மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


புரட்சிக்கு ஒரு நாள் முன்பாக லெனின் எழுதிய கடிதம்!


வி.இ.லெனின்

தமிழில்: அபிநவ் சூர்யா

[ரஷ்யாவில் நடைபெற்ற பிப்ரவரி புரட்சிக்குப் பின் எட்டு மாதங்களில் லெனினின் எழுத்துகள் அனைத்துமே புரட்சியின் பாதையில் போல்ஷ்விக் புரட்சியாளர்களிடையே நிலவிய சித்தாந்த குழப்பங்களை, தயக்கங்களை நீக்கும் வகையில் இருந்தன.

கீழ் காணும் கடிதம் லெனின் அவர்கள் அக்டோபர் புரட்சிக்கு ஒரு நாள் முன்பு மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும். இதில் அவர், வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை புரட்சியாளர்கள் உணராமல், மக்களின் புரட்சிகர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போவது எவ்வாறு மாபெரும் குற்றமாக விளையும் என்பதை விளக்குகிறார்.

ரஷ்ய புரட்சி அரங்கேறிய தேதி, தற்போது புழக்கத்தில் உள்ள ஜார்ஜியன் நாள்காட்டி முறைப்படி நவம்பர் 7 ஆகும். ஆனால் 1917 ஆம் ஆண்டில்,  ரஷ்யாவில் ஜூலியன் நாள்காட்டி முறை பழக்கத்தில் இருந்து. அது ஜார்ஜியன் நாள்காட்டி முறையை விட 13 நாட்கள் பின் தங்கியது. அதன்படி புரட்சி அரங்கேறிய தேதி அக்டோபர் 25. அதனால் இந்த கடிதத்தில் தேதிகள்  “அக்டோபர்” மாதத்தில் என குறிப்பிடப்பட்டுள்ளன. – ஆசிரியர் குழு]

தோழர்களே,

நான் 24ஆம் தேதி மாலையில் இவ்வரிகளை எழுதுகிறேன். மிக மிக முக்கியமான நிலமையை எட்டியுள்ளோம். இப்போது எழுச்சியை தாமதிப்பது என்பது மிகவும் ஆபத்தாக விளையும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அனைத்துமே ஒரு நூல் இழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தோழர்கள் உணர என் மொத்த சக்திகளையும் கொண்டு வற்புறுத்துகிறேன்; எந்த சம்மேளனங்களோ, மாநாடுகளோ (சோவியத் மாநாடு உட்பட) தீர்க்க முடியாத பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இவை மக்களால், ஜன சக்தியால், ஆயுதம் தாங்கிய மக்களின் போராட்டத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

“கோர்னிலோவ்”களின்[1] முதலாளித்துவ சர்வாதிகார தாக்குதல்களும், வெர்கோவ்ஸ்க்கி[2] நீக்கப்பட்டுள்ளதும், நாம் தாமதிக்க முடியாது என்பதை காட்டுகிறது. எந்த நிலையிலும், இன்று மாலையே, இன்று இரவே, நாம் முதலில் இராணுவ அதிகாரிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்து (அவர்கள் தடுத்தால், அவர்களை வீழ்த்தி), இந்த அரசாங்கத்தை கைது செய்து, முன்னேற வேண்டும்.

நாம் காத்திருக்க கூடாது! நாம் அனைத்தையும் இழக்கக் கூடும்!

உடனடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதன் பலனானது மக்களுக்கானதாய் (மாநாடு அல்ல. மக்களுக்கு. குறிப்பாக முதலில் இராணுவ வீரர்களுக்கும்[3] மற்றும் உழவர்களுக்கும்), இந்த கோர்னிலோவிய அரசாங்கத்திடம் இருந்து அவர்களை காப்பதாய் இருக்கும். இந்த அரசாங்கம்தான் வெர்கோவ்ஸ்க்கியை வெளியேற்றி, இரண்டாம் கோர்னிலோவ் சதியை[4] வடிவமைத்தது.

யார் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்?

இந்த கேள்வி இப்போது முக்கியம் இல்லை. வேண்டுமென்றால், புரட்சிகர இராணுவக் குழு எடுக்கட்டும். இல்லையென்றால், மக்களின் நலனை பாராட்டும் உண்மையான பிரதிநிதிகளுக்கு, (உடனடியாக அமைதிக்கான முன்மொழிவு மேற்கொண்டு) இராணுவ வீரர்களின் நலனை காப்பவர்களுக்கு, (உடனடியாக நிலக்கிழார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிச்சொத்தை ஒழிக்கும்) உழவர்களின் நலனை காப்பவர்களுக்கு, பட்டினியில் வாடுபவர்களின் நலனை காப்பவர்களுக்கு மட்டுமே அதிகாரத்தை விட்டுத் தருவோம் எனக் கூறும் “ஏதோ ஒரு நிறுவனம்” அதிகாரத்தை கையிலெடுக்கட்டும்.

அனைத்து இராணுவ அமைப்புகளும், அனைத்து சேனைகளும், எல்லா படைகளும் உடனடியாக திரட்டப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகளை புரட்சிகர இராணுவ குழுக்களுக்கும், போல்ஷ்விக்களின் மத்தியக் குழுக்கும் அனுப்பி, எந்த நிலையிலும் 25ஆம் தேதி வரை கெரென்ஸ்க்கி[5] மற்றும் அவர் கூட்டாளிகள் கையில் அதிகாரத்தை விட்டு வைக்கக் கூடாது என்ற பிரத்தியேக கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த விஷயம் இன்று மாலையே, இன்று இரவே, உடனடியாக முடிவு செய்யப்பட வேண்டும்.

இன்று வெற்றி பெறும் சாத்தியம் இருக்கையில் (இன்று வெற்றி நிச்சயம்), நாளை பெருமளவில் இழக்க, உண்மையில் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கையில், மேலும் தாமதித்தால், வரலாறு புரட்சியாளர்களை மன்னிக்காது.

இன்று நாம் அதிகாரத்தை கைப்பற்றுவது சோவியத்களுக்கு[6] எதிராக அல்ல, அவர்களின் சார்பாக.

எழுச்சியின் பிரதான பணியே அதிகாரத்தை கைப்பற்றுவதுதான்; கைப்பற்றிய பின், எழுச்சியின் அரசியல் கடமை குறித்த தெளிவு கிடைக்கும்.

அக்டோபர் 25ஆம் தேதியின் ஊசலாடும் வாக்களிப்பிற்காக காத்திருப்பது என்பது வெறும் ஒரு சடங்காகவோ, அல்லது அபாயகரமாகவோ கூட முடியக் கூடும். இந்த மாதிரியான கேள்விகளுக்கு முடிவை வாக்களிப்பு மூலம் அல்லாமல், வன்முறை மூலம் தீர்மானிக்க, கடமையும் உரிமையும் மக்களுக்கு உண்டு. புரட்சியின் மிக முக்கியமான தருணங்களில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளுக்காக, மிகச் சிறந்த பிரதிநிதிகளுக்காகவும் காத்திருக்காமல், பிரதிநிதிகளுக்கு வழிகாட்டுதல் கொடுக்கும் கடமையும், உரிமையும் கூட மக்களுக்கு உண்டு.

அனைத்து புரட்சிகளின் வரலாறும் இதை நிறுவி உள்ளது; புரட்சியை காப்பாற்றுவதும், அமைதிக்கான வாய்ப்பை உருவாக்குவதும், பெட்ரோகார்ட் நகரத்தை காப்பாற்றுவதும், பஞ்சத்திலிருந்து காப்பாற்றுவதும், உழவர்கள் நில உரிமை பெறுவதும் தங்களை சார்ந்தே உள்ளது என புரட்சியாளர்கள் அறிந்திருந்தும், இந்த வாய்ப்பை தவற விட்டால், அது அளவற்ற பெரும் குற்றமாக விளையும்.

இந்த அரசாங்கம் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. எந்த நிலையிலும், அதற்கு இறுதி அடி கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்.

செயல்பாடுகளை மேலும் தாமதிப்பது அபாயகரமாக ஆகிவிடும்.

*

குறிப்புகள்:

[1] இராணுவ தளபதி கோர்னிலோவ் தலைமையிலான பிற்போக்கு அமைப்பு

[2] கோர்னிலோவை எதிர்த்த அமைச்சர்

[3] முதலாம் உலகப் போரில் அவதிப்பட்டு வந்த ரஷ்ய இராணுவம் மற்றும் சாதாரண சிப்பாய்கள்

[4] ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் இராணுவ ஆட்சியை நிறுவும் முயற்சி

[5] பிப்ரவரி புரட்சிக்குப் பிந்தைய  முதலாளித்துவ அரசின் தலைவர்

[6] தொழிலாளர் கமிட்டிகள்



Leave a comment