இ.பா. சிந்தன்
(பெல்ஜியம் நாட்டில் மென்பொருள் துறையில் பணியாற்றிவரும் இ.பா. சிந்தன், உக்ரைனில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் எழுதி, பாரதி புத்தகாலயம் சமீபத்தில் வெளியிட்ட நூலின் பகுதிகள்)
நூல் வாங்க: Buy
இரஷ்யாவை ஒட்டிய கிழக்கு உக்ரைனில் போரும் சண்டைகளும் உயிரிழப்புகளும் இதுவரை முடிந்தபாடில்லை. அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கப்பெற்ற அசோவ் பட்டாலியன் படைகள் ஒருபுறமும், இரஷ்யாவின் ஆதரவைப் பெற்ற டொனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் அரசுகளின் இராணுவமும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டே இருந்தன. ஒரு போருக்குப் பின்னர் இன்னொரு போர் என்று அது தொடர்கதையாகிப் போனது.
2014 ஆம் ஆண்டு முதல் போரும் சண்டையும் மோதலும் மரண ஓலங்களும் இல்லாத நாளே இல்லை எனலாம். ஸ்லோவியான்ஸ்க் சண்டை, கிரமாட்டோர்ஸ்க் சண்டை, டொனட்ஸ்க் விமான நிலைய சண்டை, லுகான்ஸ்க் எல்லைக்கான சண்டை, செலினோபிலா ராக்கெட் தாக்குதல், சகார்ஸ்க் சண்டை, ஹொர்லிவ்கா மோதல், இலோவாய்ஸ்க் மோதல், நோவோவிட்லிவ்ஸ்கா அகதிகள் தாக்குதல், நோவோசோவ்ஸ்க் சண்டை, மரியோபோலில் பலகட்ட மோதல்கள், ஸ்வித்லோதர்ஸ்க் மோதல், அவ்டிவ்கா மோதல், ஒடஸ்ஸா மோதல் என தொடர்ந்தன.
இரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் இணைந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சமமாக வளர்வதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதால், இம்மூன்று பகுதியினருக்குமே நிம்மதியோ, அமைதியோ, இலாபமோ இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை. இம்மூன்று பகுதியினரும் அடித்துக்கொள்வதால் உக்ரைனில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியமே லாபமடைகிறது.
ஐரோப்பாவிற்கும் இரஷ்யாவிற்கும் இடையிலான மோதலை உயிர்ப்போடு வைத்திருப்பதன் மூலம்தான் இவ்வுலகின் ஒரே ஆதிக்க நாடாக நீடித்து இருக்கமுடியும் என்று அமெரிக்க பெருமுதலாளிகளும் ஆட்சியாளர்களும் திட்டமிட்டே செயல்படுகிறார்கள். இரஷ்யாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு தொடர்புப் புள்ளியாகவும், எரிபொருள் மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்கு உதவும் வகையிலும் இருக்கிற உக்ரைனில் பெருங்குழப்பத்தை விளைவிப்பதன் மூலம் அதை செய்கிறார்கள்.
இரஷ்யாவில் இருந்து ஜெர்மனி வரையிலும் கடல்வழியாக வரும் முதலாம் நார்த் ஸ்ட்ரீம் குழாயின் வழியாக எரிவாயு கொண்டு வரப்பட்டு, ஐரோப்பிய வீடுகளில் விளக்கு எரிகிறது. அதைப் பார்த்து அமெரிக்காவின் வயிறு எரிந்து, கெடுப்பதற்கு பல வழிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. இப்போது இரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் இரண்டாவது எரிவாயுக் குழாயினை கடலில் அமைக்கும் பணியும் முடிவடைந்துவிட்டதை அமெரிக்காவால் தாங்கவே முடியவில்லை. அதனாலேயே, இரஷ்யாவை ஐரோப்பாவின் எதிரியாக்கிடும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்க விரும்பித்தான், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் வெள்ளை இனவெறி அமைப்புகளை உருவாக்கி பயங்கரவாதத்தை அமெரிக்கா துவக்கியிருக்கிறது.
இரஷ்யாவுடன் கைகோர்ப்பதால் கிடைக்கிற பலனுக்காக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள முடியாத சூழலிலும் ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. அதற்கு இரஷ்யாவை கம்யூனிசத்துடன் இணைத்து கடந்த 75 ஆண்டுகளாக ஐரோப்பிய மக்களிடையே ஐரோப்பிய ஆளும்வர்க்கம் ஏற்படுத்திவரும் அச்சத்தினால், திடீரென ஒரேநாளில் அமெரிக்காவை எதிரியாக்கி இரஷ்யாவை நட்பு நாடாக அறிவித்துவிட முடியாத சூழலில் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் சிக்கிக்கொண்டனர். எனவே, அமெரிக்கா போடும் தாளத்திற்கு ஆடியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
2014 முதல் 2022 வரையிலும் 15,000த்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்களை அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வெள்ளையின பயங்கரவாதிகள் கொன்றிருக்கிறார்கள். ஆங்காங்கே கூட்டங்கூட்டமாக மக்களைக் கொன்று புதைத்திருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டில் டொன்பாஸ் பகுதியில் எதேச்சையாகத் தோண்டுகையில் 292 பிணங்கள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. அவை அமெரிக்க ஆதரவு வெள்ளையின பயங்கரவாதிகளால் கொன்று புதைக்கப்பட்ட உக்ரைனியர்களின் உடல்கள்தான் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் இரஷ்யா வழக்கும் தொடுத்திருக்கிறது.
என்றைக்கிருந்தாலும் ஒருநாள் உக்ரைனை நோக்கி தன்னுடைய படையினை இரஷ்யா கொண்டுவந்தே ஆகவேண்டும் என்பதை, 2014 முதல் அமெரிக்காவின் தொடர் நடவடிக்கைகளை கவனித்துவந்த எவருமே எளிதாக யூகித்துவிடுவார்கள். அதுதான் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதியன்று நடந்தது. அன்றைக்கு யார் மகிழ்ந்தார்களோ இல்லையோ, அமெரிக்க அரசும் அமெரிக்க பெருமுதலாளிகளும் அவரவர் அலுவலகங்களில் துள்ளிக் குதித்துக் கொண்டாடியிருப்பார்கள்.
உக்ரைனுக்காக கண்ணீர் வடிப்பது தவறா?
ஆயிரம்தான் இருந்தாலும் இரஷ்யா நடத்தும் இந்த போரை ஆதரிக்க முடியாது என்ற வாதத்தை ஏற்கத்தான் வேண்டும். வீடுகளை இழந்து, சொந்த நிலத்தை இழந்து இலட்சக்கணக்கான அப்பாவி உக்ரைனிய மக்கள் புலம்பெயர்வதைப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. அவர்கள் மீண்டு வருவதற்கான வழிகள் ஏதும் தென்படாமல் இருப்பதும் கவலையைத் அதிகரிக்கிறது. அதனாலேயே இந்தப் போர் குறித்த எந்த செய்தியைப் பார்த்தாலும், எந்த புகைப்படங்களைப் பார்த்தாலும் நமது கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுவது இயல்பாகி விடுகிறது.
ஆனால், உக்ரைனிய போர் குறித்தான தகவல்களும் புகைப்படங்களும், கண்ணீர்க்கதைகளும் எப்படி நம்மிடம் இவ்வளவு வேகமாக வந்து சேர்கின்றன என்பதையும், உலகில் வேறெந்த நாட்டிலும் இப்படியான போர்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது போன்ற தோற்றத்தை யார் நம் மீது திணிக்கிறார்கள் என்கிற கேள்வியை நமக்கு நாமே எழுப்ப வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் நமக்குப் புலப்படும்.
உலக ஊடகங்கள் அனைத்தும் மேற்கு நாடுகளின் வசமே இருப்பதால், மேற்குலகம் இவ்வுலகில் நடத்திக் கொண்டிருக்கும் போர்களையும் செய்து கொண்டிருக்கும் கொலைகளையும் மறைத்துவிட்டு, அவர்களுக்கு சாதகமான அரசியலுக்காக, இரஷ்யாவின் போரைப் பற்றி மட்டுமே நம்மைக் கவலைப்பட வைக்கிறார்கள். இது அவர்களின் தந்திரமான சூழ்ச்சி.
சிரியாவை ஏன் மறந்தோம்?
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சிரியா வழியாக ஐரோப்பாவிற்கு பூமிக்கடியில் குழாய் பதித்து, அதன் மூலம் எரிபொருள் கொண்டு செல்வதற்கு போடப்பட்ட திட்டத்தை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன், சிரியாவில் குழப்பம் விளைவித்து, போரைத் துவங்கும் பணியைச் செய்தது அமெரிக்கா. அதற்காக, ஈராக் சிறைகளில் இருந்த பல்லாயிரக்கணக்கான மரணதண்டனைக் கைதிகளை விடுவிக்க வைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்க வைத்தது வரை அமெரிக்காவின் பங்கு இருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. சிரியாவின் அரசுக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கும் இடையிலான சண்டையில் நியாயப்படி சிரியாவின் அரசுக்குத்தானே யாராக இருந்தாலும் ஆதரவாக இருக்கவேண்டும்? ஆனால், இவ்விருவருடனும் இணையாமல், மூன்றாவதாக ஒரு அணியை உருவாக்கி, மறைமுகமாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் பணியினை அமெரிக்க அரசு செவ்வனே செய்தது.
சிரியாவில் போர் துவங்கி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. எதற்காக அந்த போர் துவங்கியது? யாரின் நலனுக்காகத் துவங்கியது? எதை நோக்கிய போர் அது? என்கிற எந்த கேள்விக்கும் இன்று எவரிடமும் பதில் இல்லை. இஸ்ரேலும், துருக்கியும், குர்து படைகளும், ஐஎஸ்ஐஸ் அமைப்பும், அமெரிக்க ஆதரவு பயங்கரவாதக் குழுக்களும் சிரியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து, சிரியா என்கிற நாட்டை ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இதுமட்டுமில்லாமல், கடந்த பத்தாண்டுகளில் இப்போரால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். பல்வேறு அமைப்புகளின் அதிகாரப்பூர்வ ஆய்வுகளின்படியே ஐந்து இலட்சத்திற்கும் மேலான சிரிய மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். உண்மையான கணக்கு இதைவிடவும் அதிகமாக இருக்கும்.
வீடு வாசல் அனைத்தையும் இழந்து, ஒன்றரை கோடி மக்கள் அகதிகளாகி இருக்கின்றனர். அவர்களில் சுமார் 60 இலட்சத்திற்கும் மேலானவர்கள் சிரியாவை விட்டே வெளியேறி, துருக்கி, லெபனான், ஜோர்டான், ஜெர்மனி என பல்வேறு நாடுகளுக்கு விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ளோரோ, சொந்த நாட்டிலேயே அகதிகளாக, எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். கொரோனாவினாலும், வறுமையினாலும், சுகாதாரமின்மையினாலும் இறந்தவர்கள் எண்ணிக்கையெல்லாம் எந்தக் காலத்திலும் வெளிவராத தகவலாகவே தான் இருக்கப்போகிறது.
ஒரு தேசத்தையே துண்டாக்கி விட்டு, கோடிக்கணக்கான மக்களை அகதிகளாக்கி, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த இந்தப் போர் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்தப் போருக்குக் காரணமான எவர் மீதும், உலகின் எந்த அமைப்புகளும், எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அமெரிக்கா மேல் எந்த நாடும் பொருளாதாரத் தடை விதித்ததாகத் தெரியவில்லை. அமெரிக்க டாலரை இனி பயன்படுத்தவே மாட்டோம் என்று ஐரோப்பிய யூனியன் சொல்லவில்லை. அமெரிக்காவுடன் யாரும் ஒட்டோ உறவோ வைக்கவே கூடாது என்று ஐநா சபையில் தீர்மானமெல்லாம் நிறைவேற்றப் படவில்லை. இவ்வளவு ஏன், நம்முடைய கண்ணீரைக் கோரும் செய்திகளைக் கூட ஊடகங்கள் நமக்கு வழங்கவில்லை.
உக்ரைனிய மக்கள் மட்டுமல்லாமல், சிரியாவின் மக்களுக்கும் நம்முடைய கண்ணீர் தேவைப்படும் தானே! நாம் ஏன் சிரிய மக்களை மறந்தோம்? திட்டமிட்டு நம்மை மறக்க வைத்தது யார்?
ஏமனை ஏன் மறந்தோம்?
உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று ஏமன். வளைகுடாப் பகுதியில் மிகப்பெரிய பணக்கார நாடாக இருக்கும் சவுதி அரேபியாவுடன் 1,000 கிலோமீட்டர் நீண்ட எல்லையைக் கொண்டிருக்கும் நாடுதான் ஏமன்.
1962இல் நிகழ்ந்த மக்கள் கிளர்ச்சியின் காரணமாக, மன்னராட்சியிலிருந்து குடியரசாக மாறியது வடக்கு ஏமன். அன்றிலிருந்து “ஏமன் அரபு குடியரசு” என்று வடக்கு ஏமன் அழைக்கப்பட்டது. அரபுலக சுதந்திரத்தை முன்னிறுத்திய எகிப்து அதிபர் நாசர், வடக்கு ஏமனின் ஆட்சி மாற்றத்திற்கு உதவியாக இருந்தார். அப்போது, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் பழைய ஈரான் போன்ற நாடுகள் தங்களது படைகளை அனுப்பி, வடக்கு ஏமனில் மன்னராட்சியையே தொடர வைக்கவும், நாசரை பலவீனப்படுத்தவும் கடுமையாக முயன்றன. அதுவே ஒரு போராகவும் மாறியது. வடக்கு ஏமனுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காக, 10,000த்திற்கும் மேற்பட்ட எகிப்து படையினர் உயிரிழந்தனர். இறுதியாக, வடக்கு ஏமனில் “ஏமன் அரபு குடியரசு” உருவெடுத்தது. ஆனாலும் அது பலம் பொருந்தியதாக இல்லை. அந்தப் போரின் காரணமாக எகிப்தும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியது. புதிதாக உருவான ஏமன் அரபு குடியரசால், பெரியளவு கலாச்சார ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ வளர்ச்சியடைய முடியவில்லை. மன்னராக இருந்தவர், சவுதி அரேபியாவிற்குத் தப்பியோடினார். வடக்கு ஏமனுக்கு சொந்தமான பல பகுதிகளை சவுதி அரேபியா ஆக்கிரமித்துக்கொண்டது.
தெற்கு ஏமனின் வரலாறு சற்றே வித்தியாசமானது. அரபு நாடுகளையும் ஆப்பிரிக்க நாடுகளையும் கடல்வழியாக இணைக்கிற குறுகிய ஆப்பிரிக்கப் பகுதிகளை ஆக்கிரமித்து, ஜிபூடி என்கிற புதிய நாட்டை உருவாக்கி வைத்திருந்தது பிரெஞ்சு அரசு. அதற்குப் போட்டியாக, அரபுப் பிரதேசத்தில் தெற்கு ஏமனை ஆக்கிரமித்து வைத்திருந்தது பிரிட்டன். தெற்கு ஏமனில் ஆடன் துறைமுகத்தையும் உருவாக்கியது பிரிட்டன்தான். அந்நகரை அப்போதைய ஹாங்காங் என்று கூட சொல்லலாம். பிரிட்டன் தன்னுடைய காலனி நாடுகளிலிருந்து வேலையாட்களை கொண்டுவந்து சேர்த்தது. எல்லாவிதமான அதிகாரங்களையும் வைத்திருந்த பிரிட்டன் அதிகாரிகள், தங்களுக்கு ஒருபடி கீழேவைத்தே புலம்பெயர் இந்தியர்களையும் சோமாலியர்களையும் நடத்தினர். அவர்களுக்கும் கீழ்நிலையில் வைத்து ஏமன் மக்களை நடத்தினர். பிரிட்டனின் மற்ற காலனி நாடுகளிலெல்லாம் பிரிட்டன் ஆட்சியை எதிர்த்துப் போராடிய தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை அங்கிருந்து நாடுகடத்தி, ஏமனின் ஆடன் நகருக்கு கொண்டு வந்துவிட்டது பிரிட்டன். அப்படியாகக் குவிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து பிரிட்டனின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏமனிலும் போராடினர். அதன் விளைவாகவே 1967இல் பிரிட்டனிடமிருந்து தெற்கு ஏமன் மட்டும் விடுதலை பெற்று, “ஏமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு” என்கிற புதிய நாடு உருவானது. கம்யூனிஸ்டுகளும் தேசியவாதிகளும் பாத் சோசலிசவாதிகளும் இணைந்து ஏமன் சோசலிசக் கட்சியின் கீழ் தெற்கு ஏமனை ஆட்சி செய்தனர்.
அரபுலகத்தில் மிகவும் முற்போக்கான நாடாகத் திகழ்ந்தது தெற்கு ஏமன். சட்டங்கள் மூலமாக நிலச்சீர்திருத்தம் நடைபெற்றது; பெண்-ஆண் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. ஆட்சியை நிர்வகித்துவந்த சோசலிசக் கட்சியில் பலதரப்பட்ட குழுக்கள் இடம்பெற்றிருந்தன. அவர்களில், கம்யூனிஸ்டுகள் முக்கியப் பங்காற்றினார். பல்வேறு விதமான குழுக்கள் இருந்தமையால், ஒவ்வொரு முறையும் புதிதாக எதையாவது செய்ய முயலும் போதும், பல்வேறு விவாதங்களும் தடைகளும் குழப்பங்களும் வந்துகொண்டே இருந்தன. அவற்றையெல்லாம் சமாளித்தபடியே தான் முற்போக்கான நாடாக தெற்கு ஏமன் முன்னேறிக் கொண்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக நிலவுடைமையாளர்களாலும், அதிகாரத்தை அனுபவித்து வந்தவர்களாலும், அரசின் மக்கள் நலச் சட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், அரசில் அவ்வப்போது நிலவிய கருத்துவேறுபாடுகள், சண்டைகளாகவும் கொலைகளாகவும் மாறின. அரசின் முக்கியமான தலைவர்களைக் கூட இழக்க வேண்டியிருந்தது. பனிப்போர் காலத்தில், தெற்கு ஏமனை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் முக்கிய எதிரியாகவே பார்த்தன. மூன்று முறை ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றன. இறுதி முயற்சியில், பல முக்கியத் தலைவர்களின் உயிரிழந்ததால் அது சோசலிசக் கட்சியினை பலவீனமாக்கியது. உடனே லிபரல் குழுக்கள் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துக்கொண்டன. அதன்பின்னர், வீரியம் குறைந்த, பலமற்ற சோசலிசக் கட்சியாக அது மாறியது.
அதேவேளையில், 1962 முதலே அதிபர் சாலேவின் தலைமையிலான பிற்போக்குவாத அரசின் கட்டுப்பாட்டிலேயே வடக்கு ஏமன் இருந்தது. வடக்கு ஏமன் என்கிற தனியான தேசம் உருவாகிவிடக் கூடாதென்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் பிரிட்டனும் 1962இல் கடுமையாக முயன்றன. ஆனால், தெற்கு ஏமனைக் கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்கிறார்கள் என்றவுடன், வடக்கு ஏமனுடன் இணைந்து தெற்கு ஏமனை அழிக்க, எல்லாவித முயற்சிகளையும் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் எடுத்தன. வடக்கு ஏமனின் அதிபர் சாலேவை நல்லவர், வல்லவர் என்றெல்லாம் உலகிற்கு சொல்லத் துவங்கிவிட்டார்கள்.
1990ஆம் ஆண்டு சோவியத்தின் சரிவும், தெற்கு ஏமன் கம்யூனிஸ்டு தலைவர்களின் இழப்பும் ஒன்று சேர்ந்து, எவ்வித சமரசத்திற்கும் உடன்பட தெற்கு ஏமன் அரசை தயாராக்கி விட்டது. அதன்படி, தெற்கு ஏமனும் வடக்கு ஏமனும் ஒன்றிணைந்து, 1990இல் “ஏமன்” என்கிற ஒரே நாடாக மாறியது. வடக்கு ஏமனின் அதிபராக இருந்த சாலே ஒருங்கிணைந்த ஏமனின் அதிபரானார். துவக்கத்தில் நடுநிலைவாதி போல தன்னைக் காட்டிக் கொண்டார் சாலே. சோசலிச பின்னணியைக் கொண்ட தெற்கு ஏமனைச் சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்த அரசில் இணைக்கப்பட்டனர். ஏமன் உருவான சமயத்தில் வளைகுடாப் போர் துவங்கியது. ஏமனில் இணைந்திருந்த முற்போக்குவாதிகள், வளைகுடாப் போரை ஏமன் அரசு ஆதரிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். சாலேவும் வளைகுடாப் போரை ஏமன் எதிர்க்கிறது என்று அறிவித்து விட்டார். அதன்மூலம் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் எதிர்ப்பை ஏமன் சம்பாதிக்க வேண்டியிருந்தது. சவுதி அரேபியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த 10 இலட்சம் ஏமன் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஏமனுக்குத் திரும்ப வந்ததால், பெரிய பொருளாதார நெருக்கடியை ஏமன் சந்திக்க நேரிட்டது. சவுதி அரேபியாவின் சொல்பேச்சை எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்கிற செய்தியை அழுத்தமாக சொல்வதற்காகவே இத்தகைய நடவடிக்கையை சவுதி அரேபியா எடுத்தது. அப்போதே, சவுதி அரேபியாவையும் அமெரிக்காவையும் பகைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது என்கிற நிலைக்கு சாலேவின் ஏமன் அரசு தள்ளப்பட்டது
பலம்வாய்ந்த அதிபராக சாலே உருவெடுத்த பின்னர், ஏற்கெனவே பலமிழந்து காணப்பட்ட தெற்கு ஏமனின் சோசலிசக் கட்சி, மேலும் வலுவிழந்தது. அரசின் எல்லாவித அதிகாரங்களிலிருந்தும் தெற்கு ஏமன் புறக்கணிக்கப்பட்டது. வடக்கு ஏமனோடு இணைந்தது மிகப்பெரிய தவறு என்று சொல்லிக் கொண்டு சில பிரிவினைவாதக் குழுக்கள் தெற்கு ஏமனில் உருவாகின. 1994இல் மீண்டும் தெற்கு ஏமன் தனிநாடாக வேண்டும் என்கிற கோரிக்கையோடு தெற்கு ஏமனில் கலவரங்களும் போராட்டங்களும் வெடிக்கத் துவங்கின. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போராட்டக் குழுக்களுக்கு மறைமுக ஆதரவும் ஆயுதங்களும் வழங்கியது வேறு யாருமல்ல, சவுதி அரேபியாதான். ஏமனில் ஒரு நிலையான அரசு அமைவதை எப்போதும் விரும்பாத சவுதி அரேபியா, தெற்கு ஏமனின் போராட்டக் குழுக்களுக்கு ஆதரவளித்தது. அதற்கு முன்பு வரலாற்றில் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாத தெற்கு மற்றும் வடக்கு ஏமன் மக்களிடையே பிரிவினை எண்ணங்கள் பரப்பப்பட்டன. உள்நாட்டுக் கலவரம், சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பத்து இலட்சம் பேரின் வருகை, அதனால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை என பலவும் ஏமனை வாட்டி வதைத்தது.
உழைப்பதற்கு வேலையும், மூன்று வேளை உணவும் கிடைக்காத மக்களிடத்திலே பிரிவினைவாதத்தை எளிதில் உருவாக்கிவிடமுடியும் என்று சவுதி அரேபியா தீர்க்கமாக நம்பியது. நாளடைவில் அதுவே பெரிய உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 1994 மே மாதம், “ஏமன் ஜனநாயகக் குடியரசு” என்கிற நாடு மீண்டும் உருவாகிவிட்டதாக தெற்கு ஏமனின் போராட்டக் குழுவினர் அறிவித்தும் விட்டனர். வடக்கு ஏமனைப் பூர்வீகமாகக் கொண்ட அதிபர் சாலே, மதரீதியாக வடக்கு மக்களை தெற்கு மக்களுக்கு எதிராகத் திரட்டினார். இசுலாமின் சைதி பிரிவைச் சேர்ந்த வடக்கு ஏமன் மக்களை, சுன்னி பிரிவைச் சேர்ந்த தெற்கு ஏமன் மக்களுக்கு எதிராக நிறுத்தினார் அதிபர் சாலே. மக்களிடையே மதவுணர்வு தூண்டப்பட்டு, காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்கள், எதிரெதிர் திசையில் நிறுத்தப்பட்டனர். இரண்டு மாதங்களாக நடந்த போரின் இறுதியில், தெற்கு ஏமனின் போராட்டக் குழுவினர் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, தெற்கு ஏமனில் மிச்சமிருந்த சோசலிசக் கட்சியினரும், இன்னபிற ஜனநாயக விரும்பிகளும் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். வெளிப்படையான கணக்குப்படியே 10,000த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எளிதாக யூகித்துவிட முடியும். ஏமனின் சர்வாதிகாரியாக அலி அப்துல்லா சாலே உருவெடுத்தார்.
ஏமனின் பொருளாதாரம் பெரிதும் விவசாயத்தை சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. அரசின் அலட்சியப் போக்கினால், விவசாயம் பொய்க்கத் துவங்கியிருக்கிறது. எண்ணெய் வளங்களினாலும், மீன்பிடித்தொழிலாலும், சர்வதேச உதவிகளாலும், வெளிநாடுவாழ் ஏமன் மக்கள் அனுப்பும் பணத்தாலும் மட்டுமே ஏமனின் வருமானம் அடங்கியிருக்கிறது. அதிபர் சாலேவும் அவரை சுற்றியுள்ள அதிகாரமிக்க சில நபர்களுமே வசதியான வாழ்க்கை வாழ்வதும், பெரும்பான்மையான மக்கள் ஒருவேளை சோற்றுக்கே வழியற்ற நிலையில் தவிப்பதுமே 20 ஆண்டுகளாக இயல்பாகிப் போயிற்று. ஏமனின் பெரும்பகுதி மக்கள் 30 வயதுக்கு உட்பட்டோர்தான் எனினும், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. 2009 இல் 40% ஏமன் மக்களுக்கு வேலை இல்லாத நிலைதான். இவற்றுக்கெல்லாம் தீர்வு கேட்டு, 2004 இல் ஹூத்திகள் என்கிற போராட்டக்குழுவொன்று வடக்கு ஏமனில் உருவானது. வடக்கு ஏமனைச் சேர்ந்த ஹுசைன் அல் ஹூத்தி என்பவரால் உருவாக்கப்பட்டது தான் ஹூத்திகள் இயக்கம். வடக்கு ஏமன் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத நிலையும், உள்கட்டமைப்பு வசதியேதும் இல்லாத சூழலும் தொடர்ந்து கொண்டிருந்ததை ஏன் என்று கேள்வி எழுப்பினர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லாவற்றையும் தட்டிக்கழித்த அதிபர் சாலே, ஹூத்திகளை அலட்சியப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை துவக்கினர் ஹூத்திகள் இயக்கத்தினர்.
எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் அரபு வசந்தம் என்னும் பெயரில் மக்கள் கிளர்ச்சி நடந்ததை நாம் நன்கு அறிவோம். ஆனால், அதே காலகட்டத்தில் ஏமனில் ஜனநாயகத்தை விரும்பிய மக்கள், சாலேயின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடினர். அமெரிக்காவின் நட்பு வட்டத்திற்குள் இருந்த காரணத்தாலேயே, ஏமன் மக்களின் போராட்டங்கள் உலக மக்களுக்கு சொல்லப்படவில்லை.
அரபுலகத்தின் எந்த நாட்டிலும் தனக்கு எதிரான அரசு அமைவதை அமெரிக்கா விரும்புவதில்லை. குறிப்பாக சவுதி அரேபியாவின் தெற்கே இருக்கும் ஏமனை எக்காரணம் கொண்டும் இழக்கத் தயாராக இல்லை. ஏமனிலோ, சவுதி அரேபியாவிலோ நிலையற்ற தன்மை உருவாகுமானால், அது தன்னுடைய பொருளாதாரத்தை பெரியளவில் பாதிக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்தே இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் சாலேவுக்கான ஆதரவைத் தொடர முடியாமல், அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இன்னபிற மத்தியகிழக்கு நாடுகளும் இணைந்து துணை அதிபராக இருந்த ஹாதியை அதிபராக்கின. ஆனால் அது வெறுமனே ஒரு கண்துடைப்பு தான் என்பதைப் புரிந்துகொண்ட ஹூத்தி அமைப்பினரும் மக்களும் அமெரிக்க ஆதரவு ஹாதி அரசினை தொடர்ந்து எதிர்த்தனர். அதற்குள் அல்கொய்தா அமைப்பின் வளைகுடாப் பிரிவு ஏமனில் துவக்கப்பட்டது. அதற்காக சவுதி அரேபியாவின் ஏராளமான சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு ஏமனுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக ஹூத்திகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அமைதியாக இருந்த ஏமன் நாட்டில் இப்படியாக பலதரப்புக் குழுக்கள் அடித்துக் கொள்ளும் ஒரு உள்நாட்டுப் போரினை தன்னுடைய சுயலாபத்திற்காக சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் இணைந்து செய்திருக்கின்றன.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடக்கிற இப்போரில், இதுவரை ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 75% மக்கள் மிகக்கொடூரமான வறுமையில் இருப்பதாக சர்வதேச அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் இலட்சக்கணக்கான குழந்தைகள் பசியோடும் பட்டினியோடும் சாவோடும் போராடிக் கொண்டிருக்கின்றனர். பள்ளிகளையெல்லாம் பார்த்தே பத்தாண்டுகள் ஆகிப்போன குழந்தைகள் அவர்கள். இது மட்டுமில்லாமல் ஏறத்தாழ ஏமனின் பாதி மக்கள் காலரா தொற்றின் அச்சத்தில் வாழ்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா தாக்கத்தால் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்கிற புள்ளிவிவரம் கூட திரட்டமுடியாத நிலை உருவாகி இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஏமனில் நடக்கிற போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லையென்றால், மக்களே வாழாத பகுதியாக ஏமன் மாறிவிடும் அபாயம் இருக்கிறதாக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கின்றன.
இப்போது இந்த வரியைப் படித்துக்கொண்டிருக்கும்போதே சில நூறு குண்டுகள் ஏமனில் வீசப்பட்டுக் கொண்டிருக்கும். பள்ளிகளும், மருத்துவமனைகளும் இடிந்து நொறுங்கிக் கொண்டிருக்கும். அதற்கு பிரிட்டனும், அமெரிக்காவும், பிரான்சும், சவுதி அரேபியாவும் தங்களுடைய மக்களிடம் வசூல்செய்த வரிப்பணத்தைத்தான் செலவு செய்து கொண்டிருக்கின்றன. தங்களுக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத ஒரு போரினால் கடந்த பத்தாண்டுகளாக தவித்துக்கொண்டிருக்கும் ஏமன் மக்களுக்காக நம்முடைய கண்ணீரில் ஒரு துளியைக் கூட சிந்தச் சொல்லி எந்த ஊடகமும் நம்மிடம் ஏன் கோரவே இல்லை? ஏமன் மக்களின் துயரமெல்லாம் துயரக்கணக்கில் வராதா? இதுவரையிலும் ஏமன் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையைக் கூட யாருமே துவக்காதது ஏன்? இத்தனை இலட்சம் ஏமன் மக்களைக் கொன்ற காரணத்திற்காக, சவுதி அரேபியா மீதும், அமெரிக்கா மீதும், இதுவரை ஐநா பாதுகாப்புக் கவுன்சிலோ, ஐரோப்பிய யூனியனிலோ, எந்தத் தீர்மானமும் நிறைவேற்றாதது ஏன்? அமெரிக்காவின் டாலரைப் புறக்கணிக்கும் கோரிக்கையை எந்த நாடும் எழுப்பாதது ஏன்?
யார் பக்கம் நாம் நிற்க வேண்டும்?
உக்ரைனின் கடந்தகால வரலாற்றையும் தற்போதைய நிலவரத்தையும் விரிவாக இதுவரையிலும் பார்த்திருந்தாலும், இன்றைய போர்ச்சூழலில் நாம் யாரின் பக்கம் நிற்க வேண்டும் என்பதில் பெருங்குழப்பம் இருக்கத்தானே செய்கிறது. இன்றைய சூழலைப் பொறுத்தவரையில் பல்வேறு அரசுகளும் குழுக்களும் உக்ரைனியப் பிரச்சனையில் ஈடுபட்டிருப்பதால், அவர்களில் யாருக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெப்பது கடினம் எனினும் முக்கியமே.
இரஷ்ய அரசின் பக்கமா?
இன்றைய இரஷ்யாவை சோவியத் யூனியன் காலத்து இரஷ்யாவாகக் கருதிக் கொண்டு, இரஷ்யாவின் இப்போரை நாம் ஆதரித்துவிடமுடியாது. இன்றைய இரஷ்யா என்பது இலாபவெறி பிடித்த ஒரு முழுமையான முதலாளித்துவ நாடுதான். இன்னும் சொல்லப்போனால், 1991க்குப் பிறகான இரஷ்யா என்பதே அமெரிக்காவின் சந்தைப் பொருளாதார ஆட்சிமுறையை கொஞ்சம் கொஞ்சமாகப் நகல் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு நாடுதான். சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் ஜார் மன்னராட்சியைக் கவிழ்த்து, சோவியத் புரட்சியின் மூலம் உருவான, மக்களாட்சிக்குப் பின்னர், மக்களின் சொத்துக்களாக உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அரசு நிறுவனங்கள், சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக சில தனிநபர்களின் கைகளில் கொண்டு சேர்க்கப்பட்டன.
1992 முதல் 1994 வரையிலான இரண்டாண்டுகளில் மட்டுமே அரசுக்கு சொந்தமாக இருந்த 15,000 மிகப்பெரிய தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் ஒரு சில தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டன. அத்துடன் 85,000 கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளற்ற அரசு வணிக சொத்துக்களும், அதேபோல தனியாரின் வசம் கொடுக்கப்பட்டுவிட்டன. இதனால் தனியார் முதலாளிகள் வைப்பதே சட்டமாகிப் போனது. தொழிலாளர்களின் ஊதியம் குறையத் துவங்கியது. அதனை எதிர்த்துக் கேட்பதற்கான தளத்தையும் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றிய முதலாளித்துவ இரஷ்ய அரசுகள் முற்றிலுமாக அழித்து விட்டன. முயன்று கேள்விகேட்ட மக்களெல்லாம் ஒடுக்கப்பட்டனர். கேள்வி கேட்க முடியாத சூழலில் இருந்த மக்களெல்லாம் தற்கொலை செய்து மாண்டு போயினர்.
கோர்ப்பச்சேவ், எல்சின் எனத்துவங்கி இன்றைக்கு புடின் ஆட்சிக்காலம் வரையிலும் இப்படித்தான் மக்களின் போராட்டக்குரல் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. இரஷ்ய முதலாளிகளின் தேவை தான் இரஷ்ய அரசின் கொள்கையாக பிரதிபலிக்கிறது. உக்ரைனுக்குப் பின்னால் அமெரிக்க அரசின் தந்திரங்கள் இருக்கிறபோதிலும், உக்ரைனில் தனக்கு சாதகமான ஒரு அரசுதான் அமைய வேண்டும் என்பதிலும், அதன்மூலம் தன்னுடைய வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் இரஷ்ய பெருமுதலாளிகள் கவனமாகவே இருக்கிறார்கள்.
இன்று டொன்பாஸ் பகுதிகளெல்லாம் உக்ரைனுக்கு சொந்தமா அல்லது இரஷ்யாவுக்கு சொந்தமா அல்லது தனிநாடுகளாக மாறவேண்டுமா என்கிற பஞ்சாயத்தில் தான் போரே நடந்துகொண்டிருக்கிறது. “அந்த டொன்பாஸ் பகுதியை உக்ரைனுடன் இணைத்து இரஷ்யாவுக்கு லெனினின் துரோகம் இழைத்துவிட்டார்” என்று சொல்லிவிட்டுத்தான் உக்ரைனுக்கு எதிரான போரையே புடின் அறிவித்தார் என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, கிழக்கு உக்ரைனில் இயங்கும் அதிதீவிர வெள்ளை இனவெறி நாஜி இயக்கங்களை அழிப்பது தான் நோக்கம் என்று கூறிவிட்டு இப்போரை புடின் துவக்கியிருந்தாலும், உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமித்து இரஷ்யாவுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக்கொள்வது தான் புடினின் உண்மையான நோக்கமாக உள்ளது என்று சந்தேகப்படாமலும் இருக்கமுடியவில்லை.
அதிலும், ஆயிரம் காரணங்கள் சொன்னாலுமே கூட, போர் என்றாலே அப்பாவி உழைக்கும் மக்கள் தான் அதிகமாக உயிரையும் உடமைகளையும் வாழ்விடங்களையும் இழப்பார்கள். போருக்குத் தகுந்தவாறு பயங்கரவாதிகளும் உக்ரைனிய அரசு அதிகாரிகளும் மறைவிடத்தில் ஒளிந்துகொள்ள முடியும். ஆனால் அப்பாவி மக்களால் என்ன செய்துவிடமுடியும். கிழக்கு உக்ரைனில் வாழ்ந்த இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கெனவே வீடிழந்து வாழ்க்கை இழந்து எங்கெங்கோ அகதிகளாக அலையத் துவங்கிவிட்டார்கள். காலங்காலமாக அரசியல் முரண்பாடுகளும் எல்லையோர சண்டைகளையும் கொண்டிருக்கிற போலந்து நாட்டிற்குத் தான் அதிகமான உக்ரைனிய மக்கள் இப்போது புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே அம்மக்களுக்கு நிச்சயமாக சமமான மரியாதை கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை.
அதேபோல இந்தப் போருக்கு இரஷ்யா செலவிடும் பணம் எங்கிருந்து வருகிறது? இரஷ்யாவில் உழைக்கும் மக்கள் செலுத்திக்கொண்டிருக்கும் வரியைத் தானே புடின் தலைமையிலான இரஷ்ய அரசு போருக்கு செலவிடுகிறது? ஆக, இப்போரினால் இரஷ்யாவில் வாழும் மக்களின் உழைப்பும் தானே சுரண்டப்படுகிறது? அண்டை நாடான உக்ரைனில் வாழும் உழைக்கும் வர்க்கத்து மக்களைக் கொல்வதற்கு இரஷ்ய உழைக்கும் மக்களின் வியர்வைப்பணம் பயன்படுத்தப்படுவது எத்தனை பெரிய கொடூரம். இறுதியில் இப்போரினால் இலாபமடையப் போவது ஆளும்வர்க்கத்தினர் என்றாலும், இழப்பு மட்டும் இருநாடுகளில் வாழும் உழைக்கும் வர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதனால் எக்காரணம் கொண்டும் இரஷ்யாவின் பக்கம் நின்று இப்போரை நம்மால் ஆதரிக்கவே முடியாது.
உக்ரைனிய அரசின் பக்கமா?
இன்றைய உக்ரைனிய அரசென்பது முழுக்க முழுக்க அமெரிக்காவின் அடிமை அரசாகத்தான் இருக்கிறது. தற்போதைய உக்ரைனிய அதிபரான செலன்ஸ்கி செய்யும் வேடிக்கையான சேட்டைகளையெல்லாம் நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்க முடிகிறது. அவர் எப்படி உக்ரைனின் அதிபரானார் என்பதை அறிந்துகொண்டாலே, அவரை எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடியும். இரஷ்ய மொழி பேசும் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் செலன்ஸ்கி. சோவியத் செஞ்சேனையில் கர்னலாக இருந்து, அதிகார வர்க்கத்தை எதிர்த்துக் காலமெல்லாம் போரிட்டவர் செலன்ஸ்கியின் தாத்தா. செலன்ஸ்கியின் கொள்ளுத்தாத்தாவும் அவருடைய தாத்தாவின் சகோதர்கள் மூவரும் யூதர்கள் என்பதாலேயே ஹிட்லரின் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டவர்கள். ஆனால், தான் செல்வந்தராக இருக்கிற காரணத்தினாலேயே இரஷ்ய மொழி பேசும் மக்களுக்காகவோ அல்லது ஒட்டுமொத்த உக்ரைனிய மக்களுக்காகவோ குரல்கொடுக்காமல், தன்னுடைய வர்க்கம் சார்ந்து முதலாளித்துவ நலனிலேயே அக்கறை கொண்டவராக இருக்கிறார் செலன்ஸ்கி.
குவார்தல் 95 என்கிற பெயரில் ஒரு தொலைக்காட்சி சானலை நடத்தி வந்தார். அதில் அவரே நடித்தும் சில நாடகங்கள் ஒளிப்பரப்பானது. அதன்மூலம் தன்னுடைய முகத்தையும் ஒட்டுமொத்த உக்ரைன் மக்களின் மனதில் தொடர்ந்து பதியவைத்துக்கொண்டே இருந்தார்.
அப்படித்தான் “மக்கள் ஊழியன்” என்கிற பொருளில் சர்வன்ட் ஆஃப் தி பீப்பிள் என்கிற ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். அது அவருடைய தொலைக்காட்சி சானலிலேயே ஒளிபரப்பானது. அதில் அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக நடித்திருந்தார். கதையின்படி, ஒருமுறை பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு உக்ரைனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்களிடம் வகுப்பில் பேசிக்கொண்டிருப்பார். அதனை அவருக்குத் தெரியாமல் ஒரு மாணவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவார். உடனே அது நாடு முழுவதிலும் பரவலாகிவிடும். செலன்ஸ்கி கதாபாத்திரம் நாட்டு மக்களிடையே பெரிய எழுச்சியை உண்டாக்கிவிடும். அதனைத் தொடர்ந்து அவர் உக்ரைன் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். வேறு வழியின்றி ஓப்புக்கொண்டு உக்ரைனிய அதிபராகிறார் அந்த ஆசிரியர். இதுதான் செலன்ஸ்கி ஆசிரியராக நடித்த தொலைக்காட்சித் தொடரின் கதை.
இந்தத் தொடர் உக்ரைனிய மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதையே முதலீடாக வைத்துக்கொண்டு அரசியலில் குதிக்க வேண்டும் என்கிற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. அதனால் அவர் நடித்த “மக்கள் ஊழியன்” என்கிற தொடரின் பெயரிலேயே ஒரு அரசியல் கட்சியினைப் பதிவு செய்தார். அவருடைய தொலைக்காட்சி சானலில் பணிபுரியும் அனைவரையும் அந்த அரசியல் கட்சியின் கட்டாய உறுப்பினர்களாக்கி, கட்சிக்காக வேலை செய்ய வைத்தார். 24 மணி நேரமும் அவரையும் அவரது கட்சியையும் பிரபலமாக்கவே அவருடைய தொலைக்காட்சி சானல் பயன்படுத்தப்பட்டது. அரசியலே தெரியாத ஒரு ஆள் உக்ரைனிற்கு அதிபராவது அமெரிக்காவிற்கும் நல்லது என்பதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு 75% வாக்குகளைப் பெற்று உக்ரைனின் புதிய அதிபரானார் செலன்ஸ்கி. இதில் என்ன வேடிக்கையென்றால், அந்தத் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை கூட வெளியிடாத வேட்பாளராக அவர் இருந்தார். அதுமட்டுமல்லாமல், வரலாறோ, அரசியலோ, சமூகப்புரிதலோ, உக்ரைனின் பிரச்சனைகளோ தெரியாத காரணத்தால், அவர் எங்கேயும் எப்போதும் பத்திரிக்கையாளர் சந்திப்பைக்கூட நடத்தியதே இல்லை. எத்தனையோ முறை பத்திரிக்கையாளர்கள் கேட்டுப் பார்த்தும், அவர்களிடம் இருந்து நழுவித் தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கிறார் செலன்ஸ்கி. இந்தியாவிலும் கூட செலன்ஸ்கியைப் போல பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி நழுவிக்கொண்டிருக்கிறார் என்பதை இணைத்துப் பார்த்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.
இன்றைக்கும் இரஷ்ய மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்காதது; அம்மொழி பேசும் மக்களைப் புறக்கணிப்பதோடு, கிழக்கு உக்ரைனில் அவர்களைக் கொன்றுகுவிக்கும் அசோவ் பட்டாலியன் உள்ளிட்ட அதிதீவிர வலதுசாரி பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது என தொடர்ந்து பிரிவினைவாத ஆட்சியை செலன்ஸ்கி நடத்தி வருகிறார்.
இன்றைய அசோவ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுக்கு உக்ரைனிய இராணுவத்திலும் காவல்துறையிலும் பெரிய பதவிகளையெல்லாம் அவர் வழங்கியிருக்கிறார். ஆனால் அந்த இயக்கத்தின் முன்னோர்கள்தான் ஹிட்லருடன் கைகோர்த்துக்கொண்டு, செலன்ஸ்கியின் கொள்ளுத்தாத்தாக்கள் உட்பட இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு தேர்தலைப் போலவே 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சியைப் போட்டியிடவே அனுமதிக்காமல், அவர்களுக்குள்ளாகவே போட்டியிட்டு, அவர்களாகவே வென்றுகொண்ட ஒரு ‘ஜனநாயக’ அமைப்புதான் இன்றைய உக்ரைனிய அரசு.
அதுமட்டுமில்லாமல், ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கிகளிடம் தொடர்ச்சியாக கடன் வாங்கிக் குவிப்பதையும் வழக்கமாக்கி வைத்திருக்கிறது இன்றைய உக்ரைனிய அரசு. அப்படியாக வாங்கப்படும் கடன்களையும் ஆயுதங்கள் வாங்கவே பயன்படுத்தி வீணாக்கி வருகிறது. கடனைக் கொடுத்த ஐஎம்எஃப் இன் கட்டளைகளில் மிக முக்கியமானது என்ன தெரியுமா? உக்ரைனிய அரசில் புதிதாக யாருக்கும் வேலை கொடுக்கக் கூடாது என்பதும், தனியார் முதலாளிகளை அனைத்துத் துறைகளிலும் அனுமதிக்க வேண்டும் என்பதும் தான். அதாவது கடனைக் கொடுத்துவிட்டு, மக்களின் உழைப்பை சுரண்டுவதுதான் ஐஎம்எஃப்- இன் ஒரே குறிக்கோள். பல்லாயிரக்கணக்கான கோடிகள் கடனில் உக்ரைன் மூழ்கியிருக்கிறது. அது தற்செயலாக நடந்தது அல்ல.
உக்ரைனிய அரசு இன்றைக்கு நினைத்தாலும் அமெரிக்காவையும் உலக வங்கிகளையும் எதிர்த்துப் பேசமுடியாத நிலையில் இருக்கிறது. போர் துவங்கிய அடுத்த சில நாட்களிலேயே 2500 கோடி ரூபாயினை ஐரோப்பிய ஒன்றியமும், 3000 கோடி ரூபாயினை உலக வங்கியும், 75,000 கோடி ரூபாயினை அமெரிக்காவும், 10,000 கோடி ரூபாயினை ஐம்எஃப் அமைப்பும் உக்ரைனுக்குக் கடனாக வழங்குவதாக அறிவித்துவிட்டன. போர் காலகட்டத்திலும் அமெரிக்க நலனுக்கு எதிராக உக்ரைன் சென்றுவிடக் கூடாது என்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுதான் இதெல்லாம்.
இப்படியான ஒரு சூழலில், நம்மால் உக்ரைனிய அரசுக்கு எவ்வித ஆதரவையும் தந்துவிடவே முடியாது. போரை நிறுத்துவதற்கான விருப்பமோ, சொந்த நாட்டு மக்களின் நலனில் கொஞ்சமும் அக்கறையோ, அவர்களிடம் இல்லை. எனவே அவர்களை ஆதரிப்பது கடந்த 8 ஆண்டுகளாக கொல்லப்பட்ட 15,000 த்திற்கும் மேற்பட்ட கிழக்கு உக்ரைனிய மக்களின் உயிர்களுக்கு நாம் மதிப்பளிக்காததற்கு இணையாகிவிடும். உக்ரைனிய அரசுக்கு நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆதரவும், மேலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொல்வதற்கு அவர்களுக்கு நாமே அனுமதி கொடுப்பதுபோலாகிவிடும்.
இப்போரைக் காரணம் காட்டி, போருக்காக செலவிடுவதற்காகவே, உலக நாடுகளிடம் கடன் வாங்கினால், அந்தச் சுமையையும் ஏற்கவேண்டிய நிலைக்கு உக்ரைனின் உழைக்கும் வர்க்க மக்கள் தான் தள்ளப்படுவார்கள். போரின் காரணமாக அழிந்துகொண்டிருக்கிற உள்நாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுப்பதற்கு ஆகிற செலவுகளையும் அம்மக்கள் தான் ஏற்கவேண்டியிருக்கும். ஆயுதங்களை அனுப்புமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடமும், அமெரிக்காவிடமும், நேட்டோ படைகளிடமும் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறது உக்ரைனிய அரசு. போர் தொடங்குவதற்காக இத்தனை ஆண்டுகளாக பல தந்திர வேலைகளைச் செய்துவந்தவர்களிடமே போய் ஆயுதங்கள் கேட்கும் உக்ரைனிய அரசை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது.
உலக அமைதிக்காக
ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வீட்டிலுமே 75 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலகப்போர்களின் காயங்களும் கதைகளும் வாய்வழிக் கதைகளாகவாவது இன்றைக்கும் அசைபோடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய ஐரோப்பாவில் என்ன விலைகொடுத்தாவது அமைதியைப் பெறுவதற்குத் தான் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் முயற்சி செய்யவேண்டுமே தவிர, மூன்றாவது முறையாக மீண்டுமொரு போரினைத் துவக்குவதற்கான வேலைகளை செய்வது மனிதகுலத்திற்கே எதிரானது.
75 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற முதலிரண்டு உலகப் போர்களிலும் அமெரிக்காவிற்கு பெரிய இழப்பேதும் இல்லை. ஐரோப்பிய மண்ணில் தான் முழுப்போரும் நடைபெற்றதென்பதாலேயே, போருக்குப் பின்னர் அதிலிருந்து மீண்டெழுவது ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும்பாடாக இருந்தது. அந்த சூழலைப் பயன்படுத்தித்தான் அமெரிக்கா, இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் ஒரே பெரியாள் என்கிற மனோபாவத்துடன் உலக மக்களை அதிகாரம் செலுத்தப் புறப்பட்டது. அது இன்றளவும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. ஆனால், இரஷ்ய ஊடகங்கள் அனைத்தையும் தடைசெய்துவிட்டு, மேற்குலக ஊடகங்களின் வழியாக வரும் செய்திகளைப் பார்த்துவிட்டு, “இரஷ்யாவே போரை நிறுத்து” என்று மட்டுமே சொல்லி முடித்துக்கொள்ள நமக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இரஷ்யா இப்போரை உடனடியாக நிறுத்தியே ஆக வேண்டும் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அது மட்டுமே உக்ரைனில் அமைதியை நிலைநாட்டிவிடும் என்று நினைத்தால் அது நிச்சயமாக உண்மையல்ல.
அதனால் உலகின் குடிமக்களாகிய நாம், ‘உக்ரைன் மீது இரஷ்யா தொடுத்திருக்கிற இப்போரை எந்த நிபந்தனையும் விதிக்காமல் உடனடியாக நிறுத்தி ஆகவேண்டும்’ என்று வலுவாக குரல் கொடுக்க வேண்டும். அதனோடு இணைந்தபடி, ‘இரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் எரிபொருள் ஒப்பந்தம் கையெழுத்தானால் அமெரிக்காவிற்கு என்ன பிரச்சனை?’ என்று ஐரோப்பிய உழைக்கும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஐரோப்பிய அரசுகளைக் கேள்விகேட்கவேண்டும்
‘உக்ரைனில் நடத்தப்படும் போருக்கு எங்களுடைய வரிப்பணத்தைப் பயன்படுத்தாதே’ என்று புடினின்இரஷ்ய அரசைப் பார்த்து இரஷ்ய உழைக்கும் மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.
‘எங்களுடைய வரிப்பணத்தில் ஆயுதம் வாங்கி உலகெங்கிலும் போருக்குச் சென்று இலட்சக்கணக்கான மக்களைக் கொல்லாதே’ என்று அமெரிக்க ஆட்சியாளர்களை நோக்கி அமெரிக்க உழைக்கும் மக்கள் கேட்கவேண்டும்
‘ஆயுதங்களைத் தயாரித்து விற்பனை செய்து, மற்ற நாடுகளில் போரைத் துவங்கும் எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்யவே கூடாது’ என்று உலகின் அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களும் அவரவர் தேசத்து அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளில் வன்முறைகளைக் கட்டவிழ்க்கும் ஐஎஸ்ஐஎஸ் மட்டுமல்லாமல், உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் வெள்ளை இனவெறி அசோவ் பட்டாலியன் படையினரும் பயங்கரவாதிகள் தான் என்பதை அங்கீகரித்து, அதற்கு நிதியும் ஆயுதமும் வழங்கும் அனைத்து தரப்பினரையும் உலகின் குடிமக்களாகிய நாம் எதிர்க்க வேண்டும்
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உக்ரைனியத் தேர்தல்களில் சுத்தியல் அரிவாள் சின்னத்தைக் கொண்டிருக்கிறது என்கிற ஒரே காரணத்தை முன்வைத்தே கம்யூனிஸ்ட் கட்சியை போட்டியிடவே அனுமதிக்காத அமைப்பினை ஜனநாயகம் என்றே அங்கீகரிக்க முடியாது என்று நாம் உரக்கச் சொல்லியாக வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரைனில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிலுமே அமைதி நிலவவேண்டும் என்று உண்மையாகவே நாம் விரும்புவதாக இருந்தால், இன்றைக்கு உலகின் அனைத்து போர்களுக்கும் மையக்காரணமாக இருக்கும் நேட்டோ படையினை முற்றிலுமாக ஒழிக்கப் போராட வேண்டும். நேட்டோவை இல்லாமல் செய்துவிட்டாலே, அமெரிக்காவால் உலகின் எந்த நாட்டிற்கு அருகிலும் சென்று எளிதாக ஒரு போரையோ, கலவரத்தையோ, கலகத்தையோ, ஆட்சிக்கவிழ்ப்பையோ, பயங்கரவாத இயக்கங்களையோ உருவாக்குவது கடினமாகிவிடும். ஆம், நேட்டோ ஒழிப்பில் தான் ஒட்டுமொத்த உலகின் அமைதியே இருக்கிறது.