ஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு …


எஸ்.நூர்முகம்மது

சோசலிச கியூபாவில் புரட்சி வெற்றி பெற்று பிடல் காஸ்ட்ரோ தலைமையில் சோசலிச ஆட்சி அமைந்த நாளிலிருந்து அதை நிலைகுலையச் செய்யவும், சோசலிச ஆட்சிக்கு முடிவு கட்டவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் கொடுத்து வரும் நெருக்கடிகளும், அதனால் கியூபா மக்கள் அனுபவித்து வரும் துயரங்களும் சொல்லி மாளாதவை. ஆனால் அத்தனை சதிவலைகளையும் எதிர்த்து நின்று,உலக அளவில் சோசலிச சக்திகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளையும் கடந்து சோசலிச அமைப்பைக் காப்பதில் கியூபா உறுதியுடன் நிற்கிறது. பிடல் காஸ்ட்ரோ தலைமையிலிருந்த போதும், அவர் தானாக முன்வந்து பதவி விலகிய பின்னர் ராவுல் காஸ்ட் ரோ தலைமையிலும் கியூபா என்னும் அந்த சின்னஞ்சிறு தேசம் அளவிலும், மக்கள் தொகையிலும், பொருளாதார வல்லமையிலும், படை மற்றும் ஆயுத பலத்திலும் தன்னை விட பல மடங்கு பலசாலியான அமெரிக்காவை எதிர்த்து நின்று கொண்டிருப்பது ஒரு தத்துவம் கவ்வி பிடிக்கும் போது அது பௌதிக சக்தியாக உருவெடுக்கிறது என்ற மார்க்சிய நிலைபாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

சோசலிசத்தில் பற்றுறுதி கொண்ட கியூபா

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கியூபாவைத் தொடர்ந்து கம்யூனிச அரசுகள் அமைந்து, முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டுவிடும் என்று அச்சமுற்ற அமெரிக்கா அந்த சின்னஞ்சிறு நாட்டின் மீது 1962 ல் பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை சுமத்தியது. சர்வதேச செலாவணியாக டாலரை பயன்படுத்த தடை என்பது மட்டுமல்ல அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் கியூபாவுடன் எத்தகைய வர்த்தக உறவையும் வைத்துக் கொள்ளவும் தடை விதித்தது. இதன் மூலமாக சின்னஞ்சிறு கியூபாவை கழுத்தை நெரித்து சரணடைய வைத்து விடலாம் என்ற திட்டத்துடன் அது செயல்பட்டது. இதனால் கியூப நாடும், அதன் மக்களும் கடுமையான துன்ப துயரங்களுக்கு ஆளாயினர். அத்தியவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் உட்பட எல்லா பொருட்களும் கியூபாவை சென்றடைய இயலாத நிலை. வெறும் சர்க்கரை உற்பத்தி மூலமே தனது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாததால் மற்ற பொருட்களை எல்லாம் இறக்குமதி செய்யும் நிலையிலிருந்த கியூபா அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் உதவிக்கரங்களால் சமாளித்து வந்தது. ஆனால் 1990 ல் சோவியத் நாட்டில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் முதலாளித்துவ ஆட்சிக்கு ரஷ்ய நாடு சென்ற பின்னால் கியூபா மிகவும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. கையறு நிலையில் கியூபா நின்ற போது கூட அந்த சின்னஞ்சிறு நாடு தோழர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் சோசலிசத்தினைக் கைவிட மாட்டோம் என்று உலகறிய சூளுரைத்தது.

