தொகுப்பு சமூகநேசன் எழில்ராஜூ
மார்க்சிஸ்ட் இதழில் வெளியாகும் கட்டுரைகளை ஒலி வடிவில் கேட்கும் வசதி அறிமுகமான பிறகு மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாமேதை கார்ல் மார்க்ஸ் 200வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஜனவரி 28 அன்று சென்னையில் தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் ஊடகவியலாளர் ஜென்ராம் ஒலி இதழை தொடங்கிவைத்தார்.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள மார்க்சிஸ்ட் ரீடர் (Marxist Reader) என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் மார்க்சிஸ்ட் மாத இதழ் கட்டுரைகளை ஒலி வடிவில் கேட்க முடிகிறது.
கட்டுரைகளை ஒலி வடிவில் கொடுக்க டிடிஎஸ் தொழில்நுட்பமும், மனிதக் குரலை பதிவு செய்கிற தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டு அச்சு இதழ் வெளிவந்த குறுகிய கால இடைவெளியில் ஒலி இதழ் செயலியில் அப்டேட் செய்யப்படுகிறது. இது தமிழ் இதழியல் துறையின் முதல் முதலில் மேற்கொள்ளப்படும் முன்னோடி முயற்சி என்பதை தமிழகத்தின் முன்னோடி பத்திரிக்கைகளில் ஒன்றான விகடன் குழுமம் குறிப்பிட்டுள்ளது.
வாசிப்பை நேசிப்போம் ! என்ற முழக்கத்துடன் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இயங்கி வரும் கே.எஸ்.பார்த்தசாரதி நூலகக்குழு மற்றும் வி.பி.சிந்தன் புத்தக விற்பனைக்குழுவும் இணைந்து நடத்தும் வாசகர் வட்டம் சார்பில் மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ். குறித்தும் பல்வேறு நடப்பு அரசியல் சமூக நடப்புகளை விவாதிக்கும் மாதாந்திர தொடர் நிகழ்வு என்பது இதுவரை தொடர்ச்சியாக 60 வது முறை நடைபெற்றுள்ளது.
நிகழ்வு ஏற்பாடுக்குழுவின் தோழர் மு.முனிச்செல்வன் இதன் 61 வது மாத நிகழ்வு வித்தியாசமான ஒன்று என விளக்கினார். புளூடூத் – மைக் – ஒலிப்பெருக்கி தொழில்நுட்ப உதவியுடன் மார்க்சிஸ்ட் செயலியின் ஒலி வடிவ கட்டுரையை ஆன்லைன் மூலம் ஒலிக்கவிட்டு நிகழ்வு நடத்தினார்கள். (மார்ச் 30)
பிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இடத் ஜனநாயக முன்னணி சிறப்பிதழில் வெளிவந்த
மூன்று ஒலிவடிவ கட்டுரைகளை, ஒலிபரப்பிக்கேட்டொம்.
தீவிரமாகும் கிராமப்புற முரண்பாடுகள் கட்டுரையை முன்வைத்து விவாதித்ததுடன், கட்டுரையின் மொழிபெயற்பாளராக நானும் பங்கேற்க முடிந்தது மகிழ்ச்சி. “வேளாண் நெருக்கடி மற்றும் கிராமப்புற முரண்பாடுகள்” குறித்து ஓர் ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டும் எனும் கருத்தை அங்கே முன்வைத்தேன்.
வந்திருந்த பெண் வாசகர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 30 வாசகர் வட்ட உறுப்பினர்களும் தங்கள் கவனத்தை குவித்து கட்டுரைகளை கேட்டும் , அதே நேரத்தில் செயலியின் எழுத்து வடிவ கட்டுரையினை பின் தொடர்ந்தும் கட்டுரையினூடே ஒன்றிப்போய்விட்டனர் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் தங்களது சந்தேகங்களையும் அனுபவங்களையும் குறிப்பாக ஒலி வடிவ வாசகர் வட்ட நிகழ்வு குறித்தும் பங்கேற்றோர் கருத்திட்டனர்.
குறிப்பாக ஒலி வடிவ கட்டுரைகளை பின்தொடர்வது என்பது படிக்கும் போது ஏற்படும் உள்வாங்கிக்கொள்வதில் சற்று சிரமம் இருக்கிறது என்று அவரின் எழுத்து வாசிப்பு உணர்வோடு முன்வைத்த மூத்த வாசகர் ஒருவரின் கேள்விக்கும் இதர கருத்துக்களின் மீது காஞ்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கல்வி குழுவின் சார்பில் தோழர் ப.பாரதி அண்ணா விளக்கமளிக்கையில், இப்படிப்பட்ட ஒலி வடிவம் புதுமுயற்சி என்றும் அதை பின்தொடர்வது படிப்பது போன்ற உணர்வோடு இணைக்க சிக்கல் இருப்பவர்கள் எழுத்து வடிவ கட்டுரைகளையும் ஒரு சேர படித்து பின்தொடரும் வகையில் செயலி அமைந்திருப்பது சிறப்பான ஏற்பாடு என்றார்.
நிகழ்வில் பங்கெடுத்த வாசகர் வட்ட உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான தோழர்.இ.சங்கர் விவாதத்தில் பங்கெடுத்து பேசுகையில் ஒலி வடிவ மார்க்சிஸ்ட் செயலி தன்னை போன்று களத்தில் பயணப்படும் பல்வேறு தோழர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என குறிப்பிட்டார்.
“கற்றலின் கேட்டலே நன்று” என்ற பொன்மொழிக்கேற்ப மார்க்சிஸ்ட் இதழ் முன்னெடுத்துள்ள துல்லியமான தமிழ் உச்சரிப்புக்குரலில் பதிவுசெய்யப்பட்டு ஒலித்திடும் ஒலி இதழ் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களுக்கு சமூக மாற்றத்தினை ஏற்படுத்திடும் எழுத்துக்கள் வார்த்தைகளாக என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
Leave a Reply