மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கல்வியும் – பண்பாடும் லெனினது சிந்தனைகள்


– பெனடிக்ற் பாலன்

“ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முதுமாளிப் பட்டமளிப்பு ஆய்விற்க்காக லெனினது கல்வி சிந்தனைகளை தேர்ந்தெடுத்து, அந்த ஆய்வு ஒரு நூலாக வெளிவந்துள்ளது. “லெனினது கல்விச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்கம் அதனை வெளியிட முடிவெடுத்துள்ளது. அவர்களின் அனுமதியோடு, கல்வியும் பண்பாடும் பற்றி லெனினது கருத்துக்களை அலசும் பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.

“சோவியத் கல்வி முறை” என்பது உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக இருந்தது. இன்றும் இருக்கிறது என்பதை மறுப்பவர்கள் அன்றும் இல்லை, இன்றும் இல்லை. அந்த கல்விமுறையை இன்னல்களுக்கிடையே வாழும் இலங்கை நாட்டு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஆய்வு செய்து, தந்தது பெருமைக்குரியது. இலங்கையில் நிலவும் சூழலில், துணிச்சலும், வீரமும், உறுதியும் கொண்ட ஒருவரால்தான், இந்த ஆய்வினை செய்ய மனதை ஒருமுகப்படுத்த முடிந்திருக்கும். இந்த ஆய்வின் மூலம் மறைந்த அ.யோ.பெனடிக்ற் பாலன் என்றும் வாழும் தமிழ்ப்பேசும் உலகில்  பெருமையைப் பெற்றுவிட்டார். கல்வியும் பண்பாடும் பற்றிய இப்பகுதியை படிப்பவர்கள் அதனை உணர முடியும்”.

கல்வியும் பண்பாடும்

உலகக் கல்விச் சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும் அவரவது உலகப் பார்வையின் அடிப்படையிலே பண்பாட்டுக்கும் கல்விக்கும் இடையே உள்ள பரஸ்பரத் தொடர்பு அவற்றின் இடைத்தாக்கம் ஆகியவைப் பற்றிக் காலத்துக்குக் காலம் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

கல்விச் சமூகவியல் பிரதானமாக பண்பாடு, மொழி, குடும்பம், மதம், கல்வி முறைமை, அரசியல் ஆகியவை பற்றியும் அவற்றின் இடைத்தொடர்புகள் பற்றியும் ஆராய்கின்ற ஓர் இயலாகும்.

சமூகமயமாகச் செயன்முறையானது குடும்பமும், கல்வி முறைமையும் திட்டமிட்ட வகையில் பண்பாட்டை ஒரு பரம்பரையிடமிருந்து அடுத்த பரம்பரைக்கு ஊடுகடத்தும் பெருஞ் சமூக நிறுவனங்களாகக் கொள்கின்றன என்பது நவீனக் கல்விச் சமூகவியலாளர்களின் கருத்தாகும்.

மார்க்சிய சிந்தனையாளர்களும், பண்பாடு பற்றியும், கல்வி பற்றியும் அவற்றின் இடைத்தாக்கம் பற்றியும், தமது இயக்கவியல் உலகப் பார்வை மூலமும், வரலாற்றியல் பொருள் முதல்வாத உலகப் பார்வை மூலமும் அணுகித் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

‘பண்பாடென்பது சடப்பொருள் விழுமியங்கள், ஆன்மீக விழுமியங்கள் ஆகியவற்றின் உற்பத்தி, ஒன்றுதிரட்டல், பேணல், வழங்கல் ஆகியவற்றையும் மனித தேவைகள், அபிலாசைகள் முதலியவற்றை நிறைவு செய்வதையும் இலக்காகக் கொண்ட சமூக உறவுகளின் வெளிப்பாடாகும். அது ஆக்கத் தொழில மூலம் உருவாக்கப்படுகின்ற ஆத்மீகப் பெறுமதிகள், தராதரங்கள் ஆகியவை வரலாற்று ரீதியாக விருத்தியுறுகின்ற முறையுமாகும். அதேபோது, உலகத்தை விருத்தியுறச் செய்வதையும் மாற்றியமைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பொருள் உற்பத்தி முறைமையால் நிர்ணயிக்கப்படுகின்ற சமூகப் பெறுமானமுள்ள மானிடப் படைப்பாற்றலின் செயன் முறையுமாகும்”.

