மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 1 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)


பிரெடெரிக் எங்கெல்ஸ்

நூல் வாங்குவதற்கு: Buy NOW

முதல் அத்தியாயம் சுருக்கம

தமிழில்: சிவலிங்கம்

அத்தியாயம் 1

[கற்பனாவாத சோசலிசம்]

ஃபிரெஞ்சு நாட்டில் மனிதர்களின் மனத்தை வரப்போகும் புரட்சிக்காகத் தயார்செய்த …  மாமேதைகள், தாங்களே தீவிரப் புரட்சியாளர்களாகவும் திகழ்ந்தனர். எப்படிப்பட்டதாக இருப்பினும், எந்த வகையான புறநிலை அதிகாரத்தையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மதம், இயற்கை விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – இவை ஒவ்வொன்றுமே தயவு தாட்சண்யமற்ற விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன: அவை ஒவ்வொன்றும், பகுத்தறிவின் தீர்ப்பு–மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும் அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும்.

பகுத்தறிவுக்கு உகந்தது என்கிற ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று … பழைய மரபுவழிக் கருத்தாக்கம் ஒவ்வொன்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததெனக் குப்பைக் குழியில் வீசி எறியப்பட்டது…

இந்தப் பகுத்தறிவின் ஆட்சி என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஆட்சியே அன்றி வேறொன்றுமில்லை; இந்த நித்தியமான நீதி என்பது முதலாளித்துவ நீதியாகத் தன்னை நிறைவேற்றிக் கொண்டது; இந்தச் சமத்துவம் என்பது சட்டத்தின் முன்பான முதலாளித்துவச் சமத்துவமாகக் குறுகிவிட்டது; முதலாளித்துவச் சொத்துடைமை என்பது இன்றியமையாத மனித உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது; பகுத்தறிவின் அரசாங்கம், ரூஸோவின் (Rousseau) சமூக ஒப்பந்தம் (Contrat Social)27 ஒரு ஜனநாயக முதலாளித்துவக் குடியரசாகத்தான் நடைமுறைக்கு வந்தது, அது அவ்வாறுதான் நடைமுறைக்கு வர முடியும். இவற்றையெல்லாம் இன்று நாம் அறிவோம். …

ஆனால், நிலவுடைமைப் பிரபுக்களுக்கும், சமுதாயத்தின் ஏனைய அனைத்து பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட நகரத்தாருக்கும் இடையேயான பகைமையுடன் பக்கம் பக்கமாகவே, சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையேயான, பணக்காரச் சோம்பேறிகளுக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் இடையேயான பொதுவான பகைமையும் நிலவி வந்தது. இந்தச் சூழ்நிலைதான், முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் தாங்கள் தனியொரு வர்க்கத்தை அல்லாமல், மனிதகுலம் முழுவதையுமே பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கியது.

அது மட்டுமன்று. முதலாளித்துவ வர்க்கம் தான் தோன்றியது முதலே, அதன் எதிரிணைச் சக்திக்கும் சேர்த்துப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. கூலித் தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் நிலவ முடியாது.

…சமத்துவத்துக்கான கோரிக்கை இனி அரசியல் உரிமைகளுக்கு மட்டும் என வரம்பிடப்பட்டதாய் இருக்கவில்லை. தனிநபர்களின் சமூக நிலைமைகளுக்கும் அக்கோரிக்கை நீட்டிக்கப்பட்டது. ஒழிக்கப்பட வேண்டியவை வெறும் வர்க்கச் சலுகைகள் மட்டுமல்ல,  வர்க்கப் பாகுபாடுகளே ஒழிக்கப்பட்டாக வேண்டும் [என்று கோரிக்கை வைக்கப்பட்டது]. துறவு மனப்பான்மை கொண்ட, வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் நிராகரிக்கின்ற, ஆடம்பரமற்ற ஸ்பார்ட்டானிய எளிமை வாய்ந்த ஒரு கம்யூனிசமே இந்தப் புதிய போதனையின் முதலாவது வடிவமாய் இருந்தது. அதன்பிறகு வந்தனர் மூன்று மாபெரும் கற்பனாவாதிகள் (Utopians):

பாட்டாளி  வர்க்க இயக்கத்துடன் கூடவே நடுத்தர வர்க்க இயக்கமும் இன்னமும் ஓரளவு முக்கியத்துவம் கொண்டது எனக் கருதிய, சான்-சிமோன் (Saint-Simon);

முதலாளித்துவ உற்பத்தி மிகவும் வளர்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டில், அதனால் தோற்றுவிக்கப்பட்ட பகைமைகளின் தாக்கத்தில், வர்க்கப் பாகுபாட்டினைத் திட்டமிட்டு நீக்குவதற்காக, ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தித் தம்  பரிந்துரைகளை வகுத்தளித்த ஃபூரியேவும் ஓவனும் (Fourier and Owen).

மூவருக்கும் பொதுவான ஒன்று உள்ளது. இவர்களில் எந்த ஒருவரும், இக்காலகட்டத்தில், வரலாற்று ரீதியான வளர்ச்சி தோற்றுவித்த அந்தப் பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களின் பிரதிநிதியாகத் தோன்றவில்லை…

நம்முடைய இம்மூன்று சமூகச் சீர்திருத்தவாதிகளுக்கும், ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்களின் கோட்பாட்டு அடிப்படையில் அமைந்த முதலாளித்துவ உலகம், நிலப்பிரபுத்துவத்தையும் சமுதாயத்தின் அனைத்து முந்தைய கட்டங்களையும் போன்று, அதே அளவுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் அநீதியானதாகவும் இருக்கிறது. ஆகவே, அவற்றைப் போலவே குப்பைக் குழிக்குப் போகத் தயாராய் உள்ளது.

தூய பகுத்தறிவும் நீதியும் இதுநாள்வரை உலகில் ஆட்சி புரியவில்லை எனில், மனிதர்கள் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே அதற்கான காரணம்.

இப்போதைய தேவை என்னவெனில், மேதமைமிக்க ஒரு தனிமனிதர். அவர் இப்போது உதித்தெழுந்துவிட்டார்.

500 ஆண்டுகள் முன்னதாகவும் இவர் பிறந்திருக்க முடியும். அப்படிப் பிறந்திருப்பின், அவர் மனிதகுலத்தை இந்த 500 ஆண்டுகாலப் பிழை, பூசல், துயரம் இவற்றிலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.

புரட்சியின் முன்னோடிகளான 18-ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள், இருப்பவை அனைத்துக்குமான ஒரே நீதிபதியாக, பகுத்தறிவுக்கு எவ்வாறு அறைகூவல் விடுத்தனர் என்பதை நாம் பார்த்தோம். பகுத்தறிவு பூர்வமான ஓர் அரசாங்கமும், பகுத்தறிவு பூர்வமான [ஒரு] சமுதாயமும் நிறுவப்பட வேண்டும்; நித்தியமான பகுத்தறிவுக்கு முரணாகச் செல்லும் அனைத்தும் ஈவிரக்கமின்றி ஒழிக்கப்பட வேண்டும் [என்பது அவர்களின் கருத்து].

முதலாளித்துவ அடித்தளத்தின் மீது ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, சாதாரண உழைக்கும் மக்களின் வறுமையையும் துயரையும் சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகளாய் ஆக்கியது. கார்லைல் (Carlyle) அவர்களின் சொற்களில் கூறுவதெனில், மேலும் மேலும் பணப் பட்டுவாடாதான் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரே உறவு என்று ஆகிப்போனது. குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. முன்பெல்லாம் நிலப்பிரபுத்துவ ஒழுக்கக் கேடுகள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாண்டவமாடின. அவை அடியோடு ஒழிக்கப்படாவிட்டாலும், இப்போது அவை எப்படியோ பின்னிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில், இதுநாள்வரை ரகசியமாகச் செயல்பட்டுவந்த முதலாளித்துவ ஒழுக்கக் கேடுகள், அவற்றைவிட  ஆடம்பரமாகத் தழைத்தோங்கத் தொடங்கின. வணிகம் மேலும் மேலும் பெரிய அளவுக்கு மோசடியாய் ஆனது.

