மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மார்க்சிய நோக்கில்இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும்:ஒரு பொருத்தப்பாடு


ச. லெனின்

இயற்கை மீதான இயற்கையின் ஒரு பகுதியான உயிரினங்களின்  தலையீடு, உயிரினங்கள்  தோன்றிய காலந்தொட்டே உள்ளது. புலிகள் தங்களின் உணவிற்காக மான்களை வேடையாடுகின்றன. பாம்பு தவளையையும் பூனை எலியையும் உண்கின்றன. இதுவே இயற்கையின் விதியாகும். இங்கு விதி என்பது அதனதன் தலைவிதியல்ல. அதுவே உணவுச் சங்கிலியின் விதி (Rule). பலர்  இதை தக்கன பிழைக்கும் (survival of the fittest – தகுதியுடையது பிழைக்கும்) என்ற ஹெர்பெட் ஸ்பென்சரின் வார்த்தைகளோடு  இணைத்துப் பேசுகின்றனர். இதை டார்வினின் தத்துவம் என்றும் வாதிடுகின்றனர். உண்மையில் இதை இயற்கைத் தேர்வு (Natural selection)  என்றே டார்வின் விளக்கினார்.

இயற்கைத் தேர்வு – தக்கன பிழைக்கும்

1859இல் வெளியான டார்வினுடைய சிறந்த படைப்பான ‘உயிரினங்களின் தோற்றம்’ என்கிற  நூலில் டார்வின் ‘இயற்கைத் தேர்வு’ எனும் பதத்தையே பயன்படுத்தியுள்ளார். அதன் எளிமையான மாற்றுப் பதமாகவே ‘தக்கன பிழைக்கும்’ என்கிற பதத்தைத் தனது ‘உயிரியலின் கோட்பாடுகள்’ என்கிற நூலில் (1864இல்) முதன் முதலில்  ஸ்பென்சர் பயன்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார். தனது கருத்துருவுக்கு இப்படியான ஒரு வார்த்தை பிரயோகம் இருப்பதையே ஆல்ஃப்பிரெட் ரசூல் என்கிற தனது  நண்பர் ஒருவர் 1866இல் எழுதிய  கடிதத்தின் மூலம்தான் டார்வினே அறிந்துகொள்கிறார்.

எளிமையாக இது இருப்பதால் இவ்வார்த்தை  பிரயோகத்தை  டார்வின் ஏற்றுக்கொண்டதாகவும் பதிவாகியுள்ளது. ஆனபோதும்  fit –  தக்கன என்கிற வார்த்தைக்கு வலிமையான என்கிற பொருளில்  டார்வின் பயன்படுத்தவில்லை. மாறாகச் சூழல் மற்றும் அதன் தேவைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலையே தகுதியுடையது என்றார் டார்வின். அதாவது டைனோசர்கள் வலிமையுடையவைதான். ஆனால் அவை இயற்கைத் தேர்வில் மறைந்து போயின. அதேசமயம் சிறிய கரப்பான் பூச்சிக்கள் வெகுகாலமாக உயிர் வாழ்கின்றன. இங்கு தகுதியுடையது கரப்பான் பூச்சிதானே அன்றி டைனோசர்கள் அல்ல.

‘பருவகால மாற்றத்தால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு அடையும் மாற்றத்தை முன்வைத்து இயற்கைத் தேர்வு என்ன வழியில் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இம்மாற்றத்தின்போது அவ்விடத்தில் வாழ்பவை உடனடியாக ஒரு மாற்றத்தைப் பெறுகின்றன. சில உயிரினங்கள் மறைந்தும் போகலாம்’ என்கிறார் டார்வின். டார்வின், ஸ்பென்சர் பயன்படுத்திய ‘தக்கன’ என்ற பதத்தை கையாண்டது வலுசார்ந்த  என்கிற பொருளில் அல்ல. மாறாக அதன் உள்ளடக்கம் சார்ந்தே பயன்படுத்தினார். மாற்றத்திற்கேற்ப அதன் தகவமைவையே அவர் சுட்டினார்.

