இங்கிருந்து எங்கே…?


கலாநிதி க. கைலாசபதி

அண்மையில் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி அவர்கள் தமிழிலக்கிய உலகில் சோஷலிச எதார்த்த வாதத்தின் அடிப்படையிலேயே தனது எழுத்துக்களை வழங்கி வந்தார். அவரது ‘சுரங்கம்’ நாவல் குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்று ஆகஸ்ட் இதழில் வெளியாகும். அதற்கு முன்பாக, தமிழிலக்கிய உலகில் மார்க்சியப் பார்வையோடு எழுத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எழுதிய கலாநிதி கைலாசபதி அவர்களின் எழுத்தின் இலக்கு குறித்த கட்டுரையை இங்கே தந்துள்ளோம்.- ஆசிரியர் குழு

கலாநிதி . கைலாசபதி (1933-1982) இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் எம்.. முடித்து, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் டாக்டர் (கலாநிதி) பட்டம் பெற்றவர். தாம் வாழ்ந்த காலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள், நண்பர்கள், எழுத்தாளர்களின் சிந்தனையிலும் இதயத்திலும் குடிகொண்டவர். தம் காலத்தில் தனி நிறுவனமாகவே விளங்கினார். கல்வி, ஆராய்ச்சி, விமர்சனம், பத்திரிக்கைத் தொழில் ஆகிய துறைகளில் எல்லாம் புதுமை வேண்டி உழைத்தவர். கலைஇலக்கிய வரலாற்றில் அவர் பங்களிப்பு மலை போன்றது. அவர் பெயரில் பத்து அரிய நூல்கள் வரையும் நூற்றுக் கணக்கான ஆய்வுக்கட்டுரைகளும் உள்ளன.

பழந்தமிழ் இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் விஞ்ஞானபூர்வமாக அணுகும் போக்கின் முன்னோடியாகவும் முதல்வராகவும் அவர் விளங்கினார்.  “விமர்சனம் என்பது உலகை விவரிப்பது மாத்திரமன்று….அது உலகத்தை மாற்றி அமைப்பதற்குஓயாது பயன்படுத்தும் ஆயுதமாகவும் இருக்க வேண்டும்என்ற அவரது கலை, இலக்கியம், விமர்சனம் குறித்த உயர்ந்த கோட்பாடு அவரது எழுத்துக்கள் அனைத்திலும் ஊடுருவி நிற்பதைக் காணலாம். இலக்கியத்தின் இலக்கு மற்றும் எதிர்காலம் குறித்து அவர் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே வழங்குகிறோம்.

இலக்கிய உலகிலே காலத்துக்குக் காலம் புதிய பிரச்சனைகள் தோன்றுவதுண்டு. அதேபோல, காலங்காலமாக எழுப்பப்படும் சில வினாக்களும் உண்டு. அத்தகைய  ‘நித்தியமான’ வினாக்களில் ஒன்று ‘இலக்கியம் எதற்காக?’ என்பதாகும். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப இவ்வினாவிற்கு வேறுபடும் விடைகள் அளிக்கப்படலாம். எனினும் இலக்கியம் சம்மந்தமான அடிப்படை கேள்விகளில் மேலே குறிப்பிட்டதும் ஒன்றாகும்.

இலக்கியத்தின் குறிக்கோள் பற்றி கருத்து ரீதியாக விடை கூறுவதிலும் பார்க்க, இலக்கிய கர்த்தாக்களின் நோக்கையும் போக்கையும் விவரிப்பதனால் விளக்கம் தேடுதல் விரும்பத்தக்கதாகும். தனிப்பட்ட ஒரு எழுத்தாளன் காதல், புகழ், பணம், சமய நம்பிக்கை, அரசியல் ஈடுபாடு முதலிய பல காரணங்களில் ஒன்றோ, பலவோ உந்துவதால் எழுதுகிறான் எனக் கூறலாம். எனினும் எழுத்தாளனை பொதுவாக நோக்குமிடத்து மூன்று நிலைப்பாடுகளை கவனிக்கலாம்.

எழுத்தாளன் தனித்து வாழும் ஒருவன் அல்லன். அவன் சமூகப்பிராணி. சமுதாயத்தில் எல்லாக் காலங்களிலும் முரண்பாடுகளும், போராட்டங்களும், இயக்கங்களும் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மத்தியிலே எழுத்தாளனும் வாழ்கின்றான். இந்நிலையில் மூன்று நிலைப்பாடுகளை பொதுவாக எழுத்தாளரிடையே காணக்கூடியதாய் உள்ளது.

ஒரு பிரிவினர், பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும், துன்ப துயரங்களையும் எதிர்நோக்காதவராய், அவற்றுடன் சம்பந்தப்படாமல், இன்பமூட்டுவதையே எழுத்தின் தலையாய நோக்கமாய்க் கொண்டு, அதற்கு இயைய கற்பனைச் சம்பவங்களையும், கதைகளையும், உணர்ச்சிகளையும் இலக்கியமாக்குபவர்கள். இவர்களில் சிலர் கூறும் வாதம் சுவையானது. “வாழ்க்கை பலருக்குத் துன்பமாயுள்ளது என்பதை நாமும் அறிவோம். எனவே துன்ப மயமாய் அமைந்த வாழ்க்கைக்கு மேலும் துயர் கூட்டுவதுபோல, சஞ்சலத்தையும், அவலத்தையும், அருவருப்பையும் இலக்கியத்தில் எதற்காகப் புகுத்த வேண்டும்? ஆகவே, துன்பத்தின் மத்தியில் துளிநேர மாற்றத்தை அளிப்பதாய், கற்பனையிலேனும் களிப்பையும் கவர்ச்சியையும் நாம் கொடுத்து உதவ விரும்புகிறோம்; முயல்கிறோம்.” இவ்வாறு அவர்கள் தமது நிலைப்பாட்டிற்குச் சமாதானமும் விளக்கமும் கூறுவர். நடைமுறையில் பெரு வணிக நிறுவனங்களின் குரலாகவே இது இருப்பதைக் கண்டு கொள்ள அதிக நேரம் பிடிக்காது. தென்னிந்தியாவிலே பெரும் தொழிற்துறையாக வளர்ந்துள்ள சினிமா இத்தகைய வாதத்தின்  துணையுடனேயே, ‘அபினி’யாக மக்களுக்கு ஊட்டப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். பல லட்சக் கணக்கில் வெளியிடப்படும் ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’ முதலிய சஞ்சிகைகளும் ‘துன்பப்படும் மக்களுக்கு மகிழ்வூட்டுவதற்காகவே’ வெளிவருகின்றன எனக் கூறப்படுவதுண்டு. “எனது குறிக்கோள் மக்களை மகிழ்விப்பது ஒன்றே” என்றுதான் ஜெமினி அதிபரும் ஆனந்தவிகடன் வெளியீட்டாளருமான வாசன் எப்பொழுதும் கூறிவந்தார்.

இப்பிரிவினர் அனைவருமே பெருவணிகர் என்றோ, திட்டமிட்டு மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்போர் என்றோ நாம் கூற வேண்டுவதில்லை. இலக்கியம் தூய்மையானது; பேருணர்ச்சிகளுக்கு வாகனமாய் அமைய வேண்டியது; கற்பனை சார்ந்ததாய் இருக்க வேண்டியது என்று உண்மையாகவே நம்பும் எழுத்தாளரும் இருக்கக் கூடும். எவ்வாறாயினும் சமூகப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்காமல் மானசீக உலகில் இருந்துகொண்டு எழுதுவோர் ஒரு பிரிவினர் எனலாம்.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, மன்னராட்சிக் காலங்களிலும், நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பிலும், பாராட்டப்பெற்ற ‘அவை’ இலக்கியங்கள் இத்தகையன என்று பொதுப்படக் கூறலாம். குறிப்பாக உயர் மட்டத்தினரின் காதல் வாழ்க்கை, இன்பக் கேளிக்கை, உல்லாசப் பொழுதுபோக்கு என்பவற்றை மையமாகக் கொண்டு எத்தனையோ சிற்றின்ப நூல்கள் தோன்றின. இவற்றின் மிச்ச சொச்சத்தை நவீன காலத்திலே ஐயத்துக்கிடமின்றி நாம் காணக் கூடுமாயினும், முதலாளித்துவ சமுதாயத்திலே, வாழ்க்கையை, முற்றுமுழுதாகப் புறக்கணிக்கும் இலக்கியங்கள் தோன்றுவது குறைவு என்றே கூற வேண்டும்.

