வெங்கடேஷ் ஆத்ரேயா
2018-19க்கான பட்ஜெட் பாஜக அரசாங்கம் சமர்ப்பிக்கும் ஐந்தாவது பட்ஜெட். அதன் முந்தைய நான்கு பட்ஜெட்களாக பாஜக அரசாங்கம் அமலாக்கி வந்த தாராளமய கொள்கைகள் இந்த பட்ஜெட்டிலும் தொடர்கிறது. பல அம்சங்களில் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கும் அரசின் பொறுப்பு எனக் கருதப்படும் கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்பு ஆகியவற்றை தனியார்மயமாக்கவும் வணிகமயமாக்கவும் இந்த பட்ஜெட் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலவும் பொருளாதார சுழல்
பன்னாட்டுப் பொருளாதார சூழல் சிக்கலாக உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, பன்னாட்டு சந்தைகளில் பெட்ரோலியம் கச்சா எண்ணய் குறைந்துவந்த நிலைமை மாறி, இப்பொழுது அந்த விலை ஏறுமுகமாக உள்ளது. வரும் ஆண்டில் இப்போக்கு தொடரும் என்பது இந்தியா எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை. இரண்டாவதாக, அமெரிக்க ரிசர்வ் வங்கி அந்த நாட்டில் வட்டிவிகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையை துவக்கியுள்ளது. இது தொடர்ந்தால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உலவி வரும் நிதி மூலதனம் அமெரிக்காவை நோக்கி பயணிக்கும். கச்சா எண்ணய் விலை உயர்வைப் போலவே இதுவும் இந்தியாவின் அந்நியச்செலாவணி பிரச்சினையை தீவிரப்படுத்தும். மூன்றாவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நிய வர்த்தகம் மற்றும் பிறநாட்டு நபர்கள் அமெரிக்காவிற்கு வேலை செய்ய வருவது போன்றவற்றை கடினமாக்க நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். இது நமது அந்நியச்செலாவணி வருமானத்தை பாதிக்கும். நான்காவதாக, ட்ரம்ப் அரசாங்கம் இரான் நாட்டுடன் கடைப்பிடித்துவரும் மோதல் போக்கின் காரணமாக மேற்கு ஆசியப்பகுதியில் போர் மூளும் அபாயம் முன்னுக்கு வந்துள்ளது. இதுவும் பன்னாட்டு பொருளாதார சூழலை மோசமாக்கும். இவற்றை பற்றி எல்லாம் நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆய்வறிக்கை பேசியுள்ளது. எனினும் இச்சவால்களை எதிர்கொள்ள எந்த முன்மொழிவும் ஆய்வறிக்கையில் இல்லை. பட்ஜெட்டிலும் இல்லை.
இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை எவ்வாறு உள்ளது? நவம்பர் 2௦16 இல் மோடி அரசாங்கம் மக்கள் மீது தொடுத்த, நாசகரமான, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற தாக்குதல், விலங்கு சந்தைகளின் விதிமுறைகள் தொடர்பாக, ஏப்ரல் 2௦17 இல் வெளியான பாஜக அரசின் அறிவிக்கை ஏற்படுத்திய சீரழிவு, ஜூலை 2௦17 இல் துவங்கி இன்று வரை தினம் ஒரு மாற்றத்தை கண்டுவரும் குழப்பமான ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகிய மூன்று தவறான நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தில் கூடுதல் மந்தநிலையை உருவாக்கியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே மந்தகதியில் செயல்பட்டுவந்த இந்தியப் பொருளாதாரம் இன்று வளர்ச்சி விகிதத்தில் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் பொழுது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பாக அரசாங்கம் முன்வைத்த மதிப்பீட்டை விட கணிசமாகவே வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. வரும் ஆண்டில் மந்தநிலையை சரிசெய்ய பட்ஜெட் உதவுகிறதா என்பது முக்கிய கேள்வி.
மந்த நிலையை தகர்க்க உதவாத பட்ஜெட்
சவாலான பன்னாட்டு சூழலையும் நிலவும் பொருளாதார மந்த நிலையையும் எதிர்கொள்ள பட்ஜெட் உதவாது. நமது பொருளாதாரத்தின் பன்னாட்டு பொருளாதார சார்புநிலையை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை இல்லை. மாறாக, இந்தியாவிற்குள் அந்நிய நிதி மூலதனம் தங்கு தடையின்றி வந்து போவதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. இந்தியாவில் ஈட்டப்பட்ட லாபங்களை இந்திய மற்றும் அந்நிய பெரும் மூலதனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் தடை ஏதும் இல்லை. இத்தகைய மூலதன ஏற்றுமதி அண்மைக் காலங்களில் அதிகரித்தும் வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் என்ன செய்வது என்பதற்கான முன்மொழிவு ஏதும் இல்லை. மேலை நாடுகளில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி நிகழாவிட்டால், இந்தியாவின் ஏற்றுமதி வருமானத்தை பாதுகாப்பது எப்படி என்பதற்கான முன்மொழிவுகளும் ஆய்வறிக்கை மற்றும் பட்ஜெட்டில் இல்லை.
நாட்டுப் பொருளாதாரத்தில் நிலவும் பலவீனமான வளர்ச்சியை மேம்படுத்த அரசின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு கிராக்கியை உயர்த்திட முக்கிய கருவியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசாங்கம் பட்ஜெட் வாயிலாக செய்யும் மொத்த செலவு 2017-18 இல் 22.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது 2018-19 பட்ஜெட் மதிப்பீட்டின் படி 24.42 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு என்பது சுமார் 1௦% ஆகும். விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு பார்த்தால், இந்த உயர்வு என்பது இன்னும் குறைவுதான். மேலும் தேச உற்பத்தி மதிப்பின் – ஜிடிபி யின் – விகிதமாக பார்த்தால், சென்ற ஆண்டு 13.2% ஆக இருந்தது. இந்த ஆண்டு 13% ஆக குறைந்துள்ளது. கிராக்கியை அதிகப்படுத்தி கூடுதல் பொருளாதார வளர்ச்சியை சாதிக்க இது உதவாது. மக்களின் நியாயமான கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்றிட நிச்சயம் வழிவகுக்காது.
பட்ஜெட் உரையும்; பட்ஜெட் உண்மையும்
பட்ஜெட் உரையே உண்மை ஆகிவிடாது. பட்ஜெட் என்று கறாராக இலக்கணம் வகுத்தால், அது ஒரு நிதி ஆண்டிற்கான அரசின் வரவு மற்றும் செலவு தொடர்பான விரிவான மதிப்பீடுகளையும் முன்மொழிவுகளையும் மட்டுமே குறிக்கும். ஆனால் இன்றைய இருபத்திநான்கு மணிநேர ஊடக உலகில், பட்ஜெட் உரைதான் அதிக கவனத்தை ஈர்க்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் இவ்விரண்டுக்குமான இடைவெளி மிகவும் அதிகம். பட்ஜெட்டுக்கு தொடர்பில்லாத – மத்திய அரசின் வரவு செலவு கணக்குகளில் எந்த இடமும் இல்லாத – ஒரு விஷயம் வேளாண் துறைக்கு எவ்வளவு வங்கி கடன் தரப்படும் என்பது. இதனை வங்கிகள் நிர்ணயிக்கின்றன. ஆனால் நிதி அமைச்சர் தனது உரையில் இந்த ஆண்டு 11 லட்சம் கோடி ரூபாய் விவசாயத்திற்கு கடன் என்று அறிவிக்கிறார். இது நிகழுமா என்பது அவர் கையில் இல்லை. அப்படியே வங்கிகள் கடன் கொடுத்தாலும் யாருக்கு கொடுப்பார்கள்? நிலபுலம் அதிகமானவர்களுக்குத்தான் கூடுதல் கடன் கிடைக்கும் . மேலும் கடன் பெறுவது மட்டுமே விவசாயத்தில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு அல்ல. இதற்கும் பட்ஜெட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பட்ஜெட் உரையில் இரண்டு தடாலடி அறிவிப்புகள் உள்ளன. ஒன்று, விவசாய விளை பொருளுக்கு உற்பத்திசெலவுக்கு மேல் ஐம்பது சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்யும் என்ற அறிவிப்பு. இதனை ஏற்கெனவே குளிர்கால சாகுபடிக்கு அமலாக்கிவிட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் இது உண்மைக்கு புறம்பானது.. நிலைமை என்ன? 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பேராசிரியர் எம் எஸ் சாமிநாதன் தலைமையிலான தேசீய விவசாயிகள் ஆணையம் குறைந்தபட்ச ஆதரவு விலையாக முன்மொழிந்த ‘ உற்பத்தி செலவு + 5௦% ’ என்ற சூத்திரத்தை அமல்படுத்துவோம் என்று சொல்லிவிட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இது சாத்தியமே இல்லை என்ற நிலை எடுத்தது பாஜக அரசாங்கம். கடந்த பல மாதங்களாக ஹரியானாவில் தொடங்கி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் என்று பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் விளைபொருளுக்கு நியாய விலை கேட்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்யக் கோரியும் வலுவான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் பின்னணியில்தான் 2019 பொது தேர்தலையும் வரவிருக்கும் மாநில தேர்தல்களையும் மனதில் கொண்டு இந்த பட்ஜெட் உரை அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், எந்த செலவு அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும் என்பது சொல்லப்படவில்லை. சாமிநாதன் பரிந்துரைப்படி ‘உற்பத்தி செலவு’ என்பது விவசாயிகளுக்கு ஏற்படும் பண மற்றும் பொருள் செலவு மட்டுமல்ல, விவசாயிகளின் உழைப்புக்கான ஊதியமும், அவர்கள் நிலத்துக்கான வாடகை மதிப்பும், அவர்கள் செலுத்தும் வட்டியும் உற்பத்தி செலவு என்பதில் அடங்கும். ஆனால் நிதி அமைச்சர் இது பற்றியெல்லாம் ஒன்றும் தெளிவாக்கவில்லை. இதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. அதுமட்டுமின்றி, இதனை அமலாக்க அரசாங்கம்க்கு ஏற்படும் செலவில் 40% மாநில அரசாங்கங்கள் தரவேண்டும் என்றும் மத்திய அரசாங்கம் கூறுகிறது. இந்த முன்மொழிவு குறித்து மாநிலங்களோடும் கலந்து பேசி நிதி ஆயோக் பரிந்துரைகளை முன்வைக்கும் என்ற வகையில் மத்திய அரசாங்கம் இந்த அறிவிப்பை செல்லாக் காசாக்கியுள்ளது.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் உரையின்போது ஆளும் கட்சி உறுப்பினர்களின் பெருத்த கர ஒலியை பெற்ற இரண்டாவது அறிவிப்பு, 1௦ கோடி குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைக்கு அளிக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். இதற்கும் பட்ஜெட்டில் மிகவும் சொற்பமான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. பிரச்சினை அதுமட்டுமல்ல; மக்களுக்கு தேவையான நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை அரசாங்க மருத்துவ மனைகள் மூலம் அளிப்பதற்குப் பதிலாக காப்பீடு மூலம் ஏற்பாடு என்பது இன்று உலகெங்கும் எதிர்க்கப்படுவதாகும். இந்த ஏற்பாடு, பன்னாட்டு – இந்நாட்டு பெரும் கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்களுக்குத்தான் கொண்டாட்டம். அத்தகைய நிறுவனங்கள் இந்த அறிவிப்பை உற்சாகத்துடன் வரவேற்று, இது ஏழை மக்களுக்கான பெரும் வரப்பிரசாதம் என்று பிரகடனம் செய்து வருவது இத்திட்டத்தின் தன்மையை அம்பலப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை அறிவித்துள்ள அமைச்சர், சுகாதாரத் துறைக்கான மொத்த பட்ஜெட்டை கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் 2% என்ற அளவிற்கே உயர்த்தியுள்ளார் என்பது ஆட்சியாளர்களின் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பட்ஜெட்டா?.
மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கும் ஊரக வளர்ச்சி துறைக்கும் மிகப்பெருமளவில் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற கருத்து, காட்சி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்ன? வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் என்ற துறைக்கும் ஊரக வளர்ச்சி துறைக்கும் சேர்ந்து 2017-18 இல் 1,57,139 கோடி ரூபாய் (திருத்தப்பட்ட மதிப்பீடு) செலவிடப்பட்டது. 2018-19க்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூபாய் 1,66,904 கோடி. இது 6.2% உயர்வுதான். விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் இது இன்னும் குறைவு; மிகச் சொற்பமான அதிகரிப்பு என்றுதான் சொல்லவேண்டும். மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நமது நாட்டில் கிராமங்களில் வசிக்கின்றனர். நமது மொத்த உழைப்பாளி மக்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வேளாண் துறையில் உழைப்பவர்கள். ஆனால், அரசின் பட்ஜெட்டில் ஒப்பீட்டளவில் காண்கையில், மிகக் குறைவான தொகையே வேளாண் துறைக்கும் ஊரக வளர்ச்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேதான் கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட பல மக்கள் நலம் சார்ந்த துறைகளின் நிலைமை. ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலனுக்கு சென்ற ஆண்டு ஒதுக்கீடு, திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூபாய் 51,551 கோடி. வரும் ஆண்டிற்கு இது ரூ 52,800 கோடி. உயர்வு 2.3% தான்.. கல்விக்கான ஒதுக்கீடு சென்ற ஆண்டு ரூ 81,868 கோடி. வரும் ஆண்டு ரூ 85,010 கோடி. உயர்வு 3.8%. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் கல்வி, ஆரோக்கியம் ஆகிய இரண்டு துறைகளிலும் உண்மை அளவில் ஒதுக்கீடு குறைந்துள்ளது.
வேலையின்மை
நாட்டு மக்கள் இன்று எதிர்கொள்ளும் இருபெரும் பொருளாதார பிரச்சினைகள் வேளாண் நெருக்கடியும் வேலையின்மையும். வேளாண்மை துறைக்கு சிறப்பான கவனம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என்பதை நாம் பார்த்தோம். வேளாண் விளை பொருளுக்கு கட்டுபடியாகும் விலை என்பது அமைச்சரின் அறிவிப்பால் உறுதி செய்யப்படவில்லை. விவசாயிகளுக்கு அவசியமான கட்டமைப்பு வசதிகள் – வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, வேளாண் விரிவாக்க அமைப்பு, பாசனம், ஊரக கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட துறைகளில் விரிவான அளவில் முதலீடுகளை பொதுத்துறையில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அத்தகைய முன்மொழிவு எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
ஊரக வேலை வாய்ப்பில் ஒரு பங்கு அளித்து வருவது ரேகா திட்டம். ஆனால் இந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு கூட உயர்த்தப்படவில்லை. சென்ற ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ 55,௦௦௦ கோடிதான் வரும் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கணிசமான கூலி பாக்கிகள் தரப்படவில்லை. மாநில அரசாங்கங்களுக்கு பணம் தர வேண்டியுள்ளது. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால், பாஜக அரசாங்கம் இத்திட்டத்தை அழித்தொழிக்கும் பாதையில் பயணிப்பது தெளிவாகும்.
அரசின் அதிகாரவ பூர்வ அமைப்புகள்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாட்டின் எட்டு முக்கிய துறைகளில் வேலை இடங்கள் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியிருந்தன. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வரும்போது வருடத்திற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை நாங்கள் உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்த கட்சியின் ஆட்சிக் காலத்தில் வேலையின்மை பன்மடங்கு பெருகியுள்ளது. “பக்கோடா செய்து விற்கும் வேலை இருக்கிறதே! அதில் லட்சக்கணக்கானோர் வேலை செய்கின்றனரே! அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?” என்று ஆட்சியாளர்கள் கேட்பது வேலையின்மை பிரச்சினை பற்றிய அவர்களது பார்வையையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. பட்ஜெட்டிலும் இதே அக்கறையின்மைதான் வெளிப்படுகிறது. ‘மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட பல கவர்ச்சியான முழக்கங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிடாது. வேலையின்மை பிரச்சினையை எதிர்கொள்ள நிலச் சீர்திருத்தத்தில் துவங்கி பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். ஒரு பட்ஜெட்டில் இதை செய்ய முடியாது என்பது சரியே என்றாலும், இந்த பட்ஜெட் எதிர்வழியில் செல்கிறது. இருக்கும் வேலை வாய்ப்புகளையும் பறிக்கும் வழியில் பயணிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
பிரச்சினையின் ஆணிவேர்
அரசின் பட்ஜெட் ஒதுக்கீடுகள் மிக குறைவாகவே அதிகரித்துள்ளன என்பதை நாம் பார்த்தோம். இதற்கான மூல காரணம் என்ன? ஒதுக்கீடுகளை அதிகரிக்க, அரசு நிதி வளங்களை திரட்ட வேண்டும். அரசுக்கு அதற்கான வழிகள் எவை? வரிகள், அரசு நிறுவனங்கள் ஈட்டும் லாபம், அரசு அளிக்கும் சேவைகளுக்கு அரசால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆகியவையே அரசின் வருவாய்க்கான வழிகள். மேலும் அரசு இயற்கை வளங்களின் பயன்பாட்டிற்கு கட்டணம் (ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) ஒரு உதாரணம்) வசூலிக்கலாம். இது தவிர, அரசு கடன் வாங்கியும் செலவு செய்யலாம். இதை மூலதன வரவு என்பார்கள். அரசு சொத்துக்களை விற்பதும் அரசுக்கு ‘மூலதன’ வரவை தருகிறது. கேள்வி என்னவெனில், ஒரு அரசு எவ்வாறு வளங்களை திரட்ட வேண்டும் என்பதுதான்.
இந்திய நாட்டில் பெரும்பாலும் எக்சைஸ் (கலால்) வரி, சுங்க வரி, விற்பனை வரி போன்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மீது வரி விதிப்பதையே அரசு பிரதானமாக செய்கிறது. மத்திய மாநில அரசாங்கங்களின் மொத்த வரி வருமானத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இத்தகைய வரிகள் மூலம் பெறப்படுகிறது. இவை ஏழை எளிய மக்களுக்கு எதிரானவை. ஒரு பொருளை செல்வந்தர் வாங்கினாலும் ஏழை வாங்கினாலும் ஒரே வரி தான். ஆனால் அந்த வரி ஏழையின் வரவு செலவு கணக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். செல்வந்தர்களுக்கு அது கொசுக்கடி போல. மறுபுறம் கொடுக்கும் திறன் அடிப்படையில் போடப்படும் வருமான வரி நமது நாட்டில் குறைவான பங்கையே வகிக்கிறது. கார்ப்பரேட்டு வருமானத்தின் மீதான அதிகபட்ச வரிவிகிதம் 3௦% தான். இதிலும் ஏகப்பட்ட வரி விலக்குகள் உண்டு. உண்மையில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரியாக செலுத்துவது அவர்களது வருமானத்தில் ஒரு பங்கை தாண்டாது. இதுகூட அவர்களே எழுதும் கணக்கின் அடிப்படையில்! ஆனால் நமது ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டுகள் மற்றும் செல்வந்தர்கள் மீதான வரி விதிப்பை மென்மையாகவே வைத்துள்ளனர். இவர்கள் முதலீடு செய்வதால்தான் நாடே நடக்கிறது என்ற கருத்து ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. முன்பு சொத்து வரி இருந்தது. ஆனால் பாஜக அரசாங்கம் இரண்டாண்டுகளுக்கு முன் அதை நீக்கி விட்டது. ஆக, நமது நாட்டில் வாரிசு வரி இல்லை; சொத்துவரி இல்லை; மென்மையான வருமான வரி மட்டுமே. அதிலும் கூட வரி விலக்கும் வரிஏய்ப்பும் ஏராளம். உண்மையில் பெரும்பகுதி வருமான வரி ஒழுங்காக கட்டுவது மாத ஊதியம் வாங்கும் தொழிலாளிகளும், நடுத்தர வர்க்க உழைப்பாளிகளும் தான்!.
எத்தகைய நாட்டில் இது நடக்கிறது? நடப்பு பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபொழுது நாட்டின் மொத்த சொத்தில் 49% மேல்மட்ட 1% செல்வந்தர்களிடம் இருந்தது. மூன்று ஆண்டுகளில் இது 58% ஆக அதிகரித்தது. கடந்த ஒரு ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய சொத்தில் இந்த மேல்மட்ட 1% செல்வந்தர்கள் கையில் 73% சென்றுவிட்டது. இதுதான் பாஜக ஆட்சியின் தன்மை. மிகப்பெரிய, கொள்ளை லாபம் ஈட்டும் செல்வந்தர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது முறையாக வரி போட்டு வசூல் செய்வதற்குப் பதில் தற்சமயம், சாதாரண மக்கள் மீது கொடிய சரக்கு மற்றும் சேவை வரிகளை திணிப்பதுடன், மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை செல்வந்தர்களுக்கு விற்று அரசு பற்றாக்குறையை குறைக்க முயல்கிறது. இந்த பட்ஜெட்டிலும் அதுதான் நடந்துள்ளது.
பட்ஜெட்டின் தாரக மந்திரம்: தனியார் மயம்
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பொதுத்துறை சொத்துக்கள் விற்பனை மூலம் ரூ 72,000 கோடி வசூல் செய்யப்படும் என்று முன்மொழியப்பட்டது. ஆனால் அதைவிட கணிசமான அளவில் பொதுத்துறை சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் சொத்தை விற்று அரசு தனது வரவு கணக்கில் சேர்த்துள்ளது. ஏன் இந்த கொலைவெறி?
இதில் பெரும் ஊழல் வாய்ப்புகள் உண்டு என்பது ஒருபக்கம் இருக்கட்டும். எப்படியாவது, மக்கள் சொத்துக்களை – அதாவது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை – விற்று அரசின் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்ற அழுத்தம் எங்கிருந்து வருகிறது? இங்குதான் தாராளமய கொள்கையின் அடிப்படையே உள்ளது. பன்னாட்டு நிதி மூலதனம் நாட்டை விட்டு பறந்து போகாமல் இருக்க அரசின் பட்ஜெட் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கவேண்டும் என்று தாராளமய தத்துவம் கூறுகிறது. செல்வந்தர்கள், பெரும் ஏகபோக முதலாளிகள் மீது வரிபோட்டு பற்றாகுறையை குறைக்க முனைந்தால் முதலீடுகள் வற்றிப் போய்விடும் என்று அச்சுறுத்தப்படுகிறது. ஆகவே மக்கள் நல திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை குறைத்தும், மக்கள் சொத்துக்களை விற்றும், பன்னாட்டு நிதி மூலதனத்தை திருப்திப்படுத்துவதையே பட்ஜெட் செய்கிறது.
அரசு கடன் வாங்கி முதலீடுகளை மேற்கொள்ளலாம் அல்லவா? ஆனால் தாராளமயம் அதனை அனுமதிப்பதில்லை. அரசின் கடன் வரவு நிதிப் பற்றாக்குறையை (Fiscal deficit) கணக்கிடும் பொழுது வரவாகவே கருதப்படுவதில்லை. தனியார் பெரு முதலாளிகள் அரசு வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கி தொழில் நடத்தி லாபம் ஈட்டலாம். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கடன் வாங்கி முதலீடுகளை மேற்கொண்டு லாபமும் ஈட்டி கடன்களை அடைக்கக்கூடாது என்கிறது தாராளமயம்.
தனியார்மயத்தை தீவிரமாக அமலாக்கும் தாராளமய பட்ஜெட்தான் ஜேட்லியின், பாஜகவின், இந்த ஆண்டு பட்ஜெட். இதனை எதிர்த்தும் அரசின் தாராளமய பாதையை எதிர்த்தும் போராட, மக்களை திரட்டுவது நம் முன்னால் உள்ள முக்கிய அரசியல் பணி.
Leave a Reply