மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !


  • என்.குணசேகரன்

( ‘திராவிட இயக்கம் ஒரு மறுவாசிப்பு’ நூலில் இருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன…)

திராவிட இயக்கம், தமிழகத்தில் உருவான மாபெரும் மக்கள் இயக்கம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. கடந்த அரை நூற்றாண்டாக, தமிழ்நாட்டின் அரசியலில் திராவிட இயக்கப் பிரிவுகளே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன.

திராவிட இயக்கத்தின் இன்றைய நிலை குறித்து, பகுத்தறிந்து சிந்திப்பவர்கள் அந்த இயக்கங்களின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எதிர்கொள்கின்றனர். அதில் “திராவிட இயக்கம்  நெருக்கடியில் இருக்கிறதா” என்கிற கேள்வியும் ஒன்று. “அப்படி எந்த நெருக்கடியும் இல்லை” என திராவிட இயக்க ஆதரவாளர்கள் அதனை அவசரமாக மறுக்கலாம். தற்போது “திராவிட மாடல்” என்று முன்வைத்து இன்றும் ‘திராவிடக் கருத்தியல்’ வலுவாக உள்ளதாக முன்னிறுத்தப்படுகிறது.

இதற்கு நேர்மாறாக, வேறு சிலர், திராவிட இயக்கத்திற்கு முடிவு வந்துவிட்டது என்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் தற்போது வெற்றிடம் நிலவுவதாகவும், அதனை தாங்கள் நிரப்பப் போவதாகவும் சொல்கிறார்கள். தமிழக பாஜக தலைவர்கள் அந்த இடத்தை பிடிப்போம் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர்.

உண்மையில், தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. திமுக, அதிமுக அல்லாத சில கட்சிகள். அரசியலில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர் என்பதற்காக திராவிட இயக்கம் நெருக்கடியில் உள்ளது என்ற முடிவுக்கு வர இயலாது. அதே போன்று, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற, தலைவர்கள் திராவிட  அரசியல் களத்தில் இல்லாததால் அந்த இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது  என்று சொல்கிற கருத்தும் சரியானதல்ல. எனினும், எதற்காக நெருக்கடியில் திராவிட இயக்கம் இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது? 

தமிழகத்தின் சமுகத் தேவைகளிலிருந்து திராவிட இயக்கத்தினர் முன்வைத்த இலக்குகளை அவர்களால் தொடர முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. இனி அவர்களால் அவற்றை சாதிக்க முடியுமா என்ற அவநம்பிக்கையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இது அந்த இயக்கம் எதிர்கொள்ளும் முக்கிய நெருக்கடியாகும்.

முன்னிறுத்திய இலக்குகள் எங்கே?

திராவிட இயக்கம் தன்னை பல வகையில் அடையாளப் படுத்தி வந்துள்ளது. பகுத்தறிவுக்கான பாசறை, சமூக நீதி, பிற்பட்டோருக்கான இயக்கம், பெண் விடுதலை, தமிழுக்காக உயிர் கொடுக்கும் இயக்கம் என, தன் அடையாளங்களை வெறும் முழக்கங்களாக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அவற்றை பயன்படுத்தி வெகு மக்களை தனது செல்வாக்குத் தளத்தில் கொண்டு வந்தது. ஆனால் இன்று மேற்சொன்ன அடையாளங்களில் காலூன்ற இயலாத நிலையில் உள்ளது. அதனால்தான், திராவிட இயக்கம் நெருக்கடியில் உள்ளது எனும் மதிப்பீடு முன்வருகிறது.

எடுத்துக்காட்டாக, 1957-ம் ஆண்டில் திமுக சந்தித்த முதல் தேர்தலிலேயே மத்திய மாநில உறவுகளை சீரமைக்க திமுக வலியுறுத்தியது. அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“இன்றைய அமைப்பில்   அதிகாரங்களும் வருவாயும் மத்திய ஆட்சிக்கே பெரிதும் அளிக்கப்பட்டுள்ளன மாநில அரசு வருவாயை பெருக்கிக் கொள்ள வழியில்லை சாதாரண பிரச்சினைகளில்கூட முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளிடம் இல்லை. மாநிலங்களின் அதிகார வரம்பும் வரிவிதிப்பும் உரிமைகளும் அதிகரிக்கப்பட்டு மத்திய அரசுக்கான அதிகார வரம்பும் வரிவிதிப்பு உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.”

கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நிலையை திராவிட இயக்கங்கள் வலியுறுத்தவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அல்லது அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பெயரளவுக்கு இதனை பேசியிருக்கக்கூடும். சமீபத்திய காலங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய, மாநில அரசாங்கங்களுக் கிடையேயான அதிகாரங்கள் ஜனநாயக அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்க இயலாத நிலையில்தான் திராவிட இயக்கம் இருந்து வந்துள்ளது.

இதற்கு காரணம் என்ன? மாநில உரிமைகளை மறுத்து வந்துள்ள, பாஜக,காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளோடும் அவ்வப்போது அரசியல் தேவைக்காக இரண்டு கழகங்களும் கூட்டணி கண்டு வந்துள்ளன. இந்தக் கட்டாயமும்  எதற்காக என்பதை ஆழமாக அறிந்திட வேண்டும்.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க, மக்கள் வழ்வாதாரங்களை பறிக்கிற கொள்கை கொண்டவை. மாநில மட்டத்தில், இந்த கொள்கை வழித்தடத்தில் இரண்டு கழகங்களும் 1990-ம் ஆண்டுகளிலிருந்து பயணித்து வருகின்றன. இதன் எதிரொலியாகவே, மாநில நலன் சார்ந்த உரிமைகளை அடக்கி வாசிக்கும் நிலைக்கு திராவிட இயக்கங்கள் தள்ளப்பட்டு விட்டன. இவ்வாறு ஒவ்வொரு இலக்கும் கைவிடப்பட்டது.

திராவிட இயக்கத்தின் எதிர்காலம் 

திராவிட இயக்கம் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அது மக்கள் ஆதரவோடு நீடிக்கும் என்று பலர் நினைக்கலாம். திராவிட இயக்கப் பற்றாளர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவோம் என முழங்கிடலாம். ஆனால், ஒரு வரலாற்றுப் போக்கினை நாம் மறந்துவிடக்கூடாது. எந்தக் கருத்தியலும், அது சார்ந்த இயக்கங்களும் வரலாற்றில் ஒரே வடிவத்தில் மாறுதலுக்கு உட்படாமல் நீடித்ததில்லை.

எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் 1838 முதல்  1857 -ம் ஆண்டு வரை பெரும் மக்கள் இயக்கமாக செயல்பட்ட மக்கள் சாசன இயக்கம். வாக்குரிமை உள்ளிட்ட அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து எழுந்த இயக்கம் அது. ஆனால், துவங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களின் ஊடாக, அந்த இயக்கத்தின் தேவை மழுங்கி, பின்னர் அது மறைந்தது.

இதனை குறிப்பிடுவதால் அந்த இயக்கம் எதையும் சாதிக்கவில்லை என்று கருதக்கூடாது. எந்த இயக்கமாக இருந்தாலும் அதன் எதார்த்தத் தேவை முடிந்த பிறகு மறைந்து போவது இயல்பானது. இடையில் அந்த இயக்கம் தன்னை இருத்திக் கொள்வதற்கு பல மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும். இந்த வரலாற்றுப் போக்கிற்கு  உலக இயக்கங்கள் அனைத்தும் ஆட்பட்டிருக்கின்றன. எனவே, இதற்கு திராவிட இயக்கமும் விதிவிலக்கல்ல.

திராவிட இயக்கத்திலேயே உருவான பல கிளை இயக்கங்கள் மறைந்து போய்விட்டன. அண்ணா அவர்களோடு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கியவர்களில் முக்கியமானவர், ஈ.வி.கே.சம்பத். அவர், திமுகவிலிருந்து பிரிந்து, “தமிழ் தேசியக் கட்சி” துவங்கினார். பிறகு அவர் காங்கிரசில் சேர்ந்தார். அவர் அமைத்த கட்சி அத்துடன் மறைந்து போனது. இவையெல்லாம் குறுகிய கால நிகழ்வுகள். சமூக இயக்கத்தின் தேவையை நிறைவேற்ற பயன்படாதபோது, இயக்கங்களும், அவை பேசிய கருத்து நிலைப்பாடுகளும் நிலைத்து நிற்கும் என்று கூற இயலாது.

திராவிட இயக்கம் துவங்கிய காலத்திலிருந்து இது போன்ற பல வகையான மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக விளங்கிய மறைந்த முரசொலி மாறன், “திராவிட இயக்கத்தின் தலைமகன்” என்று நீதிக்கட்சியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 1916-ம் ஆண்டு நவம்பர் 20 அன்று தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் பெயரில் தனி அரசியல் கட்சி துவங்கப்பட்டது. அதுவே பிறகு நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. இதிலிருந்துதான் திராவிடர் கழகமும், பிறகு திராவிட முன்னேற்றக் கழகமும் தோன்றின. 

எந்த இயக்கமும் திடீரென அழிந்து போகாது. ஆனால் ஒரு இயக்கம் தோன்றி, வளர்ந்து, வலுப்பெற்று வந்ததற்கான நிலைமைகள் மாறுகிற போது, அந்த இயக்கத்தின் இருப்பும்,அதன் தேவையும் கேள்விக்குறியாகிறது. இதனால் அது மீள முடியாத நெருக்கடியில சிக்குண்டு தவிக்கும் நிலை ஏற்படுகிறது.            திராவிட இயக்கத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அதன் வரலாற்று வளர்ச்சியில் அடங்கியுள்ளது. எனவே அந்த இயக்கத்தின் வரலாறு குறித்த மறு வாசிப்பு, தேவைப்படுகிறது.

            இந்த மறுவாசிப்பு, ஆராய்ச்சி ஆர்வத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி அல்ல. நீண்ட கால நோக்கில் மாற்று வாய்ப்பு என்ன என்பதை அறிவதும், அதை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்லவுமே, இந்த மறுவாசிப்பு தேவை.

  •  

நீதிக்கட்சி செய்தது என்ன?

நீதிக்கட்சி தலைமையிலான  ஆட்சிகள் அவர்களது முக்கிய நோக்கமான பிராமணரல்லாதோர் அரசுப் பணிகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தை ஓரளவு  நிறைவேற்றிக் கொண்டது. இதற்காக, பிற்பட்டோருக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற அரசாணையை நீதிக்கட்சி அரசாங்கம்  கொண்டு வந்தது. இது ஒரு முக்கியமான சமூதாய நடவடிக்கையாக அமைந்தது. சமூக ரீதியில் காலம் காலமாக பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு முறை அவசியம் என்ற ஒரு  கோட்பாட்டை மைசூர் சமஸ்தானம் 1918ல் அறிமுகப் படுத்தியது. அதற்கு பிறகு சென்னை மாகாணத்தில் அறிமுகம் செய்த பெருமை நீதிக்கட்சி அரசாங்கத்தையே சாரும்.

நீதிக்கட்சி அரசு மேலும்  சில சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வந்தது. தேவதாசி முறை என்றழைக்கப்பட்டு வந்த பெண்களை இழிவுபடுத்தும் ஒரு வழக்கத்தை ஒழித்தது. பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு தடையாக இருந்த ஆங்கிலேய அரசின் சட்டத்தை மாற்றி அவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உறுதி செய்தது. இது போன்று கல்வியிலும் சில முற்போக்கான நடவடிக்கைகளை  அந்த அரசாங்கங்கள் கொண்டு வந்தன. அந்தக் காலத்திய சூழலில் இவை அனைத்தும் வரவேற்கத்தக்க, முற்போக்கு  நடவடிக்கைகள் என்பதனை மறுக்க இயலாது.

சுயமரியாதை இயக்கம் !

சுயமரியாதை  இயக்கத்தின் பிரச்சாரத்திற்கு அதன்  அமைப்பு ரீதியான வளர்ச்சி உதவிகரமாக அமைந்தது. குடி அரசு இதழில் வெளிவந்த விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் சுயமரியாதை  இயக்கத்தின் கிளைகள் கிராமப்புறங்களிலும் பரவி இருந்தன. அந்த இயக்கம் துவக்கப்பட்ட ஓராண்டிற்குள் தஞ்சை, கோவை, இராமநாதபுரம், தென்னாற்காடு, வடாற்காடு, நெல்லை மாவட்டங்களில் 60 கிளைகள் செயல்படத் துவங்கின. அடுத்த ஏழாண்டுகளில் 117 கிளைகளுடன்  10,000 உறுப்பினர்கள் செயல்படுகிற இயக்கமாக வளர்ந்தது. 

சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடு அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் தழுவியது. குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் உறைந்திருக்கும்  சாதி மத வெளிப்பாடுகளில் அது தலையிட்டது. அந்த தலையீடுகளில் முக்கியமானது சுயமரியாதை திருமணங்கள்.

            சுயமரியாதை திருமணம் என்பது குடும்பம், உள்ளூர் சமூகத்தை பிற்போக்குத் தனங்களிலிருந்து மீட்கும் முயற்சியாக விளங்கியது. இயக்கம் துவங்கிய  முப்பது வருடங்களில் அனைத்து தமிழக மாவட்டங்களிலும் சாதி மறுப்பு, பிராமணிய  சடங்குகள் மறுப்பு, புரோகிதர் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் தவிர்த்த சுயமரியாதை திருமணங்கள் நடந்துள்ளன.

            குடும்பம் என்பதை சுயமரியாதைக் குறிக்கோள்களை அடைவதற்கான போராட்டக் களமாக சுயமரியாதை இயக்கம் பயன்படுத்தியது, இது அந்த இயக்கத்தின் மகத்துவமாகத் திகழ்கிறது.

சாதியக் கண்ணோட்டம், மூட நம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம், பிற்போக்கான மத சடங்குகள், தீண்டாமை  போன்றவை அன்று தமிழ்க சமூகத்தில்  மண்டிக் கிடந்தன.இவற்றை எதிர்த்த கலகக் குரல்களும் அவ்வப்போது எழுந்துள்ளன. இப்படிப்பட்ட    சமூக முரண்பாடுகளைத் தீர்த்திட  முற்போக்கு கருத்தாக்கங்களை முன்கொண்டு சென்ற  இயக்கமாக  சுயமரியாதை இயக்கம் திகழ்ந்தது. தனது குறிக்கோள்களை எட்டும் பயணத்தின் போது, சுயமரியாதை இயக்கம் அன்றைய காங்கிரசோடும், நீதிக்கட்சியோடும் முரண்பாடு கண்டது.

சுயமரியாதை இயக்கம் சாதித்தவை குறித்து சரியாக மதிப்பிட வேண்டும். இதற்கு பெரியாரின் கீழ்கண்ட வழிகாட்டுதலையே கையாள வேண்டும் :

“எந்த அபிப்பிராயத்தையும் அதனால் ஏற்படும் பலனைக் கொண்டுதான் மதிக்க வேண்டுமே யொழிய வார்த்தை இனிப்பைக் கொண்டும், அழகைக் கொண்டும், செல்வாக்கைக் கொண்டும் மதிப்பது அறிவுடைமை ஆகாது.”

இந்த கோணத்தில் அதனை ஆராய்வதுதான் பலன் தரும்.மாறாக, சுயமரியாதை இயக்கத்தை விமர்சனமற்று போற்றுவது அதனை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்க உதவிடாது.

ஒரு மனிதர் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வினை நடத்த வேண்டுமெனில் அவர்  சுய காலில் நிற்பதற்கான பொருளாதார பலம் பெற வேண்டும்.சுயமரியாதை  இயக்கத்தின் செயல்பாட்டில்  பொருளாதார விடுதலைக்கான கடமைகள் வரையறுக்கப் படவில்லை.இது அந்த இயக்கத்தின்  முக்கிய குறைபாடு. பொருளாதார விடுதலைப்  பார்வையை இணைத்திட கம்யூனிஸ்ட் தலைவர்களான சிங்காரவேலர், ஜீவானந்தம்  போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர்.

1930 ஆம் ஆண்டுகளில் “….ஆங்கிலேய ஆட்சியாக இருந்தாலும், இந்தியர்களால் ஆளப்படும் ஆட்சியாக இருந்தாலும், அது உடைமை வர்க்கங்களின் ஆட்சியாக இருந்தால் அகற்றப்பட வேண்டும்..” பெரியார் அதனை தெளிவாகவே குறிப்பிட்டார் “மகாராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிமார்கள், ஆதிக்கம் கொண்ட ஆட்சியை அழிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்படிப்பட்ட ஆட்சி பிரிட்டிசாரால் நடத்தப்படுவதானாலும் சரி, இந்தியரால் நடத்தப்படுவதானாலும் சரி, மற்றவரால் நடத்தப்படுவதானாலும் சரி, நமக்கு அதைப் பற்றி கவலையில்லை; அடியோடு ஒழிக்க வேண்டியதுதான் கடமையாகும்;(குடி அரசு;1933)” இந்த சமதர்ம இலட்சிய முழக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இது  சில ஆண்டுகளிலேயே நிகழ்ந்ததுதான் வேடிக்கையான வேதனை.

  •  

அண்ணாவின் சில சாதனைகள்

மாநிலத்தின் பெயர் மாற்றம். 1968 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றியது அண்ணா ஆட்சி. இது முக்கியமான நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தமிழக வரலாற்றுப் பரம்பர்யத்தின் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்துவதாகவும் தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும்  இது அமைந்தது.

கடந்த காலத்தில் திராவிட இயக்கத்தினர்  பேசி வந்த இன மேன்மைவாத கருத்தியலுக்கு ஏற்ற நடவடிக்கையாகவும் அது இருந்தது. இதனை அன்றும் இன்றும் சாதனையாக முன்னிறுத்தி அரசியல் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் பணியை மிகச் சிறப்பாகவே திமுக தலைவர்கள் செய்து வந்துள்ளனர். குறிப்பாக, இந்தித் திணிப்பு  எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்களிடம் நெருங்கிய இளைய தலைமுறையை உணர்வூட்டி உற்சாகம் கொள்ளச் செய்திட இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு கைகொடுத்தது..

இரண்டு ஆண்டுக்காலம் மட்டுமே இருந்த அண்ணா தலைமையிலான ஆட்சியால், என்ன சாதிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படலாம். ஆனால், எதிர்கால, மாற்றுக்  கொள்கைக்கான  பாதையில் செல்ல, துவக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதும் முக்கியமானது.

சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கியதும், விதவை மணம் புரிந்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, இரு மொழிக் கொள்கையைக் அமலாக்கியது போன்றவை  அண்ணாவின் ஆட்சி மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள். இவை தமிழக சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் கடமையில் முக்கிய மைல்கற்களாகத் திகழ்கின்றன.

அரசியல் களத்தில் தனிப்பட்ட மனிதர்களின் குணநலன்கள் மாற்றங்களை நிகழ்த்துவதில்லை. எனினும், அண்ணா நேர்மை, எளிய வாழ்க்கை, அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, மாற்றுக் கட்சியினரையும் மதித்துப் போற்றும்  பாங்கு, என சிறந்த  பல பண்புகளை கொண்டவராக வாழ்ந்தார். கலை, இலக்கியம் என பல துறைகளில் பன்முகத்திறமைகள் கொண்டவராகவும் அவர் வாழ்ந்தார்.

  •  

மாற்றுக்கான தேடல்: 

ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடிப்பதுண்டு. ஆளுகிற கட்சி தனது கொள்கைகளால்  மக்கள் அதிருப்திக்கு ஆளாகி, தேர்தலில் தோல்வியை சந்திக்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்  மறைவுக்குப் பிறகு, 1989-லிருந்தே திமுக, அதிமுக என ஆட்சிகள் மாறி மாறி அமையும் நிலை ஏற்பட்டிருந்தது. மக்கள் நலனைப் பாதுகாக்கும் கொள்கையுடன்,மக்கள் நம்பிக்கை பெற்ற மாற்று வலுவாக உருவாகாததால்  இந்த நிலை தொடர்ந்தது.1991-2011 வரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் கருணாநிதி தலைமையிலான திமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்தன. 

 ஆனால்,இந்த நிலை 2016 தேர்தலில் மாறியது. 2011 முதல் ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த அதிமுக 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.அப்படியானால் 2011-2016 ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் ஆட்சி மக்கள் வாழ்வை மேம்படுத்திய ஆட்சியாக இருந்ததா? திராவிட இயக்க சித்தாந்த அடிப்படையில் நடத்தப்பட்ட ஆட்சியாக ஜெயலலிதா ஆட்சி இருந்ததா?

தேர்தல் பிரச்சாரத்தில் திராவிடம்

 இதற்கான விடைகளை 2016-ல் நடந்த தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த தேர்தல் பிரச்சாரத்திலேயே அறிய முடியும்,இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவிற்கு வயது 68.தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா அந்த ஆண்டிலேயே காலமானார்.ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு  2016-தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட கருணாநிதிக்கு வயது 92.இரு தரப்பிலும் ஊழல் உள்ளிட்ட   குற்றச்சாட்டுக்கள் வழக்கம் போல் முன்வைக்கப்பட்டன.

 திருவாரூர் கூட்டத்தில் பேசிய கருணாநிதி “ஊழலில் யாருமே ஜெயலலிதாவை மிஞ்ச முடியாது;அவரைப் போல் தவறுகள் செய்தவர்களும் யாருமில்லை;சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு ஆட்சி செய்கிறார்;இந்த சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவதுதான் நமது கடமை”என்று பேசினார்.  அதே நேரத்தில் திராவிடம் பற்றி சொல்லாமல் விடுபடக் கூடாது என்பதற்கு “திராவிட ஆட்சி அமைந்தால்தான் திராவிட மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்” என்றார் கருணாநிதி. ஜெயலலிதா ஆட்சி ஆரிய ஆட்சி என்று பொருள் கொள்ளத்தக்க வகையில் இந்த கருத்தை பிரச்சாரத்தில் சொல்லிவைத்தார்,கருணாநிதி.திராவிட ஆட்சியின் கொள்கைகள் என்ன, அந்த ஆட்சி அடித்தட்டு மக்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யும் என்பதைப் பற்றியெல்லாம்  திமுக பிரச்சாரத்தில் எதுவுமில்லை.அதிமுகவை பொறுத்தவரை திராவிடம் என்ற சொல் கூட பிரச்சாரத்தில் இடம் பெறவில்லை.

 தேர்தலில் திமுகவின் பிரச்சாரத்தை ஜெயலலிதா வழக்கமான பாணியில் எதிர்கொண்டார்.திமுகவின் வாரிசு அரசியல், 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல்கள், மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட மதுரை தினகரன் அலுவலகத்தின் மீதான தாக்குதல், கடந்த திமுக ஆட்சிகளின் போது நடந்த தொடர் குற்றங்கள்,நில மோசடிகள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை திமுக மீது சுமத்தி ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.  

 பண விநியோகம் இந்த தேர்தலில் பெரும் பங்கு வகித்ததை ஊடகங்கள் வெளிப்படுத்தின.தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதை உணர்ந்த கருணாநிதி கடலூர் கூட்டத்தில் “அதிமுக உங்களுக்கு ஒட்டு போட பணம் கொடுத்தால் நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்,அந்தப் பணம் கொள்ளையடித்த பணம்…” என்றார் .   

 அதிமுக 2011-2016 ஆட்சிக்காலத்தில் பல நலத் திட்டங்களை அமலாக்கிய போதும்,ஏராளமான தவறுகளையும் செய்தது.  2015-ஆம் ஆண்டு கனமழை வெள்ளம் மக்களை பாதித்தபோது அதிமுக அரசாங்கம் மக்களை பாதுகாக்கவும்,முறையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும் மாபெரும் தவறு.சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்தனர்.இப்படிப்பட்ட மெத்தனப்போக்கு அதிமுக ஆட்சியில் இருந்த போதிலும்  அதிமுக 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

  •  

இந்துத்துவ சக்திகளுடன் 

1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. நான்காவது முறையாக கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.2001-வரை ஆட்சியிலிருந்த திமுகவின் ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கியமான ஒரு திருப்பம் பாஜகவுடன் திமுக ஏற்படுத்திக் கொண்ட உறவு.

 அதுமட்டுமல்லாது,1999- ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசில் திமுக பங்கேற்றது. ஒரு இந்துத்துவ கட்சியின் ஆட்சியில் பகுத்தறிவு நெறியில் வந்த கட்சி கூட்டு சேர்ந்து ஆட்சியில் பங்கேற்றது, திராவிட இயக்க வரலாற்றில் ஒரு கொள்கை சறுக்கலாக அமைந்தது. 

 ஏற்கனவே அதிமுக இந்த சந்தர்ப்பவாதத்தை 1998-ஆம் ஆண்டு துவக்கி வைத்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக,பாஜகவோடு கூட்டு சேர்ந்தது. இதுவும் மிகப்பெரும் சந்தர்ப்பவாத செயல்பாடாக திராவிட இயக்க கொள்கைகள் மீது பற்று கொண்டவர்கள் கருதினார்கள். 

 ஆனால்,இதுபோன்ற அரசியல் முடிவுகள் தலைமை எடுக்கிற போது கட்சியின் தொண்டர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள்? திராவிட அடிப்படைகளையே புறந்தள்ளி விட்டு முற்றிலும் சந்தர்ப்பவாத நிலை எடுக்கிற தலைமையின் முடிவிற்கு கட்சி அணிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ?கட்சியின் தொண்டர்கள் இவற்றை ஜீரணித்துக் கொண்டு எப்படி கடந்து போனார்கள் ?இக்கேள்விகளை திராவிட இயக்க வரலாறு எழுதிய பலர்  கண்டுகொள்ளவில்லை. 

 பாஜகவோடு கூட்டு சேர்ந்தது தவறு என்று ஜெயலலிதா இறந்த பிறகும் கூட சொல்வதற்கு அதிமுகவில் யாரும் முன்வரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்,நீண்டகாலம் அதிமுக தலைவராகவும்,அமைச்சராகவும் இருந்த கடம்பூர் ராஜு பேசினார்:

“1998- ஆம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி வகுப்புவாத கட்சி என்று கருதப்பட்டது.ஜெயலலிதா முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்காக பாஜகவை ஆதரித்தார்.அன்றைக்கு அதிமுக ஆதரவு இல்லாமல் போயிருந்தால், பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது’” என்று மிகவும் பெருமையாக கடம்பூர் ராஜு பேசினார்.(DTNEXT,ஜனவரி 22,2018)

 பின்னாளில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது தவறு என்ற தொனியில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் பல சந்தர்ப்பங்களில் பேசினாலும், 1998,1999- ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது, தமிழகத்தில் பாஜக உள்ளே நுழைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. ஒரு பகுதியினர் மத்தியில் பாஜகவும் ‘ஒரு நல்ல கட்சி;அதனுடைய தலைவர்களும் நல்ல தலைவர்கள்’ என்கிற ஒரு கருத்தினை உருவாக்குவதற்கு திராவிட கட்சிகள் அவர்களோடு சேர்ந்தது உதவியது.

 இன்றுவரை இந்துத்துவ சித்தாந்தத்தை தமிழ் அடையாளத்துடன் இணைத்துக்கொண்டு தமிழக மக்கள் மனதில் பதியவைக்க சங்கப்  பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு களம் அமைத்து கொடுத்தது 90-களில் திமுக, அதிமுகவிற்கு ஏற்பட்ட கொள்கை சறுக்கல்கள். 

 2001-ல் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்துக்களின் ஆதரவைப் பெறுவதற்கு சங்கப் பரிவாரங்களின் உத்தியை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக முயற்சித்தது. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளைப் பலியிடத் தடைச் சட்டம் ஆகியவற்றை ஜெயலலிதா கொண்டுவந்தார். பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் அன்று மேற்கொண்ட பகுத்தறிவு, மத நல்லிணக்க கருத்துக்களை கைவிட்டு விட்டோம் என்று பறை சாற்றும் வகையில் இந்த நடவடிக்கைகள் இருந்தன.

திமுகவும் 2001-தேர்தலில் பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொண்டு 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வைத்து,நான்கு தொகுதிகளில் அவர்களை  வெற்றி பெற வைத்தது.திமுக,அதிமுக கட்சிகளால் கிடைத்த அரசியல் அங்கீகாரத்தை வைத்து வகுப்புவாத விஷத்தை தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பரப்பி வருகின்றனர்.

 பெண்கள்,பட்டியலின மக்கள்,சிறுபான்மையினர்,பிற்பட்டோர் என நாட்டின் பெரும்பான்மை மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிடஆர்எஸ்எஸ்  அமைப்பு முயன்று  வருகிறது,இந்த நோக்கத்தை நிறைவேற்ற  இந்து மதத்தினரிடம் இந்து தேசியம் என்ற மத ரீதியிலான உணர்வை தூண்டி,இந்து மத வெறியை ஒருங்கிணைக்க முயற்சிக்கின்றனர்.இதற்கு ஆரிய இனம் என்ற கருத்தையும் ஆரிய இனம் மேலானது என்ற பொய்மையையும் கட்டமைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.ஆரியர் என்ற தனித்த நிலப்பரப்பு கொண்ட இனம் என்பது இருந்ததில்லை.ஆரிய என்ற மொழிவகை சார்ந்த நாடோடி மக்கள் குழுக்கள் தான் இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.அவர்களை உயரிய வேத  நாகரிகம் கொண்டவர்கள் என சித்தரித்து மிக பிற்போக்கான பிராம்மணிய  கருத்தியலை பரப்பி  வருகின்றனர்.

  •  

 கடந்த நூற்றாண்டில் சமூக,அரசியல்,நிர்வாக மேலாதிக்கத்தில் இருந்த பிராமணர்கள் இந்த ஆரிய இன மேலாண்மை கருத்தினை ஏற்று, அதனை பரப்பி வந்தனர்.இதற்கு எதிர்வினையாக எழுந்த பிராமணரல்லாதார் இயக்கம் திராவிட இன மேலாண்மை  பேசியது. மொழி.பண்பாடு,நிலப்பரப்பு சார்ந்த தமிழர்கள் ஒரு இனம் என்று பார்க்கிற பார்வையில் பொருள் உண்டு, ஆனால் விந்திய மலைக்கு அப்பால் உள்ள மக்களை ஒரே இனமாக பார்ப்பதற்கு அடிப்படை ஏதுமில்லை. கடந்த கால இந்த சர்ச்சையை மீண்டும் புத்துயிரூட்டி தங்களது சமூகப் பிளவு நோக்கங்களை நிறைவேற்ற தமிழக ஆளுநர் ரவியை சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்த முனைந்து வருகின்றனர்.இந்து மத உணர்வை,மதவெறியாக  வளர்ப்பதற்கு கடும் முயற்சிகளை பல தளங்களில் சங்கப் பரிவரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,திராவிட இயக்கங்கள் கடந்த கால தவறுகளை செய்திடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 திராவிட இயக்கக் கொள்கைகளில் பல சமூகசீர்திருத்தத்தை அடிப்டையாகக் கொண்டவை.மதத்தின் பெயரால் பிற்பட்ட பட்டியலின மக்களை ஒதுக்கிடும் பிற்போக்குத்தனங்களை திராவிட இயக்கம் எதிர்த்து மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.ஆனால் எந்த ஒரு முற்போக்கு  கொள்கையும், சமூக சீர்திருத்த இலட்சியமும் ஒரு ஜனநாயக அமைப்பு இல்லாமல் சாத்தியமில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கங்களில் அப்படிப்பட்ட நிலை இல்லை.

 எதேச்சாதிகார நடைமுறைகளோடு உருவாக்கப்பட்ட கட்சி கட்டமைப்புடன்  கொள்கைகளை நடைமுறைப் படுத்த முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. சாதி ஒழிப்பு,சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமூகம் படைப்பதற்கான இலட்சிய நோக்கு, பகுத்தறிவு பார்வை கொண்ட மக்கள் போன்ற குறிக்கோளை அடைய தலைமைக்கு ராஜ பக்தியுடன் செயலாற்றும் கட்சி அமைப்பினால் சாத்தியமில்லை; இது கொள்கைகள் மீது அர்ப்பணிப்பு கொண்ட இலட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது தனித்தன்மை குறைந்திடாமல் செயலாற்றக் கூடிய ஒரு பெரும் இயக்கத்தினால்தான் அது  சாத்தியமாகும். குறிக்கோள்கள்,இலட்சியங்கள் மீது தான் விசுவாசம் இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களுக்கு விசுவாசம் காட்டுகிற அரசியல் நாகரீகம், கடந்தகால நிலப்பிரபுத்துவ பண்பாடாகும்.இதிலிருந்து தமிழகம்  மீள வேண்டும்.

அண்மைக் கால நிகழ்வுகள்

 ஜெயலலிதா மறைவு நிகழ்ந்ததும் அதிமுகவில் சசிகலா,தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என அதிகார மையங்களுக்குள் நடந்த அதிகாரப் போட்டி,கருணாநிதி மறைவு ஏற்படுத்திய தாக்கம்,2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது என இவை  அனைத்தும் அண்மைய நிகழ்வுகள்.இவை பற்றி சரியான மதிப்பீடு செய்ய சிறிது காலம் தேவைப்படலாம்.

 ஆனால் 2011-2021 வரையிலான பத்தாண்டு அதிமுக ஆட்சி  குறிப்பிடத்தக்க மாறுதல்கள் எதையும் நிகழ்த்தவில்லை.இந்தக் காலம் முழுவதும் தொழிலாளர்,விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்கள் ஓய்ந்திடாமல் தொடர்ந்து நிகழ்ந்தன.இதுவே மக்களுக்கு விரோதமான நவீன தாராளமய ஆட்சியே பத்தாண்டுகள் தொடந்தது என்பதற்கான சான்று.

 துவக்க காலங்களில் அண்ணா முன்வைத்த முழக்கமான “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற இலட்சியம் கானல் நீராகவே நீடித்தது.ஜெயலலிதா,கருணாநிதி ஆகிய இருவரும் மறைந்த போதிலும் அவர்கள் வெகு மக்கள் வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கு பின்பற்றிய தவறான அரசியல் வழிமுறைகள் அறவே ஒழிக்கப்படுமா?அவர்கள் காலத்தில் திராவிட கருத்தியலின் சாதகமான அம்சங்களை நீர்த்துப் போக வைத்த அந்த தவறுகள் களையப்படுமா?இவை அனைத்தும் தற்போது முன்னிற்கும் முக்கிய கேள்விகள்.

 கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தின் நடுத்தர வர்க்க மக்கள் அரசியல் ரீதியாக பல மாறுதல்களுக்கு உட்பட்டு வந்துள்ளனர்.அதிமுக,திமுக இரு கட்சிகளும் தனியார்மய தாராளமய கொள்கைகளை பின்பற்றிய நிலையில் சமூக அக்கறை குறைந்து அதீத நுகர்வு கலாச்சாரம்,சுயநலம் அதிகரித்துள்ளது.திராவிட இயக்க ஆரம்ப காலங்களில் அந்த இயக்க வளர்ச்சிக்கு ஆதரவு தளமாக  இருந்த நடுத்தர வர்க்கப் பிரிவினர் இன்று இந்துத்துவ வகையிலான ஆன்மிக நாட்டம் கொண்டவர்களாக மாறுவது பெரிய பின்னடைவு.இதற்கும் திராவிட கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.

 வர்ணாசிரமம், சாதிய ஒடுக்குமுறை,தீண்டாமை  உள்ளிட்ட சமூக கொடுமைகளை களைவதற்கு திராவிட இயக்க முன்னோடிகள் கொண்டிருந்த உறுதிப்பாடு தற்போதைய திராவிட கட்சிகளிடம் இருக்கிறதா?பெண்ணடிமைத்தனம் ஒழித்திட சுயமரியாதை-சமத்துவ இயக்கம் கொண்டிருந்த அக்கறை திராவிட கட்சிகளிடம் இருக்கிறதா? இவ்வாறு இன்றைய நிலைப்பற்றி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

தொடரும் மக்களின் தேடல் 

திராவிட இயக்கம் பல உருமாற்றங்களை சந்தித்து தற்போதைய கட்டத்திற்கு வந்துள்ளது.

  • அரசு நிர்வாகம் மற்றும் கல்வித்துறைகளில் பிராமண மேலாதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் எழுந்த நீதிக்கட்சி,
  • சமூக தளத்தில் அந்த மேலாதிக்கத்தை ஒழிக்க எழுந்த பகுத்தறிவு-சுயமரியாதை இயக்கம்,
  • அரசியல் தளத்தில் நுழைந்து, மாநில அதிகாரத்தைக் கொண்டு பிற்பட்டோர் நலன் காக்க அரசியல் இயக்கமாக வடிவெடுத்த திமுக,
  • அதிகாரப் போட்டி முன்னுக்கு வந்த நிலையில் போட்டியாளராக நுழைந்த அதிமுக
  • அதிகாரத்திற்கான போட்டாபோட்டியில் வெகு மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள சாதாரண மக்களுக்கான ஏராளமான  நல திட்டங்கள்
  • பணபலம்,அதிகார பலம் கொண்டு தேர்தல் வெற்றியே இலட்சியம் என செயல்படுவது.

இவ்வாறான வளர்ச்சியில்தான் தற்போதைய கட்டத்திற்கு திராவிட இயக்கம் வந்துள்ளது. இந்த நீண்ட வரலாற்றில், திராவிட இயக்க இலக்குகளாக முன்வைக்கப்பட்ட இலக்குகள் அனைத்தையும் அடைவதற்கான எதிர்காலப்பார்வை முனை மழுங்கிப் போனது;பதவி,அதிகாரம்,சுயநலம் முக்கியமானதாக முன்னிற்கிறது.

 மக்களும் இந்த உண்மைகளை உணர்ந்து வந்துள்ளனர்.1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி காலத்திலிருந்தே சமத்துவம், சுயமரியாதை உள்ளிட்ட கொள்கைகளுக்கு திராவிட கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை மக்கள் உணரத் துவங்கினர்.இதனால்தான் 1989 முதல் தேர்தல்களில்  அதிமுக,திமுக என  மாறி மாறி மக்கள் தேர்வு செய்தனர். ‘எது குறைந்த தீமை’ என்ற முனையிலிருந்து தங்கள் தேர்வை அமைத்துக் கொண்டு வந்துள்ளனர். எந்த கட்சி தேவை என்பதை விட எது தேவையில்லை என்று மக்கள் முடிவெடுத்து வந்துள்ளனர்.மக்களுக்கான உண்மையான மாற்று தேவை என்கிற தேடலின் வெளிப்பாடாகவே இந்த எதிர்மறையான தேர்வு நிகழ்ந்து வந்துள்ளது.மக்களின் இந்த தேடல் தொடரும். 

 துவக்க காலத்திலிருந்தே ஒரு அடிப்படையான,ஆழமான குறைபாடு திராவிட கட்சிகளிடம் இருந்து  வந்துள்ளது.இந்திய அளவில் பெரும் கார்ப்பரேட்,நிலவுடைமை சக்திகள் மற்றும் பன்னாட்டு பெரு மூலதன சக்திகளே மத்திய அதிகாரத்தில் இருந்து வந்துள்ளன.அடித்தட்டு மக்களை வாட்டிவதைக்கும் இந்த சக்திகளை எதிர்கொள்வதற்கு,எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான உறுதியான திட்டம் திராவிட இயக்க கட்சிகளிடம் இல்லை.மாறாக அவர்களோடு சமரசம் செய்து கொள்வது,அந்த சக்திகளின் ஒரு பிரிவாக உள்ள பிரதேச,மாநில ,பெரிய முதலாளிகள் மற்றும் நிலவுடைமை சக்திகளின் பிரதிநிதிகளாக செயல்படுவது என்ற பாதையில்தான் திராவிட கட்சிகள் பயணித்து வருகின்றன.

 தற்போது திராவிட மாடல் என்று பெரிதாக பேசப்பட்டாலும் மேற்கண்ட குறைபாடு உள்ளவரை பெரிய மாற்றம் எதுவும் திராவிட கட்சிகளிடம் ஏற்படாது.தமிழகத்தில் பெருவாரியான உழைக்கும் மக்கள் தங்களுக்கான மாற்றை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.இதற்கு தமிழகத்தில் உள்ள ஜனநாயக இடதுசாரி சக்திகள் சரியான திட்டத்தையும் வியுகத்தையும் உருவாக்கிட வேண்டும்.திராவிட இயக்கம் செய்த சில சாதகமான பணிகளையும் துடைத்தெறிய ஆர்எஸ்எஸ்-பாஜக சக்திகள் முயற்சிக்கிற இன்றைய சூழலில் இது அவசியம்.



One response to “திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !”

  1. முதலாம் நெல் மலர் உலகமுதல்வண் Avatar
    முதலாம் நெல் மலர் உலகமுதல்வண்

    சிறப்பான திறனாய்வு நன்றி வாழ்த்துக்கள்

    Like

Leave a comment