மனித சமூக வரலாற்றை பொருள்முதல்வாதப் பார்வையில் ஆய்வு செய்யும்போது, மனித சமூகம் பல கட்டங்களைத் தாண்டி பயனப்பட்டு வந்திருப்பது தெளிவாகிறது. அவற்றை ஆதிப் பொதுவுடைமை சமூகம், ஆண்டான் அடிமை சமூகம், பண்ணையடிமை சமூகம், முதலாளித்துவ சமூகம் என வரிசைப்படுத்தி சொல்வார்கள். இவை ஒவ்வொன்றும் சமூகக் கட்டங்கள் ஆகும்.
(வரலாற்றை ஆய்வு செய்து ஒரு வரிசையாக விளக்குவதை வைத்து இந்த மாற்றங்கள் ஒன்றுக்குப் பின் மற்றொன்று என இயந்திர கதியில் நடக்கும் என்று புரிந்துகொள்ளக் கூடாது.)
ஒரு காலகட்டத்தில் யார் ஆளும் வர்க்கம் என்பதும், அப்போது ஆதிக்கம் செலுத்தும் உற்பத்தி முறை என்ன என்பதும்தான் – அது என்ன சமூகக் கட்டம் என்பதற்கான அடிப்படைகள். ஒரு வர்கத்திடம் உள்ள அதிகாரத்தை மற்றொரு வர்க்கம் கைப்பற்றுவதைத்தான் புரட்சி என்று அழைக்கிறோம்.
சமூக மாற்றத்தை விவரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இன்றைய ஆளும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியை “முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின்கீழ் அது ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருந்தது” என்று விவரிப்பதுடன், சந்தை விரிவாக்கமும், தேவைகளின் அதிகரிப்பும் அந்த வர்க்கத்தை எப்படி சக்திமிக்கதாக ஆக்கின என்று விளக்குகிறது.
இப்படி சமூகத்தின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப – உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடையாத போது அது பஞ்சத்திலும், பற்றாக்குறையிலுமே முடியும். இந்த புறச் சூழலைப் பயன்பபடுத்திக் கொண்டு – ஆளும் வர்கங்களுக்கு எதிரான அரசியல் உணர்வுபெற்ற கலகங்கள் வெடிப்பதும், அதன் மூலம் அப்போதைய ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி புதிய வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்துவதே சமூகப் புரட்சியாகும்.
இதன் மூலம் புதிய உற்பத்தி முறைக்குள் சமூகம் நுழைகிறது. வர்க்கங்களைக் குறித்தும், அவற்றின் தனித்துவமான நலன்களையும் ஆய்வு செய்யும் மார்க்சியம் – முதலாளித்துவ வர்க்கம் பற்றியும் ஆய்வு செய்து, வரலாற்றுப் போக்கில், முதலாளித்துவ வர்க்கம் வகித்திருக்கும் புரட்சிகர பாத்திரத்தைக் குறிப்பிடுவதுடன், இந்தப் புரட்சி “வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் – முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் – இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.” என்பதையே குறிப்பிடுகிறது.
வர்க்கமற்ற, சுரண்டலற்ற சமுதாயத்தை லட்சியமாக வரித்துக் கொண்டுள்ள சோசலிஸ்டுகளுக்கு – தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியே இலக்காகும். அது ஆளும் வர்க்கத்தின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தை அமர்த்துவதன் மூலம் தனியுடைமையை முடிவுக்குக் கொண்டுவரும்.
இன்றைய சூழலில், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவது வெளிப்படை. உலகம் முழுவதும் முதலாளித்துவம், தன் இயல்பான நெருக்கடிச் சூழலில் தானே சிக்குண்டு, தப்பிக்க முடியாத வகையில் தவித்துவருகிறது. இத்தகைய சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் வலிமையுடன் உழைக்கும் வர்க்கங்கள் வெகுண்டெழுவதே, புரட்சிகர மாற்றத்துக்கான அடிப்படை. அதற்காக அந்த வர்க்கங்களை திரட்டுவதும், அரசியல் உணர்வு கொள்ளச் செய்வதும் கம்யூனிஸ்டுகளின் முன் உள்ள கடமை.