மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


விவசாயிகள் போராட்டத்தின் படிப்பினைகள்


பிரகாஷ் காரத்

அண்மையில் வெற்றிகரமாக நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டம் குறித்தும், அதன் அரசியல் பின்புலன் மற்றும் தாக்கங்கள் குறித்தும் புரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. மத்திய மோடி அரசின் மூன்று வேளாண் (விரோத) சட்டங்களுக்கு எதிரான இந்த போராட்டம் இக்கால அரசியல் சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டம்.

செப்டம்பர் 2020இல் மோடி அரசு, பாராளுமன்ற ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் மீறி, எந்த விவாதமும் இன்றி, பாராளுமன்றத்தில் அநீதியான முறையில் உட்புகுத்தி இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் இயற்றியது. ஆனால் விவசாயிகள் போராட்டம் அன்றிலிருந்து மட்டும் துவங்கவில்லை. அதற்கு முன்பே இந்த மூன்று சட்டங்களும் “அரசாணை”களாக ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே போராட்ட அலைகள் துவங்கிவிட்டன. அதன் பின் சட்டமாக இயற்றியவுடன், தில்லியை நோக்கி தில்லி எல்லையில் நவம்பர் 26 அன்று பெரும் போராட்டமாக உருவெடுத்தது.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய வரலாற்றில், மிகவும் நீண்ட காலமாக, தொடர்ந்து உறுதியாக, முன்னெடுக்கப்பட்ட ஒன்றுபட்ட போராட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாகவே மோடி அரசு இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆக, இப்படிப்பட்ட பரந்துபட்ட தொடர் இயக்கத்தின் வளர்ச்சி, அதன் முக்கிய அம்சங்கள், அத்தியாவசிய அரசியல் கூறுகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளும் தேவை நமக்கு உள்ளது.

போராட்டத்தின் பின்புலன்

இந்த மூன்று சட்டங்களும், தெளிவாக, விவசாயம் மற்றும் விவசாய பொருட்கள் விற்பனையில் கார்ப்பரேட் ஊடுருவலுக்கு வழி வகுக்கவே இயற்றப்பட்டன. இந்த மூன்று சட்டங்களும், இன்று நம் நாட்டில் அமலில் உள்ள நெல், கோதுமை, மற்றும் இன்ன சில பயிர்களின் கொள்முதல் முறைக்கும், இந்த கொள்முதலின் அடிப்படையாக உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், மேலும் அதன் பின்னர் வரும் பொது விநியோக முறைக்கும் எதிரானதாக பாவிக்கப்பட்டது.

பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம், குறிப்பாக மேற்கு உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மூன்று மாநிலங்களில்தான் பெரும் அளவில் நிகழும் நெல், கோதுமை கொள்முதல் முறை நிலவி வருகிறது. மேலும் “அர்தியாஸ்” என்ற முறையின் மூலம் இடைத்தரகர்கள் விளைச்சலை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யும் முறையும் நிலவி வருகிறது. ஆக, இந்த மாநிலங்களில்தான் விவசாயிகள் எழுச்சி முதலில் ஏற்பட்டது.

ஆனால் இந்த மூன்று வேளாண் சட்டங்கள் இயற்றப்படும் முன்னரே, நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டங்கள் வளர்ந்து கொண்டே வந்தன. பல்வேறு விவசாய சங்கங்களை இணைக்கும் கூட்டு அமைப்புகளும் உருவாகி வளர்ந்து வந்தன. இந்த விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த “சம்யுக்த் கிசான் மோர்ச்சா” (SKM, ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) அமைக்கப்பெறும் முன்பே, மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டபொழுது உருவான “அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” (AIKSCC) என்ற பரந்துபட்ட தளம் இருந்து வந்தது. SKM உருவாகும் முன்னரே பல இயக்கங்களும் போராட்டங்களும் துவங்கி விட்டன. 2018லும், 2019லும் தில்லியில் மிகப்பெரும் விவசாயிகள் திரட்சி நிகழ்ந்தன.

ஆக, நாட்டில் பல காலமாக நிலவி வரும், நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கடும் வேளாண் நெருக்கடி காரணமாக ஆங்காங்கே எழும் போராட்டங்களும், அவை அனைத்தையும் ஒன்று திரட்டி அதற்கு ஒரு தேசிய அளவிலான வடிவம் அளிக்கும் கூட்டு போராட்டங்களுக்கும் ஏற்கனவே முகாந்திரம் இருந்துள்ளது. தில்லியில் 2018 செப்டம்பரில் விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய, அண்மை காலங்களின் மிகப்பெரும் வெகுஜன இயக்கம் நிகழ்ந்தது. ஆக பல்வேறு விவசாய சங்கங்களும், விவசாய வர்க்கங்களும் ஒன்றுபட்டு நிகழ்த்தும் இயக்கங்களுக்கான உந்துதல் ஏற்கனவே இருந்து வந்தது.

இந்த பின்னணியில்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் முக்கிய ஸ்தலமான பஞ்சாப்பில் ஜூன் மாத அரசாணைக்கு பின் 32 விவசாய அமைப்புகள் கூடி, செயற்குழு அமைத்து இயக்கங்களை முன்னெடுத்தனர். சாலை மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நிகழ்ந்தன. இதன் பின்னரே போராட்டம் தில்லியின் எல்லைகளுக்கு நகர்ந்தது.

போராட்டத்தின் முக்கிய அம்சங்கள்

ஒரு ஆண்டு முழுவதும் நடந்தேறிய இந்த விவசாயிகள் போராட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால், அதில் காணப்பட்ட ஒற்றுமையே! SKM அமைப்பின் கீழ், நாடு முழுவதிலும் இருந்து சிறியதும், மிகப் பெரியதும் என சுமார் 500 விவசாய அமைப்புகள் கூடி இருந்தன. இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய SKM, அனைத்து தரப்பினரிடம் இருந்து போராட்டம் மற்றும் இயக்க செயல்பாடு குறித்த பரந்துபட்ட உரையாடலை ஊக்குவிக்கும் அமைப்பு முறையை உருவாக்கியது. இப்படி பல்வேறு, பரந்துபட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களை ஒன்றிணைத்ததே இந்த போராட்டத்தின் முதல் முக்கிய அம்சம்.

இரண்டாவதாக கவனிக்க வேண்டியது, போராட்ட வடிவ வளர்ச்சி. நவம்பர் 26, 2020ல் “தில்லி சலோ” என்ற போராட்ட அழைப்பு விடுக்கப்பட்ட பின், பஞ்சாப் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து டிராக்டர்களில் முன்னேறி வரத் துவங்கிய விவசாயிகளை தடுக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன. போலீஸ் அராஜகம், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என அனைத்தும் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் இது அனைத்தையும் மீறி விவசாயிகள் முதலில் தில்லி எல்லையிலும், பின் அரியானா, ராஜஸ்தான், மற்றும் உத்திர பிரதேச எல்லைகளையும் வந்தடைந்தனர். ஆக, தில்லி எல்லையை சுற்றி இருக்கும் ஐந்து-ஆறு ஸ்தலங்களில் முனைப்புடன் நிகழும் போராட்டமாக இது உருவெடுத்தது. ஆண்டு முழுவதும் இந்த ஸ்தலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டங்களை நிழத்தினார். தொடர்ந்து விவசாயிகள் வந்து கொண்டிருந்தனர். பின்னர், குறிப்பாக பஞ்சாப்பில், குறிப்பிட்ட சில கிராமங்கள் 2-3 வாரங்கள் போராட்டத்திற்கு சென்று திரும்பி வந்த பின், வேறு சில கிராமங்கள் செல்லும் சுழற்சி முறையும் உருவெடுத்தது. இதனால் இது தொடர் வெகுஜன ஒருங்கிணைப்பாக நிகழ்ந்தது. பஞ்சாப், அரியானா, உத்திர பிரதேச மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்திராகண்ட் விவசாயிகளும் ஒன்றிணைந்தனர்.

இதன் மூலம் இது மிக நீண்ட கால, தொடர் போராட்டமாக மாறியது. நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தது போல, கூட்டு சமையல் இடங்கள், மருத்துவ சேவை பகுதிகள், மேலும் படிக்கும் அறைகளும், நூலகங்களும் கூட போராட்ட களத்தில் அமைக்கப்பட்டன. ஆக, அந்த போராட்ட களத்தில் பல நாட்களாக இருந்தவர்கள் ஒரு கூட்டு வாழ்வை நடத்த முடிந்தது.

மூன்றாவதாக. இந்த போராட்ட அழைப்பு விடுக்கப்பட்ட நவம்பர் 26, 2020 அன்று தான் இந்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த அறிவிப்பும் விடுக்கப்பட்டது. இரண்டும் ஒன்றாகவே நடந்தேறியது. ஆகவே, துவக்கத்தில் இருந்தே இப்போராட்டம், விவசாய-தொழிலாளர் வர்க்கங்களின் கூட்டு நடவடிக்கைகள் மூலமே வளர்ந்தது. இது ஆண்டு முழுவது நீடித்து, தொழிற்சங்கங்கள் உடனான ஒரு குறிப்பிட்ட அளவு கூட்டு முயற்சிகளும், ஒற்றுமையும், கூட்டு நடவடிக்கைகளும் தொடர்ந்து நிகழ்ந்தன.

மேலும் இந்த போராட்ட அமைப்பின் தன்மையானது, அனைத்து சாதி, மத, பிராந்திய பாகுபாடுகளை உடைத்தெறியும் வண்ணம் வளர்ந்தது. உதராணமாக அரியானா மற்றும் பஞ்சாப் இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சனை போன்ற பிரிவினைகள் உடைவதைக் கண்டோம். கூடிய விவசாயிகள் இடையே பெரும் தோழமை வளரவதைக் கண்டோம். குறிப்பாக, இரண்டு முக்கிய போராட்ட ஸ்தலங்கள் அரியானாவில் அமைந்திருந்ததால், அரியானா விவசாயிகள்தான் பெருமளவு சமையல் பொருட்கள், காய்கறிகள், பால் போன்றவற்றை அளிக்கும் பொறுப்பை ஏற்று, போராட்டம் தொடர்ச்சியாக நடப்பதை உறுதி செய்தனர். இதன் மூலம் முந்தைய பிரிவினைகளும் பாகுபாடுகளும் உடைந்து, ஒற்றுமை வளர்வதைக் கண்டோம். இதே தான் மேற்கு உ.பி.யிலும் நிகழ்ந்தது. 2013 முசாஃபர்நகர் மதக் கலவரங்களுக்கு பின்னர் ஜாட் விவசாயிகள் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் மற்றும் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரிவினை ஓரளவு சீரடைவதையும், பின்னர் பெரும் பங்கெடுப்புடன், குறிப்பாக முஸ்லிம் விவசாயிகள் மற்றும் கைவினை படைப்பாளிகள் பெருமளவில் பங்கேற்று நடைபெற்ற மாபெரும் முசாஃபர்நகர் பேரணி நிகழ்ந்ததையும் கண்டோம்.மேலும் அரியானாவில் பெரும் பங்கு வகிக்கும் ஜாட் விவசாயிகள், அவர்கள் மத்தியில் இதர சாதியினர் குறித்து விதைக்கப்பட்ட தீய கருத்துக்கள், மேலும் மதப் பிரிவினைவாதம், இவை அனைத்தும் இந்த போராட்டத்தின் சூட்டில் கரைந்து போவதைக் கண்டோம். இது ஒரு முக்கிய வளர்ச்சி.

