மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஆணும், பெண்ணும்!


பினராயி விஜயன்

தமிழில்: இரா.பிரவீணா

குரல்: பூங்கொடி மதி அரசு

(கேரள மாநிலத்தில் வரதட்சணை, குடும்ப வன்முறைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பெண்ணிய நவ கேரளம் இயக்கத்தை ஒட்டி, மார்க்சிய வார இதழான ‘சிந்தா’வில் கேரள மாநில முதல்வரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் எழுதிய கட்டுரை) 

முதல் தலைமுறை பட்டதாரிகள் மிக அதிகமாக உள்ள நம் மாநிலத்தில் முற்போக்கான மாற்றங்கள் பலவற்றையும், அவற்றிற்கு காரணமான போராட்டங்களையும் கண்டிருக்கிறோம். அதே சமயம், முன்னேறிய சமூகத்திற்கு பொருந்தாத பல செயல்களும் இன்னும் நிலைத்திருக்கின்றன. அவற்றிற்கு எதிராக போராடவில்லையென்றால், கேரளத்தின் முன்னேறிய சூழலை நிலைநிறுத்திட முடியாது.

நாம் அடியோடு களைந்திட வேண்டிய தீய வழக்கங்களில் ஒன்று வரதட்சணை ஆகும். பெண்களை அடிமைகளாகவும், குழந்தை பெற்றுக்கொடுக்கும் இயந்திரங்களாகவும் பார்க்கின்ற பிற்போக்கான பார்வையில் இருந்தே இந்த வழக்கங்கள் உருவாகின்றன. அதனைக் களைந்து, பெண் சமத்துவத்தை உறுதி செய்யும் சமூகத்தை உருவாக்க வேண்டியுள்ளது. அதனை சாத்தியமாக்குவது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

உலக வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான உரிமைப் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்துள்ளது. பாரிஸ் கம்யூன் தோல்வியுற்றபோது, யுத்த கமிசனுக்கு முன் நிறுத்தப்பட்ட போராளிகளில் 1,051 பேர் பெண்கள் ஆவர்.

போராட்ட வரலாறு:

நம் நாட்டில் நிலவும் பாலின வேறுபாட்டையும், சமத்துவமற்ற நிலைமையும் முடிவுக்கு கொண்டுவர முன்னெடுக்க வேண்டிய செயல்கள் மறுமலர்ச்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டன.

குழந்தை மணம், கைம்பெண் மறுமணத்திற்கு மறுப்பு, உடன்கட்டை ஏற்றல், பரம்பரச் சொத்துக்களில் உரிமை மறுப்பு, பெண் கல்வி மறுப்பு, பலதார மணம் முதலிய செயல்களுக்கு எதிராக அந்தக் காலத்தில் கிளர்ச்சிகள் எழுந்தன. பஞ்சமி என்ற பிற்படுத்தப்பட்ட சமூக பெண் குழந்தையையும் கூட்டிக் கொண்டுதான் இருட்டம்பலம் கோயிலுக்கு அய்யங்காளி நடைபயணமாக சென்றார். அதனைத் தொடர்ந்துதான் “படிக்க விடாவிட்டால் அறுவடைக்கு செல்ல மாட்டோம்” என்ற முழக்கத்துடன் போராட்டங்கள் கேரளத்தில் நடந்தன. கல் மாலை போராட்டம், தோள் சீலைப் போராட்டம் (மார்பை மறைத்து உடை உடுத்துவோம் என்ற போராட்டம்) முதலிய ஏராளமான போராட்டங்களும் அந்த வரலாற்றின் பகுதிகளே.

லக்கிடியிலே தொழில் மையம் பெண்களுடைய கம்யூனாக இருந்தது. நூல் நூற்றல், நெய்தல், தையல் போன்ற பணிகளை மேற்கொண்டு பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்தார்கள். மலையாள பெண்ணிய நாடகமான ‘தொழில் கேந்திரம்’ உருவானது இதன் பின்னணியில்தான். “அடுப்படியில் இருந்து அரங்கத்திலேற்று”, “மாய்க்குடக்குள்ளிலே மகாநகரம்”, “ருதுமதி” ஆகிய நாடகங்கள் பெண்ணிய எதிர்ப்பும், தெளிவின்மையும் கொண்டிருந்த பொதுப்புத்திக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க பயன்பட்டன.

1800களுக்கு முன் தொடங்கிய ‘தோள் சீலைப் போராட்டம்’ போராட்டம் இந்திய வரலாற்றின் அறிவார்ந்த முதல் பெண் முன்னேற்றமாகும். கேரளம் கண்ட முதல் சமூக உரிமைப் போராட்டமும் இதுவாகவே இருந்தது. சாணார் பெண்கள் தோள் சீலை உடுத்துவதன் மூலமாக தங்களின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டினார்கள் என்றால், கூச்சல்களை புறக்கணிப்பதன் மூலமாக நம்பூதிரிப் பெண்கள் முன்னேற்றத்தை சாதித்தார்கள்.

சீமேனியில் தேனும், சுள்ளியும் சேகரிக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்றது குஞ்ஞி மாதவியையும், கார்த்தியாயனி குட்டியம்மாவையும் போன்ற வீரப் பெண்களே. எட்டு மாதங்கள் நீடித்த இந்தப் போராட்டம் தேனும் விறகும் சேகரிக்கும் உரிமையை உறுதிசெய்த பிறகே முடிவிற்கு வந்தது.

விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் கேரளத்தில் அதிகரித்துவந்த விவசாயிகளின் இயக்கங்கள், தொழிலாளி வர்க்க இயக்கங்களின் தலைமையிலான போராட்டங்களில் பெண்களின் தியாகப்பூர்வமான பங்கேற்பைக் கண்டோம். இப்படியான முன்மாதிரியான முன்னேற்றங்களைச் சாதித்த நமது மாநிலத்தில், வரதட்சணையின் பேரில் பெண்கள் மீது தாக்குதல் நடப்பதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்.

மறுமலர்ச்சி இயக்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தலைமையேற்ற போராட்டங்களினாலும், தலையீடுகளாலும் முன்னேற்றமடைந்த நம்முடைய பெண்களையும், பொதுச் சமூகத்தையும் பின் நோக்கி இழுக்கக்கூடிய விதத்திலான வரதட்சணை வன்கொடுமைகளும், உயிரிழப்புகளும் நடக்கக்கூடிய மாநிலமாக கேரளம் மாறக்கூடாது.

மணவாழ்வின் அடிப்படை:

சட்டப்படியாக வரதட்சணை தடை செய்யப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், பல வடிவங்களிலும், பல்வேறு அளவுகளிலும் வரதட்சணை கொடுக்கவும், பெற்றுக்கொள்ளவும் படுகிறது. இதனை அதிக ஆபத்தான சமூக போக்காகவே காண வேண்டும். ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல், கணவனின் குடும்பம், மனைவியின் குடும்பம் என்று வேறுபடுத்தி காணாத, பாலின சமத்துவத்திற்கான நிலைப்பாட்டினை நாம் சமரசமில்லாமல் முன்னெடுக்க வேண்டும்.

திருமணமும், அதனை ஒட்டிய நிகழ்வுகளும், ஒரு குடும்பத்தின் அந்தஸ்தையும், செல்வாக்கையும் வெளிக்காட்டுவதற்கானவை அல்ல. பெண்களுக்கு எவ்வளவு கொடுத்தார்கள்; எத்தனை கொடுத்தார்கள் என்பது குடும்ப பெருமைக்கான அளவுகோல் அல்ல. அவ்வாறாக சிந்திக்கின்றவர் தனது சொந்த மகளை விற்பனைப் பண்டமாக மாற்றுகின்றீர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வரதட்சணை கேட்கிற ஒருவர் பெண்களை விடவும் பணத்திற்குத்தான் முக்கிய இடம் தருகின்றனர். இவைகளை மனதில் நிறுத்துவதும், இந்த அடிப்படையில் உறவுகளை தீர்மானிக்காமல் இருப்பதும் அவசியம்.

வரதட்சணை கேட்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கேட்போர் மீது வழக்கு பதிவு செய்யவும் தயாராக வேண்டும். கையூட்டுப் பெறுவதை எப்படி பார்க்கிறோமோ, அதே புரிதலுடன் வரதட்சணையும் பார்க்க வேண்டும். பெண்களைப் பெற்றோரும் கவனமாக இருக்கவேண்டிய விசயம் இது.

ஆண்களும் அவர்களுடைய பெற்றோரும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டிய ஒரு விசயம் உண்டு. திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் ஒரு வணிக ஒப்பந்தமாக தரம் தாழ்த்தும் வரதட்சணைக்கு மதிப்புக் கொடுக்கும் வாதங்களை எதிர்த்த வாதங்களை வீட்டிற்குள் நிகழ்த்த வேண்டும். அப்படியான வாதங்கள், வளரும் தலைமுறையின் மனங்களில் பதிந்துவிடும். பெண்களுடைய வீட்டில் இருந்து ஏதாவது வெகுமதியைப் பெற்றுக்கொள்வது நம் உரிமை என்ற எண்ணத்தை ஆண் பிள்ளைகளிடக்ம் உண்டாக்கிட வேண்டாம்.

கணவரின் வீட்டில் உடல் ரீதியிலும், மன ரீதியிலுமான வன்முறைகளையெல்லாம் சகித்து வாழ வேண்டியவள் மனைவி என்ற எண்ணத்தை பெண் பிள்ளைகளின் மனத்தில் விதைத்திட வேண்டாம். இவை இரண்டும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுகள் ஆகும்.

குடும்பங்களில் கற்பிப்போம்:

ஆதிக்கம் செலுத்துவதல்ல; ஒத்துழைப்பு நல்குவதே அவசியம்.  பெண்களை அடிப்பது ஆண்மை என்றும், மன்னிப்பதும் சகிப்பதும் பெண்மைக்கான தன்மைகள் என்றுமாக நமது புரிதல் இருக்கக் கூடாது. இம்மாதிரியான தவறான பார்வைகளை குழந்தைகளுக்கு ஊட்டவும் கூடாது.

ஆண், பெண் சமத்துவத்திற்கான புதிய சிந்தனைகள் சமூகத்திற்கு தேவைப்படும் காலம் இது. அதற்கு உதவி செய்யக்கூடிய பாடங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

முதன்மையான சமூகம் என்ற நிலைக்கு, விஞ்ஞான பொருளாதாரத்திற்கு நம் மாநிலத்தை உயர்த்திடத்தான் நாம் முயற்சிக்கிறோம். அதற்கு உயர்ந்த அறிவும், திறனும் உள்ள தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. பாலின வேறுபாடுகளுக்கு அங்கே இடமில்லை. அதற்கு உதவுகின்ற பாலபாடங்களை குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். அந்த எண்ணத்தை வளர்ப்பதற்கு பொது இடங்களிலும், தொழில் இடங்களிலும் அரசு முயற்சியினை மேற்கொள்ளும். வரதட்சணை தொடர்பான கொலைகள் மட்டுமல்லாது, ஆணவக் கொலைகளும் கூட அரிதாகவே கேரளத்தில் நடந்துள்ளன.

காதலில் ஜனநாயகம்:

காதலினை நிராகரிப்பதன் பேரிலும், காதல் உறவுகளில் உண்டாகிற பிரச்சனைகளின் காரணத்தால் பெண்கள் கொலை செய்யப்படும் நிகழ்வுகள் சில காலமாக நடந்து வருகின்றன. குடும்ப வன்முறையைத் தொடர்ந்து நடக்கின்ற மரணங்களையும் கொலைகளையும் போலவேதான், இந்த இரண்டு போக்குகளும் வலுவாக எதிர்க்கப்படவேண்டிய சமூக பிரச்சனைகளாகும். இதனைப் போன்ற போக்குகளுக்கு தீர்வு காணும் வகையிலான கூட்டு முயற்சிகள் சமூகத்தில் இருந்தே மேலெழுந்து வரவேண்டும்.

காதலினைப் பற்றியும், ஆண் – பெண் இடையிலான உறவினைப் பற்றியுமான ஜனநாயக பார்வையை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய விருப்பத்தை மற்றவரின் மேல் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. தனது விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்யவில்லை என்றால், தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப காதலிக்கவில்லை என்றால், ஒருவர் இன்னொருவரைத் தாக்கலாம் என்றோ, மற்றவரின் உயிரை எடுக்கலாம் என்றோ கருதுவது மனித உறவுகளை அதிகார வடிவங்களாகக் காண்பதனால்தான். அவை உறவுகளே அன்றி அதிகார வடிவங்கள் அல்ல என்ற புரிதலும், ஜனநாயக சமத்துவத்தை பற்றிய புரிதலும் உண்டாகும்போதுதான் அவை பொருளுள்ளவை ஆகின்றன. இதில் நமக்கு உறுதிப்பாடு தேவை. உறவுகள் ஜனநாயகபூர்வமாக உள்ள சமூகங்களில்தான் வேற்றுமையற்ற சமத்துவத்தினை உறுதி செய்திட முடியும்.

அரசாங்க தலையீடுகள்:

சமூக அநீதிகளில் இருந்து பெண்களுக்கு விடுதலையை அளிக்க வேண்டுமென்றால் பல்வேறு நிலைகளிலும் செயல்பாடுகளை ஏற்க வேண்டியுள்ளது. அதில் ஒன்று சமையலறை வேலைகள் உள்ளிட்ட செயல்கள் பெண்களின் தலையில் மட்டும் சுமத்த வேண்டிய சுமையாக காண்கிற பார்வையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் ஆகும். சமையல் வேலைகள் மட்டுமல்லாமல், குழந்தைகளையும், வயதான பெரியவர்களையும் பார்த்துக்கொள்கிற சுமைகளையும் பெண்கள் மட்டுமே ஏற்க வேண்டியதாகின்றன. இந்தப் போக்குகளிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதால்தான், வீட்டு வேலைகளைச் செய்யும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், வீட்டிற்குள் வேலைச் சுமைகளை குறைக்கின்ற ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தை செயல்படுத்தவும், அரசாங்கம் ஆலோசித்தது.

இதுபோன்ற முன்னெடுப்புகளை அரசாங்கம் எடுக்கும்போதுதான் வீட்டு வேலைகள் குடும்பத்தில் உள்ள எல்லோருமே சேர்ந்து செய்ய வேண்டியதே என்ற உணர்வை சமூகத்தில் வளர்த்தெடுக்க முடியும்.

பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான தவிர்க்க முடியாத காரணி, பெண்களின் பொருளாதார தன்னிறைவு ஆகும். குடும்ப வன்முறைக்கு இரையாகின்ற பெண்களில் பலரும் பொருளாதார தன்னிறைவு இல்லாதவர்களாகவே உள்ளார்கள். பொருளாதார தன்னிறைவு பெறும்போது அவர்களால் கூடுதல் சுதந்திரத்தோடு சிந்திக்கவும் செயல்படவும் முடியும். அது போலவே கூடுதல் சுதந்திரமான பெண் சமூகம் உருவாகும். அதற்கு நாம் வேலைவாய்ப்புத் துறையில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.

மாநில மக்கள் தொகையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பினும் வேலைவாய்ப்புகளில் அவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. பெண்கள் உயர்கல்வி பெற்றபோதிலும் பணிக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியிருப்பது, முற்போக்குச் சமூகத்திற்கு பொருத்தமான நிலைமை அல்ல.

பெண்களுக்கு வேலை வாய்ப்பு:

பெண்களையும் தொழிலாளர் படையில் இணைப்பது, வளர்ச்சி நடவடிக்கைகளில் பங்காற்ற வைப்பதுமான கடமைகளை அரசாங்கம்  ஏற்றுள்ளது. இந்த நடவடிக்கையில் 45 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள குடும்பஸ்ரீ குழுக்கள் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்த முடியும்.

2016 ஆம் ஆண்டில் இடது ஜனநாயக முன்னணி கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் 18 சதவீதமாக உயர்த்தப்படும் என்றது. இன்று, வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு 24 சதவீதமாக உள்ளது. அதனை 50 சதவீதமாக உயர்த்திடுவோம். 5 வருடங்களில் 40 லட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்க முயற்சியெடுக்கிறோம். அதில் பெண்களே அதிக அளவில் பயன்பெறுவார்கள். பெண்களுக்காக வேலை வாய்ப்புகளில் நான்கில் ஒரு பங்காவது உயர்த்துவதே இலக்காகும்.

பெண்ணின் தன்னிறைவினை இலக்காகக் கொண்டு 1998 ஆம் ஆண்டில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம் தொடங்கிய குடும்பஸ்ரீ இயக்கம் இப்போது உலகத்திற்கே முன்னுதாரணமாக விளங்குகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்கத்தின் மூலமாக பெண்களை உயர்ந்த பதவிகளில் நிர்வாகச் செயல்பாடுகளின் பகுதியாக்கிடவும், பெண்மைக்கு புதிய பரிணாமத்தை தருவதும் நமக்கு சாத்தியமாக வேண்டும்.

திட்டங்களை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் பெண்களின் தீவிர பங்கேற்பு சாத்தியமாகியது. அதிகார பரவலாக்கத்தை திறம்பட செயல்படுத்துவதன் வழியாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பதை உறுதி செய்திருக்கிறோம். இதனை விடவும் அதிக செயல் திறன் வாய்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சூழ்நிலைமையும் உருவானது.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களின் மேம்பாட்டை குறிக்கோளாக வைத்து நடைமுறைப்படுத்திய திட்டங்கள் அதிகம் உள்ளன. மகளிர் மேம்பாட்டிற்காக தனியாக துறையும், இயக்ககமும் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான உதவி மையம் செயல்படுத்தினோம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நிதியில் வீட்டில் வேலை செய்யும் பெண்களும் உட்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பெண்களுக்கான கழிப்பிடங்களை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கிறோம். எல்லா துறைகளிலும் அலுவலகங்களிலும் பாலின கணக்காய்வு நடத்தப்பட்டது. ‘சதைரியம் முன்னோட்டு’ ‘பொதுவிடம் என்டேது’, ‘ஸ்த்ரிசெளகிரக கிராமம்’, ‘சகி’, ‘சகாய ஹஸ்தம்’, ‘கைத்தாங்கு’, ‘சினேகித’, ‘ஷ்ரத்த’, ‘ஆஷ்வாச நிதி’, ‘ஒப்பம்’ முதலிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

குடும்பஸ்ரீ திட்டத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தோம். குடும்ப வன்முறைகளை முழுமையாக அழிப்பது, பெண் அதிகாரத்தை உருவாக்குவது, எல்லோருக்கும் விழிப்புணர்வை பரவலாக்குவது ஆகிய குறிக்கோள்களுடன் ‘கனல்’ என்ற செயல்திட்டம் தொடங்கப்பட்டது.

வரதட்சணை ஒழிப்பு சட்டம்:

வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு 2004 கேரள வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும்    பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரிகள் வரதட்சணை ஒழிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள். வரதட்சணை ஒழிப்பு நடவடிக்கைகளை திறன்பட செயல்படுத்த மாவட்ட ஆலோசகர் குழு, நலத்திட்ட அமைப்பு ஆகியவையும் உருவாக்கப்படுகிறது. பெண்கள் தங்குவதற்காக விடுதிகள் இல்லாத எல்லா மாவட்டங்களிலும் அவை தொடங்கப்படும். அரசு ஊழியர்கள் வரதட்சணை கேட்கவோ, வாங்கவோ, கொடுக்கவோ செய்கிறார்களா என்று கண்காணிக்கப்படுகிறார்கள். பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், பாலின வேறுபாடு, வரதட்சணை – குடும்ப வன்முறைகள் ஆகியவைகளுக்கு எதிராகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது தொடர்பான சட்டங்களை மீறினால் தண்டனை உண்டு என்பதை உணர்த்திடவும் பெரிய அளவிலான பிரச்சாரம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

பாலின பார்வையுடன் பட்ஜெட்:

கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் பாலின நிதிநிலை அறிக்கைக்கு தொடக்கப்புள்ளி வைத்தோம். மாநில அரசு தனது செலவினத்தில் 16 சதவீதம் பெண்களுக்கான திட்டங்களுக்காக மாற்றியமைத்தது. பொதுத் திட்டங்களில் பெண்களுக்காக செலவிடப்படும்  நிதியையும் சேர்த்தால் இந்த விகிதம் 19 ஆக உள்ளது. அதனை 25 சதவீதமாக உயர்த்திடுவோம்.

பாலியல் துன்புறுத்தலுக்கான பதிவேடு தொடங்கப்பட்ட முதல் மாநிலம் நம்முடையதுதான். இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைளை குறைப்பதற்கான ‘குற்றப் பதிவு வரைபடம்’ உருவாக்கப்படும். இவையெல்லாம் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பான இடமாக கேரளத்தை மாற்றிடும் என்று நினைக்கிறோம்.

பெண் விடுதலையினைச் சீர்குலைக்கும் பிற்போக்கான கருத்தியல் போக்குகளை மொத்தமாக எதிர்ப்பதுடன், வகுப்புவாத சமரசமில்லாமல், பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற வேறுபாடில்லாமல் எதிர்த்திட வேண்டும். தனது  சிந்தனையை சுதந்திரமாகவும், ஜனநாயக அடிப்படையிலும் மேற்கொள்வதற்கு பெண்களால் முடிய வேண்டும். சாதி மத வர்க்க பேதங்களுக்கு எதிராக பெண்களை ஓரணியில் நிறுத்துவதுதான் முக்கியம். எல்லாவிடங்களிலும் நிலவக்கூடிய பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்திட, முற்போக்கான ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்த பெண்ணிய இயக்கம் எழுப்பப்பட வேண்டும்.

கேரளத்தின் முன்னேற்றத்தில் ‘குடும்பஸ்ரீ’ இயக்கம் வகித்த பங்கு முக்கியமானது. சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் உள்ள பெண்களை முன்நிறுத்தி, உள்ளூர் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும் விதத்தில் ‘குடும்பஸ்ரீ’ தனது பிரச்சார பணியை தொடங்கியுள்ளது.

பெண்களுடைய பிரச்சனைகள் அவர்களுக்கு மட்டுமான பிரச்சனை என்றும், ஆண்களுடைய பிரச்சனை சமூகத்தின் பிரச்சனை என்பதுமான அணுகுமுறை சில பகுதியினரிடம் இருந்து வெளிப்படுவது உண்டு. பெண்கள் சமூகத்தில் ஒரு பகுதி.; அவர்களுக்கு சமூகத்தில் சமத்துவமான பங்களிப்பு உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கு வரதட்சணை – பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆகியவைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ‘பெண்ணிய நவ கேரளம்’ இயக்கத்தின் பிரச்சாரம் வெற்றியடைந்திட சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவினையும், ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும்.



Leave a comment