என்.குணசேகரன்
பிப்ரவரியிலிருந்து அக்டோபர் புரட்சி வரை நிகழ்ந்த சம்பவங்கள், எந்த அளவில் முக்கியமானதோ, அதே அளவில் அப்போது வெடித்தெழுந்த கருத்து மோதல்களும் முக்கியமானவை. இந்தக் கருத்து மோதல்களின் ஊடாக, சரியான முடிவுகளும், சரியான பார்வைகளும் உருப்பெற்றன. லெனின் தலைமையில் நடந்த இந்த கருத்துப்போர் பாட்டாளி வர்க்கத்தை புரட்சிக்கு தயார் செய்தது.
புரட்சியின் ஒவ்வொரு அசைவிலும் நடைபெற்ற இந்தக் கருத்துப்போர், பல புதிய கருத்தாங்கங்கள் உருவாக வழிவகுத்தது. இந்தக் கருத்தாக்கங்கள், ரஷ்ய நிலைமைகளை சார்ந்து உருவானவைதான். ஆனால் ரஷ்யப் புரட்சிக்கு அடுத்து நிகழ்ந்த சீனப்புரட்சி, வியட்நாம் புரட்சி போன்ற பல தருணங்களில், ரஷ்யப் புரட்சியின் கருத்தாக்கங்கள் புரட்சிக்கான செயல் திட்டங்களை உருவாக்கிட பேருதவியாக அமைந்தன.
தத்துவப் போராட்டத்தில் புதிய கருத்தாக்கங்கள்
எடுத்துக்காட்டாக ரஷ்யப் புரட்சியின் போது உருவான “தொழிலாளி-விவசாயி வர்க்கக் கூட்டணி” எனும் கருத்தாக்கம் பின் தங்கிய நாடுகள் பலவற்றில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட பயன்பட்டது.
முதல் தொழிலாளி வர்க்க புரட்சி 1871-ல் பாரீசில் நிகழ்ந்தது. பாரிஸ் கம்யூன் என்றழைக்கப்படுகிற இப்புரட்சி அரசு 72 நாட்கள் நீடித்த பிறகு,தோல்வியில் முடிந்தது. பிரான்சு முதலாளித்துவம் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களை படுகொலை செய்து அந்தப் புரட்சியை ஒடுக்கியது.
அதன் தோல்விக்கான காரணங்களை மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஆராய்ந்தனர். அன்றைய புரட்சிக்கு தலைமையேற்ற பாட்டாளி வர்க்கம் தன்னுடன் விவசாயிகளை இணைத்து வர்க்கக் கூட்டணி அமைக்க முடியாமல் போனது ஒரு முக்கிய காரணம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வரலாற்றுப் படிப்பினையை ரஷ்யக் கம்யூனிஸ்டுகளான போல்ஷ்விக்குகள் சரியாக கிரகித்துக் கொண்டனர். புரட்சியில் விவசாயிகள் பங்கு குறித்து மிகைப்படுத்தியும், அவர்களது பங்கினை மறுத்தும் பல கருத்துக்கள் ரஷ்யாவிலும், ஐரோப்பிய தொழிலாளி வர்க்க இயக்கத்திலும் நிலவின.
ரஷ்யாவில் புரட்சி இயக்கத்தின் துவக்க காலங்களில் நரோத்னியம் எனும் சிந்தனைப்போக்கு கொண்டவர்கள் விவசாயிகளின் எழுச்சி மூலமாகவே சோசலிசம் கொண்டு வரலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு டிராட்ஸ்கியின் “நிரந்தரப் புரட்சி”எனும் தத்துவம் தோன்றியது. இது விவசாயிகள் புரட்சியில் ஆற்ற வேண்டிய பங்கினை குறைத்து மதிப்பிடும் தவறினை செய்தது. இந்த இரண்டுக்கும் எதிராக ரஷ்யக் கம்யுனிஸ்ட் இயக்கம் போராடி வந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவரான தோழர் பி.டி.ரண தி வே எழதினார்:
“…..(விவசாயப் பிரிவினரில் )…. சில பகுதியினரைப் பற்றி அதீத எதிர்பார்ப்பும் , சில பகுதியினரின் முற்போக்கு, புரட்சிகர தன்மைகளை குறைத்து மதிப்பிடுவதும் விவசாயப் பிரிவினரின் ஒற்றுமையை அழிக்கவே செய்யும்; இது விவசாய மக்களின் புரட்சிகரமான எதிர்ப்பியக்கத்தை உடைத்து, தொழிலாளி வர்க்கத்தின் தலைமைக் கான வாய்புக்களையும் கெடுத்துவிடும்.”- என்றார். (ஆங்கில மார்க்சிஸ்ட் .1983). இது புரட்சி வரலாற்றில் பல தருணங்களில் நிகழ்ந்திருக்கிறது.
இந்தப் போக்குகளைத் தவிர்த்து, விவசாய பெருமக்களை திரட்டி, உறுதியான தொழிலாளி – விவசாயி ஒற்றுமை உருவாக்கிட வேண்டும். இது புரட்சிக்கான பாதை.
இது போன்று மார்க்சும் எங்கெல்சும் விட்டுச் சென்ற தத்துவப்போராட்டத்தை லெனின் தொடர்ந்து நடத்தி, பல புதிய கருத்தங்கங்களை படைத்தார்.இவற்றின் தொகுப்பே லெனினியமாக மலர்ந்தது.
இந்தியப் புரட்சி இலட்சியம் கொண்டோர் ரஷ்யப் புரட்சியின் போது ஆக்கம் பெற்ற கருத்தாக்கங்களை உள்வங்கிட வேண்டும். அவை பற்றிய புரிதல் இல்லாமல், இந்தியப் புரட்சி இயக்கம் முன்னேற்றத்தை சாதிக்க இயலாது.
தத்துவத்தின் பங்கு
1902-ஆம் ஆண்டு வெளியான “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூல் ,லெனின் எழுதிய பிரசித்தி பெற்ற நூலாகும். அதில் வருகின்ற “புரட்சிகர தத்துவம் இல்லாமல், புரட்சிகர இயக்கம் இல்லை” என்ற லெனினது சொற்கள் அன்றாட நடைமுறைப் பணிகளுடன் தத்துவப்பார்வையை இணைக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.
லெனின் நடத்திய கருத்துப் போரின் உயிர்நாடியாகத் திகழ்ந்த இந்த வாதம் புரட்சி நிகழ்வுப் போக்கின் அனைத்து தருணங்களிலும் வெளிப்பட்டது. குறிப்பாக,பிப்ரவரிப் புரட்சிக்குப் பிறகு அக்டோபர் வரையான காலத்தில், புரட்சி நடவடிக்கைகளின் அடிப்படையாக விளங்கிய தத்துவ கருத்துக்கள் பல தீவிரமாக விவாதிக்கப்பட்டன.
1902-ஆம் ஆண்டு,“என்ன செய்ய வேண்டும்?” வெளிவந்த பிறகு, லெனின், அந்தநூலில் அடங்கியிருந்த புரட்சிப்பாதைக்கான தனது கருத்துக்களை வலியுறுத்தி தத்துவப் போராட்டத்தை இடையறாது தொடர்ந்து நடத்தி வந்தார். புரட்சியின் ஒவ்வொரு நிகழ்விலும் புரட்சிகர மார்க்சிய தத்துவ நிலைபாடுகளுக்காக அவர் விடாப்பிடியாகப் போராடினார்.
‘எப்படி வேண்டுமானால் இயக்கம் கட்டலாம்: இயக்கம் சிறியதாக இருந்தாலும்,பெரியதாக இருந்தாலும்,மனம் போன போக்கில் வேலைகளை செய்து கொண்டிருக்கலாம்’ என்ற மனநிலையில் அன்றைய இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்தில் ஒன்று சேர்ந்திருந்த பல சமுக ஜனநாயகக் கட்சிகள் இருந்தன.ஜெர்மானிய சமுக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பெர்ன்ஸ்டைன் இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதுதான் முக்கியமே தவிர,சோஷலிச இலட்சியமோ அதற்கான தத்துவமோ அவசியமில்லை என்கிற வகையில் பேசியும் எழுதியும் வந்தார்.
தத்துவம் இல்லாத இயக்கம் ‘உற்சாகமாக’ செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசுவது எப்படிப்பட்டது? லெனின் இக்கருத்தினை கிண்டல் செய்கிறார். சாவு நிகழ்ந்த ஒரு வீட்டில் எல்லோரிடமும் சென்று ‘இந்த நாள் உங்களுக்கு சந்தோசமான நாளாக அமையட்டும்’ என்று உற்சாக வாழ்த்து சொல்வது போன்றது இது என்றார் லெனின்.
வேலைகள்,பணிகள்,இயக்கம் ஆகிய அனைத்துக்கும் மார்க்சிய அடிப்படையில் தத்துவ நியாயங்களை சிந்தித்து, அவற்றை பாட்டாளி வர்க்கத்திடம் எடுத்துரைக்கும் தத்துவ வேலையை ஒரு இயக்கம் புறக்கணித்திடக் கூடாது. அவ்வாறு புறக்கணித்தால், தேக்கத்தையும், சரிவையும் இயக்கம் சந்திக்க நேரிடும். அதே போன்று தொழிலாளி வர்க்கத்திடம் எதிரி வர்க்கங்களின் கருத்துத் தாக்கத்தை அகற்ற, தத்துவப்போர் நடத்தவிலை என்றால், புரட்சியை நோக்கிய பயணம் முன்னேறிடாது.
அதிகாரம் யாருக்கு எனும் சர்ச்சை:
பிப்ரவரியில் கெரென்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவப் புரட்சி நிறைவு பெற்ற பிறகு பல பிரச்னைகளை மையமாகக்கொண்டு தத்தவார்த்த விவாதங்கள் புயல் வீசுவது போன்று நிகழ்ந்தன.
அதிலும் பிப்ரவரிக்கு அடுத்த மாதமே லெனின் “ஏப்ரல் ஆய்வுரைகளை”முன்வைத்து கருத்துப் போரினை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
அதில் இரண்டாவதாகக் குறிப்பிடப்படும் ஆய்வுரை பல அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அதன் முக்கிய கூறுகளை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்.
- தற்போதைய ரஷ்ய நிலைமைக்கு ஒரு சிறப்பான தன்மை உள்ளது.
- நாடு புரட்சியின் முதல் கட்டமாக விளங்கும் பிப்ரவரி புரட்சியிலிருந்து கடந்து கொண்டிருக்கின்றது. (இதைத்தான் மென்ஷ்விக்குகளும்,சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் என்றழைக்கப்படும் பிரிவினரும் இதர பல குழுக்களும் எதிர்த்தனர்.)
- புரட்சியின் முதல் கட்டத்தில் முதலாளிகள் கையில் அதிகாரம் சென்றடைந்துள்ளது,இதற்குக் காரணம்,ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு குறைவாக இருந்ததுதான். அத்துடன், அமைப்புரீதியாகத் திரள்வதில் பாட்டாளி வர்க்கத்திற்கு இருந்த பலகீனமும்தான் அந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம்.
- புரட்சி இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறிட வேண்டும்.
- இந்த இரண்டாவது கட்டத்தில், பாட்டாளி வர்க்கத்திடமும்,விவசாயிகளில் மிகுந்த வறிய நிலையில் உள்ள ஏழை விவசாயிகளிடமும் அதிகாரம் சென்றடைய வேண்டும்.
வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து அப்போது நிலவிய காலம் பாட்டாளி வர்க்கம் முன்முயற்சி எடுத்து அதிகாரத்தை அது கைபற்ற வேண்டிய காலம் என்பதை லெனின் எடுத்துரைத்தார். லெனினுடைய இந்தக் கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு தீவிர வாதப்போர் எழுந்தது..
ஏப்ரல் ஆய்வுரைகள் இன்று வரை விவாதிக்கப்பட்டு வருகின்றன.இதையொட்டி,அன்றும், இன்றும் தொடருகிற பல சர்ச்சைகளில் ஒன்று முக்கியமானது. ”ரஷ்ய நாடு உண்மையில் சோசலிச புரட்சிக்கு தயாராக இருந்ததா?அல்லது முதலாளித்துவப் புரட்சிக்கு மட்டுமே வாய்ப்பு இருந்ததா?”
அன்று போல்ஷ்விக்குகள் என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட்கள் சோசலிசப் புரட்சிக்கு ரஷ்ய வர்க்க நிலைமைகள் சாதகமாக இருந்ததை துல்லியமாக கண்டறிந்தனர். இதனால் அவர்களது வழிகாட்டுதலில் தொழிலாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெற்றது.
அவர்களுக்கு எதிர்முகாமில் இருந்த மென்ஷ்விக்குகள் ‘சோசலிசப் புரட்சி தற்போது சாத்தியமில்லை;முதலாளித்துவப் புரட்சி நிகழ்ந்து அதுவே நீண்ட காலம் நீடிக்கும்’ என வாதிட்டனர். லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்ற பிறகு அக்டோபர் புரட்சி ஒரு வரலாற்றுத் தவறாக சித்திரிக்கப்பட்டு இன்றளவும் ரஷ்ய சோசலிச புரட்சி மீது அவதூறு பரப்பட்டு வருகிறது.
கல்வியறிவில் மேம்பட்ட, சமுகத்தின் உயர்மட்டத்தில் உள்ள ஒரு தரப்பரோடு இணைந்து அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மென்ஷ்விக்குகள் நிலை. அதாவது ரஷ்ய நிலைமைகளில் முதலாளிகளோடு சமரசத்தை செய்து கொள்வதுதான் சரியானது என்றனர். பிப்ரவரி புரட்சியில் ஜார் அரசை வீழ்த்திய நிலையில், முதலாளிகள் தலைமையேற்று அமைந்துள்ள ஆட்சியோடு பாட்டாளி வர்க்கமும் இணைந்து இடைக்கால அரசை நிரந்தரமாக ஆதரிக்க வேண்டுமென்றனர், மென்ஷிவிக்குகள்.
இதனை லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் எதிர்த்தனர். ஜார் ஆட்சி வீழ்ந்த நிலையில் நீண்ட காலம் இடைக்கால அரசு நீடிக்க வேண்டியதில்லை; முதலாளிகளோடு சமரசத்திற்கு இடமில்லை எனவும் அவர்கள் வாதிட்டனர். ரஷ்ய பாட்டாளிவர்க்கம் அதிகாரத்தை தலைமை தாங்கி வழிநடத்த தயாராக உள்ளது எனவும் மற்றும் பல கருத்துக்களை முன்வைத்துப் போராடினர். ரஷ்ய நிலைமைகள் சோசலிசத்தை நோக்கி முன்னேற வாய்ப்பாக உள்ளதையும் அவர்கள் ஆணித்தரமாக எடுத்துரைத்தனர்.
ஆனால் மென்ஷ்விக்குகள் கல்வியறிவு பெற்ற நிபுணர்கள் தொழில்திறமை படைத்தோர், நிர்வாகிகள் போன்றோர் அடங்கிய முதலாளித்துவ முகாம்தான் நாட்டின் இன்றைய பின்தங்கிய நிலையில் நாட்டை ஆளும் தகுதி படைத்ததாக் இருக்கும் என்றனர். அத்துடன் ரஷ்ய தொழிலாளி வர்க்கம் தனியாக அதிகாரம் செலுத்தும் வகையில் அமைப்புரீதியாகத் திரண்டிடவும் இல்லை; அத்தகைய அரசியல் குறிக்கொள் உணர்வு கொண்டதாகவும் இல்லை; அத்துடன் போல்விக்குகள் சொல்லுகிற “பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு” அமைப்பதற்கான வலுவான தளம் கொண்டதாக விவசாய மக்கள் பிரிவினரும் இல்லை என்பது உள்ளிட்ட கருத்துக்களை மென்ஷ்விக்குகள் முன்வைத்தனர்.
இதற்கு,போல்ஷ்விக்குகளின் பதில் கீழ்க்கண்டவாறு அமைந்தது:
கல்வியறிவு கொண்ட மேல்தட்டு சமுகம் ஜார் ஆட்சிக்கு பிந்தைய சமுகத்தை கட்டுவதற்கு உதவிடும் என்ற நம்பிக்கையை அது முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தான் பயன்படும்.
ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டிய புரட்சி சில இலட்சியங்களைக் கொண்டது. அந்த இலட்சியங்கள் ஈடேற மேல்தட்டு சமுகம் உதவிடாது. அது முதலாளித்துவ சர்வாதிகாரம் அமையவே வழிவகுக்கும் இந்த சர்வாதிகாரம், அன்றைய ரஷ்ய அரசியல் சக்திகளான காடேட்கள் போன்ற முதலாளித்துவ ஜனநாயகம் பேசும் சக்திகள் அதிகாரத்தில் நீடிக்கவே உதவிடும்.
இந்த பதில் வாதங்களை முன்வைத்த போல்ஷ்விக்குகள் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றி ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ என்ற உண்மையான, பெரும்பான்மை மக்களுக்கான ஜனனநாயக மலரவேண்டும் என்றும் அதற்கு பிப்ரவரியில் நடந்த புரட்சியை அடுத்த கட்டத்திற்கு,சோஷலிச புட்சிக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று வாதிட்டனர்.
ரஷியாவில் நிலவும் முதலாளிகள்,தொழிலாளர்,விவசாயிகள் என பல்வேறுதரப்பினர் மற்றும் வர்க்க சக்திகளின் நிலைமைகள் பற்றிய ஆய்வையோட்டிய விவாதங்கள் நடந்துள்ளன.
வாதப்போரின் தீவிரத்தில் ஒரு கட்டத்தில் போல்ஷ்விக்குகள் சோசலிசப் புரட்சிக்காகவும் மற்றவர்கள் முதலாளித்துவ புரட்சிக்காகவும் நிற்பது அப்பட்டமான எதார்த்தமாக மாறியது.
ஆக, பாட்டாளிவர்க்கத்திற்காக போல்ஷ்விக்களும் முதலாளித்துவ எதிர்புரட்சி சக்திகளுக்காக மற்றவர்கள் எனவும் பிப்ரவரி புரட்சி நடத்த கைகோர்த்தவர்களே உருமாறினார்கள்.
போல்ஷ்விக்குகள் என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட்கள் இந்த தத்துவப் போரை திறம்பட நடத்தினர். அவர்கள் வழி நடத்தியவாறு, இரண்டாம் கட்டப் புரட்சியான சோசலிசப் புரட்சியும் வெற்றி பெற்றது.
அவர்கள்தான், ஜாரின் முடியாட்சியை முடிவிற்கு கொண்டு வந்து, முதல் கட்டப் புரட்சியை வெற்றிரமாக நடத்தினர். தலைமறைவு வாழ்க்கை, உயிரையே புரட்சிக்காக அர்ப்பணிக்கும் துணிவு, விரிவான தத்துவார்த்த வாசிப்பு, மனித சமுகத்தின் புரட்சிகர அனுபத்தை உள்வாங்கியுள்ள அனுபவம், மென்ஷ்விக்குகள், நரோத்னிக்குகள், போன்றோரின் கருத்துக்களை எதிர்நோக்கும் வகையில் ஆழமான தத்துவ அறிவு ஆகிய அனைத்து குணநலன்கள் கொண்டவர்களாக போல்ஷ்விக்குகள் இருந்தனர். புரட்சி பற்றிய சரியான புரிதல் மேலிருந்து கீழ் வரை அழுத்தமாக இருந்ததால் அக்டோபர் புரட்சி வென்றது.
(தொடரும்)