அடுத்த முக்கிய அம்சமானது, பெண்களின் பங்கெடுப்பு. பல வகுப்பினரிடத்தில் இருந்தும், பல குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பெருமளவில் போராட்டங்களில் முழுமையாக பங்கேற்றனர். பேரணிகளில் டிராக்டர்களை ஓட்டியும் வழி நடத்தினர். முதல் முறையாக வேளாண் சமூகங்கள் மத்தியில் பெண்களை விவசாயிகளாக பெருமளவில் அங்கீகரிக்கும் மாபெரும் வளர்ச்சியும் காணப்பட்டது.இது ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களின் தாக்கம் நாடு முழுவதிலும் சமமாக இல்லை. முன்னரே குறிப்பிட்டது போல், பஞ்சாப், அரியானா, மேற்கு உ.பி. ஆகிய பகுதிகள் முதலாளித்துவ முறையினுள் அதிக வளர்ச்சி அடைந்து, அரசு கொள்முதல், மண்டிகள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றை வலுவாக பெற்றிருந்தன. இவ்வாறு வலுவாக இல்லாத இடங்களிலும் நிச்சயமாக கிளர்ச்சிகள் காணப்பட்டன. ஆனால் தொடர் போராட்டமாக இல்லாமல், தில்லி எல்லையில் போராடும் விவசாயிகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சில இடங்களில் பந்த் போன்றவை நிகழ்ந்தேறின.

மேலும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமானது, மத்திய ஆளும் அரசும், கட்சியும் போராட்டத்தை உடைக்க பல்வேறு வழிகளை கையாண்டும், பிரிவினைவாதிகள், காலிஸ்தானிகள் எனக் கூறி ஒற்றுமையை உடைக்க பல அரசியல் நாடகங்கள் நிகழ்த்திய போதிலும், இவை அனைத்தையும் விவசாயிகள் பெரும் துணிச்சலுடன் எதிர் கொண்டனர். இந்த போராட்டம் நவம்பர் மாத கடும் குளிரிலும், மழையிலும் துவங்கியது. எனினும் பல விவசாயிகளும், ஆண்களும், பெண்களும், தங்கள் குழந்தை குடும்பங்களோடு போராட்டத்திற்கு வந்தனர். கடும் தாக்குதலை எதிர் கொண்டனர். அரசு இந்த சட்டங்களை திரும்பப் பெற முக்கிய காரணம், ஒற்றுமையை குலைக்க எவ்வளவு முயன்ற போதிலும் அதில் வெற்றி காண முடியாததே ஆகும்.

இந்த போராட்டத்தில் பங்கெடுத்தோர் பலர் இந்த குளிரை தாங்கக் கூடியவர்கள் என்றாலும், போராட்ட காலத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத் தவிர அரியானாவில் போலீஸ் தாக்குதலில் உயிர் நீத்த தியாகிகள், லக்கிம்பூர் கேரியில் மத்திய அமைச்சர் மகன் வண்டியேற்றி கொல்லப்பட்ட 15 தியாகிகள் என 700க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் உயிர் நீத்தனர். இவை அனைத்தையும் துணிவுடன் சந்தித்து உறுதியுடன் நின்றதே இந்த போராட்டத்தின் மிக முக்கிய அம்சம் ஆகும்.

போராட்டத்தின் அரசியல் அம்சங்கள், அரசியல் சூழல்

2019இல் கூடுதல் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்த பின்பு, நவ தாராளமய கொள்கைகளை அதி தீவிரமாக முன்னெடுத்தது. இதனுடன் சேர்ந்து ஹிந்துத்துவ தாக்குதலும் தீவிரம் அடைந்தது. ஜம்மு காஷ்மீர் உடைக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை கண்டோம். பின்னர் பிரிவினைவாத குடியுரிமை திருத்த சட்டம் அமலாக்கப்பட்டதைக் கண்டோம். அதன் பின் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும், தில்லி கலவரங்களும் நடந்தேறின. இதைத் தவிர பொருளாதார ரீதியாக, தனியார்மயம் தீவிரம் அடைந்திருப்பதைப் பார்க்கிறோம். பொதுத்துறையை முற்றிலும் ஒழித்துக் கட்டும் வகையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று வேளாண் சட்டங்களும் நவீன தாராளமய கொள்கைகளின் அங்கமே.

இந்த பின்னணியில், வேளாண் சட்டங்கள் இயற்றப்படும் முன்னர், ஒரு மாபெரும் வெகுஜன போராட்டம் ஏற்பட்டது. அது சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம். நாடு முழுமையில் இருந்தும் மாபெரும் ஒருங்கிணைப்பைக் கண்டோம். ஆனால் பெருந்தொற்று மற்றும் நாட்டடங்கு காலத்தில் இது நிறுத்தப்பட்டது.

ஆனால் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், இந்த சட்டங்களானது பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டம் என்ற தெளிவான புரிதல் இருந்தது. அதனால்தான், இதற்கு எதிராக, விவசாயிகள் வெறும் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என மட்டும் கோராமல், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படியான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உறுதி வேண்டும் என்றும், மின்சார துறையில் தனியார்மயத்திற்கு வழி வகுத்து, மின்சார விலை அதிகரிப்பிற்கு வழி வகுக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் சேர்த்தே முழக்கமிட்டனர். இவை அனைத்தும் போராட்டத்தின் துவக்கத்தில் இருந்தே முன்னெடுக்கப்பட்டது. ஆகையால்தான், இந்த போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் அனைத்தும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கும், நவ தாராளமய கொள்கைகளுக்கும் எதிராகவே அமைந்தன. இது ஒரு முக்கிய அரசியல் கூறு.

மேலும், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில், ஏறத்தாழ அனைத்து ஊரக குடும்பங்களும் போராட்டத்தில் பங்கெடுத்தன. இம்மாநிலத்தில் பார்த்தால், ஊரக நிலப்பிரபுத்துவ மற்றும் செல்வந்தர் விவசாயிகளின் பிரதிநிதி கட்சியான அகாளி தளம் கட்சி பா.ஜ.க உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. வாஜ்பாய் காலத்திற்கு முன்பிருந்தே கூட்டணியில் இருந்து வந்த இக்கட்சி விலகியதால் பஞ்சாபில் பா.ஜ.க முற்றிலும் தனிமைப்பட்டு நின்றது. மேலும் முன்னர் கூறியது போலவே, கடுமையான மதவாத பிளவு ஏற்பட்டிருந்த மேற்கு உ.பி.யில், இந்த இயக்கத்தின் மூலம் பிளவு ஓரளவு சீரடைந்தது.

மேலும் இப்போராட்டத்தின் ஒரு முக்கிய அரசியல் அம்சம் என்னவென்றால், செப்டம்பர் 2020இல் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்த பிராந்திய கட்சிகளும் கூட அதன் பிறகு பின்வாங்கின. பந்த் அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது, முன்னர் சட்டங்களுக்கு ஆதரவு அளித்த ஆந்திராவின் YSR காங்கிரஸ் அரசும், ஒரிசாவின் பிஜு ஜனதாதள அரசும் பந்த் அழைப்பிற்கு ஆதரவு அளித்தது. மேலும் தெலுங்கானா TRS அரசும் வலுவாக எதிர்த்தது. இவை ஏதும் முன்னர் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்த்த கட்சிகள் அல்ல. ஆக, இந்த வேளாண் சட்டத்தின் காரணமாக, நடுநிலையாளர்களும், பா.ஜ.க ஆதரவாளர்களும் எதிர்க்குரல் எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும், வெறும் இந்த சட்டம் குறித்து மட்டுமல்லாமல், இன்று நாம் பார்ப்பது போல், TRS போன்ற கட்சிகள் முழுமையாக பா.ஜ.க எதிர்ப்பு நிலைபாட்டை எடுத்துள்ளது.

அடுத்து கவனிக்க வேண்டிய முக்கியமான அரசியல் கூறு என்னவென்றால், முதல் முறையாக ஒரு தீவிர நவ தாராளமய கொள்கையில் இருந்து மோடி அரசாங்கம் பின் வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இது மிகவும் முக்கிய அம்சம். ஏனெனில் இந்த போராட்டமானது, நவ தாராளமய கொள்கைகளை எதிர்த்துப் போராடி, அதை திரும்பப் பெறச் செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளது.

இந்த சட்டத்தை திரும்பப் பெறுவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது, பஞ்சாப் மற்றும் உ.பி.யில் வரவிருந்த சட்டமன்ற தேர்தல்கள். ஏற்கனவே கூறியது போல இந்த இயக்கம்  பா.ஜ.க-வை தனிமைப் படுத்தியது. இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிடில், பஞ்சாப் கிராமங்களில் பிரசாரத்திற்கு நுழையக் கூட முடியாது என உணர்ந்தது பா.ஜ.க. லக்கிம்பூர் கேரியில் மத்திய அமைச்சர் ஆதரவுடன் மகன் விவசாயிகளை வண்டியேற்றி கொன்றது உ.பி. மாநிலம் முழுதும் எதிர்ப்பலைகளை எழச் செய்தது. மேலும் இந்த இயக்கத்தால் மேற்கு உ.பி.யில் ஜாட்-முஸ்லிம் ஒற்றுமை வளர்ந்ததை அடுத்து, 2017 சட்டமன்ற தேர்தலில் இங்கு 58ல் 53 இடங்களை வென்ற பா.ஜ.க., மொத்தத்தையும் இழக்கும் அபாயத்தை உணர்ந்தது. மேலும், சட்டங்களை திரும்பப் பெற்றால், அவர்களின் வழக்கமான சூழ்ச்சியான மதப் பிரிவினைவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வரலாம் எனவும் நினத்தது பா.ஜ.க.

அரியானாவில் தேர்தல்கள் இல்லாதபோதும், அனைத்து சாதி விவசாயிகள்  இடையே ஒற்றுமை உண்டானது. குறிப்பாக, பெரும்பான்மை வகிக்கும் ஜாட் வகுப்பினருக்கும் இதர வகுப்பினருக்கும் இடையே தொடர் ஒற்றுமை நீடிப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை.

மேலும் போராட்டம் வெடித்த இடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். தில்லியின் எல்லை மாநிலங்களான அரியானா, உ.பி., பஞ்சாப் மாநிலங்களில் தான் இந்த சட்டத்தின் தாக்கம் தீவிரமாக இருந்தது. இதனால் இம்மாநிலத்தில் இருந்து ஆண்டு முழுவதும் விவசாயிகள் வர இயன்றது. இதன் தாக்கம் வேறு பகுதிகளில் இருந்திருந்தால் இப்படி ஆண்டு முழுவதுமான போராட்டத்தை நடத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது.

மேலும் இந்த சட்டத்தின் தாக்கம் அனைத்து வகுப்பினர் மீதும் இருந்ததால், இதை எளிதில் ஒடுக்க முடியவில்லை. குறிப்பாக பெரும்பான்மை ஜாட் வகுப்பினர் பங்கு பெற்றதன் காரணத்தால், ஒடுக்குவது கடினமானது. சீக்கிய விவசாயிகள் உள்ளேயும் ஜாட் விவசாயிகளே பெரும்பான்மை. பஞ்சாப்பில் பார்த்தால், ஏழை விவசாய வர்க்கம் முதல் முதலாளித்துவ விவசாய வர்க்கம் வரை அனைவரும் எதிர்த்தனர். இது போன்ற திடமான ஒற்றுமை இருந்தது. இதனால் ப.ஜ.க, மற்றும் அதன் அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த போராட்டத்தை அடக்கி ஒடுக்க சிரமமாக இருந்தது. இதுவே தலித் வகுப்பினர் போன்ற ஒரேயொரு ஒடுக்கப்பட்ட சமூகம் மட்டும் தனித்து போராடி இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி போராட்டத்தை ஒடுக்கி இருப்பார்கள். ஆனால் இந்த பெரும்பான்மை ஒற்றுமை இதை சாத்தியமற்றதாக்கிற்று. குறிப்பாக பஞ்சாப்பை பார்த்தால் இது உண்மையான வெகுஜன மக்களின் போராட்டமாக இருந்தது.

இப்போது வர்க்க ஆய்விற்கு வந்தால். பிரதானமாக இருந்தது இந்த பரந்துபட்ட உழவர்களின் ஒற்றுமைக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடு. இயக்கத்தின் போக்கில் பல முறை, சாதாரண உழவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கூட, இந்த சட்டமானது அம்பானி மற்றும் அதானிகளுக்கான சட்டம் என குறிப்பிட்டு வந்தனர். இவர்கள் விவசாய உற்பத்தி விற்பனை துறையில் விரைவாக உள் நுழைவதை தெளிவாகவே பார்க்க முடிகிறது. இவர்கள் வந்தால் தங்கள் வாழ்வு உருக்குலையும் என்ற பார்வையும் தெளிவாகவே இருந்தது.

இரண்டாவதாக, இதுவரை வரலாறு காணாத தொழிலாளர்-விவசாய ஒற்றுமை. ஆண்டு முழுவதும் SKM தலைவர்கள் தொழிற்சங்க தலைவர்களை அழைத்து விவசாயிகளிடம் உரையாற்ற அழைப்பார்கள். கூட்டு பேரணிகள், போராட்ட தினங்கள் அனுசரிக்கப்பட்டன. பொதுத்துறை தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு SKM ஆதரவு அளித்தது. இது முக்கிய வளர்ச்சி ஆகும். ஏனெனில், வரும் காலங்களிலும், நவ தாராளமய கொள்கைகளை வலுவாக எதிர்க்க வேண்டுமாயின், இந்த தொழிலாளர்-விவசாய-விவசாய தொழிலாளர் அடிப்படை வர்க்கங்கள் ஒன்றிணைவதே அடிப்படை தேவை ஆகும்.

இந்த ஓராண்டு போராட்டம் அனைத்து விவசாய சங்கங்களுக்கும் கற்பித்தது என்னவென்றால், இப்படிப்பட்ட பரந்துபட்ட வர்க்கங்களிடையேயான ஒற்றுமையை நிலைநாட்டுவது மிக அவசியம் என்பதைத் தான். இந்த போராட்டத்தின் பங்கேற்பு அமைப்புகளை பார்த்தாலே இது புரியும். மேற்கு உ.பி.யில் முன்னாளில் பா.ஜ.க.-விற்கு ஆதரவாக செயல்பட்ட BKU சங்கம், திகாயத் போன்றோர் இந்த இயக்கத்தில் இணைந்தனர். அரியானாவில் மிக பிற்போக்கு சிந்தனையுடன் செயல்படும் “காப் பஞ்சாயத்” அமைப்புகள் தங்கள் மன நிலையை மாற்றி, பெண்களை முன் வந்து போராட ஊக்குவித்தனர். ஆக, இந்த போராட்டத்தின் அனுபவங்கள், அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும் அனுபவங்கள், பரந்துபட்ட ஒற்றுமையையும் தோழமையையும் பறைசாற்றும் அனுபவங்கள் அனைத்தும் வரும் காலங்களில் மேலும் பரந்துபட்ட வர்க்க ஒற்றுமையை கட்டி அமைத்து, மோடி அரசின் கொள்கைகளை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நிறைவாக

அண்மையில் நடைபெற்றா இந்த  விவசாயிகள் போராட்டமே இதுவரை சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான, மிக தொடர்ச்சியான விவசாய போராட்டம். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறச் செய்தது இதை வரலாற்று சிறப்பு மிக்கதாக்குகிறது. வர்க்க அடிப்படையில் பார்த்தால், ஒன்றுபட்ட விவசாயிகள்  மாபெரும் வெற்றி கண்டுள்ளனர். இந்த கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை திரும்பப் பெறச் செய்தது நவ தாராளமய கொள்கைகள் மீதான மிகப் பெரும் தாக்குதல். மேலும் இயக்கத்தின் ஒற்றுமையின் மூலம், ஓரளவு பிராந்திய. மதப் பிரிவினைகளை கடந்து வர முடிந்துள்ளது.

போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த போராட்டம், நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் வலிமைப் படுத்தும். இதன் இக்கால உடனடி தாக்கமானது, அரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு உ.பி. என்ற மூன்று பகுதிகளில் பா.ஜ.க தனிமைப்படுத்தப்பட்டுள்ளது தான்.

ஆனால், பிரிவினைகள் கடக்கப்பட்டது என்று சொல்லும் பொழுது எச்சரிக்கை அவசியம். இந்த பகுதிகளில், குறிப்பாக மேற்கு உ.பி.யில் ஹிந்துத்துவா சக்திகளின் ஊடுருவல் என்பது “ராம் ஜென்ம பூமி” காலத்தில் இருந்தே மிக தீவிரமாக உள்ளது. ஊரக மக்கள் மத்தியில் இது மிக கூர்மையாக உள்ளது. போராட்டத்தால் பிரிவினைகள் சற்றே நிவர்த்தி ஆனாலும், தொடர்ச்சியான அரசியல் மற்றும் சித்தாந்த போராட்டத்தை நிகழ்த்துவது அவசியமாக உள்ளது. இல்லையேல் நிலைமை மீண்டும் மோசம் அடையும் அபாயம் உள்ளது.

மேலும் இந்த விவசாயிகள் போராட்டத்தில் இடதுசாரி அமைப்புகள், தங்கள் விவசாய-விவசாய தொழிலாளர் சங்கங்கள் மூலம் முக்கிய பங்காற்றி உள்ளனர். இந்த பகுதிகளில் இடதுசாரி அமைப்பு ஒரு வெகுஜன சக்தி இல்லாதபோதும், கிடைத்துள்ள வெற்றி இடதுசாரி சக்திகளின் மதிப்பை கூட்டியுள்ளது. SKM தலைமையிலும், களத்திலும், இடதுசாரி தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து இடைவிடாது பணி புரிவதை போராடும் விவசாயிகள்  பார்த்துள்ளனர். ஆக, இதை பயன்படுத்தி இயக்க முன்னேற்றத்திற்கும், குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மத்தியில் பலத்தை கூட்டவும் உழைக்க வேண்டும்.

இறுதியாக, இந்த போராட்டமானது, “அடிப்படை வர்க்கங்களின்” பரந்துபட்ட வகுப்பினர் இடையேயான ஒற்றுமையை பிணைப்பதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இந்த போராட்டத்தின் போக்கில் இதை நாம் கண்டோம். போராட்டத்தின் போக்கில் 3 பந்த் அழைப்புகள் விடுக்கப்பட்ட போது, தொழிலாளர் வர்க்கமும் சேர்ந்து பங்கேற்றது. இதனால் உழவர்கள் தனிமைப்பட்டு நிற்கவில்லை. இது வரும் காலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, தனியார்மயத்திற்கெதிரான போராட்டமானது வெறும் தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுடன் நின்று விட்டால் போராட்டம் நிச்சயம் வெல்லாது. இதன் பிரச்சனைகளை விவசாய வர்க்கங்களும் உணர்கின்றன. தனியார்மயத்தால் மின்சார விநியோகம் தனியார் கையில் சென்றால் தங்களுக்கும் ஆபத்து என உணர்கின்றனர். தனியார்மயம் ஏற்பட்டால் இட ஒதுக்கீடு அழிந்து போகும் என ஒடுக்கப்பட்ட வகுப்பினர் உணர்கின்றனர். ஆக, இது போன்ற இணைப்புகளை மேற்கொண்டு, நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு வெகுஜன போராட்டமாக மாற்றி அமைப்பது வரும் காலங்களின் அவசிய தேவையாக உள்ளது. இதற்கான பாதையை விவசாயிகள் போராட்டம் காண்பித்துள்ளது.

மேலும் வரும் காலங்களில் வெறும் பொருளாதார போராட்டங்கள் மூலம் ஆளும் சக்திகளை முறியடிக்க முடியாது. தொடர்ச்சியான சித்தாந்த, அரசியல் போராட்டங்களும் அவசியமாக உள்ளது.

இந்த போராட்டம் அளித்துள்ள அநேக படிப்பினைகளை பயன்படுத்தி, வரும் காலங்களில் முன்னேறுவோம் என நம்பிக்கை கொள்வோம்! தமிழில்: அபிநவ் சூர்யா



Leave a comment