கடந்தகால, பாசிசத்திற்கும்,இன்றைய பாசிசத்திற்கும் என்ன வேறுபாடு? உலகில் பாசிச அச்சுறுத்தலை இன்று எவ்வாறு எதிர்கொள்வது? இதற்கான அழுத்தமான தத்துவ விளக்கங்களுடன் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இக்கட்டுரையை வடிவமைத்துள்ளார்.
- அன்று ஏகாதிபத்தியங்களுக்குள் மூலதனத்தை திரட்டிட போட்டி மூண்டது.உலகை பங்கு போட்டுக் கொள்ளும் உக்கிரம் மேலோங்கியது.
- மறுபுறம்,உலக மக்களிடையே வறுமை வேலையின்மை தாண்டவமாடியது.
- இந்த நிலையில் பாசிசம் வேற்று இனத்தவரை எதிரியாக வகைப்படுத்தி கொலை வெறி கொண்டு வேட்டையாடியது.இந்த “வேற்று”இனத்தார் என்ற சித்தாந்தம், பாசிசம் அரசுகளை கைப்பற்றி அதிகாரத்திற்கு வரவும் உதவியது.
- ஏகாதிபத்தியங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரம் பெற்று இரண்டாம் உலகப் போர் எனும் பேரழிவு ஏற்பட்டது.
- போரின் அழிவையும் கொடூரத்தையும் சந்தித்த மக்கள் இதுகாறும் பாசிசத்தை ஒதுக்கியே வந்தனர்.
- முதலாளித்துவமும் மக்களின் ‘நலன் காக்கும்’அரசு என்ற வேடம் பூண்டது.சோவியத் தாக்கத்தினால் சில நன்மைகளையும் செய்தனர். கீன்ஸ் கொள்கை அடிப்படையிலும் இவை தொடர்ந்தன.
- இதனால் பாசிசம் சிறிது அடங்கி இருந்தது.
- ஆனால் நவீன தாராளமயம் நிலைமையை மாற்றியது.அரசு மக்கள் நலன் காக்கும் என்ற நிலையிலிருந்து விலகியது; முற்றாக, கார்ப்பரேட் மூலதன நலன் காக்கும் அரசுகளாக மாறின.
- முன்பு போன்று ஏகாதிபத்தியங்களுக்குள் முரண்பாடு என்றில்லாமல்,அவர்கள் கைகோர்த்து நடைபோடும் புதிய சூழல் உருவானது.நிதி மூலதனம் ஆதிக்கம் பெற்றுள்ளதால்,அது உலகை கூறு போடாமல் வலுப்பெற்று வருவதால்,அந்த முரண்பாடு மட்டுப்பட்டுள்ளது.
- நிதி மூலதனத்திற்கு உலகை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் உதவிடாது.அந்த நோக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,கூட்டாக சுரண்ட வேண்டும் என்பது மேலோங்கியுள்ளது.
- அதே போன்று அரசு விலகி தனியார் ஆதிக்கம் செலுத்தும் சூழல்(நவீன தாராளமயம்) அதற்கு ஏற்புடையது.
- இக்கொள்கைகளால்,பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றது.அதிலிருந்து மீள முடியாமல் முட்டுச்சந்தில் சிக்கி கொண்டு தப்பிச் செல்ல வழியேதும் இல்லாமல் உலக முதலாளித்துவம் உள்ள நிலை.
- மறுபுறம், மீண்டும் “வேற்று” சித்தாந்தம் விஸ்வரூபமெடுக்கிறது.வேற்று இனத்தினர்; வேற்று மதத்தினர் என ஏராளமான “வேற்று”க்களுடன் பாசிசம் தலை தூக்கி வருகிறது.
- முன்பு போன்று ஆட்சிக்கு பாசிசம் வரக் கூடும்;அல்லது ஆட்சிக்கு வராமல் இருக்கலாம்.ஆனால் சமுக தளம், அரசியல் தளத்தை பாசிச சித்தாந்தம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும்.
- முந்தைய பாசிசம் உலகப் போரில் முடிந்தது.இன்றைய பாசிசம் மனித இனத்தை அழிப்பதில் முடியும்.
எவ்வாறு பாசத்தை முறியடிப்பது.?
- முதலில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பாசிச சக்திகள் வளர்ச்சி பெற்று வருவதற்கு உறுதுணையாக இருப்பது நவீன தாராளமயம் என்பதனை உணர்ந்து கொள்வது அவசியம்.
- முதலாளித்துவ முறையை குறை காண்பதற்கு பதிலாக “வேற்று” கூட்டத்தினை எதிரிகளாக முன்வைத்து செய்யப்படும் மக்கள் திரட்டலை மக்கள் அடையாளம் கண்டிட வேண்டும்.
- இதனை இடதுசாரிகளே செய்திட இயலும்.
இதற்கு
- பாசிச எதேச்சதிகாரத்தை ஜீரணிக்க முடியாத,
- தற்போதைய ஜனநாயகம் நீடிக்க வேண்டுமென நினைக்கின்ற,
- “வேற்றுமை”பாராட்டாமல் ஒற்றுமை நிலைப்பெற விரும்பும் சக்திகள்
- அதாவது “லிபரல்” சக்திகள்
- (இந்தியாவில் மதச்சார்பின்மை நெறி விரும்பும் சக்திகள் உள்ளிட்டோர்)
திரட்ட வேண்டும்.
- இந்த சக்திகளை இடதுசாரிகள் வென்றடைய வேண்டும்.தனக்கென்று (நவீன தாராளமயக் கொள்கைக்கு நேர் எதிரான) இடது மாற்று பொருளாதார திட்டத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு லிபரல் வெகுமக்கள் இடதுசாரியினர் சக்திகளை திரட்ட வேண்டும்.இதற்கு அவர்களோடு நெருக்கம் கொள்ள வேண்டும்.
இந்த முடிவுகள் இன்றைய நிலை பற்றிய ஆழமான ஆய்வு அடிப்படையில், பிரபாத் பட்நாயக் வந்தடையும் முடிவுகள்.
(இந்த முன்னுரையை படித்த பிறகு பொறுமையுடன் அவரது கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்)
– என்.குணசேகரன்
ஆங்கிலத்தில் : >>>>>
இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் கடந்த அரைநூற்றாண்டாக, எல்லாவிடத்திலும் ஒரு முனைப்பான அரசியல் சக்தியாக பாசிசம் உருவகாமல் நின்றுவிட்டது. பல எதேச்சதிகார, கொலைபாதகமும் கொண்ட அரசாங்கங்கள், ராணுவ சர்வாதிகாரங்கள் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அமைந்திருந்திருக்கின்றன, அவை பெரும்பாலும் சி.ஐ.ஏ உதவியுடன் முற்போக்கு தேசியவாத அரசுகளுக்கு எதிராக வென்று அமையப்பெற்றன என்பதும், அவை அமெரிக்காவின் உத்தி ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்றுவந்ததும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று. ஆனால், பாசிச அரசாட்சியிலிருந்து அவற்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பாசிச அரசாட்சியென்பது மிகப் பரிதாபகரமான நிலையில் உள்ள சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை பரப்புவதன் மூலம் அரசியல் நோக்கம் கொண்ட வெகுமக்கள் திரட்டலைச் சார்ந்தது. சோசலிசத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையிலான போட்டிதான் முக்கியமானது என, எனது தலைமுறையினரும், அடுத்தடுத்த பல தலைமுறையினரும் நம்பிவந்தோம்.
அடங்கிப்போயுள்ளதாக பாசிசம் காட்சியளிப்பதற்கு இரண்டு மையமான காரணிகளைக் காண்கிறேன். அதில் முதலாவது, மானுட வரலாற்றில் மனித குலத்தைச் சூறையாடும் வகையில், பாசிசம் திணித்த போர்களின் வழியே கட்டமைத்து எழுப்பிய கடும் வெறுப்பு; பாசிசம் என்ற சொல் பெரும் போர்களை திணிக்கும் உச்சகட்ட பகைமை என்பதற்கு நிகரான சொல்லாக மக்களின் மனங்களில் இடம்பெற்றது. இரண்டாவது உலகப் போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில், பாசிச வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்பு மற்றும் கொடிய வறுமை ஆகியவை கடந்துபோன வரலாறாகிவிட்டது; சமூக ஜனநாயகம் என்ற பாதுகாப்புக் கவசத்தின் கீழ் முன்னேறிய நாடுகளில் கினீசின் ‘கிராக்கி மேலாண்மை’ அறிமுகப்படுத்தப்பட்டது: அது ‘முதலாளித்துவத்தின் பொற்காலம்’ என அழைக்கப்பட்டது, காலனியத்திற்கு பிறகான காலத்தில் மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவரப்பட்ட சமூக, பொருளாதார துறைகளில் அரசுக்கட்டுப்பாடுக் கொள்கைகள், காலனியச் சுரண்டலின் கொடூரங்களுக்கு ஆளாகியிருந்த பெரும்பகுதி மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், மேம்பட்ட வாழ்க்கையையும் கொடுத்தன.
கடைசியாகக் குறிப்பிட்ட உண்மையை இப்போது ஏற்றுக்கொள்ள சிரமமாய் இருக்கலாம். ஆனால் இந்தியாவே அந்தக் கருத்தை உணர்த்தும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில், 1900 ஆண்டுகளில் குடிமக்களின் ஆண்டு உணவுதானிய உட்கொள்ளல் 200 கிலோ கிராம்களாக இருந்தது, 1945-46 ஆண்டுகளில் 136.8 கிலோ கிராம்களாக குறைந்தது, 1980களின் இறுதியில் அது 180 கிலோ கிராம்களாக உயர்ந்தது. (புதிய தாராளவாத ‘சீர்திருத்தங்களுக்கு’ பின் அது ஏறத்தாழ 165 ஆக குறைந்துவிட்டது). இந்தியாவின் வருமான வரி விபரங்களைக் கொண்டு, பிக்கட்டி மற்றும் சான்செல் ஆகியோர் செய்த கணக்கீட்டில், மக்கள் தொகையின் முதல் 1 விழுக்காடு பேர், 1930களில் வருமானத்தில் 21 விழுக்காட்டை பெற்றுவந்தனர். அது 1980களில் 6 விழுக்காடு என்பதாகக் குறைந்தது (2014 ஆம் ஆண்டுகளில் அது 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது)
முன்னேறிய மற்றும் வளர்ச்சிக் குறைந்த நாடுகளில் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பின் மீது அரசுக்கட்டுப்பாட்டுக்கு முடிவுகட்டிய நவதாராளமயத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட, அமெரிக்காவின் நிகழ்ந்த டாட்காம் குமிழி (1997 – 2001 ஆண்டுகளில் இணையப் பயன்பாட்டின் மூலம் ஊகமாக ஏற்பட்ட பொருளாதாரப் பெருக்கம்) மற்றும் வீட்டு வசதிக் குமிழி (housing bubble ) ஆகியவை உலகப் பொருளாதார நடவடிக்கைகளை சற்று மேல் நிலையிலேயே வைத்திருந்தன. எனினும் வீட்டு வசதிக் குமிழி உடைந்த நிலையில், உலகப் பொருளாதாரம் ஒரு நெடிய நெருக்கடிக் காலத்திற்குள் நுழைந்தது. தற்போதுள்ளதைப் போல இடையிடையே மீட்சி குறித்த பேச்சுகள் எழும்; ஆனால் யாரோ சொன்னதைப் போல, பந்து தரையில் குதித்துக் கொண்டிருப்பதோடு (analogy of a ball bumping along the floor ) ஒப்பிடும் வாதங்கள், பந்து தரையை நோக்கி வீழும்போது அதனோடு சேர்ந்தே நொறுங்கிவிடுகின்றன. இப்போதைய மீட்சியும் கூட தற்போது அமெரிக்க சந்தையின் வாங்கும் தன்மையில், அமெரிக்க மக்களின் செலவுத்திறைக் காட்டிலும் கூடுதலான அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே அது அதிககாலம் நீடித்திருக்கக் கூடிய ஒன்றல்ல.
போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போலவே இப்போதும், முதலாளித்துவ உலகத்தின் நெருக்கடி, உலகமெங்கும் பாசிச வளர்ச்சிக்கான புதிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. ஒருவர் இப்பிரச்சனை அத்தனை எளிதாகப் பார்க்கக் கூடாது; எடுத்துக்காடாக, ஜெர்மனியிலேயே ஏற்பட்டுள்ள நெருக்கடி பல நாடுகளை பல நாடுகளை விடவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது, ஜெர்மனியில் வளரும் பாசிசத்தை உலக முதலாளித்துவ நெருக்கடி, அதனால் ஜெர்மனியில் உருவாகும் விளைவுகளோடு சேர்த்து விளக்கிப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு அமைப்பு இயங்கும் முறை மீது குற்றம் சாட்டாமல், ”மற்றவர்களை” (சிறுபான்மையினரை) குற்றம்சாட்டுவதன் அடிப்படையில் அரசியல் நோக்கத்துடன் வெகுமக்களைத் திரட்டுதல், இந்தியா உள்ளிட்டு பல நாடுகளில் பரவலாக வளர்ச்சி பெற்றிருப்பது தெளிவானது.
இதன் பொருள் பாசிச அரசு பல இடங்களில் அரசதிகாரத்திற்கு வந்தே தீரும் என்பதோ, அல்லது அவர்கள் அதிகாரத்திற்கு வரும் இடங்களில், பாசிச அரசை ஏற்படுத்தி, அதன் ஆட்சியை நிலைநாட்டுவதில் உறுதியாக வெற்றியடையும் என்பதாகவோ பொருள்கொள்ள வேண்டியதில்லை. ‘பாசிசத்தின் கீழ், அடுத்த அரசாங்கம் ஒன்று இருப்பதில்லை’ என்ற புகழ்பெற்ற மைக்கேல் கலெக்கியின் மேற்கோள், அவர் குறிப்பிட்ட அக்காலகட்டத்தில் இருந்ததைப் போலவே இன்றைய காலங்களிலும் உண்மையல்லாது போகலாம். ஆனால், தற்கால பாசிசம் இன்னும் சில காலத்திற்கு நீடித்திருக்கப் போகிறது என்பது நிச்சயமான உண்மை.
மேற்குறிப்பிட்ட வகையில் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் பாசிசத்தை ஓரங்கட்டிய இரண்டு நிலைமைகளும் இப்போது இல்லை. தற்கால பாசிசம், போர்களின் மூலம் (மனிதகுலத்திற்கு அளவற்ற அழிவுகளை ஏற்படுத்துகிற அதே நேரத்தில்) தன்னைத்தானே அழித்துக்கொள்வதாக இல்லை. பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான போட்டி, அல்லது லெனின் பெயரிட்டு அழைத்த ‘ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரூரமான போட்டா போட்டி’ மட்டுப்பட்டிருப்பது வெளிப்படை, மேலும் அது அப்படியேதான் மட்டுப்பட்ட நிலையிலேயே தொடரும் என்றும் தெரிகிறது, இதற்கு முக்கியக் காரணம் நிதிமூலதனம் ஆகும். லெனின் காலத்தைப் போல அல்லாமல் அது இப்போது சர்வதேசம் தழுவியது, தனது எல்லைதாண்டிய கட்டற்ற சுற்றோட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்திடும் என்கிற காரணத்தால் உலகை எந்த வகையிலும் தனித்தனி செல்வாக்கு மண்டலங்களாக பிரிப்பதற்கு அது எதிராக நிற்கிறது. டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக போர்முரசு கொட்டிவரும் போதிலும், உடனடியாக எந்தப் போரும் நிகழப்போவதாக இல்லை; இருப்பினும் சில கட்டுக்குள் உள்ள முரண்பாடுகள் வெடித்தாலும் கூட இதனால் நேரடியாக பங்குபெறாத பிற நாடுகளில் உள்ள பாசிச சக்திகள் செல்வாக்கு இழந்துவிடாது.
அதைப் போலவே, முதலாளித்துவத்தின் பொற்காலத்திற்கு திரும்புவது மட்டுமல்ல, நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்பது கேள்விக்கிடமற்றதாகிவிட்டது; தாராளவாதிகளிடம் தற்போதைய நெருக்கடி நிலைக்கு நம்பத்தகுந்த தீர்வுகள் ஏதும் இல்லை. பெரும்பாலான தாராளவாதிகள், நெருக்கடி உள்ளது என்று அங்கீகரிப்பதில் கூட பாராமுகமாக உள்ளனர். தேர்தல் கால பரப்புரையில் டிரம்ப் நெருக்கடியைக் குறித்து பேசவேனும் செய்தார் என்பதுடன் அதற்கு ‘வெளியாட்களை’ குற்றம் சொல்லியதுடன், பகைமையைத் தூண்டவும் செய்தார், ஹிலாரி கிளிண்டன் அதுகுறித்து பேசவில்லை என்பதுடன், நெருக்கடி இருப்பதையே அவர் அங்கீகரிக்கவில்லை.
அரசு செலவினங்களின் வழியே கிராக்கியை ஊக்கப்படுத்துவது, அது ராணுவத் தேவைக்கான செலவாக இருந்தாலும் கூட, அது நிதிப்பற்றாக்குறையின் வழியாகவோ அல்லது முதலாளிகளின் மீது வரிபோடுவதன் மூலமாகவோ தான் கைகூடும் ( தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஏதாவதொரு வகையில் நுகர்வுக்காக செலவிடும் தொழிலாளிகள் மீது வரிபோடுவது , கிராக்கியை அதிகரிக்காது) அரசு செலவினங்களை உயர்த்துவதற்கான மேற்சொன்ன இரண்டு நிதி ஏற்பாடுகளும் நவதாரளமயக் கட்டமைப்பில் விலக்கப்பட்டவை, இந்த நடவடிக்கைகள் உலகமய நிதி வெறுப்புக்கு உள்ளான நடவடிக்கைகளாகும். அத்துடன் பாசிஸ்டுகள் மட்டுமல்லாது தாராளவாதிகளுக்கும் உலகமய நிதிமூலதனத்தின் மேலுள்ள அக்கறை எவ்விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அவர்கள் பாசிஸ்டுகளை விடவும், உலகமய நிதி மூலதனத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நவ தாராளமயத்திற்கு உறுதியாக இருப்பவர்கள். (இருப்பினும், பாசிஸ்டுகளை விட தாராளவாதிகள் நவீன தாராளமயத்தில் உறுதியாக இருப்பார்கள் என்பது இந்தியச் சூழலில் உண்மையானதல்ல, அதிகாரத்திலிருக்கும் வகுப்புவாத பாசிஸ்டுகள், ‘தாராளவாத’ காங்கிரசைப் போலவே நவ தாராளமயத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக உள்ளனர்)
இப்படிப்பட்ட சூழலில் நாம், நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது ‘தேர்தல் விளையாட்டுகளை’ விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக ‘பாசிசமயத்தை’ நோக்கி சீராக முன்னேறும்.
நவதாராள முதலாளித்துவத்திற்குள், பாசிசஇருப்புக்கு அணைபோடவோ ஓரங்கட்டவோ முடியாது. உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியில் மூழ்கடித்து, முட்டுச் சந்தில் தப்பிக்க இயலாமல் மாட்டிக் கொண்டிருக்கும் நவதாராளமயத்தின் தற்போதைய முதிர்ச்சிக் கட்டம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள ‘பரிசு’ பாசிசமாகும்.
பாசிசத்தின் இருப்பை தாண்டிச் செல்வதற்கான (transcending ) ஒரே வழி, நவதாராள முதலாளித்துவத்தை வீழ்த்தி முன்னேறுவதுதான். இடதுசாரிகளால் இதனை நிறைவேற்றி சோசலிச மாற்றை நோக்கி முன்னேற முடியும், ஆனால் அது தாராளவாதத்திற்கு உள்ள மக்கள் ஆதரவுத்தளத்தை வென்றெடுப்பதன் மூலமே கைகூடும். இதற்கு தாராளவாத அரசியல் சக்திகளை வென்றெடுக்கவேணுமென்ற புரிதல் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றான, மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிற பொருளாதாரத் திட்டத்தை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். இந்தப் பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, தற்போதைய உலகமயத்திடமிருந்து துண்டித்துக்கொள்வது மிகத் தேவை. கண்மூடித்தனமான மூலதன ஓட்டத்திற்கு விதிக்கவேண்டிய கட்டுப்பாடுகளைச் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இடதுசாரிகள் தங்களது ஆற்றல்மிகு பாத்திரத்தை பொருளாதார மற்றும் அரசியல் தயக்கங்கள் ஏதுமின்றி சாதித்திட வேண்டும்.
தமிழில்: இரா.சிந்தன்
Leave a Reply