புரட்சிகர முழக்கமான “சகோதரத்துவம்”33 என்பது, [மேலாதிக்கப்] போட்டியில் நிகழும் களப்போரின் சூழ்ச்சியிலும், சண்டை சச்சரவுகளிலும் நிறைவேற்றம் கண்டது. பலத்தின்மூலமான ஒடுக்குமுறைக்குப் பதிலாய் ஊழல்மூலமான ஒடுக்குமுறை வந்தது. முதல்பெரும் சமூக நெம்புகோலாக வாளுக்குப் பதில் தங்கம் இடம்பெற்றது.

முதல் இரவுக்கான உரிமை, நிலவுடைமைப் பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவ ஆலையதிபர்களுக்கு மாற்றப்பட்டது. விபச்சாரம், என்றும் கேள்விப்படாத அளவுக்கு அதிகரித்தது. திருமணம் என்பது முன்பு போலவே சட்ட அங்கீகாரம் பெற்ற விபச்சார வடிவமாகவும், விபசாரத்தின் அதிகாரபூர்வ மூடுதிரையாகவும் தொடர்ந்து இருந்துவந்தது. அதுமட்டுமின்றி, அதன் பிற்சேர்க்கையாகப் பிறன்மனை நயத்தலும் வளமாகச் செழித்தோங்கியது.

ஆனாலும், அந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதோடுகூட, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையும் இன்னமும் அரைகுறை வளர்ச்சியையே கண்டிருந்தன. இங்கிலாந்தில் அப்போதுதான் தோன்றியிருந்த நவீனத் தொழில்துறை, ஃபிரான்சில் இன்னமும் அறியப்படாததாகவே இருந்தது. ஆனால், நவீனத் தொழில்துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவத் தன்மைக்கு முடிவுகட்டுதலையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது. தான் தோற்றுவித்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்களை மட்டுமின்றி, தான் உருவாக்கிய அதே உற்பத்திச் சக்திகளுக்கும் பரிவர்த்தனை வடிவங்களுக்கும் இடையேயான மோதல்களையும் வளர்க்கிறது. நவீனத் தொழில்துறை மறுபுறம் அதே மாபெரும் உற்பத்திச் சக்திகளுக்குள்ளேயே அம்மோதல்களுக்கு முடிவுகட்டும் சாதனங்களையும் வளர்க்கிறது.

… பாட்டாளி வர்க்கமானது, “ஏதும் இல்லாத” சாதாரண மக்களிடமிருந்து, அப்போதுதான் முதன்முதலாக ஒரு புதிய வர்க்கத்தின் உட்கருவாய்த் தானாகவே பரிணமித்தது. இன்னமும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்குச் சற்றும் திறனற்றிருந்த அவ்வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது. அவ்வர்க்கம் தனக்குத்தானே உதவிக் கொள்ளும் திறனற்றிருந்த அந்நிலையில், அதிகம் போனால் வெளியிலிருந்தோ அல்லது மேலிடத்திலிருந்தோதான் [தனக்குத் தேவையான] உதவியைப் பெற்றிட முடியும்.

இந்த வரலாற்றுச் சூழ்நிலை சோசலிசத்தின் நிறுவனர்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தியது.

முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன.

சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்து கிடந்த அந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள். சமுதாயம் தீங்குகளைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்தவில்லை. அத்தீங்குகளைக் களைவது பகுத்தறிவின் பணி ஆகும். எனவே, ஒரு புதிய, மிகவும் முழுநிறைவான சமூக ஒழுங்குமுறை அமைப்பைக் கண்டுபிடித்து, பரப்புரையின் மூலமும், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எடுத்துக்காட்டான முன்மாதிரிப் பரிசோதனைகள் மூலமும், அந்த அமைப்பை வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது திணிப்பது அவசியமாகும் [எனக் கற்பனாவாதிகள் கருதினர்].

… சான்-சிமோன் மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சியின் புதல்வர் ஆவார். அப்புரட்சி வெடித்தபோது அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. ஃபிரெஞ்சுப் புரட்சி, சலுகை பெற்ற சோம்பேறி வர்க்கங்களாகிய பிரபுக்கள், பாதிரியார்கள் ஆகியோர் மீது மூன்றாம் வகைப்பிரிவினர் (Third Estate), அதாவது உற்பத்தித் துறையிலும் வணிகத் துறையிலும் உழைக்கின்ற, தேசத்தின் மாபெரும் மக்கள் திரளின் வெற்றி ஆகும். ஆனால், மூன்றாம் வகைப்பிரிவினரின் இந்த வெற்றி அப்பிரிவினரின் ஒரு சிறு பகுதிக்கு மட்டுமே உரிய வெற்றியாக, அப்பிரிவினருள் சமூக ரீதியில் தனிச்சலுகை பெற்ற ஒரு பகுதியினர், அதாவது சொத்துடைமை படைத்த முதலாளித்துவ வர்க்கத்தினர், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட வெற்றியாக விரைவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

… சான்-சிமோனைப் பொறுத்தவரை, …  சலுகை பெற்ற வர்க்கங்களுக்கும் இடையேயான பகைமை “தொழிலாளர்களுக்கும்” “சோம்பேறிகளுக்கும்” இடையேயான பகைமையின் வடிவமாகப் பட்டது. [அவருடைய பார்வையில்] சோம்பேறிகள் என்போர் சலுகை பெற்ற பழைய வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, உற்பத்தி அல்லது வினியோகத்தில் எந்தப் பங்கும் ஆற்றாமல் தங்களின் வருமானத்தில் வாழ்ந்தவர்கள் அனைவருமேதாம். “தொழிலாளர்கள்” என்போர் கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, ஆலையதிபர்கள், வணிகர்கள், வங்கி உடைமையாளர்கள் ஆகியோரும்தாம்.

… சான்-சிமோன் ஏற்கெனவே தன்னுடைய ஜெனீவாக் கடிதங்களில், “அனைத்து மனிதர்களும் வேலை செய்ய வேண்டும்” என்னும் கருத்தை முன்வைக்கிறார். அதே கடிதங்களில், பயங்கர ஆட்சி உடைமையற்ற சாதாரண மக்களின் ஆட்சியே என்பதையும் அவர் கண்டு கொள்கிறார். “ஃபிரான்சு நாட்டில் உங்களுடைய தோழர்கள் ஆட்சி புரிந்தபோது அங்கே என்ன நிகழ்ந்தது, பாருங்கள்;  அவர்கள் பஞ்சத்தை உண்டாக்கினர்” என்று மக்களைப் பார்த்துக் கூறுகிறார். ஆனால், ஃபிரெஞ்சுப் புரட்சியை ஒரு வர்க்கப் போர் எனவும், அதுவும் பிரபுக்குலத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே நடைபெற்ற ஒன்றல்ல, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் உடைமையற்றோருக்கும் இடையே நடைபெற்ற ஒன்று எனவும் அடையாளம் காண்பது, அதுவும் 1802-ஆம் ஆண்டில் காண்பது, மிகவும் பொருட்செறிவுள்ள ஒரு கண்டுபிடிப்பாகும். 1816-இல், அரசியல் என்பது உற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும் என அறிவிக்கிறார். அரசியலானது பொருளாதாரத்தால் முழு அளவுக்கு உட்கவரப்பட்டுவிடும் என்று முன்னறிந்து கூறுகிறார். பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களின் அடித்தளம் ஆகும் என்கின்ற அறிவு இங்கே கரு வடிவில்தான் காணப்படுகிறது. …

சான்-சிமோனிடம் ஒரு விரிவான பரந்த பார்வையைக் காண்கிறோம்.

… அதேவேளையில், ஃபூரியேயிடம் தற்போது நிலவும் சமுதாய நிலைமைகளைப் பற்றிய ஒரு விமர்சனத்தைக் காண்கிறோம். இந்த விமர்சனம் அசலான ஃபிரெஞ்சுப் பாணியில் அமைந்தது, நகைச்சுவை வாய்ந்தது. ஆனால், அதன் காரணமாய், எந்த வகையிலும் ஆழம் குறைந்துவிடாதது. … முதலாளித்துவ உலகின் பொருளாயத, ஒழுக்கநெறி சார்ந்த அவலங்களைச் சிறிதும் இரக்கமின்றித் தோலுரித்துக் காட்டுகிறார். …

ஃபூரியே ஒரு விமர்சகர் மட்டுமன்று. அமைதி குலையாத சாந்தமான அவரின் இயல்பு, அவரை ஓர் அங்கத* எழுத்தாளராகவும், நிச்சயமாய் எந்தக் காலத்துக்கும் தலைசிறந்த அங்கத எழுத்தாளர்களில் ஒருவராகவும் அவரை ஆக்கிவிடுகிறது. புரட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தழைத்தோங்கிய ஊக வணிக மோசடிகளையும், அக்காலகட்டத்தில் ஃபிரெஞ்சு வணிகத்தில் பரவலாக நிலவிய, அதன் பண்பியல்பான, கடைக்கார மனோபாவத்தையும், அவர் சம வலிவோடும் வனப்போடும் சித்தரிக்கின்றார். பாலினங்களுக்கு இடையேயான உறவுகளின் முதலாளித்துவ வடிவத்தையும், முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்களின் நிலையையும் பற்றிய அவருடைய விமர்சனம் இன்னும்  கைதேர்ந்த ஒன்றாகும். எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்திலும் பெண் விடுதலையின் தரமே சமுதாய விடுதலையின் தரத்தை அளவிடும் இயல்பான அளவுகோலாகும் என்று முதன்முதலில் அறிவித்தவர் ஃபூரியே ஆவார்.

*புகழ்வதுபோல் இகழ்வது அங்கதம் எனப்படும்.

… இதுநாள்வரையுள்ள வரலாற்றின் போக்கினை, காட்டுமிராண்டி நிலை, நாகரிகமற்ற நிலை, தந்தைவழிச் சமூகம், நாகரிக நிலை என நான்கு பரிணாம வளர்ச்சிக் கட்டங்களாகப் பிரிக்கிறார். நாகரிக நிலை என்கிற கடைசிக் கட்டம் இன்றைய குடிமைச் சமுதாயத்தை அல்லது முதலாளித்துவ சமுதாயத்தை, அதாவது, 16-ஆம் நூற்றாண்டில் உருவான சமுதாய அமைப்பைக் குறிக்கிறது. … நாகரிகம், “ஒரு நச்சு வட்டத்தில் சுற்றி வருகிறது”; தொடர்ந்து முரண்பாடுகளை மறு உற்பத்தி செய்து அவற்றைத் தீர்த்துவைக்கும் திறனின்றி, முரண்பாடுகளிலேயே இயங்குகிறது; எனவே, அது சாதிக்க விரும்புவதற்கு அல்லது சாதிக்க விரும்புவதாகப் பாசாங்கு செய்வதற்கு நேர் எதிரான நிலைமைக்கே எப்போதும் வந்தடைகிறது. எடுத்துக்காட்டாக, “நாகரிகக் கட்டத்தில் மீமிகை வளத்திலிருந்தே வறுமை பிறக்கிறது” என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டுகிறார்.

நாம் பார்த்தவாறு, ஃபூரியே அவர்காலத்தவரான ஹெகலைப் போலவே அதே அறிவார்ந்த வழியில் இயக்கவியல் வழிமுறையைப் பயன்படுத்தும் பாங்கினைக் காண்கிறோம். … அதேபோல ஃபூரியே மனிதகுலத்தின் இறுதி அழிவெனும் கருத்தை வரலாற்று விஞ்ஞானத்தில் புகுத்தினார்.

3

ஃபிரான்சில் புரட்சிச் சூறாவளி நாடெங்கும் சுழன்றடித்தபோது, இங்கிலாந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அதன் காரணமாக, பேராற்றலில் எந்த வகையிலும் குறைந்துவிடாத, ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீராவியும், கருவிகளைத் தயாரிக்கும் புதிய எந்திர சாதனங்களும் பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றிக் கொண்டிருந்தன. அதன்மூலம் முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தையே அடியோடு புரட்சிகரமாக்கி வந்தன. …

இந்தச் சூழ்நிலையில் 29 வயதான ஓர் ஆலையதிபர் சீர்திருத்தவாதியாக முன்னணிக்கு வந்தார். ஏறத்தாழ குழந்தையைப் போன்ற எளிய உன்னதப் பண்புகள் கொண்ட  ஒரு மனிதர். அதேவேளையில், மனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர். [அவர்தான் ராபர்ட் ஓவன்]. ராபர்ட் ஓவன் பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்களின் போதனையை ஏற்றுக் கொண்டவர். … ஏற்கெனவே மான்செஸ்டர் ஆலை ஒன்றில் ஐந்நூறுக்கு மேற்பட்டோரின் மேலாளராய் இருந்தபோது, அவருடைய கொள்கையை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளார். [அதன்பின்] 1800-லிருந்து 1829 வரையில், ஸ்காட்லாந்தில் நியூ லானார்க் என்னும் நகரில் அமைந்த மாபெரும் பஞ்சாலையின் மேலாண்மைக் கூட்டாளியாய் இருந்துகொண்டு, அதே வழிமுறைகளில், ஆனால் மேலும் அதிக சுதந்திரத்துடன் அப்பஞ்சாலையை வழிநடத்தி வெற்றி கண்டார். அவ்வெற்றி ஐரோப்பிய அளவில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. தொடக்கத்தில், மிகவும்  மாறுபட்ட தன்மை கொண்ட, பெரும்பகுதியும் நம்பிக்கையற்றுப் போன மனிதர்களைக் கொண்ட ஒரு மக்கள் தொகுதியை, படிப்படியாக 2,500 பேராக வளர்ச்சி பெற்ற ஒரு மக்கள் தொகுதியை, ஓவன் ஒரு முன்மாதிரியான குடியிருப்பாக மாற்றிக் காட்டினார்.

அந்தக் குடியிருப்பு, குடிப்பழக்கம், போலீஸ், நீதிபதிகள், வழக்குகள், ஏழ்மையர் சட்டங்கள், அறக்கட்டளை இவைபற்றி அறிந்ததில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நிலைமைகளில் மக்களை வைத்திருப்பதன் மூலமும், இன்னும் முக்கியமாக வளர்ந்துவரும் தலைமுறையைக் கவனமாக வளர்த்து ஆளாக்குவதன் மூலமும் ஓவன் இதனைச் சாதித்தார். அவர்தான் குழந்தைப் பள்ளிகளைத் தோற்றுவித்த முன்னோடி. … ஓவனின் போட்டியாளர்கள் தங்கள் தொழிலாளர்களிடம் ஒரு நாளைக்கு 13, 14 மணிநேரம் வேலை வாங்கியபோது, நியூ லானார்க்கில் வேலைநாள் பத்தரை மணிநேரம் கொண்டதாகவே இருந்தது. ஒருமுறை பருத்திப் பற்றாக்குறையால் நான்கு மாத காலம் பஞ்சாலையில் வேலை நிறுத்தப்பட்டபோது, ஓவனின் தொழிலாளர்கள் எல்லாக் காலத்துக்கும் முழுச் சம்பளம் பெற்றனர். இவ்வளவும் இருந்தபோதும், ஆலையின் வணிக மதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாகப் பெருகியது. இறுதிவரை ஆலையின் உடைமையாளர்களுக்கு மிகுந்த லாபத்தை அளித்து வந்தது.

இத்தனைக்குப் பிறகும் ஓவன் மனநிறைவு அடையவில்லை. தன்னுடைய தொழிலாளர்களுக்கு அவர் பெற்றுத் தந்த வாழ்க்கை, அவர் பார்வையில், மனிதர்களுக்குத் தகுதியான வாழ்விலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகவே பட்டது. “இம்மக்கள் என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்” [என்று எழுதினார்]. …

1823-இல் ஓவன் அயர்லாந்தில் கம்யூனிசக் குடியிருப்புகள் மூலம், [மக்களின்] இன்னல் களைவதற்கான திட்டத்தைப் பரிந்துரைத்தார். இந்தக் குடியிருப்புகளை அமைப்பதற்கான செலவு, [பராமரிப்புக்கான] ஆண்டுச் செலவினங்கள், அனேகமாக [அதிலிருந்து பெறப்படும்] வருமானம் ஆகியவை அடங்கிய முழுமையான திட்ட மதிப்பீடுகளை வகுத்திட்டார். …

கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது. முக்கியமாகச் சமூகச் சீர்திருத்தத்துக்கான பாதையைத் தடுக்கும் மூன்று பெரும் தடைகள் அவருக்குத் தென்பட்டன: தனியார் சொத்துடைமை, மதம், திருமணத்தின் தற்போதைய வடிவம். இவற்றின்மீது தாக்குதல் தொடுத்தால் தாம் எவற்றையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என ஓவன் அறிந்து வைத்திருந்தார். சட்டப் பாதுகாப்பின்மை, அதிகாரபூர்வ சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதல், தம்முடைய முழுமையான சமூக அந்தஸ்தையே இழத்தல் ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், விளைவுகள் பற்றிய அச்சமின்றி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்து இவற்றுள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. [இவ்வாறுதான் நடக்குமென] அவர் முன்னறிந்தபடியே நிகழ்ந்தது. பத்திரிகைகளில் அவருக்கு எதிரான மௌனச் சதியுடன் கூடவே, அதிகாரபூர்வச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தம் செல்வம் அனைத்தையும் பலியிட்டு அமெரிக்காவில் அவர் நடத்திய வெற்றிபெறாத கம்யூனிசப் பரிசோதனைகளால் தம்முடைய செல்வத்தையெல்லாம் இழந்து நொடித்துப் போனார். நேரடியாக [இங்கிலாந்துத்] தொழிலாளி வர்க்கத்திடம் வந்து சேர்ந்தார்.

(அவர்) இங்கிலாந்தின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் ஒரே மாபெரும் தொழிற்சங்கக் கூட்டமைப்பாய் இணைந்து நடத்திய முதலாவது காங்கிரசின் தலைவராய் இருந்தார்38. சமுதாயத்தின் முழுமையான கம்யூனிசவழி அமைப்புமுறைக்குரிய இடைக்கால நடவடிக்கைகளாக, ஒருபுறம் சில்லறை வணிகத்துக்கும் உற்பத்திக்குமாகக் கூட்டுறவுக் கழகங்களை ஓவன் அறிமுகப்படுத்தினார். அக்காலகட்டம் முதலாகக் குறைந்தது அவை, வியாபாரிகளும் ஆலையதிபர்களும் சமூக ரீதியாகச் சிறிதும் தேவையற்றவர்கள் என்பதற்கான நடைமுறை நிரூபணத்தை வழங்கின. …

கற்பனாவாதிகளின் சிந்தனை முறை 19-ஆம் நூற்றாண்டின் சோசலிசக் கருத்துக்களின் மீது நீண்ட காலத்துக்கு ஆளுமை செலுத்தி வந்தது. அவற்றுள் சிலவற்றின் மீது இன்னமும் ஆளுமை செலுத்தி வருகிறது.

… உண்மையில் பார்க்கப் போனால், இத்தகைய ஒரு சோசலிசம்தான் ஃபிரான்சிலும் இங்கிலாந்திலும் மிகப் பெரும்பாலான சோசலிஸ்டுத் தொழிலாளர்களின் உள்ளங்களில் இன்றைய நாள்வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, இது, மிகப் பன்முகக் கருத்துச் சாயல்களுக்கும் இடம்தரும் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டாகும். சோசலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க, முதலில் அதைக் [கற்பனை அல்லாத] ஒரு மெய்யான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது.

பகுதி 1 : கற்பனாவாத சோசலிசம்

குரல்: உ.வாசுகி


Leave a comment