டோனால்ட் ட்ரம்ப் வெற்றி எதிர்பாராதது. ஏற்கனவே இருந்த அமெரிக்க அரசை விட, கூடுதலான வலதுசாரி கொள்கைகளின் பிரதிநிதி இவர். சிக்கல்களும் முரண்பாடுகளும் நிறைந்தவர். அடுத்து என்ன செய்வார் என ஊகிக்க முடியாது. பொதுவாக ஐரோப்பாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் ஏற்பட்டுள்ள வலதுசாரி அரசியல் திருப்பத்தின் ஒரு பகுதியாகவே ட்ரம்ப்பின் வெற்றியைப் பார்க்க வேண்டும்.
அமெரிக்காவின் உள்நாட்டு கொள்கைகளைப் பொறுத்த வரை, ட்ரம்ப்பின் ஆட்சியில் அவை மேலும் வலதுசாரி பாதையில் செலுத்தப் படும். ஏற்கனவே அவரது அமைச்சரவையை, பெரும் கோடீஸ்வரர்கள், கார்ப்பரேட்டுகள், வலதுசாரி பார்வை உள்ள ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகளைக் கொண்டு நிறைத்து வைத்திருக்கிறார். சிறுபான்மையினர், இடம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களைப் பொறுத்த வரை கடும் எதிர்மறை நிலைபாடுகளைக் கொண்டிருக்கிறார்.
அயல்துறை கொள்கைகளைப் பொறுத்த வரை அவர் பாதை முரண்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். பாரம்பர்யமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுத்து வந்த சில நிலைபாடுகளில் மாற்றம் வரலாம். உதாரணமாக ரஷ்யா குறித்து, அதே போல் உக்ரேன் பிரச்னை, நேட்டோ படைகள் ரஷ்யாவை இலக்கு வைத்து கிழக்கு நோக்கி விரிவாக்கப் படும் நிலை போன்றவற்றில், ரஷ்யாவுடன் நெருக்கமாக செல்ல வாய்ப்பு உண்டு. அதே சமயம் சீன எதிர்ப்பு நிலை தீவிரப்படுத்தப் படும். சீனாவுடனான உறவுகளில் புதிய பதட்டங்கள், சிக்கல்கள் உருவாகும். இராக், லிபியா, சிரியாவில் செய்தது போல், வேண்டாத அரசுகளை ராணுவத்தை ஏவிக் கவிழ்ப்பது இனிமேல் நடக்காது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப்புக்கு அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் பெரும் ஆதரவு கிட்டியிருக்கிறது. உலகமய கொள்கைகளின் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள், மலிவான உழைப்புக்காகவும், குறைந்த சம்பளத்துக்காகவும் கொள்ளை லாப நோக்குடன் அமெரிக்காவிலிருந்து இதர நாடுகளுக்கு மாற்றப் பட்டுள்ளன. இதனால், அமெரிக்க தொழிலாளி வர்க்கம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஐரோப்பாவின் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரிதாக இல்லை, அங்குள்ள சமூக ஜனநாயகக் கட்சிகள் (அங்கு இடதுசாரி எனக் கருதப்படுபவை) நவீன தாராளமய கொள்கைகளை ஆதரிப்பதால், அவற்றின் ஆதரவு தளமாக இருந்த தொழிலாளி வர்க்கம், தீவிரமாக தேசியம் பேசுகிற வலதுசாரி கட்சிகளுக்கு ஆதரவு தரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளை அமெரிக்க மண்ணிலிருந்து மாற்ற அனுமதிக்க மாட்டோம், சுதந்திர வர்த்தகத்தை அனுமதிக்க மாட்டோம், தொழிலாளிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று வலதுசாரிகள் தீவிர தேசியத்தை முன்வைக்கும் போது, நெருக்கடியில் இருக்கும் தொழிலாளிகளை அந்த முழக்கங்கள் ஈர்க்கின்றன. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டுமா வேண்டாமா என்ற கருத்து கணிப்பில் வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் நிலை எடுத்ததற்கு இதுவும் ஒரு காரணம். எனவே, தீவிர தேசியம் பேசுகிற வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவாக தொழிலாளிகளின் கணிசமான பகுதி திரும்பியிருப்பது, இக்கால கட்டத்தில் முன்னுக்கு வந்துள்ள, கவலைக்குரிய ஒரு புதிய போக்காகும்.
இப்போக்குடன் தொடர்புடையதாக ட்ரம்ப்பின் வெற்றியைப் பார்க்க வேண்டும். இனி தான் அவர் பதவி பிரமாணம் செய்ய இருக்கிறார். அவரது நடவடிக்கைகளை மேலும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
Leave a Reply