மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


COP26 மாநாட்டின் உண்மைப் பின்னணி !


வெப்பமாகும் புவி: நவ-காலனிய ஆதிக்கத்திற்கான புதிய திட்டம்

ஜெ.ராஜன்

தமிழில்: சிந்தன்

குரல்: தோழர் பீமன்

பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசாங்க குழு (IPCC) முன்வைத்த அறிக்கையின் படி, தொழில்மயத்திற்கு முன்பு இருந்ததை விடவும், புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.07 டிகிரி செல்சியஸ் சராசரி உயர்வை கண்டுள்ளது. முன்னர் பாரீசில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில், அனைத்து நாடுகளும் முயற்சிப்பதாக ஒப்புக்கொண்ட வெப்பநிலை இலக்குகளை 15 ஆண்டுகளிலோ அல்லது அதற்குள்ளோ எட்டிவிடுவோம் என்பதையும், இப்போது அனைத்து நாடுகளும் பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த எடுத்துவரும் முயற்சிகளின் அடிப்படையில், சராசரி வெப்பநிலை இலக்கு 1.5 டிகிரியாக அதிகரித்துள்ளது என்பதையும் விஞ்ஞானிகள் அதே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கார்பன் பட்ஜெட்:

முற்போக்காளர்களும், ஜனநாயகவாதிகளும் பூமியின் சூழல் வளங்கள் (வளிமண்டலம், கடல்கள் மற்றும் நிலம்) அனைத்தும் உலகிற்கு பொதுவானவை என்ற பார்வையை முன்வைக்கிறார்கள். அந்த பார்வைக்கான அறிவியல் ஆதாரத்தை பருவநிலை விஞ்ஞானம் தெளிவாக முன்வைக்கிறது. உலக ‘கார்பன் பட்ஜெட்’ என்ற கருத்தில் இந்த பார்வை வெளிப்படுகிறது. புவி வெப்பநிலை உயர்வினை குறிப்பிட்ட வரம்பிற்குள் கட்டுப்படுத்த வேண்டுமானால், மொத்த உலகமும் சேர்ந்து பசுங்கூட வாயுக்களின் வெளியீட்டு அளவினை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிகபட்ச எல்லையே ‘கார்பன் பட்ஜெட்’ ஆகும்.

வளர்ந்த நாடுகளால், உலகப் பொது வளங்கள், பெருமளவில் அபகரிக்கப்பட்டு வந்துள்ளன. உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் மட்டுமே வாழக்கூடிய அந்த நாடுகளில் இருந்துதான், தொழில்மய காலத்திற்கு முன்பில் இருந்து தற்சமயம் வரை வெளியான மொத்த பசுங்கூட வாயுக்களில் 60 சதவீதம் அளவு வரையிலும் வெளியாகியுள்ளன. சீனாவின் வெளியேற்றம் சுமார் 13 சதவீதம் ஆகும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 1.5 டிகிரி என்ற வெப்பநிலை இலக்கின்படி, 17 சதவீத ‘கார்பன் பட்ஜெட்’ மட்டுமே மீதமுள்ளது. இந்தியாவின் வெளியேற்றம் 4.37 சதவீதம் மட்டுமே ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் தலா கணக்கீடு மிகவும் குறைவு ஆகும்.

நிலக்கரி அவசியம்:

வளரும் நாடுகளின் ஆற்றல் உருவாக்கத்திற்கு, புதைபடிவ எரிபொருட்கள் (fossil fuels) இப்போதும் அவசியமாக உள்ளன. அந்த வகையில் இந்தியாவை பொருத்தமட்டில், நிலக்கரி தொடர்ந்து தேவைப்படுகிறது. சூரியன் இரவில் ஒளிர்வதில்லை, காற்று எல்லா நேரத்திலும் வீசுவதில்லை என்பதால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும் கூட, புதைபடிவ எரிபொருட்களில் இருந்து ஆற்றலை பெறுவது அவசியம். வளரும் நாடுகளில் வசிக்கும் பெரும்பகுதி மக்கள் தொகையினரிடையே நிலவும் ஆற்றல் வள வறுமையை தீர்ப்பதற்கு, விலை குறைந்த பேட்டரிகளோ, இதர மின் ஆற்றல் சேமிப்பு முறைகளோ கண்டுபிடிக்கும் காலம் வரைக்கும் காத்திருக்க முடியாது. உரம் உற்பத்தி செய்வதற்கு புதைபடிவ எரிபொருட்கள் அத்தியாவசியமாக உள்ளன, மேலும் வேளாண் உற்பத்தியால் வெளியிடப்படும் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ‘அத்தியாவசிய வெளியேற்றமும்’ ஆகும். முக்கியமான தொழில் உற்பத்தி துறைகளும் ஆற்றல் தேவைகளுக்காக புதைபடிவ எரிபொருட்களையே சார்ந்துள்ளன. இத்துறைகளும் இவற்றில் செயல்படும் சிறு குறுந்தொழில்களும், இந்தியா உள்ளிட்ட (புவியின்) தெற்கு நாடுகளில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அவசியமானவை ஆகும்.

வளர்ந்த நாடுகளின் நோக்கம்:

வளர்ந்த நாடுகள், தாங்கள் வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவை குறைப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க மறுக்கிறார்கள். அவர்கள் 1990 ஆம் ஆண்டில் வெளியிட்டதை விடவும் ஒவ்வொரு ஆண்டும் 0.4 சதவீதம் கூடுதலான பசுங்கூட வாயுக்களை வெளியிடுவார்கள் (2020 ஆம் ஆண்டில்) என்ற மதிப்பீட்டினை ஐக்கிய நாடுகள் சபையின், பருவநிலை தொடர்பான மாநாடு (UNFCCC) முன்வைத்துள்ளது. அதனோடு ஒப்பிட்டு நோக்கினால், அவர்கள் 2050 ஆம் ஆண்டுக்குள், பசுங்கூட வாயு வெளியேற்றத்தை நிகர மதிப்பில் பூஜ்ஜியம் ஆக்கிவிடுவோம் என்று தரும் உறுதி நம்பத்தக்கதல்ல. மேற்சொன்ன இலக்குத் தேதியை அப்படியே நம்பினாலும், வரும் 2030 ஆம் ஆண்டு வரையிலும் கொடுத்திருக்கும் புதிய வாக்குறுதிகளின் கணக்குப்படி பார்த்தாலும் கூட, உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் கூட கொண்டிருக்காத அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், மீதமுள்ள ‘கார்பன் பட்ஜெட்டில்’ 30 சதவீதத்தை விழுங்கிவிடுவார்கள்.

பருவநிலை நெருக்கடிக்கான தீர்வை சந்தையின் மூலமாக கண்டடையலாம் என்று வளர்ந்த நாடுகள் தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். அதாவது, புவி வெப்ப தணிப்பு நடவடிக்கைகளுக்காக தங்கள் பொருளாதாரத்தில் தர வேண்டிய மதிப்பை விடவும் மலிவான விலையில் கார்பன் பட்ஜெட்டை ‘வாங்கிக் கொள்ளலாம்’ என்று எதிர்பார்க்கிறார்கள். பருவநிலை மாற்றத்தால் நமக்கு ஏற்படும் தாக்கத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி இந்தியா பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைப்பது என்ற நடவடிக்கை அல்ல. உலகளவில் எந்த அளவிற்கு பசுங்கூட வாயு வெளியேற்றம் குறைகிறது என்பது தான்.

சமநீதியான தீர்வு:

செவ்வியல் மார்க்சியம் வரையறுத்துள்ள நெருக்கடியாகவே இது உள்ளது. பழைய முறையில் புதைபடிம எரிபொருட்களை சார்ந்த நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தினால் உலகம் தொடர்ந்து வெப்பமடையும். இதனை மாற்றிட) தேவைப்படும் புதிய நுட்பங்களை இன்னும் முறையாக வெளிவரவில்லை.இப்போதைக்கு ஆற்றல் உருவாக்கத்தில் அவற்றின் (மாற்று முறைகளின்) பயன்பாட்டு வரம்பு மிகவும் குறைவு. அதுவும் பெரும்பாலும் ஆற்றல் துறை உற்பத்திக்கு மட்டும் பயன்படும். அவற்றின் செலவும் அதிகம். ஆனால் வளரும் நாடுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு அரசு தர வற்புறுத்தப்படும் ஆதரவினால் அந்தச் செலவுகள் வெளியில் தெரிவதில்லை. எனவே மேலெழுந்தவாரியாக பார்த்தால் மலிவாக தெரிகின்றன.

இந்த நெருக்கடிக்கான தீர்வினை சமநீதியின் அடிப்படையில் தேடிட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாட்டில் (UNFCCC) கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளும், ஒரே பொதுவான இலக்கில், அவரவர் தகுதிக்கு தக்க மாறுபட்ட பொறுப்புகளை ஏற்று இயங்க வேண்டும். இதில் வளர்ந்த நாடுகளே முன்னிலை வகிக்க வேண்டும். ஆனால் வளர்ந்த நாடுகள், உலக பருவநிலை திட்டத்தினை மேற்சொன்ன கொள்கையின் அடிப்படையில் முன்னெடுக்க மறுக்கின்றனர். அதுமட்டுமல்லாது, பிற உலக நாடுகளுக்கு பருவநிலை நிதியும், பருவநிலை தொழில்நுட்ப உதவிகளும் செய்வோம் என்ற முன்பு அளித்திருந்த வாக்குறுதிகளில் இருந்தும் நழுவுகிறார்கள்.

நவ-காலனிய முயற்சிகள்:

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சுமையில் பெரும்பகுதியை வளரும் நாடுகளின் மீது திணிப்பதற்கே வளர்ந்த நாடுகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். பாரிஸ் ஒப்பந்தத்தை அமலாக்க தொடங்கியபோது, சீனாவையும் தங்களோடு ஆட்டத்திற்கு இழுத்தார்கள், அதன் மூலம் தெற்கு நாடுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான தாக்குதலுக்கு முயற்சித்தார்கள். அணு சக்தி விசயத்தில் நடந்ததைப் போலவே இந்த விசயத்திலும் ‘புதைபடிவ எரிபொருள் தடை ஒப்பந்தம்’ ஏற்படுத்துவதற்கான வாதங்கள் தொடங்கின. இந்த ஏற்பாடு, உலகின் பருவநிலை மீது பாரபட்சமான அதிகாரத்தை செலுத்துவதற்கான முயற்சியே ஆகும். மேலும், இது அணு பரவல் தடை ஒப்பந்தத்தினை விடவும் பாதகமானதாக அமைந்துவிடும்.

அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் நவ காலனிய முயற்சியின் திட்டங்கள் பின்வருமாறு அமைகின்றன :

1) புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்தும் வளர்ச்சித்திட்டங்களுக்கு – நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பயன்படுத்தும் திட்டங்களுக்கு – பன்னாட்டு வளர்ச்சி வங்கிகளின் கடன் உதவிகளை தடுப்போம் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதே அமெரிக்காதான், சமீபத்தில் உலகம் கண்ட மிகப்பெரிய எண்ணெய் எரிவாயு ஏலத்தை நடத்தி முடித்துள்ளது, ரஷ்யாவிற்கு செல்லும் எண்ணெய் எரிவாயு குழாயை ஐரோப்பிய ஒன்றியம் இப்போதுதான் கட்டி முடித்துள்ளது என்ற செய்திகளையும் இத்துடன் இணைத்துப் பார்க்கும்போது, அவர்களின் பாகுபாடும் பொய்மையும் தெள்ளத்தெளிவாகிறது.

2) தனியார் துறையின் மூலமான பருவநிலை நிதியை அமெரிக்கா அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் அந்த உதவியைப் பெறுவதன் மூலம் கடுமையான ‘பசுமை’ நிபந்தனைகளும், பெரும் கடன் சுமையும் அவர்கள் மீது சுமத்தப்படும். பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைத்து, புவி வெப்பத்தை தணிப்பதற்காக, வளரும் நாடுகளில் நடக்கும் தொழிற்கூட உற்பத்திகளை பலவீனப்படுத்தும் வகையில் சர்வதேச நிதி மூலதனம் திரட்டப்படுகிறது.

3) பிரேசிலின் காடுகள் அவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று அமெரிக்காவும், பிரான்சும் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். புவியின் தெற்கு நாடுகளில் உள்ள தாவரங்களும் காடுகளும் வளிமண்டலத்தில் பசுங்கூட வாயுக்களை உறிஞ்சிக்கொள்ளுமானால் அது வடக்கே உள்ள நாடுகள் பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைப்பதை தாமதப்படுத்த உதவும் என்ற உத்தியின் வெளிப்பாடே இந்த மிரட்டல் ஆகும். தெற்கு நாடுகளின் வளங்களை கைப்பற்ற வடக்கு நாடுகள் விரும்புகிறார்கள்.

அதே விதத்தில், வேளாண்மையும், வெப்ப தணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இழுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சிறு விவசாய குடும்பங்கள், பருவநிலை நெருக்கடி உருவாகக் காரணமான எதையுமே செய்ததில்லை. ஆனால் பணக்கார நாடுகள் செய்தவைகளுக்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள். “செலவே இல்லாத இயற்கை விவசாயம்” என்பது போன்ற அறிவியலுக்கு புறம்பான முன்மொழிவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற சர்வதேச நிறுவனங்கள் முன்வைக்கின்றன. இந்த விதத்தில் ‘பசுங்கூட வாயுக்களை’ குறைப்பது என்ற பெயரால் விவசாயத்தில் உற்பத்தி திறனை உயர்த்துவதற்கான முக்கியத்துவம் பின் தள்ளப்படுகிறது. இலங்கை இப்போது எதிர்கொண்டுவரும் வேளாண் உற்பத்தி நெருக்கடி, வரும் காலத்தில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியை எடுத்துக்காட்டும் ஒரு உதாரணமாகும். நவ-காலனிய ஆதிக்க பிரச்சாரத்திற்கு அடிபணிந்தோமானால், இதுதான் நடக்கும்.

பொருத்தமற்ற அணிச்சேர்க்கைகள்:

தங்களுக்கு முன்னுள்ள சவால்களை வளரும் நாடுகளால் எதிர்கொள்ள முடியவில்லை. ஒற்றுமையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த வளர்ச்சியுற்ற நாடுகள், சிறு தீவு நாடுகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட நாடுகள் பலவும் வளர்ந்த நாடுகளோடு சேர்ந்து நிற்பதன் மூலம், பெரிய வளரும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, தங்களுடைய பங்கினை பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.

டிரம்ப் அதிபராக இருந்த 4 ஆண்டுகளில் பருவநிலை நெருக்கடியை மறுத்துக் கொண்டு, அதன் வழியாக சிக்கலை தீவிரப்படுத்திய அமெரிக்கா, தற்போது தனது வல்லாதிக்க நடைமுறைகளின் மூலம் மற்றவர்கள் மீது நிர்ப்பந்தம் செலுத்த முயற்சிக்கிறது. அமெரிக்க அதிபரான பைடன் பருவநிலை பிரச்சனையை ஒரு முக்கிய “ பாதுகாப்பு” பிரச்சினையாக அறிவித்துள்ளார். மற்ற வளர்ந்த நாடுகளுடன் இணைந்து அந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார். உலகத்தில் ஏற்கனவே வர்த்தக ஆளுகையிலும், நிதி ஆளுகையிலும் தான் செலுத்திவரும் ஆதிக்கத்தை பருவநிலை பற்றிய ஆளுகையிலும் செலுத்திட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. புவிக்கோளத்தின் தெற்கில் உள்ள நாடுகளை நோக்கி, பைடனின் நிர்வாகம் முன்னெடுக்கும் இந்த நவ காலனீய நடவடிக்கைகளை, வளர்ந்த நாடுகளில் உள்ள சமூக ஜனநாயக ‘இடதுசாரி’ பிரிவினர் சிலர் விமர்சனமற்று ஆதரிப்பது வருத்தமளிப்பதாகும்.

பருவநிலை பிரச்சனையில் இயங்கும் புதிய தலைமுறை இளைஞர் ‘இயக்கங்களும்’ கூட, புவி வெப்பமாதலால், தெற்கு நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய புரிதலும், கவலையும் அற்றவர்களாக உள்ளனர். பருவநிலை நெருக்கடியினால், வடக்கு நாடுகளில் உருவான புதிய ‘இயக்கங்கள்’ முன்னெடுக்கும் ஆபத்தான முழக்கம் ‘வளர்ச்சி மறுப்பு’ ஆகும். தெற்கு நாடுகளில் நிலவும் மிகக் குறைந்த தொழில் உற்பத்தி அல்லது தொழில் உற்பத்தியே இல்லாத நிலைமையை அப்படியே தொடரச் செய்வதுதான் அந்த நாடுகளுக்கு தேவையான ஒன்று என்ற வாதத்தை, இடதுசாரி முகமூடியுடன் அவர்கள் முன்வைக்கிறார்கள். அதுவும், தெற்கு நாடுகளின் ஊரக பகுதிகளில் ஆற்றல் வளங்களே இல்லாத நிலைமையும், ஆற்றல் வளத்தின் குறைந்த பயன்பாடுகளுமே ‘நல்லொழுக்கம்’ என்ற வகையில் அதீதமான புனிதப்படுத்துதல் வேலையும் செய்யப்படுகிறது. இந்த வாதங்கள் வளர்ந்த சமூகங்களை நோக்கியது போல தோன்றினாலும், அவை தெற்கின் மீதுதான் அழுத்துகின்றன.