இன்னொரு பிரிவினர், மேலே நாம் விவரித்த சமுதாய முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் ஓரளவுக்கு நோக்கி, அவற்றைத் தமது எழுத்தின் பொருளாகக் கொள்பவர்கள். சமுதாயத்திலே பரவலாகக் காணப்படும் துன்ப துயரங்களை உணர்ச்சியின் அடிப்படையிலே அனுதாபத்துடன் பார்க்கும் இப்பிரிவினர், முந்தைய பிரிவினரோடு ஒப்புநோக்குமிடத்து தம்மைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை எதிர்நோக்குகின்றனர் என்பதில் ஐயமில்லை. எனினும் சமுதாய நிலைமைகளை பிரதிபலித்தாலே போதும் என்னும் எண்ணம் இவர்களில் பெரும்பாலானோரை பற்றிக் கொண்டிருக்கிறது என்பதிலும் ஐயமில்லை. அதாவது முதற்பிரிவினர் பிரச்சனைகள் இருப்பதையே எழுத்தில் பிரதிபலிக்கவில்லை; அதனால் அப்பிரச்சனை இலக்கியத்திற்கு உகந்த உரிய பொருட்கள் அல்ல என்னும் கருத்தைக் கொண்டவராய் உள்ளனர். இரண்டாவது பிரிவினரோ இதற்கு மாறாக, சமுதாயப் பிரச்சினைகள் இலக்கியத்தில் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் தமது கடமை, அல்லது பொறுப்பு அவற்றைத் தத்ரூபமாகச் சித்தரித்து விடுவதே என்று கருதுகின்றனர். காலப்போக்கில் சமுதாயம் திருந்தும் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு உண்டு.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை அடுத்து வந்துள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், சந்தைக்குப் பொருள் தயாரிப்போருள் ஒருவனாக மாற்றப்பட்டுள்ள எழுத்தாளன், வாழ்க்கைப் போராட்டத்தின் அடிப்படையில் வேலைத் தட்டுப்பாடு, மோசடி, ஏற்றத்தாழ்வு, சுரண்டல் முதலிய கொடுமைகளை அனுபவரீதியாகவும், அறிவுரீதியாகவும் ஓரளவு கண்டு, அவற்றை இலக்கியத்திலும் பிரதிபலிக்கிறான். ஆயினும், இவற்றை எல்லாம், அவன் எழுத்தாளன் என்னும் வகையில் தனிப்பட்ட முறையிலும், தனிப்பட்ட மாந்தரின் அவலங்களாகவுமே எழுதுகிறான். இதன் விளைவாக, துன்ப துயரங்களை கண்டு கண்ணீர் வடித்து, இரங்கி ஏங்கும் நிலைக்குப் பெரும்பாலும் அவன் தள்ளப்படுகிறான். யதார்த்தத்தைக் கண்டு மனம் நொந்து வெதும்புகிறான்; சில சமயங்களில் சினங்கொண்டு சீறவும் செய்கிறான்; எனினும் அதற்கு மேல் அவன் நோக்கு பெரும்பாலும் போவதில்லை.

நவீன உலகில் பரவலாகப் பொதுமைச் சிந்தனைகளும், சோஷலிசக் கருத்துக்களும் நிலவுவதால், அவற்றாலும் இரண்டாம் பிரிவு எழுத்தாளர்கள் சிலர் ஈர்க்கப்படுவதுண்டு. எனினும் அவர்களிடத்தும், இலக்கியத்தை ‘பிரச்சாரம்’ ஆக்குதல் கூடாது என்னும் சில ஐயங்களும், அச்சங்களும் ஆழமாக வேரூன்றி இருப்பதைக் காணலாம்.

பல்வேறு வரலாற்றுக் காரணங்களினால், கடந்த கால் நூற்றாண்டு காலத்திலே, ஈழத்துத் தமிழிலக்கியத்தில் இப்போக்கு கணிசமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது எனலாம்.

எனினும் சமீப காலத்தில் பல இளைஞர்களிடையே, குறிப்பாக கிராமப் பக்கங்களில் வாழும் எழுத்தாளர்களிடையே, பிரச்சினைகளை இன்னும் நுணுக்கமாகவும், தூலமாகவும் ஆராய்ந்து அவற்றுக்குப் பரிகாரம் கூறும் இலக்கியப் படைப்புக்கள் வேண்டும் என்னும் கருத்து வேகம் பெற்று வருதலைக் கவனிக்கக் கூடியதாய் உள்ளது. இதற்குத் தருக்கரீதியான காரணங்களும் இல்லாமல் இல்லை. மனிதாபிமான உணர்வுடன் நடைமுறைப் பிரச்சினைகளை சித்தரித்தல் ஏற்றதே என்னும் கோட்பாடு ஓரளவு வழக்காகிய பின், அடுத்து என்ன? என்னும் வினா எழுதல் இயல்பே. அது மட்டுமன்று. பிரச்சினைகளை மேலும் கூர்ந்து நோக்கி, ஒவ்வொன்றின் காரண காரிய தொடர்புகளை விளங்கிக் கொண்டு எழுதும்போது, அவற்றை நீக்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான வழிவகைகளையும் விவரித்தல் தவிர்க்க இயலாததே. நோயை நுணுக்கமாக விளக்கி விவரித்தால் மட்டும் போதுமா? நோயாளியின் மீது இரக்கப்பட்டால் மட்டும் போதுமா? நோயின் வரலாற்றை ஆதியோடு அந்தமாகக் கூறினால் மட்டும் போதுமா? நோய் தீர மருந்தும் மார்க்கமும் வேண்டாமா?

இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஒரு காலகட்டத்தில் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புதுமையின் பெயரிலும் புரட்சியின் பெயரிலும் இலக்கியத்தில் புகுத்திய பொருள்களும் சித்தரிப்பு முறைகளும் இன்று வர்த்தக வெளியீடுகளிலும், சாதாரணமாக இடம்பெறத் தக்கவையாகி விட்டன. ‘அரங்கேற்றம்’ போன்ற திரைப்படமும் ‘யதார்த்தப்’ படைப்பு எனப் பலர் கருதுமளவிற்கு, பொருள் எடுத்தாளப்படுகிறது. அதாவது இனம் காண்பது கடினமாகி விட்டது எனலாம்.

இந்நிலையில், சமுதாயத்தில் காணப்படும் முரண்பாடுகளையும், துன்ப துயரங்களையும், போராட்டங்களையும் உதிரியான தனிமனிதர்களின் பிரச்சினைகளாக மாத்திரம் கண்டு காட்டாமல் அவற்றை வர்க்கங்களுக்கு இடையே நிகழும் போராட்டத்தின் வெளிப்பாடுகளாக காண்பது இன்றியமையாததாக ஆகிறது. இரண்டாவது பிரிவிலே தொடங்கியபோதும், வர்க்க அடிப்படையிலே பாத்திரங்களை அணுகாமல் விசேஷமான தனிப்பிறவிகளை இலக்கிய மாந்தராகக் கொண்டமையாலேயே, ஒரு காலத்து ‘முற்போக்கு’ எழுத்தாளர் ஜெயகாந்தன், இன்று ‘பிரம்மோபதேசம்’ செய்பவராக உருமாறியுள்ளார். இது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரது தனிப்பட்ட பலவீனம் மட்டுமன்று; அவன் பற்றிக் கொண்டிருந்த இலக்கியக் கோட்பாட்டிலே உள்ளார்ந்த பலவீனமாய் இருந்த அம்சத்தின் பரிணாமம் என்றும் கூறலாம் அல்லவா? ஜெயகாந்தனை விதிவிலக்கான ‘வில்லனாக’ நாம் விவரிக்க வேண்டியதில்லை. பல எழுத்தாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எடுத்துக்காட்டு என்றே கொள்ள வேண்டும். வர்க்க ஆய்வின் அடிப்படையில், தூலமான சந்தர்ப்பங்களில் பாத்திரங்களை சித்தரிக்கத் தவறும் எந்த எழுத்தாளரும் ஜெயகாந்தன் ஆவதற்கு அதிக நாள் பிடிக்காது.

இதை இன்னொரு வகையாகவும் நோக்கலாம். ஜெயகாந்தனது எழுத்தில் இன்றும் நுணுக்க விவரங்களைக் கூறும் ‘யதார்த்த’ப் பண்பு, அதாவது இயற்கையாகப் பாத்திரங்களைத் தீட்டும் ஆற்றல் குறைவின்றியே இருக்கிறது. மனிதாபிமான உணர்வும் இல்லையென்று அடித்துக் கூற இயலாது. ஆயினும் சமுதாய மாற்றத்துக்கு ஆதரவு தருபவராக அவர் இன்று இல்லை. எனவே பிழை எங்கு உள்ளது என்று கவனமாய்த் தேட வேண்டும்.

இந்த இடத்திலேதான் மூன்றாவது பிரிவினர் முக்கியத்துவம் பெறுகின்றனர். சமுதாயத்தை நுணுக்கமாகப் பிரதிபலிப்பது மட்டுமின்றி, அதனை மாற்றி அமைக்கும் பணியில் பங்குபற்றுவதுடன், அப்பணி வெற்றி பெறுவதற்குரிய மாற்றங்களை இலக்கியப் பொருளாகத் துணிந்து ஏற்றுக் கொள்வதும் இன்றைய தேவையாகும் என இப்பிரிவினர் வற்புறுத்துகின்றனர். இவ்வாதத்தை இலகுவில் ஒதுக்கிவிட முடியாது. அனுபவமும் அனைத்துலகப் போக்கும் இவ்வாதத்துக்கு அரண் செய்வனவாகவே உள்ளன.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது, தொழிலாளர், விவசாயிகள் வர்க்கத்திலிருந்து தோன்றும் கலை இலக்கியக் கோட்பாட்டின் காத்திரமான குரல் இது என்பது வெளிப்படை. எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் பெரும் பணிக்கு அவர்கள் தலைமை தாங்குபவர்கள் ஆதலின் அக்குரல் வலிமை உடையது என்பதில் ஐயமில்லை. இக்கோட்பாடு இலக்கியத்தில் செயற்படுகையில் சிறப்பான பிரச்சினைகள் தோன்றும் என்பது உண்மை. கலையழகு, உருவம், நம்பகத்தன்மை, ஏற்புடைமை, மொழி நயம் முதலிய பல்வேறு அம்சங்கள் இணைதல் வேண்டும். புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஆயினும் இவை எதிர்நோக்க வேண்டிய சவால்களே. இந்தக் காலகட்டத்தில் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் வந்து நிற்கின்றனர். தருக்கரீதியாக வளர்ந்து வந்துள்ள இப்போக்கை தக்கபடி முன்னெடுத்துச் செல்வதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது.

(இக்கட்டுரை ‘தாயகம்’ இதழில் 1974ஆம் ஆண்டில் வெளியாகி, கைலாசபதியின் மறைவையடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஈழத்து நாவலாசிரியர் செ. கணேசலிங்கன் பதிப்பித்த நினைவு மலரான ‘இலக்கியச் சிந்தனைகள்’ என்ற நூலில் இடம் பெற்றது.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s