அமெரிக்காவின் தடைகளை மீறி

ஐக்கிய நாடுகள் சபையில் ஒவ்வொரு ஆண்டும் கியூபா மீதான தடையை கைவிட வேண்டுமென்ற தீர்மானம் வந்த போதெல்லாம் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக அதை ஆதரித்து வாக்களித்தன. அமெரிக்காவும், அதன் கைப்பாவையான இஸ்ரேலும் தான் அதற்கு எதிரான நிலைபாட்டை எடுத்தன. இருந்தும் ஜனநாயகம் குறித்து வாய்கிழிய பேசும் அமெரிக்கா அதனை ஏற்க மறுத்தே வந்தது. இத்தகைய மிக மோசமான நிலையில் கூட கியூப சோசலிச அரசின் சாதனைகள் உலக நாடுகளை ஆச்சரியப் பட வைத்தன. இலவச கல்வி கொடுப்பதிலும், இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதிலும் அந்நாடு உலகத்துக்கே முன் மாதிரியாகத் திகழ்கிறது. கியூப ஒருமைப்பாடு மாநாட்டில் பேசிய ஜப்பானைச் சார்ந்த பிரதிநிதி தான் மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற கியூபா சென்று படித்ததாகவும், அந்த 7 ஆண்டு கல்வியின் போது தன்னிடம் கல்வி கட்டணமாகவோ, தங்குமிட வாடகையாகவோ ஒரு காசு கூட பெறப்படவில்லை என்பது மட்டுமல்ல தனக்கு இலவச உணவும் வழங்கியது கியூபா என்ற போது மாநாடே ஆச்சரியப்பட்டது. தான் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து இது போல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கியூபாவில் இலவச மருத்துவக் கல்வி பெறுவதாக அவர் குறிப்பிட்டபோது இன்றைய சூழலில் உலக நாடுகளில் மருத்துவ கல்வி வர்த்தக சரக்காக மாறியுள்ளநிலையில் கியூபா தனது நாட்டு மாணவர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு மாணவர்களுக்கும் கூட இலவச கல்வி அளிப்பது ஆச்சரியப்பட வைத்தது. உலகத்தையே அச்சுறுத்திய எபோலா நோய் தாக்கிய போது அந்நாடுகளுக்கு தனது மருத்துவர்களை விரைந்து அனுப்பி மிகவும் பாதகமான சூழலில் கூட அதனால் பாதிக்கபட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வரலாறு படைத்த நாடு அது. ஹோன்டுராஸ் நாட்டில் கியூபாசெய்து வரும் மருத்துவப் பணிகளை உலகமே வியந்து பார்க்கிறது. நேபாளம் உட்பட இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும் நாடுகளுக்கெல்லாம் தனது மீட்பு மற்றும் சேவை குழுக்களை அனுப்பி கைமாறு கருதாமல் மனித சமூகத்திற்கு பணியாற்றும் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இந்நிலையில் தான் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் 2014 டிசம்பர் 17 ல் அமெரிக்க அரசுக்கும் , கியூப அரசுக்கும் இடையே முழுமையான ராஜதந்திர உறவுகளை மீள புதுப்பிப்பதற்கும், இரு நாடுகளும் தங்களது தூதரகங்களை திறக்கவும் ஒப்பந்தம் உருவாயிற்று. கியூபாவை பயங்கரவாதத்தை உருவாக்கும் நாடுகளில் ஒன்று என்ற அமெரிக்காவின் பட்டியலிலிருந்து நீக்கிவடுவதாகவும் அமெரிக்கா அறிவித்தது. கியூபாவின் நீண்ட கால போராட்டத்தின் பலனாக அமெரிக்கா தனது கியூப எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது கியுபாவிற்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி எனலாம்.

சோசலிச கட்டுமானத்தில் கண்ட சாதனைகள்

அமெரிக்காவின் தடைகளால் கியூபாவின் வளர்ச்சிக்குப் பாதகமான நிலைகள் இருந்தாலும் கியூபா சோசலிச பாதையில் உறுதியாக நின்று கொண்டே பல சாதனைகளைப் படைத்துள்ளது. உலகத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கூட கியூபா சோசலிசத்தினை வலுப்படுத்தியுள்ளது. அங்கு சோசலிசம் தொடர்ச்சியானதாகவும், பின் தள்ள முடியதாததாகவும் வலுவான நிலையில் உள்ளது.உற்பத்தி கருவிகள் சோசலிச சமூகத்திற்கு உரிமையானவை என்பதும், சொத்துரிமை சோசலிச அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சோசலிச சமூக அமைப்பிலேயே நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2010 முதல் 4.2 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அங்கு வந்துள்ளன. எண்ணை வளத்தில் 27 சதவீதமும், சுற்றுலாத்துறையில் 16சதவிகிதமும், தகவல் தொடர்பில் 15 சதவிகிதமும், சுரங்கத் தொழிலில் 10 சதவிகிதமும், மது மற்றும் புகையிலை துறையில் 15 சதவிகிதமும் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. 206 றிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. 72 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. 2014 ல் புதிய பொருளாதார மூலதன சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலமாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வருடத்திற்கு 2 முதல் 2.5 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீடு கியூபாவிற்கு வந்துள்ளது.வேலையின்மை 2.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. சிசு மரணம் 1000 க்கு 4.2 என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சராசரி ஆயுள் 78.45 வயதாகும். அதிலும் பெண்களின் சராசரி ஆயுள் 80.02 என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. 60 வயதை தாண்டியவர்கள் மக்கள் தொகையில் 18.3 சதவிகிதம். வளர்ச்சி விகிதம் 2009 ல் 1.4 சதவிகிதமாக இருந்தது 2015 ல் 4 சதவிகிதமாக உள்ளது. இத்தகைய விபரங்கள் அனைத்தும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் . அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர் கொண்டு சோசலிச கட்டுமானத்திற்குள் இத்தகைய சாதனைகளை கியூபா படைத்துள்ளது என்பது வார்த்தைகளால் மட்டும் பாராட்டக்கூடியவையல்ல.

கியூபாவின் 5 நாயகர்கள்

ஜெரார்டோ ஹெர்னன்டஸ், ரமான் லெபானினோ, ஆன்டோனியோ குயரரோரோட்ரிக்ஸ், பெர்னான்டோ கோன்சலஸ், ரீன் கோன்சலஸ் ஆகியோர் கியூபாவின் 5 நாயகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 1998 ல் கியூபாவைச் சார்ந்த அவர்கள் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அமெரிக்க மண்ணிலிருந்து கொணடு கியூபாவிற்கு எதிராக கொலை வெறி தாக்குதல் உட்பட சதி திட்டங்களையும், செயல்களையும் வடிவமைத்துக் கொண்டிருந்த ஆயுதம் தாங்கிய கியூப எதிர் புரட்சி அமைப்புகளின் திட்டங்களையும், செயல்களையும் சேகரித்து கியூப அரசுக்கு அளித்துக் கொண்டிருந்தனர். அந்த சக்திகள் நீண்ட காலமாக கியூபாவினருக்கு எதிராகவும், கியூப புரட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் குண்டு வீச்சு, கொலைகள் மற்றும் தாக்குதல்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக கியுபாவிலும், ஏனைய சில நாடுகளிலும் செய்து கொண்டிருந்தனர். 1950 லிருந்து சுமார் 3500 ஆண், பெண் ,குழந்தைகள் என கியூப மக்கள் அமெரிக்காவிலிருந்து திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். எனவே தான் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கும் பொருட்டு இத்தகைய கியுப எதிர்ப்பு சக்திகளின் கொலைகாரத் திட்டங்களை சேகரித்து அவற்றை கியூபா அரசுக்கு அனுப்பி வைப்பதே இவர்களது பணியாகும். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு,சித்திரவதைக் கூடங்களில் வைக்கப்பட்டு பல்வேறு கடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இவர்களிடமிருந்து எந்த ரகசியத்தையும் அமெரிக்க படையினரால் வெளிக் கொணரவோ, இவர்களது உறுதியை சிர்குலைக்கவோ முடியவில்லை. எனவே இவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி போலியான விசாரணை நடத்தி இவர்களுக்கு ஆயுள் தண்டனை உட்பட பல கடும் தண்டனைகளை வழங்கி சிறையில் அiட்த்தனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் தொடர்ந்து கியூப அரசு போராடியது மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள கியுப ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து அமெரிக்க அரசை வற்புறுத்தி வந்தன. அதற்கான பல இயக்கங்கள் உலகின் எல்ல முனைகiளிலும் நடைபெற்றன. இந்நிலையில் தான் அமெரிக்காவுக்கும், கியூபாவிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஒட்டி 16 ஆண்டுகள சிறைவாசத்துககுப் பின்னர் இவ்ர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது விடுதலையை கியூபாவிற்கு கிடைத்த பெரிய வெற்றியாக கியூப மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கியூப ஆதரவு 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய மாநாடு

அமெரிக்காவின் மனித சமூகத்திற்கு எதிரான தாக்குதலான பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்ட கியூபாவிற்கு ஆதரவாக சர்வதேச அளவிலும், ஆசிய பசிபிக் பிராந்திய அளவிலும் கியூப ஒருமைப்பாட்டு அமைப்புகள் உள்ளன. அவை கியூபாவிற்கு எதிரான மனிதாபிமானமற்ற அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு எதராக மக்கள் கருத்தை திரட்டவும், அமெரிக்க அரசு தடைகளை கைவிட நிர்ப்பந்தம் கொடுக்கவும் முற்போக்கு சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்திய 7 வது மாநாடு வியட்நாம் தலைநகர் ஹனாயில் 2015 செப்டம்பர் 8,9 தேதிகளில் நடைபெற்றது. அமெரிக்காவிற்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தி வெற்றி கண்டு, சோசலிச அரசை ஸ்தாபித்தது மட்டுமல்ல இன்றைய பாதகமான சூழலில் கூட சோசலிச கட்டமைப்பிற்குள் மகத்தான வளர்ச்சியினை ஈட்டி வரும் வியட்நாம் சோசலிச குடியரசில் இந்த மாநாடு நடந்த்து மிகவும் பொருத்தமானதாகும். கொரில்லா யுத்தத்தின் மூலம் அமெரிக்க கைப்பாவை அரசை வென்று, சோசலிச அரசை உருவாக்கி அமெரிக்காவின் பொருளாரத் தடை உட்பட அனைத்து தாக்குதல்களையும் வெற்றிகரமாகத் தாக்குப் பிடித்து, சோசலிச கட்டமைப்பிற்குள் வளர்ச்சிகளைக் கண்டு கொண்டிருக்கும் கியூபாவிற்கான ஒருமைப்பாட்டு வியாட்நாம் மண்ணிலிருந்து தெரிவிக்கப்பட்டது முக்கியமானது.

இந்த மாநாட்டில் 18 நாடுகளிலிருந்து 220 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 30 பிரதிநிதிகள். அதில் சி.பி.ஐ.(எம்) சார்பில் 20 பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் சோசலிச குடியரசின் நட்புக்கழகத்தின் தலைவர் வூ சுவான் ஹாங், வியட்நாம் சோசலிச குடியரசின் நாடாளுமன்ற துணைத் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான குயன் தி கிம் ஞான், மக்கள் கியூபா ஒற்றுமை இன்ஸ்டிடியூட்டின் தலைவர் கெனியா சர்ரானோ பியூக், கியூபாவின் 5 நாயகர்களில் ஒருவரான ஆன்டனியோ குவேரரோரொட்ரிக்ஸ், சிறி லங்கா கியுப நட்புக்கழகத்தின் தலைவர் பாசுதேவா ஆகியோர் தலைமைக்குழுவாக இருந்து வழி நடத்தினர்.

வூ சுவான் ஹாங் பேசும் போது 55 ஆண்டுகளாக கியூப மக்கள் அமெரிக்காவின் பொருளாதார, வர்த்தக தடைகளால் கடும் துன்ப துயரத்துக்கு உள்ளாகி வருகின்றனர். கியூப புரட்சியை பாதுகாக்க உலகம் முழுமையும் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்ட மக்கள் போராடி வருகின்றனர்.தடைகளையும் மீறி கியூபா சோசலிசத்தின் ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கி சாதனைகள் பல படைத்துள்ளது. கியூப மக்கள் அமெரிக்க தடைகளுக்கு எதிராக போராடியும், ராஜிய ரீதியான முயற்சிகளை மேற் கொண்டும் வருகின்றனர். அதில் நல்ல முன்னேற்றத்தையும் பெறறுள்ளனர். கியூப மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என்றார்.வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் குயன் தி கிம் பேசும் போது இந்தஆண்டு வியட்நாம் நாட்டின் விடுதலை பிரகடனம் செய்யப்பட்டதன் 70 வது ஆண்டை கொண்டாடி வரும் வேளையில் சோசலிச கியூபாவிற்கு ஆதரவான இந்த மாநாடு ஹனாயில் நடைபெறுகிறது என்று குறிப்பட்டார். கியூபா ஒருமைப்பாட்டு இயக்கம் வலுவடைந்து வருவதாகவும், அதன் விளைவு தான் ஒபாமா – ராவுல் காஸ்ட்ரோ சந்திப்பை ஒட்டி இரு நாடுகளுக்கும் இடையே ராஜிய உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இது ஒருமைப்பாட்டு இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறனார். இது கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைக்கு கிடைத்த தோல்வி என்றும் குறிப்பிட்டார். கியூபா தனது கொள்கைகளை சமசரசம் செய்யாமலேயே தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காமலேயே இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. வியட்நாமில் 50000 கியூப வல்லுநர்கள் பணியில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

கியூப நட்புக்கழகத்தின் தலைவர் கெனியா சிரானோ பியூக் பேசும் போது 1959 ல் கியூபா துவங்கிய போராட்டம் தொடர்கிறது. கியூபா வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. கியூபாவின் சர்வதேச பங்களிப்பு அதிகரித்து வருகிறது.அமெரிக்க சிறைகளில் அடைபட்டு கிடந்த 5 கியூப நாயகர்கள் விடுதலை பெற்றது மிகப் பெரிய வெற்றி. 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க கியூப உறவு ஏற்பட்டுள்ளது இரண்டு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடியது. அதே சமயம் கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் தொடர்கின்றன. அவற்றை கைவிடக் கோரும் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். உலக அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அமைதிக்கான நமது போராட்டம் தொடர வேண்டும் என்றார்.

கியூப நாயகர்களில் ஒருவரான ஆன்டனியோ க்வேரோ ரோட்ரிக்ஸ் பேசும் போது இது மிகுந்த உணர்ச்சி மயமான கணம் என்றார். தனது 16 ஆண்டு கால அமெரிக்க சிறைவாசம் குறித்து விவரித்தார். நாங்கள் அல்ல நாயகர்கள். உலகில் ஏராளமான நாயகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஹோசிமின் என்றார்.

பின்னர் பல நாடுகளின் பிரதிநிதிகள் பேசினர். இந்திய பிரதிநிதியாகச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அருண்குமார் பேசும் போது பொருளாதார தடையால் கடும் பாதிப்பிற்கு உள்ளான நேரத்தில் கியூபாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கப்பல் நிறைய கோதுமை, உருளை கிழங்கு, பென்சில்கள், நோட்டு புத்தகங்கள் போன்ற பொருட்கள் அனுப்பப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

  1. கியூபாவின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாகவுள்ள வணிக, பொருளாதார தடைகளை நீக்க கோரும் அமைப்புகளிடையே ஒற்றுமையும் நட்புறவும் 2. கியுப சமூக, அரசியல், பொருளாதார வாழ்வின் யதார்த்தத்தை ஊடகங்கள் வழியாக பரவச் செய்வதன் மூலம் கியூப ஒருமைப்பாட்டு இயக்கத்தை வலுப்படுத்துதல் என்ற இரண்டு சிறப்பு அமர்வுகள் நடைபெற்று கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பின்னர் அது தொகுத்து வழங்கப்பட்டது.

ஹனாய் பிரகடனம்

இறுதியாக ஹனாய் பிரகடனம் வெளியிடப்பட்டு அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  1. சர்வ தேச சட்டங்களுக்கு எதிரான சட்டவிரோத பொருளாதார, வர்த்தக, நிதி தடைகளை விதிக்கும் அமெரிக்க நடவடிக்கைகளை நிராகரிப்போம். கியுப மக்களை ஆதரிப்போம்.மனதாபிமானமற்ற தடைகளை நீக்க கோருகிறோம்.
  2. கியூப அமெரிக்க ராஜிய உறவுகளை புதுப்பிப்பது, தூதரகங்களை இரண்டு நாட்டிலும் திறப்பது என்ற ராவுல் காஸ்ட்ரோ – பாரக் ஒபாமா ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்புகளை வரவேற்கிறோம். இது கியூப மக்களின் எதிர்ப்பு இயக்கங்களுக்கும், அவர்களது புரட்சிகரமான போராட்டங்களுக்கும், சர்வதேச ஆதரவுக்கும் கிடைத்த வெற்றியாகும். கியூபாவை சர்வதேச பயங்கரவாதச் செயல்களை தூண்டும் நாடுகள் பட்டியிலிலிருந்து நீக்கிய ஒபாமாவின் அறிவிப்பை வரவேற்கிறோம்.
  3. கியூப இறையாண்மையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கப்பற்படை தளம் அமைக்கப்பட்டுள்ள குவான்டனாமா பகுதியை மீண்டும் கியூபாவிடம் ஒப்படைக்க கோருகிறோம்.கியூபா குறித்த பொய்யான தகவல்களை தகர்த்து அதன் பொருளாதார சமூக வளர்ச்சி குறித்த செய்திகளை பரப்புவோம்.
  4. கியூப மக்களின் முழு சுதந்திரம், இறையாண்மை, சுயநிர்ணயம், அவர்களது உள் விவகாரங்களில் தலையிடாமை போன்ற உரிமைகளை காப்போம்.கியூபா ஒருமைப்பாட்டு பணிகளைத் தொடர்வோம்.

இந்த மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற மாநாடு என்பது மட்டுமல்ல, சோசலிச கியூபாவிற்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் சோசலிசத்திறகு வலுவும், நம்பிக்கையும் ஏற்படுத்துகின்ற மாநாடாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s