இக்கட்டுரையின் முதல் பகுதி: முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள் – 1
பேரா. பிரபாத் பட்நாயக்
தமிழில்: ஆர். எஸ். செண்பகம்
மேற்கூறிய விவாதங்கள் இரண்டு முக்கிய உட்குறிப்புகளை கொடுக்கின்றன.
முதலாவது உட்குறிப்பு
முதலாளித்துவம் “தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளை எடுக்கும்” என்ற அதனுடைய இயல்பான குணாம்சத்தின் காரணமாக, மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் ஏழ்மையை விரட்டுவதில்லை. மாறாக, முதலாளித்துவம், தன்னுடைய இருத்தலுக்கும் விரிவாக்கத்திற்குமான தேவையின் அடிப்படையில், வேலையின்மையை அதிகரிப்பது மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையை உருவாக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. எனவே, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரமானது, மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை, காலனி ஆதிக்கத்தின்போதே கபளீகரம் செய்து, அந்த நாடுகளின் வறுமை மற்றும் ஏழ்மையை நிலைத்திருக்கவும், வளரவும் செய்துள்ளது.
இப்படிச் சொல்லும்போது இதற்கு மேலும் விளக்கம் தேவைப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, நவீன தாராளவாத முதலாளித்துவத்தின் கீழ், வளர்ந்த நாடுகள் உலகச் சந்தையில் தங்களுடைய வர்த்தகத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் அவசியத்தை பூர்த்திசெய்து கொள்வதற்காக, மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலியை அளித்தாலே போதும் என்ற நிலையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்வகையில், மூன்றாம் உலக நாடுகளை நோக்கி வருகின்றன. இதனால், இதன் இரண்டாம் கட்ட விளைவுகளாக, மூன்றாம் உலக நாடுகளில் சில இடங்களில் அதிக வளர்ச்சி ஏற்படுகிறது. சில நாடுகள் அளவில் சிறியவையாக இருக்கும்பட்சத்தில் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும் உயர்வடையும். இதனால் உள்நாட்டில் வேலைதேடும் பட்டாளத்தின் ஏழ்மை அந்நாட்டில் ஒழிக்கப்படும். இப்படிப்பட்ட இந்த ஒரு சில “வெற்றிகளை” வைத்துக்கொண்டு, இதையே ஆதாரமாகக் கொண்டு, இது ஏதோ நவீன தாராளமய முதலாளித்துவத்தின் பொதுவான உள்ளார்ந்த திறன் போன்று சித்தரிக்கப்படுகிறது. ஒருவேளை, இப்படி ஒரு “வெற்றி” கிடைக்கவில்லை என்றால், அதற்கு உள்ளூர் காரணிகள் காரணங்களாகக் காட்டப்படுகின்றன.
உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். ஆனாலும், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினர் என்ற ஒரு பிரிவினர் உருவாவதும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவு நல்லநிலையில் இருப்பது என்பதும் ஒரு சில மூன்றாம் உலக நாடுகளில் நடக்கின்றது. இதை முன்னிலைப்படுத்தி, மூன்றாம் உலக நாடுகளில் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காரணமாக செழிப்பான நிலையே இருக்கிறது என்பது போன்ற ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது.
அதேபோல, அரசு பின்பற்றும் கொள்கைகளின் காரணமாக, அவை அளிக்கும் நிர்பந்தத்தின் காரணமாக, ஏழைமக்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை தங்களுக்கான மருத்துவத்திற்கும், கல்விக்கும் நாடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால், இப்படி ஏழை எளிய மக்கள் தனியாரை நாடுவதை, அவர்களுடைய பொருளாதார நிலைமை முன்னேறியதன் காரணமாக அவர்களுடைய நுகர்வு கலாச்சாரத்தின் தரம் உயர்ந்துள்ளது; மாறியுள்ளது என்று தவறான ஆதாரமாகக் காட்டப்படுகிறது. இப்படியெல்லாம் ஆதாரங்களை காட்டி, நவீன தாராளமய முதலாளித்துவத்தின் அமலாக்கத்தின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் ஏழ்மை பெருமளவில் அதிகரிக்கிறது என்பதையோ அல்லது அதிகரித்துள்ளது என்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிடப்படுகிறது. முதல் பார்வையில் இது சரியானதாகத் தோன்றலாம்.
ஆனால், நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒட்டுமொத்த மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்சொன்ன புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டு, சில குறிப்பிட்ட அடிப்படைப் பொருட்களின் நுகர்வுப் போக்கு குறித்த புள்ளிவிவரங்களையும் வைத்துக்கொண்டு, மேலேசொன்ன ஆய்வுகளை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு, நாம் உலக அளவில் தனிநபர் தானிய நுகர்வினை எடுத்துக்கொள்வோம். 1980-ம் ஆண்டு, உலக அளவில் தனிநபர் தானிய உற்பத்திஅளவு 355 கிலோகிராம் ஆகும். இது எப்படி கணக்கிடப்படுகிறதென்றால், மூன்றாண்டுகளுக்கான 1979-1981 வரையிலான சராசரி உற்பத்தியை 1980-ம் ஆண்டு மக்கள்தொகையால் வகுத்து கணக்கிடப்படுகிறது. 2000-ம் ஆண்டிற்கும் இதேபோன்ற கணக்கீடு செய்து வருகிற அளவு 343 கிகி. 2016-ம் ஆண்டிற்கான அளவு 344.9 கிகி. இது கிட்டத்தட்ட 2000-ம் ஆண்டின் அளவிலேயே இருக்கிறது. அதேநேரத்தில், எத்தனால் தயாரிப்பிற்காக கணிசமான அளவு விளைதானியங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. எனில், 1980-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடையில் தனிநபர் தானிய நுகர்வு என்பது குறைந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது.
அதிலும் நுகர்வு என்பதில், நேரடி நுகர்வு மற்றும் மறைமுக நுகர்வு, இவை இரண்டும் சேர்ந்ததுதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நுகர்வு கணக்கு. மறைமுக நுகர்வு என்பதில் பதப்படுத்தப்பட்ட உணவுகளும், விலங்குகளுக்கான தீவனங்களும் அடங்கும். இந்த நுகர்வு எப்போது அதிகரிக்கும் என்றால், தனிநபர் உண்மை வருமானம் அதிகரிக்கும்போது அதுவும் அதிகரிக்கும். ஒருவேளை மூன்றாம் உலக நாடுகளின் வறுமை ஒழிக்கப்பட்டிருந்தால், தனிநபர் தானிய நுகர்வும் அதிகரித்திருக்கும். ஆனால், 80-களின் துவக்கத்தில் இருந்த தனிநபர் தானிய நுகர்வை விட தற்போதைய தனிநபர் தானிய நுகர்வு அளவு குறைந்துள்ளது என்பதில் இருந்தே மூன்றாம் உலக நாடுகளில் வறுமை இன்னும் தொடர்கிறது என்பதும் அது மேலும் அதிகரித்துள்ளது என்பதும் தெளிவாகிறது.
வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், மூன்றாம் உலக நாடுகளின் வறுமையை முதலாளித்துவத்தின் தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகள் ஒழித்துவிடும் என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. உண்மையில், இந்நாடுகளின் வறுமை மேலும் அதிகரிக்கப்படுகிறது.
இரண்டாவது உட்குறிப்பு
ஏற்கனவே நாம் முன்வைத்த விவாதங்களில் இருந்து, இரண்டாவதாக வரும் உட்குறிப்பு-தொழிலாளர்கள், விவசாயிகள், பிற சிறு உற்பத்தியாளர்கள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு உற்பத்தித் துறையில் உள்ள பிற தொழிலாளர்கள் என அனைவரும் தன்னெழுச்சியாக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தினை நவீன தாராளமய முதலாளித்துவம் உருவாக்குகிறது என்பது ஆகும்.
நவீன தாராளமய முதலாளித்துவம் சிறு உற்பத்தியாளர்களை பிழிந்தெடுத்து, அவர்களை வேலைதேடும் தொழிலாளர் படையுடன் தள்ளிவிடுவதன் காரணமாக அவர்களுடைய வறுமை அதிகரிக்கிறது. தொழிற்சங்கப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் உட்பட, முழுமையாக பணியிலிருக்கும் தொழிலாளர்களின் உண்மைஊதியம் குறைந்து போகிறது. இதனால், நவீன தாராளமய முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்காக, தொழிலாளர் விவசாய கூட்டணி உருவாவதற்கான அவசியத்தை, அது தன்னுடைய தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளின் போக்கிலேயே உருவாக்கிவிடுகிறது.
தொழிலாளர்-விவசாயி கூட்டணி பற்றி
“ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயத்தின் இரண்டு உத்திகள்” என்ற நூலில் லெனின், “முதலாளித்துவத்தை நோக்கி, பிற்காலத்தில் தாமதமாக நகரும் நாடுகளில் எல்லாம், நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த ஜனநாயகப் புரட்சி செய்து, நிலப்பிரபுக்களின் கைகளில் குவிந்து கிடக்கும் நிலக்குவியலை உடைத்து, ஏழை எளிய விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு பதிலாக, பூர்ஷ்வாக்கள் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொள்வதையே விரும்புகின்றனர். ஏனென்றால், பூர்ஷ்வாக்களின் சொத்துக்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட வரலாறு இதற்கு முன்பு உள்ளது என்பதால் அந்த அச்சத்தில் அவர்கள் இந்த நிலைப்பாட்டினை எடுக்கிறார்கள். தொழிலாளி வர்க்கம் மட்டுமே விவசாயிகளுக்கும் பிற பிரிவினர்க்கும் தலைமைதாங்கி ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்க முடியும். இந்த நீண்ட நெடிய புரட்சிகரப் பாதையில் பயணிக்கும்போது, ஒருவேளை அதனுடைய விவசாயக் கூட்டணியில் ஏதேனும் மாற்றங்கள் வந்தாலும், அது எங்கும் நிற்காமல் சமூகப் புரட்சியை நோக்கி தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும்” என்று கூறுகிறார்.
லெனின் காட்சிப்படுத்தும் இந்த ஜனநாயகப் புரட்சியின் கருத்துரு பிரான்சில் பூர்ஷ்வாக்களின் தலைமையில் நடைபெற்ற ஜனநாயகப் புரட்சியில் இருந்து முற்றிலும் வேறானது. அதேநேரத்தில், 20-ம் நூற்றாண்டில் மூன்றாம் உலக நாடுகளில் நடைபெற்ற அனைத்து மார்க்சிய புரட்சிகளுக்கும் அடிப்படையாக அமைந்ததும் இதுதான். மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற கருத்துருவிலும், புதிய ஜனநாயகப் புரட்சி என்ற கருத்துருவிலும்கூட இதன் அடிப்படை அம்சங்கள்தான் காணப்படுகின்றன.
இந்த கருத்து இன்றைக்கும் சரியானதாக, ஏற்புடையதாக, பொருத்தமானதாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், லெனின் கூறிய தொழிலாளி விவசாயக் கூட்டணியின் அவசியம் இன்றைக்கு நவீன தாராளவாத முதலாளித்துவத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகளினால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
பூர்ஷ்வாக்கள் ஒதுங்கியது என்பது, ஜனநாயகப் புரட்சியில் இருந்து விலகும் அதன் கோழைத்தனத்தை மட்டும் காட்டவில்லை. மாறாக, அது தான் கட்டமைத்த நவீன தாராளவாத முதலாளித்துவ ஆட்சியின் கீழ், விவசாயிகள் உட்பட சிறு உற்பத்தியாளர்களை கூடுதலாகப் பிழிந்தெடுக்கப்படுவதையும் காட்டுகிறது.
நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவ கட்டமைப்பை நோக்கி நகரும்போது உருவாகும் மற்றொரு பிரிவினர் ஜங்கர் ஸ்டைல் முதலாளிகள். (இவர்களுக்கு பழைய நிலப்பிரபுத்துவ உரிமைகளில் சில இப்போதும் இருக்கும். இவர்களிடம் பெரிய அளவில் நிலக்குவியல் இருக்கும். அதேநேரத்தில் பூர்ஷ்வாக்களை ஒப்பிடும்போது இவர்கள் இரண்டாம்பட்சமானவர்கள். இவர்களும் அரசியல்தளத்தில் இருப்பார்கள். அரசின் மானியங்களை பெருமளவில் பெறுவார்கள். இவர்களுக்கு விவசாய தொழிலாளர்களாக மாற்றப்பட்டு இவர்கள் நிலத்தில் வேலைசெய்யும் விவசாயத் தொழிலாளர்களை பிழிந்தெடுக்கும் அதிகாரம் இருக்கும்). இப்படிப்பட்ட ஜங்கர் ஸ்டைல் முதலாளிகளாக நிலக்கிழார்கள் மாற்றப்படுகின்றனர். அல்லது பணக்கார விவசாயிகள் முதலாளித்துவ விவசாயிகள் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர். இப்படி வருவதன் காரணமாக, அவர்கள் விவசாயத்தில் மட்டுமல்லாமல், பலதரப்பட்ட தொழில்களிலும் கவனம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்குதல்களில் இருந்து இவர்கள் தப்பிவிடுகின்றனர். ஆனால், விவசாயிகளில் மிகப் பெரும்பான்மையினர் பிழிந்தெடுக்கப்படுவதன் காரணமாக, சோஷலிசத்தை நோக்கிய பாதையில் இந்த விவசாயி வர்க்கம் நகர்கிறது.
சிறு உற்பத்தியாளர்களின் ஆதரவை இழப்பதன் காரணமாக முதலாளித்துவம் இழந்துள்ள அரசியல் முக்கியத்துவத்தின் அளவு மிகப்பெரியது.
பாரிஸ் கம்யூன் அனுபவம்
மேலே கூறியதன் அடிப்படையில், தொழிலாளி வர்க்கம் சோஷலிச அமைப்பை உருவாக்குவோம் என்ற சவாலை விடுக்கும்போது, பூர்ஷ்வாக்களின் சொத்துக்களுக்கு சோஷலிச சமுதாயத்தில் ஏற்படும் தாக்கமே சிறு உற்பத்தியாளர்களின் சொத்துக்களுக்கும் ஏற்படும் என்ற அச்ச உணர்வு திட்டமிட்டு விவசாயிகளின் மத்தியில் உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் சோஷலிசத்திற்கான தொழிலாளர்களின் போராட்டத்தில் இணைந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றனர். அடோல்ஃப் தியோரஸ் இந்த அச்சத்தைதான் பிரெஞ்சு விவசாயிகள் மத்தியில் விதைத்து பாரிஸ் கம்யூனை தோற்கடித்தார்.
1879ல், பிரான்சில் நடைபெற்ற முதலாளித்துவ புரட்சியின்போது, நிலப்பிரபுத்துவ நிலக்குவியலை உடைத்ததில் பிரெஞ்சு விவசாயிகள் இலாபமடைந்தனர். அதேநேரத்தில், சில விவசாயிகள் இடம் பெயர வேண்டி வந்தபோது, அதற்கான வாய்ப்புகள் இருந்ததன் காரணமாக, முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விவசாய நெருக்கடி என்பது கட்டுக்குள் வந்துவிட்டது. அதனால், பாரிஸ் கம்யூனின்போது, விவசாயி – தொழிலாளி கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. அதன் காரணமாக, முதலாளித்துவம் நல்ல வசதியான நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
போல்ஷ்விக் புரட்சியின் அனுபவம்
இருப்பினும், போல்ஷ்விக் புரட்சியின்போது நடந்தது வேறு. அதற்குள், வரலாற்றில் நிலப்பிரபுத்துவத்தின் நிலத்தை கைப்பற்றி தகர்க்கும் திறனை முதலாளித்துவம் இழந்துவிட்டது. அதனால், நிலப்பிரபுத்துவத்தின் நுகத்தடியிலிருந்து விவசாயிகள் அடையவிரும்பிய நிலம் மற்றும் விடுதலையை பூர்ஷ்வாக்களால் பெற்றுத்தர முடியவில்லை. உண்மையைச் சொன்னால், ரஷ்யாவில், பிப்ரவரி புரட்சியின்போது, முதலாளித்துவத்தின் எல்லையைத் தாண்டி பூர்ஷ்வாக்களால் செல்லமுடியாததன் காரணமாக, நில மறுவினியோகம் என்பதில், பூர்ஷ்வாக்களால் விவசாயிகளை திருப்தியடையச் செய்யமுடியவில்லை. அதேநேரம், அக்டோபர் புரட்சி நடந்தபோது, விவசாயிகள் தாங்களே புரட்சியில் ஈடுபட்டு, நிலப்பிரபுத்துவ பண்ணைகளை கைப்பற்றி விட்டனர். இதில் அவர்களுக்கு போல்ஷ்விக்குகளின் ஆதரவு கிடைத்தது.
போல்ஷ்விக்குகள், நிலங்களை தேசியமயமாக்குதல் என்ற தங்களின் திட்டத்தைக் கூட, விவசாயிகளுக்காக விட்டுக் கொடுத்தனர். அந்த நேரத்தில், ரஷ்யாவில் சமகாலத்தில் இருந்த சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி, துவக்கம் முதலே விவசாயிகளுக்கு சொந்தநிலம் வேண்டும் என்று சொல்லி வந்ததால், போல்ஷ்விக்குகள் தங்களுடைய திட்டத்தை திருடிக் கொண்டார்கள் என்று குற்றம் சாட்டியது. அதேநேரத்தில், விவசாயிகளை பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடது சோசலிச புரட்சியாளர்கள் கட்சி, போல்ஷ்விக்குகளுடன் கூட்டணி வைத்து, புரட்சிக்குப்பின் அமைந்த அரசாங்கத்தில் இணைந்தது.
புரட்சியின் வெற்றியை தீர்மானிப்பதில் விவசாயிகளின் ஆதரவின் பங்கு
எனவே, சுருக்கமாகச் சொல்வதென்றால், விவசாயிகளின் ஆதரவு என்பது தொழிலாளிவர்க்கம் செய்யும் புரட்சியின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, எந்த நாடுகளிலெல்லாம், விவசாயிகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்களோ, அங்கெல்லாம், இது உண்மையானது. பின்னாளில் முதலாளித்துவத்திற்கு மாறிய ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் லத்தீன்அமெரிக்கா போன்றவற்றில் உள்ள மூன்றாம் உலக நாடுகளிலும்கூட இதை நாம் காணமுடியும்.
எனவே, நவீன தாராளமய உலகமயமாக்கலின்கீழ், முழுமையான நில மறுவினியோகத் திட்டம் எதுவும் இல்லாமல், விவசாயிகள் கசக்கிப் பிழியப்படும்போது, அந்த நாடுகளில் எல்லாம் தொழிலாளி – விவசாயி கூட்டணியை உருவாக்கி, ஜனநாயகப் புரட்சியை செய்துமுடித்து, சோஷலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், அந்தந்த நாடுகளின் நிலைமைக்கேற்ப, அந்தந்த நாடுகளின் சூழலுக்கேற்ப, ஜனநாயகப் புரட்சியின் முடிவிற்குப் பிந்தைய சூழல் அமையும்.
சிறு உற்பத்தியை பாதுகாப்பதன் அவசியமும், அதன் விஞ்சிய மேம்பட்ட நிலையும்
“விவசாயத்தை கையகப்படுத்துவதில் இருந்து பாதுகாப்பது” என்பது மட்டுமே, நிச்சயமாக, சிறு உற்பத்தியை நிரந்தரமாக தக்க வைப்போம் என்று ஏற்றுக் கொள்வதாக ஆகாது. அதாவது, கூட்டு வடிவங்களில், கூட்டமைப்புகளின் மூலம் உற்பத்தியை நோக்கி செல்வோம் என்று கட்டாயப்படுத்தாமல், சிறு உற்பத்தியின் தன்மையில் மெல்லமெல்ல மாற்றம் கொணர வேண்டியுள்ளது என்பது இதன் அர்த்தமாகும். அதாவது சோஷலிசத்திற்கான படிக்கல்லாக இந்த மாற்றம் இருக்கும்.
கூட்டுறவு மற்றும் கூட்டு ஐக்கிய செயல்பாடுகள் என்பவை விவசாயிகளை பிழிந்தெடுப்பதையோ அல்லது அவர்களது உரிமைகளை பறிப்பதையோ நிர்பந்திப்பதில்லை. ஆனால், மனப்பூர்வமாக, தாமாகவே முன்வந்து, தங்கள் நிலங்களை ஒரேகுவியலில் இணைப்பதென்பது தேவைப்படுகிறது. முதலாளித்துவ ஆக்கிரமிப்பு செய்வதுபோல புராதன மூலதனச் சேர்க்கைக்கான அவசியம் இங்கு இதில் இல்லை.
இருந்தபோதும், வரலாற்றுரீதியாகப் பார்க்கையில், புரட்சிக்கான நீண்ட நெடிய பாதையில் பயணிக்கும்போது, தொழிலாளி – -விவசாயி கூட்டணியை பாதுகாப்பது என்பதால் மட்டுமே சோஷலிசத்தின் நோக்கம் வெற்றிபெறாது. இன்னும் சொல்லப்போனால், இதுவேகூட சோஷலிச சமுதாயக் கட்டமைப்பின் உருவாக்கத்தில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணியாக அமைந்தது. முதல்கட்டத்தில் தொழிலாளி வர்க்கம் விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது.
ஆனால் சோஷலிச புரட்சியை நோக்கிய முன்னேற்றப்பாதையில் சிரமம் ஏற்பட்டது. சோவியத் யூனியனில் கூட்டு ஐக்கிய செயல்பாடுகள் என்பதை நிர்ப்பந்தப்படுத்தியபோதும்சரி, சீனாவில், கூட்டு ஐக்கிய செயல்பாடுகளுக்கு நிர்ப்பந்தம் அளிக்காதபோதும்சரி, விவசாயத் துறையில் மாற்றத்தை உருவாக்க அவசரகதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, புரட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டது. பலவீனமடைந்தது. மேலும், அதுவே பெரிய அளவிற்கு ஒருகட்சி சர்வாதிகாரத்திற்கு இட்டுச் சென்றது. நாளடைவில் இது ஏற்கத்தக்கதல்ல என்பதும் நிரூபணமானது. சுருக்கமாகச் சொல்வதென்றால், தொழிலாளி-விவசாயி கூட்டணியை தக்கவைப்பது என்பது சிரமமானது என்பது நிரூபிக்கப்பட்டது.
நிச்சயமாக, இதற்கு பிரத்தியேகமான வரலாற்றுப்பூர்வமான காரணங்கள் இருக்கும். இருந்தாலும், இதற்கு சில முக்கிய தத்துவார்த்தரீதியான காரணங்களும் இருக்கின்றன. குறைந்தபட்சம் இரண்டு பொதுவான தத்துவார்த்த நிலைப்பாடுகள் இருக்கின்றன. நிரந்தரமான நீடித்த தொழிலாளர்- விவசாயக் கூட்டணி கட்டப்பட வேண்டுமென்றால், இந்த தத்துவார்த்த நிலைப்பாடுகளை திருத்தியமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
முதலாவது தவறான தத்துவார்த்தப் புரிதல்
”ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயத்தின் இரண்டு உத்திகள்”என்ற நூலில், ஜனநாயகப் புரட்சியில் இருந்து சோஷலிசத்தை நோக்கிய மாற்றம் என்பது தொழிலாளி விவசாயி கூட்டணியின் அடிப்படையில் துவங்குகிறது என்று லெனின் குறிப்பிடுகிறார். மாற்றத்தை நோக்கிய பயணத்தில், விவசாய வர்க்கத்தில் இருந்து தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டாளிகளாக வருபவர்களிடையே இடையில் சில மாற்றங்கள் வரலாம் என்பதையும் குறிப்பிடுகிறார்.
புரட்சியின் கட்டத்தை நெருங்கநெருங்க, ஆரம்பத்தில் புரட்சியின் பக்கம் நிற்கும் பணக்கார விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதாகும். புரட்சியின் இறுதிக்கட்டத்தில் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தெரிந்தே எதற்காக பணக்கார விவசாயிகள் மற்றும் உயர்தட்டு நடுத்தர விவசாயிகள் புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் கூட்டணியில் இருக்கவேண்டும்? என்கிற கேள்வி இங்கு எழுகிறது.
அவர்கள் முதலில் புரட்சியின் பக்கம் நிற்காவிட்டால், புரட்சி என்பது மிகவும் சிரமமானதாக மாறிவிடும். மறுபுறம், புரட்சி அவர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடனும், ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எதிராக அது திரும்பும் என்று எதிர்பார்க்காமலும், புரட்சியின் துவக்கத்தில் அவர்கள் இணைகிறார்கள். திடீரென்று அவர்களுக்கு எதிராக திரும்பும்போது, புரட்சிக்கெதிரான அவர்களின் பகைமை என்பது கசப்பானதாக மாறுகிறது. குறிப்பாக, அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதில் இருந்து வரும் பகைமை மிகவும் கசப்பானதாக இருக்கும். இதனால், புரட்சியின் பாதையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
குறிப்பாக ஏகாதிபத்திய பகைமையால் சுற்றி வளைக்கப்படும். ஏற்கனவே, இதனை சந்திக்கவேண்டிய சூழல் இருக்கிறது. இதனிடையே, சமகால உலகமயமாக்கல் சகாப்தத்தில், எந்தவொரு தொழிலாளி-விவசாயி கூட்டணியும் உலகமயமாக்கலில் இருந்து துண்டித்துக்கொண்டு, அதிகார ஆதிக்கத்திற்கு உயரும்போது, பகைமையால் சுற்றி வளைக்கப்படுவது என்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ஒருவேளை, இந்த எல்லா கஷ்டங்களையும் தாண்டி, அனைத்து பகைமையையும், விமர்சனத்தையும் எதிர்த்து, வலுவான பலமான நடவடிக்கைகளால் அது தன்னை தக்க வைத்துக் கொண்டாலும், இந்த கஷ்டங்களையெல்லாம் எதிர்கொள்வதற்கான அத்தியாவசியமான தேவையாக ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் புரட்சியின் அடிப்படைத்தன்மை சிதைக்கப்பட்டுவிடும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ஜனநாயகப் புரட்சிக்கு தேவைப்படுகிற வர்க்கசக்திகளின் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதென்பது சோசலிசத்தை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது. வெறுமனே நிர்ப்பந்தத்தின் மூலம் சோசலிசத்தை நோக்கி நகர முடியாது. மாறாக, ஜனநாயகப் புரட்சியில் துணைநின்ற பணக்கார விவசாயிகளின் வலிமையில் குறைவு ஏற்பட்டாலும், புரட்சியில் ஈடுபட்ட அனைத்துப் பிரிவு விவசாயிகளின் பொருளாதார நிலைமைகள் முன்னேற்றமடையும் வகையிலான ஒரு செயல்முறையின்மூலம் இதனை அடையவேண்டும்.
மக்களுக்குச் சொந்தமான, மக்களால் கட்டுப்படுத்த முடிகிற, கூட்டமைப்புகள்தான் இந்த இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றும் வழிமுறைகளாகும். அதாவது, அவை மிகவும் பணகக்கார விவசாயிகளின் வலிமையை குறைக்கும். அதேநேரத்தில், இந்த கூட்டமைப்பு முறையில், உற்பத்திசக்திகள் வளர்ச்சியடைவதும் முன்னேற்றமடைவதும் நிகழ்வதன் காரணமாக, அனைத்துப் பிரிவு விவசாயிகளின் பொருளாதார நிலையும் முன்னேற்றமடையும். லெனின் குறிப்பிடுகிற, சோசலிசத்தை நோக்கிய மாற்றத்தில் பணக்கார விவசாயிகளின் மீதான தாக்கம் என்பது நிர்ப்பந்தத்தினால் ஏற்படுத்தப்படுவதாக எண்ணப்படாது. மாறாக, சுயமேம்பாட்டிற்குத் தேவையான தூண்டுதலாக பார்க்கப்படும்.
சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதை எளிமைப்படுத்துவதற்காக, தொழிலாளி-விவசாயி கூட்டணி தன்னுடைய குணாம்சத்தை மாற்றிக் கொண்டாலும்கூட, விவசாயிகளினுடைய எந்தப் பிரிவினரும், பணக்கார விவசாயிகள் உட்பட பகைமையாகி விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால், அதுவே கூட புரட்சியை பலவீனப்படுத்திவிடும். இந்த உண்மையை லெனினே கூட, தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் நன்கு அறிந்திருந்தார்.
இரண்டாவது தவறான தத்துவார்த்த புரிதல்
இந்த மிக முக்கியமான வாதத்தை மறுப்பதற்கு, இரண்டாவது தத்துவார்த்த ரீதியிலான தவறான கருத்து பயன்படுத்தப்படுகிறது. அதற்குப் பதிலாக சோசலிசத்திற்கு மாறுகின்ற இடைப்பட்ட காலத்தில் எதிர்கொள்ளும் முரண்பாடுகளின் சக்திபற்றி இந்த கருத்து வாதிடுகிறது. சந்தைக்கான உற்பத்தி என்பது உற்பத்தியாளர்களிடையே ஒரு வேறுபாட்டினை பிரிவினையை உருவாக்குகிறது. இதனால் முதலாளித்துவம் தோன்றுவதற்கான போக்கு கீழிருந்து உருவாகிறது என்ற நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இந்த இரண்டாவது கருத்து அமைகிறது.
சோசலிசத்திற்கு பகையான இந்த முதலாளித்துவப் போக்கினை கட்டுப்படுத்துவதற்காக முதலாளித்துவத்தின் அசல் கூறுகளான தனியார் சொத்து, மூலதனச் சேர்க்கை, சந்தை தீர்மானிக்கும் கூலியை பெறும் கூலித்தொழிலாளர்கள், தன்னார்வ பரிமாற்றங்கள், விலைஅமைப்பு முறைகள், போட்டிசந்தைகள் போன்றவை கட்டாயமாக ஒடுக்கப்படவேண்டும் என்று இந்த கருத்து வாதிடுகிறது. இது தவறான கருத்தாகும். ஏனெனில், சந்தைக்கான எந்தவொரு உற்பத்தியும் சரக்குஉற்பத்தியே என்ற அடிப்படை தவறினை இது செய்கிறது.
சரக்குஉற்பத்தி என்பது நிச்சயமாக உற்பத்தியாளர்களிடையே வேற்றுமையை உருவாக்கும். எனவே, சிறு உற்பத்தியாளர்களிடையே இருந்து முதலாளித்துவத்திற்கான போக்கு உதயமாகும் என்றெல்லாம் இந்த கருத்து வாதிடுகிறது. ஆனால் சரக்கு உற்பத்தி என்பதேகூட சந்தைக்கான உற்பத்தியை மட்டும் குறிப்பதல்ல. உதாரணத்திற்கு இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளாக சந்தைக்கான உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஆனால், கீழிருந்து முதலாளித்துவப் போக்கு என்பது இதுவரை கவனிக்கத்தக்க வகையில் எழவில்லை. அப்படி ஒரு போக்கு எழுந்திருக்குமேயானால், ஐரோப்பாவிற்கு முன்னரே இந்தியாவில் முதலாளித்துவம் வந்திருக்க வேண்டும். காலனிய சுதந்திரத்துக்கு பின்னர்தான் இந்தியாவில் முதலாளித்துவம் தோன்றியது.
சரக்கு உற்பத்தி என்பது சந்தைக்காக தயாரிக்கப்படும் அந்த பொருள்உற்பத்தி அதனுடைய உற்பத்தியாளருக்கு பயன்மதிப்பை தருகிறதா அல்லது பரிமாற்ற மதிப்பினை தருகிறதா என்பதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. சரக்கு உற்பத்தியில் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான உறவு என்பது முற்றிலும் பொதுவானது. தனிமனித உறவு சம்பந்தமானதல்ல. இந்தியாவில் உள்ள எஜமான் வேலையாள் அமைப்பில் இருப்பதுபோன்று (இந்தியாவில் உள்ள சாதிகட்டமைப்பில் உயர்ஜாதியில் இருப்பவரிடம் தாழ்ந்தஜாதி என்று சொல்லப்படும் சாதியில் உள்ளவர்கள் வேலை செய்து கொடுத்துவிட்டு அவர்கள் தரும் கூலியை பெறும் முறை உள்ளது. இதுவே எஜமான்–வேலையாள் உறவுமுறை) அல்லது இந்திய பஜார்களில் பொதுவாக பொருட்களை விற்பனை செய்யும்போது அன்றாட நிகழ்வுகளில் இருப்பது போன்றவற்றில் உற்பத்தியாளர்களிடையே வேற்றுமையை நிச்சயம் உருவாக்கும் என்பதோ அல்லது இதனால் கீழிருந்து சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து முதலாளித்துவத்தின் போக்கு உதயமாகும் என்பதோ இல்லை. இந்த உற்பத்தியாளர்கள் கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால்கூட, இந்தியாவில் ஒரு ஸ்வீட்கடை வைத்திருக்கும் வியாபாரிக்கும் வேலையாளுக்கும் உள்ள உறவுமுறைதான் இருக்கும். இங்கு சரக்கு உற்பத்தியில் இருந்து முதலாளித்துவம் உதயமாகும் என்பதற்கான இடம் இல்லை.
இருந்தபோதும், சந்தைக்காக தயாரிக்கப்படும் அனைத்துமே சரக்கு உற்பத்தியே என்ற நம்பிக்கையில் ஒரு முதலாளித்துவப் போக்கு உருவாகிறது. குறிப்பாக, எங்கெல்லாம் கூலித்தொழிலாளர்கள் நியமிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் இது உருவாகும். சோசலிச நாடுகளில் சிறு நிறுவனங்கள் மற்றும் விளிம்பு நிலை நிறுவனங்களை ஒழுங்குபடுத்தாமல், கூட்டு அமைப்புகளை உருவாக்குகிறோம் என்ற பெயரில் அவற்றை ஒடுக்கியதன் காரணமாக, அவை காணாமல் போய், புரட்சியின் சமூக அடிப்படையில் பலவீனம் ஏற்பட்டது. புரட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டது. இதற்கான சமீபத்திய உதாரணம்தான் சீனாவின் கலாச்சாரப் புரட்சி. சீனாவின் கலாச்சார புரட்சியில், சிறு உற்பத்தியாளர்களை முதலாளித்துவத்தின் மூதாதையர்கள் என்ற வெளிப்படையான கருத்தின் அடிப்படையில், அவர்களை இல்லாமல் செய்தது என்பது, அதாவது சிறு உற்பத்தித் துறையை அழித்தது என்பது, மிகவும் தவறான தத்துவார்த்த புரிதலுக்கான சமீபத்திய உதாரணமாகும்.
சோசலிச சமுதாயத்தில் செய்ய வேண்டியது
எனவே, சோசலிசத்தில் மட்டுமே மக்கள் கூட்டாக தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். பொருளாதாரம் குறித்த எதிர்காலத்தையும் தீர்மானிக்க முடியும். அரசியல் தலையீட்டின் மூலம் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்பதால், சிறு உற்பத்தியை பற்றி தவறாக வறட்டுத்தனமாக புரிந்துகொள்ளாமல், அதை அழிப்பதற்கு பதிலாக, பாதுகாப்பதன் மூலமாக மேலே குறிப்பிட்டுள்ளபடி வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும். சிறு உற்பத்தியை பாதுகாத்து அதுவாக தானாக மேம்பாட்டிற்காக மாறுவதற்கு உதவினால் மட்டுமே சோசலிசத்தை அதன் அடிப்படையை பலப்படுத்த முடியும். அதற்கு இந்த இரண்டு தவறான தத்துவார்த்த புரிதல்களையும் திருத்தி சரிசெய்ய வேண்டும்.
***
(பிரபாத் பட்நாயக் அவர்கள் மேற்கூறிய கருத்தரங்கில் தனது கருத்துரையை தொடங்கும்போது, அவரது தலைமுறையில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் தான்சானியாவின் அதிபர் ஜுலியஸ் நெய்ரே ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்ததை நினைவுகூர்கிறார். மூன்றாம் உலக நாடுகளில், காலனியாதிக்கத்தை எதிர்த்து, அந்தந்த நாடுகளில், விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கி நடத்திய முக்கிய தலைவர்களான – இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, இந்தோனேசியாவின் சுகர்ணோ, கானா குடியரசின் வாமே க்ரூமேன், காங்கோ குடியரசின் பேட்ரிஸ் லுமும்பா, மற்றும் கென்யாவின் ஜோமோ கென்யாட்டா ஆகியோரின் பட்டியலில் ஜுலியஸ் நெய்ரே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார்.)