சமூகமாக வாழ்கின்ற மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பொருள் உற்பத்தியிலே ஈடுபடுகின்றபொழுது ஒரு தீர்க்கமான உறவுகளையும், ஒருவரோடொருவர் பரஸ்பரத் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தச் சமூக உறவுகளுக்கும், பரஸ்பரத் தொடர்புகளுக்கும் உள்ளேதான் அவர்கள் இயற்கையுடன் இடைத்தாக்கமும் உறவும், பொருள் உற்பத்தியும் நிகழ்த்துகின்றனர். வரலாற்றிலே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மக்களின் வாழ்க்கை முறையை இவையே தீர்மானிக்கின்றன. மக்களின் பண்பாட்டு வாழ்வின் முறையை இவையே தீர்மானிக்கின்றன. மக்களின் பண்பாட்டு வாழ்வின் மூல ஊற்று அவர்களது உளம் அன்று. அவர்களது வாழ்வின் பௌதிக நிலைமையே எனலாம். வாழ்வின் பௌதிக நிலைமைகளால் நிர்ணயிக்கப்படுகின்ற மக்களின் வாழ்க்கை முறையினது சகல இணைக் கூறுகளையும் பண்பாடு எனக் கூறலாம்.

‘புராதன காலத்திலே மக்களின் பண்பாட்டுச் செயற்பாடுகள், பொருள் உற்பத்தியோடு நேரடியாகப் பிணைக்கப்பட்டிருந்த மைக்குச் சான்றுகள் உள எடுத்துக்காட்டாக அக்காலத்திலே பெண்களின் நடனம் கிழங்குகளைத் திரட்டும் வேலையோடு இணைக்கப்பட்டிருந்ததை அது தெளிவாகச் சித்தரித்துக் காட்டிற்று. அவ்வாறே ஆண்களின் நடனம் வேட்டையாடுவதைக் கருவாகக் கொண்ட கிளை கதைகளைச் சித்தரித்துக் காட்டியது. வாழ்க்கையின் பௌதிக நிலைமைகள் மாறும்போது மக்களின் வாழ்க்கை முறையும் மாறுகின்றது. எனவே மனித வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் நிலவிய மக்களின் வாழ்க்கை முறையில் அடங்குகின்ற உற்பத்தி உறவுகள், மொழி, மதம், பழக்க வழக்கங்களின் மனப்பாங்குகள், விழுமியங்கள், ஒழுக்க விதிகள், நீதிநெறிகள், நடை, உடை, பாவனைகள், கருத்துக்கள், எண்ணங்கள், கோட்பாடுகள் முதலிய பௌதிக ஆத்மீக அம்சங்கள் யாவும் பண்பாட்டுக்குள் அடக்கிவிடலாம்.

சமூகத்தின் அடிப்படை அமைப்பான பொருளாதார அமைப்பே உற்பத்தி உறவுகளையும், மக்களின் வாழ்க்கை முறையையும் நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கின்றது. இந்தப் பொருளாதார அமைப்புக்கு இணங்க, அதற்குச் சேவை செய்யும் வகையில், அரசியல் சட்டம், நீதி, மதம், பண்பாடு, கல்வி முதலான சமூக நிறுவனங்கள் அதாவது மேற்கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.

மனித வரலாற்றிலே தனிச் சொத்துரிமையின் தோற்றத்துடன் மனித சமூகமானது சொத்துடைய வர்க்கம், சொத்தில்லாத வர்க்கம் எனப் பிரிந்தமைந்துவிட்டது. அதன் விளைவாக சொத்துடைய வர்க்கம் சுரண்டும் வர்க்கமாகவும், சொத்தில்லாத வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கமாகவும் மாறின. இக்காரணத்தால் சமூக இயக்கத்தின் பிரதான அம்சங்களாக மனிதனை மனிதன் சுரண்டுவதும், வர்க்கப் போராட்டமும் தோற்றம் பெற்றனவெனலாம்.

1917 ஆம் ஆண்டு ருஷிய நாட்டில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சிக்கு முன்னர், ருஷியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் சுரண்டும் வர்க்கங்களை அடிப்படை அமைப்பான பொருளாதார அமைப்பில் ஆதிக்கஞ் செலுத்தி வந்தமையால், அவ்வர்க்கங்கள் சுரண்டல் அடிப்படையில் அமைந்த தமது பொருளாதார அமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், தமது வர்க்க நலன்களைப் பேணும் நோக்கிலும் அரசியல், முதலாம் மேற்கட்டமைப்புகளைத் திட்டமிட்டு உருவாக்கி அவற்றிலும் தாமே ஆதிக்கஞ் செலுத்தி வந்தன. தமது வர்க்கப் பண்பாட்டை முழு நாட்டின் பண்பாடாக நிலைநிறுத்தவும், அப்பண்பாட்டைச் சுரண்டப்படுகின்ற உழைக்கும் மக்கள் அனைவரும் தமது பண்பாடாகத் தம்மயமாக்கி அதைப் பின்பற்றும் வகையில் அவர்களைச் சமூக மயப்படுத்தும் நோக்குடனும், கல்வி முறைமையின் சகல உள்ளடக்கக் கூறுகளையும் உருவாக்கினர்.

