மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கார்ப்பரேட் VS சிறு, குறு, நடுத்தர தொழில்கள்…


எஸ். கண்ணன்

தற்போதைய கால கட்டத்தில், ஏறத்தாள உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழில் கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்து பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும் பட்டறைத்தொழிலும் விழுங்கப்பட்டு விட்டன. இந்த நிகழ்முறை முன்னெப்போதையும் விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தை குறிப்பாக சிறிய கைவினைத் தொழில் முனைவோரை சிதைத்து அழித்து விட்டது.

—- ஏங்கெல்ஸ் 1847 ல் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள்….

பட்டறை தொழில்முறையின் இடத்தைப் பிரமாண்ட நவீனத் தொழில்துறை பிடித்து கொண்டது. பட்டறை தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வர தொழில் அதிபர்கள், ஒட்டு மொத்த தொழில் துறையின் படையணிகளின் தலைவர்களாக அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாகினர்..

— மார்க்ஸ், ஏங்கெல்ஸ் 1848ல் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை…
.

1991 க்குப்பின் தாராளமய கொள்கை அந்நிய நேரடி மூலதனத்தின் வருகைக்கு வழிவகுத்தது. இறக்குமதி தாராளமாக்கப்பட்டது. இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டு சலுகைகள் அதிகரித்ததும், சிறு உற்பத்தி துறையில் பெருமுதலாளிகள் ஈடுபடுவதற்கான வாய்ப்பை அதிகரித்ததும், ஆலைமுடல், வேலை இழப்பு அதிகரித்தது..

——- சி.பி.ஐ.எம் கட்சித் திட்டம் 2001….

முதலீடுகளை கவர்ந்திழுப்பது, உற்பத்தியை அதிகரிப்பது என்ற பெயரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அல்லது சிறப்பு முதலீட்டு மண்டலம் அமைக்கப்பட்டு, வரிச்சலுகைகளுடன், தொழிலாளர் சட்டங்களில் திருத்தத்தையும் செய்து, கொடுக்கும் அரசுகளாக இன்றைய அரசு உள்ளது. 

—— சி.பி.ஐ. எம் ஆய்வுக் குழு தயாரித்த மூன்று ஆய்வறிக்கைகள் 2016….

காலங்கள் மாறினாலும், ரஷ்ய நாவலாசிரியர் ஆண்டன் சேகவ் கூறியதைப் போல், கடலின் பெரும் திமிங்கிலங்கள் சிறு மீன்களை, விழுங்குவதைப் போல், பெரு முதலாளித்துவம் சிறு, குறு உடமையாளர்களை அழித்து, வருகிறது. ஒரு சில இடங்களில் சில சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நீடிக்கிறது. அதுவும் நொடித்து, கடும் சிரமங்களுடன் நடந்து வருவது கவலை குறியதாக உள்ளது. தாராளமய பொருளாதாரம் கொள்கை அமலாக துவங்கிய பின் விவசாயிகள் தற்கொலை மூன்று லட்சங்களை கடந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கொண்ட நிலப்பிரபுக்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தாராளமய கொள்கைகளின் தாக்கத்தால், விவசாய இடுபொருள் மற்றும் செலவினங்கள் அதிகரிக்கும் போது, கடன் பெற்று திரும்ப செலுத்த இயலாத சிறு,குறு விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்து கொண்டனர். மற்றொரு புறம் முதலீட்டிற்கும் கொள்முதல் விலைக்கும் சம்மந்தமில்லாத, பொருளாதார இழப்பை சந்திப்பதும், காரணமாக இருந்தது. 

நேற்று விவசாயிகள் இன்று சிறு, குறு உடமையாளர்கள்:

ஏகபோகம் எந்த துறையில் அதிகரித்தாலும், அந்த துறையின் சிறு உற்பத்தியாளர்கள் அழிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருவதை கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறிவருவதை மேலே பார்த்தோம். விவசாயத்தில் கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் களம் இறங்கும் போது, அழிக்கப்படுவோம், என்பதை உணர்ந்த விவசாயிகள் தற்போது தலைநகர் டில்லியை முற்றுகையிட்டு வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அழிப்பு நடவடிக்கையை அமைதியாக ஏற்றுக் கொண்டதாக வரலாறு இல்லை. எதிர்த்த போராட்டத்தில் வெற்றிகள் பதிவாகியுள்ளன. சீர்திருத்த நடவடிக்கைகளில் இத்தகைய சிறு, குறு உடமையாளர்கள் திருப்தி கொள்வதும் நடந்து வருகிறது. அதன் காரணமாகவே வேறு வடிவத்தில், பெரு முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்களின் வளர்ச்சி நீடிக்கிறது. இந்த உண்மையை சமூகம் உணர வேண்டும் என்பதையே மார்க்சிஸ்ட்டுகள் வலியுறுத்துகின்றனர். 

பஞ்சும் பசியும் நாவலில், அன்றைய ஜவுளித் தொழில் சார்ந்த சிறு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் பிரச்சனை விவாதிக்கப்படும். வீட்டு மாடியில் தூக்கில் தொங்கும் கைலாச முதலியார் கதாபத்திரங்கள், நிஜ வாழ்க்கையில் அதிகரிக்கிறது. தற்போது சிறு, குறு உற்பத்தியாளர்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அண்மையில் கோவை மாநகரத்தில் ஒரு சிறு உற்பத்தியாளர் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த கவலை அளிக்கும் செய்தியாக பேசப்பட்டது. இது ஒன்றல்ல, ஆண்டுக்கு பல ஆயிரம் என்கிறது, தேசிய குற்றவியல் ஆவண காப்பகம். அதாவது 2017 ல் 7890 பேர் சிறு, குறு தொழில் உற்பத்தியாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2018 ல் 7991 என உயர்ந்ததாகவும் கூறுகிறது. ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று சதம் தற்கொலைகள், சிறு, குறு தொழில் உடைமையாளர்கள் மத்தியில் உயர்ந்து வருவதாகவும் விவரங்கள் கூறுகிறது. 

தமிழகமும் இந்த எண்ணிக்கையில் உள்ளடங்கி உள்ளது. அதுவும் சுமார் 10 முதல் 12 சதம் அளவில் மொத்த எண்ணிக்கையில் தமிழகப் பங்களிப்பு இருக்கிறது. அதாவது கடந்தாண்டு தமிழ்நாட்டில் 991 சிறு,குறு தொழில் உற்பத்தியாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதை, எளிதில் கடந்து செல்வது, பிரச்சனையின் ஆழத்தை புரிந்து கொள்ள உதவாது. இந்த மரணங்கள் ஊடகங்களில் பெரும் விவாதமாக மாற்றப்படவில்லை. அதாவது தொழிலில் ஏற்பட்ட பாதிப்பு எனவே இறந்து விட்டார், என மிக எளிதாக செய்திகள் பகிரப்படுகின்றன. நாகரீக சமூகத்தில் ஒரு தொழில் ஏன் நலிவுறுகிறது? என்ன பிரச்சனை புதியதாக உருவாகிறது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு, விவாதிக்கப்பட வில்லை. இதன் காரணமாக தீர்வும் உருவாக்கப்படவில்லை. 

இந்தியாவில் கணிசமான பங்களிப்பு செய்யும் சிறு, குறு தொழில்கள்:

இந்திய அளவில் 2.61 கோடி நிறுவனங்கள் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இந் நிறுவனங்கள் சுமார் 6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகின்றன. 1954 ல் சிறு, குறு தொழில் மேம்பாட்டு கழகம் இந்திய அளவில் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி மக்கள் தொகை உள்ளநிலையில், 5 கோடி வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாணவர், முதியோர், பணிக்கு செல்லாத பெண்கள் ஆகிய மூன்று பிரிவினரை தவிர்த்தால் சுமார் 3 கோடிப்பேர் தொழிலாளர்கள் ஆவர். அதில் 80 லட்சம் பேர் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பணிபுரிவோராக அல்லது சார்ந்தோராக உள்ளனர். 

தமிழகம் இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 6.89 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக, ரூ 32004 கோடி முதலீட்டில், 8000 வகையான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கணிசமான அளவிற்கு பொருளாதார கட்டமைப்பில் இந்த துறை பங்களிப்பு செய்கிறது. அரசு இதை தக்க வைப்பது மட்டுமல்ல அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டிய கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை. 

ரிலையன்ஸ் 1.25 லட்சம் கோடி, வேதாந்தா 1.03 லட்சம் கோடி, எஸ்ஸார் 1.01 லட்சம் கோடி, அதானி குழுமம் 96,031 கோடி, ஜேபி குழுமம் 75163 கோடி, ஜேஎஸ்டபுள்யு குழுமம் 58,171 கோடி, ஜி.எம்.ஆர் குழுமம் 47,976 கோடி, லான்கோ குழுமம் 47,102 கோடி, வீடியோ கான் 45405 கோடி, ஜி.வி.கே குழுமம் 33,933 கோடி என மொத்தம் ரூ 7.5 லட்சம் கோடி வங்கிகடனை 10 நிறுவனங்கள் பெற்றுள்ளன. 2017 ல் வங்கிகள் வெளியிட்ட விவரமாகும். ஆனால் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, 2020 கோவிட் பாதிப்பின் போது வெறும் 15000 கோடி மட்டுமே வழங்க மத்திய அமைச்சர் நிதின் கட்காரி செய்தி வெளியிட்டார். சுமார் 6 கோடி தொழிலாளர்கள் சார்ந்த 2.67 கோடி நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி வரை கடன் வழங்க முடியும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தற்சார்பு குறித்த அறிவிப்புகளின் போது தெர்வித்தார். இது அப்பட்டமான பாரபட்சம் என்பதை தெளிவு படுத்துகிறது. 

மேற்படி பாரபட்சம் மத்திய அரசின் கார்ப்பரேட் அல்லது பெரு முதலாளித்துவ ஆதரவு கொள்கையை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் என்பதை 1956 ல் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்து சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கான நிதி ரூ 300 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 298.2 கோடி கடன் வழங்கப்பட்டதாகவும் விக்கிபீடியா தகவல் சொல்கிறது. இது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்ற ஒன்று என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மாவட்ட தொழில் மையம் என்ற பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அலுவலக ஏற்பாடு உள்ளது. இதன் மூலம் புதிதாக தொழில் துவங்குவோருக்கு கடன் மற்றும் பயிற்சிக்கான ஆலோசனை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பலர் பயிற்சி பெற்றாலும் பயன் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு 100 கோடி ரூ, கடந்த 2019-20 நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்து, சுமார் 10 கோடி ரூ அளவில் மான்யம் வழங்கப்பட்டுள்ளது. இது 80 லட்சம் வேலைவாய்ப்பை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க உதவாது என்பதை புரிந்து கொள்ள முடியும். 

கார்ப்பரேட் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கிடையிலான முரண்:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தேசிய சூழலை ஆய்வு செய்கிற போது, இந்தியாவில் வளர்ந்து வரும் சில பிரிவினருக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்தும் விவாதித்துள்ளது. அதில் ஒன்றாக இந்திய கார்ப்பரேட் மற்றும் சிறு, குறு தொழில் உற்பத்தியாளர்களுக்கு இடையிலான முரண்பாடு அதிகரிப்பதையும், சுட்டிக்காட்டுகிறது. மேலே கூறியபடி, வங்கி கடன், நிலம் ஆர்ஜிதம், வரி சலுகை, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகிய அனைத்தும் பெருவீத தொழில்களுக்கானதாக இருப்பதை விமர்சிக்க வேண்டியுள்ளது. அதேநேரம் சுமார் 6 கோடி பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் 2.67 கோடி தொழில்களை பாதுகாக்க அரசின் கவனம் போதுமானதாக இல்லை என்பது, மிக மோசமான அணுகுமுறையாகும். 

அதேபோல் பெரு வீதத் தொழில் உரிமையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கினாலும், தொழிலாளர்களை சுரண்டுவதுபோல், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சுரண்டுவது மிக பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இந்த அணுகுமுறை தொழிலாளர்களை மேலும் கசக்கி பிழியக் கூடியதாக மாறிவருகிறது. வாகன உற்பத்தி நிறுவனங்கள், தனக்கான உதிரி பாக உற்பத்தியாளர்களை TIER 1, TIER 2, TIER 3 போன்ற மட்டங்களில் செயல்படுத்துகிறது. TIER 1, நிறுவனம் நேரடி உதிரிபாக விநியோகத்தை செய்கிறது. இந்த நிறுவனங்களைச் சார்ந்தோர் பெரு வீதத் தொழில்களுக்கு இணையாகவே உள்ளனர். TIER 2, நிறுவனம் TIER 1,க்கு உதிரிபாகம் விநியோகிப்பதாக உள்ளது. இவை சில இடங்களில் நடுத்தர தொழில்களாக உள்ளன. TIER 3 பெரும்பாலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களாக உள்ளன. 

இங்கு இந்த படிநிலைகள் பிரச்சனை அல்ல. படிநிலை குறைய குறைய உற்பத்தி செலவையும் குறைக்க கட்டாயப் படுத்தும், பெரிய அண்ணன் வேலையை, படி நிலையில் மேல் இருக்கும் உற்பத்தியாளர்கள் செய்கின்றனர். அவ்வாறு குறைவான விலையில் இந்த கீழ்நிலை நிறுவனங்கள் பொருள் உற்பத்தி செய்து தருவதை பெறுவதன் மூலம், பெரிய நிறுவனங்கள் தங்களின் லாப விகிதத்தை உயர்த்திக் கொள்ள முடியும். சிறிய நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி செலவை குறைக்க, அண்மை காலங்களில் படிப்பறிவு குறைந்த, வேலைநேரம் குறித்த சட்ட விழிப்புணர்வற்ற இடம் பெயர் தொழிலாளர்களை குறைவான கூலிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த காலத்தில் சிறு,குறு தொழில்களில் மிக அதிக அளவு இடம் பெயர் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததற்கு உற்பத்தி செலவு குறைப்பு என்ற அழுத்தம் முக்கிய காரணம் ஆகும். 

இது ஒரு சமரச அணுகுமுறை ஆகும். அதேபோல் மற்றுமொரு சமரச அணுகுமுறை சிறு, குறு தொழில் உற்பத்தியாளர்களிடம் உள்ளது.  சட்ட ரீதியில் பின்பற்ற வேண்டிய பிராவிடண்ட் பண்ட், இ.எஸ்.ஐ போன்றவற்றை மிக குறைவான எண்ணிக்கை கொண்ட தொழிலாளர்களுக்கு அமலாக்குகின்றன. இதன் மூலம் தொழிலாளரின் உழைப்பை சுரண்டி, பெரு வீதத் தொழில் உடமையாளருக்கான லாப விகிதத்தை அதிகப்படுத்துகின்றனர். எத்தனை சமரசங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் பெரு நிறுவனங்களுடன் செய்து கொண்டாலும், அரசு மூலமான சலுகை, பெரு நிறுவனங்களுக்கே போய் சேருகிறது. இதன் மூலம் இரட்டை லாபத்தை பெரு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. இதை தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் உணர்ந்து, அதிருப்தி கொள்கின்றனர். 

மார்க்சீய பொருளாதார அறிஞர்கள் கூறுவது போல், இரட்டை லாபத்தின் மூலம், உற்பத்தியைக் குவித்தாலும், கிராக்கி அதிகரிப்பதில்லை, என்ற உண்மையே மேற்படி முரண்பாட்டில் வெளிபட வேண்டியதாக உள்ளது. உற்பத்தி  செலவை குறைக்க ஊதிய குறைப்பு பயன் தராது, சட்ட உரிமைகள் பறிப்பு பயன் தராது, என்பதை வலுவாக எடுத்து செல்ல வேண்டியுள்ளது.

செய்ய வேண்டிய தேவைகள்:

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான வரையறை தற்போது உள்ள 25 லட்சம் முதலீட்டில், குறு தொழில் எனவும், 2 கோடி வரையிலான முதலீடு சிறு தொழில் எனவும், 10 கோடி வரையிலான முதலீடு  நடுத்தர தொழில் எனவும் உள்ளது. இதை கோவை கொடிசீய அமைப்பினர் வேண்டுகோள் விடுத்திருப்பதை கணக்கில் கொண்டு, குறு தொழில் முதலீட்டு வரம்ப்பை 75 லட்சமாகவும், சிறு தொழில் 10 கோடி வரையிலும், உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது சந்தை வளர்ச்சியில் பணமதிப்பு குறைந்துள்ள காரணத்தால் மேற்படி உற்பத்தியாளர்களுக்கு, அரசின் சலுகை மற்றும் கட்டணங்கள் தீர்மானிக்க உதவியாக இருக்கும். 

MSME க்கான ஒப்புதலை வழங்க ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர நிர்வாக அமைப்பு தேவை என்ற கோரிக்கை பரிசீலனை செய்யப் பட வேண்டும்.

மூலப்பொருள்களின் விலை GST காரணமாக 35% விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பிற்கு இது பிரதான தடையாக உள்ளது. இது குறித்து உரிய கலந்தாலோசனை மூலம் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை தேவை.

ஜாப் ஆர்டர்களுக்கும் 18 சத GST வரி விதிப்பை உருவாக்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்து வரி குறைப்புக்கான உறுதியான நடவடிக்கைகள் தேவைப் படுகிறது. 

தேசிய, சர்வதேசிய அளவில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கேற்பாளர் மற்றும் பார்வையாளர்களாக பங்கு கொள்ளவும், சந்தைப் படுத்தவும் (மார்க்கட்டிங்) உதவிகள் செய்யப்பட வேண்டும். 

கொரானா, GST, பணமதிப்பு நீக்கம் ஆகிய காரணங்களால் பாதிப்படைந்துள்ள தொழில்களை மேம்படுத்த உதவிடும் வகையில், சொத்துவரி, தண்ணீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை இரண்டு ஆண்டுகள் தள்ளுபடி செய்யும் வேண்டுகோள் MSME நிறுவனங்களிடம் அதிகரித்து உள்ளது கவனிக்கப்பட வேண்டும். 

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ( TIIC) மற்றும் தாய்கோ அமைப்புகள் மூலம் வழங்கப்படும் கடன் வசதிகள் அதிகரிக்கப்படும். மூலப்பொருள்கள் பெற்றிடுவதற்கான Credit Guarantee நிதித்திட்டம் மூலம் மத்திய அரசின் சலுகைகளை தமிழகத்தில் பெற்றிடுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.

கோவை மண்டலத்தில் மோட்டார் பம்ப், நகைத் தொழில், வெட் கிரைண்டர், ஜவுளி கோழிப்பண்ணை ஆகிய சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கும், சிட்கோ (சிறு தொழில் வளர்ச்சி கழகம்) மூலமான தொழிற்பேட்டைகள் உருவாக்கிடவும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்  தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படவும் வேண்டும். 

செங்கல், கயிறு, ஆடைகள் தயாரிப்பு, ஆகிய தொழில் கூட்டுறவு மூலமான நடவடிக்கைகள் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கரூர் பகுதிகளில், தலித் சமூகத்தினருக்காக அதிமுகவால் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு செயலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மதுரையில் ஆட்டோமொபைல் கூட்டுறவு தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும். 



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: