மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தமிழ்நாட்டு ஊரக வேளாண் குடும்பங்களின் நிலை என்ன?


பேரா. வெங்கடேஷ்  ஆத்ரேயா

அறிமுகம்

இந்த கட்டுரையில் ஆய்வறிக்கை தமிழக வேளாண் குடும்பங்களின்  நிலைமை குறித்து தரும் சில தரவுகள் பற்றி சுருக்கமாக பரிசீலிப்போம்.

வரையறை

ஒன்றிய அரசின் ஆய்வில் சம்பந்தப்பட்ட ஆண்டில் (2018 ஜூலை முதல்  2019 ஜூன் வரையிலான ஒரு ஆண்டு) விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் மூலம்  நான்காயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான மதிப்பு பெறுகின்ற அளவிற்கு உற்பத்தி செய்யும் குடும்பங்கள் மட்டுமே வேளாண் குடும்பங்கள் என  வரையறுக்கப்பட்டுள்ளது. விவசாயம் என்பது பயிர் சாகுபடி, தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி, கால்நடை பராமரிப்பு (ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்டு) தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு  ஆகிய அனைத்தையும் குறிக்கும்.  குடும்பத்தில் ஒரு நபராவது தனது பிரதான பணியாகவோ இரண்டாம் நிலை பணியாகவோ மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும். ஆய்வு கிராமப்புறங்களில் மட்டும் நடத்தப்பட்டது. ஆய்வில் இடம்பெற்ற குடும்பங்கள் (ஆய்வு வரையறுத்துள்ள) ‘வேளாண் குடும்பங்கள்’, ‘வேளாண் அல்லாத குடும்பங்கள்’ என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. விரிவான ஆய்வு வேளாண் குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு தரும் சில விவரங்களை நாம் காண்போம்.

தமிழகம் -இந்தியா ­­

பல முக்கியமான தன்மைகளில் தமிழகம் இந்திய சராசரியிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது.

 • அகில இந்திய அளவில் மொத்த கிராமப்புற குடும்பங்களில் 54% குடும்பங்கள் வேளாண் குடும்பங்கள் என்றும், மீதம்   46% வேளாண் அல்லாத குடும்பங்கள் என்றும் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தின் கிராமப்புற குடும்பங்களில்  26% மட்டுமே வேளாண் குடும்பங்கள் என தனது வரையறையின் அடிப்படையில்  ஆய்வு தெரிவிக்கிறது.
 • சமூக கட்டமைப்பை பொருத்தவரையில் அகில இந்திய அளவில் வேளாண் குடும்பங்களில்  கிட்டத்தட்ட 16% பட்டியல் சாதியினர், 46% இதர பிற்படுத்தப்பட்டோர், 14% பழங்குடியினர், மீதம்  24% இதர சமூகங்களை சேர்ந்தவர்கள். தமிழக நிலைமை இதிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது. தமிழகத்தில், வேளாண் குடும்பங்களில் பழங்குடி மக்கள்  1.2 %, பட்டியல் சாதியினர்  20.2%, இதர பிற்படுத்தப்பட்டோர்  78.3%, இதர சாதியினர்    0.3% மட்டுமே .
 • கல்வி சார்ந்த சில குறியீடுகளை எடுத்துக்கொண்டால், தமிழக ஊரக வேளாண் குடும்பங்களின் எழுத்தறிவு விகிதம் 7 வயதுக்கு மேற்பட்டவர்களில்   80.5% (ஆண்கள் 87.5%, பெண்கள் 73.6%)   ஆக உள்ளது. அகில இந்திய சராசரி 73.6% (ஆண்கள் 81.9%, பெண்கள் 65.0 %)ஆக உள்ளது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்தாம் வகுப்பும் அதற்கு மேலும் படித்தவர்கள் சதவிகிதம் தமிழகத்தில்  41.7% (ஆண்கள் 48.7%, பெண்கள் 34.6%).இந்திய சராசரி 33.8% ( ஆண்கள் 40.4%, பெண்கள் 27.0). இவ்விவரங்கள் பொதுவாக பல பிற மாநிலங்களைவிட கல்வி புலத்தில் தமிழகம் சற்று முன்னணியில் உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறது.
 • பொதுவாக இந்திய நாட்டில் பெரும்பாலான வேளாண் குடும்பங்கள் சிறு குறு விவசாயிகள் என்பது உண்மை.  நிலம் உள்ள ஒரு வேளாண் குடும்பம் சராசரியாக தன்வசம் வைத்துள்ள வேளாண் நிலம் தமிழகத்தில் 0.265 ஹெக்டேர்தான் (சுமார் 65 சென்ட்). அகில இந்திய சராசரி 0.558 ஹெக்டேர்(138 சென்ட்). இவை சராசரிகள் என்பதை நினைவில் கொள்க. ஏனெனில் பெரும் நில உடமையாளர்களும் உள்ளனர். உண்மையில், நில உடமையில் உள்ள பெருத்த ஏற்றத்தாழ்வுகள் காரணமாக  பெரும்பகுதி வேளாண் குடும்பங்கள் இரண்டு ஹெக்டேருக்கும் (5 ஏக்கருக்கு ஆறு சென்ட் குறைவு) குறைவாகவே நிலம் வைத்துள்ளனர். ஒரு சிறிய பகுதியினரிடம் பெரிய பண்ணைகள் உள்ளன.

தமிழக வேளாண் குடும்பங்களின் வருமானம்

 • ஒன்றிய அரசின் ஆய்வின்படி தமிழக கிராமப்புற விவசாய குடும்பங்களின்  சராசரி மாத வருமானம் ரூ 11,924. அகில இந்திய அளவில் ரூ 10,218. இத்தொகை விவசாயிகள் கையை விட்டு பணமாக செலவழிக்கும் செலவுகளை மட்டுமே கணக்கில்  கொண்டு நிகர வருமானத்தை கணக்கிடுகின்றன. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் (CACP–Commission on Agricultural Costs and Prices) முன்வைக்கும் C2 என்ற செலவு வரையறைப்படி பார்த்தால் செலவு கணிசமாக கூடுதலாக இருக்கும். C2 செலவு தொகை என்பதில் கையைவிட்டு பணமாக சாகுபடிக்கு செலவழிக்கப்படும் தொகை மட்டுமின்றி கீழ்வரும் செலவுகளும் சேரும்: சாகுபடிப் பணிகளில் செலவிடப்படும் குடும்ப உழைப்பு சக்தியின் பணமதிப்பு, நிலத்திற்கான குத்தகை மதிப்பு (சொந்த சாகுபடி செய்யும் விவசாயி அவ்வாறு செய்யாமல் குத்தகைக்கு விட்டிருந்தால் குத்தகைத்தொகை கிடைத்திருக்கும் அல்லவா, அது சொந்த சாகுபடியில் கிடைக்காது என்ற வகையில் வெளிப்படாத செலவு என்று பொருளியலில் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடு உள்ளது), சாகுபடிக்காக செய்யப்பட்டுள்ள முதலீட்டு தொகைக்கான வட்டி.. இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டால் வரும் தொகை C2. இந்த அடிப்படையில் கண்டால் தமிழக ஊரகப்பகுதி விவசாய குடும்பத்தின் சராசரி மாத  வருமானம் ரூ 10,448 ஆகும். அகில இந்திய அளவில் இத்தொகை ரூ 8,337 ஆகும்.
 • ஒரு வேளாண் குடும்பத்தின் மொத்த வருமானம் பல நடவடிக்கைகள் மூலம் பெறப்படுகிறது. குறிப்பாக, பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, குத்தகை மற்றும் கூலி/சம்பள உழைப்பு ஆகிய நடவடிக்கைகள் முக்கியமானவை. இவ்வாறு வருமான மூலம் என்ற அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் சராசரியாக ஒரு ஊரக வேளாண் குடும்பத்தின் மொத்த வருமானத்தில் கூலி உழைப்பின் மூலம் கிடைக்கும் பங்கு 55% . பயிர் சாகுபடி மூலம் கிடைப்பது 22%. கால்நடை வளர்ப்பு மூலம் கிடைப்பது 17% , குத்தகை மூலம் கிடைப்பது 6% என்று ஆய்வு தெரிவிக்கிறது. அகில இந்திய அளவில் இந்த விகிதங்கள் முறையே 39.8%,  37.2%, 15.5%, 13.1% என்று உள்ளன. எனவே வேளாண் குடும்பம் என்று வரையறுக்கப்பட்டுள்ள குடும்பங்களிலும் குடும்ப உறுப்பினர்களின் கூலி உழைப்புதான் அதிகமாக பங்களிக்கிறது.  தமிழகத்தில் மொத்த குடும்ப வருமானத்தில் கூலி-சம்பள வருமானம் இந்திய சராசரியை விட கூடுதலான பங்கு வகிக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு உட்பட்டு நிலம் உள்ள வேளாண் குடும்பங்களில் ஐந்தில் மூன்று பங்குக்கும் அதிகமானவை  பிரதானமாக கூலி  உழைப்பை சார்ந்தே உள்ளன.

கடன் பற்றி

கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடன் வாங்காமல் இருப்பது என்பது எளிதான விஷயமல்ல. சாகுபடிக்கும் இதர சுய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக அவ்வுற்பத்தியில் சந்தை சார் இடுபொருட்கள் தேவை என்கிறபொழுது கணிசமான சொந்த மூலதனம் அல்லது வேறு வருமான மூலங்கள் இருந்தாலொழிய கடன் வாங்காமல் வேளாண் மற்றும் வேளாண்சார் தொழில்கள் செய்வது கடினம்.  ஆய்வு ஆண்டில் தமிழக கிராமப்புற வேளாண் குடும்பங்களுக்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ரூ 1,06,553 கடன் இருந்ததாக ஆய்வு சொல்கிறது. மொத்த வேளாண் குடும்பங்களில் 65% குடும்பங்கள் கடன் பட்டிருந்தன. அகில இந்திய அளவில் சராசரி கடன்  ரூ 74,121 ஆகவும் கடன் நிலுவை இருந்த குடும்பங்களின் சதவிகிதம் 50% ஆகவும் இருந்தது. இதன் ஒரு பொருள் சந்தை சார்ந்த இடுபொருட்களை அதிகமாக பயன்படுத்தும்  நவீன வேளாண்மையில் அகில இந்திய சராசரியை விட தமிழகம் கூடுதலாக ஈடுபட்டுள்ளது என்பதாகும்.

கவனம் தேவை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் இருந்து முடிவுகளுக்கு பயணிக்கும் பொழுது கவனம் தேவை. “ கிராமப்புற மொத்த குடும்பங்களில் வேளாண் குடும்பங்கள் 26% தான். எனவே விவசாயம்  தமிழக பொருளாதாரத்திற்கு முக்கியமல்ல.” என்று முடிவு செய்வது மிகவும் தவறாகும். இந்த ஆய்வு முன்வைத்துள்ள ‘வேளாண் குடும்பம்’ என்பதற்கான  வரையறைக்குள் வராத ஏராளமான ஊரக குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிடத்தக்க பகுதியை விவசாயக்கூலி வேலை மூலம் பெறுகின்றனர். ஆகவே தமிழக கிராமப்புற மக்களில் விவசாயத்தை ஏதோ ஒரு வகையில் ஓரளவாவது சார்ந்து நிற்கும் குடும்பங்களின்  சதவிகிதம் 26% ஐ விட நிச்சயம்  அதிகம்.

அகில இந்திய ஒப்பீடுகள் ஒரு புறமிருக்க, தமிழக விவசாயிகள் குறித்து கிடைக்கும் தரவுகளை பார்ப்போம்.

தமிழக ஊரக வேளாண் குடும்பங்கள்

 • ஒன்றிய அரசின் ஆய்வின் வரையறை படி தமிழக ஊரகப்பகுதியில் மொத்த குடும்பங்களில் 26%  வேளாண் குடும்பங்கள் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். சமூக ரீதியாக இது வேறுபடுகிறது. பட்டியல் சாதியினர் மத்தியில் இந்த சதவிகிதம் சற்றுக் குறைவாக  18% ஆகவும் பிற பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் 31% ஆகவும் உள்ளது.
 • பெரும்பாலான குடும்பங்கள் குறைந்த அளவிலான நிலம் கொண்டுள்ளனர். 95 சதவீத பட்டியல் சாதி வேளாண் குடும்பங்கள் மற்றும் 91 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோர் வேளாண் குடும்பங்கள்  சராசரியாக 1 ஹெக்டேருக்கு குறைவாகவே நிலம் கொண்டுள்ளனர்.
 • பட்டியல் சாதி வேளாண் குடும்பங்களிடம் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக  வீட்டுமனையையும் சேர்த்து 1.25 ஏக்கருக்குக் குறைவாகவே நிலம் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் சராசரியாக 2 ஏக்கர் நிலம் உள்ளது.
 • பெரும்பாலான வேளாண் குடும்பங்கள் ஒரு பயிர் மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.
 • பாசனத்தை பொருத்தவரையில் மொத்த சாகுபடி பரப்பளவில்  43% தான் பாசனம் பெறுகிறது. பாசனத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்படுவது நிலத்தடி நீர். அடுத்து உள்ளது வாய்க்கால் பாசனம்.
 • ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் பயிர் சாகுபடி வருமானம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.  இதன் பொருள் இந்த நிலங்கள் நடப்பு தரிசாக இருந்திருக்கலாம்; அல்லது சாகுபடி பொய்த்துப்போய் விட்டது என்பதாகும்.
 • தமிழக ஊரக வேளாண் குடும்பங்களில் 64%  பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் சந்தைகளின் முக்கிய பங்கு

தமிழகத்தின் முக்கிய பயிர்கள் நெல், சோளம், வேர்க்கடலை மற்றும் தேங்காய் ஆகும். முக்கியமான செய்தி என்னவெனில், இடுபொருட்கள் வாங்குவதும் விளை பொருட்கள் விற்பதும் கணிசமான அளவிற்கு உள்ளூர் அல்லது அருகாமை சந்தைகளில்தான் நிகழ்கிறது. ஒன்றிய அரசு கடந்த ஆண்டு பாராளுமன்ற நெறிமுறைகளை புறக்கணித்து நிறைவேற்றிய விவசாயி விரோத வேளாண் சட்டங்களை நியாயப்படுத்த அரசு பயன்படுத்திய, பயன்படுத்திவரும் கதையாடல் எவ்வளவு தவறானது என்பதை இத்தகவல் நமக்கு தெரிவிக்கிறது. APMC ஏற்பாடுகளும் செயல்பாடுகளும் எந்த வகையிலும் கிடைக்கும் விலைக்கு விளைபொருட்களை விற்பதற்கு முட்டுக்கட்டையாக இல்லை என்பதை இத்தரவுகள் தெரிவிக்கின்றன.(மாபெரும் போராட்டங்களுக்கு அடிபணிந்து ஒன்றிய அரசு மூன்று விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய நேர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.)

கொள்முதல்

ஒன்றிய அரசின் ஆய்வு விவசாய குடும்பங்கள் மத்தியில் கொள்முதல் விலை மற்றும் ஏற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு தமிழகத்திலும் கூட குறைவாகவே உள்ளது என்று கூறுகிறது. நெல் சாகுபடியாளர்களை பொருத்தவரையில், 2019இல் 64% விவசாயிகள்  உள்ளூர் சந்தைகளில் நெல்லை விற்றனர். 28% அரசு முகமைகளுக்கு விற்றனர். மொத்த விற்பனையில் அரசு முகமைகளுக்கு 32% விற்கப்பட்டது, 62% உள்ளூர் சந்தைகளில் விற்கப்பட்டது.

இத்தரவுகள் ஒரு முக்கிய செய்தியை சொல்கின்றன. நெல் கொள்முதல் ஏற்பாடுகளை அரசு வலுவாக செய்தால் பெரும்பகுதி நெல்லை விவசாயிகள் உரிய கொள்முதல் விலை பெற்று அரசுக்கு விற்பார்கள் என்பதுதான் அந்த செய்தி. அத்தகைய ஏற்பாடு இல்லை என்பது தொடரும் துயரம். நெல்லின் கதை இதுவென்றால் பிற பயிர்கள் விற்பனையில் விவசாயிகள் படும் பாடு என்ன என்பதை உணர்வது கடினமல்ல.

இந்த நிலை மாற வேண்டும். ஒரு ஆண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் நடந்துவரும், தற்பொழுது முடிவுக்கு வந்துள்ள மகத்தான விவசாயிகள் போராட்டத்தின்  முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று  நியாயமான கொள்முதல் விலை சட்ட ரீதியாக உத்தரவாதப்படுத்தப்படவேண்டும் என்பதாகும்.  அரசின் ஆய்வு சொல்லும் செய்தி  வேளாண் குடும்பங்களின் வருமானம் உயர இக்கோரிக்கை மிக அவசியம் என்பதாகும். நெல்லுக்கும் கோதுமைக்கும் மட்டுமல்ல; அனைத்து முக்கிய பயிர்களுக்கும் இத்தகைய நியாயமான கொள்முதல் விலையும் அறுவடை முடிந்தவுடன் கொள்முதல் என்பதும்  உறுதிப்படுத்தப்படவேண்டும்.

நிறைவாக

ஒன்றிய அரசின் ஊரக வேளாண் குடும்பங்கள் நிலை பற்றிய நாடு தழுவிய ஆய்வு நமக்கு பல செய்திகளை சொல்கிறது. ஆய்விலும் அறிக்கையிலும் சில பல குறைபாடுகள் இருந்தாலும் ஜனநாயக  இயக்கம் அரசு வெளியிட்டுள்ள ஆவணத்தை கவனமாக பரிசீலித்து தக்க கோரிக்கைகளை உருவாக்கிட வேண்டும். கொள்முதல் ஒரு எடுத்துக்காட்டுதான். விவசாய குடும்பங்கள் என்று வரையறுக்கப்பட்ட குடும்பங்களில் கூட கூலி வருமானம் பிரதான பங்கு வகிப்பதை நாம் பார்த்தோம். ஏழை மற்றும் சிறு குறு விவசாயிகளையும் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளையும் ஒன்றிணைத்து நியாயமான கூலிக்கும் கூடுதலான வேலை நாட்களுக்கும் நாம் போராட வேண்டியுள்ளது. ரேகா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் முனைவுகள் தேவை. சிறு நகரப் பகுதிகளுக்கும் அதனை விரிவு செய்ய வேண்டியுள்ளது. இன்னும் பலப்பல பிரச்சினைகள் -வீழ்ந்து கிடக்கும் வேளாண் விரிவாக்க அமைப்பு, நிதி மறுக்கப்பட்டு  பலவீனம் அடைந்துள்ள  வேளாண்  ஆராய்ச்சி அமைப்பு, நிறுவனக்கடன் அளவு விகிதாச்சார அடிப்படையில் குறைந்து விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் தள்ளப்படுவது, பாசன வசதிகளின் போதாமை, இது போல் இன்னும் பல பிரச்சனைகளை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. முழுமையான ஜனநாயக நிலச்சீர்திருத்தத்தின் இலக்கணமான நிலமறுவிநியோகம் மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது என்பதும் இங்கு நினைவுபடுத்தப்பட வேண்டிய செய்தி. 

ஒன்றிய அரசின் ஆய்வு தமிழக கிராமங்களில் உள்ள வேளாண் குடும்பங்களின் பலவீனமான பொருளாதார நிலையை வெளிப்படுத்துகிறது. சொந்த காட்டிலும் பிற நிலங்களிலும் பாடுபட்ட பிறகும், அனைத்துவகை கூலி வேலைகளுக்கு சென்று பாடுபட்ட பிறகும், கால்நடை வளர்ப்பில் உழைப்பை செலுத்திய பின்பும், ஒரு வேளாண் குடும்பத்தின் மாத வருமானம் ரூ 10,000ஐ ஒட்டியே உள்ளது என்பது தமிழக வளர்ச்சிப் பாதை ஒரு முன்மாதிரி என்ற  பிம்பத்தை ஒட்டி அமையவில்லை. ஐந்து நபர்கள் கொண்ட குடும்பத்தின் சராசரி வருமானம் மாதம் பத்தாயிரம் என்றால் நபருக்கு நாள் ஒன்றுக்கு 70 ரூபாய் கூட இல்லை என்கிறது கணக்கு. இதுவும் சராசரி தான். இதற்கும் கீழ் கணிசமான வேளாண் குடும்பங்கள் உள்ளன. அனைவருக்குமான ஊரக வளர்ச்சியின் அவசியத்தை இவ்விவரங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. விரிவான கிராமப்புற வறுமை நம்மோடு தொடர்ந்து பயணிக்கிறது.

ஒரு முக்கிய அம்சத்தை கவனப்படுத்தி இக்கட்டுரையை நிறைவு செய்யலாம். வேளாண் குடும்பம் என்று வரையறுக்கப்பட்டுள்ள குடும்பங்களிலும் குடும்ப உறுப்பினர்களின் கூலி உழைப்புதான் அதிகமாகப் பங்களிக்கிறது என்பதை பார்த்தோம். இதன் பொருள் உற்பத்திக்கருவி உடைமைகள் மூலம் அல்லாது மிகக்கடுமையான உழைப்பின் மூலம் தான் இக்குடும்பங்களின் பெரும் பகுதி வருமானம் பெறப்படுகிறது என்பதாகும். வேறு வகையில் சொல்வதானால், கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகியே தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் கிராமப்புற குடும்பங்களின் மொத்த வருமானத்தில்  வேளாண்சாரா மூலங்களின் பங்கு கடந்த பல பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது என்ற உண்மையை சிலாகித்து மட்டுமே பார்ப்பது முழுமையான பார்வை அல்ல என்பதை நாம் அடிக்கோடிட்டுக் கூற வேண்டியுள்ளது.  உற்பத்தி உறவுகளில், நில உடமை உறவுகளில் மாற்றம் காணாமல் கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்வில் நிலைத்தகு முன்னேற்றம் காண இயலாது என்பதை இவ்விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.  பொது விநியோக அமைப்பும் சேமநல திட்டங்களும் தமிழகத்தின் சிறப்பு அம்சங்கள் என்றாலும் இவை மட்டுமே நீண்ட கால வாழ்வாதார உத்தரவாதமாக இருக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.  நடப்பில் உள்ள இந்த அம்சங்களும் யாருடைய கொடையும் அல்ல; வர்க்கப்பார்வையுடன் நடத்தப்பட்ட வர்க்க  வெகுஜன அமைப்புகளின் தொடர்ந்த போராட்டங்கள் இத்தகைய ஏற்பாடுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தன என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். கிராமப்புற பொருளாதாரமும் ஒட்டுமொத்த தமிழக பொருளாதாரமும் மக்கள் நலன் சார்ந்து மேம்பட விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்வது அவசியம் என்பதையும், அதன் பயன் அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டுமென்றால் உற்பத்தி உறவுகளும் மாற வேண்டும்  என்பதையும் நாம் உணர முடிகிறது. இதோடு, வேளாண் ஆதரவு பொதுகட்டமைப்புகள்–மின்சாரம், பாசனம், விரிவாக்கப்பணி அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, விளைபொருள் சேமிப்பு கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் – போன்றவை வலுப்படுத்தப்பட்டு சிறுகுறு விவசாயிகளை எளிதில் சென்றடைவதும் அவசியம். ஒன்றிய அரசின் வேளாண் கொள்கைகளை எதிர்த்த தொடர்ந்த போராட்டமும் மாநில அரசின் முனைவுகளும் முக்கியம்.

நமது விவசாய அமைப்புகள்  ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையை ஆழமாக பரிசீலித்து பொருத்தமான கோரிக்கைகளை உருவாக்கி  தீவிரமாக களம் புக வேண்டும்.One response to “தமிழ்நாட்டு ஊரக வேளாண் குடும்பங்களின் நிலை என்ன?”

 1. மிகவும் பயனுள்ள ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் வழங்கியுள்ள கட்டுரை எம் போன்ற ஊழியர்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது வரவேற்கிறோம். நன்றி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: