மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சமூக ஒடுக்குமுறையும் இடது ஜனநாயக திட்டமும்


குரல்: அருந்தமிழ் யாழினி

உ. வாசுகி

இந்தியச் சூழலில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை இலக்காக வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு உகந்தவகையில் மக்கள் ஜனநாயக அணியை உருவாக்க வேண்டும் என்பது கட்சித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. வர்க்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டிய அந்தப் போராட்ட  அணியின் முன் முயற்சியாக, வர்க்க சேர்மானத்தில்  மாற்றத்தை ஏற்படுத்திட இடது ஜனநாயக அணி கட்டமைக்கப்பட வேண்டும் என்பது 1978 முதல் அகில இந்திய மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டு வந்த  கடமையாகும். இடைப்பட்ட காலத்தில் இடது ஜனநாயக அணி கட்டப்படுவதற்கான முக்கியத்துவம் பின்னடைவை சந்தித்தது. 20வது மாநாட்டில் அந்த பலவீனம் பரிசீலிக்கப்பட்டு, இடது ஜனநாயக அணி கட்டப்படுவது  அதி முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரிமை கடமையாக மீட்டெடுக்கப்பட்டது.

இந்திய மக்களின்  முன், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் முற்றிலும்  வேறுபட்ட மாற்றாக இடது ஜனநாயக கொள்கைகளும் திட்டங்களும் முன்வைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மக்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாக, அரசியல் பொருளாதார சித்தாந்த பண்பாட்டுத் தளங்களில் ஒரு மாற்றுப்பாதை உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அத்தகைய திட்டமும் வகுக்கப்பட்டது. இடதுசாரி கட்சிகள், அமைப்புகள், குழுக்கள், தனிநபர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை, சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதிகளைத் திரட்டி, வர்க்கங்களை உள்ளடக்கிய போராட்ட அணியாக இது வடிவமைக்கப்பட வேண்டும் என அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் வழிகாட்டியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஒன்றிய பாஜக அரசு அதன் சித்தாந்த அடிப்படையில் பொருளாதார சுரண்டலை தீவிரப்படுத்துவது மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறையை ஊக்குவிக்கவும் நியாயப்படுத்தவும் செய்கிறது. அடையாள அரசியல் இதற்கான தீர்வாக இருக்க முடியாது. சமூக ஒடுக்குமுறையின்  அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு வேர்களை அடையாளம் கண்டு, அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்கான கொள்கைகள்தான் மாற்றுக் கொள்கைகள் ஆக இருக்க முடியும். வேறுபட்ட தலைவர்களும் கட்சிகளும் மீட்பராக, ஆளும் கட்சியின் மாற்றாகக் காட்சியளிக்க முயற்சிப்பதை, இடது ஜனநாயக மாற்றுக் கொள்கைகள், அவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் போராட்டங்கள் மூலமாகவே அம்பலப்படுத்த முடியும்.

தற்போதைய நிலைமை:

சாதிய, பாலின ஒடுக்குமுறைகள் கடந்த காலத்தை விட அதிகரித்து வருகின்றன. சாதிப் பெருமிதமும், ஆண் என்கிற பெருமிதமும் வெளிப்படையாகவே பிரதிபலிக்கப் படுகின்றன; பகிரப்படுகின்றன. இவை உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகவும் உள்ளன.

வருடத்துக்கு சராசரியாக 30,000 பெண்கள் இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதில் பெரும்பான்மையாக  ஏழை குடும்பங்கள், பட்டியலின, பழங்குடியின பெண்கள் அடங்குவர். ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆளும் கட்சியான பாஜகவின் தலைவர்களும், அமைச்சர்களும், முன்னணி ஊழியர்களும் இத்தகைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர். உடை உள்ளிட்ட பல்வேறு கவைக்குதவாத வாதங்களை முன்வைத்து இத்தகைய குற்றங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. மாறுபட்ட கருத்துக்கள், பாஜகவின் மீதான விமர்சனங்கள்  பதிவு செய்யப்பட்டால், அப்பெண்ணுக்கோ அல்லது ஆணின் பெண் உறவினர்களுக்கோ  பகிரங்கமாக பாலியல் வல்லுறவு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இஸ்லாமியப் பெண்களை கற்பனையாக ஏலம் விடக்கூடிய செயலிகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டன. வலுவான வணிகமயமாக்கலை நோக்கிச் செல்லும் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் பெண்கல்வி பெருமளவில் பாதிக்கப்படும். ஊரக வேலை உறுதி சட்டத்திற்கு  நிதி ஒதுக்கீடு தொடர்ந்து போதுமானதாக இல்லாத சூழல், அதை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான ஊரகப் பெண்களை பாதிக்கிறது. உலக வங்கி நிதி/கடன் உதவியோடு கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏழைக் குடும்பங்களின் குடியிருப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. இது பெண்களின் பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது. குடும்பப் பணிக்கான பொறுப்புகள் பெண்ணின் தலை மீது சுமத்தப்பட்டுள்ள சமூகச் சூழலில் கடும் விலை உயர்வு, பொது சேவைகளில் இருந்து அரசு விலகல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் பெண்களுக்கே கூடுதலான பின் விளைவுகளை உருவாக்குகின்றன. உழைப்பு படையில் 2013இல் 36 சதவீதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு, 2018இல்  23 ஆகக் குறைந்து, 2019 இல் 18 ஆக மாறி, 2021இல் 9.24 சதவீதமாக படுபாதாளத்தில் சரிந்திருக்கிறது. பசிக் குறியீட்டில் மிக மோசமான நிலைமையில் இந்தியா உள்ளது. பெருந்தொற்று  காலத்தில்  அதிகரித்த உலகளாவிய வறுமையில் 60 சதவிகிதம்  இந்தியாவில் நிலவியது என்னும்போது, சமூகத்திலும், குடும்பத்திலும் இரண்டாம் தரக் குடிமக்களாக பாவிக்கப்படக்கூடிய பெண்களே அதிகம் சேதாரம் அடைகின்றனர். இதில் பட்டியலின, பழங்குடியின பெண்கள் பல மடங்கு அதிகம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

பழங்குடியின மக்களின் நிலங்கள் மற்றும் வசிப்பிடங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க ஏதுவாக  விதிமுறைகள், சட்டங்கள் திருத்தப்படுகின்றன. வன உரிமை சட்டத்தின் அடிப்படையான சாராம்சம் நீர்த்து போகிறது. பட்டியலின மக்களின் மீதான வன்கொடுமைகள் எண்ணிக்கையில் அதிகரிப்பது மட்டுமல்ல, மிகக் கொடூரமான முறையில் நடத்தப்படுகின்றன. இவற்றை செய்யும் சாதி ஆதிக்க சக்திகளின் பகுதியாகவும், ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதோடு குற்றவாளிகளின் பாதுகாவலர்களாகவும்  பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் செயல்படுகின்றன. பல்வேறு  பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்போது இட ஒதுக்கீடு அமலுக்கு வராது என்ற நிலை, பட்டியலின மக்களின், பெண்களின் வேலைவாய்ப்பைப் பெரிதும் பாதிக்கும் பிரதான பிரச்சனையாக முன்னுக்கு வருகிறது.

இந்தியாவின் பிரத்தியேக சூழலில் ஏற்கனவே நிலவி வந்த  சாதியக் கட்டமைப்பின் மீது தான் நவீன வர்க்கங்களான  முதலாளி, தொழிலாளி வர்க்கங்கள் உருவாயின. நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப்படாத சூழலில், முதலாளி வர்க்கம் நவீன வர்க்கமாக இருந்தாலும், அதற்கு முந்தைய காலகட்டத்தின் சாதிய, ஆணாதிக்க ஒடுக்குமுறை கருத்தியலைத் தன் உழைப்புச் சுரண்டலுக்கும் , லாபவெறிக்கும்  சாதகமாக பயன்படுத்தி வருவதையே பார்க்கிறோம். பல்வேறு அரசியல் கட்சிகள் சாதி ஒழிப்புக்கோ, சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கோ உண்மையாகப் போராடாமல், சாதிகளை வாக்கு வங்கிகளாகக் கருதியே செயல்படுகின்றன. சாதியின் பெயரால் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, அந்த அடையாளத்தை அரசியல் பேரத்துக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. நிலம், கூலிக்காகவும், பெருநில உடைமைக்கு எதிராகவும் நடத்த வேண்டிய போராட்டங்களைத் தம் நிகழ்ச்சிநிரலில் கூட வைப்பதில்லை. நில விநியோகம்  மற்றும் ஊரக வேலை  திட்டம் அமல்படுத்தல் சம்பந்தமாக  இதர கட்சிகள்  களத்துக்கு வருவதில்லை என்பது  இதற்கான உதாரணம். மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் தான் பிரச்சனைக்கு பின்னாலுள்ள சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் குறிவைக்கின்றன. நிலம், கூலி, பெரு நிலவுடைமை முறைமைக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றன. தீவிர நிலச் சீர்திருத்தத்தை முன்வைக்கின்றன. இந்தியாவிலேயே நில விநியோகம் அதிகமாக நடைபெற்ற மாநிலங்களில் மேற்கு வங்கம் கேரளா, திரிபுரா முன்னிலையில் உள்ளன. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை கட்டப்பட வேண்டுமானால், சாதிய முறைமைக்கும், பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கும்  எதிராக ஒன்றுபடுவது முன் நிபந்தனையாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக வரையறுக்கிறது.

நடவடிக்கைகள்:

இச்சூழலில் இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட வும், போராட்டங்களில் இறக்கவும் சில நடவடிக்கைகள் மார்க்சிஸ்ட் கட்சியால் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இடதுசாரி வெகுஜன அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, JEJAA என்கிற பெயரில் செயல்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்க அமைப்புகள், விவசாய விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் பொது கோரிக்கைகள் மீதான கூட்டுப் போராட்டம் இக்காலகட்டத்தில் வலுப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு நீண்ட நெடிய வெற்றிகரமான போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. அதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பங்கு பாத்திரம் பிரதானமானது. பெண்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் எதிராக செயல்படும் காப் பஞ்சாயத்துகள், இக்காலகட்டத்தில் மேற்கூறிய பகுதியினரும் பங்கேற்கும் விதத்தில் இயங்கின.

பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய பட்டியலின,  பழங்குடியின மக்களுக்கான பரந்த மேடைகள், சிறுபான்மை நல குழுக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகின்றன. சாதிய, பாலின ஒடுக்குமுறை பிரச்சினைகளில் கட்சியின் தோழர்கள் களத்தில் இறங்கி தலையீடு செய்கின்றனர். அதிகரித்து வரும் சாதி ஆணவக்  குற்றங்கள் மற்றும் கொலைகளுக்கு எதிராக உறுதியான போராட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகின்றன. கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களும், பட்டியல் இன மக்களும்  உள்நுழைவதை உறுதிப்படுத்துவதற்கான இயக்கங்களும் தொடர்ந்து நடக்கின்றன. சபரிமலை பிரச்சினையை உதாரணமாகக் கூற முடியும். சமூகநீதி பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து அடர்த்தியான ஒரு மனிதச்சங்கிலி லட்சக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் கேரளாவில் நடைபெற்றது. நிர்பயா பிரச்சனைக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதியரசர் வர்மா கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் மதிப்பு மிகுந்தவையாகும். தமிழக அரசால் வெளியிடப்பட்ட பெண்களுக்கான வரைவு கொள்கை குறித்து அரசியல் கட்சி என்கிற முறையில் அனேகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தன்னுடைய கருத்துக்களை விரிவான குறிப்பாக அனுப்பி இருக்கிறது.

மாநில அரசின் குறுகிய அதிகார வரம்புக்கு உட்பட்டு, இடது ஜனநாயக மாற்று கொள்கைகளை ஓரளவு அமல்படுத்திய செயல்பாட்டின் மூலமாகவே கேரளாவில் இடது முன்னணி அரசு பெரும்பான்மையான மக்கள் ஆதரவோடு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது.

 பழங்குடியின மக்களின் கலாச்சாரம், மொழி, நிலம், வாழ்வாதாரம் உள்ளிட்ட உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் அடர்த்தியாக வசிக்கக்கூடிய தொடர்பகுதிகளுக்கு பிரதேச சுயாட்சி உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே சுட்டிக்காட்டப்பட்ட அம்சம். அதன் அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில் கோர்க்கா இன மக்களுக்கும், திரிபுராவின் பழங்குடியின மக்களுக்கும் மாவட்ட சுயாட்சி கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. பழங்குடியின மக்களின் குடியிருப்பு, இனச்சான்றிதழ், கல்வி, வேலைவாய்ப்புக்கு வலுவான போராட்டங்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்படுகின்றன

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு ஒன்றிய பாஜக அரசு காட்டுகிற தயக்கம் அதன் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே  முன் வருகிறது என சுட்டிக் காட்டப்பட்டது. கணக்கெடுப்பு என்று சொல்லும்போது எண்ணிக்கை மட்டுமல்ல; கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் அம்சங்களில் இந்த சாதிகள் எந்த நிலைமையில் உள்ளன என்பதும் புரிந்து கொள்ளப்படும். இந்துக்கள் என்கிற ஒற்றை வார்த்தைக்குள் சாதிய ஒடுக்குமுறைகளையும் வேறுபாடுகளையும் மூடி மறைக்கிற ஆர் எஸ் எஸ்ஸின் முயற்சிகள் இதில் அம்பலமாகும்.

இடது ஜனநாயக திட்டம் சமூக நீதி குறித்த கீழ்கண்ட அம்சங்களை மாற்றுக் கொள்கையாக முன்வைக்கிறது:

  • சாதிய முறைமையையும், சாதிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் முற்றாக ஒழிப்பது;
  • பட்டியலின, பழங்குடியின மக்களின் அடிப்படையான மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பது;
  • பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான துணை திட்டத்தை ஒரு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்குவது;  இதனை கண்காணிக்க உயர்மட்ட கமிட்டி ஒன்றை நிறுவுவது;
  • பழங்குடியின மக்களின் நில  உரிமை, வாழ்வுரிமை, கலாச்சார உரிமைகளுக்கான அரசியல் சாசனப் பிரிவுகள் மற்றும் சட்டப் பிரிவுகளைப் பாதுகாப்பது;
  • தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவது;
  • சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவது; பிற்பட்ட சாதிகள் குறித்தும் கணக்கெடுப்பது;
  • நிலுவையில் இருக்கும் காலி இடங்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்புவது
  • கையால் மலம் அள்ளும் நடைமுறையைக் கறாராக தடுத்து நிறுத்துவது;
  • தீண்டாமைக்கு எதிராகக் கடும் தண்டனைகளை அமல்படுத்துவது;
  • வன உரிமை சட்டத்தைக் கறாராக  நடைமுறையாக்குவது;
  • சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்குவது;
  • பெண்கள் குழந்தைகள் மீதான கொடூரமான வன்முறையைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது; குற்றவாளிகள் தப்பி விடாமல் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்வது;
  • சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வருவது.

மாநில, அகில இந்திய மாநாடுகள் இடது ஜனநாயக அணி மற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கும். ஆனால், இவை மாநாட்டு பரிசீலனைக்கான அம்சங்கள் மட்டுமல்ல; மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைகளும், கமிட்டிகளும், உறுப்பினர்களும் தம் அன்றாட பணிகளை, தமிழகத்தின் இடது ஜனநாயக திட்டத்தைச் சுற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இடதுசாரி வெகுஜன அமைப்புகளை இவற்றிலுள்ள கோரிக்கைகளின்பால் அணிதிரட்டி, கூட்டுப் போராட்டம் நடத்திட வேண்டும். இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வோர் அம்சத்தையும் ஆதரிக்கக் கூடிய பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் கண்டிப்பாக உள்ளன. அவற்றையும் உள்ளடக்கிய கூட்டு மேடைகள் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும். ஒரே ஒரு கோரிக்கையில் அல்லது அக்கோரிக்கையின் ஒரே ஒரு புள்ளியில் இணைய முன் வருபவர்களையும் அதற்குத் தகுந்தவாறு பயன்படுத்திட வேண்டும்.

ஒன்றிய அரசின் சாதிய மதவெறி கொள்கைகள், மாநில உரிமைகள் பறிப்பு, பொருளாதார சுரண்டல் போன்றவற்றை எதிர்த்த போராட்டங்களில் மாநில முதலாளித்துவ கட்சிகளை இணைத்துக் கொள்ள வேண்டும். பெரு முதலாளி வர்க்க பிரதிநிதிகளான பாஜக, காங்கிரசையும், மாநில முதலாளித்துவ கட்சிகளையும் சமப்படுத்தி பார்க்கக்கூடாது என்று கட்சி ஆவணங்கள் சுட்டிக் காட்டுகிற அதே நேரத்தில், நமது வர்க்கங்கள் மற்றும் சமூக ஒடுக்குமுறையில் பாதிக்கப்படும் பகுதியினருக்கான  ஆதரவு நிலையில் சமரசத்திற்கு இடமில்லை எனவும், அத்தகைய கொள்கைகளை நடவடிக்கைகளை ஆட்சியிலிருக்கும் மாநில முதலாளித்துவ கட்சி எடுக்கும்போது மக்களைத் திரட்டி போராட்டங்களில் இறக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.  இதற்கு கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தலையாய கடமை. எனவே கட்சித் திட்டம் சார்ந்தும், இடது ஜனநாயக திட்டம் சார்ந்தும் பணிகளை ஒருங்கிணைத்து முன்னேறுவது என்பது அவசர அவசியமானதாகும்.



Leave a comment