன்னரையும்..  திருமணமான பெண்ணின் கற்பை கணவனது சொத்தாகி விடுகிறது என்கிற மனு தர்மத்தையும் நினைவிற்கு கொண்டு வருகிறது . தனியார் உரிமையை காப்பதாக கூறும் நவீன அமெரிக்க சொத்துடமை  கலாசாரத்தில் ஊறிப் போன செனட்டரின் நீதிப்படி ஒரு பெண்ணின் கற்பபை அவளுக்கு சொந்தமல்ல  சட்டப் பாது காப்பு கொடுக்க வேண்டிய அரசின் சொத்து என்றாகிறது. அங்கே செனட்டரின் பேச்சு பெரிய சர்ச்சையை உருவாக்கி வருகிறது. அங்கும் ஆண் பெண் சமத்துவ  கருத்து   வாழ்வதற்காக போரா டிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

இங்கே டெல்லி சம்பவத்தை ஒட்டி மம்தா பனர்ஜியிலிருந்து, காங்கிரஸ் தலைவர்கள், பஜக தலைவர்கள், மத போதகர்கள் போலீஸ் அதிகாரி கள் சில நீதிபதிகள் பாலியல் குற்றம் நிகழ பெண் களின் நடை உடைகளும் சுதந்திரமாக திரிய ஆசைப்படுவதும், மேலை நாட்டு கலாசாரமும் பரவியதும் வன்புணர்ச்சி கொடுமை நிகழ ஏது வாகிறது  பேசியதை ஊடகங்கள் பதிவு செய்துள் ளன.

இந்திய நிலைமை

இந்தியாவில் பாலியல் கொடுமைகள் அதிக மாவதை கவனித்தால் இரண்டு காரணிகள் தென் படுகின்றன பழமையை தூக்கிபிடிக்கும் அரசிய லின் ஆதிக்கம். மக்களின் பொருளாதார வாழ் வில் புகுந்த நிச்சயமற்ற தன்மை. ஜனவரி 2 தேதி யிட்ட இந்து பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடி இத்தகைய குற் றங்கள் நேர காரணங்களில் முக்கிய காரணமாக ஆதாரத்தோடு காட்டுகிறது, வாழ்வாதாரங் களை இழந்தவர்கள் நகர்புற ஏழைகளாக பெருகு வதால் ஏற்படும் குற்றங்களில் இது ஒன்று, கல் வியோ, தொழில் திறமை பெறும் வாய்ப்புக்கள் இல்லாத சூழல், ஒரு ஆணால் பெண்ணின் உரிமையை பண்பாட்டு ரீதியாக உணர இயலாத நிலை இவைகளால் இத்தகைய குற்றங்கள் பெருக வாய்ப்பளிக்கிறது. அரசாங்கம் மனது வைத்தால் விவசாய நெருக்கடி எளிதில் தீரக்கூடியது . கல்வியும், தொழில் திறமையையும் வளர்க்கவும் முடியும். ஆனால் அரசு விவசாய நெருக்கடி மூலம் ஏற்படும் வறுமையும் அறியாமையும் போதாது என்று, சில்லறை வர்த்தகர்களை விரட்ட அந்நிய மூலதனத்தை திணிக்கிறது.   சுருக்கமாக சொன்னால் டெல்லி சம்பவத்தால் எழுச்சியுற்ற மக்களின் கவனத்திற்கு  கீழ்கண்ட வற்றை கொண்டுபோக வேண்டும்.

சட்டங்களையும், மக்களையும், மதிக்கிற அரசு வேண்டும். நீதித்துறை, காவல்துறை, ராணுவம்,  தவறும் ஆளுவோiயும், அதிகாரிகளையும் திரும்ப பெறும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும்.  பெண்ணின் உரிமைகளை மதிக்கிற பண்பாட்டை ஆண்களை உணரவைக்கும் கலாசார புரட்சி வேண்டும். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்த இதுவே வழி.


பாரதிநிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிருளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகற்பராம்

பாரதி                  
Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: