பண்ணை அடிமையை எதிர்த்த போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி


ஐ.வி.நாகராஜன்

1943 முதல் 1952 வரை கீழத்தஞ்சையில் பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிராக நடைபெற்ற அனல் பறந்த போராட்டம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒன்று.

இன்றைய நாகை மாவட்டத்தில் உள்ள பாங்கல் என்ற கிராமத்தில் பிறந்த பி.எஸ்.தனுஷ்கோடியின் அரசியல் பயணம் பண்ணையார்களின் ஆதிக்கம் கடுமையாக இருந்த சூழலில் தொடங்கியது. கடவுளின் பேரால் மூட பழக்க வழக்கங்களிருந்து மீள முடியாமல் இருந்ததும், கிராமப்புறங்களில் பண்ணையாட்கள் ஈவிறக்கமின்றி பண்ணையார்களால் அடித்து உதைக்கப்பட்டதும், ஆடுமாடுகளை விட அவர்களை கேவலமாக நடத்தப்பட்டதும், நோய்நொடிகள் வந்துவிட்டால் கூட கவனிப்பார் இன்றி அவர்கள் நடத்தப்பட்டதும் உள்ளிட்டு பல்வேறு கொடுமைகளைக் கண்டு தனுஷ்கோடி கோபம் அடைந்தார். எழுதப் படிக்க தெரியாத நிலையிலிருந்து தனுஷ்கோடிக்கு முரட்டுகுணமும் அத்துமீறலும் அவருடைய இயல்பாக இருந்தது. அனைத்தின் மீதும் வெறுப்பு, அனைவரின் மீதும் கோபம், பண்ணையார்களின் அடிமையாக இருந்த அப்பா மீதும், அம்மா மீதும் கடும் கோபம் ஏற்பட்டு விரக்தியில் ஊர் சுற்ற ஆரம்பித்தார்.

பெற்றோர் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்து  பண்ணை வேலைக்கு போகாமல் ஊர்சுற்றிக்கொண்டு இருந்த நேரத்தில் திருத்துறைப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த அய்யாசாமி பிள்ளையின் தொடர்பு கிடைத்தது. அவர் தலித் மக்களை அழைத்துப் பேசி ஒவ்வொரு கிராமத்திலும் வாலிபர் சங்கம் அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அமைப்பின் திட்டம் தனுஷ்கோடிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்படி கிராமங்கள் தெருக்களை சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளை செய்தார். பண்ணையார்களின் வற்புறுத்தலை மீறி பண்ணை வேலைக்கு போகாமல் மற்ற வாலிபர்களை சேர்த்துக்கொண்டு வெட்டியாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கிறானே என்றும,;  இதனால் பண்ணையார்களிடமிருந்து நமக்கு ஆபத்து வருமோ என்று பயந்தும் பெண்கள்  இவர் மீது வெறுப்படைந்தது உண்டு.

1937-38 காலகட்டத்தில் தலித் மக்கள் வள்ளுவக்குடி வாத்தியார் பெத்தபெருமாள் என்பவரை கொண்டு தனுஷ்கோடி வசிக்கும் பாங்கல் கிராமத்தின் ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டினர். பெத்தப்பெருமாள் என்பவர் பெரியார், அம்பேத்கரின் பெரும் ஆதரவாளர் ஆவார். ஒருசமயம் அவர் திருவாருரில் பெரியார் பேசிய கூட்டத்திற்கு தனுஷ்கோடியை அழைத்துச் சென்றார். ஏற்கனவே பிராமண பண்ணையார்களிடம் தனது தந்தையும் தாயும் பண்ணை வேலை செய்து பல்வேறு சித்திரவதையை அனுபவித்திருந்ததால், பெரியாரின் பிராமண எதிர்ப்பு பிரசங்கம் தனுஷ்கோடிக்கு மிகவும் பிடித்திருந்தது.

சில மாதங்களுக்கு பின்பு திருத்துறைப்பூண்டியில் பெரியார், ஈவிகே சம்பத், எம்ஆர்.ராதா, அண்ணாத்துரை, நெடுஞ்செழியன் ஆகியோர் பேசிய கூட்டத்திற்கு தனுஷ்கோடி சென்றார். கூட்டத்திற்கு சென்று திரும்புபோது அவருக்கு ஒரு பெரிய அனுபவம் கிடைத்தது. பெரியார் இயக்கத்தை சேர்ந்த சன்னாவூர் பக்கிரிசாமி பிள்ளை டீ கடையில் பெரியார், அம்பேத்கர் பேட்ஜை அணிந்துகொண்டு டீ குடிக்கச் சென்றார். அவரது தோற்றத்தை கண்டு இவன் தலித் என்பதை உணந்த டீ கடை பக்கிசாமியும் கடையிலிருந்த மற்றவர்களும் டீ கடையிலேயே அவரை அடித்து புரட்டி எடுத்தனர்.

நான் பெரியார் கட்சிக்காரான் என்று தனுஷ்கோடி உரக்க கத்தினார். என்னடா பெரியார் கட்சி என்று இன்னும் வேகமாக அடித்தனர். அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாடுகளை அப்போது உணர்ந்தார். டீ கடை, கள்ளுக்கடை என்று எங்கு சென்றாலும் தலித் மக்களுக்கென தனி இடம், தனி குவளை, என தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது.

1942ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தனுஷ்கோடி ஒரு புதிய பத்திரிக்கையை பார்த்தார். அதுதான் ஜனசக்தி. அது கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கை என்றும் அதில் விவசாயிகள், தொழிலாளர்கள், பண்ணை அடிமைகள், தீண்டாமைப்  பற்றி எழுதப்படுகிறது என்றும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சேர்த்து இன்னொரு புதிய தகவலையும் தெரிவித்தனர். அந்த காலகட்டத்தில் பண்ணையடிமை கொடுமை தீவிரமாக இருந்த நேரம.; அப்போது பண்ணை அடிமைக்கு எதிராக, சாணிப் பால் சாட்டையடிக்கு எதிராக சமர்புரிய கன்னடத்து ஐயர் ஒருவர் தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள்ளார் என்றும், அவர் பெயர் சினீவாசராவ் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தனுஷ்கோடிக்கு தனது மனதில் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது.  கீழத் தஞ்சை மாவட்டத்தில் கொடுமை புரிவதும் பிராமண பண்ணையார்கள்தான் பி.சினீவாசராவும் பிராமணர்தான், அதோடு எற்கனவே பெரியார் அம்பேத்கர் என்று விரும்பி சென்று நம்மை துவைத்தெடுத்தார்கள். எனவே இது சரிப்பட்டுவருமா என்று யோசித்தார்.

அந்த குழப்பமான நேரத்தில் பி.சினீவாராவ் தலித் மக்களின் வீட்டுக்கு வந்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்கள் வீட்டிலேயே அவர்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு பண்ணை அடிமைக்கு எதிராக தலித் மக்களை அணிதிரட்டுவதற்கான அவரின் உணர்ச்சிபூர்வமான பேச்சை கேட்டபோது தனுஷ்கோடிக்கு இதுவரை இல்லாத அளவிற்கான மகிழ்ச்சி ஏற்பட்டது. மாற்றமும் வீரமும் தீவீரமாகியது. அதைத் தொடர்ந்து பண்ணை அடிமைக்கு எதிராகவும், தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் சாணிப்பால் சாட்டை அடிக்கு எதிராகவும் தனுஷ்கோடியின் போராட்டம் தீவிரமாகியது. அதன்பிறகுதான்   தென்பரை இயக்கம், நாணலூர் கலவரம், நிலப்பிரபுகளுக்கும் விவசாய சங்கத்திற்கும் ஏற்பட்ட முதல் ஒப்பந்தம், சாட்டையடி சாணிப்பால் நிறுத்தம், பூந்தாழங்குடி துப்பாக்கிச் சூடு, சாகுபடி கூலிக்கான முத்தரப்பு மாநாடு, வெண்மணி கொடூரம், கணபதியா பிள்ளை கமிஷன், வலிவலம் தேசிகர் பண்ணையை எதிர்த்த டிராக்டர் போராட்டம், என்.வெங்கடாசலம் படுகொலை, திருமெய்ஞானம் துப்பாக்கிச் சூடு, என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1952 காலகட்டத்திலிருந்து தஞ்சை மண்ணின் வர்க்க, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான வரலாறு இன்றுவரை தொடர்கிறது.

1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடி இதரபல  தோழர்களுடன் வெளியேறிவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதில் முழு மூச்சுடன் செயலாற்றினார். அந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடியும் கைது செய்யப்பட்டார். சுமார் ஒன்னறை ஆண்டுக்காலம் அவர் கடலூர் சிறையில் பாதுகாப்பு கைதியாக வைக்கப்பட்டார். 1975ம் ஆண்டில் அவசர நிலை பிரகடனத்தின் போதும் பி.எஸ்.தனுஷ்கோடி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரது வாழ்வில் 9 ஆண்டுகள் 9மாதம் சிறைவாசம் அனுபவித்தார். ஓராண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார். தமிழகத்தில் அதிக காலம் சிறைவாசம் அனுபவித்த தலைவர் பிஎஸ்.தனுஷ்கோடி.

.பி.சினீவாசராவோடு இணைந்து நின்று அடுக்கப்பட்ட மூட்டைகளின் அடி மூட்டைகளாக இருந்த வாயிருந்தும் பேசமுடியாமல், கண்ணிருந்தும் பார்க்கமுடியாமல், காதிருந்தும் கேட்கமுடியாதவர்களாக கூனிக்குறுகிக்கிடந்த தலித் மக்களையும், சிறுகுறு நடுத்தர விவசாயிகளையும் அணிதிரட்டி பண்ணை அடிமைக்கு எதிராக சமரசமற்ற முறையில் போராடிய தலைவர்தான் தனுஷ்கோடி. தஞ்சை மண்ணில் செங்கொடி இயக்கத்தின் வழியில் நின்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவராக தனுஷ்கோடி என்ற மாமனிதர் பிஎஸ்.தனுஷ்கோடி என்ற மாபெரும் தலைவனாக பரிணமித்தார். அவர் எந்த பொருளாதாரமும் பண வசதியும் இல்லாமல்  பண்ணை அடிமைக்கு எதிராகவும் சமூக கொடுமைகளுக்கு எதிராகவும் போராடி மக்கள் தலைவனாக மாறினார். செங்கொடி இயக்கத்தின் மகத்தான போராட்டம்தான் எழுதப் படிக்கத் தெரியாத தனுஷ்கோடியை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக உயர்த்தியது.

உங்கள் வாழ்வில் எதை பெருமையாக கருதுகிறீர்கள் என்று  பிஎஸ்.தனுஷ்கோடியிடம் கேட்டபோது எழுதப் படிக்கத் தெரியாத பண்ணை அடிமையாக இருந்த என்னை வர்க்க உணர்வுப்பெற்ற மனிதனாக்கி மக்கள் ஊழியனாக தலைநிமிரச் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருப்பதையே நான் பெருமையாக கருகிறேன்  என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s