மார்க்சிய கல்வியின் அவசியம்


என். குணசேகரன்

கம்யூனிஸ்ட் இயக்கங்களில் மார்க்சிய கல்விப் பணி என்பது மிக முக்கியமானது. தொழிற்சங்கம், விவசாய சங்கம், மாதர், வாலிபர், மாணவர், மாற்றுத் திறனாளர், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பு வெகுமக்கள் இயங்கும் சங்கங்களில்  செயல்படும் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களுக்கு அப்பால் உள்ள மக்கள் என அனைவருக்குமே மார்க்சிய கல்வி அவசியமான ஒன்று.

இப்படிக் கூறும்போது, சாதாரண மக்களுக்கும் மார்க்சியம் தேவையா? எனும் கேள்வி எழலாம். இன்றைய உலகில் 99 சதவீத மக்கள் தங்களுடைய வாழ்க்கையின் இன்னல்களில் இருந்தும், துன்பங்களிலிருந்தும் தாங்கள் எதிர்நோக்கக் கூடிய வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்தும் தீர்வு கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக, சமூகத்தின் அடித்தட்டில் இருக்கக்கூடிய உழைக்கும் வர்க்கம், மேலும் மேலும் வாழ்வாதாரப்  பறிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறபோது இதிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? எப்போது தீர்வு கிடைக்கும்? என்கிற ஏக்கத்தோடு உள்ளது. இந்தியாவிலும் இதே நிலைதான்.

கொரோனா பேரிடர் காலத்தில் பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்விழந்திருக்கிறார்கள். அது முன்னேறிய நாடுகளாக இருந்தாலும் சரி, ஏழை நாடுகளாக இருந்தாலும் சரி, வாழ்வாதார இழப்பு, கல்வி மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாழ்வாதார சிக்கல்கள் கொரோனா காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டன. கொரோனா பேரிடரின் போது இவை தீவிரமடைந்தன. முறைசாரா தொழில்கள் அழிக்கப்படுவது, சிறு குறு தொழில்கள் அழிக்கப்படுவது என்பதெல்லாம் கொரோனா காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டது.  இந்த பிரச்சினைகளிலிருந்து தீர்வை அடைவதற்கு என்ன வழி என்பது குறித்து இன்றைக்கு மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் முதலாளித்துவ அமைப்பு உருவாக்கிய துயரங்களே  என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றனர்? எனவேதான்  முதலாளித்துவ அமைப்பை அகற்றி ஒரு புதிய சமூகம் படைக்க வழிகாட்டும் மார்க்சியத்தை சாதாரண மக்களுக்கும் அறியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

காலம் காலமாக சமூகத்தினுடைய பெரும்பகுதி துயரங்களுக்கு உள்ளாகிறார்கள். மக்களுடைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் கர்மவினை, பாவம், புண்ணியம் என்கிற ஆன்மிக கருத்தாக்கங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைத்து நீடித்து வருகிறது. மனிதனுடைய  கவலைகளை, துன்பங்களை, பிரச்சனைகளை, பல  தத்துவஞானிகளும் ஆழ்ந்து சிந்தித்தார்கள். அதில் கணிசமான தத்துவஞானிகள் முக்தி, மோட்சம்  என்ற வகையில் சமய நோக்கிலான தீர்வுகளை சொன்னார்கள்.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் மக்களுடைய துன்பங்களைக் கண்டு இரக்கப்பட்டார். இந்த துன்பங்களுக்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்தித்தார். அப்படி சிந்தித்தபோது, அவர் தனிமனித பேராசைதான்  இதற்கெல்லாம் காரணம் என்கிற முடிவுக்கு வந்தார். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டு “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகினால், “நிர்வாணம்” என்கிற நிலையை அடையலாம் என்றும், அதுவே துன்பங்களிலிருந்து விடுதலைக்கான வழி என்றும் புத்தர் போதித்தார்.

ஆசைதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது அந்தக் காலகட்டத்தில்  ஒரு வகையில் முற்போக்கான கருத்துதான். ஏனெனில்  கடவுளிடம் தீர்வை எதிர்பார்க்காமல் முக்தி, மோட்சம் ஆகியவற்றையெல்லாம் சொல்லாமல் ஆசைதான் காரணம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.

ஆன்மீகம் பேசாத  தத்துவஞானிகளும் கூட நிலவும் பிரச்சனைகளுக்கு  முறையான தீர்வு சொல்வதற்கு பதிலாக இருக்கிற நிலைமைகளை விளக்கினார்கள். சமூக  நிலைமைகள் குறித்த விளக்கங்கள்,சமூக நிலை பற்றிய மனிதனுடைய  மனப் பரிமாணங்கள், மனிதனுக்கான வாழ்க்கை நெறிகள், நீதி போதனைகள் என  பல தத்துவக் கருத்துக்கள் படைக்கப்பட்டன.

உலகை அடியோடு மாற்றிடும் தத்துவம்

மனித சமூகத்தின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில்,19ஆம் நூற்றாண்டில், ஒரு முக்கிய திருப்புமுனையாக மார்க்சியம் உருவானது. மார்க்சியம்  விடுதலைக்கு வழி காட்டுகிறது. காலம் காலமாக துன்பங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அந்த துன்பங்களிலிருந்து விடுதலைக்கான மேம்போக்கான தீர்வை சொல்லாமல், அறிவியல் பூர்வமான வழியைக் காட்டுகிறது மார்க்சியம். இன்றும் பல்லாயிரக்கணக்கான சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்திலிருந்தும் மார்க்சியம் எதில் வேறுபட்டுள்ளது? எனில் மார்க்சியம் மனித விடுதலைக்கு வழி காட்டுகிறது.

இதுகாறும் இருந்து வந்திருக்கிற மானுட வரலாறு, தத்துவம், சமூகவியல், அறிவியல் என பன்முக சிந்தனைகளை உள்வாங்கி, மானுட சிந்தனை வளர்ச்சி எட்டியுள்ள அத்தனை பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து, விடுதலைக்கான பாதையை கண்டதுதான் மார்க்சின் சாதனை. அந்த வகையில் மக்களுக்கு வழிகாட்டும் உன்னத தத்துவமாக  மார்க்சியம் விளங்குகிறது. அதனால்தான் அதனை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

மார்க்சியமல்லாத பல  சிந்தனைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை, உள்வாங்க வேண்டியவை ஏராளமாக இருக்கிறது. மற்ற மனித நேய தத்துவங்களோடு நட்பு பாராட்டலாம். அந்த  தத்துவங்களில் நல்ல விஷயங்கள் பல இருக்கலாம். ஆனால் மார்க்சியம் மட்டும்தான் சுரண்டல், அடிமைத்தனத்திலிருந்து முற்றாக விடுதலையை காட்டுகிற தத்துவம். இந்த உலகத்தை மாற்றுவதன் மூலம் புதிய உலகை படைத்து, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமத்துவம் சாதிக்கிற ஒரு தத்துவம் இருக்கிறது என்று சொன்னால், அது மார்க்சியம் மட்டும்தான்.

இதுவரை வந்திருக்கக்கூடிய தத்துவஞானிகள் அனைவரும் இந்த உலகை பல்வேறு வழிகளில் விளக்கி இருக்கிறார்கள்: ஆனால் இதை மாற்ற வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது என்று கூறிய மார்க்ஸ்,அதே நோக்கத்துடன்  உலகை அடியோடு மாற்றிடும் தத்துவத்தை உருவாக்கினார். கடுமையான வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு மத்தியில் குடும்பத்தின் வறுமை சூழலில் மார்க்ஸ் மார்க்சிய தத்துவத்தை படைத்தார். மானுட விடுதலை என்கிற லட்சியத்துக்காக  அவரும் அவரது குடும்பத்தினரும் தங்களை அர்ப்பணித்தனர்.

மூன்று தளங்களில் மார்க்சிய கல்வி

மார்க்சியத்தை பயில வேண்டும் என்கிற ஆர்வத்தை கட்சி உறுப்பினர், கட்சி ஆதரவாளர்கள்  மட்டுமல்லாது மக்களுக்கும், ஏற்படுத்த வேண்டும். எனவே, கட்சிக் கல்விப் பணிகள் என்பது  மூன்று தளங்களில் அமைய வேண்டும்.

1. மக்களிடையே இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.

2. கட்சி உறுப்பினர்களிடையே இடையறாது இப்பணி நடந்திட வேண்டும்.

3. கட்சியின் ஆதரவு தளங்களில் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சியத்தின் இலக்கு பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். ஆண்டாண்டு காலமாக உழைக்கும் மக்கள் அடிமைப்பட்டுத்தான் வந்திருக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக உழைக்கும் மக்கள் சுரண்டப்படும் சமூகத்தினுடைய அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற   “உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்று மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளார். அவருடைய வழிகாட்டுதல்களை உள்வாங்கிய பாட்டாளி வர்க்கம் சோவியத் யூனியனில் சோஷலிச ஆட்சியை லெனின் தலைமையில் நடத்தியது. 70 ஆண்டுகள் சோவியத் யூனியன் இருந்தது. சோசலிசம் சந்தித்த பின்னடைவை பயன்படுத்தி இனிமேல் கம்யூனிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்கிற பிரசாரத்தை முதலாளித்துவவாதிகள் செய்கிறார்கள். சோவியத் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான ஒரு காரணம் உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய அந்த பாட்டாளி வர்க்கம் அரசியல் தத்துவார்த்த கல்வியில் பலவீனமாக இருந்தது; இதுவும் அதன்  வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அரசியல் தத்துவார்த்த கல்வியும், பயிற்சியும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் தத்துவார்த்த ஞானம் புதுப்பிக்கப்பட வேண்டும். அதில் தவறு நேர்ந்த காரணத்தினால் சோவியத் சிதைவு ஏற்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சி அந்நிய முதலாளிகள் கூட்டணியோடு அதிகாரத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் பாட்டாளி வர்க்கத்தை மாற்றத்திற்கான பாதையில் அணிவகுக்கச் செய்திட,  அரசியல் தத்துவார்த்தப்  பணி  மிக முக்கியமானது ஆகும்.

கட்சியின் தரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   2015இல் கொல்கத்தாவில் ஒரு சிறப்பு மாநாட்டை (பிளீனம்) கூட்டி அமைப்பு சந்திக்கும்  பிரச்னைகளை ஆழமாக விவாதித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவிற்கான சரியான மாற்றுக் கொள்கைகள் கொண்ட கட்சி. உழைப்பாளி மக்களுக்காக போராடிக் கொண்டிருக்க கூடிய கட்சி. தெளிவான சித்தாந்தமும் கொள்கைகளும் கொண்ட  கட்சியாக, மக்களிடையே மதிப்புமிக்க  கட்சியாக இருந்தாலும் கூட, அது வேகமான வளர்ச்சியை எட்டுவது  இன்னமும் கடினமாக உள்ளது. வேகமான வளர்ச்சியை அடைவதற்கான ஒரு முக்கியமான தேவையாக, கட்சி உறுப்பினர்களின் தரத்தை மேம்படுத்தும் பணி இருப்பதாக கொல்கத்தா சிறப்பு மாநாடு சுட்டிக் காட்டியது.

மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் “தரம்” என்பதற்கு ஒரு தனிப்பொருள் இருக்கிறது. கட்சியின் ஒரு உறுப்பினர், பல்வேறு கோரிக்கைகளுக்காக  மக்களைத் திரட்டுவதில் சிறந்த திறன் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன்,மார்க்சிய லெனினியத்தில் தேர்ச்சி  பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு கட்சிக் கல்வி என்பது இடையறாது மேற்கொள்ளப்பட வேண்டும்; அது தொடர்ச்சியான ஒன்றாக இருக்க வேண்டும். அதே போன்று கட்சிக் கல்வி ஒரு ஒழுங்குமுறையான பாடதிட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே முரண்பாடு தொடர்கிறது. உழைக்கும் மக்களின் உணர்வுகளை, அதிருப்தியை வெளிப்படுத்த கோரிக்கைகளுக்காக இயக்கம் நடத்தப்படுகிறது. ஏனெனில் வர்க்கப் போராட்டம்தான் வரலாற்றை மாற்றக்கூடியது. இவற்றுக்கு மத்தியில் கட்சிக் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும். வர்க்கப் போராட்டத்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முன்னணியில் இருக்கிறது. மார்க்சிய கல்வியும் இடையறாது நடத்தப்பட வேண்டும். வெகு மக்கள்  அமைப்புகள் நடத்தும் வர்க்கப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் வெகுமக்களை அரசியல் தத்துவார்த்த கல்வியில் இணைக்க வேண்டும்.

கடுமையான சூழலிலும் கட்சிக் கல்வி

 இன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தைக் கட்டுவதில் ஒரு பெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. 1949இல் சீனத்தில் புரட்சி நடைபெற்றது. சீனாவில் ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி விவசாய, தொழிலாளி வர்க்கங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தன. இதற்காக அங்கு ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. வரலாற்றில் ‘லாங் மார்ச்’ என முக்கியத்துவம் பெற்றுள்ள , மாசேதுங் தலைமையிலான நெடும்பயணம் நடத்தப்பட்டது. இதுதான் புரட்சிக்கு வித்திட்ட ஒரு மாபெரும் வரலாற்று இயக்கம். எதிரிகளை முறியடித்து முன்னேறி கொண்டிருந்த இந்த இயக்கத்தின் ஊடாகவே அரசியல் தத்துவார்த்தப் பணியும் நடந்தது. மலைகளிலும் காடுகளிலும் இரவு நேரங்களிலும் தன்னோடு வந்து கொண்டிருக்க கூடிய தோழர்களுக்கு மாசேதுங்  மார்க்சிய கல்வி வகுப்புக்களை நடத்தினார்.

ராணுவப்  பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல்,கடந்து செல்கிற வழியில் உள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் புரட்சி இலட்சியத்தை விளக்கும்  வகுப்புகள் எடுக்கப்பட்டன. இந்த பணியை செய்தால்தான் புரட்சி வெற்றி பெறும்; புரட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் மக்களை தயார் செய்ய வேண்டும்; அதே போன்று கட்சி உறுப்பினர்களை புரட்சிகர உணர்வு கொண்டவர்களாக மாற்ற வேண்டும்; இது போன்ற நோக்கங்களுடன்  மார்க்சிய பாடத்தை கற்பிக்க கடும் முயற்சிகளை மேகொண்டனர். செய்தார்கள். எனவே கட்சிக் கல்வி என்பது ஒரு முக்கியமான புரட்சிகர பணி.

அன்றாட பணிகளால் கட்சி கல்வி வகுப்பை நடத்த முடியவில்லை என்று சமாதானம் சொல்வது கட்சியின் முன்னேற்றத்திற்கு உதவிடாது. இந்தியாவில் கட்சி தடை செய்யப்பட்டு இருந்த கடுமையான சூழலில் கூட  கட்சி இப்பணிகளை நடத்தியுள்ளது. தீக்கதிர் ஆசிரியராக பணியாற்றிய கட்சியின் முன்னோடி தலைவரான கே.முத்தையா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது அங்கு அவர்  செயல்பட்டுக் கொண்டிருந்த கட்சிக் கிளைக்கு வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. கட்சி தடை செய்யப்பட்டிருந்த அந்தக் காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் கூடி, வகுப்பு எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு தோழர்களுக்கு கட்சி வகுப்பெடுத்தவர் கோவில் குருக்கள் தோற்றத்தில் வந்த ஒரு தலைவர்.  அவர்தான் பின்னாளில் கட்சியின் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்ட  தோழர். ஏ.கே.கோபாலன். கட்சி தடை செய்யப்பட்ட அக்காலத்தில் மாறுவேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். மக்கள் போற்றும் தலைவராக இருந்த அவர் அந்த இக்கட்டான காலத்திலும் கூட கட்சிக் கல்வி வகுப்பை தோழர்களுக்கு எடுத்து வந்தார். எந்த சூழலிலும் கட்சிக் கல்வியை கைவிடுவது புரட்சியைக் கைவிடுவதாக அமையும்.

கட்சிக் கல்வி தொடர்ச்சியானதாகவும், குறிப்பிட்ட பாடத்திட்ட ஒழுங்குமுறையுடனும் நடைபெற வேண்டும். ஒருவர் ஏற்கெனவே பல தலைப்புக்களில் வகுப்பைக் கேட்டிருந்தாலும் கூட, மாறுகிற சூழலில்  மேலும் மேலும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் மூத்த தோழர்களுக்கும் பாடத்திட்டம் தேவைப்படுகிறது. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு தனிப் பாடத்திட்டம் தேவைப்படுகிறது. அதேபோன்று பல வெகு மக்கள் அமைப்புக்களில்  பணியாற்றும் ஆதரவாளர்களாக வரக்கூடியவர்களுக்கும் பாடத்திட்டம் தேவைப்படுகிறது.

முதலாளித்துவத்தின் சகல பரிமாணங்களையும் அறிந்திட வேண்டும். முதலாளித்துவம் எப்படி இயங்குகிறது என்பனவற்றவற்றை விளக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் எழுத்துக்கள், கட்சி கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களை தரும் லெனினின் எழுத்துக்கள், இந்திய நாட்டில் புரட்சிக்கான வழி குறித்து விளக்குகின்ற மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், முதலாளித்துவ கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலத்தில் நாம் செய்ய வேண்டிய பணிகளை அறிந்து கொள்ளவும், இடது மாற்றை எப்படி கொண்டு வர வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களையும் உள்வாங்கிட வேண்டும். இவற்றில் தெளிவாக இருப்பவராலேயே கம்யூனிஸ்டாக இருக்க முடியும். அப்போதுதான் அவர்களால் மக்களை வென்றெடுக்க முடியும்.

மார்க்சிய லட்சியம், இந்தியப்  புரட்சி லட்சியம், கட்சித் திட்டம், இடது ஜனநாயக அணி ஆகியவை மீது பிடிப்புடன் இருக்கும் ஒருவர், வர்க்க உணர்வுடன் ,உள்ளூர் அளவில் கட்சியை விரிவாக்கம் செய்திடும்  பணியை சிறப்பாக மேற்கொள்வார். உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் திரட்டுகிற கடமையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

சிந்தனையில்  ஆதிக்கம்

சமூகத்தில் ஆதிக்க வர்க்கத்தினர் எண்ணிக்கையில் சிறுபான்மையினரே. முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிகள், உற்பத்தி தேக்கம் ஆகியவை  தவிர்க்க முடியாது. அதேபோன்றுதான் வேலையின்மையும், வறுமையும் தவிர்க்க இயலாமல் முதலாளித்துவ சமூகத்தில் தாண்டவமாடுகிறது. எனினும் முதலாளித்துவ முறையிலிருந்து ஏன் நாடுகள் வெளியேற மறுக்கின்றன? சீனா போன்ற சோசலிசத்தை தழுவிய நாடுகளைத் தவிர இதர நாடுகள் முதலாளித்துவத்தையே கட்டியழுவது ஏன்? இந்த இடத்தில் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது.முதலாளித்துவம்  பொருளாதார ஆதிக்கம் மட்டுமின்றி சமூகத்தில் சிந்தனை ஆதிக்கத்தையும் செலுத்துகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, வகுப்புவாத வன்முறைகள், வாழ்வாதார இழப்புக்கள்  போன்ற கொடூர தாக்குதல்களை மேற்கொண்ட போதும், அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கணிசமான மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்.  எங்களைத் தவிர வேறு சரியான மாற்று இல்லை எனும் கருத்தாக்கத்தை சங்பரிவாரின் பிரச்சார இயந்திரம் மக்கள் மத்தியில் விதைக்கிறது. இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் இடையறாது நடக்கிறது. தனிநபரை பெரும் ஆளுமையாக மலையளவிற்கு கட்டமைப்பது எல்லா நாடுகளிலும் நடந்திருக்கிறது. இந்தியாவில்  அது அதிகமாகவே உள்ளது. பல வழிகளில்  மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. ஊடகங்கள் மூலம் முதலாளித்துவ ஆதரவு கருத்துக்கள் மக்களிடம் திணிக்கப்படுகிறது.

 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்ற பகுதிகளை ஆராயும்போது எங்கெல்லாம் மக்களை மதத்தின் அடிப்படையில் திரட்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டுள்ளனரோ, அங்கெல்லாம் அதிகமான ஓட்டுக்களைப் பெற்றுள்ளனர். ஒருவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்து எனும் மத அடையாளத்தை தூண்டி, இந்து மதத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், பாஜகவினால்தான் முடியும் என்கிற பிரசாரத்தின் மூலம், தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டனர். வர்க்க ஒற்றுமை என்ற கருத்தாக்கத்தை பரவ விடாமல் தடுக்க,  ஆளும் வர்க்கங்களுக்கு அடையாள திரட்டல் உதவுகிறது. சமூகத்தில் நன்றாக வாழ வேண்டுமென்றால், தன்னைப் பற்றி  மட்டும் கவலைப்பட வேண்டும்; தான் மட்டும் அதிக  சொத்துக்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்களை  தனி மனித உணர்வில் நவீன தாராளமயம் திணிக்கிறது. அதுவே கிட்டத்தட்ட நடுத்தர மக்களை கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டுவித்து வருகிறது.

களத்தில் மக்களைத் திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதும்,முதலாளித்துவ, தாராளமய சிந்தனைகளுக்கெதிராக, மத, சாதியவாதத்திற்கு எதிராக சோசலிச கருத்தாக்கங்களை விதைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்கு கட்சிக் கல்வி பயன்படுகிறது.முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு பொருளாதார கொள்கைகளை எதிர்த்துப் போராடுகிற அதேவேளையில், கருத்தியல் ரீதியாலான அதன் ஆதிக்கத்தை வீழ்த்திட,  கருத்தியல் போராட்டத்தை நடத்த வேண்டும். உழைக்கும் மக்களிடம் திணிக்கப்பட்டிருக்கும் கருத்தியலை வீழ்த்த மார்க்சிய முற்போக்கு, சமத்துவ கருத்தியலை கொண்டு செல்ல வேண்டும்.

கட்சிக் கல்வியை பல வடிவங்களில் நடத்த வேண்டும். அதில் சுய கல்வி மற்றும் வாசிப்பை மேம்படுத்துவது முக்கியமானது. நாட்டு நடப்புகளை, உலக நடப்புகளை, தத்துவார்த்தப்  போக்குகளை விளக்கும் சிறந்த படைப்புக்களை தெரிவு செய்து படிக்க வேண்டும். அனைத்து நூல்களையும் விமர்சன பூர்வமாக படிக்க வேண்டும். திட்டமிட்ட கட்சிக் கல்வி வகுப்பு, படிப்பு வட்டங்கள் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மார்க்சிய கண்ணோட்டத்துடன் அரசியல் தத்துவார்த்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.

மாநாட்டு முடிவுகள்

முத்தாய்ப்பாக  கட்சி கல்வி பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டு முடிவுகளை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அவை வருமாறு:

1) “வலிமையான மாநிலங்கள் உட்பட, எல்லா மாநிலங்களிலுமே போதுமான தரம்வாய்ந்த ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த குறைபாட்டில் இருந்து மீளும் முயற்சிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

2) பல்வேறு தலைப்புகளில் வகுப்பு குறிப்புகளை உடனடியாக இறுதி செய்திட வேண்டும். நாடு முழுவதும் கட்சி கல்வி வகுப்புகளுக்கிடையே ஒரே மாதிரியான தன்மையை கொண்டுவர இது உதவிடும்.

3) கொல்கத்தா ஸ்தாபன பிளீனம் மேற்கொண்ட முடிவின் அடிப்படையில், கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் குறைந்தது 4 தலைப்புகளில் கல்வி வகுப்புக்களை மேற்கொள்ளும் கடமையை, அதற்குரிய காலத்தைத் தீர்மானித்து, அமலாக்கிட வேண்டும். இது அல்லாமல், ஆர்.எஸ்.எஸ். பற்றிய வகுப்பினை நம்முடைய கட்சி கல்வி பயிற்சிகளில் கட்டாயமாக்க வேண்டும்.

4) படிப்பு வட்டங்களுடைய முக்கியத்துவம் அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது. ஆனாலும், நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் தொடர்கிறது. இந்த குறைபாட்டை களைந்திட வேண்டும். ‘படிப்பு வட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது’ என்ற தலைப்பில் பயிற்சியினை திட்டமிட்டு வழங்கலாம்.

5) அகில இந்திய மையத்தில், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில், நிரந்தர பள்ளி தயாராக உள்ளது. இந்த வசதியை, முறையாக பயன்படுத்த திட்டம் மேற்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அதே போல வேறு சில மாநிலங்களிலும் நிரந்தர பள்ளி கட்டப்பட்டுள்ளது. அவற்றில் வகுப்புக்களை தொடர்ந்து நடத்திட உரிய திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டும். நிரந்தர பள்ளி இல்லாத மாநிலங்களில், அத்தகைய ஒன்றைத் தொடங்கிட பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

எனவே, மார்க்சியத்தை பயில்வோம், பரவலாக்குவோம்,  புரட்சிகர இயக்கத்தை வலிமைப்படுத்துவோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s