மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சங் பரிவாரத்தின் உத்திகள்!


ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர், சிபிஐ(எம்)

(ஆர்.எஸ்.எஸ். செயல்படுத்தி வரும் உத்திகளை எதிர்கொள்வது தொடர்பாக கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட கட்சி முன்னணி தோழர்கள் பங்கேற்ற பயிற்சி பட்டறையில் முன்வைக்கப்பட்ட குறிப்பின் சில பகுதிகள் இங்கு கட்டுரை வடிவில் தரப்பட்டுள்ளது – ஆசிரியர் குழு)

 “இந்துத்துவா சித்தாந்தம் பழமையை மீட்டெடுக்கும் வாதத்தை முன்னெடுப்பதாக இருப்பதோடு, இந்து ராஷ்ட்ராவை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியாவின் பன்முகத்தன்மை மிக்க கலாச்சாரத்தை மறுதலிப்பதாகவும் இருக்கிறது” என நமது கட்சித் திட்டம் குறிப்பிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார அமைப்புகள் தொடக்க காலத்தில் இருந்தே இந்துத்துவா – இந்து ராஷ்ட்டிராவை நோக்கிய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2014 ஆம் ஆண்டு பாஜக ஒன்றிய ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய இந்த நோக்கத்தில் வேகமாக செயல்படுகின்றனர்.

கடந்த எட்டு ஆண்டு காலமாக “சமூக, இன பிளவுகளைத் தாண்டி, அனைத்தையும் உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க இந்து அடையாளத்தை உருவாக்குவதில் கணிசமான வெற்றியை பாஜக பெற்றுள்ளது. அதோடு சேர்ந்து நுண்ணிய நிலையில் (Micro Level) சாதியத் திரட்டலையும் அது மேற்கொள்கிறது” என்று 23 வது அகில இந்திய மாநாட்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், “இந்துத்துவாவையும் அதன் பல்வேறு வகையான வகுப்புவாத அமைப்புகளையும் எதிர்த்துப் போராடுவதென்பதை அரசியல், தத்துவம், கலாச்சாரம் மற்றும் சமூகத் தளங்களில் நீடித்த வகையில் மேற்கொள்ள வேண்டும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை வலுப்படுத்த, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனவும் அது குறிப்பிடுகிறது.

கட்சித்திட்டம் மற்றும் 23வது கட்சி காங்கிரஸ் சுட்டிக்காட்டிய அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு கோவை மற்றும் திருப்பூரில் பாஜக பின்பற்றிவரும் சில உத்திகளை காண்போம்.

கோவை – திருப்பூரில் எதிர்ப்பு உணர்வும், வகுப்புவாதமும்

கோவை மாவட்டம் தொழில்கள் நிறைந்த பகுதி. பஞ்சாலை மற்றும் இன்ஜினியரிங் துறையில் சில கார்ப்பரேட் நிறுவனங்களை தவிர்த்து பெரும்பான்மையாக சிறு-குறு தொழில் நிறுவனங்களே இயங்கி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1,200 ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. கோவை, திருப்பூருக்கு தேவையான முக்கிய கச்சா பொருட்களில் ஒன்று பருத்தி. பருத்தி பதுக்கலுக்கு சாதகமான கொள்கைகளால் நூல் விலை சென்ற 2020 அக்டோபர் மாதம் கிலோவுக்கு ரூ.237 என்பதிலிருந்து, 2022 மே மாதம் ரூ.474 என இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பூரில் ஜவுளி, விசைத்தறி மற்றும்  பின்னலாடைத் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.

மூலதனம் சுருங்குவதாலும், வங்கிகளிலிருந்து கடன் பெற இயலாததாலும் சிறு – குறு நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன. தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்த ஆர்டர்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட நாடுகள் ஆர்டர்களை பங்களாதேஷூக்கும், வியட்நாமுக்கும் மாற்றி கொடுக்கின்றன. உள்நாட்டில் பஞ்சு விலையை சீராக்கவும், ஜவுளித் துறையை தடங்கலின்றிச் செயல்பட வைப்பதற்கும் முதலாளிகள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் தெரிவித்தும் அரசின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை.

பொதுத்துறை நிறுவனமான இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ) விவசாயிகளிடமிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்ய ஜவுளித் துறையினர் ஒன்றிய அரசிடம் கேட்டபோது,  துறைக்கான அமைச்சர் பியூஸ் கோயல், “அரசை தலையிடச் சொல்லி யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சந்தை சக்திகள் சுதந்திரமாக செயல்படட்டும்” என (19.11.2021) கூறிவிட்டார்.

கடந்த காலத்தில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டத்தை நடத்தினர். அதன் மூலம் சிறு குறுந்தொழில்முனைவோர் மத்தியில் ஆதரவை பெற்றனர். ஆனால், இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மகா யாகம் ஒன்றை நடத்தினர். யாகம் நடத்துவதன் வழியாக, அரசியல் சார்ந்த பிரச்சனைக்கு, நம்பிக்கை சார்ந்த ‘தீர்வை’ முன்னிறுத்துகின்றனர்.

1984களில் திருப்பூர் மாவட்டத்தில், பஞ்சப்படி கோரி வீறுகொண்ட வேலை நிறுத்த போராட்டம் நடந்த போது, அதனை முறியடிப்பதற்காக, முதலாளிகளோடு கைகோர்த்து, சங் பரிவாரத்தினர் ஆலைகளை இயக்க முயன்றனர். ஆனால், ஒன்றுபட்ட தொழிலாளர் படையின் எதிர்ப்பின் முன்னால் சரணடைந்து ஓட்டம் எடுத்தனர். இப்போதும், இந்தப் பகுதிகளில், தொழில் மற்றும் தொழிலாளர் நலன் காக்க இடதுசாரி இயக்கமும், தொழிற்சங்க இயக்கமும் தொடர்ந்து வலுவாக இயங்குவதற்கான தேவை உள்ளது. இந்த சூழலில் பாஜகவும், சங் பரிவாரமும் பலமடைந்தால், அது இடதுசாரி இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் பலவீனப்படுத்தும்.

கோவை, திருப்பூரில் ஜவுளித் தொழிலில் மட்டும் நெருக்கடி ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள இஞ்சினியரிங் தொழில்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு/குறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நெருக்கடியில் உள்ளன. கடந்த 20.12.2021 அன்று அகில இந்திய சிறு – குறு நிறுவனங்களின் 170 கூட்டமைப்புகள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தின. இப்போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கச்சா பொருட்கள் விலையேற்றம் என அடுத்தடுத்து நெருக்கடியை உருவாக்கும் கொள்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்கிறது. இருப்பினும், அண்மையில் நடைபெற்ற திருப்பூர் மற்றும் கோவை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக கடந்த காலத்தைவிட சற்று கூடுதலாகவே வாக்குகளை பெற்றுள்ளது. தொழில்கள் பாதிப்பதற்கும், தொழிலாளர்களின் வேலையிழப்பிற்கும் காரணம்  பாஜக அரசின் கடைப்பிடிக்கும் கொள்கைகளே என்ற போதிலும் கூட, பாஜகவிற்கு வாக்கு அதிகமாவது வகுப்புவாத உணர்வு வலுப்படுவதை காட்டுகிறது.

வகுப்புவாதத்தின் பல முகங்கள்

வகுப்புவாதத்திற்கு முக்கியக் காரணம் மதம்தான் என சிலர் கருதுகிறார்கள். அப்படி அல்ல. மதநம்பிக்கையும் மதத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அனைவரும் வகுப்புவாதிகளாக மாறுவதில்லை. மதநம்பிக்கை கொண்ட மக்கள் பலர் இதர மதத்தைச் சார்ந்தவர்களோடு சகோதரத்துவத்தோடும் நேயத்தோடும் வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். வகுப்புவாதத்திற்கு மதம் அடிப்படை காரணம் அல்ல. அதே நேரத்தில் மத நம்பிக்கையாளர்களைத்தான் வகுப்புவாதிகளாக மாற்றுகிறார்கள்.

வகுப்புவாத உணர்வை உருவாக்கும் நடைமுறைக்கு பேராசிரியர் கே.என்.பணிக்கர் ஒரு கேரளப் பெண்மணியை உதாரணம் காட்டி தனது நூலில் குறிப்பிடுகிறார். (மதச்சார்பற்ற நடவடிக்கைக்கான கையேடு)

”அந்தப் பெண்மணிக்கு ராமர் மீது பக்தி உண்டு. தினமும் கோவிலுக்கு செல்வதில்லை என்றாலும் ராமாயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்களை தினமும் காலையில் படிக்கும் பழக்கமுண்டு, இப்படிப் பட்டவர் அயோத்தியில் ராமர் கோவிலை பாஜக மேற்கொண்டபோது அதன் ஆதரவாளராக மாறினார்.

