மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


திராவிட கட்சி அரசுகளுடைய பொருளாதார கொள்கைகள் பற்றி


பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா

காங்கிரஸ் ஆட்சிக்காலம்

இந்தியா விடுதலை பெற்ற பின் இருபது ஆண்டுகள் (1947 -1967) தமிழ் நாட்டில்  காங்கிரஸ் ஆட்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக பொருளாதாரத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஒன்றிய ஆட்சியும் மாநில ஆட்சியும் ஒரே கட்சியின் கையில் இருந்த அக்கால கட்டத்தில் கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்துவந்த தொடர் போராட்டங்களின் விளைவாக சில மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, பழைய ஜமீந்தாரி மற்றும் இனாம் நில உறவுகள் பலவீனம் அடைந்தன. குத்தகை விவசாயிகள் நிலைமையில் சில முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டுகளின் தலைமையில் குத்தகை விவசாயிகள் நடத்திய பெரும் போராட்டங்களின் விளைவாக குத்தகை விவசாயிகள் நில வெளியேற்றம் என்பது ஓரளவிற்கு தடுக்கப்பட்டது. பங்கு சாகுபடி முறையில் குத்தகை விவசாயி பங்கு கணிசமாக உயர்ந்தது. வலுவான போராட்டங்கள் நீண்ட காலம் நடந்த கீழத்தஞ்சை பகுதிகளில் நிலங்களின் உடமை குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால் நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிப்பது   தொடர்பாக விவசாய இயக்கம் போராடியும் சிறிதளவு முன்னேற்றம் தான் காணமுடிந்தது. காங்கிரஸ் அரசு பெரும் நில உடமையாளர்களை ஊக்குவித்து முதலாளித்துவ அடிப்படையில் விவசாய வளர்ச்சி காண முயற்சித்தது. ஒன்றிய அரசு அளவிலும் நவீன விவசாயமும் மகசூலில் உயர்வும் வேளாண் பொருட்கள், குறிப்பாக உணவு தானியங்கள், சந்தைபடுத்தப்படுவதும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அவசியம் என்பது உணரப்பட்டது. பலநோக்கு பாசன திட்டங்கள் மூலம் அணைகள் கட்டப்பட்டு பாசன விரிவாக்கம் நிகழ்ந்தது. கிராமப்புறங்களில் மின்சார வசதி விரிவாக்கப்பட்டது. இது நிலத்தடி நீர் பயன்பாட்டை அதிகப்படுத்தியது. இவை ஓரளவு வேளாண் உற்பத்தி வளர்ச்சியை சாத்தியப்படுத்தின. தொழில் துறையில் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் அரசு முதலீடுகளும் தனியார் பெருமுதலாளிகளை ஊக்குவித்து தனியார் துறை முதலீடுகளும் நிகழ்ந்தன. தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம் போன்றவை இந்த முயற்சிகளுக்கு சான்றாக இன்றும் உள்ளன. முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கல்வி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளிலும் மாநில காங்கிரஸ் அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது.   எனினும், மாநிலத்தை காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் தமிழக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் அகில இந்திய விகிதத்தை விட சற்று குறைவாகத்தான் இருந்தது. (இதற்கு நாட்டின் பல பிறபகுதிகள் நாடு விடுதலை அடைந்தபொழுது மிகவும் பின்தங்கிய நிலையில்  இருந்ததால் அவற்றின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என்பதும் ஒரு காரணம்)   

 1967இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தி மு க தலைமையிலான தேர்தல் கூட்டணி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. அறுதி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த வெற்றியில் கம்யூனிஸ்ட் இயக்கம் உட்பட பல அரசியல் கட்சிகள் திமுகவுடன் இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டில் திராவிட இயக்க பின்புலம் கொண்ட கட்சிகள் 1967 ஆம் ஆண்டில் இருந்து ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இக்காலத்தில் தமிழகம் பல துறைகளில் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது உண்மை. இந்த வளர்ச்சியின் தன்மையையும் வேகத்தையும் நிர்ணயிப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இந்த 55 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த பல அரசியல் மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு வியூகம் அமைத்து 1967இல் ஆட்சிக்கு வந்த திமுக 1971இல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு அமைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பின்னர் 1975இல் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1976ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஒன்றிய அரசு திமுக ஆட்சியை கலைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவிற்கு முரண் உருவான போதிலும், 1980 இல் நடந்த மாநில மற்றும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு கண்டு தேர்தலை திமுக சந்தித்தது. இரு திராவிட கட்சிகளுமே உறுதியான காங்கிரஸ் எதிர்ப்பு நிலையையோ, ஒன்றிய அரசின் முதலாளித்துவ வளர்ச்சிக்கான கொள்கைகளை எதிர்க்கும் நிலையையோ கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கவில்லை. இந்த அரசியல் பின்னணியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மை குறித்த சில அம்சங்களை நாம் பரிசீலிப்போம்.

நில உறவுகள்

1950கள், 60களில் திராவிட இயக்கம் மிகப் பெரிய அளவிற்கு சிறுதொழில் முனைவோர், வியாபாரிகள், உழைப்பாளி மக்கள், விவசாயிகள் இவர்களை மையப்படுத்திய இயக்கமாக வளர்ந்தது. நிலச்சீர்திருத்தம் உட்பட திமுகவில் பேசப்பட்ட காலகட்டம் அது. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியினுடைய நிலச்சீர் திருத்தங்களை ஏளனம் செய்து, “உச்சவரம்பா? மிச்சவரம்பா?” என்று கேட்ட கட்சி திமுக. ஆட்சிக்கு வந்தவுடனேயே சில சீர்திருத்தங்களையும் அக்கட்சி சட்டரீதியாக மேற்கொண்டது. அது அப்படி செய்திருந்தாலும்கூட, உச்ச வரம்பை 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்பதிலிருந்து 15 ஆக குறைத்து சட்டம் இயற்றினாலும், தமிழகத்தில் பெருமளவுக்கு நில மறுவிநியோகம் இன்றும் நடக்கவில்லை என்ற ஒரு உண்மையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். திமுக இயற்றிய நிலஉறவுகள் தொடர்பான சட்டங்களில் இருந்த விதிவிலக்குகளும், இச்சட்டங்கள் களத்தில் அமலாக்கப்பட்டதில் இருந்த பலவீனங்களும் இந்த நிலைமைக்கு முக்கிய பங்கு அளித்துள்ளன.

நிலச்சீர்திருத்தம் தொடர்பாக காங்கிரசை விமர்சித்த திமுகவும், அதிலிருந்து தோன்றிய அதிமுகவும் நிலச்சீர்திருத்தப் பிரச்சினையில் ஜனநாயகரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. 1984  பிப்ரவரி கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து நாலாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உபரியாக இருப்பதாக அரசு மதிப்பீடு செய்துள்ளதாகவும், அதில் 89,000 ஏக்கர் மட்டுமே உபரி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 71,000 ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. 1979இல் சிதம்பரத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்கத்தின் தமிழக மாநில மாநாடு 20 லட்சம் ஏக்கர் தமிழகத்தில் உபரியாக உள்ளன என்ற உண்மையை வெளிக்கொணர்ந்து, அவற்றை அரசு கையகப்படுத்தவேண்டும் என்று கோரி, பல போராட்டங்களை அடுத்த பல ஆண்டுகளில் மேற்கொண்டது. ஆனால் இன்றுவரை நில உச்ச வரம்பு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவில்லை. பல நியாயமற்ற விதிவிலக்குகள் தொடர்கின்றன. குறிப்பாக கோயில் மற்றும் அறக்கட்டளைகள் என்ற பெயரில் பழைய, புதிய நிலப்பிரபுக்கள் குவித்து வைத்துள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. 1961-62இல் தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருந்தோர் மொத்த நில உடமையாளர்களில் கிட்டத்தட்ட 80%. இவர்களிடம் 20% நிலப்பரப்புதான் இருந்தது. 1981-82இல் இந்த நிலைமையில் மிகச்சிறிய மாறுதலே ஏற்பட்டிருந்தது.

1985 மார்ச் 13 அன்று சட்டப்பேரவையில் ஆற்றிய தனது உரையில் தோழர் கோ. வீரையன் அவர்கள்  தமிழகத்தில் ஒரு விவசாயக் குடும்பத்திற்கு 25 சாதாரண ஏக்கர் புஞ்சை, 15 ஏக்கர் நஞ்சை நிலம் என்ற உச்சவரம்பை நிர்ணயித்து விதிவிலக்குகளை எல்லாம் நீக்கிவிட்டால், சுமார் 20 லட்சம் ஏக்கர் உபரி நிலம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றுவரை தமிழக அரசு உபரி நிலம் என்று கையகப்படுத்தி விநியோகம் செய்துள்ளது சுமார் 2 லட்சம் ஏக்கர் என்றுதான் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் அரசு இணைய தளம் தரும் தகவல் என்னவெனில் 2016 பிப்ரவரி முடிய 2,08,442 ஏக்கர்  நிலம் உபரியாக அறிவிக்கப்பட்டு, 1,90, 723  ஏக்கர் விநியோகம் செய்யபட்டிருந்தது.

(இதற்கு நேர் மாறாக இந்திய நாட்டின் நிகர சாகுபடி பரப்பில் 3 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு அதிகமான நிலப்பரப்பில் 23 சதவீதம் நிலமற்றோருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த நில சீர்திருத்தப் பயனாளிகள் 1.5 லட்சம். மேற்கு வங்கத்தில் உச்சவரம்பு நிலம் பெற்ற பயனாளிகள் 15 லட்சம், பங்கு சாகுபடி சீர்திருத்தங்கள் (Operation Barga)  மூலம் பயனடைந்தோர் மேலும் 15 லட்சம், ஆக மொத்தம் 3௦ லட்சம்.)

2010-11இல் தமிழகத்தின் மொத்த கிராம குடும்பங்களில் எழுபது சதத்திற்கும் மேல் நிலம் அற்றவை. நிலம் சாகுபடி செய்வோரை எடுத்துக்கொண்டால், இவர்களில் 78% ஒரு ஹெக்டேர் மற்றும் அதற்கும் குறைவாக சாகுபடி செய்வோர். இவர்களிடம் மொத்த சாகுபடி நிலங்களில் 35% உள்ளது. மறுமுனையில், பத்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடியாளர்களில் 2.3% தான். ஆனால் இவர்களிடம் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 18.5 சதம் உள்ளது. நிலம் மட்டுமல்ல. நவீன உற்பத்திக்கருவிகளும் ஒரு சிலரிடமே தமிழகத்தில் குவிந்துள்ளன. திராவிட கட்சிகள் தமது ஆட்சி காலங்களில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஏனைய செல்வந்தர்களுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.

நிலக்குவியல் என்பதைப் பொருத்தவரையில் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில்  பெரிய மாற்றமில்லை என்று மட்டும் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் அதன் சமூகக் கட்டமைப்பில் முக்கியமான மாற்றமிருக்கிறது. பாரம்பரியமான மேல்சாதி நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் குறைந்துள்ளது. இடைச்சாதிகள் கையில் முன்பைவிடக் கூடுதலாக நிலம் உள்ளது. இது குறிப்பிடத்தக்க, ஜனநாயக தன்மை கொண்ட மாற்றம். ஆனால், இது தலித்துகளுக்குப் பொருந்தாது என்பதும் உண்மை. தலித்துகளைப் பொருத்தவரை பெருமளவுக்கு அவர்கள் நிலம் பெறவில்லை என்பதும், தமிழகத்தின் ஒரு எதார்த்தமான உண்மை. திராவிட கட்சிகள் நில உறவுகளை மாற்ற பெரும் முயற்சி எடுக்கவில்லை. இதற்கு ஒரு காரணம் அன்றைய திமுக வின் கிராமப்புற தலைமை என்பது பணக்கார விவசாயிகளிடமும் முதலாளித்துவ விவசாயிகளிடமும் இருந்தது என்பதாகும். இன்றைக்கும் கிராமப்புறங்களில் சாதிஒடுக்குமுறை தொடர்வதற்கு நில ஏகபோகமும் ஒரு காரணம். கிராமப்புறங்களில் அதிகாரங்களை நிர்ணயம் செய்வதில் நிலவுடைமை தொடர்ந்து பங்கு ஆற்றுகிறது.

முதலாளித்துவ வளர்ச்சி

1950கள், 60களில் உற்பத்தி முறைகளில் மாற்றமில்லாமல், பாசனப் பெருக்கம், ஒரு எல்லைக்குட்பட்ட  நிலச்சீர்திருத்தத்தின் காரணமாக கிடைத்திருக்கக்கூடிய கூடுதல் சாகுபடி நிலம் என்ற வகையில், வேளாண் உற்பத்தி பெருகியது. 60களின் நடுப்பகுதிக்குப் பிறகு, வேளாண் உற்பத்தியின் வளர்ச்சி என்பது பிரதானமாக பசுமைப் புரட்சி என்ற ஒரு பதாகையின் கீழ் அது இன்றைக்கு பேசப்பட்டாலும், முக்கியமாக சில தொழில்நுட்ப மாற்றங்களை மையப்படுத்தியதாக இருந்தது. ஒன்றிய அரசினுடைய பெரிய பங்கும் அதில் இருந்தது. நவீன உற்பத்தி முறைகள் புகுத்தப்பட்டன. அதற்கு முக்கியமாக நீர்வளம் தேவைப்பட்டது. ரசாயன உரங்கள், உயர் மகசூல் விதைகள், உத்தரவாதமான பாசன மேலாண்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு அது தமிழகத்திலும் தனது பங்கை ஆற்றியது. வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன; வேளாண் விரிவாக்கப்பணி அமைப்பு வலுப்படுத்தப்பட்டது; தேசீய வேளாண் ஆய்வு அமைப்பு வலுப்பெற்றது; இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டது; அரசு உத்தரவாத விலை கொடுத்து நெல் மற்றும் கோதுமை பயிர்களை கொள்முதல் செய்தது ஆகிய நடவடிக்கைகள் ‘பசுமை புரட்சியின் பகுதியாக இருந்தன. தமிழகத்தில் வேளாண்துறையில் மகசூல் அதற்குப் பிறகு உயர்ந்தது என்பது உண்மை.

இன்றைக்கு கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத துறைகளில் பணிகள் உருவாகி இருக்கின்றன. அவை அதிகரித்துக்கொண்டும் வருகின்றன. தமிழகத்தில், குறிப்பாக மற்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக நகர கிராம இணைப்பு முன்னேறி இருக்கிறது. இது திராவிட இயக்கங்களின்  ஆட்சியில் மட்டும் நிகழவில்லை, முன்பும் நிகழ்ந்தது. போக்குவரத்து, கல்வி, பொதுவிநியோகம் எல்லாம் உழைப்பாளி மக்கள் மீது நிலச்சுவான்தார்களின் அதிகார பலத்தைக் குறைத்திருக்கின்றன. ஆனால், அது அறவே மறைந்துவிட்டது என்றோ, அல்லது இந்த அதிகார பலம் குறைக்கப்பட்டதனால், கிராமப்புற செல்வங்களை உருவாக்கும் உழைப்பாளி மக்களை சுரண்டுவதில் நிலவுடைமையாளர்களுக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றோ சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் அரசினுடைய பல்வேறு திட்டங்களையும் பயன்படுத்தி கிராமங்களில் நிலவுடைமையாளர்களால் பெருமளவுக்கு முன்னேற முடிந்துள்ளது. தமிழகத்து கிராமங்களில் பெரும் நிலக்குவியல், பீகார், ஜார்கண்ட், சட்டிஷ்கர், மத்திய பிரதேச  பாணியில் இல்லாவிட்டாலும், இன்றைக்குப் பல நூறு ஏக்கர்கள் வைத்திருக்கும் நிலப்பிரபுக்கள் தமிழகத்தில் இல்லை என சொல்ல முடியாது.

அகில இந்திய முதலாளித்துவ வளர்ச்சியில் பங்கு

தமிழகத்தை வளர்ச்சி விகிதத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால் குஜராத், மகாராஷ்டிரா, மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மாநிலத்தினுடைய மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரித்து வந்துள்ளது. ஆனால் உற்பத்தி வளர்ச்சியின் தன்மை எவ்வாறு இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஆதாயம் பெற்றுள்ளார்கள் என்பதுதான் பொதுவான உண்மை.

திராவிட கட்சிகளின் ஆட்சிகள் ஒன்றிய அரசின் தாராளமய கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டது இல்லை. ஏனெனில் அவர்கள் அந்தக் கொள்கையினுடைய பல அம்சங்களை ஏற்றுக் கொண்டவர்களாக மாறியுள்ளனர். தொடர்ந்து பல பத்தாண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஒன்றிய அரசில் அங்கம் வகித்தும் உள்ளனர்.

தாராளமய காலத்தில் ஊரக வர்க்க உறவுகள்

இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே தமிழகத்திலும் கிராமப்புறங்களில், கடந்த 30 ஆண்டுகளில், தனியார்மய, தாராளமய, உலகமய காலகட்டத்தில் வேளாண்துறையில் கிராமப்புறங்களில் உள்ள வர்க்க உள்முரண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கிராமப்புறங்களில் இன்றைக்கு பழைய பாரம்பரிய பத்தாம்பசலி நிலப்பிரபுக்கள் கிட்டத்தட்ட இல்லை எனச் சொல்லலாம். முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் இருக்கிறார்கள். அதோடு சேர்ந்து பாரம்பரியமாக கிராமப்புற நில ஏகபோகத்தில் பங்கேற்காத, ஆனால், பிறகு அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளர்ந்துள்ள, விவசாயம் சார்ந்த, விவசாயம் சாராத பல குடும்பங்கள் உள்ளே வந்துள்ளார்கள். அவர்கள் நவீன உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி வலுவான முதலாளித்துவ விவசாயிகளாக இடம் பெற்றிருக்கிறார்கள். அதைப்போலவே, பணக்கார விவசாயிகளும் இருக்கிறார்கள்.

தற்சமயம் விவசாயத்தில் அநேகமான செயல்பாடுகள் இயந்திரமயமாகிவிட்டது. விவசாயத்தில் கூலி வேலை என்பது குறைவாகத்தான் உள்ளது. இன்றைய கிராமங்களில் விவசாயக்கூலித் தொழிலாளி என்ற பிரிவை வரையறுக்க முடியவில்லை. ஏனெனில் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகள் பல வேலைகளை செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2011 சமூகப் பொருளாதார கணக்கெடுப்பின்படி கிராமப்புற மொத்த உழைப்பாளிகளில் 65 சதவிகிதம் பிரதானமாக  விவசாயத்தை சார்ந்திருப்பவர்கள். அதில் ஒரு 20 சதம்தான் சாகுபடியாளர்கள். மீதம் 45 சதம் விவசாயத் தொழிலாளி என்ற கணக்கு வருகிறது. இவர்கள் அனைவரும் விவசாயத் தொழிலாளிகளாக மட்டும் இல்லை. உண்மை என்னவென்றால் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களது வருமானம் கூலிக்கான உடல் உழைப்பை சார்ந்துள்ளது. கிராமப்புறங்களில் நிகழ்ந்துள்ள நில இழப்பு வலுவான வர்க்க வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது. தாராளமய வளர்ச்சி வேலையின்மை பிரச்சினையை தீவிரமாக்கியுள்ளது.  குஜராத், மகாராஷ்டிரா அளவிற்கு இல்லாவிட்டாலும் தமிழகத்திற்கும் இது பொருந்தும்..

தமிழக கிராமங்களில் தமிழக நகரங்களில் தொழில்வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதைவிட அதிகமாக இந்த மூன்றாம் நிலைத் தொழில்கள் வளர்ந்துள்ளன. இதனால் இரண்டாம் நிலையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61இல் தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு 20.47 சதமாக இருந்தது. ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. இது வேகமாக அதிகரித்து 90-91ல் மூன்றில் ஒரு பங்கானது. 33.1 சதம். 1995-96 வரும்போது, 35 சதமாக உயர்ந்தது. ஆனால், அதற்குப்பிறகு, தொடர்ந்து அது குறைந்துகொண்டே வருகிறது.

.தமிழக அரசின் முதலீட்டுக் கொள்கைகள் பற்றி பார்ப்போம். இந்தியாவில் தாராளமய கொள்கைகளின் பகுதியாக  உழைப்பாளி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழகத்திற்கும் பொருந்தும். தமிழகத்தின் திராவிட கட்சிகளின் அரசுகள் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. பெரும் கம்பனிகளை ஊக்குவித்து முதலீடுகளை கொண்டு வருவது மட்டுமே அரசுகளின் கவனத்தில் இருந்துள்ளது. இதன் பொருள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுவது என்பதாகும்.

தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கின்ற மக்களின் சதவிகிதம்  பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நிச்சயமாக குறைந்துள்ளது. ஆனால், இன்றும் 50 சதவிகிதம் மக்கள்  கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். விவசாயத்தையும் சேர்ந்துதான் அவர்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. விவசாயம் மட்டுமல்ல. விவசாயக் குடும்பங்கள்கூட, விவசாயத்தில் கூலி வேலை, வெளியே கூலி வேலை, சில சிறுசிறு தொழில்கள் நடத்துவது என்று பலவகைகளில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு உள்ளது. மிகக் கடுமையான உழைப்பை செலுத்திய பிறகுதான்  வறுமைக்கோட்டையே எட்டுகிறார்கள். சில ஆண்டுகளுக்குமுன் நடத்தப்பட்ட, ஊரக வேளாண் குடும்பங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் ஆய்வும் இதனை தெளிவுபடுத்துகிறது.

தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை

தொழில் வளர்ச்சியில் முக்கிய அம்சம் என்னவெனில் தமிழக தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்புகளை வேகமாக அதிகரிக்கும் தன்மையில் இல்லை. ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட கட்சிகள் காங்கிரசைப் போலவே பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டனர். 1970களின் துவக்கத்தில் வெடித்த சிம்சன் போராட்டத்திலேயே இதைக் காண முடிந்தது. வால்பாறையில் தேயிலை தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது, நெய்வேலியில் இரும்புக்கரம் என்பதெல்லாம் நாம் சந்தித்த சம்பவங்கள். பின்னர் 1977இல் வந்த எம் ஜி ஆர் அரசு டி வி எஸ் முதலாளிகளுக்கு அளித்த ஆதரவும் இதே வகையானதே. அடுத்துவந்த காலங்களில் ஸ்பிக், ஸ்டெர்லைட் என்று பொதுவான பெருமுதலாளி ஆதரவு நிலையை திராவிட கட்சிகளின் தலைமையிலான மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்துவந்துள்ளன. தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திற்கு வந்த பிறகு பெயரளவிற்குக் கூட பொதுத்துறை பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றிற்கு ஆதரவாக மாநில அரசுகள் செயல்படவில்லை. அதற்கு நேர்எதிராக, தொழில் ஊக்குவிப்பு என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது, அதன் அடிப்படையில் நிலம்,  நீர், மின்சாரம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் சலுகை கட்டணத்தில் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு அளிப்பது என்பது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்களும் சரி, அவற்றின் மூலம் நிகழ்ந்துள்ள முதலீடுகளும் சரி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதில் மிகச்சிறிய பங்களிப்பே செய்துள்ளன. தி.மு.க ஆட்சியில் (2007 வாக்கில் என்று நினைவு) ஒரு முறை சட்ட சபையில் 6,000 கோடி ரூபாய் முதலீடு அளவிற்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 20,000 வேலைகள் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. கணக்குப் பார்த்தால் இது ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கு மூன்று பணியிடங்கள் என்று வருகிறது! 2015 செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டு  லட்சத்து  நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. 2016 தமிழ்நாடு பட்ஜெட் உரையில் இந்த முதலீடுகள் மூலம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு பணியிடம் என்று ஆகிறது! ஆக. நாட்டின் இயற்கை வளங்களை தாரை வார்த்துக் கொடுத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வரிச்சலுகைகளையும் அளித்து பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளை முதலீடு செய்ய அழைப்பது எந்த விதத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கிட பயன் தராது என்பது தெளிவு.  ஆனால் சிறு குறு மூலதனங்கள் மூலமும் அரசு முதலீடுகள் மூலமும் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையிலான தொழில் கொள்கைகளை திராவிட கட்சிகளின் அரசுகள் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. இவர்கள் மாறி மாறி பங்கேற்ற மத்திய அரசு கூட்டணி அரசாங்கங்களிலும் இந்த பிரச்சனைகளை திராவிட கட்சிகள் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் பங்கேற்ற பொழுது பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் மத்திய அரசுகளின் தாராளமய கொள்கைகளை எதிர்த்து குரல் எழுப்பவும் இல்லை. எனினும் மக்களின் வலுவான போராட்டங்களின் விளைவாக சில நலத்திட்ட நடவடிக்கைகளை இந்த அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன.

இறுதியாக

இன்று நாட்டின் அரசியல் நிலைமைகளை கணக்கில் கொண்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டிய பெரும் கடமை நம் முன் உள்ளது. கடந்த காலம் எப்படி இருந்தாலும், சமகால தேவைகளையும் இன்று உலகளவிலும் இந்தியாவிலும் அம்பலப்பட்டு நிற்கும் ஏகபோக கார்ப்பரேட் ஆதரவு வளர்ச்சிப்பாதையை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், மதவெறி அரசியலைக் கையாளும் சக்திகளை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு உள்ளது.  இது நடக்குமா என்பதை நிர்ணயிப்பதில் வர்க்க, வெகுஜன இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.



Leave a comment