கார்பன் காலனியம் :

அமெரிக்காவின் தலைமையிலான வளர்ந்த நாடுகளின் இந்த அழுத்தத்தின் பின்னணியில்தான், கிளாஸ்கோவில் COP26 மாநாடு நடந்தது. COP26 மேற்கொண்ட பல முடிவுகளும் வளந்த நாடுகளின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை பிரதிபலிக்கின்றன. வளரும் நாடுகள் மீதான அவர்களுடைய அழுத்தத்தை உயர்த்துகின்றன. வளரும் நாடுகள் இதை எதிர்க்க வேண்டும். பருவநிலை மாற்ற நிதி வழங்குவோம் என்ற வாக்குறுதியளித்த வளர்ந்த நாடுகள், அதிலிருந்து தவறியிருப்பதை சுட்டுவதுடன், வரும் காலத்தில் பருவநிலை மாற்ற நிதியை உருவாக்கி, தொடர்வதையும் ஒவ்வொரு பருவநிலை மாநாட்டிலும் இது பற்றிய விவாதங்கள் தொடர்வதையும் நோக்கி செயல்பட வேண்டும். அப்போதும் முக்கியமான ஒரு பிரச்சனை தொடர்ந்துகொண்டுள்ளது. அமெரிக்காவும் பிற வளந்த நாடுகளும் உலக பருவநிலை ஆளுகையை தங்கள் வசம் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்மூலம், அவர்கள் தங்களுடைய சுமைகளை குறைக்கவே முயற்சிக்கிறார்கள். இப்பிரச்சனையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளும் அதே சமயத்தில், சர்வதேச பொருளாதாரத்தில் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்க முயல்கிறார்கள். COP26 மாநாட்டில் பேசிய பொலிவியா (ஒத்த சிந்தனையுடைய வளரும் நாடுகளின் சார்பில் பேசிய போது) முன்னெப்போதும் இல்லாத வகையில் வடக்கு நாடுகளின் “கார்பன் காலனிய சிந்தனை” என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது. இந்த ஒத்த சிந்தனையுடைய வளரும் நாடுகளின் கூட்டணியில் இந்தியா, சீனா உட்பட 14 நாடுகள் உள்ளன.

உற்பத்தி சக்திகளுக்கு நெருக்கடி:

மற்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை விடவும், இந்தியாவின் பொருளாதாரத்தில், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு, பெரிய நெருக்கடி வந்துள்ளது. இந்தியாவிலிருந்து குறைவாகவே பசுங்கூட வாயுக்கள் வெளியிடப்படுவது, நிலைத்தகு தன்மையின் விளைவாக அல்ல மாறாக இங்கே ஆலை உற்பத்தி வளர்ச்சி குறைவாக உள்ளதன் காரணமாகவே அந்த நிலைமை நிலவுகிறது. நவ-தாராளமய சீர்திருத்த காலத்தில் நடக்கும் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆலை உற்பத்தி வகிக்கும் பங்கினை அதிகரிப்பதாக இல்லை. மனித வள மேம்பாடு குறைவாகவே நடக்கிறது, எனவே பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு நம் மக்கள் தொகையில் பெரும்பகுதியானவர்கள் ஆளாகும் சூழல் உள்ளது.

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் குரலும், ‘நிபுணர்கள்’ என்று அறியப்படுவோரின் குரலும், வளர்ந்த நாடுகளின் ஆதரவு நிறுவனங்களின் ‘பிரச்சாரகர்களும்’ , சர்வதேச என்.ஜி.ஓ நிறுவனங்களும் – புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டினை இந்தியா தடை செய்ய வேண்டும் என்று ஓயாமல் சொல்லி வருகிறார்கள். மன்மோகன் சிங் காலத்திய நவீன தாராளமய சிந்தனையாளர்களும் அதற்கு ஒத்து ஓதுகிறார்கள். பசுமையான மாற்றத்தை முன்னெடுக்கும் ஒரு ‘உலக தலைவனாக’ இந்தியாவை மாற்றியமைக்கும் வாய்ப்பாக, பருவநிலை நெருக்கடியை பார்க்க வேண்டும் என்று அவர்கள் பேசுகிறார்கள். நாட்டின் உற்பத்தி அடித்தளத்தினை தற்சார்புடையதாகவும், விரிவான ஒன்றாகவும் உருவாக்கத் தவறிய அரசாங்கங்களையும், அவர்களுடைய தோல்விகளையும் கவனித்து வரக்கூடிய எவருக்கும், மேற்சொன்ன வாதங்களின் சாத்தியமற்ற தன்மை புலப்படும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பெரிய அளவில் நடக்கிறது, அவ்வாறு இதில் ஒரு சிறு பகுதியே இந்தியாவில் உருவாக்கப்பட்ட திறன் (capacity). இந்தியாவிலேயே நடக்கும் நிலக்கரி உற்பத்தியை குறைப்பதால், பன்னாட்டு எண்ணெய்/எரிவாயு நிறுவனங்களே பலனடைவார்கள். அவர்கள் எரிசக்தி ஆற்றலுக்கான கட்டணத்தை உயர்த்துவார்கள். நிலக்கரி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். இவையெல்லாம் பொருளாதாரத்தில் நேரடியான, மறைமுகமான தாக்கங்களை உருவாக்கும்.

அவசியமற்ற வாக்குறுதிகள்:

இந்திய பிரதமர், கிளாஸ்கோவில் பேசியபோது புதிய வாக்குறுதிகளை அறிவித்தார். பருவநிலை நெருக்கடியின் தொடர் விளைவுகளைக் குறித்து அச்சத்தில் இருக்கும் உலக மக்களுக்கு இத்தகைய அறிவுப்புகள் நம்பிக்கையூட்டும் என்பது உண்மை. அதே சமயத்தில், நியாயமான அளவை விடவும் அதிகமான சுமைகளை நாம் ஏற்பது, நாட்டின் பொருளாதாரத்திற்கு புதிய சிக்கல்களை கொண்டுவரும். இந்த மாற்றங்களுடைய விளைவுகளை யார் சுமப்பது என்பதைப் பற்றிய தீவிரமான விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே நம் நாட்டில் மலிவான நிலக்கரி மின்சார உற்பத்திக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் மின்சாரத்திற்காக, அதிகமான கட்டணத்தை மக்கள் செலுத்திவருகிறார்கள். ஒன்றிய அரசாங்கம், கொரோனா நெருக்கடிக் காலத்திலும் கூட இந்தக் கொள்கையை தயக்கமின்றி முன்னெடுத்தது. அதன் விளைவாக நிலக்கரி மின்சார உற்பத்தி திறனை பயன்படுத்துவது குறைந்தது. இதையே காரணம் காட்டி, நம் நாட்டிற்கு நிலக்கரி மின்சாரம் அவசியப்படவில்லை என்ற வக்கிரமான வாதம் முன்னெடுக்கப்பட்டது. அதன் பிறகு, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கும், நிலக்கரி மின் உற்பத்திக்குமான செலவுகளை ஒப்பிட்டு வாதங்கள் வைக்கப்பட்டன. அவ்வாறு செலவுகளை ஒப்பிடும்போது புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் உள்கட்டமைப்புக்கு ஆகும் செலவு சேர்க்கப்படவில்லை, ஆனால் நிலக்கரி மின் உற்பத்திச் செலவுகளில் உள்கட்டமைப்புச் செலவும் சேர்த்து காட்டி இரண்டும் ஒப்பிடப்பட்டது.

அதே போல வாகன உற்பத்தி துறையிலும், ஒன்றிய அரசாங்கத்தினால் பி.எஸ்., 4 விதிகளில் இருந்து நேரடியாக பி.எஸ்.6 விதிகள் திணிக்கப்பட்டன. அதற்கான செலவினம் ரூ. 50 ஆயிரம் கோடி முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை ஏற்பட்டது. மேலும் இது அந்தத் துறையில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. ஒருபக்கம் இந்த மாற்றம் அமலாகத்தொடங்கியிருந்த நிலையில், இன்னொரு பக்கம் மின்சார வாகன பயன்பாட்டை பெரிய அளவில் முன்னெடுக்கத் தொடங்கினார்கள். 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வாகனங்களில் 80-90 சதவீதம் மின்சாரத்தில் ஓடச் செய்வோம் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. மன்மோகன் சிங் அரசாங்கம் முதலே இந்த வாக்குறுதிகள் தரப்பட்டன. பின் 5 ஆண்டுகளில் அந்த இலக்கு 90 சதவீதம் என்பதில் இருந்து 30 சதவீதமாக ஆக்கப்பட்டது. இதற்காகவும் கூட நாம் இறக்குமதியைத்தான் பெருமளவில் சார்ந்திருக்க வேண்டி வரும். அதே போல, 2030 ஆம் ஆண்டுக்குள், இந்திய ரயில்வே வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவு நிகர பூஜ்ஜியமாக்கும் என்ற உத்தரவாதம் தரப்பட்டது. இது எப்படி சாத்தியம் என்பது வெளிப்படையாக விளக்கப்படவில்லை. அதுவும் கூட ஒரு விளம்பர அறிவிப்பாகவே இருக்கக் கூடும். தற்சார்பு பொருளாதாரம் என்ற பகட்டான அறிவிப்பு வெளியாகி, அது பற்றிய அரசு அமைச்சகங்களும், மாநில அரசுகளும் பேசிக்கொண்டிருக்கும்போதே, நமது போதாமை அப்பட்டமாக வெளிப்பட்டது. மேலே குறிப்பிட்ட இந்த எல்லாக் கருத்துக்களும் அன்னிய நிதி உதவிபெற்ற நிறுவனங்களினாலும், சர்வதேச என்.ஜி.ஓக்களாலும் முன்னெடுக்கப்பட்டவையே.

தொடரும் கபடத்தனம் :

கிளாஸ்கோவில் நடந்த COP26 மாநாடு முடிவுக்கு வந்தபோது, அங்கே தரப்பட்ட உறுதிமொழிகள் பலவும், வளர்ந்த நாடுகளின் விருப்பங்களை முன்னெடுப்பதாகவே அமைந்தன. நிலக்கரி மட்டும்தான் புதைபடிம எரிபொருள் என்றும் அதனை பயன்படுத்துவதில் இருந்து இந்தியா வெளியேறுவது அவசியம் என்றும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா ஏற்க இயலாது என்பதில் இருகருத்துக்கு இடம் இல்லை. எரிவாயு மற்றும் எண்ணெய் பயன்பாட்டின் காரணமாக அமெரிக்கா வெளியேற்றும் பசுங்கூட வாயுக்களைப் பற்றி எவருமே சுட்டிக்காட்டிப் பேசவில்லை. அந்த அளவு, இந்திய நிலக்கரி பயன்பாட்டினால் வெளியேறும் பசுங்கூட வாயுக்களை விடவும் அதிகம். ஐரோப்பிய நிலைமையோடும் எந்த ஒப்பீடும் செய்யப்படவில்லை. ஆக, இதிலும் கூட பொய்மை தன்மையே அம்பலப்பட்டது. இந்தியாவின் வாக்குறுதிகளும், அறிவிக்கப்பட்ட அவற்றின் அளவும் உண்மையிலேயே தேவையற்றவை. பாரிசில் நடந்த மாநாட்டில், வாக்குறுதி கொடுத்த பல முக்கிய பொருளாதாரங்களைப் போல இந்தியாவும் வாக்குறுதிகள் கொடுத்தது. அவை அப்படியே இருக்கும்போது இந்த வாக்குறுதிகள் அவசமியமற்றவை என்றே சுயேட்சையான நிபுணர்கள் பலரும் கருதுகிறார்கள்.

இந்தியா வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவை 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியமாக குறைப்போம் என முன்வைக்கப்பட்டுள்ள இலக்கு இந்திய மக்களை குழப்பியுள்ளது. முக்கியமான சில துறைகளில் அல்லது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பசுங்கூட வாயு வெளியேற்றத்திற்கு முற்றாக முடிவுகட்டுவதுதான் அந்த அறிவிப்பின் பொருள் என பலரும் தவறாக அனுமானிக்கிறார்கள். இந்த குழப்பத்தினை பயன்படுத்திக்கொண்டு, வளர்ந்த நாடுகள் நமது அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை செலுத்துவார்கள். மேலும், மாநில அரசாங்கங்கள், மாநில அளவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களின் மூலம், வளர்ச்சித் தேவைகளை விடவும் பருவநிலை மாற்ற பிரச்சினையே முதன்மையானது என்ற அழுத்தத்தை தருவதாக அவர்களின் வாதம் அமையக்கூடும். மாநில அரசாங்கங்கள் அந்த அழுத்தத்திற்கு பலியாகக் கூடாது. ஒன்றிய அரசு முன்வைத்துள்ள தணிப்பு நடவடிக்கைகளுக்கும் தாண்டி அரசியல் போட்டியால் உந்தப்பட்டு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதில்லை.

வேளாண்மைக்கும் பாதிப்பு:

ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் வெட்டவெளிச்சமான பாரபட்ச அணுகுமுறை இந்திய அரசை வளர்ந்த நாடுகள் ஏற்படுத்திய நிர்ப்பந்தங்களுக்கு எதிராக ஓரளவிற்கு நிலை எடுக்க வைத்துள்ளது. மற்ற பல துறைகளில் அமெரிக்காவுடன் தமது உறவை வலுப்படுத்துவதில் இந்திய அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால், பருவநிலை பிரச்சனையில் இது இந்தியாவிற்கு மிகவும் கடினமானது. மீத்தேன் மற்றும் காடுகளைக் குறித்தான கிளாஸ்கோ உடன்படிக்கைகளின் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்துள்ளது. காடுகளைப் பற்றிய உடன்படிக்கை அதைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதில் வேளாண்மையைக் குறித்த பகுதிகளும் உள்ளன. அதன் காரணமாக, கார்பன் வரி, உற்பத்தி திறன் வளர்ச்சி மீதான கட்டுப்பாடுகள் என்று பல்வேறு புதிய சுமைகள் வேளாண்மையின் மீது சுமத்தப்படும். மேற்சொன்ன இரண்டு உடன்படிக்கைகளும் இந்திய சிறு குறு விவசாயத்தை கடுமையாக பாதிப்பதுடன், அனைத்து துறைகளின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியாவின் வேளாண்மைத் துறையும் பருவநிலை தணிப்பு நடவடிக்கைகளுக்கு உடன்பட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை சார்ந்துள்ளனர். அதன் மூலம் வெளியாகும் பசுங்கூட வாயுக்கள், உலக நாடுகளோடு ஒப்பிட்டால் மிக மிகக் குறைவாகும்.

இந்தியா அடிபணிவதா?

குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய வளர்ச்சி என்ற திட்டத்தை முன்னெடுத்து, புவி வெப்பமாதலின் அச்சுறுத்தலுக்கு எதிராக தனது உரிய பங்கை ஆற்றிக்கொண்டே இந்தியா, உலக கார்பன் பட்ஜெட்டில் தனது நியாயமான பங்கினை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான உத்திகளை வகுக்க வேண்டும். சுய சார்பான உற்பத்தி துறை வளர்ச்சி என்ற இலக்கில் சமரசத்திற்கு இடம் இல்லை. அதே போல, வறுமை ஒழிப்பும் இந்திய மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதும் அவசர கடமைகள். குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட வளர்ச்சியை முன்னெடுத்துக்கொண்டே, அதன் சுமைகள் எவ்வாறு பகிரப்பட வேண்டும், குறுகிய எதிர்காலத்தில் இதற்கான பாதையும் வழித்தடங்களும் எவை என்பன குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளையும் மேற்கொள்ளவேண்டும்.

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக நடந்துவரும் முதலாளித்துவ-நிலவுடைமை வர்க்கங்களின் ஆட்சியின் விளைவாக உலக பருவநிலை ஆளுகை என்ற பெயரில், ஏகாதிபத்திய நாடுகள் முன்னெடுக்கும் நவ-காலனிய ஆதிக்க விதிகளுக்கு அடிபணியக்கூடிய பலவீன நிலையில் இந்தியா உள்ளது இந்தியாவில் உற்பத்தி சக்திகளுடைய வளர்ச்சியினை வெட்டிச் சுறுக்குவதனால், புவி வெப்பமாதலால் எழும் சவால்களை எதிர்கொள்வதும், மக்கள் நல்வாழ்விற்கு அவசியமான அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் என இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும். இந்த பாதிப்பு உடனடியாகவும், எதிர்காலத்திலும் வெளிப்படும். எனவே இந்தியாவின் உற்பத்தி திறன் வளர்ச்சிக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுருத்தலை சரியாக புரிந்து எதிர்க்க வேண்டும். இந்தியாவிற்கு மட்டுமல்ல பெரும்பகுதி வளரும் நாடுகளுக்கும் இது பொருந்தும்.



Leave a comment