அயோத்தியா இயக்கத்தை எதிர்க்கும் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது அந்தப் பெண்மணிக்கு பகையுணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். சாதாரண பக்தி/மத உணர்வு வகுப்புவாத உணர்வாக மாற்றப்பட்டது.

எனவே வகுப்புவாத உணர்வு நிலைக்கு கொண்டு வர மதநம்பிக்கை பயன்படுத்தப்படுகிறது. சாதாரண மக்களிடம் இந்த வகுப்புவாத உணர்வை உருவாக்கிட ராமர் கோவில் பிரச்சனை, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் நடத்துவது, கிறிஸ்தவர்கள் மீது பொய்ப் பிரச்சாரம் செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.

வகுப்புவாத உணர்வினை உருவாக்கிய பிறகு, வதந்தி மற்றும் பொய்களை கட்டமைத்து, மத மோதல்களையும், கலவரங்களையும் உருவாக்குகிறார்கள். இதுபோன்ற வன்முறைகள் அவர்களின் அடுத்தகட்ட பாய்ச்சல் வேக வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்கின்றன.

கோவை – திருப்பூரில் சங் பரிவார அமைப்புகள்:

1940களில் தமிழகத்தில் கன்னியாகுமரி, சேலம், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். சாகாக்கள் நடக்கத் துவங்கின. 1949 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவானது. கோவை மற்றும் திருப்பூர் என்ற இரண்டு வருவாய் மாவட்டங்களை மாநில அரசு 2009ல் தான் உருவாக்கியது.

இந்து வியாபாரிகள் சங்கம்

கோவை நகரில் உள்ள திருப்பூர் குமரன் மார்க்கெட்டில் கடன் வசூல் செய்வதில் வியாபாரிகளுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது. கடன் கொடுத்தல், வசூலில் ஏற்பட்ட முரண்பாட்டை இந்து வியாபாரிகள், இஸ்லாமிய வியாபாரிகளுக்கிடையிலான முரண்பாடாக மாற்றி இந்து முன்னணி அங்கே இந்து வியாபாரிகள் சங்கத்தை துவக்கியது. மத ரீதியில் துவங்கப்பட்ட முதல் சங்கம் இது ஆகும்.

கோவையில் ஜவுளி விற்பனை துறையிலும், எலக்ட்ரானிக் துறையிலும் இஸ்லாமிய வியாபாரிகளுக்கும் மார்வாடிகளுக்கும் போட்டி ஏற்பட்டது. பெரியார் திராவிட கழகம் சார்பில் மார்வாடிகளை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என துண்டு பிரசுரம் வெளியிட்டனர். இந்து முன்னணி மார்வாடிகளுக்கு ஆதரவாக நின்றது. மார்வாடிகளும் இந்து முன்னணிக்கு நிதி உதவி செய்தார்கள். இச்சூழலில் கோவை நகரில் 1981ல் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் திருக்கோவிலூர் சுந்தரம் நபிகள் நாயகத்தை தாக்கி பேசியிருக்கிறார். அவரை இஸ்லாமிய பழமைவாதிகள் தாக்கியிருக்கிறார்கள். அடுத்தடுத்து திருக்கோவிலூர் சுந்தரம், ராமகோபாலன் போன்றோரின் வெறுப்பு பேச்சு நகரில் பதட்டத்தை உருவாக்கியது. 1982இல் ஹக்கிம் என்ற மாணவர் திராவிடர் கழக கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போது படுகொலை செய்யப்பட்டார்.

கலவரமும், குண்டு வெடிப்பும்

1997ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று கான்ஸ்டபிள் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பதட்டம் விசிறிவிடப்பட்டது. நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கலவரம் வெடித்தது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு, படுகொலையில் 19 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கும் செல்வராஜ் படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

1998 பிப்ரவரி மாதத்தில், கோவைக்கு அத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தார். அப்போது அல்-உம்மா பயங்கரவாதிகள் ரயில் நிலையத்திலும், மருத்துவமனையிலும், மக்கள் கூடும் இடங்களிலும் குண்டு வைத்தார்கள். இதிலும் அப்பாவி மக்களே கொல்லப்பட்டார்கள். மேலும் இந்த சம்பவம் இந்து முன்னணியின் கொலைபாதகங்களுக்கு நியாயம் கற்பிக்க உதவியது. இஸ்லாமியர் மீதான வெறுப்பு பிரச்சாரமும், தாக்குதல்களும் அதிகரித்தன.

திருப்பூர் தொழில்முனைவோர் மத்தியில்

திருப்பூரில் தொழில் முனைவோர் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்காக சங் பரிவாரம் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியமானவை. 2011 ஆம் ஆண்டு சாய ஆலைகளுக்கு உயர்நீதிமன்றம் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் பிரச்சனையில் முழுத் தடை விதித்தது. இதனால் மொத்த பின்னலாடை தொழிலும் நின்று போகும் நிலை ஏற்பட்டது. அப்போது “தொழில் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் ஒரு அமைப்பை இந்து முன்னணியினர் உருவாக்கினர். ஏற்கனவே செயல்பட்டு வரும் வழக்கமான தொழில் அமைப்புகளைத் தாண்டி இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். சாயஆலைப் பிரச்சனை, நூல் விலைப் பிரச்சனை ஆகியவற்றில் பிரம்மாண்ட இயக்கங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் தேர்தல் வந்தபோது ஆர்எஸ்எஸ் குழுவினர் மாற்றத்துக்கான அணி என்ற பெயரில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இந்த வெற்றியை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் கருத்தியலைப் பரப்ப முயற்சி மேற்கொண்டு, அதில் கணிசமான அளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஆடிட்டர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தியும், “ஸ்ரீபுரம் அறக்கட்டளை” போன்ற தன்னார்வ அமைப்புகளை உருவாக்கியும் இயங்குகிறார்கள். கடந்த காலத்தில் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் கூட்டாக சேர்ந்து அரசின் கொள்கை சார்ந்த பிரச்சனைகளில் கருத்து தெரிவிப்பது, இயக்கம் நடத்துவது ஆகியவற்றில் புகுந்து, சீர்குலைக்கும் வேலையை தற்போது நுட்பமாக செய்து வருகின்றனர். சமீபத்தில் தொழிற்சங்கங்கள் நடத்திய அகில இந்திய வேலை நிறுத்தம் மோசமாக சீர்குலைக்கப்பட்டது.

கல்வித்தளத்தில்

பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் தற்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கு மாறிவிட்டன. இப்பள்ளி நிர்வாகங்களே ஆர்.எஸ்.எஸ். மாணவர்களை திரட்டுவதற்கு உதவி செய்கின்றன. தற்போது கோவையில் சில அரசு பள்ளிகளிலும், பள்ளி மைதானங்களிலும் சாகாக்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

திருப்பூரில் ஜெய்வாபாய் அரசுப் பள்ளி தமிழகத்தில் 6ஆயிரம் மாணவிகள் படிக்கக்கூடிய பெரிய மாநகராட்சிப் பள்ளியாகும். அப்பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள்? என்ற பெரியாரின் புத்தகத்தை விநியோகித்ததை பிரச்சனை செய்தனர். அந்த சம்பவத்தில் இருந்து தொடர்ந்து இப்பள்ளியைக் குறி வைத்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மதமாற்றம் செய்வதாக சமீபத்தில் பிரச்சனையை தூண்டி சமூக ஊடகங்களில் பரப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்வித் துறை விசாரித்து அது உண்மையில்லை என்று கூறியது.

இந்து முன்னணியின் திட்டம்

இந்து முன்னணி அமைப்பு விநாயகர் சதுர்த்தி விழாவை நான்கு நாள் நிகழ்வாக நடத்துகிறது. இந்த நிகழ்வை பயன்படுத்தி உள்ளூர் குடியிருப்புகள் மட்டத்தில் மிக இளவயது (15 – 20 வயதுடையோர்) இளைஞர்களை அணிதிரட்டுவது நடந்து வருகிறது. இதில் வெளியூரில் இருந்து இங்கு வந்து குடியிருக்கும் சமூகங்களின் பாதுகாப்பின்மை உணர்வை பயன்படுத்தி, தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றனர்.

சிலைகளை ஆற்றில், குளத்தில் அல்லது கடலில் கரைக்கும் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தை இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மோதலை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

ஏன் விநாயகர் சதுர்த்தியை தேர்ந்தெடுத்தார்கள்?

தமிழகத்தில் இந்து மதத்தில் உள்ள சைவர்களும், வைணவர்களும் வெவ்வேறு கடவுள்களை வழிபடுகிறார்கள். இரண்டு பகுதிகளை சார்ந்தவர்களும் சங் பரிவார அமைப்புகளில் உறுப்பினர்களாக சேருகிறார்கள். சைவ, வைணவ அடையாளங்களுக்கு அப்பாலும், சாதி வேறுபாட்டிற்கு அப்பாலும் கிராமங்களிலும் நகரங்களிலும் விநாயகரை இந்துக்கள் வழிபடுகிறார்கள். எனவே, விநாயகரை கையில் எடுத்தால் சைவ, வைணவ வேறுபாட்டு பிரச்சனை வராது என்று ஆழமாக பரிசீலித்து முடிவெடுத்திருக்கிறார்கள்.

இ.மு. நிர்வாகிகளாக இருப்போர் கம்பெனி கொடுக்கல், வாங்கல் வரவு செலவு பிரச்சனைகள், நிலப் பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும், சட்டரீதியாக காவல் துறையை நாடி நீண்ட காலதாமதத்தைச் சந்திப்பதை விட, இவர்களிடம் போனால் விரைவில் பிரச்சனை முடியும் என்ற தொழில் செய்வோர் மனநிலையும் இ.மு.வுக்கு ஒரு பிடியை உருவாக்கி உள்ளது. இதனால் அவர்கள் பொருளாதார ஆதாயமும் அடைகின்றனர்.

யாகம் – நம்பிக்கை, வியாபாரம்:

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மகா யாகம் நடத்தப்பட்டதை முன்பே குறிப்பிட்டோம். அதில் மூட நம்பிக்கை மட்டுமல்லாது வியாபார நோக்கமும் இணைந்துள்ளது. திருப்பூரை அடுத்த  பொங்கலூரில் சோடஷ மகாலட்சுமி மகா யாகம் நடத்தி அதில் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டினார்கள். பிறகு யாகம் நடத்திய இடத்தை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சாகாக்கள்

கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 250 சாகாக்கள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சாகாக்கள் சில அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலும் தனியார் பள்ளி வளாகங்களில் நடந்து வருகின்றன. சங் பரிவார நடவடிக்கைகளில் இது முக்கியமானது. இதில் பயிற்சி பெறுபவர்களைத்தான் முழுநேர ஊழியர்களாக்குகிறார்கள். வெறுப்பு பிரச்சாரம் செய்வது, மத மோதலை உருவாக்குவது, சிறுபான்மை மக்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு வகுப்புவாத அரசியல் பயிற்சியோடு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் சாகா என்பது, கம்பு, வாள், குண்டெறிதல் போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது. உடற்பயிற்சி விளையாட்டுகள், வில்கள், அணிவகுப்புகள் போன்றவை மைதானங்களிலும் பிற பொது இடங்களிலும் நடத்தப்படுகின்றன. உடற்பயிற்சி என்கிற பெயரில்தான் இவை அனைத்தும் நடத்தப்படுகின்றன. ஒரு தீவிரவாத அணுகுமுறையையும், குடிமைச் சமூகத்தில் எவ்விதமான தாக்குதலையும், நடத்துவதற்கான மனநிலையையும் உருவாக்குவதே, இந்த நடவடிக்கைகளின் நோக்கம். இவை சிறுபான்மையினரின் மனதில் சந்தேகத்தையும் அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வுகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றன.

மதக்கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் முறை இதுதான்.

1. சிறுபான்மையினர் இந்த நாட்டுக்கு விசுவாசமான குடிமகன்கள் அல்ல என்று பிரச்சாரம் செய்து, பெரும்பான்மை சமூகத்தின் மத உணர்வைத் தூண்டுவது.

2. சிறுபான்மையினரின் எண்ணிக்கை கூடுகிறது, இந்துக்கள் எண்ணிக்கை குறைகிறது என்று தந்திரமாக பிரச்சாரம் செய்து பெரும்பான்மையினரிடம் அச்சத்தை ஆழமாக்குவது.

3. நிர்வாகத்தில் ஊடுருவி, ஆட்சிப் பணியிலும், காவல் பணியிலும் இருக்கும்  அதிகாரிகளுக்கு மதவாத கண்ணோட்டத்தை ஏற்படுத்தி, மதவாத அணுகுமுறையை மேற்கொள்ளத் தூண்டுவது.

4. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கத்தி, வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சியளிப்பது.

5. எந்த ஒரு சிறு சம்பவத்திற்கும், மதச்சாயம் பூசி, மத ரீதியிலான பிளவை அதிகரித்து, மத வெறுப்பு உணர்வுகளை ஆழமாக்குவது.

சாதி வாரியாக மக்களை திரட்டும் முயற்சி

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்புகளின் தலைமையில் பிராமணர்களே இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை மாற்றுவதற்காக சங் பரிவார அமைப்புகளின் தலைமை பொறுப்பில் பிராமணர் அல்லாதவர்களை திட்டமிட்டு கொண்டு வருகிறார்கள். எல்லா மாவட்டங்களிலும் இந்து முன்னணி அமைப்பிற்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பகுதியிலிருந்து தலைமைப் பொறுப்பிற்கு நியமனம் செய்கிறார்கள். மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பகுதியில் பிரதானமான சாதி எது என்று கண்டறிந்து, அம்மக்களை சாதி ரீதியில் திரட்டுவதை சங் பரிவார அமைப்புகள் அணுகுமுறையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.  கோவை மாவட்டத்தில் உள்ள தேவாங்க செட்டியார் சாதியில் உள்ள சில பிரமுகர்களை பிடித்து அவர்கள் மூலமாக அந்த சாதியில் உள்ள கணிசமான மக்களை சென்றடைந்துள்ளார்கள். இதே போல சாதிய பெருமித உணர்வைத் தூண்டிவிட்டு கவுண்டர் சமூகத்தினரிடம் கணிசமாக ஊடுருவி உள்ளனர். சாதிய அணி திரட்டலுக்காக சமூக ஊடகங்களை நுட்பமாகவும், திறம்படவும் பயன்படுத்துகின்றனர். கோவை, திருப்பூர் பகுதிகளில் அருந்ததியர் சமூக மக்களையும் தங்கள் வளையத்திற்குள் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடக வலிமை

வாட்சாப், சமூக ஊடகங்களை பாஜக திறமையாக பயன்படுத்துவதை அறிவோம். அத்துடன் பாரம்பரிய ஊடகங்களையும் அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். கோவை, திருப்பூர் இரண்டு மாவட்டங்களிலும் தினமலர் பத்திரிக்கை கூடுதலாக விற்பனையாகிறது. இந்த இதழில் பாஜகவுக்கு ஆதரவாகவும், இடதுசாரிகளுக்கு எதிராகவும் செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக கேரளாவில் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை பற்றி அங்குவரும் அவதூறுகளை அப்படியே தினமலர் பரப்புகிறது.

சங் பரிவார உத்திகளை எதிர்கொள்ள

                பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கமும், சங் பரிவார அமைப்புகளும் இந்துத்துவ வகுப்புவாத திட்டத்தை அமலாக்கிட அனைத்து வழிகளிலும் முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிகள் மேக்ரோ (நாடு தழுவிய அளவிலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலும்) மற்றும் மைக்ரோ (உள்ளூர் சமூக) அளவிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு தளத்திலும் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

மேக்ரோ அளவில்

நாடு தழுவிய அளவில் பாஜக ஒன்றிய அரசும், சங் பரிவாரமும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கிறது. (உ.ம்., குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோவில், அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம்). இதே போல மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு பிரச்சனைகளை கிளப்புகிறார்கள்.

நமது அரசமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக உள்ளடக்கத்திற்கு எதிராக இந்த செயல்பாடுகள் உள்ளன. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. இந்த திட்டங்களுக்கு எதிராக கட்சியும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எதிர் செயல்பாடுகளை கட்டமைக்க வேண்டும்.

மக்களிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் திட்டத்தை சுயேட்சையான முறையில் முன்னெடுப்பதுடன், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளோடு கைகோர்க்க வேண்டும்.

மைக்ரோ அளவில்

                வகுப்புவாத சக்திகள், தனிநபர்களை அணுகும் தன்மையோடு மைக்ரோ செயல்பாடுகளை வகுத்துக் கொண்டுள்ளார்கள். வெளிப்படையாகத் தெரியும் அரசியல் நிகழ்வுகளில் இருந்து இவை மாறுபட்டுள்ளன. அதிகம் வெளியே தெரிவதில்லை.

மதச் சார்பின்மைக்காக இந்தத் தளத்தில் நாம் மேற்கொள்ளும் போராட்டம், மனித மனங்களை வென்றெடுப்பதற்கான ஒன்றாகும். அதற்கு ஏற்ப செயல்திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். மத நம்பிக்கையாளர்களை அணுகுகிறபோது அவர்களுடைய மத நம்பிக்கையை புண்படுத்திவிடக் கூடாது.

குழந்தைகளுக்கான மழலையர் பள்ளிகளை சங் பரிவாரத்தினர் பலர் தொடங்கி நடத்துகிறார்கள். அந்த நிலையிலேயே, வகுப்புவாத செயல்பாடுகளை தொடங்குகிறார்கள். ஆங்கில எழுத்துக்களை கற்பிக்கும்போதும் கூட, ஏ எனில் அர்ஜூனன், பி எனில் பீமன் என்பதாக கற்பிக்கிறார்கள். கோயில் வளாகங்களையும் கைப்பற்றுகிறார்கள்.

மேக்ரோ அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை, மைக்ரோ அளவில் மத நம்பிக்கையுள்ள மக்களிடம் எடுத்துச் சென்று மெல்ல மெல்ல அவர்களை வகுப்புவாதிகளாக மாற்றும் விதத்தில் சங்க பரிவாரம் இயங்குகிறது.

எனவே, வகுப்புவாத திட்டத்தை முன் உணர்ந்து தலையீடு மேற்கொள்வது அவசியமாகும். மதச்சார்பற்ற, ஜனநாயக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கூர்மையாக கவனம் செலுத்தி, வகுப்புவாத நடவடிக்கைகளை கண்டறிந்து, உரிய தலையீடு மேற்கொண்டு தடுக்கவும் வேண்டும். (உ.ம்., அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளாகங்களில் ஆர் எஸ் எஸ் சாகாக்கள் நடத்துவதை தடுத்து நிறுத்திட அரசு நிர்வாகத்தை அணுக வேண்டும்)

மதச்சார்பற்ற/ஜனநாயக நடவடிக்கைகள்:

கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு, இந்துத்துவாவை எதிர்த்து போராடுவதற்கான 7 வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளது.

  1. கருத்தியல் அடிப்படையில் இந்துத்துவா கொள்கையை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். 2) வெறுப்பு/பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து முன்நிற்க வேண்டும். பொது இடங்களை வகுப்புவாதமயமாக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும். 3) பழமைவாத, மூடநம்பிக்கை, கண்மூடித்தனமான போக்குகள், பகுத்தறிவின்மை போக்குகளை எதிர்த்து – அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவின் பார்ப்பட்ட கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும். 4) சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, பாலின சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி மக்கள் மத்தியில் வகுப்புவாத சித்தாந்தம் பரவுவதை எதிர்கொள்ள வேண்டும். 5) பன்மைக் கலச்சாரத்தை முன்னிறுத்தும் நிகழ்வுகளில் சிறப்பு கவனம், செலுத்திட வேண்டும். 6) சமூக சேவை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 7) கல்வித் துறையில் மதச் சார்பற்ற, ஜனநாயகப்பூர்வமான, ஒன்றிணைப்பு நிரம்பிய உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்பும் விதத்தில் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

நம்முடைய நடவடிக்கைகளும் உள்ளூர் சமூக தளத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குழந்தைகள்

குழந்தைகளுக்காக துளிர் இல்லங்கள், பாலர் சங்கங்களை உருவாக்க வேண்டும். கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள பள்ளிகளை (குறிப்பாக அரசுப் பள்ளிகளை) மேம்படுத்திட முயற்சி எடுக்க வேண்டும். இரவு பள்ளிகளை நடத்தலாம். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க திட்டமிட்டு பயிற்சிகள் தர வேண்டும். அதே போல மாணவர் மன்றங்களை ஏற்படுத்தி, சேவைப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

இளைஞர்

பொதுவாகவே இளம் வயதில் வீர விளையாட்டுக்கள் மீது ஆர்வம் ஏற்படுகிறது. எனவே நாம் விளையாட்டு பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பொங்கல் திருவிழாவை ஒட்டி நாம் விளையாட்டு போட்டிகளை நடத்திவருகிறோம். அதில் கண்டறியப்படும் திறன்களை மேலும் மேம்படுத்தும் விதத்தில் ஒன்றிய, நகர, மாவட்ட/மாநில அளவில் போட்டிகளை நடத்திட வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.

சமூக செயல்பாடுகள்

யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் ஆரோக்கிய நோக்கில் மிக உதவிகரமான நடவடிக்கைகளாகும். அது ஆன்மீகச் செயல்பாடு அல்ல. கேரளாவில் ஒன்றிய நகர அளவிலும் கிராம மற்றும் வார்டு அளவிலும் நமது கட்சியின் சார்பில் யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை தயார் செய்து, அனைத்து மக்களுக்குமே பயிற்சி அளிக்கிறார்கள். இதே போல, நலவாழ்வுக்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்.

படிப்பகங்கள், நூலகங்களை உருவாக்குவதுடன், கலை/இலக்கிய பயிற்சிகள், , குறும்படம்/பாடல் போன்ற நவீன கலை செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். ஈர்ப்பான விதத்தில் கலைக்குழுக்கள், நாடகக் குழுக்களை உருவாக்கி நிகழ்ச்சிகள் நடத்துவது, அதன் மூலம் மத நல்லிணக்க கருத்துக்களை பரப்புவது உதவி செய்யும்.

மரங்கள் நடுவது, ஏரி/குளங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பது என நடவடிக்கைகளை உருவாக்கி சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களை இணைத்திட முடியும்.

கோயில் நிர்வாகத்தில் பங்கேற்பு

                இந்து கோயில்கள், உள்ளூர் அளவில் பண்பாட்டு மையங்களாகத் திகழ்கின்றன. அவற்றை கைப்பற்றும் சங் பரிவார அமைப்புகள், கோயில்களை பயன்படுத்தி தங்களுடைய நோக்கங்களை முன்னெடுக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில கோயில் நிர்வாகத்தில் நமது தோழர்கள் பங்கேற்று நிர்வாகத்தை ஊழலற்ற, தூய்மையான சிறப்பான முறையில் நடத்திட பங்களிக்கிறார்கள். நாம் கோயில் நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்.  கோயில்/ மத நிகழ்ச்சிகள்  நடைபெறும் சூழல்களில் வகுப்புவாதிகளின் தலையீட்டை தடுக்க நம்முடைய செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்.

                வெறுப்பு பிரச்சாரம்/வகுப்புவாத சூழல் உருவாக்கப்பட்டு, வன்முறையோ கலவரமோ வெடிப்பதற்கு ஏதுவான நிலைமை உருவானால் – அந்த நிலைமையை மாற்றிட தீவிரமான திட்டமிட்ட தலையீடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே, மசூதி, சர்ச் ஆகிய வழிபாட்டுத்தலங்களுடைய நிர்வாகத்திலும் பங்கேற்று, வகுப்புவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தாமல் தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இந்துத்துவா நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க பல்வேறு துறைகளில் மேடைகளை உருவாக்குவதுடன் தேவைக்கு ஏற்ப முழு நேர ஊழியர்களை உருவாக்கிட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனியாக ஒரு அரங்கத்தின் பணி அல்ல. நம்முடைய அனைத்து அமைப்புகளும் மேற்சொன்ன விதத்தில் செயல்பட வேண்டும். வாய்ப்புள்ள மதச்சார்பற்ற சக்திகளோடு, அமைப்புகளோடு, தொண்டு நிறுவனங்களோடு கைகோர்க்க வேண்டும். தனி நபர்களும் கூட உள்ளூர் அளவில் பல்வேறு நடவடிக்கைகளை உருவாக்கி முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும்.



Leave a comment