அடிமைச் சமூக அமைப்பிலே ஆண்டானின் பண்பாடும், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பிலே நிலப்பிரபுத்துவப் பண்பாடும், முதலளித்துவச் சமூக அமைப்பிலே முதலாளித்துவப் பண்பாடும் ஆதிக்க நிலை பெற்றிருந்தன. இப்பண்பாடுகள் எல்லாம் மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

இவை பண்பாடும் கல்வியும் பற்றிய மாக்ஸிய சிந்தனையில் கருத்து நிலைகளாகும். மாக்ஸியவாதியாக லெனின் இந்த உலகப் பார்வையின் அடிப்படையிலேயே 1917ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் முன்னர் ருஷியாவில் நிலவிய பண்பாட்டுக்கும் கல்விக்கும் இடையிலேயுள்ள பரஸ்பரத் தொடர்பையும், இடைத் தாக்கத்தையும் ஆராய்ந்து தமது கருத்துக்களை வெளியிட்டார். அத்துடன் புதிய சோசலிச அமைப்புக்குப் பொருத்தமான கல்விமுறைமையை ஆக்கி அளிப்பதில் தமது கோட்பாடுகளையும், நடைமுறை விதிகளையும், போதனைகளையும், அரசாணை களையும் வழங்கியுள்ளார்.

வர்க்க சமூகத்திலே கல்வி, பண்பாடு, கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் வர்க்க இயல்பை மறைக்க முயல்கின்ற எல்லாவித சந்தர்ப்பவாதிகள், சீர்த்திருத்தவாதிகள் ஆகியோரின் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக லெனின் புரட்சி இயக்க வளர்ச்சியின் எல்லாக் கட்டத்திலும் தமது கருத்துக்களை உறுதியாக முன் வைத்தார்.

முதலாளித்துவச் சமூகத்திலே ஒரேயொரு பண்பாடு நிலவுகின்றது என்ற கருத்துரையை மறுத்துரைத்த லெனின் ‘தேசியப் பிரச்சனைகள் பற்றிய விமர்சனக் குறிப்புகள் (1913) என்ற கட்டுரையிலே பின்வருமாறு எழுதுகிறார்.

‘ஒவ்வொரு தேசியப் பண்பாட்டிலும் ஜனநாயக மற்றும் சோசலிசப் பண்புக்கூறுகள் உள்ளன. அவைகள் ஆரம்ப அடிப்படைக்கூறு வடிவிலேயே இருக்கலாம். ஏனெனில், ஒவ்வொரு தேசிய இனத்திலும் உழைக்கின்ற, சுரண்டப்படுகின்ற மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுடைய வாழ்க்கை நிலைமையில் ஜனநாயகம், மற்றும் சோசலிசம் பற்றியக் கோட்பாடுகள் தவிர்க்க முடியாத படி தோன்ற வழி பிறக்கின்றது. ஆனால், ஒவ்வொரு தேசிய இனமும் வடிவத்தில் முதலாளித்துவப் பண்பாட்டையும் கொண்டுள்ளது. (அநேக நாடுகள் பிற்போக்கான சமயம் சார்ந்த பண்பாட்டையும் கொண்டுள்ளன) அவைகள் வெறும் கூறுகள் அன்று. ஆனால் ஆதிக்கம் செலுத்துகின்ற பண்பாடாகும்.

1917 ஆம் ஆண்டுச் சோசலிசப் புரட்சிக்கு முன்னர் ருஷ்யாவில் ஆதிக்கம் பெற்றிருந்த பண்பாடுகள் நிலப்பிரபுத்துவப் பண்பாடும், முதலாளித்துவப் பண்பாடுமாகும். முழுச் சனத் தொதையில் பத்தில் ஒன்பது பகுதியினரான தொழிலாளி விவசாயிகள், மற்றும் உழைக்கும் வெகுசனங்களின் பண்பாடு புறக்கணிக்கப்பட்டது. முழுத் தொகையிலும் பத்தில் ஒரு பகுதியினரான நிலப்பிரபுக்களினதும் முதலாளி வர்க்கத்தினதும் பண்பாடு முழு மக்களினதும் பண்பாடாகவும், ருஷிய நாட்டின் தேசியப் பண்பாடாகவும் பறைசாற்றப்பட்டன.

இச்சிறுக் குழுவின் பண்பாட்டை, மக்கள் அனைவரும் ஏற்றிப் போற்றும் வகையிலும், சமூகத்தின் பிரதான இயக்க விதிகளாக மனிதனை மனிதன் சுரண்டுவதையும், அடக்குமுறையையும், அடிமைத்தனத்தையும், இயற்கை நியதியென மக்கள் ஏற்று ஒழுகும் விதத்திலும் கல்வியின் சகல கூறுகளும் திட்டமிட்டு உருவாக்கி அமைக்கப்பட்டிருந்தனவெனலாம்.

சுரண்டும் வர்க்கங்களான நிலப்பிரபுக்களினதும், முதலாளி வர்க்கத்தினதும் பண்பாடு தேசியப் பண்பாடாக ஆதிக்க நிலை பெற்றிருந்தமையும், உழைக்கும் வெகுசனங்களின் பண்பாடு விருத்தியுறாமல் திட்டமிட்டு நசுக்கப்பட்டிருந்தமையையும், லெனின் தமது கட்டுரைகள், கருத்துரைகள் மூலம் சான்றா தாரங்களுடன் வெளிப்படுத்தினார்.

சார் மன்னனின் அடக்குமுறை, ருஷியப் பேரினவாதம், நிலப்பிரபுக்கள் முதலாளிகளின் அநீதியான சுரண்டல் ஆகிய யதார்த்த உண்மைகளையும் தாம் பின்பற்றுகின்ற நீதிநெறி, கீழ்ப்படிதல், ஒழுக்கவிதிகள், நடையுடை பாவனைகள், பழக்க வழக்கங்கள் முதலிய பண்பாட்டு அமிசங்கள் யாவும் தம்முடையதன்று என்பதையும் உணர்ந்து கொண்டால், மக்கள் தமது ஆட்சிக்கு எதிராகவும், தமது நலன்களுக்கு எதிராகவும் கிளர்ந் தெழுந்தார்கள் என்ற காரணத்தால் அவர்கள் கல்லாமல் இருப்பதே நன்று எனத் துணிந்த அவர்கள் மக்களைக் கல்லாமைப் படுகுழியில் வீழ்த்தியிருந்தார்கள்.

இந்த நிலைமையை லெனின் பல கட்டுரைகளிலும், சொற்பொழிவுகளிலும் அம்பலப்படுத்தினார்.

சார் மன்னனின் ஆட்சியின் கீழ் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் உழைக்கும் வெகுசனங்கள் தமது சொந்தப் பண்பாட்டை விருத்தியுறச் செய்யாத அடிமைநிலையில் இருந்தார்கள். என்பதை லெனின் மகாருஷியர்களது தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து’ என்ற கட்டுரையிலே பின்வருமாறு துலாம்பரமாக அம்பலப்படுத்துகிறார்.

‘சாரின் கொலை வெறியர்களாலும், நிலப்பிரபுக்காளாலும் முதலாளிகளாலும் தமது இன்னரும் தாயகத்துக்கு இழைக்கப்படுகின்ற அட்டூழியங்களையும், ஒடுக்கு முறைகளையும், இழிவையும் கண்டு உணர்ந்தும் நெஞ்சு பொறுக்காது வேதனைப்படுகிறோம்.

‘புரட்சி இலட்சியத்துக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த மகாருஷிய சனநாயகவாதியான செர்னிஷேலிஸ்க்கி’ இழிவுறும் தேசம். அடிமையானது. சம். உச்சியிலிருந்து அடிவரை எங்கும் அடிமைகள் என்று அரை நூற்றாண்டுக்கு முன்னர் கூறியதை நாம் நினைவில் வைத்திருக்கிறோம். இதுவுங்கூட கொடுங்கொலைவெறித் தாண்டவங்களையும், வரிசையாய்த் தூக்கு மேடைகளையும், கொடுஞ் சிறைகளையும், பெரும் பஞ்சங்களையும், மதகுருமார், சார்கள், நிலப்பிரபுக்கள், முதலாளிகளுக்கு அடிபணியும் அடிமைப் புத்தியையும் கொண்ட நாடு.

‘அதுவும் முக்கியமாய்ப் பலதேசிய இனமக்களது சிறைக்கூடம்’ என்று பொருத்தமாய் அழைக்கப்படும் ஒரு நாடு’

சார் ஆட்சி, மகாருஷியர்களில் பத்திலொன்பது பகுதியோரை பொருளாதார அரசியல் வழிகளில் ஒடுக்கியது என்பதோடு பிற தேசங்களை அடக்கி ஒடுக்கவும், இந்த அவக்கேட்டைக் கபடமான போலியான தேசபக்தத் தொடர்களால் மூடி மறைக்கவும் போதித்தது. இவர்களை மனச் சோர்வுற்றுச் சீரழியச் செய்கின்றது. மானமிழந்து கேவலப்படச் செய்கின்றது. கேடுகெட்ட இழியோராக்குகின்றது”.

லெனின் அம்பலப்படுத்திய இத்தகைய ஒரு அரசியல், பொருளாதார, சமூகச் சூழ்நிலைகளிலே மக்களது பண்பாடு விருத்தியுறுவது கடினமென்பது வெளிப்படையான உண்மையாகும்.

நிலப்பிரபுக்களும், முதலாளிவர்க்கமும் ஆதிக்கம் பெற்றிருந்த ருசியாவில் மக்களுடைய பண்பாடு திட்டமிட்டு நசுக்கப்பட்டு வந்ததென்பதை லெனின் சோவியற்று அரசாங்கத்தின் சாதனைகளும் இன்னல்களும்’ என்ற கட்டுரையில் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

‘பொருளாதாரம் சம்பந்தப்பட்ட மட்டில் எல்லா விவசாய விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும், பாடசாலை ஆசிரியர்களும் உடைமையாளர் வர்க்கத்திலிருந்து வந்தவர்களாவர். அவர்கள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் அல்லர். சார் நிக்கலொஸ் ஆட்சியானாலும் சரி. குடியரசுத் தலைவர் வில்சனின் ஆட்சியானாலும் சரி ஆலைகளில் வேலை செய்யும் உடைமையற்ற பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தோரும், ஏர்பிடிக்கும் விவசாயிகளும் கல்லூரிப் படிப்புப் பெறவில்லை. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் பணக்காரர்களுக்காக, சொத்துடைமை வர்க்கத்துக்காக மட்டுமே இருந்து வருவதாகும். முதலாளித்துவத்திலே சிறுபான்மையோருக்கு மட்டும் பண்பாடு கிட்டியது”.

ஒரு நாட்டிலே ஆதிக்க நிலையிலுள்ள வர்க்கத்தின் பண்பாடே தேசியப் பண்பாடாக நிலைக்கப்படுமென்பதையும், உண்மையில் பண்பாடு வர்க்க சார்பானதென்பதையும் லெனின் ‘உக்ரைனியர்களுக்காக ஆயர் நிக்கோன் எவ்வாறு வாதிடுகிறார். ‘கலாச்சார தேசிய சுயாட்சி’ ஆகிய கட்டுரைகளிலும், ‘தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்பு’ என்ற தமது நூலிலும் சான்றாதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘தேசியப் பண்பாடு (தேசிய கலாசாரம்) என்பது அந்தப் பதத்தின் வழக்கமான கருத்தில் அதாவது பாடசாலைகளும் இன்னோரன்ற பிறவும், தற்போது உலகின் எல்லா நாடுகளிலும் சமயக் குருமார்கள், முதலாளித்துவத் தேசிய வெறியர்கள் ஆகியோரது ஆதிக்க வலிமை வாய்ந்த செல்வாக்குட்பட்டிருக்கிறதென்பதில் சந்தேகமில்லை.

மகாருஷிய, உக்ரைனியன், யூத, போலிஷ், ஜார்ஜியன் அல்லது வேறு எந்தப் பண்பாட்டைப் பொறுத்தவரையிலும் தேசியப் பண்பாடு என்ற கோசம், மதக்குருக்களினதும், முதலாளி வர்க்கத்தினரதும் மோசடி என அரசியல் உணர்வு பெற்ற தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நூற்றிருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நாடு முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம், எனப் பிளவுபடாதபோது நிலப்பிரபுக்களையும், மதகுருக்களையும் எதிர்த்துப் போரிட ஒருமைப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய ஒதே கோசமாக தேசிய பண்பாடு என்ற கோசம் இருந்திருக்க முடியும். எவ்வாறாயினும், அந்தக் காலம் முதல் முதலாளி வர்க்கத்துக்கும், தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையில் வர்க்கப் போராட்டம் ஒவ்வொரு இடத்திலும் ஆதரவையும் வல்லமையையும் பெற்று வந்தது. சுரண்டுவோர், சுரண்டப்படுவோர் என்று தனித் தேசிய இனத்தைப் பிரிப்பது முடிந்த ஒரு விடயமாகிவிட்டது.

‘பொதுவாக மத குருக்களும், முதலாளி வர்க்கத்தினருமே தேசிய பண்பாட்டைப் பற்றிப் பேச முடியும். உழைக்கும் மக்கள், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசியப் பண்பாட்டைப் பற்றிப் பேச முடியும். முழுமையானதும், உண்மையானதும் தேசிய இனங்களிடையே உண்மையான சமத்துவத்தைக் கொண்டதும், தேசிய நசுக்குதல் இல்லாததும் சனநாயகத்தினை அமுலாக்குவதுமான அப்பண்பாடு மட்டுமே’.

லெனினது இக்கருத்துரைகள் எந்த நாட்டிலும் பண்பாடு வர்க்க சார்பானதென்பதை வெளிப்படத்துகின்றனவெனக் கூறலாம்.

பண்பாடு பற்றிய லெனினது கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் மாபெரும் ருஷிய எழுத்தாளர் மார்க்ஸிம் கோர்க்கி ‘முதலாளித்துவப் பண்பாடென்பது மக்கள் மீதும், புவியின் செல்வங்கள் மீதும், இயற்கை வளங்கள் மீதும் முதலாளித்துவ அதிகாரத்தை விரிவுபடுத்திக் குவித்திடும் முறைமைகளின் செயற்றிட்டமேயன்றி வேறொன்றுமில்லை. பண்பாட்டு விருத்திச் செயற்முறையின் மையக் கருத்தானது முழு மக்களினதும் முன்னேற்றத்துக்கான அவசியமென்பது முதலாளி வர்க்கத்தினால் என்றுமே புரிந்து கொள்ளப்படவில்லை’ எனத் தமது கருத்தைக் கூறியுள்ளார்.

ருஷிய மக்கள் தமது பண்பாட்டை விருத்தியுறச் செய்வதற்குப் பெருந்தடையாக அவர்களது வாழ்க்கையிலே நிலவிய மூலாதாரமான அமிசம் கல்லாமையாகும்.

மக்கள் கல்வி அறிவு பெறுவதையும் அவர்கள் தமது பண்பாட்டை விருத்தி செய்வதையும் விரும்பாத சார் மன்னரும், நிலப்பிரபுக்களும், முதலாளி வர்க்கமும் மக்கள் அறிவொளி பெறுவதைத் திட்டமிட்டுத் தடை செய்து வந்தனர்.

ருஷியாவிலே சார்மன்னர் ஆட்சியின் கீழ் உழைக்கும் தொழிலாளர்களும் சுரண்டப்பட்ட ஏனைய மக்களும் கல்வி பெறாதவாறு தடை செய்வதற்கான எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ருஷிய சமூகத்தின் மக்களுடைய சமூகப் பொருளாதாரக் கல்வி நிலைமைகள் இவற்றுக்குச் சான்றாக உள்ளன.

ருஷிய மக்கள் சனத்தொகையில் பெரும்பான்மையான மக்கள் (90.6 நூற்று வீதம்) கல்வி அறிவு அற்றோராவர். சார் அரசாங்கத்தின் எடுக்கப்பட்ட ஒரேயொரு மதிப்பீடான 1897 ஆம் ஆண்டுப் பொது மதிப்பீட்டிற்கிணங்க ருஷியப் பேரரசின் முழு மக்கள் தொகையில் ஏறக்குறைய நாலின் மூன்று பங்கினர் (71.6சதவிகிதம்) 9 வயதுக்கும் 49 வயதுக்கும் இடையப்பட்டவர்கள் ஐந்து ஆண்களுள் மூன்று பேரும், ஐந்து பெண்களில் நான்கு பேரும் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாகும்.

‘நகர்புறங்களில் 57 நூற்றுவீதமானோர் மாத்திரமே எழுத்தறிவுள்ளவர். கிராமப்புற மக்களுள் இத்தொகை ஒப்பீட்டவளவில் மிகக் குறைவு. அதாவது 23.8  நூற்று வீதமாகும். மத்திய ஆசியா, தூர வடக்கு, திறான்காக்கேசியா, பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் அனைவரும் எழுத்தறிவற்றராவர். நாற்பதுக்கு (40) மேற்பட்ட தேசிய இனங்கள் தமது தாய் மொழியிலேயே எழுத்து மொழி இல்லாதிருந்தனர்.

‘ருஷியப் பேரரசிலே ருஷிய இனமல்லாத எழுத்தளார் எந்தப்படைப்பையும் வெளியிடச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. ருஷியப் பேரரசின் பெரும்பான்மை மக்கள் தமது இலக்கிய ஆக்கங்களை வெளியிடுகின்ற வாய்ப்புக்கள் அளிக்கப் படவேயில்லை. அதிகார வர்க்கம் மக்கள் தமது சொந்தப் பண்பாட்டை விருத்தி செய்கின்ற இயற்கையான ஆர்வத்தைப் பலாத்காரமாக அடக்கியொடுக்கியது.

‘சார் மன்னனின் ஆட்சி அடக்கியொடுக்கப்பட்ட பொதுமக்கள் தமது பண்பாட்டுச் சுதந்திரத்தை இழக்கும்படி செய்தது. அவர்கள் தமது தாய் மொழியிலே பற்றுக் கொள்ளாவகையிலும், தமது சொந்தப் பண்பாட்டு விழுமியங்களை வெளியிடாதவாறும், அவர்களது உணர்வுகளை மரத்துப் போகச் செய்வதற்குரிய சகல முயற்சிகளையும் செய்தது.

சிறிய இனங்களைப் பொறுத்தவரையில் அவைகளின் நிலைமை படுமோசமானது. அவர்கள் மனித நாகரீகத்தின் நலன்களை அடைய முடியாவதவாறு எல்லா வாசல்களும் மூடப்பட்டன. அத்தேசிய இனங்கள் மிகக் கொடூரமாக சமூக ரீதியிலும், இனரீதியிலும் எதேச்சாதிகார அரசாலும், உள்ளூர் சுரண்டலாளர்களாலும் அடக்கியொடுக்கப்பட்டார்கள்.

கல்விக்கான மக்கள் கமிசாரகத்தின் (1917-20) ஆண்டுகளுக்கான அறிக்கை இவ்விடயம் பற்றிப் பின்வருமாறு குறிக்கின்றது.

முற்றுமுழுதாக் கல்வியறிவற்ற இத்தேசிய இனங்கள் அறியாமையிலும், இருளிலும் கிடந்து சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்தார்கள். அவர்கள் பற்றி முழு அதிகாரங்களும் கிராமியப் போலிசாரிடமும், போலிÞ அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. போலிசார் அத்தேசிய இனங்கள். தமது தாய் மொழியிலே செய்திப் பத்திரிகை வெளியிடும் உரிமையையும், அவர்களது பிள்ளைகள் தமது தாய் மொழியில் கல்வி கற்கும் உரிமையையும் பொது இடங்களில் தமது தாய் மொழியில் பேசும் உரிமையையும் பறித்துக் கொண்டார்கள்.

அவர்கள் முதுகொடிய உழைத்தும் தொடர்ந்தும் பசியால் வாடினர். பரிகாரம் ஏதுமின்றிப் பயங்கர நோய்களினால் துன்புற்றனர்.

மக்களினது இத்தகைய கல்லாமை நிலைமையை “மக்கள் கல்வி அமைச்சகக் கொள்கைப் பற்றிய பிரச்சனை நமது மக்கள் பற்றி” ருஷியர்களும் நீக்ரோக்களும் “நம்முடைய அமைச்சர்கள் எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்? முதலிய கட்டுரைகளிலே புள்ளி விபரங்களுடனும், சான்றாதாரங்களுடனும் வெளிப்படுத்திய லெனின் ‘இந்த அளவுக்கு வெகுசனங்களிடமிருந்து ஒளியும் அறிவும் தரத்தக்க கல்விக் கொள்கையிடப்பட்ட அநாகரிகமான நாடு வேறு ஒன்றும் இருக்க முடியாது. இத்தகைய வேறு எந்த நாடும் ஐரோப்பாவில் இருக்கவில்லை. ருஷியா மட்டும் விதிவிலக்கு, ஜனரத்திரளின் சிறப்பாக விவசாயிகளின் அநாகரிகதனமான இப்பின்னடைதல் தற்செயல் நிகழ்ச்சியன்று, நிலப்பிரபுக்களின் ஆதிக்கதின் கீழ் இது தவிர்க்க முடியாதது.

வளரும் இளம் தலைமுறையினரால் ஐந்தில் நான்கு பங்கினர் ருஷியாவில் பண்ணையடிமை, உடைமையாளர்களின் அரசு ஆட்சியால் கல்லாமைப் படுகுழியில் தள்ளப்படுகிறார்கள். என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் உள்நாட்டு விவகார அமைச்சர் துர்னோவோ என்பவர் ஒரு வழக்குரைஞருக்கு எழுதிய கடிதத்தில் சாதாரண மக்களிடமிருந்தும் உழைப்பாளி மக்களிடமிருந்தும் பாடசாலைகள் எவ்வளவுக்கெவ்வளவு விலகியிருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகியிருக்க வேண்டும் என்று எழுதியதைக் குறிப்பிட்டுத் தொழிலாளர்களே! உழைக்கும் மக்கள் அறிவைப் பெறுவதைக் கண்டு நம் அமைச்சர்கள் உயிர் போகும் அளவுக்கு பீதி அடைகிறார்கள் பாருங்கள் எனச் சுட்டிகாட்டினார்.

ருஷியாவின் மக்கள் தொகையில் பிரபுக்குலத்தினர் ஒன்றரைச் சதவீதத்தினர்தான். எனவே அரசாங்கம் எல்லாவிதப் பாடசாலைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் மக்களில் ஒன்பது பேர்களிடம் பணத்தை எடுத்துப் பிரபுக் குலத்தினருக்குக் கல்வி கற்பிக்க அந்தப் பணத்தைப் பயன்படுத்தியும் வருகின்றது” என்ற உண்மையை எடுத்துக் காட்டியதன் மூலம் எத்தகைய பண்பாட்டு விருத்தியை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதென்பதை நிதர்சனமாக வெளிப்படுத்தினார்.

சார் ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட கல்வியின் இயல்பு பற்றி லெனின் யதார்த்த உண்மை நிலைமைகளை ஆதாரங்காட்டித் தெளிவுபடுத்தியவற்றை மாபெரும் ருஷிய எழுத்தாளரான மாக்ஸிம் கோர்க்கியின் பின்வரும் கூற்று வலியுறுத்துவதாயுள்ளது.

கல்வி கற்கும் உரிமை – அதாவது வாழ்வின் அறிவைப் பெருக்குவதற்கான தர்க்க இயல்சிந்தனையும் ஆர்வத்தையும் விருத்தி செய்வதற்கும், தமது தொழில் நிலைமைகளை முன்னேறுவதற்குமான உரிமை விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் மாற்றமுடியாத் தன்மையையும், அதன் சட்ட முறையான உரிமையையும் நம்புகின்ற அதன் ஊழியர்களை உருவாக்குவதற்கான கல்வியே பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகின்றன.

‘மக்களுக்கான கல்வி’ என்பது எழுத்தில் வரையறுக்கப் பட்டும், அது பற்றிப் பெரிதாகப் பேசப்பட்டும் வந்ததுடன், கல்வியறிவின் முன்னேற்றம் பற்றிப் புளுகித் தள்ளிப் பறைசாற்றப்பட்டும் வந்தது. ஆனால் உண்மையிலே உழைக்கும் மக்கள் மனங்களிலே இணைக்கப்படுத்த முடியாத இன, தேசிய மத வேறுபாடுகளைப் புகட்டி அவர்கள் பிளவுப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மக்கள் கல்வி அறிவைப் பெறுவதைத் திட்டமிட்டுத் தடை செய்த ஆளும் வர்க்கங்களான சார்மன்னன், நிலப்பிரபுக்கள், முதலாளி வர்க்கத்தினர் ஆகியோரின் முயற்சிகளைத் வர்க்க ரீதியாக வெளிப்படுத்திய லெனின் அவ்வர்க்கங்கள், மக்களுக்கு அளித்த கல்வியின் சகல கூறுகளும் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறு குழுவினரது பண்பாட்டை மக்கள் ஏற்றுப் போற்றித் தாமாக அனுசரிக்கும் வகையிலும் மக்கள் தமது சொந்தப் பாண்பாடு விழுமியங்களை அவர்கள் அபிவிருத்தி செய்ய முடியாத பான்மையிலும் திட்டமிட்டு உருவாக்கியமைத்தனர் என்பதைத் தமது பல அதவானிப்புகள் மூலம் தெட்டத் தெளிவாக நிறுவப் பெருமுயற்சி எடுத்துள்ளார்.

– தொடரும்Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: