மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலும் ஸ்தாபனமும்


  • . வாசுகி

 கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை ஸ்தாபனம் என்பது தனித்துப் பார்க்க இயலாதது. கட்சியின் அரசியல் நோக்கத்திலிருந்து பிரித்து பார்க்கக் கூடாதது. ஜோசப் ஸ்டாலின் அவர்கள், “சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கி, கூரை மேல் நின்று அதை கூவினால் போதும்; அதை தீர்மானமாக இயற்றி ஏகமனதாக நிறைவேற்றினால் போதும்; வெற்றி தானாக வந்து விடும் என சிலர் நினைக்கிறார்கள்…. வெற்றி பொதுவாக தானாக வராது; அதனை அடைய வேண்டும்….. தீர்மானம் போடுவது வெற்றி அடையும் விருப்பத்தை காட்டுகிறதே தவிர, அதுவே வெற்றி அல்ல… சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கிய பின், அதனை நடைமுறைப்படுத்த ஸ்தாபன ரீதியாக போராட வேண்டும்…. அதாவது சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கிய பின், அதன் தலைவிதியை, வெற்றி தோல்வியை, ஸ்தாபனமே தீர்மானிக்கிறது” என்கிறார்.

 அரசியல் நோக்கமும்  ஸ்தாபனமும் கம்யூனிச இயக்கத்தின் இரு கால்களைப் போல… இரண்டும் ஒரே திசையில் ஒத்திசைந்து  பயணிப்பது முக்கியம்.

 எனவேதான், அகில இந்திய மாநாட்டில், அரசியல் ஸ்தாபன அறிக்கை என்ற பெயரிலேயே ஸ்தாபன அறிக்கை வைக்கப்படுகிறது. சென்ற மாநாட்டு அரசியல் நடைமுறை உத்தி பற்றிய பரிசீலனை, கட்சி அமைப்பு, வர்க்க வெகுஜன அமைப்புகள் என மூன்று பகுதிகள் இதில் இடம்பெறும்.

இடது ஜனநாயக அணி

1978இல் 10வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் சூழல் விவாதிக்கப்பட்டது. அதுவரை காங்கிரஸ் என்ற  பெரு முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதி மட்டுமே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்திய சூழலில்,  காங்கிரஸ் கட்சியை முறியடிப்பது;  அதன் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக, அனைத்துப் பகுதி மக்களையும் ஒருங்கிணைப்பது   என்பதே  அரசியல் நடைமுறை உத்தியின் சாராம்சமாக இருந்தது. ஆனால் 1978 மாநாட்டின்போது  ஜனதா கட்சி உருவாகி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பின்னணியில், காங்கிரஸ், ஜனதா கட்சி இரண்டுமே அடிப்படையில்  முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கொள்கைகளைக்  கடைப்பிடிக்கக் கூடிய கட்சிகள். எனவே இவற்றுக்கு மாற்று என்பது இதே கொள்கைகளை ஏற்ற இறக்கத்தில் கடைப்பிடிக்கும் இன்னொரு அணியாக இருக்க முடியாது.  இந்தக் கொள்கைகளுக்கு  முற்றிலும் மாறாக,  மக்களுக்கான ஒரு திட்டத்தை  உருவாக்குவதும், அந்த திட்டத்தின் அடிப்படையில்  அணி சேர்க்கையைக் கட்டமைப்பதும்  தேவை என்ற புரிதலோடு, இடது ஜனநாயக அணியைக் கட்டமைப்பது என்ற நிலைபாடு எடுக்கப்பட்டது. இதன் வளர்ச்சி மக்கள் ஜனநாயக அணி கட்டமைக்கப்பட உதவும். இதில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள், சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதியினர் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. இவர்களுக்கு என்று ஒரு வர்க்க அமைப்போ, வெகுமக்கள் அமைப்போ உருவாக்கப்பட்டால்தான் அணிதிரட்ட முடியும்.

எனவே 1980களுக்கு பிறகு பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அரசியல் நோக்கத்திற்கு ஏதுவாக கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கமைக்கவே, சால்கியா பிளீனம் நடத்தப்பட்டது. அதே போல், மீண்டும் 20வது மாநாட்டில், நவீன தாராளமய கொள்கை அமலாக்கத்துக்குப் பின், கட்சி உருவாக்கிய அரசியல் நடைமுறை உத்திகள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, இடது ஜனநாயக அணியின் முக்கியத்துவம் மீட்டெடுக்கப்பட்ட பின், அதற்கேற்ப ஸ்தாபனத்தை ஒழுங்கமைக்க, கொல்கத்தா பிளீனம் நடத்தப்பட்டது. இருப்பினும், பொதுவாக இடது ஜனநாயக அணியை கட்டமைப்பதற்கான துவக்க கட்ட வேலைகள் கூட செய்யப்படவில்லை என்பதை மாநாட்டு அறிக்கைகள் சுய விமர்சனமாக முன்வைக்கின்றன. அதிகரித்து வரும் நாடாளுமன்ற வாதமும், சித்தாந்தப் பிடிப்பில் ஏற்பட்டுவரும் சரிவும், இதற்குக் காரணம் என கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டியது இப்போதும் தொடர்கிறது. இதில் ஒரு முறிப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

ஸ்தாபனம் என்பது அரசியல் நிலைபாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பேராயுதம். மையப்படுத்தப்பட்ட கட்சி கமிட்டி (மத்திய குழு), மையப்படுத்தப்பட்ட கட்சியின் ஏடு, தொழில் முறை புரட்சியாளர்கள், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு, வர்க்க வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது, ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஏதேனும் ஒரு வெகுஜன அமைப்பில் பணியாற்றுவது, கட்சி திட்டத்தை ஏற்பது உள்ளிட்ட அம்சங்களை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். கட்சி உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஸ்தாபன கடமைகளை நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்த பின்னரே  அவர்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை இதனுடன் இணைத்துப் பார்த்தால், இதனால்  உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து விடும்  என்பதை விட, கட்சி உறுப்பினர்களின் தரத்தை கெட்டிப்படுத்தி கட்சி விரிவாக்கத்திற்கு இது  வழி வகுக்கும் என்கிற புரிதல் தெளிவாக முன்னுக்கு வரும்.

வர்க்கங்களையும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரையும் அவரவருக்கான அமைப்பில் திரட்டி அரசியல்படுத்த வேண்டும் என்பது இடது ஜனநாயக அணியோடும், வர்க்க சேர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்துவதோடும்  இணைந்தது என்கிற வெளிச்சத்தில், வர்க்க வெகுஜன அமைப்புகளின் மீதான கண்ணோட்டம் மாற வேண்டும். இந்த அமைப்புகளில் பணியாற்றும் கம்யூனிஸ்டுகள், இந்த அரசியல் ஸ்தாபன நோக்கத்தை புரிந்துகொண்டு  அதில் செயலாற்ற வேண்டும். தான் பொறுப்பு வகிக்கும் வர்க்க வெகுஜன அமைப்புகளில் அப்பொறுப்புகளைத்  திறம்பட நிறைவேற்றுவதோடு, கம்யூனிஸ்ட் அல்லாதவர்களின் கடமை முடிந்து போகலாம். ஆனால் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை, பொறுப்பைத் திறம்பட நிறைவேற்றுவது என்பதோடு சேர்த்து, அதில் வரும் வெகு மக்களை ஸ்தாபனப்படுத்துவதும், அரசியல்படுத்துவதும், இடதுசாரி அரசியலுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதும், தொடர்புகளைப் பயன்படுத்தி கட்சியை விரிவாக்கம் செய்வதும், கட்சியின் முடிவுகளை அந்த அரங்கின் வெகுஜனத் தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பொருந்தக் கூடிய விதத்தில் நிறைவேற்றுவதும் என கடமைகளின் பட்டியல் நீண்டது. வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளையும், அல்லது அதில் பணியாற்றக்கூடிய கட்சி ஊழியர்களையும் இரண்டாம் நிலையில் வைப்பது அரசியல் ஸ்தாபன புரிதல் பற்றாக்குறையின் வெளிப்பாடே.

23வது மாநாட்டு முடிவுகள்

இருபத்தி மூன்றாவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு, இடது ஜனநாயக அணியை கட்டமைப்பதற்கான பணிகள், சாதியம், ஆணாதிக்கம், மதவெறி அனைத்தின் கலவையுமான இந்துத்துவா  சித்தாந்தத்தை முறியடிப்பது, அதை முன்வைக்கும் சங் பரிவாரங்களின் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் எதிர்கொள்வது, தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது, இதற்குத் தேவைப்படும் கூட்டு செயல்பாடுகள், கூட்டு மேடைகள், பரந்த மேடைகள் உள்ளிட்ட ஸ்தாபன பணிகளில் கவனம் செலுத்துவது, இந்தப் புரிதலுடன் ஊழியர்களை வளர்த்தெடுத்து செயல்பட வைப்பது, அதில் இளைஞர்கள் பெண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது, மக்களோடு  உயிர்ப்புடன் கூடிய தொடர்பு போன்றவற்றை ஸ்தாபன கடமைகளாக வரையறுத்துள்ளது. இதை செய்யக்கூடிய திறன்  படைத்தவையாக மாநிலக்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு, கிளை மாற வேண்டும். அனைத்து மட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் இதை நோக்கியே தங்களது வேலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும். வேலை முறையில் மாற்றம் என்பது இதுதான்.

உதாரணமாக, ஸ்தல போராட்டங்கள் அல்லது உள்ளூர் மட்ட போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது பிளீனம் மற்றும் நடந்துமுடிந்த மாநாடுகளின்  அறிவுறுத்தலாக உள்ளது. அகில இந்திய மாநாடு  ஸ்தல போராட்டங்கள் குறித்து ஏன் பேசுகிறது, எந்த அடிப்படையில் பேசுகிறது என்று பார்த்தால், மாஸ் லைன் என்று சொல்லப்படுகிற மக்களோடு உயிர்ப்பான தொடர்பு என்பதை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூர் மட்ட  இயக்கங்களே பெரும் வாய்ப்பு என்பதுதான். எனவே நாம் நடத்தும் ஸ்தல போராட்டங்களின் மூலம் உள்ளூர் மக்களோடு கட்சிக்கு, வர்க்க வெகுமக்கள் அமைப்புகளுக்கு, தொடர்பு பலப்பட்டு, அது இடதுசாரி அரசியலாக, கருத்தியலாக, அமைப்புகளாக பரிணமிக்க வேண்டும். அரசியல் நோக்கத்தை கணக்கில் எடுக்காமல், போராட்டங்கள் நடத்தி மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதோடு நிறுத்திவிட்டால் கம்யூனிஸ்ட் பணி முழுமை பெறாது, அரசியல் நோக்கம் ஈடேறாது. இத்தகைய போராட்டங்கள் ஒரு சில கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை நீடித்து   நடத்தப்பட வேண்டும். உள்ளூர் மட்ட போராட்டங்கள் நீடித்து நடக்காமல் போவதற்கு காரணங்களாக, அரசியல், பொருளாதார, சமூக, ஆதிக்க சக்திகளுடன் மோதல்கள் கடுமையாக வரும் சூழல், நாடாளுமன்ற வாதம் போன்றவற்றை அகில இந்திய மாநாடு சுட்டிக்காட்டுகிறது. இவற்றை எதிர்கொண்டு  போராட்டங்களை உத்தரவாதப்படுத்துவது மேல் கமிட்டிகளின் பொறுப்பாகும்.

மற்றோர் உதாரணம் கூட்டு இயக்கங்கள், கூட்டு மேடைகள் குறித்ததாகும். இதன் அரசியல் நோக்கம் என்ன? பல்வேறு கட்சிகளை அமைப்புகளை திரட்டும் போது, கோரிக்கைகளுக்கு வலு கிடைக்கும், இந்த அமைப்புகளுக்கு பின்னாலுள்ள மக்களுக்கு செய்தி போகும் என்பது ஒருபுறம். இதன் மறுபக்கம் அதுவும் முக்கியமான பக்கம் என்பது, அவர்களிடம் நம்முடைய மாற்று அரசியலையும் கருத்துக்களையும் முன் வைப்பதற்கும், ஈர்ப்பதற்குமான வாய்ப்பு என்பதாகும். எனவே, கூட்டு இயக்கங்கள் நடந்த பிறகு, அதன் மீதான பரிசீலனையில், நமக்கு அரசியல், ஸ்தாபன ரீதியாக கிடைத்த பலன்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் இந்துத்துவ சக்திகளின் சவால்களை சந்திப்பதற்கு பன்முக செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. பல்வேறு வாழ்வுரிமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களை அணிதிரட்டி ஒன்றுபட்ட போராட்டம் நடத்தினாலே மதவெறி செயல்பாடுகளை பின்னுக்கு தள்ளி விட முடியும் எனக் கருதிவிட முடியாது. இந்துத்துவ சக்திகளுடைய தொடர்ச்சியான கருத்தியல் பிரச்சாரம் மக்களின் மன உணர்வுகளை மாற்றியமைக்கிறது. வெற்றிகரமாக ஓராண்டுக்கும் மேல் நடந்த விவசாயிகளுடைய மகத்தான போராட்டத்திற்கு பின்பும், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அதிக வாக்கு சதவீதத்தோடு ஆட்சியைக் கைப்பற்றியது இதற்கோர் எடுத்துக்காட்டு. தேர்தல் நேரத்தில் பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் போது மட்டும் மதவெறி சித்தாந்தம் குறித்து பிரச்சாரம் செய்வது போதாது. கருத்தியல் தளத்தில் வர்க்க ஒற்றுமைக்கும் சமூக நீதிக்குமான தொடர் பிரச்சாரம் நிகழ்த்தப்பட வேண்டும்.

கட்சியின் முக்கிய ஸ்தாபன கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு இன்றைக்கு பலராலும் விமர்சிக்கப்படும்  அம்சமாக உள்ளது. கட்சிக் கட்டுப்பாடு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதும் கட்சியின் அரசியல் நோக்கோடும், இலக்கோடும் இணைந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு,  ஏகபோக எதிர்ப்பு  என்ற அம்சங்களை உள்ளடக்கிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை  இலக்காக முன்வைக்கும்போது, பல்வேறு சவால்களை, அடக்குமுறைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் விவாதத்தில்  மிக உயர்ந்த ஜனநாயகமும், முடிவெடுத்த பின் அதை அமல்படுத்துவதில் மிக உயர்ந்த கட்டுப்பாடும் தேவைப்படும்.

கட்சித் திட்டம் முன்வைக்கும் இலக்கை நோக்கிய பயணம் முன்னேறக் கூடிய விதத்திலேயே அரசியல் நடைமுறை உத்தி உருவாக்கப்படுகிறது. இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்பது அரசியல் நடைமுறை உத்தியின்  ஒரு பகுதி, மையப்பகுதி. அதை விட்டுவிட்டு அகில இந்திய மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தியை வெற்றிகரமாக நிறைவேற்றி விட முடியாது. இந்த ஒட்டுமொத்த புரிதலோடு கட்சி ஸ்தாபனம் முழுமையும் களத்தில் இறங்கினால், முன்னேற்றம் நிச்சயமாக உறுதிப்படுத்தப்படும். அனைத்து கட்சி உறுப்பினர்களும் கட்சியின் திட்டத்தைப்  புரிந்து கொண்டவர்களாக,  அதை ஒட்டிய மாநாட்டு கடமைகள்,  மத்திய, மாநிலக் குழு  முடிவுகளை  அடிப்படையாகக் கொண்டு, தம் அன்றாட பணிகளை அமைத்துக் கொள்பவர்களாக உருவாக்கப்படவேண்டும். கட்சி உறுப்பினர்கள்  சிறு சிறு குழுக்களாக இருந்தால் தான்,  அன்றாட வேலைகளை பங்கீடு செய்வதும், கண்காணிப்பதும் சாத்தியம் என்கிற அடிப்படையிலேயே கிளைகள் உருவாக்கப்படுகின்றன. கிளைகளே கூடா விட்டால்  இந்த அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகிறது. இந்தப் பின்னணியில் மாநாட்டு ஸ்தாபன முடிவுகளை, கட்சியின் அரசியல் நோக்கத்தோடு இணைத்துப் பார்க்கக்கூடிய புரிதலை, கட்சி அணிகள் மத்தியில் உருவாக்குவதே, பிரதான கடமையாக முன்னுக்கு வருகிறது.



Leave a comment