மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்… அரசியல் போராட்டமே!!!


எஸ். கண்ணன்

நவதாராளமயம் சிறுபான்மை பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இந்தியாவில் இடதுசாரி கட்சிகள் தவிர்த்து, அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் மேற்படி நவதாராளமய கொள்கைகளை ஆதரிக்கின்றன. அதேநேரம் தொழிற்சங்கம் என்ற முறையில் செங்கொடி சங்கங்கள் மட்டுமல்லாமல், முதலாளித்துவ கட்சிகளின் தொழிற்சங்கங்களும், சீர்திருத்த தலைமை கொண்ட தொழிற்சங்கங்களும் கூட, நவதாராளமய பொருளாதார கொள்கைகளின் தாக்குதலை எதிர்த்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், நவதாராளமய கொள்கை பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தை, கண்ணியமான வாழ்க்கை மற்றும் வேலையை அழித்து நாசம் செய்து வருகிறது. இது மேற்குறிப்பிட்ட முதலாளித்துவ கட்சிகளின் தொழிற்சங்க இயக்கங்களுக்கு, எதிர்ப்பு இயக்கத்தில் பங்கெடுக்கும் நிர்ப்பந்தம் அளிக்கிறது. 

ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரங்களில் ஒன்றான பி.எம்.எஸ்-உம் இதேபோல், கடந்த காலங்களில் நவதாராளமய பொருளாதார கொள்கைகளை எதிர்த்த போராட்டங்களின் கூட்டு நடவடிக்கைகளில் பங்கெடுத்தது. 2014இ ல் பாஜக தலைமையில் ஒன்றிய அரசு அமைக்கப்பட்ட பின், 2015 செப்டம்பர் 2 அன்று நடந்த அகில இந்திய வேலை நிறுத்தமாகும். அதில் துவக்கத்தில் பங்கெடுத்த பி.எம்.எஸ்., ஆர்.எஸ்.எஸ் அல்லது, பாஜக தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து போராட்ட நடவடிக்கைகளில் இருந்தும், வேலைநிறுத்த நடவடிக்கைகளில் இருந்தும் விலகியது. அதன் பின் நடைபெற்றுவரும் வேலை நிறுத்தங்களிலும் பங்கெடுக்கவில்லை. இதேபோல் மேற்படி நவதாராளமயம் என்ற கொள்கையை எதிர்க்காமல், சங் பரிவாரத்தின் மற்றொரு அமைப்பான சுதேசி ஜாக்ரான் மஞ்ச், இடதுசாரிகளை விடவும் அதிதீவிரமாக அந்நிய பொருள்களை எதிர்த்த போராட்டங்களில் ஈடுபட்டது. அது தற்போது அமைதியாகயைக் இருப்பது, சுதேசி ஜாக்ரான் மஞ்ச் மற்றும் பாஜக சங் பரிவார் அமைப்புகளின் போலித்தனத்தை வெளிப்படுத்த கூடியதாகும்.

அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்த போராட்டத்தில், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சொந்த அடையாளங்களை கடந்து, தொழிலாளி என்ற முறையில், தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் போராடுவது என்ற முடிவை விவசாயிகளும் அமலாக்கினர். இது வர்க்க அரசியலாக பிரதிபலித்தது. வர்க்க ஒற்றுமை மேம்பட்ட இந்த பின்னணியில் தான், நவதாராளமயத்தின் கொள்கைகளை எதிர்த்த, பொது வேலை நிறுத்தம் அகில இந்திய அளவில் நடந்தது. 1992இ ல் நடந்த பொது வேலை நிறுத்தமும், அதைத் தொடர்ந்த சில பொது வேலை நிறுத்தங்களும் வெற்றிகரமாக நடந்தது. இதில் பல இடதுசாரி வெகுமக்கள் அமைப்புகளும் பங்கேற்றன. இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து முழுஅடைப்பாக மாறி, முதலாளித்துவ கட்சிகளுக்கு நெருக்கடியாக அமைந்தது என்றால் மிகை அல்ல. அரசியல் மாற்றாகவும், இடதுசாரி தொழிற்சங்கம் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் மேற்படி கூட்டு நடவடிக்கைகள், நிர்பந்தத்தை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாகவே, முதலாளித்துவ கட்சிகளின் தொழிற்சங்கங்களும் அகில இந்திய பொது வேலை நிறுத்தங்களில் பங்கெடுத்தன.

பொது வேலைநிறுத்தங்கள் என்ன சாதித்தன?

முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிலாளி வர்க்கம் அந்தந்த வளர்ச்சிக்கு ஏற்ப நடத்தியுள்ளது. வேலை நேர குறைப்பு உள்ளிட்ட, பல உரிமைகளை வென்றிட உதவியது. 1838 – 1848 காலங்களில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் தொழிலாளர் மீதான வேலை நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடந்தன. பிரிட்டிஷ் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்த போராட்டங்கள், புரட்சிகர சக்திகளின் முன்னெடுப்பால் நடந்தது என அரசியல் ஆய்வாளர்கள் இன்றளவும் கூறுகின்றனர். இந்த வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்கள் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 10 மணி நேரமாக வரையறை செய்தது. 

வேலைநேரத்தை குறைக்கும் போராட்டம் தீவிரமாகும் போது, கூலி குறைக்கப்படுவதும் நடக்கிறது. அன்றைய ரஷ்யாவில் லெனின் இது குறித்து விவாதித்து உள்ளார். 1885 முதல் 1900 வரை மிக அதிகமான வேலை நிறுத்தங்களை தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். ஜார் மன்னனின் ஆட்சியும், முதலாளித்துவ வளர்ச்சியும் தொழிலாளர் மீது நடத்திய தாக்குதல்களே இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம், என கூறுகிறார். குறிப்பாக, முதலாளித்துவத்தின் மூலதனம் மேலும் மேலும் அதிகரிப்பது என்பது, தொழிலாளருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கூலி அளிக்கப்படாததால் ஏற்படுகிறது. கூலியை குறைக்க முதலாளித்துவ அரசுகள், முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களை இயற்றுகின்றன. இந்த பின்னணியில் தொழிலாளர்களின் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும், தனிப்பட்ட ஆலை முதலாளிகளுக்கு எதிரான ஒன்றாக மட்டும் இல்லாமல், முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசுக்கு எதிரான உணர்வாகவும் வளர்ச்சி பெறுகிறது. 

உணர்வு ரீதியிலான மேற்படி வளர்ச்சி, தொழிலாளர்களுக்கு, தனிப்பட்ட முதலாளிகளை கேள்வி கேட்கும் வலிமை, தனி ஒரு நபருரூக்கு இல்லை. அவ்வாறு கேட்டால். வேலையில் இருந்து வெளியேற்றப்படுவோம், என்ற நிலையில் தான் தொழிலாளி சங்கமாக ஒன்றிணைனைகிறார். அந்த ஒன்றிணைனைவு, தொழிற்சங்கங்களின் ஒற்றுமையாகவும், தொடர்ந்து வர்க்க ஒற்றுமையாகவும், வலுப்பெறுவதைக் காணமுடிகிறது. இந்த வர்க்க ஒற்றுமையே, பொது வேலை நிறுத்தங்களுக்கு அனைத்து தொழிலாளர்களையும், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துச் செல்கிறது. 

இந்தியாவில் நவதாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, தொழிற்சங்கங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள, இந்த ஒற்றுமை முக்கியமான ஒன்றாகும். தலைமை மட்டத்தில் உள்ள, இந்த கொள்கை சார்ந்த உணர்வு, தொழிலாளர் மட்டத்திலும் பிரதிபலிக்க செய்ய வேண்டியுள்ளது. அதை செய்வதே உண்மையான வர்க்க உணர்வாகவும், கொள்கை மாற்றத்தினை வலியுறுத்தும் உணர்வாகவும் வளர்ச்சி பெறும். 

கொரோரானா பெரும் தொற்றும் சுரண்டல் கொள்ளை அதிகரிப்பும்: 

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார பாதிப்பு, கொரோரானா பொது முடக்கம் காராணமாக ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பொது முடக்க காலத்திலும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆகியோர் பொது மக்களுக்கு சேவை என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்டி உள்ளது. இதை ஆக்ஸ்ஃபேம் போன்ற அமைப்புகளே உறுதி செய்துள்ளன. அதாவது, அரசு தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தடுப்பூசி உற்பத்தி செய்த 9 நிறுவனங்கள், ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளனர். இந்தியாவில் 142 பேர் பில்லியனர்கள் (ரூ7,500 கோடிக்கும் மேல் சொத்துடையவர்கள்) உருவாகியுள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 53 லட்சம் கோடி. இது போல் உலக அளவிலும் நிலைமை உருவாகியுள்ளது. 

அன்று படைபலத்தில் வலிமை பெற்ற மன்னர்கள் உலகை ஆட்சி செய்ய முயற்சித்தது போல், இன்று பணபலத்தில் வலிமையானோர், உலகை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டோராக மாறியுள்ளதை பார்க்க முடிகிறது. ஏங்கெல்ஸ், “எங்கெல்லாம் பெருவீத கார்ப்பரேட் தொழில்கள் பட்டறை தொழில்களை இல்லாமல் செய்ததோ, அங்கு முதலாளி வர்க்கம் செல்வம் மற்றும் அதிகாரத்தின் காரணமாக உயர்ந்த நிலைக்கு வந்து, அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டுள்ளது”, எனக் கூறுகிறார். பெரும்பான்மை மக்கள், மேற்குறிப்பிட்ட சில நூறு பேரின் தயவில் வாழும் சூழலை உருவாக்குகின்றனர், எனவும் விளக்குகிறார். இப்போது இந்த உண்மை நிலையை நம் சமகாலத்தில் காண முடிகிறது.  

எனவே தான் கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெறுருவது உலகின் பல நாடுகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அமெரிக்காவில் அமேசான், வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் தொழிற்சங்கம் அமைத்தலை விரும்பவில்லை. நிர்வாகங்களுக்கு எதிரான போராட்டங்கள் கூடுதல் கவனத்தை ஈர்த்து, வலிமையாக நடைபெறுகின்றன. சங்கம் வைத்த தொழிலாளர்களை பழிவாங்குவது, வேலை நீக்கம் செய்வது போன்ற ஜனநாயக விரோத,  சட்ட விரோத செயல்கள் முன் எப்போதையும் விட அதிகளவில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களால் அம்பலமாகின்றன. 

இந்தியாவை பொறுருத்த அளவில், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் உரிமைகளற்ற, நாகரீகமான வேலை வாய்ப்பை நாசம் செய்து, ஒப்பந்தம், பயிற்சி என்ற பெயரில் பெரும் கொள்ளையை கார்ப்பரேட்டுகள் அரங்கேற்ற, பாஜக ஆட்சி சட்டங்களை மாற்றி வருகிறது. பாஜகவின் செயல்கள் அனைத்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிந்தாந்தத்தில் இருந்து வெளிப்படுவதாகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் மாதவ சிங் கோல்வாக்கர், எழுதிய பஞ்ச் ஆப் தாட்ஸ் எனும் நூல், அவர்களின் நோக்கத்தை தெளிவு படுத்துகிறது. இன்றைய நவதாராளமய கொள்கைகள் அமலாக்கத்தின் தீவிரம், அன்று எழுதப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். அதாவது, ஒரு முதலாளி லாப நோக்கமில்லாமல் எப்படி செயல்படுவார்?. அதற்காக தொழிலாளி சுரண்டப்படுவது நியாயமே. தொழிலாளர் உரிமை என்ற பெயரில் பல, முழக்கங்கள் முன் வைப்பது, ஏற்க முடியாதது. சமூகத்தில் கடந்த கால மோதல்களை மறைக்கவே வர்க்கம் என்ற பெயரில் முழக்கங்கள் வைக்கப் படுகிறது, என எழுதப்பட்டுள்ளது. 

மேற்படி கோல்வாக்கர் எழுத்துகளுக்கும், இன்றைய பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்குமான தொடர்பை நன்கறிய முடியும். உலகில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் கார்ப்பரேட் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான மோதலாக வலுப்பெற்று வருகிறது. அங்கு உள்ள வலதுசாரி, இடதுசாரி கொள்கைகளுக்கு இடையிலான முரண் தீவிரம் பெற்று இருப்பதை காண முடிகிறது. பாஜக சமூக மோதலை தீவிரப் படுத்தி, கார்ப்பரேட் மூலதனத்திற்கு உதவி செய்கிறது. சமூக பதட்டத்தை தணினிக்கவும், மூலதன சுரண்டலுக்கு எதிராகவும், தொழிலாளர்களை சிந்திக்கவும், செயல்படுத்தவும் வேலைநிறுத்தம் என்ற ஒன்றுபட்ட உணர்வு மிக அவசிய தேவையாக உள்ளது. 

தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை:

கடந்த நவம்பர் 26, 2020 நடந்த 20 வது அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அன்று, விவசாய சங்கங்களும் தலைநகர் டில்லியை முற்றுகை இடுவது என முடிவெடுத்தது. அதன் படி டில்லிக்கு செல்லும் சாலைகள் முற்றுகை இடப்பட்டது. தொடர்ந்து நடந்த அரசின் தாக்குதல்களும், போராட்டக் காரர்களின் எதிர்வினையும், அவர்களுக்கு ஆதரவான தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு போராட்டமும், மதசார்பற்ற ஜனநாயக இயக்கங்களின் தொடர் நிர்ப்பந்தம் காரணமாக, ஓராண்டு கழித்து மாபெரும் வெற்றியை பெற்றது. பாஜக தலைமையிலான மோடி அரசு, முதல் முறையாக வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெறுவது என முடிவெடுத்தது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய மாநாட்டில் முன் மொழிய இருக்கும் அரசியல் தீர்மானத்தின் நகல், இது குறித்து விவாதிக்கிறது. நீடித்து நடந்த விவசாயிகள் போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. 2018ஆ ம் ஆண்டில் நடந்த தொழிலாளர், விவசாயி, விவசாயத் தொழிலாளர்களின் கூட்டு பேரணி டில்லியில் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது, எனக் கூறுகிறது. கோவிட் பாதிப்பு காலத்தில், இந்திய மற்றும் சர்வதேச பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பாஜகவின் சட்ட திருத்த நடவடிக்கைகள் கொதித்தெழும் போராட்டமாக விவசாயி மற்றும் தொழிலாளர்களிடம் உருவாக, மேற்படி கூட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள் அடித்தளம் அமைத்து கொடுத்தது. 

பொருளாதார கோரிக்கைகளுக்கான வேலைநிறுத்தங்களில் துவங்கி, பொருளாதார கொள்கைகளை எதிர்க்கும் போராட்டங்கள் அதிகரிப்பது, ஆளும் வர்க்க எதிர்ப்பு நடவடிக்கையே ஆகும். இது ஒரு அரசியல் போராட்டமே ஆகும். எனவே தான், மார்க்சிஸ்ட் கட்சி அதன் அறிக்கைகளில் இது போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், இப்போராட்டங்களின் வெற்றிக்கு களத்தில் அளப்பரிய பணிகளைச் செய்கிறது. ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்கும், பின் புரட்சியின் வெற்றிக்கும் அரசியல் வேலைநிறுத்தங்கள் பங்களிப்பு செய்த விவரங்களை, லெனின் எழுதிய வேலைநிறுத்தங்கள் பற்றி என்ற கட்டுரை குறிப்பிடுகிறது. 

மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் நகல் தீர்மானம், “பெரும் பணக்காரர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், சிறு, குறு உற்பத்தியாளர்களுக்குமான முரண்பாடு வலுப்பெற்றுள்ளது. பணக்கார விவசாயிகள் உள்ளிட்டு, பாஜக ஆட்சியின் நவதாராளமய ஆதரவு சட்ட திருத்தங்களை எதிர்த்த, விவசாயிகளின் ஆதரவு போராட்டத்தை ஆதரிக்கும் நிலை உருவானது” எனக் கூறுகிறது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மேற்படி சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைனைந்து ஈடுபட்டது, பெரும் வர்க்க ஒற்றுமைக்கான வாய்ப்புகளின் வெளிப்பாடாகும்.

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் விவசாயிகளின் போராட்டம், தொழிலாளர் ஆதரவு நடவடிக்கைகளை மட்டும் உருவாக்கவில்லை. கூடவே, சமூக நல்லிணக்க வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்தது, எனக் கூறுகிறார். குறிப்பாக சிறு, குறு நில உடமை வர்க்கமாக உள்ள சாதியினருக்கும், உடமையற்ற ஒடுக்கப்பட்ட சாதியினராக உள்ள தொழிலாளர்களுக்கும் இடையில்  உருவான போராட்ட ஒற்றுமை, வர்க்க அரசியலுக்கான அடிப்படை, என அவர் எழுதியுள்ளது, முக்கியமான படிப்பினை ஆகும். 

இந்தியாவை பொறுருத்த அளவில், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக 1982 ஜனவரி 19 இல் முதல் அகில இந்திய வேலை நிறுத்தத்தை இடதுசாரி தொழிற்சங்கங்களும்ள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்களும் இணைந்து அறைகூவல் விடுத்தன. அன்றைய வேலை நிறுத்தம் மிக சிறப்பாக நடந்தது. அன்றும் விவசாயிகள் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஆதரித்து, சாலை மறியல் உள்ளிட்ட நடவவ்டிக்கைகளில் இறங்கினர். ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தின் ஆப்பூர் மற்றும் மன்னார்குடி ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு காரணமாக விவசாய சங்கத்தின் தோழர்கள், நாகூரான், அஞ்சான், ஞானசேகரன் ஆகியோர் படுகொலையானார்கள். நாடு முழுவதும் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியானார்கள்.  அந்த நிகழ்வு நடந்து 40 ஆண்டுகள் முடிந்துள்ளது. தொழிலாளர் விவசாயிகள் ஒற்றுமை முன்னை விட அதிகமாக தேவைப் படும் காலமாக உள்ளது. 

இப்போது, இந்தியாவில் தேசிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக 21வது பொது வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்துள்ளன. தொழிலாளர்கள் தங்களின் தனிப்பட்ட கூலி உயர்வு, வேறு பிரச்சனைகளுக்காக, தனி சங்கமாக நடத்திய போராட்டங்களில் இருந்து மாறுபட்டதாக பொது வேலை நிறுத்தம் உள்ளது. பொது கோரிக்கைகள் ஏற்கனவே கூறியபடி, அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. இதை ஓரளவு அறிந்து தான் வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அரசியல் உணர்வு மேம்படுகிறது, என்ற லெனினின் அனுபவம் உண்மையாகிறது. அன்றைய ரஷ்யாவில் ஒரு அரசியல் முழக்கத்துடன் வேலை நிறுத்தங்கள் நடந்தது. ஆனால் இந்தியாவின் சூழலில் பல அரசியல் அமைப்புகளின், தொழிற்சங்க தலைவர்களும், இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்கின்றனர், என்பது மாறுபட்ட அனுபவம் ஆகும். தொழிற்சங்கங்களின் இந்த ஒற்றுமை, வர்க்க ஒற்றுமையாக மாறுவதற்கான பங்களிப்பே, கொள்கை மாற்றத்திற்கான வேலை நிறுத்தமாக மாறும். அதை நோக்கி பயணிப்பதே கம்யூனிஸ்டுகளின் பணியாகும். Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: