மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நகர்ப்புற உள்ளாட்சிகளில் நம்முடைய பணி …


  • அருண்குமார்

அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 74வது திருத்தத்தின்படி உள்ளாட்சி தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனாலும், பல மாநிலங்களில் அது முறையாக நடப்பதில்லை.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மீதான பொருளாதார தாக்குதலோடு கலாச்சார அரசியல் ரீதியான தாக்குதல்களும்  நிகழ்கிறது. மக்களின் பங்கேற்போடு, மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதற்காகவே, விரிவான ஜனநாயகத்தை கொண்டதாக, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அவை மக்கள் சார்ந்ததாக இல்லாமல் மையப்படுத்தப்பட்ட  அதிகாரத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையே தனது கொள்கையாக கொண்டுள்ள பா.ஜ.க அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து விதமான ஜனநாயக உள்ளடக்கங்களையும் நசுக்கி வருகிறது.

74வது சட்ட திருத்தத்தின்படி 18 வகையான பணிகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் மேற்கொள்ளவேண்டும். கல்வி, சாலை அமைத்தல், குடிநீர் விநியோகம், சுகாதாரம், கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த 18 பணிகளில் 5 க்கும் குறைவான பணிகளே மாநகராட்சிகள் மூலம் நடத்தப்படுகின்றன. அதிகபட்சமாக 7 பணிகள் மும்பை மாநகராட்சியில் மட்டுமே நடக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து பல ஆவணங்களும் அரசாணைகளும் சிறப்பாக உள்ளன. ஆனால், உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை என்பதையே மேற்கண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏன் இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது? 13 வது நிதிக்குழு, உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த நிதியிலிருந்துதான் செயல்படவேண்டும் என்று தெரிவித்தது. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதியை எதிர்பார்க்கக்கூடாது என்றது. மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியது.

ஜி.எஸ்.டி போன்ற மத்தியப்படுத்தப்பட்ட வரி விதிப்பு முறைகளால் உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான வரி வருவாயை அதிகமாக இழக்க நேரிட்டது. நிதிக்குழு கூறியதுபோல், நிதியை உருவாக்க சொத்து வரியை உயர்த்துவது, குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது, கழிவு நீர் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கான  சேவை கட்டணத்தை உயர்த்துவதென மக்கள் மீதான சுமை கூடுதலாக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகள் மீது நிதிச்சுமை

தற்போது 15வது நிதிக்குழு மேலும் இக்கட்டணங்களை உயர்த்த சில வழிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து வகையான சொத்துக்களையும் பட்டியலிட்டு சிறு பகுதியையும் விடாமல் வரி தீர்மானிக்க வேண்டும் என்கிறது. அதேபோல், சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்றவகையில் சொத்து வரியை உயர்த்தவேண்டும் என்கிறது. மேலும், தீர்மானிக்கப்பட்ட சொத்து வரியை முழுமையாக வசூலிக்க வேண்டும் என்கிறது.

சொத்துவரியை முறைப்படுத்துவதில் என்ன தவறு? என்று சிலர் கேட்கக் கூடும். எங்கு சிக்கல் உள்ளதோ அங்கு அதை முறைபடுத்துவது தவறல்ல.  ஆனால், அதை பொதுமைப்படுத்தி ஏழை எளிய மக்களை பாதிக்கும் விதமாக வடிவமைப்பதில்தான் சிக்கல் உள்ளது. வர்த்தக பயன்பாடு நிறைந்த பகுதியில் வரி தீர்மானிக்கும்போது, அப்பகுதியில்  உள்ள குடியிருப்புகளுக்கும்  வர்த்தக நிலங்களுக்கு உள்ளதுபோல், குடியிருப்புக்களுக்கும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வால் உயர் நடுத்தர மக்களும், நடுத்தர மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

குடிசை பகுதிகளையும் சொத்துவரிக்கு உட்படுத்தி ஏழை மக்களையும் நசுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி உயர்வு, வாடகைதாரர்கள் மீது சுமத்தப்படுகிறது. இது வாடகைதாரர்களை மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

சொத்து வரி உயர்வின் மூலம் ஒரு பகுதி நிதியை உள்ளாட்சி அமைப்புகள் திரட்டுகின்றன. மற்றொரு பகுதி நிதியை மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டிய குடிநீர், குப்பை மற்றும் கழிவு நீர் அகற்றுதல் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயத்துவதன் மூலம் திரட்டுகின்றன.

15வது நிதிக்குழுவின் வலியுறுத்தலோடு, கரோனா காலத்தில் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கொடுத்த அழுத்தமும், சொத்து வரி மற்றும் சேவை கட்டண உயர்வாக நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய 5வது முறையாக பொருளாதார நிதி ஒதுக்கீட்டை அறிவித்த ஒன்றிய அரசு, இந்த நிதி மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சொத்து வரியையும் சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தவேண்டும் என்றது. மேலும் 2021 – 22 க்குள் அனைவருக்கும் இந்த கட்டண உயர்வை அறிவிக்கவேண்டும். 2022 -23க்குள் இந்த கட்டண உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.  2023 – 24க்குள் இந்த கட்டண உயர்வை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று கட்டளையிட்டது. அதுவே தற்போது அரங்கேறி வருகிறது. நிதி தேவையின் காரணமாக அனைத்து மாநிலங்களும் இந்த கட்டண உயர்வை அமலாக்குகின்றன.

முன்பு குப்பைகளை பெறுவதற்கு கட்டணம் தீர்மானிக்கப்பட்டது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்காவிட்டால் தண்டம் விதிக்கப்படும் என்றனர். மலைபோல் குப்பைகளை குவிக்கும் வேலையைதான் மாநகராட்சிகள் மேற்கொண்டன. அது பல சுற்றுச்சூழல் கேட்டிற்கும் உயிர் சேதத்திற்கும்  வழிவகுத்தது. தற்போது குப்பைகளை மறுசுழற்சி செய்வதாக கூறினாலும், அதற்கும் கூடுதலாக கட்டணம் தீர்மானித்து மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரி உயர்வும் உலக வங்கியின் தலையீடும்

சொத்து வரி உயர்வு, சேவை கட்டண உயர்வு என மக்கள் மீது இந்த அழுத்தம் ஏன் சுமத்தப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? என்பதை நாம் ஆராய்ந்தால் அது உலக வங்கியிடம் போய் நிற்கிறது. 2010 முதல் 2015 ஆண்டு வரை இந்த கட்டண உயர்வுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. சுயமான நிதி திரட்டலின் மூலம்தான் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவேண்டும் என்பது இங்கிருந்து வந்த முன்மொழிவேயாகும். உலகம் முழுக்க எங்கும் உள்ளாட்சி அமைப்புகளால் சுயமான நிதி திரட்டுதல் மூலம் செயலாற்ற முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். மும்பை மாநகராட்சிதான் அதிகபட்சமாக தனக்கு தேவையான நிதியில் 60 சதத்தை சுயமாக திரட்டுவது சாத்தியமாகியுள்ளது.

பிறகு ஏன் இத்தகைய விஷயத்திற்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் தரப்படுகிறது என்பதை 2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, சர்வதேச நிதி மூலதனத்தினால் அதன் பாதிப்பில் இருந்து வெளிவர இயலவில்லை. எனவே, சர்வதேச அளவில் அதன் நிதி மூலதனத்தை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முனைகிறது. நாம் இதை புரிந்துகொண்டு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

கோவையில் சூயஸ் நிறுவனம் தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட மாநகராட்சி அனுமதித்ததை எதிர்த்து போராடினோம். அந்த நிறுவனம் டில்லி மாநகராட்சியில் இப்பணியை மேற்கொண்டது. அது நிர்ணயித்த அதிகமான கட்டணத்தை டில்லி மாநகராட்சியால் வசூல் செய்து கட்ட முடியாமல் போனது. இந்த தொகைக்கு ஈடாக தில்லி மாநகராட்சியின் மையப்பகுதியில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கும்படி உலக வங்கி கூறியது. இதுதான் அதன் நோக்கமும். நிலம் தற்போது பணம் கொழிக்கும் சொத்தாக மாற்றப்பட்டுவிட்டது. நகர்ப்புறங்களில் உள்ள இடங்கள் தற்போது இவர்களின் இலக்காக மாறியுள்ளன. அரசுகளும் அதற்கு ஏற்ற வகையில்தான் செயல்படுகின்றன.

ஒன்றிய அரசு டில்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தையும் நிர்வாக வசதிக்காக புதிய நாடாளுமன்றம் அமையவுள்ள சென்ட்ரல் விஸ்தாவிற்குள் கொண்டுவரவுள்ளது. உண்மையில், பல பகுதிகளில் உள்ள அலுவலகங்களை இங்கு மாற்றும்போது டில்லியின் முக்கியமான இடங்களில் உள்ள அதன் பழைய அலுவலகங்களை தனியாருக்கு கைமாற்றும் திட்டம் அதில் உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இந்துஸ்தான் எலக்ட்ரிக்கல் நிறுவனம் ஆதிவாசி மக்களின் நிலத்தில் முன்பு உருவாக்கப்பட்டது. தேசத்தின் வளர்ச்சிக்காக அம்மக்கள் அந்த நிலத்தை தானமாக வழங்கினர். 1990களுக்கு பிறகான பொருளாதார கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் நாசமாக்கப்பட்டு அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு கொடுக்கப்படுகிறது.  அப்படித்தான் இந்த நிறுவனமும் ஆக்கப்பட்டது.

மக்களை திரட்டுதல்

நம்மை சுற்றி இவ்வளவு நடந்தாலும், மக்களை திரட்டாமல், இதில் எவ்வித மாற்றத்தையும் உருவாக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதன் மூலம், அதன் பிரதிநிதிகளுக்கான உரிமைகளும் மறுக்கப்படுகிறது. மன்றங்களில் பேசுவதற்கு கூட அனுமதி இல்லாமல் போகிறது. நிதிநிலை அறிக்கைகளை அதிகாரிகளே தயார் செய்கின்றனர். அதை மன்றம் ஏற்காவிட்டாலும், மாநில அரசு ஏற்காவிட்டாலும், நிதிநிலை அறிக்கை மேல் நடவடிக்கைக்கு சென்றுவிடும். மக்களின் பங்கேற்போடே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது 74 வது சட்ட திருத்தம். ஆனால், அவை மக்களை புறக்கணித்து அதிகாரிகளை கொண்டே செயல்படுத்தப்படுகிறது.

மக்கள் நலன் சார்ந்து செயல்படும் நம்மைப் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் உரிய தலையீடு செய்யமுடியாத நிலை உள்ளது. ஆனால் மக்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கும் முதல் நபராக உள்ளாட்சி பிரதிநிதிகளே உள்ளனர். எனவே, மக்கள் நலனுக்கு எதிராக உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கைகள் அமையும்போது, உள்ளாட்சி அமைப்பின் மீதான நம்பிக்கையும் நம்போன்ற கட்சிகளின் மீதான நம்பிக்கையையும் அவர்கள் இழக்க நேரிடுகிறது. எப்படியும் நீங்கள் எங்களுக்காக போராட்டம் போகிறீர்கள்.  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநியாக உங்களை அமர வைத்தாலும் அங்கு எதையும் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு இல்லை. பிறகு உங்களை தேர்ந்தெடுப்பதைவிட, எனது சாதி, மதத்தை சார்ந்தவர்களை தேர்வு செய்வது எனக்கு வேறு வகையில் உதவக்கூடும் என்கிற குறுகிய மனநிலைக்கும் அவர்கள் செல்லும் நிலை ஏற்படுகிறது. மக்களை முற்போக்கு அரசியலில் இருந்து, குறுகிய பிற்போக்கு அரசியலுக்கு அவை அழைத்து செல்வது நம்போன்ற கட்சிகளுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும். அதேநேரம் மக்களை ஓரணியில் திரட்டி போராட்டங்களை முன்னெடுக்கவும் இது தடையாக அமையும். 

மக்களிடம் உண்மை நிலவரத்தை விளக்காமல் நம்மால் அவர்களை நமது அரசியலின்பால் ஈர்க்க முடியது. இதை ஒருநாளில் செய்துவிட முடியாது. சொத்துவரி உயர்த்தப்படும்போது மட்டும் வாருங்கள் போராடலாம் என்று கூறி பெரும் பகுதி மக்களை திரட்டிட முடியாது. இது ஒரு தொடர் நிகழ்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மக்களுடன் உரையாடுவதற்கான வேலைகளை திட்டமிட்டு மேற்கொள்ளவேண்டும். அவர்களுக்கு புரியும்படி பேசிடவேண்டும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளாக

74 வது சட்ட திருத்தம் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு மக்களின் பங்கேற்போடுதான் அனைத்து‌ முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால், கேரளாவில் மட்டும்தான் வார்டு கமிட்டி நல்ல முறையில் செயல்படுகிறது. மற்ற இடங்களில் பெயர் அளவிற்கு வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்ட போதும் அவை செயல்படுவதில்லை. அவர்களுக்கு தேவையானவர்களை கொண்ட கமிட்டி போலவும் அவை அமைக்கப்படுகிறது. 

நகர்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர் என்கிற வகையில் வார்டு கமிட்டிகள் போன்ற அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அரசு இதுபோன்ற அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். அரசு அதை செய்யாததால் நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுபோன்ற கூட்டங்களை கூடுதலாக நடத்தி மக்களிடம் கருத்துக்களை பெற்று, எது சாத்தியம் என்பதையும், எது சாத்தியமற்றதாக உள்ளது என்பதையும் பேசுவதோடு ஏன் இது சாத்தியமாகவில்லை என்பதற்கான காரணங்களையும், அதன் பின்புலத்ததையும் நாம் மக்களோடு பேசவேண்டும். வழக்கமாக நாம் வீதியில் செல்லும்போது இதுபோன்று பேசுவோம். அது போதுமானதல்ல. நாம் பேசும் அந்த நபரை தவிர மற்றவர்களுக்கு அது தெரியாது. மேலும் ஓரிடத்தில் மக்களை கூடச் செய்து அவர்களோடு உரையாடுவதுதான் அவர்களை அரசியல்படுத்தவும். நம்மோடு அவர்களை இணைக்கவும் உதவும். பெண்கள், இளைஞர்கள் என பலரை இணைப்பதும் சாத்தியப்படும்.

சமூக வானொலி மூலம் நமது வார்டுக்கு உட்பட்ட இடங்களில் குறிப்பிட்ட அலைவரிசையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கேட்கும் வகையில் வானொலியில் நமது செயல்பாடுகளையும் பிரச்சினைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் பிரதிநிதிகள் பேசவேண்டும்.

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு

வர்க்க, வெகுமக்கள் இயக்கங்களின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு அவசியம். அந்தந்த அமைப்புகள் அதன் வர்க்க வெகுஜன பணிகளை மேற்கொள்வது அவசியம்தான். அதேநேரம் குடியிருப்புகளில் களத்தில் செயலாற்றும் தொழிற்சங்கம், மாதர், வாலிபர் அமைப்புகள் ஒருங்கிணைந்த சில கோரிக்கைகளை தீர்மானித்து, மக்களை விழிப்படைய செய்து போராட்டங்களில் இணைக்கவேண்டும். அந்தந்த அமைப்புகள் குறுகிய எண்ணிக்கையில் சில போராட்டங்களை அடையாளபூர்வமாக மட்டும் நடத்துவது பயன்தராது. குறிப்பிட்ட மக்கள் கோரிக்கையை தீர்மானித்து, அதில் வர்க்க, வெகுமக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து  உடனடி கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கைகளை மாவட்ட குழுக்கள் படித்து அதில் உள்ள விஷயங்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். மக்களுக்கு பாதகமான விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

நாட்டிலே அதிகமான காலிப்பணியிடங்கள் கோவை மாநகராட்சியில்தான் உள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம். 35 சதவீத  இடங்கள் காலியாக உள்ளது என்கிறது அவ்வறிக்கை. இது தொழிற்சங்க கோரிக்கை மட்டுமல்ல; மக்களுக்கு மாநகராட்சி வழங்க வேண்டிய  அன்றாட பணிகளை இந்த காலிப்பணியிடங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பேசவேண்டும். சுகாதாரம், குடிநீர், கழிவு குப்பைகள் அகற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஊழியர் இல்லாதது மக்களின் உடனடி பிரச்சினையோடு இணைந்தது. தொழிற்சங்கம் உள்ளிட்ட வெகுமக்கள் இயக்கங்கள் இதை பொது கோரிக்கையாக மாற்றி மக்களை போராட்டத்தில் இணைக்க வேண்டும்.

குடியிருப்புகளில் நமது பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அவர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும். பொங்கல் போன்ற பண்டிகைகளை குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் பங்கேற்கும் வகையிலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும், மேலும் வலுவாக நடத்திடவேண்டும். விசாகப்பட்டினத்தில் மே தினத்தை ஒரு நாள் நிகழ்வாக, கொடியேற்றி பேசி முடிக்கும் வழக்கமான நடைமுறையாக அல்லாமல், குடியிருப்பு பகுதியில் உள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்டது. அது மே வாரம் போல் ஒரு வாரம் நடைபெற்றது. மகளிர் தினம் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினால் அவர்கள் நம்மோடு வருவார்கள். பிரச்சாரம், அறைகூவல்கள், போராட்டங்கள் இவைகளுக்கிடையேயான தொடர்பையும் புரிந்து செயலாற்ற வேண்டும். கொல்கத்தா பிளீனத்தில் குறிப்பிட்டதுபோல் மக்களுடன் உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

 தமிழில்: ச. லெனின்



Leave a comment