ஆதிக்கம் நிறைந்த கோட்பாடுகள்

‘தக்கன பிழைக்கும்’ என்கிற பதம்  எப்போது கூடுதலான விவாதப் பொருளானதென்றால், ஆதிக்க சக்திகள் (ஆளும் வர்க்கம்) டார்வினுடைய இயற்கை சார்ந்த கோட்பாடுகளை சமூகத்திற்கான கோட்பாடுகளுடன் பொருத்தினர். ஆனால் டார்வின் உண்மையில் கூறிய ‘இயற்கைத் தேர்வு’ என்பதை விடுத்து ஸ்பென்சரின் தக்கன பிழைக்கும் என்பதாக அதைக் கையாண்டனர். ஆதிக்கம் செலுத்தும் வலிமையானவர்களே தகுதியுடையவர்கள் என்றும், எனவே அது நிலைத்து நிற்கிறது;  அது நிலைத்து நிற்கும் என்றும் வாதிட்டனர். ஆரியமே சிறந்தது; அதுவே உலகை ஆளும் தகுதியுடையது என்று பேசிய நாசிசத்தின் வீழ்ச்சியோடு ஸ்பென்சரின் கோட்பாடுகளை சமூக கோட்பாடுகளாகப் பொருத்தும் ஆதிக்க சக்திகளின் இப்போக்கு ஓரளவிற்கு முடிவுக்கு வந்தது. ஆனால், இன்றும் ஆதிக்க கருத்து நிலையை வலியுறுத்த நினைக்கும் பலரும், தக்கன பிழைக்கும் என்கிற ஸ்பென்சரின் வாதத்தை டார்வினின் வாதமாக முன்வைப்பது வாடிக்கையாகவுள்ளது.

இந்த தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கும் வகையிலும் டார்வின் உண்மையில் சொன்ன அர்த்தத்தில் அதை வெளிப்படுத்தும் நோக்கிலும் தற்போது ‘தக்கன பிழைக்கும்’ என்கிற பதமே உயிரியல் துறையில் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, டார்வின் உண்மையில் பயன்படுத்திய ‘இயற்கைத் தேர்வு’ என்கிற பதமே இப்போது நிலைத்து நிற்கிறது.

இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும்

இயற்கை விதிகளை சமூக விதிகளோடு தக்கன பிழைக்கும் என்கிற நோக்கோடு பொருத்திப் பார்ப்பதில் ஆளும் வர்க்கம் எவ்வாறு தோல்வியைத் தழுவியது என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். அதையே உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இயற்கைத் தேர்வு என்கிற அடிப்படையில் சமூக விதிகளோடு பொருத்தியது?

மார்க்சியம் இயற்கை   அறிவியலும்  சமூக அறிவியலும்  இணைத்தே  அதன் கோட்பாடுகளை நிலை நிறுத்தியது.   எல்.எச்.மார்கன்  எழுதிய ‘பண்டைய சமூகம்’  என்கிற  பண்டைய  சமூக வளர்ச்சியின் போக்குகளையும், டார்வின் எழுதிய மனித பரிணாமத்தின் படிமலர்ச்சி குறித்து பேசும் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்கிற இயற்கை விஞ்ஞானத்தையும் மார்க்சியம் தனது கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரமாக்கிக்கொண்டது.

டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்கிற புத்தகத்தின் முதல் பதிப்பு 1,250 பிரதிகள்தான்  அச்சிடப்பட்டது. அந்த முதல் பிரதியை வாங்கி வாசித்தவர்களில் எங்கெல்சும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  எல்.எச்.மார்கனின் நூலை அடிப்படையாகக் கொண்டே எங்கெல்ஸ் தனது ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் படைப்பை உருவாக்கினர். மார்க்ஸ் தனது தலைசிறந்த மூலதனம் நூலின் முதல் தொகுதியை டார்வினுக்கு சமர்ப்பிக்க விரும்பினார்.

மார்க்சியத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் விளங்குகின்றன.

இயற்கை பற்றிய பொருள்முதல்வாத பார்வையே இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும். ஏதோ ஒரு சக்திதான் (கடவுள் எனும் கருத்து) இயற்கையைப் படைத்தது என்பதை சொல்வது கருத்து முதல்வாதமாகும். இயற்கை அண்டத்தில் உள்ள உலகம் என்கிற பொருளில், மனிதன் ஒரு உயிருள்ள பொருள். அவன் தலையிலுள்ள மூளை என்கிற பொருளில் உதித்த ஒன்றே கடவுள் என்ற கருத்து பொருள்முதல்வாதம்.

மனிதன் என்ற உயிரினம் உருவாவதற்கு முன்பே, அவன் மூளை உலகம் குறித்துச் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே உலகம் இருந்தது. அந்த உலகத்தின் பிரதிபலிப்பே மனித சமூகத்தின் சிந்தனையாகும். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே டார்வினின் கண்டறிதல் அமைந்தது.

இயக்கமும் மாற்றமும்

‘சிந்தனையின்றி பொருள் இருக்க முடியும். ஆனால் பொருளின்றி சிந்தனை ஏதும் இருக்க முடியாது.’ அந்தப் பொருள் இடைவிடாது இயங்கிக்கொண்டுள்ளது. இவ்வியக்கம் பொருளில் இடைவிடாமல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இயக்கம் எப்படிப் பொருளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதேபோல் பொருளில் ஏற்படுகிற மாற்றம் அதன் இயக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

‘ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் அதுவாகவும் அது அல்லாததாகவும் இருக்கிறது… இயக்கம் இல்லாத பொருள் எங்குமே ஒருபோதும் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. உலகிலுள்ள பொருளின் ஒவ்வொரு தனித்தனி அணுவும் மேற்சொன்ன இயக்க வடிவங்களில் ஏதோவொன்றிலோ அல்லது ஒரே வேளையில் பல வடிவங்களிலோ இருக்கிறது. ஒரு பருப்பொருள் ஓய்வு நிலையில் (Rest)  உள்ளது; சமநிலையில் (Equilibrium) உள்ளது என்பதெல்லாம் ஒப்பீட்டு அளவில்தான். ஏதோவொரு திட்டவட்டமான இயக்க வடிவத்துடன் தொடர்புபடுத்தித்தான் அது ஓய்வு நிலையில் அல்லது சமநிலையில் உள்ளது என்றே கூறமுடியும்.’’ என்கிறார் எங்கெல்ஸ்.

அனைத்து உயிரினங்களும் ஒரு சில தினங்களில் உருவாக்கப்பட்டவையல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற இடையறாத மாற்றங்களின் வழியே பொருளின் உள்ளியல்பில் ஏற்பட்ட மாற்றங்களாலும் அதன் மீதான புறநிலைகளின் தாக்கத்தின் விளைவாகவுமே உயிரினம் உருவானது. இப்படியான தொடர் நிகழ்வுகளாலும் தொடர் இயக்கத்தாலும் ஏற்பட்ட மாற்றங்களே இன்றைய மனித இனமாகப் பரிணமித்துள்ளது என்று டார்வின் நிறுவினார்.

இயற்கைத் தேர்வின் அடிப்படையில் ‘ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாக, அநாதியாகப் படைக்கப்படவில்லை. மாறாக, உயிரினங்கள் அனைத்தும், மற்ற உயிரினங்களின் வழித்தோன்றல்களே என்பது தெரியவரும்’ என்று தனது விரிவான உயிரியல் ஆராய்ச்சியின் மூலம் டார்வின் விளக்கினார். உலகமும் உயிரினங்களும் ஏதோவொரு ஆற்றலால் (கடவுளால்) படைக்கப்பட்டது என்கிற கருத்து முதல்வாதத்திற்கு எதிரான பொருள்முதல்வாத கோட்பாட்டிற்கு டார்வினுடைய கண்டறிதல் வலுசேர்த்தது. ‘இயற்கைத் தேர்வினை, நாள்தோறும் மணிக்கணக்கில் ஆழ்ந்து நோக்கும் செயலாகக் கருதலாம். நம்மால் மிக மெதுவாக நடக்கும் மாற்றங்களைக் காணமுடிவதில்லை’ என்று கூறுகிறார் டார்வின். இதை எங்கெல்ஸ் விவாதித்த ஓய்வு நிலை, சமநிலை (Rest, Equilibrium) என்பதோடு ஒப்புநோக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆதிக்கத்தின் மொழியல்ல இயற்கைத் தேர்வு

மார்க்சியம் இயற்கை அறிவியலை சமூக அறிவியலோடு இணைத்துப் பொருத்தியது ஆதிக்க சிந்தனையோடு அல்ல. ஆகவேதான் தக்கன பிழைக்கும் என்று அதை முன்வைக்காமல், இயற்கைத் தேர்வு என்கிற வகையிலேயே அதை அணுகியது.

‘இயற்கைத் தேர்வுதான் உயிர்களிடையே நிலவும் மாறுபாடுகளுக்கான மையமான வழிமுறை. ஆனால், அது மட்டுமே வழிமுறையன்று.’ ‘மாறிய நிலைமைகளுக்கு உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளுகிறபோது, அம்மாறுபாடு பத்திரப்படுத்தப்படுகிறது. இயற்கைத் தேர்வு இவ்வாறாக உயிரினங்களின் முன்னேற்றத்திற்குரிய வசதியை உண்டாக்கித் தருகிறது.’ அவ்வாறே சமூகத்திலும் பழைய சமூக அமைப்பு, அடுத்தகட்ட சமூக வளர்ச்சிக்கான கருவைச் சுமந்தே நிற்கும். புதிய சமூக அமைப்பே இயற்கைத் தேர்வாக இருக்குமானாலும், மாற்றத்திற்கு ஏற்றவகையில் அதன் உறுப்பினர்கள் செயலாற்றவேண்டியது அவசியமாகும். இல்லையேல் அதன் வளர்ச்சிப்போக்கில் சிதைவையே சந்திக்க நேரிடும். அது படிப்பினையாக அமையுமேயன்றி, படிக்கட்டாக அமையாது.

எப்படி இயற்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் இயக்கவியல் அடிப்படையாக அமைகிறதோ, அதேபோல் வரலாற்றின் எல்லா நடவடிக்கைகளுக்கும், அந்தந்த காலத்தில் நிலவிய பொருளுற்பத்தி முறையும் அதன் இயக்கப்போக்குமே முதன்மைக் காரணமாகும். இதையே மார்க்சும் எங்கெல்சும்  வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றனர். சோஷலிச சமூகம் அமைவது என்பது சமூகம் வந்தடைய வேண்டிய  இயல்பான படிநிலை (இயற்கைத் தேர்வு) என்று மார்க்சும் எங்கெல்சும் கூறினர். அது வலிந்து திணிக்கப்படுவதல்ல; மாறாக, சமூக வளர்ச்சி விதியின் அடிப்படையில், அது வந்தடையும் இடமே சோஷலிசம் என்று விளக்கினர்.

மனித உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் தாய்ப்பாலைத் தவிர வேறெந்த உணவிலும் இல்லை என்கிறது அறிவியல். ஆனால் அனைத்து ஊட்டச்சத்துக்களும் எங்கள் தயாரிப்பில் நிறைந்துள்ளது என்று நிறுவனங்கள், தங்களின் பொருட்களுக்கான விளம்பரத்தை மேற்கொள்கின்றன. இதில் எது உண்மை என்பதை அனைவரும் அறிவர். சத்துபானங்கள் வலிந்து திணிக்கப்படுபவை. ஆனால், இயல்பாகக் குழந்தைகள் தேடிச்சென்று அருந்துவது தாய்ப்பால்.

மாற்றமெனும் உயிர் விதி

‘இயங்கியல் என்பது இயற்கை, மானுட சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் இயக்கம், வளர்ச்சி ஆகியன குறித்த பொதுவிதிகளைப் பற்றிய அறிவியலே தவிர வேறொன்றுமல்ல’ என இயற்கை அறிவியலில் ஏற்படும் வளர்ச்சிப்போக்கை சமூகத்தின் வளர்ச்சிப்போக்குடன் இணைத்து முன்வைக்கிறார் எங்கெல்ஸ்.

இயக்கமும் அதன் விளைவான மாற்றமும் தவிர்க்கமுடியாத ஒரு உயிர் விதியாகும். மனித சமூக விதியும் இத்தகையதே. மனித சமூகத்தின் வரலாறும் மாற்றங்களோடே வளர்ந்துவந்துள்ளது. இதையே எல்.எச்.மார்கனின் ‘பண்டைய சமூகம்‘ நூல் விளக்கியது. மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்கு இந்நூல் கூடுதல் சான்றாதாரமாக அமைந்தது. எந்தப் பொருளும் எப்படி நிலையானதாக இல்லையோ, அதேபோல் எந்த சமூக அமைப்பும் நிலையானதாக இல்லை. உயிரினங்கள் எவ்வாறு மாற்றங்களுக்கு உட்பட்டு வளர்ந்து, மனிதனின் நிலைக்கு உயர்ந்துள்ளனவோ, அதேபோல் மனித சமூகமும் மாற்றங்களுக்கு உட்பட்டதே. அந்த மாற்றங்களின் வழியே அது ஒரு மேம்பட்ட சமத்துவ சமூகத்தை வந்தடையும் என்கிறது மார்க்சியம்.

ஆளும் வர்க்கமோ, சமூகம் நிலையானது என்றும், எல்லாம் மாயை என்றும் வாதிடுகின்றன. மதம் எனும் வழியில் சிந்திப்பதை நிறுத்தும்போதே தெளிவான மனத்தை கண்டடைவீர்கள் என்றும், அந்த நிலையில்தான் பிரபஞ்சத்தோடு ஒன்றிணைகிறீர்கள் என்கிறது. சிந்திப்பதால்தான் நாம் மனிதன் என்ற நிலையில் இருக்கிறோம். சிந்திப்பதை நிறுத்தினால்தான் பிரபஞ்சத்தோடு ஒன்றிணைகிறீர்கள் என்றால் அது மனிதனின் மரணத்தையே குறிப்பதாகும். ஆளும் வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எதுவும் மாற்றம் இல்லாமல் நிலைத்திருக்கிறது என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்கிறது. எல்லாம் ஒருவனின் ஆட்டுவித்தலுக்கு இணங்க ஆடுகிறோம் என்கிறது. ஏனெனில் மாற்றம் இவர்களையும் மாற்றி, புதியனவற்றுக்கு பாதை போடும் என்ற அவர்களின் அச்சமே இதற்குக் காரணம். பழையனவற்றின் போதாமைதான், புதிய ஒன்றின் தேவையை உருவாக்குகிறது. போதாமைகளை நிவர்த்திசெய்ய, புதியது பூப்பதை யாரும் தடுத்திட முடியாது. நீங்கள் மலர்களைக் கொய்யலாம் ஆனால், வசந்தங்களைத் தடுக்கமுடியாது என்கிற நெருடாவின் வார்த்தைகளைப் போல், மாற்றங்களுக்கு அணை கட்ட முடியாது.

சடுதி மாற்றம்

இந்த உலகம் மாயை அல்ல; அது உண்மை. அது எப்போதும்  மாறிக்கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த சமூகமும் மாறிக் கொண்டுள்ளது என்றார் மார்க்ஸ்.

இயக்கம் அல்லது மாற்றம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று படிப்படியாக மாறி பொருள் உருமாற்றமடைவது. இரண்டாவது முழுமையாக புதிய ஒன்றாக திடீரென ஒரு மாற்றத்தைப் பெறுவது. தற்போது நாம் வாழும் இந்த சமூக அமைப்பும் நிலையாக இருப்பதுபோல் தோன்றினாலும், அது பல்வேறு மாற்றங்களை தன்னகத்தே நிகழ்த்திக்கொண்டேதான் உள்ளது. உயிர்மலர்ச்சியும் சாதாரணமாக மந்தமாகவும் பரந்த வடிவில் மாற்றங்களுடனும் வளர்ந்துகொண்டுள்ளது. ஒரு வெடிப்புபோல் சமூகப்புரட்சி பாய்ச்சல் வேகத்தில் அடுத்த சமூகநிலைக்கு உந்தித்தள்ளப்பட்டு மாற்றத்தை சந்திக்கிறது. இதை உயிரியலில் சடுதிமாற்றம் (Mutation) என்பர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியிலும் இப்படியான திடீர் வடிவமாற்றம் காலந்தோறும் நிகழ்ந்துவருகிறது.

சிறிதுசிறிதாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் மாற்றங்கள் அளவு ரீதியான ஒரு மாற்றத்தை உருவாக்கிக்கொண்டேயிருக்கும். இது ஒரு முதன்மைக் கட்டத்தை எட்டும்போது, அது பொருளின் முழு வடிவத்தையுமே மாற்றிவிடுகிறது. இதையே அளவு மாற்றம் குணமாற்றத்தை உருவாக்கும் என்கிறது இயக்கவியல் விதி.

எதிர்மறைகளிடம் நிலவும் ஒற்றுமையும் மோதலுமே, இயக்கம் மற்றும் மாற்றத்திற்கான அடிப்படையாக திகழ்கிறது. ‘உயிர் உலகைச் சார்ந்த ஒவ்வொரு செல்லிலும்கூட இணைப்பு, பிளவு எனும் எதிர்மறை இயக்கங்கள் பரந்த வடிவில் பணியாற்றிக்கொண்டிருக்கும்.’ மனித சமூகத்தில் ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படுகிற வர்க்கத்திற்குமிடையே மோதலும் இருக்கும் இணக்கமும் இருக்கும். தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கம் ஆகியோரிடையே இருக்கும் இணக்கமே உற்பத்தி, முரண்பாடு தொழிலாளர்களின் போராட்டங்களாக வெடிக்கும். முரண்பாடுகள் முற்றும்போது அது சமூகப்புரட்சியாக மலரும். அதுவே முன்பு நாம் விவாதித்த சடுதிமாற்றத்தை நோக்கி இட்டுச்செல்லும்.

‘இந்த மோதல்களில் சிறிது காலம் அமைதி நிலைக்கும். (ஓய்வு நிலை, சம நிலை / Rest, Equilibrium) அப்போது நாம் பொருள் நிலையாக உள்ளதெனப் பிரமிப்போம். ஆனால் ஓய்வு நிலையும் சமநிலையும் தற்காலிகமானவையே…. பிரபஞ்சம் இயக்க மயமானது; மாற்ற மயமானது. சமூகமும் இயக்க மயமானது; மாற்ற மயமானது. மனித சமூகம் நிரந்தரமாக மாறிக்கொண்டே இருக்கும். … சமூகத்தை மாற்ற வேண்டுமென்பது உத்தேசமோ கனவோ அல்ல. அதுவே எதார்த்தம்.’ என்று ஆளும் வர்க்கத்திற்கு நேரெதிரான கருத்தை இயற்கை அறிவியலின் துணைகொண்டு முன்வைக்கிறது மார்க்சியம்.

பின்னோக்கியல்ல, முன்னோக்கியே…

இயற்கையும் சமூகமும் எப்போதும் முன்னோக்கியே பயணிக்கின்றன. இயற்கைத் தேர்வில் அது ‘கெடுதலானவற்றை ஒதுக்கி நல்லவற்றைச் சேர்த்துவைக்கிறது’ என்கிறார் டார்வின். எப்படி இயற்கைத் தேர்வில் பல உயிரினங்கள் அழிந்து மறைகின்றனவோ, அதேபோல் சமூக அமைப்பும் காலத்திற்கேற்ற புதிய அமைப்புமுறையைக் கண்டடைகிறது. சமூகமும் அதன் வளர்ச்சிக்கு கேடானவற்றைத் தூக்கிச் சுமப்பதில்லை. மனித சமூகத்திற்கு கேடானவற்றை இயற்கையின் விதி போலவே, சமூக விதியும் தூக்கியெறிகிறது. அது வலிந்து திணிக்கப்படுவதில்லை. இயல்பாக உருவாகிறது. ஆனால் முரண்பாடுகளின் வெளிப்பாடாக மேல் எழும் புதிய அமைப்பு, பழைய அமைப்புமுறையை வீழ்த்தியே பரிணமிக்கும்.

‘உயிரினங்கள் மறைவதும் இயற்கைத் தேர்வும் நாம் பார்த்தவரை இரண்டும் கைகோர்த்து செல்லுகின்றன. இயற்கைத் தேர்வு உயிருக்கு ஆதாரமான மாற்றங்களைப் பேணும் பணியைச் செய்கிறது. இவ்வாறு இயற்கைத் தேர்வின்வழி உருவான ஒவ்வொரு புதிய உயிர் வடிவமும் போராட்டத்தில் வெற்றிகொள்கின்றன’ என்று டார்வின் குறிப்பிடுகிறார்.

இயற்கைத் தேர்வைப் போலவே பழைய சமூகத்தின் மறைவிலிருந்தே, புதிய சமூக அமைப்பு உதித்தெழுகிறது. ஆளும் வர்க்கத்தினர் முன்வைப்பதுபோல் அவர்கள் ’தகுதியுடையவர்கள்‘ என்று கூறிக் கொள்வதால் நிலைக்கப் போவதில்லை. இயக்கம், மாற்றம் என்கிற சமூக வளர்ச்சியின் விதி, நிலையானவர்கள் என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொள்பவர்களையும் நிலைகுலையச்செய்யும். சமூகத்தின் தேர்வாக முற்போக்கான ஒரு சமத்துவ சமூகம், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத்திலிருந்து உதித்தெழும்.

  • உதவிய நூல்கள்
  • 1.   ஜார்ஜ் தாம்சன், மனித சாரம் (தமிழில்- எஸ்.வி.ராஜதுரை), விடியல் பதிப்பகம், கோவை, 2005.
  • 2.   சார்லஸ் டார்வின், உயிரினங்களின் தோற்றம், (தமிழில் சுருக்கம்- ராஜ்கௌதமன்), விடியல் பதிப்பகம், கோவை, 2010.
  • 3.   பிரபாகர் சான்ஸ்கிரி, மனிதக் கதை (தமிழில்- க.மாதவ்), பாரதி புத்தகாலயம், சென்னை, 2008)
  • 4.   ஜார்ஜ் பொலிட்சர், மார்க்சிய மெய்ஞ்ஞானம், (தமிழில்- ஆர்.கே.கண்ணன்), என்.சி.பி.எச் பதிப்பகம், சென்னை, 2004 (மூன்றாம் பதிப்பு).
  • 5.   வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1987.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: