மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அக்டோபர் புரட்சியின் நினைவுகளில்…


அய்ஜாஸ் அஹமத்

      அக்டோபர் புரட்சி, பொதுவாக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வந்த கிழக்கு நாடுகளை நோக்கி, புரட்சிகர உந்துவிசையின் மையத்தை  நகர்த்தியது. கம்யூனிசத்திற்கும், ஏகாதிபத்தியத்திய எதிர்ப்புக்கும் இடையிலான இந்த கூட்டினை, அக்டோபர் செம்புரட்சியின் நீடித்த மரபாகக் காணலாம்.

[இந்தக் கட்டுரையில் அக்டோபர் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட பிரதிபலிப்புக்களை நாம் பார்க்கப் போவதில்லை. மாறாக, இப்புரட்சி ஏற்படுத்தியிருக்கும் உலகளாவிய குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் குறித்தும், புரட்சியை வடிவமைத்தோர், அதிலும் குறிப்பாக லெனின்,  புரட்சிக்குப் பின் எத்தகைய அரசு மற்றும் சமூகத்தை நிறுவ நினைத்தனர் என்பது குறித்தும் காண இருக்கின்றோம். இதில் குறிப்பிட்டுள்ள தேதிகளெல்லாம் ரஷ்யாவில் புரட்சி வரை பயன்படுத்தப்பட்ட ஜுலியன் காலண்டரின் அடிப்படையில் இருக்கும். ஜூலியன் காலண்டர் என்பது தற்போது வழக்கத்தில் உள்ள  க்ரிகோரியன் காலண்டருக்கு 13 நாட்கள் பின்னதாக இருக்கும். உதாரணமாக, 1917 புரட்சிக்கு வித்திட்ட ரஷ்ய உழைக்கும் பெண்களின் அணிவகுப்பு க்ரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ஆம் நாள் துவங்கியது. ஆனால், ஜூலியன் காலண்டர்படி பிப்ரவரி 23 ஆகும். எனவேதான் அது பிப்ரவரி புரட்சியாக அறியப்படுகிறது.]

1917 அக்டோபரில் நிகழப்பெற்ற மாபெரும் போல்ஷ்விக்குகளின் புரட்சி என்பது ‘ரஷ்யாவில்’ நடந்த புரட்சியை மட்டும் குறிக்கவில்லை. மாறாக அது உலகில் மனிதகுல வரலாற்றில் ஏற்பட்ட, மிக முக்கியமான, திருப்புமுனை நிகழ்வாகும். இப்புரட்சி, 1789 பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக ஐரோப்பாவில் சங்கிலித் தொடராக எழும்பிய புரட்சிகளுக்கு பிறகு ஏற்பட்டது என்றாலும், இந்தப் புரட்சியில்தான் மூலதனத்தின் ஆட்சி ஒழிக்கப்பட்டதுடன், தனிச் சொத்துக்கும் முடிவுகட்டி, வர்க்க சமுதாயத்தின் முடிவுக்கு வழிவகுத்தது. 1917, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொடக்கத்தில் லெனினின் எழுத்துக்களில் உடனடியாக ‘அரசு உலர்ந்து உதிரும்’ என்ற எண்ணம் வெளிப்பட்டது (ராணுவம், காவல்துறை மற்றும் அதிகாரிகளை ஒழிப்பதுடன், 20 லட்சம் மக்களிடம் இந்த பணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்பதும் அவரின் பார்வையில் காணப்பட்டது). இந்த அம்சங்கள், அதுவரை நடந்த புரட்சிகளில் அமைத்துக்கொண்டிராத இலக்குகளாகும்.

முன்னூறு ஆண்டுகால ஜார் முடியாட்சி, 1917 பிப்ரவரி மாதத்தில் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் இடதுசாரிகளும், பெரும்பான்மையான போல்ஷெவிக்குகளும், மேற்கத்திய பாணியிலான பூஷ்வா ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே முயற்சித்தனர். அதற்கு நேர்மாறாக, லெனின், தொழிலாளி – விவசாயிகளை திரட்டி, அவர்களின் தலைமையில் சோசலிச புரட்சியை உடனடியாக நடத்துவதே ‘அடுத்தடுத்த ஐரோப்பிய புரட்சிகளுக்கான முன்னுரையாக’ இருக்கும் என்று வாதிட்டார். அதனை ஒத்த விதத்தில், ஏகாதிபத்திய சங்கிலியின் ‘பலவீனமான கண்ணியாக’ ரஷ்யா அமைந்திருப்பதை அவர் கண்ணுற்றதுடன், புரட்சியின் மூலம் அதில் உடைப்பை ஏற்படுத்தும்போது, ஒட்டுமொத்த சங்கிலியும் தகர்ந்து போகும் என்ற கேந்திரமான பார்வையையும் விளக்கினார். இந்த வகையில், போல்ஷெவிக் புரட்சிக்கு ஐரோப்பிய கண்ணோட்டம் மட்டுமல்லாது, உலகு தழுவிய நெருக்கடியாக அமைந்த காலனி ஆதிக்கத்தையும், ஏகாதிபத்தியத்தையும் தகர்த்திடும் கண்ணோட்டமும் ஏற்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் வரலாறு தொடங்கியபோது, பின்வரும் இரு பெரும் விடுதலை சக்திகள் அதற்கு அடிப்படையாக அமைந்தன: அவை 1) முதலாளித்துவத்தில் இருந்து சோசலிச எதிர்காலத்தை நோக்கி மாறிச் செல்லும் போராட்டமும், 2) மூலதனம் வித்திட்ட உலகம் தழுவிய காலனி ஆதிக்க முறையினை தகர்ப்பதற்கான போராட்டமும் ஆகும்.

நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவமே உலகளாவிய அமைப்பாக இருந்து வருகிறது. மூலதனம் மற்றும் குடியேற்றத்தின் மெய்நிகர் தோற்றத்தை நாம் 1914 ஆம் ஆண்டுகளில் நிலவிய சூழலில் இருந்து படம்பிடிக்கலாம். காலனி ஆதிக்க சக்திகளும், அவர்களின் குடியேற்ற நாடுகளும், (அமெரிக்க கண்டத்தில் இருந்த) முன்னாள் காலனி நாடுகளும் உலக பரப்பில் 85 சதவீதத்தினைக் கொண்டிருந்தன. இந்த ஒட்டுமொத்த அமைப்பையும் – மூலதனம், காலனி ஆதிக்கம் ஆகிய இரு பக்கங்களையும்  – தகர்ப்பதுதான் போல்ஷ்விக் திட்டத்தின் இலக்காக அமைந்தது. ரஷ்யாவை மாற்றியமைப்பது மட்டும் அல்ல.   

ஜார் மன்னரின் ஆட்சி ரஷ்யாவில் மட்டும் நடக்கவில்லை. அது மிகப்பெரிய காலனி ஆதிக்க சாம்ராஜ்யமாகவும் இருந்தது. பிரிட்டனும், பிரான்சும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் காலனி நாடுகளைக் கொண்டிருந்தார்கள். ரஷ்யா அத்தனை பலம் பொருந்தியதாக இல்லை. துருக்கிய மொழி பேசுவோரும், இஸ்லாமியர்களும் அவர்களுடைய அப்போதைய உடனடி காலனிகளாக அமைந்திருந்தன. ஐரோப்பிய கண்டத்திலும், ஆசியாவிலும் அவர்கள் வென்ற பிரதேசங்கள் ரஷ்ய எல்லையினை ஒட்டியதாகவே அமைந்திருந்தன. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில், காலனிய சாம்ராஜ்யங்களுடைய தகர்வு பிரிட்டன் அல்லது பிரெஞ்சு காலனிகளில் இருந்து தொடங்கவில்லை. போல்ஷெவிக் புரட்சியில்தான் தொடங்கியது. சோசலிச சோவியத் ஒன்றியத்தோடு இணைந்த, தன்னாட்சி பெற்ற குடியரசுகளாக, ஜார் மன்னனின் காலனிகள் விடுவிக்கப்பட்டன. ரஷ்யாவின் காலனி நாடுகள்தான் வரலாற்றில் முதல் முறையாக காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று சோசலிச நாடுகளாகின.

காலனிய ஆதிக்கமும் தேசிய பிரச்சனையும் பற்றிய லெனினின் பிரபலமான கருத்தாய்வு ரஷ்ய காலனி நாடுகளின் தொடர்பில் உருவாக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியதாக விரிவாக்கப்பட்டது என்ற உண்மையும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது. போல்ஷ்விக்குகளுடைய புரட்சியின் இத்தகைய தன்மைக்கும், அந்த பாரம்பரியத்திலிருந்து உருவான கம்யூனிஸ்டுகளுக்கும் நன்றி. அவர்கள்தான் வர்க்கத்திற்கும், பேரரசுகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த உறவு பற்றி பேசினார்கள். காலனி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதத்திற்கும் சோசலிச புரட்சிக்கும் இடையிலான தொடர்பினை விளக்கினார்கள். போல்ஷெவிக் புரட்சியின் இந்தத் தன்மைதான் முக்கண்ட பகுதிகளில் அதிர்வினை உருவாக்கியது. (முக்கண்டம் என்ற சொல் மூன்றாம் உலகம் அல்லது தென் புவிக்கோள நாடுகள் என்பதற்கு மாறாக நான் விரும்பி பயன்படுத்தும் சொல் ஆகும்)

வரலாற்றை உருவாக்கிய விவசாயிகள்

விவசாயிகள் தங்கள் வரலாற்றினை தாங்களே தீர்மானிப்போராக எழுச்சி பெற்றிட முடிந்த, வரலாற்றின் முதல் எழுச்சியாக, போல்ஷெவிக் புரட்சி அமைந்தது. பிரெஞ்சு புரட்சியின் போதும் விவசாயிகள் கிளர்ச்சியும், போராட்டங்களும் நடைபெற்றன. ஆனாலும் அவர்களால் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தையும், பாரிஸ் பாட்டாளிகளையும் கடந்த, புரட்சியை முன் நகர்த்தும் சக்தியாக ஆகிவிட முடியவில்லை. பழைய அதிகாரம் வீழ்த்தப்பட்டது. பெரும் நிலக்கிழார்களுக்கு சொந்தமான எண்ணிலடங்கா பண்ணை நிலங்கள் மறுவிநியோகிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு பலன் கொடுத்தன. ஆனால் அவர்களுடைய சொந்த முயற்சிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. சிலசமயம் ஒடுக்கவும்பட்டன. அதற்கு நேர்மாறாக போல்ஷெவிக் புரட்சியின் சமயத்தில், அதற்கான தத்துவ தயாரிப்பிலும் கூட, தொழிலாளி-விவசாயி கூட்டணியே புரட்சியை முன்நகர்த்தும் சக்தியாக அடையாளம் காணப்பட்டது. உண்மையில் புரட்சி செயல்பாட்டிற்கு வந்தபோது – லெனின் குறிப்பிட்ட, சீருடை அணிந்த விவசாயிகள் – உழைப்பாளர்களுக்கும், புரட்சிகர அறிவு ஜீவிகளுக்கும் இடையில் உறவை ஏற்படுத்தும் நடைமுறைப் பிணைப்பாக அமைந்தனர். புனித பீட்டர்ஸ்பெர்க் மற்றும் மாஸ்கோ ஆகிய பெருநகரங்களிலேயே உழைப்பாளர்களும், அறிவுஜீவிகளும் குவிந்திருந்தார்கள். மற்ற இடங்களில் விவசாயிகள் பரவியிருந்தார்கள். போல்ஷெவிக் புரட்சியைத் தொடர்ந்து நடைபெற்ற எல்லா சோசலிச புரட்சிகளிலும் – சீனா, வியட்நாம், கியூபா முதல் கினியா-பிசாவு அதைத் தொடர்ந்து பிற இடங்களிலும் – இவை தொடர்ந்தன: தேசிய/காலனிய பிரச்சனை மற்றும் விவசாய வர்க்கத்தின் பிரச்சனை.

இது, மார்க்சிய சிந்தனையிலேயே, மாபெரும் மாற்றமாகவும் முன்னேற்றமாகவும் அமைந்தது. ஐரோப்பாவின் தொழில்மயமான நாடுகளான – ஜெர்மனி, பிரிட்டன், பிரான்சின் பெரும்பான்மை பகுதிகளிலேயே மார்க்சிய ஆய்வுகள் மையம் கொண்டிருந்தவரையில் அது ஆலைப் பாட்டாளிகளை மையப்படுத்தியதாகவே இருந்தது. முதலாளித்துவத்திற்கு ‘சவக்குழி தோண்டும்’ ஒரே வர்க்கமாக பார்க்கப்பட்டது. பகுதி தொழில்மயமான, பெரும்பாலும் வேளாண்மை சார்ந்திருந்த ரஷ்யாவைப் போன்ற நாடுகளில் புரட்சிகர இயக்கங்கள் தத்துவத்தைக் கைக்கொண்ட உடனேயே, அந்த நாடுகளில் நிலவிய மார்க்சிய வகைப்படாத தீவிர விவசாய இயக்கங்களோடு உரையாட வேண்டியிருந்தது. மார்க்சிய தத்துவத்தின் வழியில் விவசாயிகள் பிரச்சனையை அணுகும் வழிமுறையை மறு சிந்தனைக்கு உட்படுத்த வேண்டியிருந்தது.

முதலாம் உலகப் போர் வெடித்த பின், விவசாயக் குடும்பங்களில் இருந்து பல லட்சக்கணக்கான இளைஞர்கள் ராணுவப் பணியில் சேர்க்கப்பட்டனர்.  ஏற்கெனவே விவசாயிகளிடம் நிலவிய அதிருப்தியின் காரணமாகவும், போர்க்களத்தில் பலியாகும் விதத்தில் அனுப்பிய காரணத்தினாலும் அவர்களது மனங்களில் ஆட்சியாளர்களின் மேல் கோபக் கனல் உருவாகியது. சீருடையில் இருக்கும் விவசாயிகளின் இத்தகைய கோபத்தை ஒருங்கிணைத்து புரட்சியை நோக்கி கொண்டு செல்லலாமா என்ற கேள்வியை லெனின் தோழர்களிடம் எழுப்பினார். புரட்சியின் முக்கிய முழக்கங்களாக நில உரிமையும், சமாதானமும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. போல்ஷ்விக் புரட்சியின் இந்த புத்தம் புதிய தன்மை மார்க்சிய தத்துவத்தின் ஆழத்தையும் வீச்சினையும் விரிவாக்கியது. இதுவே நடைமுறையை சாத்தியமாக்கும் திட்டவட்டமான கொள்கையாக அமைந்ததுடன் மனிதகுல வரலாற்றின் முதல் சோசலிச புரட்சிக்கும் வித்திட்டது. ஆம் அதுதான் முதல் புரட்சி; இறுதியானதல்ல.

ரஷ்யாவின் இரண்டு பகுதிகள்

இரண்டு கண்டங்களில் பரந்து விரிந்துள்ள மாபெரும் நாடு, ரஷ்யா. அதன் பெரு நகரங்கள், அரசியல் மற்றும் நிதியதிகாரத்தின் மையங்கள், தொழிற்சாலைகள், முதலாளிகள், உழைக்கும் வர்க்கங்கள் ஆகியன  ஐரோப்பிய கண்டத்தில், அதிலும் குறிப்பாக, அதன் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ளன. விவசாயிகளும், ரஷ்யாவின் காலனிகளும் ஆசியாவில் இருந்தன. லெனினும் அவரது தோழர்களும் அந்நாட்டின் இரு பகுதியினருக்கும் ஏற்றவாறு உத்தியை வடிவமைக்க வேண்டியிருந்தது. இதிலிருந்துதான் புரட்சியின் மாபெரும் உண்மை பிறப்பெடுத்தது. ஐரோப்பிய சமூக ஜனநாயக இயக்கத்தின் வரலாற்றில், காலனி நாடுகளின் விடுதலை ஒரு உடனடி சமூகப் பணியாக கருதப்பட்டிருக்கவில்லை. விவசாய வர்க்கம், ஆற்றல் வளமிக்க புரட்சிகரத் தன்மை மிகுந்ததாக பார்க்கப்படவும் இல்லை. பாதி ஐரோப்பியர்களையும் பாதி ஆசியர்களையும் கொண்டிருந்த ரஷ்யாவில்தான் இந்த சிந்தனை நம்பிக்கையோடு எழுவது சாத்தியமானது. சமூக ஜனநாயகவாதிகளை உள்ளடக்கிய மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான மக்கள், ரஷ்யாவை ஆசியாவாகவும், அரை-ஆசியாவாக,… என பல கோணங்களில் இகழ்ந்தார்கள். அந்த வகைப்பட்ட ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகள், புரட்சியை சாத்தியமாக்க முடியாமல் தோற்றது மட்டுமல்லாமல், ஜெர்மானிய புரட்சியை ஒடுக்கும் சக்திகளோடு கைகோர்க்கவும் செய்தார்கள். எனவே அவர்கள் தவிர்க்கவியலாமல் உலக கம்யூனிச எதிர்ப்பு சக்திகளின் பகுதியாகிப் போனார்கள். போல்ஷெவிக் புரட்சி, ஐரோப்பாவில் நடக்காத காரணத்தினால் அது ‘மேம்பட்ட’ ஒன்றல்ல; தோல்வியைத்தான் தழுவும் என்ற கருத்தினை முன்வைத்தார்கள். 1919 ஜனவரி 15 ஆம் தேதி ஜெர்மனியில், வெய்மர் ஜெர்மனியின் சமூக ஜனநாயக அரசாங்கத்தின் ஆதரவுடன், பாசிச குண்டர்கள் ரோசா லக்சம்பர்க்கினை கொலை செய்தார்கள். இந்தக் கொலை, பிறகு நடக்கவுள்ள நிகழ்வுகளை உணர்த்தும் குறியீடாக அமைந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகும் கூட, மேற்குலகின் அறிவஜீவிகளால் அரசியல் பொருளாதாரம், தத்துவம் மற்றும் இலக்கிய கருதுகோள்களில் மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுக்க முடிந்தது. ஆயினும் சோசலிச புரட்சிக்கான சாத்தியம் எதுவும் அங்கு தென்படவே இல்லை. சமூக ஜனநாயக அரசாங்கங்கள், முத்தரப்பு ஆணையத்திலும், நேட்டோவிலும் ஏகாதிபத்தியத்தின் தரப்பில் நங்கூரமிட்டிருந்தன.

கடந்த கால வாக்குறுதிகள்

1917 அக்டோபர் மாதம் பற்றிய பார்வைகளில் ஒன்று இது; முற்றிலும் புதுமையான தருணம்; புதிய தொடக்கம். கடந்த காலத்தில் தரப்பட்ட வாக்குறுதிகளெல்லாம் மீட்டெடுக்கப்பட்ட தருணமாகவும் ஒருவர் இதனை சிந்திக்கலாம். மார்க்சும், லெனினும் மகத்தான பிரெஞ்சுப் புரட்சின் பாரம்பரிய கூறுகளை தெளிவாக அறிந்திருந்தார்கள். அதில், க்ராகஸ் பாபெஃப் ( GRACCHUS BABEUF) தலைமையில் செயல்பட்ட அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘சமமானவர்களின் சதித்திட்டத்தின்’, வலிமையான கம்யூனிச தன்மையும் இருந்தது. ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொண்ட ஜாகோபின் அமைப்பின் விரிவான கம்யூனிச அணுகுமுறையும் இருந்தது. 1871  பாரிஸ் கம்யூன்,  1905 ரஷ்யப் புரட்சி மற்றும் பிப்ரவரி 1917 புரட்சி ஆகியவைகளை உருவாக்கிய அதே காரணிகளுடைய சக்திவாய்ந்த பரிணாமங்கள் போல்ஷெவிக் புரட்சியிலும் இருப்பதாக லெனின் கருதினார். பொதுமை அரசு (“The Commune state”) என்று லெனின் குறிப்பிட்ட விடுதலைக்கான முன்மாதிரியை உருவாக்கும் பணியில் 40 ஆயிரம் கம்யூனிஸ்டுகள் தங்கள் உயிர்களை இழந்தார்கள். இந்த அரசுதான் அவர் கற்பனை செய்த ஒன்று. அதிகாரத்தின் புரட்சிகர மறுசீரமைப்பு: அதுவொரு ஆழமான, தீவிரமான ஜனநாயக வடிவம்; தாராளவாத ஜனநாயகத்தின் வடிவம் அல்ல.

பிரெஞ்சு அரசியல், ஜெர்மானிய தத்துவம் மற்றும் ரஷ்ய இலக்கியத்தின் மரபுகளுடைய வழித்தோன்றலும், நன்கு அறியப்பட்ட ரஷ்ய அறிவு ஜீவியுமான அலெக்சாண்டர் ஹெர்சென், அடிமைத்தனம் அழிக்கப்படுவதற்கு முன்பே, 1850களின் தொடக்கத்திலேயே துல்லியமாக இவ்வாறு கூறினார்: “விவசாயியே எதிர்கால ரஷ்யாவின் மனிதன்”. இதே காலகட்டத்தில் கிரிமியாவில் நடந்த போருக்குப்பின் பழைய நிலப்பிரபுத்துவத்தின் தன்னம்பிக்கை நெருக்கடிக்கு ஆளானது. அவர்கள்தான் அடிமைத்தனத்தின் பயனாளிகளாக இருந்தனர். சமூக சீர்திருத்தமும், நவீனமயமும், தொழில்மயமும், மேற்கத்திய போக்கும் அவர்களை கதறச் செய்தன. இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக 1861 ஆம் ஆண்டில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. எனினும் அரைகுறை மனதோடே அது ஒழிக்கப்பட்டது. பழைய நிலப்பிரபுத்துவ முதலாளிகள் தங்கள் நிலங்களில் பாதியை, குறிப்பாக வளமான செழிப்புமிக்க நிலங்களை, தம்மிடமே தக்கவைத்துக்கொண்டார்கள். தனியார் நிலவுடமையாளர்களாக மாறினார்கள். பெரும்பாலான நிலங்கள் விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யப்படவில்லை. சமுதாய கூட்டுக்குழுவிற்கு வழங்கப்பட்டது (சமுதாய கூட்டுக்குழு MIR என அழைக்கப்பட்டது). விடுதலை பெற்ற அடிமைகளில் 40 சதவீதம் பேருக்கு 15% நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த நிலங்களில் பெரும்பான்மையானவை, குறைந்த விளைச்சலே இருந்ததனால் வருமானம் உயிர்வாழ சொற்பமாக இருந்தது. இந்த நிலத்திற்கும் அவர்கள் 49 வருட காலம் தவணை செலுத்திட வேண்டும் (இத்தகைய தவணைகள் 1905 புரட்சிக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டன). மேலும், பேரரசின் படை அணிகளுக்கு விவசாய மகன்களே நியமனம் பெற்றனர்.

19ஆம் நூற்றாண்டின் பிந்தைய பத்தாண்டுகளில், ரஷ்யாவில் பல தீவிரமான அறிவாளிகள் உருவானார்கள். அவர்களில் வெகு சிலரே நகர்ப்புறத்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் மீது தங்கள் கவனத்தை செலுத்தினார்கள்; அவர்கள் பெரும்பாலும் நரோத்நிக் (ஜனரஞ்சகவாதிகள்) என அறியப்பட்டார்கள் (ரஷ்ய மொழியில் நரோத் என்றால் மக்கள்). ஆனால் இவர்களும் பல குழுக்களாகப் பிரிந்திருந்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் அராஜகவாதத்தையும், தீவிர புரட்சிகர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தள்ளப்பட்டனர்.  அடிமைத்தனத்தை ஒழித்திட்ட பெருமைக்குரிய ஜார் பயங்கரவாத நடவடிக்கையில் கொல்லப்பட்டார் (19ஆம் நூற்றாண்டின் புரட்சிகர தீவிரவாதிகள் “செயல்பாட்டின் பிரச்சாரம்” என்று அறியப்பட்டார்கள்).

பிற்காலத்தில் பிரபலமாக அறியப்பட்ட, ஜார்ஜ் பிளக்கானொவ், வேரா ஜாசுலிச் என்பவரோடு கைகோர்த்தார். அவர்கள் 1882 காலகட்டத்தில் ரஷ்யாவின் முதல் மார்க்சிஸ்ட் குழுவினை உருவாக்கினர். வேரா ஜாசுலிச், புரட்சிகர கொலையாளியாக பின் நாட்களில் மாறிவிட்டார் (அவர் பார்ப்பதற்கு பேரழகாகவும் இருப்பார்). எப்படியாயினும், ஒரு முறையான, மார்க்சிய அரசியல் கட்சியான – ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி 1898ஆம் ஆண்டில்தான் உருவானது. ஐந்தாண்டுகள் கழித்து 1903ஆம் ஆண்டில் இரண்டாக உடைந்தது. சிறுபான்மையான மென்ஷ்விக்குகளும், பெரும்பான்மையான போல்ஷ்விக்குகளும் சமரசம் செய்ய முடியாத இரு பிரிவுகளாகப் பிரிந்தார்கள். லண்டனில் நடந்த கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்ட 51 பிரதிநிதிகள் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள நேர்ந்த சமயத்தில்தான் அவர்களின் இந்தப் பெயர்கள் உருவாகின. மார்டொவ் குழுவில் சில உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. லெனின் குழுவினர் முக்கியத்துவம் வாய்ந்த அளவில் பெரும்பான்மையாக பங்கேற்றார்கள்.

ரஷ்ய நாட்டின் அறிவுஜீவுகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மத்தியில் மார்க்ஸ் அறியப்படாமல் இல்லை. சிலர் அவருடன் நேரடி தொடர்பில் இருந்தனர். அவர்கள் மார்க்சிடம் முன்வைத்த கேள்வி: பாரம்பரிய ரஷ்ய குழு வாழ்வு (Russian commune) புரட்சி உருவாவதற்கும் சோஷலிச சமூக உருவாக்கத்திற்கும் அடித்தளமாக இருக்கிறதா? மார்க்ஸ் ஒரு நீண்ட தயக்கத்திற்கு பின், ரஷ்ய வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் பல வருடங்கள் மூழ்கினார். இந்த ஆய்வின் ஒரு கட்டத்தில் நிபந்தனைக்குட்பட்ட பதிலை அளித்தார். ஆம்! முதலாளித்துவ கட்டத்தைக் கடக்காமல், சோஷலிசத்தை நோக்கிய மாற்றம் சாத்தியம்; ஆனால் அத்தகைய புரட்சி நடக்க வேண்டும் என்றால், ரஷ்ய மக்களுக்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் உதவி தேவை. இப்பிரச்சினை குறித்த இரண்டு அம்சங்கள் குறிப்பிடத்தகுந்தவை. முதலாவது, ரஷ்ய கம்யூனிஸ்டுகளில் பெரும்பான்மையானவர்கள், போல்ஷெவிக்குகளில் பெரும்பான்மை உட்பட – முதலாளித்துவ கட்டத்தை கடப்பது அவசியமானது என்று நம்பினார்கள். பொருளாதார கட்டமைப்பில் மட்டுமல்ல; பாராளுமன்ற தாராளவாத ஜனநாயகத்தை கட்டமைக்க வேண்டும் எனவும் நினைத்தனர். சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வதற்கு அது அவசியம் என்று நினைத்தார்கள். [அதுதான் வரலாற்று நிலைகளின் கருதுகோள் என்று பிரபலமாக அறியப்படுகிறது (the famous theory of stages)].

இந்த விசயத்தில் லெனினின் தரப்பு, அக்டோபர் புரட்சிக்கு 2 மாதங்கள் முன்பு வரைக்கும் மிகச் சிறுபான்மையாகவே இருந்தது. ஒவ்வொரு முதலாளித்துவ நெருக்கடியையும், புரட்சிகர நெருக்கடியாக மாற்ற முயற்சிப்பதுதான் புரட்சிகர கட்சியின் பிரதான கடமை என்பதால், தாராளவாத ஜனநாயக காலகட்டம் உழைக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கு பயனற்ற கட்டமாக அமைந்துவிடும் என்று அவர் நம்பினார். இரண்டாவதாக, சூழ்நிலைகள் முதிர்ச்சியடையும் போது புரட்சிகர சக்திகள் ரஷ்யாவில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று அவர் கருதினார். ஆனால் அதே சமயத்தில், பிற ஐரோப்பிய நாடுகளில் புரட்சி வெற்றிகரமாக இடம் பெறாத வரை, ரஷ்யாவில் சோஷலிச சமூகத்தை கட்டமைக்க இயலாது என்றும் நினைத்தார். இந்த விசயத்தில் மார்க்சும் லெனினும் ஒத்துப்போனார்கள். ரஷ்யாவின் புரட்சிக்கு, ஐரோப்பிய நாடுகளின் முன்னேறிய பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவு தேவைப்படும் என்று இருவருமே நினைத்தனர்.

முதலாம் உலகப் போரினால், ஐரோப்பிய நெருக்கடி கட்டவிழ்க்கப்பட்டபோது, பல நாடுகளில், அதிலும் குறிப்பாக ஜெர்மனியில், வெற்றிகரமான புரட்சியை சாதிப்பார்கள் என்று லெனின் நம்பிக்கையோடு இருந்தார். எனவே அந்த கணிப்பில் இருந்து அவர் ஐரோப்பிய புரட்சிக்கான முன்னுரையாக ரஷ்ய புரட்சி அமைந்திடும் என்று நம்பினார். அந்த நம்பிக்கை கேள்விக்குறியானது. போருக்கு பின் ஐரோப்பாவில், அதிலும் குறிப்பாக ஜெர்மனியில், புரட்சிகர மார்க்சிசம் அல்லாமல் பாசிசமே தழைத்தது.  வரலாறு கண்ட முதல் வெற்றிகரமான புரட்சிக்கு பின் (ரஷ்ய புரட்சிக்கு பின்) பல வெற்றியடையாத பதிவுகளையே காண நேர்ந்தது. ஐரோப்பாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட புரட்சிகளுடைய இத்தகைய தோல்வியின் பின்னணியில், நிக்கோலாய் புகாரின், ஸ்டாலினுக்காகவும், சோவியத் அரசாங்கங்களுக்குமான வாதத்தில் புதிய கருதுகோளை முன்வைத்தார்: அந்த கருதுகோள்தான் ‘ஒரு நாட்டில் சோசலிசம்’.

புதிய முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சி

கிரிமியப் போரில் ரஷ்யா அடைந்த தோல்வி பன்முக நெருக்கடிகளை உருவாக்கியது. இதுவே அடிமைத்தன ஒழிப்பிற்கு வித்திட்டது. மேலும், நவீனமயமாதலுக்கும், தொழில்மயமாதலுக்கும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிலிருந்து பெருமளவு மூலதனம் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. தொழிலிலும் நிதியிலும் அடித்தட்டில் இருந்த ஒரு புதிய முதலாளித்துவ வர்க்கம் படிப்படியாக வளர்ந்தது. அதோடு, விவசாயத்தில் இயந்திரமயமாதலை ஏற்படுத்த விரும்புகிற, தனியார் நில உரிமைகளைக் கொண்டுள்ள,  ஒரு புதிய நிலப்பரபுத்துவ வர்க்கமும் வளர்ந்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில், 1899-இல் லெனின், தன்னுடைய, “ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி” என்ற நூலை வெளியிட்டார்.

இதில், நாடு விரிவான மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது என்றும், அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதனால் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் விவசாயிகளோடு கூட்டாக பாட்டாளிகளின் புரட்சிக்கான சூழல் உருவாகியுள்ளது என்றும் வாதிடுகிறார். ஜார் ஆட்சியின் எதேச்சதிகார சூழலில், எதேச்சதிகாரத்துடன் நட்புறவும், அரசியல் உறுதியற்ற தாராளவாத போக்கும் கொண்ட முதலாளிகளையும், அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும் கொண்டு புதிய புரட்சியை உருவாக்குவது எப்படி? இந்தக் கேள்விக்கு பதிலாக, போல்ஷெவிக் பாரம்பரியத்தை விளக்கும் முதல் முக்கியப் படைப்பாக 1902ஆம் ஆண்டில் வெளியான ‘என்ன செய்ய வேண்டும்’ அமைந்தது. (லெனின் அவர்கள் இந்த தலைப்பினை நிக்கோலாய் செர்ன்செவ்ஸ்கி எழுதிய, மிகவும் கொண்டாடப்பட்ட நாவலில் இருந்து பெற்றார். 1863ஆம் ஆண்டுகளில் இந்த நாவல் ரஷ்ய இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுக்கக்கூடிய ஒரு படைப்பாக இருந்தது)

இதற்கிடையில் ஜார் மன்னரின் ஆட்சி சில திட்டங்களை வகுத்தது. கொரிய தீபகற்பத்திலும், மங்கோலியா மற்றும் மஞ்சூரியாவிலும், கிழக்கே தொலை தூரத்தில் உள்ள எல்லைகளில் காலனிய பகுதிகளை கைப்பற்றியது. இந்தப் போக்கில், ஜார் ஆட்சி ஜப்பானின் செல்வாக்குப் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்தது. ஜப்பானியர்களை இழிவாக நடத்தியதுடன், அவர்களுடைய ராணுவ பலத்தை குறைவாக மதிப்பிட்டு, தன்னுடைய ராணுவத்தின் சாத்தியக் குறைபாடுகளை தள்ளுபடி செய்து, 1904ஆம் ஆண்டில் ஜப்பானின் மீது போர் தொடுத்தது. இதனால் அது தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சமூக-பொருளாதார நெருக்கடிகள் வெடித்தன.

1905ஆம் ஆண்டு ஜனவரியில் முதலில் தொழில்மயமான நகரங்களிலும், பின்னர் சாம்ராஜ்ஜியம் முழுவதுமாகவும் போராட்ட அலையடித்தது. இதில் புதிய விசயம் என்னவென்றால் பெண்கள் அவரவராகவே மிகப்பெரும் எண்ணிக்கையில் திரளத் தொடங்கினர். வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்களிடமிருந்து கீழ்தட்டு நடுத்தர வர்க்கத்தின் பல பிரிவுகளுக்கும், அதிலும் குறிப்பாக, சிறு முதலாளிகள் மத்தியிலும் பரவத் தொடங்கின. ஆனால் 1917ஆம் ஆண்டில் நடக்கவிருந்த புரட்சிக்கும் இதற்குமான வேறுபாடு என்னவென்றால், ஆங்காங்கே ஏற்பட்ட சில தொந்தரவுகளைத் தாண்டி விவசாயிகள் நகர்ப்புற எழுச்சியிலிருந்து பெரும்பாலும் விலகியே இருந்தார்கள். அடுத்தடுத்த தோல்விக்கு பிறகும், போர்களின் பாதிப்புகளுக்கு பிறகும், ராணுவ வீரர்கள் ஆட்சி அதிகாரத்திற்கே விசுவாசமான இருந்தார்கள். இதற்கு மாறாக, உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணம் வரலாற்றுச் சிறப்புடையதாக இருந்தது. ஐரோப்பிய ரஷ்யாவின் பாதி பாட்டாளிகள் தொழில்துறை அதிகமுள்ள இடங்களில் ஆண்டுக்கு ஒருமுறையோ, அதைவிட கூடுதலாகவோ வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டார்கள். தொழிற்சங்கமாக இணைதல் பிரம்மிக்கத்தக்க அளவில் அதிகமாக இருந்தது.

அந்த காலத்தில் போல்ஷெவிக்குகள், எண்ணிக்கையில் குறைந்தவர்களாகவும், அனுபவமற்றவர்களாகவும் இருந்தனர். இராணுவ வீரர்களின் மத்தியில் பணியாற்றாதவர்களாகவும், விவசாயிகளோடு மேலோட்டமான உறவு கொண்டவர்களாகவும், ஒட்டுமொத்தத்தில், ஒரு புதிய புரட்சிகர கட்சியாகவும் இருந்தார்கள். லெனின் தனது சொந்த சிந்தனையில் 1905ஆம் ஆண்டு புரட்சியின் நிகழ்வுகளைப் பற்றி 400 பக்கங்களில் ஏராளமாக எழுதினார். ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் தீர்க்கமான புரட்சிகர வர்க்கமாக எழுந்து வருவதாகவும், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு தலைமை தாங்கிடவும், தனது தலைமையின் கீழ் விவசாயிகள் உள்ளிட்ட மக்களைத் திரட்டும் நிலையில் இருப்பதாகவும் முடிவிற்கு வந்தார். மேலும் அவர், ரஷ்யாவின் முதலாளிகள், ஜாரின் எதேச்சாதிகாரத்தையோ, மேற்கு ஐரோப்பாவின் முன்னேறிய முதலாளித்துவ வர்க்கங்களையோ எதிர்ப்பார்கள் என்பது தவறான எதிர்பார்ப்பு என்ற முடிவுக்கும் வந்தார். மென்ஷ்விக்குகள் நம்பியது போல், சுதந்திரமான, ஒத்திசைவான, தாராளவாத முதலாளித்துவ குடியரசை அமைப்பது சாத்தியமற்றது என்பதுதான் அவரின் முடிவு.

புதிய புரட்சி என்பது நேரடியாக சோஷலிச பாதையிலே செல்ல வேண்டும் என்றார். வர்க்க பலாபலம் சாதகமாக மாறிவிட்டன என்றும் அவர் முடிவு செய்தார். உழைக்கும் வர்க்கத்தை ஒட்டு மொத்தமாக வழிநடத்த, எந்த ஒரு புரட்சிகர முன்னணியும் இல்லை என்கிற முக்கிய காரணத்தினாலேயே 1905-ஆம் புரட்சி தோல்வியுற்றது என்றும், உழைப்பாளர்-விவசாயி கூட்டணியை செயலூக்கம் கொண்டதாகத் தயார்படுத்த வேண்டும் என்றும் கருதினார். சுருங்கக் கூறினால் 1917-இல் அவர் கையாண்ட கொள்கை வரையறைகள் என்பது 1905 -இல் நிகழ்ந்தவற்றின் பிரதிபலிப்பே!

மென்ஷ்விக்குகளிடமிருந்தும், அகிலத்திடமிருந்தும் பிரிவு

அடுத்த பத்தாண்டுகளில் போல்ஷ்விக்குகள் எண்ணிக்கை அதிகமானது. உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் குறிப்பாகவும், பிற சமூக பிரிவினர்களிடையேயும் கூடுதல் இணக்கத்தோடும், களப் பணிகளில் மிகப்பெரிய அனுபவங்களோடும், கூடுதலான பயிற்சிபெற்ற நிலைமையை அடைந்தார்கள். 1912ஆம் ஆண்டில் மென்ஷ்விக்குகளிடம் இருந்து முழுவதுமாக பிரிந்தார்கள். முதல் உலகப்போர் மூண்டபோது, இரண்டாம் அகிலத்தின் உறுப்பாக இருந்த பல (கம்யூனிஸ்ட்) கட்சிகள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு (போரில்) ஆதரவு வழங்கிய சமயத்தில், போல்ஷெவிக்குகளுக்கு தலைமை வகித்த லெனின் அகிலத்தில் இருந்து வெளியேறினார். அவர் இந்த போர், காலனி ஆதிக்க நாடுகளை தங்களுக்குள் மறுபங்கீடு செய்துகொள்ள நடக்கும் ‘ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர்’ என்ற வரையறையை முன்வைத்தார். பல லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைத்த அந்தப் போரில் 60 லட்சம் பேர் மடிந்தனர். அத்தகைய போரை ஆதரிப்பது, அதிலும் குறிப்பாகத் தங்களை சோஷலிஸ்ட் என்றும், புரட்சிகரமானவர்கள் என்றும் கூறிக்கொள்ளும் கட்சிகளின் ஆதரவு, ஒரு குற்றச் செயல் ஆகும்.   அத்தகைய கட்சிகளோடு இணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லாத ஒன்று. அவர்களிடமிருந்து போல்ஷெவிக்குகள் உடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், புரட்சியை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தவேண்டியதும் இருந்தது. இந்த அனைத்திலும் லெனின் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் புரட்சிகர நெறிமுறைகளுக்கு உட்பட்டவராக, விசுவாசமானவராக இருந்தார்.

இருப்பினும், ரஷ்யாவில் புரட்சிகர சாத்தியக்கூறுகள் மேலெழுந்த சமயத்தில் போல்ஷெவிக்குகள், ரஷ்யாவிற்கு உள்ளேயும், அகிலத்திலும் இருந்த சோசலிச அமைப்புகளிடம் இருந்தும் முழுவதுமாக விலகியிருந்தார்கள். இப்படிப்பட்ட கூட்டணியை கைவிடாமலே ஒரு வெற்றிகரமான, வரலாற்றில் ஈடு இணையில்லாத புரட்சியை உருவாக்குவது லெனினுக்கு சாத்தியமாக இருந்திருக்காது. இருப்பினும், அந்த விலகலும், வெளியில் இருந்து ஆதரவு இல்லாத சூழலும், தாங்கொணா பாதிப்புகளை உருவாக்கியிருந்ததும் உண்மையே.

உலகப்போர் ஏற்படுத்திய நெருக்கடிகளும், அக்டோபர் புரட்சியின் வெடிப்பும் இணைந்து ஐரோப்பா முழுவதும் புரட்சிக் கனலை பற்றவைக்கும் என்று லெனின் நம்பினார். ஆனால் அந்த புரட்சிக்கு தலைமை தாங்கப்போவது யார்? ஐரோப்பிய நாடுகளில் எல்லா சோசலிச, சமூக ஜனநாயக கட்சிகளும் அந்தந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடன் இணைந்திருந்தார்கள். இந்த நாடுகளில் கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. அவர்களை, முதலாளித்துவ வர்க்கத்தினர் மட்டுமல்லாமல், சமூக ஜனநாயகவாதிகளும் தாக்கினர். ரோம் நகரில், பெனிட்டோ முசோலினியின் தலைமையில் நடந்த பேரணி, பாசிசம் மேலோங்குவதை எடுத்துக் காட்டியது.

இதற்கு 18 மாதங்களுக்கு முன் கிராம்சி மற்றும் போர்ட்டிகாவின் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டிருந்தது. அக்டோபர் புரட்சி நடந்ஹதவுடனேயே ஜெர்மனியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி அதனை கண்டித்தது. போருக்கு பின் அந்தக் கட்சிதான் ஆளும் கட்சியானது. ரோசா லக்சம்பெர்க் தனது ஸ்பார்ட்டகஸ் லீக் அமைப்பினை ஜெர்மானிய கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றினார். ஓராண்டுக்கு பின் 1919 ஜனவரி மாதத்தில் அவருடைய கொலையை ஆளும் கட்சி வேடிக்கை பார்த்தது. ‘ஐரோப்பிய புரட்சிகள்’ என்ற லெனினுடைய நம்பிக்கை உண்மையில் ஜெர்மனியை மையமிட்டதாகத்தான் இருந்தது. மேற்சொன்ன நிகழ்வுக்கு பின் அந்த நம்பிக்கை கற்பனையாகவும், அடிப்படையற்றதாகவும் மாறிப்போனது. லெனினுடைய கணக்கு பொய்த்துப்போன அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறியது.

கிரீமியாவில் நடந்த போரில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. தொழில்மயம் துரிதமானது. சீர்திருத்தங்கள் எழுந்தன. மறுபக்கத்தில், இதன் விளைவாக, தீவிர சிந்தனையாளர்கள் உருவானார்கள், ஜனரஞ்சகவாதிகள், அராஜகவாதிகள், புரட்சிகர தீவிரவாதிகளும், ஏன் சோசலிசவாதிகளும் கூட உருவானார்கள். மேற்சொன்ன அனைவரும், ஒருவர் மீது இன்னொருவர் தாக்கம் செலுத்துவோராகவும், இணைந்து செயல்படுவோராகவும் இருந்தனர். 1904 ரஷ்ய – ஜப்பானிய போரின் விளைவாக 1905 புரட்சி ஏற்பட்டது. இது 1917 புரட்சிக்கான முன்னோட்டமாக அமைந்தது. முதலாம் உலகப்போர், போல்ஷெவிக் புரட்சிக்கான சூழலை உருவாக்கிட உதவியது. அதைப் போலவே இரண்டாம் உலகப்போர் சீனப் புரட்சிக்கு தேவையான பின்னணி சூழலை உருவாக்கியது. மேலும், தென்கிழக்கு ஐரோப்பாவில் பல நாடுகளில் சோசலிச அரசாங்கங்கள் உருவாவதற்கும் காரணமாக அமைந்தது. இவையே, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போர்களின் நோக்கமற்ற உடன் விளைவுகளாகும்.

பெண்களின் பேரணி

1917ஆம் ஆண்டு புரட்சியின் முதல் தவணையாக, பிப்ரவரி மாத கடைசியில் நடந்த பிரம்மாண்டமான மகளிர் பேரணியை குறிப்பிடலாம். உணவுத் தட்டுப்பாடு பிரச்சனையை எழுப்பிய அவர்கள், தொழிற்சாலைகளுக்குச் சென்று, தொழிலாளர்களைத் திரட்டி தம்மோடு இணைத்துக் கொண்டார்கள். இதற்கு ஓராண்டு முன்பாகவே, வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடங்கியிருந்தன. தற்போது அவை காட்டுத்தீ போல் பரவி அதிகரித்தன. முக்கியமான இரண்டு கோரிக்கைகளாக, உணவும் சமாதானமும் முன்வந்தது. விரைவிலேயே அந்தப் போராட்டம் முக்கியமான தருணத்தை எட்டியது. பிப்ரவரி மாதத்தில் 25-27 காலகட்டத்தில், எதிர்ப்பாளர்களைச் சுடும்படி ராணுவ வீரர்களுக்கு உத்தரவு வந்தது. அவர்களோ, காவல்துறையினரைச் சுட்டுவிட்டு, போராடும் தொழிலாளர்களோடு இணைந்தார்கள். அதற்கு பிறகு பாலங்களும், ஆயுதக் கிடங்குகளும், ரயில் நிலையங்களும் என மூலதனத்தின் பெரும்பகுதியானவை தொழிலாளிகளின் கைகளுக்கு மாறின.

தொழிலாளர்கள் சோவியத்தினை (மக்கள் சபை) நிறுவினார்கள். போராட்டங்கள் பிற நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் பரவியது. தொழிலாளர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் வலுவான பரந்த கூட்டணி உருவாகத் தொடங்கியது. நகர்ப் புறத்தில் பணியில் இருந்தபோதும் கீழ்ப்படியாத வீரர்களும், ராணுவத்திலிருந்து கைவிடப்பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறி வருவோரும் இதில் அடங்குவர். மார்ச் மாதத்தின் மத்தியில் ஜார் தனது பதவியை விட்டு விலகினார். 300 ஆண்டுகால ரொமனோவ் ஆட்சி முடிவுக்கு வந்து, அந்த இடத்தில் தற்காலிக அரசாங்கம் அமைந்தது. துரிதமாக மாறிவந்த சூழலில், மென்ஷ்விக்குகளும் புரட்சிகர சோசலிஸ்டுகள் உள்ளிட்ட வலதுசாரி சோசலிஸ்டுகள், கிரிகோரி சினொவிவ், ஜோசப் ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் உள்ளிட்ட பல போல்ஷெவிக்குகள் தற்காலிக அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கும் நிலையை எடுத்தார்கள். ஒரு நிலையான, முறையான முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு உருவாக அரசாங்கத்திற்கு உதவினர். மேலும், பேச்சுரிமை, தேர்தல்கள், அரசியலமைப்பு நிர்வாகம் ஆகியவைகளை உள்ளடக்கிய உறுதிசெய்யப்பட்ட பரந்த உரிமைகளைப் பெற்றிடவும் முயற்சித்தனர். மீண்டும் ஜார் ஆட்சி வராமல் தடுக்கும் விதத்தில், போல்ஷ்விக்குகளையும் மென்ஷ்விக்குகளையும் இணைத்து வலிமையான சோஷலிச அமைப்பை உருவாக்குவதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.

ஏப்ரல் ஆய்வறிக்கைகள்

ஜூரிச்சிற்கு நாடு கடத்தப்பட்ட லெனின் மேற்கண்ட நிகழ்வுகளை கவனத்துடன் பின்பற்றி வந்தார். அவருடைய பிரபலமான ‘தொலைவில் இருந்து மூன்று கடிதங்களை’ கட்சியின் போர்வாளான பிராவ்தா இதழுக்கு அனுப்பினார். நாடு திரும்பிய பின், பிரபலமான ‘ஏப்ரல் ஆய்வறிக்கைகளை’ வழங்கினார். இதில் தற்காலிக அரசாங்கத்திற்கு ஆதரவாக வளர்ந்துவரும் கருத்தொற்றுமைக்கு தீவிரமான மறுப்பு இடம்பெற்றதுடன் தாராளவாத ஜனநாயக குடியரசை நிறுவவேண்டும் என்ற கருத்தும் சொல்லப்பட்டிருந்தது. தீவிரமாக மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டினை அவர் முன்வைத்தார். அவருடைய இணையர் நதேழ்தா குரூப்ஸ்காயா மற்றும் நெருங்கிய தோழர் ஆகியோர் லெனினுக்கு தற்காலிகமாக பித்துப்பிடித்திருப்பதாக நினைத்தார்கள். போல்ஷெவிக்குகளின் அமைப்பிற்கு அவர்தான் ஸ்தாபக தலைவர். ஆனால் இந்தச் சூழலில் கட்சியில் இருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். எனவே தன்னுடைய ஆய்வறிக்கையினை ‘தனிப்பட்ட’ அறிக்கையாகவே முன்வைத்தார்.

மார்ச் – ஏப்ரல் 1917 காலகட்டத்தில் முன்வைக்கப்பட்ட அவருடைய வாதங்களை சுருக்கமாக கீழே வழங்குகிறேன். முக்கியமான கருத்துக்களின் சுருக்கத்தை சில இடங்களில் நேரடியாகவும் அளித்திருக்கிறேன்.

  1. பிப்ரவரி புரட்சியினை, ஏகாதிபத்திய சக்திகளே நேரடியாக தோற்றுவித்தனர்.
  2. முடியாட்சியின் அதிவிரைவான வீழ்ச்சிக்கு ஒரு காரணம், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு நாட்டு முதலாளிகள், பலவீனமான ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தோடு செய்துகொண்ட சதி உடன்படிக்கையாகும். டூமாவில் இருந்த முதலாளித்துவ பிரதிநிதிகள், ராணுவ ஜெனரல்கள், அதிகாரிகளோடு கைகோர்த்து ஜாரின் ஆட்சியை தூக்கியெறிவதன் மூலம், நடந்துகொண்டிருக்கும் புரட்சியை கட்டுப்படுத்தி, தாராளவாத, அரசமைப்புக்கு உட்பட்ட, முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் மேம்போக்கான சீர்திருத்தங்களை முன்வைத்து, மக்களின் அதிருப்தியை சமாளிக்க முயல்கின்றனர்.
  3. 1905-07 காலகட்டத்தில் படிப்பினைகளை பெற்ற பாட்டாளி வர்க்கம், முதிர்ச்சியடைந்துள்ளது. முதல் நிலையில் இருந்து இரண்டாவது நிலைக்கு, அதாவது பாட்டாளி வர்க்க புரட்சியின் நிலைக்கு தலைமை தாங்குவதற்கு தயாரான நிலையில் இருக்கிறது.
  4.  சோசலிச புரட்சிக்கு முன்னேறாமல், நிலையான முதலாளித்துவ ஜனநாயக கட்டத்தினை முன்வைக்கும் மென்ஷ்விக்குகளும், சோசலிச புரட்சியாளர்களும் நடைமுறையில் உள்நாட்டு – அன்னிய மூலதனத்திற்கு கூட்டாளிகளாகவும், சேவகர்களாகவும் செயல்படுகிறார்கள். அவர்களோடு கைகோர்ப்பது என்பது சாத்தியமில்லை.
  5. மத்தியில் தொடங்கி உள்ளூர் வரையிலும் ராணுவத்தையும், அதிகார வர்க்கத்தையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தற்காலிக அரசாங்கம் எடுத்து வருகிறது. இது தொடர்வதற்கு அனுமதித்தால், பெட்ரோகார்ட் சோவியத்தில் உருவாகி, நடப்பில் இருந்துவரும்  தொழிலாளர்களின் அரசாங்கத்தை விட பலம் பொருந்தியதாக மாறி சோவியத்தை விழுங்கக் கூடும்.
  6. தற்காலிக அரசாங்கத்தினால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது. ஏனெனில் அது பிரிட்டன் மற்றும் பிரான்சின் முன்னேறிய முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்ததாக உள்ளது. போரின் நோக்கங்களில் அவர்களுக்கும் பலன் உள்ளது.
  7. அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே, சமாதானம், உணவு, விடுதலை என்ற இரண்டு முழக்கங்களும் பிரிக்கமுடியாதவை.
  8. பாட்டாளிவர்க்க புரட்சியின் நோக்கத்தில், “அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, தொழிலாளர்களால் தலைமை தாங்கப்படுகிற போராளிகளை உருவாக்குவது… அது அனைவருக்குமான வெகுஜன அமைப்பாக இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுள்ள ஆண், பெண் இருவரையும் கொண்டிருக்க வேண்டும், இரண்டாவதாக அது காவலர்களின் பணியை மட்டும் மேற்கொள்ளாமல், பொதுவான அரசு, ராணுவ பணிகளையும் மட்டுமல்லாது, சமூக உற்பத்தியையும், விநியோகத்தையும்  மேற்கொள்ள வேண்டும்.

“நாடாளுமன்ற குடியரசாக அது இருக்கக் கூடாது, மாறாக, நாடு முழுவதும் உள்ள சோவியத் அமைப்புகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடைய குடியரசாக இருக்க வேண்டும்”

“காவல், இராணுவம் மற்றும் அதிகாரத்துவம் ஒழிக்கப்பட வேண்டும்”

“நிலப் பண்ணைகள் அனைத்தையும் கைப்பற்றிட வேண்டும்”

“பொதுமை அரசு” (“A Commune state”) ( அதாவது,  பாரிஸ் கம்யூன்- ஐ முன்மாதிரியாகக் கொண்ட அரசு என்று லெனின் அடிக்குறிப்பில் சேர்த்துள்ளார்)

மேலே குறிப்பிட்ட முதல் ஏழு கருத்துக்கள், அவரது எதிரிகளுடைய நிலைப்பாட்டிற்கு மாறானதாக இருந்ததுடன், அவருடன் நெருக்கமாக இயங்கியவர்களுடைய  நிலைப்பாட்டிற்கும் மாறானதாக இருந்தது. அத்துடன் எட்டாவது கருத்து, புரட்சிக்கு பிறகு எத்தகைய அரசியல் அமைய வேண்டும் என்பதை, லெனினின் நேரடியான வார்த்தைகளில் விவரிப்பதாக, அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. (ராணுவம் இல்லை; அதிகாரத்துவம் இல்லை; ஆயுதபாணியிலான மக்கள் திரள்)

லெனினுடைய ஆய்வறிக்கைகள் கட்சியின் செயல்பாட்டுக்கான திட்டமாக ஏற்கப்படவில்லை. ஆனால் அந்த அறிக்கைகள்தான் மென்ஷ்விக்குகளுடன் இணைந்து கொள்ளும் நடவடிக்கையை தடுத்தது. தற்காலிக அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்ளச் செய்தது. தாராள நாடாளுமன்ற குடியரசை அமைக்கும் முடிவில் இருந்து பின் வாங்கச் செய்து, கட்சியை காத்தது. இந்தத் தளத்தில் போராட்டங்கள் தொடர்ந்தன. தொழிலாளர்-விவசாயி கூட்டணியுடைய இணைந்த உத்தியும், போருக்கு எதிரான உறுதியான நிலைப்பாடும் பிரமிக்கத்தக்க கட்சி வளர்ச்சிக்கு உதவி செய்தன; ஆண்டின் தொடக்கத்தில் 8,000 உறுப்பினர்கள் கொண்டிருந்த போல்ஷ்விக்குகள் 3,00,000 உறுப்பினர்களை பெற்றதுடன், அந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு சோவியத் குடியரசிலும் பெரும்பான்மையைப் பெற்றனர். புரட்சியின்போது முளைத்த பிரபல அமைப்பு வடிவங்களில் போல்ஷ்விக்குகள் பெரும்பான்மை பெறும்போதுதான் ஆட்சியைப் பிடிப்பதை நோக்கி நகர எத்தனிக்க முடியும் என்று லெனின் வலியுறுத்தினார். செப்டம்பர் மாத இறுதியில் அந்த நிலையை அவர்கள் அடைந்தனர். எஞ்சியிருப்பது சரியான வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதும், சரியான நேரத்தில் தாக்குவதுமே ஆகும்.

ஐரோப்பாவிலிருந்து தொலைவில்

சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு ஒருவர் இவ்வாறு வாதிடலாம்: ஐரோப்பிய புரட்சிகளின் தோல்வி, லெனினையும் அவரது கூட்டாளிகளையும் ஆச்சரியப்பட வைத்தது. போல்ஷெவிக்குகளின் மெய்யான, நீண்டகால அணியை ஐரோப்பிய உழைக்கும் வர்க்கத்தோடு ஏற்படுத்திக் கொள்ள முடியாமல், காலனி ஆதிக்கத்தில் சிக்குண்ட நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திலேயே அடையாளம் காண முடிந்தது. அதிலும் குறிப்பாக, கம்யூனிஸ்டுகளும் அவர்களுடைய கூட்டணியும் தலைமையேற்று நடத்திய தேசிய விடுதலை இயக்கத்தில் அதனை கண்ணுற முடிந்தது. சுருக்கமாகச் சொல்வதெனில், லெனின் தனது பிரசுரம் ஒன்றில் குறிப்பிட்டதைப் போல, “பின் தங்கிய ஐரோப்பாவில்” இருந்து “முன்னேறிய ஆசியாவை” நோக்கிய மாற்றம்.

ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணியில் அடுத்த உடைப்பு அதீத தொழில்மயமான ஜெர்மனியில் நடக்காமல், பெரும்பான்மை விவசாயம் சார்ந்த நாடான சீனாவில் நடந்ததில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. சீனாவில் புரட்சியின் போது நகரத்துக்கு வெளியே ஊரகப் பகுதிகளில்தான் புரட்சிகர திறன்களும், விடுதலைப் படைகளும் வளர்ச்சியடைந்தன. விவசாயப் பிரச்சனைகளுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் எழுந்த தேசிய பிரச்சனைகளுக்கும், கம்யூனிச நடைமுறைகளின் மூலம் தீர்வு தேடிய முயற்சிகளில்தான் இறுதி வெற்றி சாத்தியமானது. சியாங் உடைய சொந்த பாணி “தேசியவாதிகள்”, ஜப்பானிய எதிர்ப்பு போராட்டத்தின் போது, மா சே துங்-இன் கம்யூனிஸ்டுகளிடம், தேசியவாத களத்திலேயே தோற்கடிக்கப்பட்டார்கள்.

சோவியத் ஒன்றியத்துடைய அடுத்தகட்ட பரிணாமங்களைப் பற்றி பல்வேறு எதிர்மறை அம்சங்களை ஒருவர் குறிப்பிடலாம். ஆனாலும், முக்கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் செயல்பட்ட தேசிய விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் ஒன்றியம் நிலையான, நீடித்த ஆதரவினை வழங்கியது. அணி சேரா நாடுகளாக இருந்த தேசிய முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் இந்த ஆதரவு வழங்கப்பட்டது. அவர்களில், இந்தியாவின் ஜவஹர்லால் நேருவும் இருந்தார். எகிப்தின் கமால் அப்டெல் நாசரும் இருந்தார். ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, சொந்த வளர்ச்சிப்பாதையில் முன்னே செல்ல அவர்கள் விரும்பினர். இந்த பரஸ்பர அனுதாபத்திற்கு மூலகாரணம் யாதெனில், ஏகாதிபத்தியம் கம்யூனிசத்திற்கு விரோதமாக இருந்துவருவதைப் போல், முக்கண்டத்தில் உள்ள நாடுகளின் பொருளாதார தேசியவாதத்திற்கு விரோதமாகவும் இருப்பதாகும்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொன்னதைப் போல, இந்த அக்டோபர் புரட்சிதான் மனித குல வரலாற்றில் கண்ட முதல் சோசலிச புரட்சியாகும்.

அதற்கு பிறகு, புரட்சிகர உந்துவிசையின் மையம் கிழக்கு நோக்கி நகர்ந்தது. அதிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி வந்த நாடுகளை நோக்கி நகர்ந்தது குறிப்பிடத்தக்கது. கம்யூனிசத்திற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் இடையிலான இத்தகைய கூட்டு, அக்டோபர் கம்யூனிச புரட்சியின் நீடித்த மரபாகத் தொடர்ந்து வருகிறது.

நன்றி: பிரண்ட்லைன்

தமிழில்: ஜெ. விஜயா



Leave a comment