மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


லெனினும் புரட்சிகர கட்சியும்


குரல்: பூங்கொடி மதியரசு

அன்வர் உசேன்

ஜனவரி 21 லெனின் நினைவு தினம். அவர் மறைந்து 98 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமூக மாற்றத்துக்கான சோசலிச புரட்சியை சாத்தியமாக்க வேண்டும் எனில் கம்யூனிஸ்டு கட்சி அவசியம் என்பதும் அத்தகைய கட்சி அந்தந்த சமூகத்துக்கு பொருத்தமான சித்தாந்த கோட்பாடுகளையும் ஸ்தாபன கோட்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் எனும் ஆழமான புரிதலையும் உருவாக்கிய மாபெரும் அமைப்பாளர் லெனின் அவர்கள்.

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” – வி.இ.லெனின்

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” என லெனின் மிக தெளிவாக கூறினார். “மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை, ஸ்தாபன ஒற்றுமையின் வழியாக மேலும் உறுதிப்படுவதன் மூலம்தான் தொழிலாளி வர்க்கம் வெல்லற்கரிய சக்தியாக பரிணமிக்க முடியும்” எனவும் லெனின் வலுவாக பயிற்றுவித்தார். சோசலிசப் புரட்சிக்காக போராடும் ஒவ்வொரு கம்யூனிஸ்டு கட்சிக்கும் சித்தாந்த ஒற்றுமையும் அந்த சித்தாந்தத்தை செயல்படுத்துவதற்கு இசைந்த அமைப்பு கோட்பாடுகளும் தவிர்க்க முடியாத ஒன்று என்பது லெனின் உருவாக்கிய மிக முக்கியமான பாடம் ஆகும்.

கட்சி இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை

மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்டு கட்சியின் தேவையினைக் குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும் அப்படிப்பட்ட சர்வாதிகார அமைப்பை உருவாக்கியது லெனின்தான் எனவும் சில மேற்கத்திய ‘ஆய்வாளர்கள்’ சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.

தொழிலாளர்கள் ‘தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும்’ உருவாக்கிக்கொள்வதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே குறிப்பிடும் மார்க்சும் எங்கெல்சும், “முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல்” ஆகியவை இரண்டையும் கம்யூனிஸ்டுகளின் கடமைகளாக வகுத்துள்ளார்கள்.

முதல் அகிலம் எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு அறிவுறுத்தினார்:

“அனைத்து இடங்களிலும் அனுபவம் நமக்கு எடுத்து காட்டுவது என்னவெனில் தொழிலாளர்களை பழைய கட்சிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி சுயேச்சையான பாட்டாளி வர்க்க கட்சியை உருவாக்குவதுதான். இந்த கட்சிக்கு தனது சொந்த கொள்கைகள் இருக்க வேண்டும்; அந்த கொள்கைகள் ஏனைய கட்சிகளின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும்”

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஸ்பானிய பிரிவுக்கு 1871ம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய கடிதம்…

எனவே கம்யூனிஸ்டு கட்சி கட்டமைப்பு கோட்பாடுகள் ஆகியவையெல்லாம் சர்வாதிகார விருப்பத்துடன் லெனின் உருவாக்கியவை என்பது மிகப்பெரிய அவதூறு என்பது மிகை அல்ல. உண்மையில், லெனின் வழிகாட்டிய கம்யூனிஸ்டு கட்சிகளில்தான், கட்சிக்குள் மிக உயர்ந்த செழுமையான ஜனநாயகம் உள்ளது. மார்க்சும் எங்கெல்சும் சுயேச்சையான கட்சியை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினாலும் அதன் கட்டமைப்பையும் அதன் பல்வேறு உட்கூறுகளையும் வடிவமைத்த சிற்பி லெனின் ஆவார். புரட்சிகர சித்தாந்தத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பு இல்லாமல் சமூக மாற்ற புரட்சி சாத்தியம் இல்லை என்பதை லெனின் தொடர்ந்து வலியுறுத்தினார். ரஷ்ய சோவியத் புரட்சியின் மூலம் அதனை நிரூபித்தும் காட்டினார். பின்னர் நடந்த சீனப் புரட்சியிலிருந்து வியட்நாம் புரட்சி வரை அனைத்தும் கம்யூனிஸ்டு கட்சிகளால்தான் சாத்தியமாக்கப்பட்டன. 

இன்று சில இடதுசாரி சக்திகள் இந்தியாவிலும் வெளி தேசங்களிலும் சமூக மாற்றத்துக்கு கம்யூனிஸ்டு கட்சி தேவையில்லை எனவும் கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவதியாகி விட்டன எனவும் கூறுகின்றனர். ஆனால் கம்யூனிஸ்டு கட்சி இல்லாமல் எந்த ஒரு சமூக முன்னேற்றத்தையும் வலுவாக தொடர்ச்சியாக செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதுதான் அனுபவங்களில் அறிய முடிவது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சியில் ஜெர்மி கோபின் அனுபவமும் அமெரிக்க ஜனநாயக கட்சியில் பெர்னி சாண்டர்ஸ் அனுபவமும் பழைய கட்சிகளை ஒரு எல்லைக்கு மேல் முற்போக்கு பாதையில் செலுத்த இயலாது என்பதை நிரூபிக்கின்றன.

கிரேக்கத்தில் மிகவும் நம்பிக்கையோடு உருவான இடதுசாரிகளின் சிர்சியா ஆட்சி இன்று அடையாளம் தெரியாமல் மறைந்து போனது வேதனையான உதாரணம் . இதே நிலைதான் ஸ்பெயினில் பொடோமஸ் எனும் இடதுசாரி அமைப்புக்கும் உள்ளது. இந்த பட்டியலில் சேர்க்க வேண்டிய இன்னொரு இயக்கம் “இயற்கை சூழலை பாதுகாக்க” உருவான “Greens Party” எனப்படும் பசுமை கட்சிகள் ஆகும். மேற்கண்ட இந்த இயக்கங்கள் இடதுசாரிகள்தான் என்றாலும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படையான கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கும் அறிவியல் பூர்வமான சமூகக் கோட்பாடுகளும் வர்க்க அணுகுமுறைகளும் இல்லாததால் நாளடைவில் அவை பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்தியாவிலும் சிலர் தங்களை “புதிய இடதுசாரிகள்” என அழைத்து கொண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவாதியான பழைய இடதுசாரிகள் எனவும் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை எனவும் உளறுகின்றனர். அவர்களுக்கு மேற்சொன்ன உதாரணங்கள் உதவும்.

யார் கட்சி உறுப்பினர்?

1903ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் (அன்று ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) போல்ஷ்விக் பிரிவினரான லெனின் ஆதரவாளர்களுக்கும் மென்ஷ்விக் பிரிவினருக்கும் கடும் கருத்து மோதல் உருவான முக்கிய அம்சம் “கட்சி உறுப்பினர் ஆவதற்கு யாருக்கு தகுதி உள்ளது?” என்ற கேள்விதான்.  ஒருவர் கட்சி திட்டத்தை ஏற்றுக்கொண்டாலே போதுமானது; அவர் கட்சி உறுப்பினர் ஆகிவிடலாம் என மென்ஷ்விக் பிரிவின் தலைவரான மார்டோவ் வாதிட்டார். ஒரு படி மேலே போய் “வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் எவர் ஒருவரும் கட்சி உறுப்பினராக ஆவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்” எனவும் மார்டோவ் கூறினார்.

இந்த கருத்தை லெனின் மிகக்கடுமையாக நிராகரித்தார். ஒருவர் கட்சி உறுப்பினர் ஆவதற்கு கீழ்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என வாதிட்டார்:

  • கட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • கட்சி அமைப்பு ஏதாவது ஒன்றில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
  • கட்சி கட்டுப்பாடுக்கு தன்னை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

அரசு இயந்திரத்தை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் ஊசலாட்டம் இல்லாதவர்களாகவும் வர்க்க உணர்வை பெற்றவர்களாகவும் தொழிலாளி வர்க்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் உன்னதமான வர்க்க உணர்வு படைத்த போராளிகள்தான் கட்சியில் உறுப்பினராக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படைதான் கட்சியாக உள்ளது; வர்க்கம் முழுவதுமே கட்சி அல்ல என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி தரமானதாக செயல்படுவதற்கு அதன் உறுப்பினர்களின் தரம் உயர்ந்திருக்க வேண்டியது மிக அவசியம். கட்சி உறுப்பினர்களின் தரத்தை உயர்த்துவதன் அவசியத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கட்சி உறுப்பினர்கள் தரம் குறித்து 2015 கொல்கத்தா பிளீனம் கீழ்கண்ட சில முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது:

  • கட்சி உறுப்பினர்கள் முதலில் துணைக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டாலும் பெரும்பாலான துணைக்குழுக்கள் செயல்படுவது இல்லை; அவற்றை செயல் படுத்துவதற்கான முனைப்புகளும் குறைவாக உள்ளன.
  • துணைக்குழு உறுப்பினர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாக உயர்வு பெறும் பொழுது தேவையான தகுதிகள் பெற்றனரா என்பது பல சமயங்களில் ஆய்வு செய்யப்படுவது இல்லை.
  • உறுதியற்ற முறையில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதாலும் அவர்களுக்கு முறையான அரசியல் பயிற்சியும் கட்சி அமைப்பு பற்றிய புரிதல் போதிக்கப்படாததாலும் அவர்களின் அரசியல் உணர்வு கீழ்மட்டத்தில் உள்ளது.
  • கட்சி உறுப்பினர்களின் கணிசமான பிரிவினர் கிளைக்கூட்டங்களில்/ அரசியல் வகுப்புகளில்/கட்சி இயக்கங்களில் பங்கேற்பது இல்லை.
  • இந்த குறைகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். கட்சி உறுப்பினர்களை சேர்ப்பதில் ஒரு அடிப்படையான மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். வர்க்க/ வெகுமக்கள் போராட்டங்களில் பங்கேற்பு என்பதுதான் கட்சி உறுப்பினர் சேர்ப்புக்கான அடிப்படை தகுதிகளாக இருக்க வேண்டும்.
  • ஐந்து கடமைகளான கிளைக்கூடங்களில் பங்கேற்பு/கட்சி வகுப்புகள் மற்றும் போராட்டங்களில் திருப்திகரமான பங்கேற்பு/ ஏதாவது ஒரு வெகு மக்கள் அமைப்பில் செயல்படுவது/ லெவி தருதல்/கட்சி பத்திரிக்கைகளை படித்தல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் கட்சி உறுப்பினர் பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்திய சமூகத்தை சூறையாடுவதற்காக  கை கோர்த்துள்ள வகுப்புவாதிகள் – கார்பரேட்டுகள் கூட்டணியை ஒருசேர எதிர்கொள்ளும் தகுதி படைத்த ஓரே அரசியல் இயக்கம் கம்யூனிஸ்டு கட்சிதான். அந்த கடமையை நிறைவேற்ற கம்யூனிஸ்டு கட்சியின் தரமும் அதன் உறுப்பினர்களுடைய தரமும் மேலும் உயர்ந்த தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த வரலாற்று கடமையை நிறைவேற்றிட கட்சி உறுப்பினர்களின் தரம் குறித்த லெனின் போதனைகள் நமக்கு வழிகாட்டியாக செயல்படும்.

ஜனநாயக மத்தியத்துவம்

இணையற்ற கட்சி அமைப்பாளர் என்ற முறையில் லெனின் அவர்களின் மகத்தான பங்களிப்பு ‘ஜனநாயக மத்தியத்துவம்’ எனும் கோட்பாடு ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு கோட்பாடுகளின் உயிர்நாடி அதுவே. ஜனநாயக மத்தியத்துவத்தை புறந்தள்ளிவிட்டு தனது புரட்சிகர நோக்கங்களை கம்யூனிஸ்டு கட்சி சாத்தியமாக்கிய அனுபவம் இல்லை. புரட்சிக்கு பின்னரும் கட்சியின் செயல்பாட்டில் (அரசின் செயல்பாட்டில் அல்ல) ஜனநாயக மத்தியத்துவம் தொடர்வது அவசியம்.

முதலாளித்துவவாதிகளால் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகும் சில முக்கிய கோட்பாடுகளில் ஒன்று ஜனநாயக மத்தியத்துவம் ஆகும். சில சமயங்களில் கட்சி ஊழியர்கள் கூட இந்தக் கோட்பாடு குறித்து ஊசலாட்டம் அடைகின்றனர்.

கட்சி பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் தேர்வு செய்வது

ஒவ்வொரு கமிட்டியும் தன் கீழ் உள்ள கமிட்டிகளுக்கும் மேல் உள்ள கமிட்டிகளுக்கும் தனது பணி குறித்து தெரிவிப்பது

கட்சி உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது

கூட்டு முடிவு தனி நபர் பொறுப்பு என்ற முறையில் செயல்படுவது

ஆகிய முக்கிய அம்சங்களுடன் இணைந்து சிறுபான்மை கருத்து உடையவர்கள் பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது என்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய உட்கூறுகள் ஆகும். இதனை நமது கட்சி அமைப்பு சட்டம் தெளிவாக கூறுகிறது.

ஜனநாயகமும் மத்தியத்துவமும் முரண்பட்ட அம்சங்கள் போல தோன்றினாலும் உண்மையில் அவை ஒன்றுக்கொன்று இயைந்தவை. ஒரு குறிப்பிட்ட சூழலில் எந்த அம்சம் கூடுதல் அழுத்தம் பெறவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சரியான அணுகுமுறை தேவைப்படுகிறது.

லெனின் வழிகாட்டுதலில் கம்யூனிஸ்டு அகிலம் 1921ம் ஆண்டு உருவாக்கிய “கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் கோட்பாடுகள்” எனும் மிகச்சிறந்த ஆவணத்தில் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது:

“கம்யூனிஸ்டு கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் மத்தியத்துவமும் இரண்டறக் கலந்த பிரிக்க முடியாத (fusion) கோட்பாடாக இருக்க வேண்டும். ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாத உண்மையான செழுமைப்படுத்தப்பட்ட புத்தாக்க கலவையாக (synthesis) இருக்க வேண்டும்” என முன்வைக்கிறது.

மத்தியத்துவம் என்பது தலைமையின் கைகளில் அதிகாரங்களை குவித்து கொள்வது என பொருள் அல்ல; அல்லது கட்சி உறுப்பினர்கள் மீது தலைமை தனது மூர்க்கத்தனமான அதிகாரத்தை திணிப்பது என்பது அல்ல. மாறாக கம்யூனிஸ்டு நடவடிக்கைகளை செயலாக்கத்தை மத்தியத்துவப்படுத்துவது என்று பொருளாகும் எனவும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

விவாதங்களில் ஜனநாயகம்! அமலாக்கத்தில் மத்தியத்துவம்!

கருத்துகள் விவாதிக்கப்படும் பொழுது அனைவரும் தமது கருத்துகளை தமது கிளைகள் அல்லது குழுக்களில் விரிவாக பேசும் உச்சபட்ச ஜனநாயகமும் முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் கட்சி ஒரே மனிதனாக நின்று செயல்படுத்தும் மத்தியத்துவமும் இணைந்து இருப்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சம் ஆகும். இந்த கோட்பாட்டினை அமலாக்கும் பொழுது பல பிரச்சனைகள் உருவாகின்றன. விவாதங்களுக்கு பின்னர் கருத்தொற்றுமை மூலம் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது சாலச்சிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருந்தால் வாக்கெடுப்பு மூலம் முடிவு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. வாக்கெடுப்பில் பெரும்பான்மை கருத்துதான் முடிவாக உருவாகும். இந்த முடிவுதான் சிறுபான்மை கருத்து உடையவர்களையும் கட்டுப்படுத்தும். ஆனால் சிறுபான்மை கருத்துடையவர்கள் முடிவை அமலாக்குவதில் சுணக்கம் காட்டுவதோ அல்லது தமது சிறுபான்மை கருத்துகளை தமது கிளை அல்லது கமிட்டிக்கு வெளியே முன்வைப்பதோ கட்சியின் ஒற்றுமைக்கு பயன்படாது; அது ஜனநாயக மத்தியத்துவத்துக்கு விரோதமான செயல் ஆகும்.

சமீப காலங்களில் சிலர் தமது  மாறுபட்ட கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் அவ்வாறு பதிவிடுவது தமது உரிமை எனவும் வாதிடுகின்றனர்.  அத்தகையோர் லெனின் அவர்களின் கட்சி வாழ்க்கையை உள்வாங்குவது பயன் தரும்.

“அமைப்பு(ஸ்தாபனம்) இல்லாமல் ஒற்றுமை சாத்தியம் இல்லை; சிறுபான்மை கருத்துடையோர் பெரும்பானமை கருத்துக்கு தலைவணங்காமல் அமைப்பு சாத்தியம் இல்லை” என லெனின் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்” எனும் சிறு பிரசுரத்தில் லெனின் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். கட்சி மாநாடு நாடாளுமன்ற (டூமா) தேர்தல்களில் பங்கேற்பது என முடிவு செய்தது. தேர்தல்களில் பங்கேற்பது என்பது ஒரு மிக முக்கியமான முடிவார்ந்த செயல் நடவடிக்கை! தேர்தல் காலத்தில் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் எனவோ அல்லது  பங்கேற்புக்கு எதிராக விமர்சனம் செய்யும் உரிமையோ எந்த கட்சி உறுப்பினருக்கும் கிடையாது. ஏனெனில் இது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும். ஆனால் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பங்கேற்பு குறித்து விமர்சனம் செய்யும் உரிமை ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் முழுமையாக உண்டு”

விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்

ஜனநாயகம் மற்றும்  மத்தியத்துவம் என்பது என்ன? செயல் நடவடிக்கைகளுக்கான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு விமர்சனத்துக்கான முழு சுதந்திரமும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் செயல் நடவடிக்கையில் ஒற்றுமையும் இருக்க வேண்டும். முடிவினை அமலாக்கும் பொழுது அங்கு விமர்சனத்துக்கு இடமில்லை. லெனின் முன்வைக்கும் விமர்சன உரிமைக்கும் செயல் நடவடிக்கைகளுக்கும் உள்ள இயக்கவியல் இணைப்பை உள்வாங்குவது மிக அவசியம். இரண்டில் எந்த அம்சத்தை தவறாக பயன்படுத்தினாலும் அது தீங்காகவே முடியும்.

லெனின் வாழ்வு கற்றுதரும் படிப்பினை

தனது நியாயமான கருத்து நிராகரிக்கப்பட்டதாக ஒருவர் நினைத்தால் என்ன செய்வது? அதற்கும் லெனின் வாழ்வு நமக்கு படிப்பினையை தருகிறது. 1917 பிப்ரவரியில் ரஷ்ய தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைப்பாளிகளும் முதலாளித்துவ வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளும் இணைந்து ஜார் மன்னனுடைய ஆட்சியைத் தூக்கியெறிந்தனர். ஒரு ஜனநாயக குடியரசை நிறுவுவது என்பதே குறிக்கோள். ஆனால் ஆட்சியைக் கைப்பற்றிய முதலாளித்துவவாதிகள் வழக்கம் போல உழைப்பாளிகளுக்கு துரோகம் இழைக்க முனைந்தனர்.  எனவே பிப்ரவரி முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை சோசலிச  புரட்சியாக நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக லெனின் கணித்தார். எனவே அதற்காக “ஏப்ரல் ஆய்வு குறிப்புகள்” எனும் ஆவணத்தை உருவாக்கினார். அதனை போல்ஷ்விக் கட்சி முன் வைத்தார். ஆனால் கட்சி அதனை  ஏற்கவில்லை. மிக முக்கியத்துவம் வாய்ந்த பீட்டர்ஸ்பர்க் கமிட்டி 13க்கு 2 என்ற வாக்கு விகிதத்தில் லெனின் கருத்தை நிராகரித்தது. மாஸ்கோ மற்றும் பல கமிட்டிகளும் லெனின் கருத்தை நிராகரித்தன. பிராவ்டா பத்திரிக்கை லெனின் கருத்தை கண்டித்து கட்டுரை வெளியிட்டது. பல முக்கிய தலைவர்களும் லெனின் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் லெனின் பொறுமையாக தனது கருத்தின் நியாயத்தை விளக்கினார்.  புறச்சூழல்கள் குறித்து எடுத்துரைத்தார். 

நீண்ட கருத்து பரிமாற்றத்துக்கு பின்னர் போல்ஷ்விக் கட்சி லெனின் கருத்தை (பெரும்பான்மை அடிப்படையில்) அங்கீகரித்தது. அதற்கு பின்னர் இந்த கருத்தை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிப்பதை லெனின் உத்தரவாதப்படுத்தினார். மென்ஷ்விக்குகளும் லெனின் கருத்தை ஏற்க வேண்டிய சூழல் உருவானது. எல்லாவற்றிற்கும் மேலாக புரட்சியின் தேவையை பெரும்பான்மையான உழைப்பாளிகளும் அங்கீகரிப்பதையும் லெனின் உத்தரவாதப்படுத்தினார். அதற்கு பின்னர்தான் புரட்சி எழுச்சிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. தனது கருத்தின் நியாயத்தை பெரும்பான்மையோர் ஏற்கும்வரை பொறுமையாக லெனின் செயல்பட்டார். தான் சரியென நினைக்கும் கருத்தை பெரும்பான்மை நிராகரித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் வாழ்வு நமக்கு கற்று கொடுக்கிறது.

லெனின் கருத்தை எல்லா சமயங்களிலும் போல்ஷ்விக் கட்சி ஏற்றுக்கொண்டதில்லை. பல சமயங்களில் அவரது கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணத்தையே எடுத்து கொண்டால் போல்ஷ்விக் கட்சி புரட்சிக்கு அறைகூவல் விட வேண்டும் என முடிவு செய்தபொழுது சியனோவ்/கமனொவ் எனும் இரு தலைவர்கள் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; அவர்கள் மென்ஷ்விக் பத்திரிக்கைகளில் பகிரங்கமாக புரட்சி அறைகூவல் தவறு என பேட்டி அளித்தனர். இது லெனினுக்கு கடும் கோபத்தை உருவாக்கியது. ஏனெனில் இது புரட்சியை காட்டி கொடுக்கும் செயலாகும். எனவே அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என லெனின் மத்தியகுழுவுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் கட்சி அந்த இரு தலைவர்களின் கடந்தகால சேவையை கருத்தில் கொண்டு அவர்கள் தவறை உணர்ந்தால் கட்சியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானித்தது. அதன்படி அவர்கள் தவறை உணர்ந்ததாக வெளிப்படுத்தினர். பின்னர் கட்சியில் தொடர்ந்து செயல்பட்டனர்.

சில சமயங்களில் லெனின் கருத்து சிறுபான்மையாக இருந்தது. ஆனால் அவர் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டார். சில சமயங்களில் விட்டுக்கொடுத்தார். சில அடிப்படை முக்கிய பிரச்சனைகளில் இடைவிடாது கட்சிக்குள் போராடினார். தனது கருத்தை கட்சி ஏற்றுக்கொள்ள வைப்பதில் முனைப்பு காட்டினார். அதே சமயத்தில் சிறுபான்மை கருத்து பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது எனும் ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்; தனது செயல்பாடுகளில் கடைபிடித்தார். அதே சமயத்தில் ஜனநாயகம் இல்லாமல் மத்தியத்துவம் சாத்தியம் இல்லை என்பதிலும் லெனின் உறுதியாக இருந்தார். முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயக விவாத உரிமை அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கமிட்டுகளுக்கு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஜனநாயக மத்தியத்துவம் மாறாநிலை கோட்பாடு அல்ல!

ஜனநாயக மத்தியத்துவம் அனைத்து சூழல்களிலும் அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் கோட்பாடு அல்ல. ஓரே கட்சியின் நீண்ட பயணத்தில் கூட வெவ்வேறு காலகட்டங்களில் வெவேறு அணுகுமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகலாம். 1903 முதல் 1912ம் ஆண்டு வரை போஷ்விக்குகளும் மென்ஷ்விக்குகளும் இணைந்து செயல்பட்டனர். 1912ல் போல்ஷ்விக் கட்சி சுயேச்சையான அமைப்பாக செயல்பட்டது. இரு சூழல்களிலும் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து  ஒரே மாதிரியான அணுகுமுறை லெனின் கொண்டிருக்கவில்லை. போல்ஷ்விக் கட்சி உதயமான பின்னர் அமைப்பு கோட்பாடுகள் செழுமைப்படுத்தப்பட்டன. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடும் அதற்கேற்றவாறு செழுமைப்பட்டது.

ஒரு கட்சி  அடக்குமுறைக்கு உள்ளாகும் பொழுது அங்கு மத்தியத்துவம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனைய சமயங்களில் ஜனநாயக அம்சம் கூடுதல் அழுத்தம் பெற வேண்டும். எனினும் முடிவுகள் எடுப்பதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயகமும் அந்த முடிவுகளை அமலாக்குவதில் ஒன்றுபட்ட செயல்பாட்டின் அடிப்படையிலான மத்தியத்துவமும் அனைத்து சூழல்களுக்கும் பொருந்தும். ஜனநாயக மத்தியத்துவம் தவறானது என அதனை கைவிட்ட பல கட்சிகள் காணாமல் போய்விட்டன என்பதும் அனுபவம் ஆகும்.

ஜனநாயக மத்தியத்துவம் என்பது வெறும் பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவது மட்டுமல்ல; ஜனநாயக மத்தியத்துவத்தின் செழுமை என்பது கட்சிக்குள் வெளிப்படையான விரிவான விவாத உரிமை/கட்சி உறுப்பினர்களின் சித்தாந்த அரசியல் உணர்வை அதிகரித்தல்/ கட்சி உறுப்பினர்களையும் அவர்கள் சார்ந்த கிளைகளையும் செயல்பட வைத்தல்/ விமர்சனம் சுயவிமர்சனத்தை ஊக்குவித்தல்/குழுவாத போக்குகளை தவிர்த்தல்/ கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசாமல் இருத்தல் ஆகிய அம்சங்களுடனும் இணைந்துள்ளது.  இதனை நமது கட்சியின் அமைப்புசட்டம் தெளிவாக முன்வைக்கிறது. அதுவே லெனின் நமக்கு புரட்சிகர கட்சி அமைப்பு பற்றி கற்று தரும் பாடம் ஆகும். அத்தகைய ஒரு வலுவான கட்சியை உருவாக்க உறுதியேற்போம்!   

– கட்டுரைக்கு உதவிய நூல்கள் :

1) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் – லெனின்

2) விமர்சன உரிமையும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும் – லெனின்

3) கட்சி அமைப்பின் கோட்பாடுகள்-கம்யூனிஸ்டு அகிலம்

4) லெனினும் புரட்சிகர கட்சியும் – பால் பிளான்க்

5) 2015 CPI(M) பிளீனம் ஆவணம்

6) CPI(M) கட்சி அமைப்பு சட்டம்.



One response to “லெனினும் புரட்சிகர கட்சியும்”

  1. காலத்திற்கேற்ற கட்டுரை. சிறப்பு. மகிழ்ச்சி

    Like

Leave a comment