மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


2022-23 ஒன்றிய ‘பட்ஜெட்’ : ஒரு மதிப்பீடு !


  • பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

ஒன்றிய பட்ஜட்டை  மதிப்பீடு செய்வது  எப்படி?

முதலில் பட்ஜட் வேறு, நிதி அமைச்சரின் பட்ஜட் உரை வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமைச்சரின் உரையில் வார்த்தை ஜாலங்கள் இருக்கும். அரசியல் பிரச்சாரம் இருக்கும். தான் முன்மொழியும் பட்ஜட் வரும் ஐந்து ஆண்டுகளில், பத்து ஆண்டுகளில் ஏகப்பட்ட நன்மைகள் தரும் என்ற பொய்யுரை இருக்கும். இந்த ஆண்டு பட்ஜட் 25 ஆண்டுகளுக்கானது என்று நிதி அமைச்சரும், ஒரு நூற்றாண்டுக்கானது என்று இந்தியா பிரதமரும் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர். இந்த பிரச்சாரத்தையும் பசப்புவார்த்தைகளையும் புறக்கணித்து சரியான அறிவியல் நிலைபாட்டில் இருந்து நாம் ஒன்றிய பட்ஜட்டை பரிசீலனை செய்வோம்.

பொய்த்துப்போன எதிர்பார்ப்புகள்

2022 – 23 நிதி ஆண்டுக்கான ஒன்றிய  அரசின் வரவு செலவு அறிக்கை 2022 பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்டது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருந்ததாலும், விவசாயிகள் மத்தியில் தனது செல்வாக்கு பெரிதும் சரிந்துள்ள நிலையில் அதனை மீட்டெடுக்கவும், பல நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை உயர்த்தியும் தேசீய வேளாண் ஆணயம் பரிந்துரைத்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை தொடர்பான முன்னெடுப்பை அறிவித்தும் பட்ஜட் அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன. ஆனால் அப்படி பட்ஜட் அமையவில்லை. மாறாக, ஊரக தொழிலாளர்கள்  மற்றும் வேளாண் குடிமக்கள் மீதான கடும் தாக்குதலையே ஒன்றிய பட்ஜட் மேலும் முன்னெடுத்து சென்றுள்ளது. நகர்ப்புற உழைப்பாளி மக்களுக்கும் சிறு குறு தொழில் முனைவோருக்கும் பொதுவாக முறைசாரா துறைகளுக்கும் பட்ஜட் நட்புக்கரம் நீட்டவில்லை.   இரண்டாண்டுக்கும் மேலாக தொடரும் பெரும் தொற்று மற்றும் ஒன்றிய அரசு அதனை எதிர்கொள்வதில் பின்பற்றிய கொள்கைகள் பெரும் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துள்ள நிலை உள்ளது.

இத்தகைய சூழலில் அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களுக்கும் கடும் வறுமையில் வாடுவோருக்கும் நிவாரணம் அளிக்கும் பட்ஜட் தான் அவசர அவசிய தேவை. இதுவே கிராக்கியை உயர்த்தி பொருளாதார மீட்சிக்கு உதவியிருக்கும். ஆனால் ஒன்றிய பட்ஜட் இதற்கு நேர விரோதமாக அரசின் ஒதுக்கீடுகளை உண்மை அளவில் உயர்த்தவில்லை. தேச உற்பத்தி மதிப்பின் (ஜிடிபி) சதவிகிதமாக கணக்கிட்டால் நடப்பு ஆண்டில் இது 16.3 %, ஆனால் வரும் ஆண்டுக்கான  பட்ஜட் இதனை 15.2% ஆக குறைத்துள்ளது.

உழைப்பாளிகள் மீது வரிச்சுமை, உணவு, உர மானியங்கள்  வெட்டு

ஒன்றிய அரசு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் செலவுகளை மேற்கொள்ளவில்லை. மாறாக மக்களுக்கு நிவாரணம் மறுத்து, செல்வந்தர்களுக்கும் பெரு முதலாளிகளுக்கும் வரிச் சலுகைகள் தரும் பாதையில்தான் இந்த பட்ஜட் பயணிக்கிறது. அரசின் நடப்பு ஆண்டிற்கான மொத்த செலவின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 37,70,000 கோடி . வரும் ஆண்டுக்கு  பட்ஜட் முன்வைக்கும் மொத்த செலவு மதிப்பீடு ரூ 39,44,909கோடி . விலைவாசிஉயர்வை கணக்கில் கொண்டால் இது சரிவு என்பது தெளிவு. ஒன்றிய அரசின் வரி வருமானத்தில் பாதிக்கும் சறறு அதிகமாக மக்கள் மீது சுமத்தப்படும் சுங்க வரி, கலால் வரி மற்றும் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கிறது. கம்பனிகள்  மற்றும்செல்வந்தர்கள்  இதைவிடக் குறைவாகவே வரி செலுத்துகின்றனர். மொத்தமாக மாநிலங்கள் மற்றும் ஒன்றியம் இரண்டும் சேர்த்து வசூலிக்கும் வரி தொகையில் கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருமானங்களின் மூலமாக கம்பனிகள் மற்றும் செல்வந்தர்கள் தருவது மூன்றில் ஒரு பங்கு தான். மக்களிடம் இருந்து மறைமுக வரிகள் மூலம் வருவது மூன்றில் இரண்டு பங்கு.மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருமானம் 2014-15 இல் ரூ 12.4 லட்சம் கோடியில் இருந்து 2020-21 இல் ரூ 24.2 லட்சம் கோடியாக, கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இவ்வளவுக்கும் 2020-21 ஆண்டில் பெரும் தொற்று காரணமாக உற்பத்தி சரிந்திருந்தது. மாமூல் நிலமை இருந்திருந்தால் ஒன்றிய அரசின் வரி வருமானம் மேலும் கூடி இருக்கும்.  நிலைமைகள்  இப்படி இருந்தும், ஒன்றிய பட்ஜட் மக்களுக்கான மானியங்களை வெட்டுவது, நலத்திட்ட செலவுகளை குறைப்பது என்றே செயல்பட்டுள்ளது. 2013-14 இல் ஒன்றிய அரசின் மொத்த மானியம் தேச உற்பத்தி மதிப்பில் 2.3 % ஆக இருந்தது. மோடி அரசு தொடர்ந்து மானியங்களை குறைத்ததால் தொடர்ந்து சரிந்து  2019-20 இல் 1.1% ஆகியது. இதே காலத்தில் பெரும்  கம்பனிகள் மற்றும்  செல்வந்தர்களுக்கு வரி சலுகைகள் அளித்ததால் இழப்பை ஈடுகட்ட அரசு அதிகம் கடன் வாங்கியது. இதனால் ஆண்டு தோறும் வட்டி செலவு அதிகரித்தது. 2014-15 இல் தேச உற்பத்தி மதிப்பில் 3.2% ஆக இருந்த வட்டிச்செலவு 2021-22 இல் 3.6% ஆக அதிகரித்தது. ஆக பட்ஜட் மூலமாக உழைப்பாளி மக்கள் மீது வரிச்சுமையை கூட்டி அந்த வரிப்பணத்தில் அரசுக்கு கடன் கொடுத்துள்ள பெரும் கம்பனிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் கூடுதல் வட்டி பணம் தரப்படுகிறது. இது ஒருவகை முதலாளித்துவ ரசவாதம்!

மேலும் சில விவரங்களை காண்போம். மக்களுக்கு மிகவும் முக்கியமான மூன்று மானிய வகைகள் உரம், உணவு மற்றும் பெட்ரோலியம் ஆகியவை சார்ந்தவை. நடப்பு ஆண்டில் இவை முறையே (கோடி ரூபாய்களில்)  140122, 286469,   6517என்று  உள்ளன. மூன்றும் 22 -23பட்ஜட்டில் 105222, 206831 மற்றும்5813கோடி ரூபாய்கள் என்று உள்ளன. ஏறத்தாழ ரூ 14,000 கோடி மானிய வெட்டு நிகழ்கிறது. 2020-21 இல் எல்பிஜி திட்டத்தில் ரூ 23,667 நேரடி பயன் மாற்றம் நிகழ்ந்தது. வரும் 22–23இல் ஒதுக்கீடு ரூ. 4,000 கோடிதான். ஏழை குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்பிற்கான ஒதுக்கீடு 20 -21 இல் ரூ 9,235 கோடி. 22-23இல் ரூ. 800 கோடி மட்டுமே.  

ஊரக வளர்ச்சி, வேளாண்மை

ஊரக வளர்ச்சிக்கு நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு ரூ 2,06,948கோடி. வரும் ஆண்டில் ரூ  2,06,293 கோடிதான்.  விலைவாசி உயர்வை கணக்கில்  கொண்டால் இது குறிப்பிடத்தக்க சரிவு. நடப்பு ஆண்டில்  வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த நடவடிக்கைகளுக்கான  ஒதுக்கீடு ரூ 1,47,764 கோடி. வரும் ஆண்டில் ரூ  1,51,521கோடி.  விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் இது சரிவு என்பது விளங்கும். நடப்பு ஆண்டில்  “ராஷ்ட்ரீய கிசான் விகாஸ் யோஜனா” (தேசீய வேளாண் வளர்ச்சி திட்டம்)விற்கு ரூ 10,407 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அரசு 5,860 கோடி தான் செலவழித்தது. வரும் ஆண்டுக்கான பட்ஜட் ஒதுக்கீடு ரூ 10,433 கோடி. இதுவும் செலவிடப்படுமா என்பது கேள்வியே. சிறு,குறு விவசாயிகளுக்கென்று உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் (ரேகா திட்டம்)

2020-21 ஆண்டில் ரேகா திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.1,11,170 கோடி  செலவழித்தது என பட்ஜட் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாஜக ஆட்சியில் இத்திட்டத்தையும் அதன் பின் உள்ள சட்டத்தையும் நீர்த்துப்போக செய்ய எல்லா முனைவுகளையும் அரசு மேற்கொண்டுவருகிறது. அடுத்த ஆண்டு 2021-22 இல் ரேகாவிற்கான ஒதுக்கீட்டை  பட்ஜட்டில் ரூ.73,000 கோடியாக குறைத்தது. பின்னர், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி இத்தொகை ரூ. 98,000 கோடியாகியாது என்றாலும், இதுவும் தேவையை வைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் குறைவு. மீண்டும் வரும் ஆண்டிற்கு ஒதுக்கீடு ரூ 73,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2020-21இல் அனைத்து ஊரக வேலை திட்டங்களுக்கும் சேர்த்து ரூ 1,93,000 கோடி செலவிடப்பட்டது. 2021-22 பட்ஜட்டில் ரூ 1,25,000 கோடியாக இது குறைக்கப்பட்டது. எனினும் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி இது ரூ 1,73,000 கோடியானது. ஆனால் 22-23 இல் ஒதுக்கீடு மீண்டும் ரூ. 1,25,000 கோடி  என்ற அளவில்தான் உள்ளது.ஊரக மற்றும் புலம் பெயர் தொழிலாளிகள் வாழ்வாதாரம் பற்றி பாஜக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது கண்கூடு.

ஒன்றிய அரசு மெல்ல மெல்ல ஊரக வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட முனைவதைக் காண முடிகிறது. தில்லியில் உள்ள அசோகா பல்கலையில் செய்யப்பட்டுள்ள ஆய்வில் 100 நாட்கள் வேலை கிடைப்பதே இல்லை. சராசரியாக 22 நாட்கள் மட்டுமே 2020-21 இல் கிடைத்ததாக அந்த ஆய்வு சொல்கிறது। அரசு 51 நாட்கள் எனறு  கணக்கு சொல்வதன் சூட்சுமம் என்னவெனில், திட்டத்தில் பதிவு செய்து ஒருநாளாவது வேலை செய்தவர்கள் மட்டுமே சராசரி கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள் என்பதாகும்.

விவசாயிகளை பழிவாங்க துடிக்கும் ஒன்றிய அரசு

வீரம் செறிந்த, வரலாற்று சிறப்பு மிக்க  போராட்டத்தை நடத்தி, 700க்கும் மேலான இன்னுயிர்களை ஈந்து,  அரசின் அடக்குமுறையை தகர்த்து, வேளாண் விரோத, மக்கள் விரோத சட்டங்களை முறியடித்த விவசாயிகளை பழிவாங்கும் தன்மையில் ஒன்றிய பட்ஜட்அமைந்துள்ளது.  அனைத்து பயிர்களுக்கும் தேசீய வேளாண் ஆணையம் பரிந்துரைத்துள்ள சூத்திரத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசுதரவேண்டும் என்பதும், முழுமையான கொள்முதல் செய்யப்படவேண்டும் என்பதும் விவசாயிகள் முன்வைத்த இரு முக்கிய கோரிக்கைகள். ஆனால் ஒன்றிய பட்ஜட் சென்ற ஆண்டைவிட குறைவான தொகையை கொள்முதலுக்கு ஒதுக்கியுள்ளது. கொள்முதலால் பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறையும். உர மானியம் 25 % வெட்டப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட ஒதுக்கீடும் குறைந்துள்ளது. பிரதம மந்திரி கிசான் திட்டப்பயன் கதியும் இதுவே. வேறு பல வேளாண்.ஒதுக்கீடுகளும் குறைந்துள்ளன.

மாநிலங்களின் மீது தொடரும் தாக்குதல்

இக்கட்டுரையில் ஒன்றியம்  – மாநிலங்கள்  அதிகாரப்பகிர்விலும் நிதிப் பங்கீட்டிலும் பாஜக ஆட்சியில் மாநிலங்களுக்கு  ஏற்பட்டுவரும் இழப்புகள் பற்றி விரிவாக  விவாதிக்க இயலாது. எனினும் ஒருசில அம்சங்களை சுருக்கமாக பார்க்கலாம்.2014 இல் ஆட்சிக்குவந்த பாஜக அரசு தொடர்ந்து வரிகொடுக்கும் திறன் அடிப்படையிலான  நேர்முக வரிவிகிதங்களை குறைத்து வருகிறது. 2016-17 பட்ஜெட்டில் சொத்து வரியை நிதி அமைச்சர் ஜெயிட்லி ரத்து செய்தார். அடுத்தடுத்த பட்ஜெட்டுகள் மூலம்கார்ப்பரேட் கம்பனிகள் மீதான வருமான வரியை பட்ஜெட்டுகள் குறைத்தன. இறுதியில் 2019 இல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் கம்பனிகள் மீதான வருமான வரியை 22% என்று தடாலடியாக குறைத்தார். இதனால் ஒன்றிய அரசுக்கு மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கும் வரி வருமான இழப்பு கணிசமாக ஏற்பட்டது. ஏனெனில் ஒன்றிய அரசின் மொத்த வரிவருமானம் நிதி ஆணைய பரிந்துரைகளின்படி ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. வருமான வரிகள் பற்றிய முடிவுகளை ஒன்றிய அரசு தன்னிச்சையாக எடுக்கிறது. மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பதில்லை. இதனால் மாநிலங்கள் வரி வருமானம் இழக்கின்றன.

வரிப்பகிர்வு மூலமும், வேறு வகைகளிலும் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு வளங்களை பகிர்கிறது.பொதுவாக, ஒன்றிய அரசுகள் இப்பகிர்வுகள் வாயிலாக தங்களது அதிகாரத்தை செலுத்த முனைகின்றன. பாஜக ஆட்சியில் இந்த முனைவு பெரிதும் அதிகரித்துள்ளது. அனைத்து அதிகாரங்களையும் மாநிலங்களிடமிருந்து பறித்து, மையப்படுத்துவது என்பது பாஜக அரசின் அணுகுமுறையாக இருந்துவருகிறது.

பாஜக ஆட்சியின் எட்டு ஆண்டுகளில் இரண்டு நடவடிக்கைகள் மாநில அரசுகளுக்கு மிகவும் விரோதமானவை. ஒன்று, நவம்பர் 2016 இல் மோடி அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இது முறைசாராத்துறையை பெரிதும் பலவீனப்படுத்தியதோடு, மாநில அரசுகளின் வரி வருமானத்தை சிதைத்தது. இரண்டாவது, 2017 ஜூலை 1இல்  அமலுக்கு வந்த ஜிஎஸ்டி சட்டம்.இதன்மூலம் சரக்குகள் மற்றும் சேவைகள் மீது வரிவிதிக்கும் உரிமை மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் இடம் தரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் வேறு பல அம்சங்களும் மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளன.இச்சட்டத்தில் ஐந்து ஆண்டுகாலம் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் வரிவருமான இழப்பை ஒன்றிய அரசு ஈடு செய்யும் என்ற வாக்குறுதி இடம் பெற்றிருந்தும், பெரும் தொற்றை காரணம் காட்டி, ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய தொகைகளை இன்னும் முழுமையாக தரவில்லை.

வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடனாக ஒன்றிய அரசு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐம்பது ஆண்டுகளுக்கான வட்டி இல்லாத கடன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக தெரியும். ஆனால் உண்மை என்னவெனில்,இக்கடனை முன்கூட்டியே அடைக்கும் உரிமை மாநிலங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதால் மாநிலங்களின் சுயேச்சையான நிதி திரட்டும் உரிமைகள் பாதிக்கப்படும் என்று தமிழக அரசின் நிதி அமைச்சரும் முன்னாள் ஒன்றிய நிதித்துறை செயலர் கார்க் அவர்களும் விளக்கியுள்ளனர். ஒன்றிய அரசின் மூத்த நிதித்துறை அதிகாரி ஒருவர் அரசியல் சாசனத்தின் ஷரத்து 293(3) படி, ஒன்றிய அரசுக்கு கடன் திருப்பித்தரவேண்டிய நிலையில் உள்ள மாநிலங்கள் ஒன்றிய அரசின் அனுமதியின்றி கடன் வாங்க இயலாது என்று தெளிவு படுத்தியுள்ளார்.

இவ்வாறு பல வழிகளில் மாநிலங்களின் வளம் திரட்டும் வழிகளுக்கும் வரவு-செலவு சார்ந்த முடிவு எடுக்கும் உரிமைகளுக்கும் பாஜக ஆட்சியில் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகவே, தேச உற்பத்தி மதிப்பின் விகிதமாக கணக்கிட்டால் மாநிலங்களுக்கு ஒன்றிய பட்ஜெட் மூலமாக கிடைக்கும் வளங்களின் மொத்த மதிப்பு குறைந்து வருகிறது.

தீவிர தனியார்மயம்

ஒன்றிய பட்ஜட் அதிதீவிர தாராளமய கொள்கைகளை பின்பற்றியே அமைந்துள்ளது என்பதற்கு இன்னொரு முக்கியமான சான்று, தனியார்மயம் பற்றிய அதன் முனைவுகள்.  ஒருகாலத்தில் தாராளமயவாதிகள் கூட தனியார்மய நடவடிக்கைகளை நியாயப்படுத்த பொதுத்துறையின் நட்டங்களை காரணமாக முன்வைத்து வந்தனர். மோடி ஆட்சியில் பொதுத்துறையை கிட்டத்தட்ட முழுமையாக தனியார் (பெருமுதலாளிகளுக்கு) என்னவிலை கிடைத்தாலும் கொடுத்துவிடுவது என்பது அரசின் கொள்கையாக ஆக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த விலைக்கு பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்கப்படுகின்றன. அவற்றிடம் உள்ள சொத்துக்கள் திட்டமிட்டு குறைவாக மதிப்பிடப்பட்டு விற்கப்படுகின்றன. இது அரசுக்கு நெருக்கமான பெருமுதலாளிகளுக்கு சாதகமான முனைவாக உள்ளது. வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசு பங்கு விற்பனை மதிப்பின் இலக்கு ரூ 65,000 கோடி என்று பட்ஜெட்டில் இருந்தாலும் வரும் மாதங்களில் மேலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படக் கூடும். வங்கிகள் தனியார்மயம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மகத்தான, உலகின் ஆகச்சிறந்த நிதி நிறுவனமான LICயையே குறைவாக மதிப்பீடு செய்து விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

வரும் காலங்களில் இத்தகைய நடவடிக்கைகளால் அரசின் வருவாய் பாதிக்கப்படும். நாட்டின் சுயசார்பும் இறையாண்மையும் ஆபத்துக்குள்ளாகும். சமூக நீதியின் ஒரு முக்கிய அம்சமான இட ஒதுக்கீடு முற்றிலும் அழிக்கப்படும்.

நிறைவாக

மொத்தத்தில் ஒன்றிய அரசின் பட்ஜட் விவசாயிகளுக்கும் விவசாயதொழிலாளிகள் மற்றும்  இதர கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளி மக்களுக்கும் நிவாரணம் மறுக்கிறது.தனது மொத்த ஒதுக்கீடுகளை  உண்மையளவில் குறைத்துள்ளது. மாநிலங்களுக்கு சாதகமாக இல்லை. பொருளாதார மீட்சிக்கும் உதவாது. கடும் பணவீக்கமும் அதிகரித்துவரும் வேலையின்மையும்தான் பட்ஜட்டின் முக்கிய விளைவுகள். இந்த இரண்டு கொடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள பட்ஜெட் எந்தவகையிலும் உதவாது. மாறாக, தீவிரப்படுத்தும். இத்தகைய பின்னணியில் நமது இயக்கங்களை வலுப்படுத்தி அரசின் கொள்கைகளை மாற்ற மக்களை திரட்டுவது அவசர அவசியம்.



Leave a comment