மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !


  • இரா. சிந்தன்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிதாக ஒரு சினிமா வெளியாகியிருந்தது. கணிணி தொழில்நுட்பத்தில் வல்லவரான ஒரு பெண், கணிணி மென்பொருட்களில் புகுந்து அவற்றின் பிழைகளைக் கண்டறிந்து, அதனை முடக்கக் கூடிய வேலையை செய்கிறார். உலகத்திற்கு ஆபத்தானசூழலை கொடுக்கும் சில பெரிய நிறுவனங்களின் கணிணியை முடக்கி அவர்களின் சொத்துக்களை ஏதாவது நலப்பணிகளுக்கு திருப்பி விடுகிறார். இந்த சமயத்தில், அவரால் பாதிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அவரை விரட்டத் தொடங்குகிறது.

ஓட்டுனர் இல்லாமலே இயங்கும் ஒரு பேருந்து நிறுவனத்தின் அறிமுக பின்னணியில்தான் இந்த பிரச்சனை நடக்கிறது. அந்தப் பெண்ணுக்கும் பேருந்து நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?. அந்த பெண்ணுக்கு பிரச்சனை கொடுக்கும் உலக நிறுவனம் எது?. உலகத்திற்கு வந்திருக்கும் ஆபத்து எப்படிப்பட்டது? என்று படம் வேகமாக நகர்கிறது.

நெதர்லாந்து நாட்டில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த கதையில், சீனாவில் வளர்த்தெடுக்கப்பட்ட சில உயர் தொழில்நுட்பங்களை, ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தும்போது, அதனால் அந்த நாட்டின் சாமானிய மக்களுக்கு ஆபத்து வரும் என்பதாக சித்தரித்திருந்தார்கள்.

அமெரிக்க ஊடகங்களில், இது போன்ற கதைகள் வெளியாவது நமக்கு புதிதில்லை. கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யாவினை எதிரியாக சித்தரித்து, ஏராளமான படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அமெரிக்க உளவு, ராணுவ அதிகாரிகள் அந்த அபாயத்தில் இருந்து உலகத்தை காப்பாற்றுவார்கள். இப்போது அந்த பிரச்சாரம் சீனாவை மையப்படுத்துகிறது.

பண்பாட்டு மேலாதிக்கம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, உலக ஊடகங்களின் மீது உள்ள பிடி சாதாரணமானதல்ல. கிட்டத்தட்ட உலகின் 75% தொலைக்காட்சிகளை அமெரிக்க பெருமுதலாளிகளே சொந்தமாக வைத்துள்ளனர். உலகம் தழுவிய செய்தி ஏஜென்சி நிறுவனங்களில் அறுதிப் பெரும்பான்மை அமெரிக்காசார்பானவை. இணைய ஊடகங்களான மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சாப்) ,கூகிள் (ஜி மெயில், கூகிள் தேடுபொறி மற்றும் ஆன்ட்ராய்ட்) டுவிட்டர், அமேசான், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் என பெரும்பான்மை அமெரிக்க ஏகபோக நிறுவனங்கள். உலகின் பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமானவை. இவை தவிர, உலகம் முழுவதுமே கல்வி நிறுவனங்களிலும், பிற அரசு சாரா நிறுவனங்கள், கலை இலக்கிய நிறுவனங்களில் அமெரிக்காவின் தாக்கம் கூடுதலாகவே உள்ளது. இவையெல்லாம் அமெரிக்காவின் பண்பாட்டு மேலாதிக்கத்தை பராமரிக்க உதவுகின்றன.

முதலில் குறிப்பிட்ட திரைப்படத்தின் கதையில், சீனாவில் தயாரிக்கப்படும் ஓட்டுனர் இல்லாத தானியங்கி பேருந்துகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும் இயந்திரங்களின் நுட்பங்களும், அதிவேக இணைய வசதிகளையும் ஆபத்தானதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எந்தவொரு தொழில்நுட்பத்திலும், போதுமான கட்டுப்பாடுகள், சட்டப்பாதுகாப்புகள் இல்லாது, லாபவெறியை மட்டுமே முதன்மையாகக் கொண்டு வழிநடத்தப்பட்டால், அவை ஆபத்தை விளைவிக்கக் கூடும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அமெரிக்காவுக்கு கவலை உண்டா? அமெரிக்காவின் கவலை அதுவல்ல.

தொழில்நுட்ப மேலாதிக்கம்

சோவியத் ஒன்றியம் தகர்ந்த பிறகு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் காப்புரிமை பதிவுகளில் 80 சதவீதமானவை அமெரிக்காவை மையமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இப்போதும் அறிவுசார் காப்புரிமங்களை ஏற்றுமதி செய்து அதற்கான கட்டணத்தொகை (ராயல்ட்டி) மூலம்  பொருளீட்டும் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. (ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய்கள்).

உலகம் முழுவதும் நடக்கும் இந்த வர்த்தகத்தில் அமெரிக்காவின் வசம் 45% உள்ளது. 24% வர்த்தகத்துடன் ஐரோப்பா இரண்டாவது இடத்திலும், 14% ஏற்றுமதி மேற்கொள்ளும் ஜப்பான் மூன்றாவது இடத்திலும்  உள்ளது. உதாரணமாக, கொரோனா பெருந்தொற்றுக்கு கண்டறியப்பட்ட தடுப்பூசிகளிலேயே அதி நவீனமானவை, அமெரிக்க கண்டுபிடிப்புகளே. ஆனால் அந்த தொழில்நுட்பங்களை உலக நன்மைக்காக பயன்படுத்தவோ, குறிப்பிட்ட காலத்திற்கு அதன் உரிமக் கட்டணங்களை விட்டுக் கொடுக்கவோ அமெரிக்க நிறுவனங்கள் முன்வரவில்லை. அமெரிக்க அரசாங்கமும் தனியார் பண முதலைகளின் நலன் காத்து நின்றது. ஏகாதிபத்தியம், தொழில்நுட்பத்தின் மீது செலுத்தக்கூடிய மேலாதிக்கத்தினால் ஏற்படும் கெடு விளைவுக்கு கொரோனா தடுப்பூசிகள் மிகச் சிறந்த உதாரணமாக ஆகிப்போயின. இன்றுவரை உலக நாடுகளால் கொரோனா தொற்றின் அபாயத்திலிருந்து மீள முடியவில்லை.

வரலாற்றில், அமெரிக்கா கொண்டிருக்கும் தொழில்நுட்ப மேலாதிக்கம், வளரும் நாடுகளுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. நம் இந்தியாவும் அதில் விதி விலக்கல்ல. கடந்த காலங்களில், அதி நவீன சூப்பர் கம்ப்யூட்டர் மற்றும் உயர் தொழில்நுட்ப உபகரணங்களை பெற முடியாத நிலையில் இந்தியாவினை தடுத்தது அமெரிக்கா. இப்போதும் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவால் பெற முடியவில்லை. இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் இருந்தே நிலக்கரி மின் உற்பத்தி, அணு உலைகள் போன்ற மிக முக்கிய தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கு மறுக்கப்பட்டுள்ளன. அல்லது அதீத விலையில் தலையில் கட்டப்பட்டுள்ளன.

சீனாவின் எதிர்வினை

உலகத்தின் தொழிற்சாலையாக பரிணமித்திருக்கும் சீனாவுக்கு உயர் தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவில் அதற்கான செலவாக ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு சீனா மேற்கொள்கிறது. எனவே, தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டு, சொந்த நாட்டு தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து முன்னுக்கு வந்தது. தனது ஐந்தாண்டு திட்டங்களில் இதற்காக சிறப்பு கவனத்தை குவிக்கத் தொடங்கியது.

ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தனர். இப்போது உலகத்திலேயே அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகம் செலவிடும் நாடாக சீனா உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.44 சதவீதம் தொகையை (ரூ.28 லட்சம் கோடிகள் வரை) இதற்காகச் செலவு செய்கின்றனர்.

இதற்கான ஒரு உதாரணமாக, சீனா தனது ஆராய்ச்சியில் உருவாக்கிய பெய்டோ என்ற வழிகாட்டி/வரைபட தொழில்நுட்பத்தை சொல்லலாம். 1994 ஆம் ஆண்டில்தான் சீனா இதற்கான தனது செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது. பல ஆண்டுகள் தொடர்முயற்சியில் இப்போது பெய்டோ தொழில்நுட்பம் அமெரிக்காவின் ஜி.பி.எஸ் உட்பட அனைத்து வசதிகளிலும் மேம்பட்டதாக, அதி நவீன வசதிகளை உள்ளடக்கியதாக, குறைந்த செலவு பிடிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் உலகச்சந்தையில் 25 சதவீதத்தை விரைவில் பிடிக்கும் என்றும். 3 ஆண்டுகளில் அதன் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாய்களாக இருக்கும் என்றும் சீன வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஆனால் தன்னுடைய தொழில்நுட்ப மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்காக, சீனாவின் கால்களை பிடித்து இழுக்கவும் அமெரிக்கா தயங்குவதில்லை. எனவேதான் தொழில்நுட்ப துறையில் பல தடைகளும், தடுப்புகளும் அமெரிக்காவால் சீனாவிற்கு எதிராக உருவாக்கப்படுகின்றன. அந்தச் செய்திகள் ஊடகங்களில் பலவாறாகவும் இடம்பிடிக்கின்றன. அதன் விபரங்களை இந்தக் கட்டுரையில் இறுதியில் பார்ப்போம்.

ஒரு துருவ உலகம்

முதலில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வராத ஆத்திரம், சீனாவின் மீது வருவதற்கான காரணம் என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

முதலாளித்துவ வளர்ச்சியின் இப்போதைய கட்டத்தை நவ தாராள உலகமயம் என்கிறோம். இந்த காலகட்டத்தில் நிதி மூலதனம் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. அதாவது, நிதியாக சேகரமான மூலதனம் எந்தவித உற்பத்தி நடவடிக்கைகளிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், உலகத்தின் எந்த நாடுகளுக்குள்ளும், எந்த உற்பத்தியிலும், வணிகத்திலும் தங்கு தடையில்லாமல் நுழையவும், வெளியேறவும் முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதற்காக இந்தியா போன்ற வளரும் நாடுகளின் இறையாண்மையை தாக்கவும், பலவீனப்படுத்தவும் அதனால் முடிகிறது. யூக அடிப்படையில் லாபம் ஈட்டும் அதன் தன்மையின் காரணமாக பொருளாதார குமிழிகள் உருவாகின்றன. அவை, புதிய புதிய பொருளாதார நெருக்கடிகளையும் உருவாக்குகின்றன. தங்குதடையில்லாத நிதி மூலதனத்திற்கு ஏற்ற அரசியலை வடிவமைப்பதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பணியாகும்.

“காலனி ஆதிக்கத்திற்கு பின் நாம் கண்டுவரும் இந்த நியாயமில்லாத உலக நடைமுறையை நிலைநிறுத்திட சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்றவை கருவிகளாக பயன்படுகின்றன. ஊக நிதிமூலதனத்தின் இந்த ஆதிக்கம், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ச்சியை மந்தப்படுத்தியுள்ளது”, இதன் காரணமாக “வளர்ச்சியடைந்த, பணக்கார முதலாளித்துவ நாடுகள் ஒருபுறம், பெரும்பகுதி மக்கள் வாழும் மூன்றாம் உலக நாடுகள் மறுபுறம் என்று, ஏகாதிபத்திய நடைமுறை உலகையே இரு கூறாகப் பிரித்துள்ளது.” என நம் கட்சி திட்டம் குறிப்பிடுகிறது.

மேலும், இந்த காலகட்டத்தின் மையமான சமூக முரண்பாட்டினை, “சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடு” என்கிறோம். இந்த முரண்பாடு குறித்து 23வது கட்சி காங்கிரஸ்  விவாதித்தது. சீனா – அமெரிக்கா இடையிலான மோதல் வளர்வதையும், கியூபா, வடகொரியா மீதான நெருக்கடிகள் அதிகரித்திருப்பதையும் சுட்டியுள்ளது. ஆம். இதுதான் சீனாவின் மீது அமெரிக்காவின் பாய்ச்சலுக்கான காரணம் ஆகும்.

சோசலிச சமூக அமைப்பு முதலாளித்துவத்தை விடவும் மேம்பட்ட ஒன்று என்பதை அமெரிக்கா நன்கு அறியும். எனவே, கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததைப் போலவே, சீனாவின் வலிமையையும் என்ன விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்க மேலாதிக்கத்தை மையப்படுத்திய உலகமாகவே (ஒரு துருவ உலகமாகவே) நிலைமை தொடர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதனால் அவர்களுக்கு அதீத லாபங்கள் கிடைக்கின்றன.

சீன அறிஞர்கள் சென்என்பு மற்றும் லுபாலின் ஆகியோர் இதனை ஒரு ஆய்வின் விபரங்களைக் கொண்டு கீழ்க்காணும் விதத்தில் தெளிவுபடுத்துகின்றனர்.

“நாம் சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை எடுத்துக்கொள்வோம். சீனாவின் நிலத்தையும், சூழலியல் வளங்களையும், மலிவான உழைப்பையும் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இந்த பொருட்களை வாங்குவதற்காக, அதற்கு ஈடான உற்பத்தி எதையும் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. டாலர்  நோட்டுக்களை அச்சடித்தால் மட்டுமே போதுமானது”

அந்த நோட்டுக்களை வைத்தும் கூட சீனாவால் உண்மையான சொத்துக்களை வாங்க முடியாது. அமெரிக்க கருவூலத்தின் பத்திரங்களையோ அல்லது வேறு சில நிதிசார் நடவடிக்கைகளையோதான் சீனா மேற்கொள்ள முடியும். அவர்கள் குறிப்பிடும் ஆய்வு ஒன்று, அமெரிக்கா தனது மேலாதிக்கதினால் பெறக்கூடிய லாபத்தை கணக்கிட்டு நமக்கு தருகிறது. அதன்படி அமெரிக்கா தனது மேலாதிக்கத்தின் வழியாக அடையக் கூடிய லாபம் (hegemonic dividends), 2011ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கீட்டின்படி அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் சற்று கூடுதலாகும். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக அமெரிக்கா ரூ.16 லட்சம் கோடிகளை பெறுகிறது. இப்போது இந்த தொகை இன்னும் கூடுதலாக இருக்கலாம். ‘சீனாவின் உழைப்பாளர்களின் உழைப்பில் 60 சதவீதம், சர்வதேச ஏகபோக முதலாளிகளுக்கு இலவசமாக தரப்பட்டுள்ளது’. ஆய்வின் விபரங்கள் அதிர்ச்சியாகத்தான் உள்ளன.

இந்தப் ‘பலன்களை ’இழப்பதற்கு அமெரிக்கா தயாராக இல்லை. சோவியத் ஒன்றியத்தின் தகர்விற்குப் பின், இனி ஒரு புதிய போட்டியாளர் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதி காட்டியது.

சீன – அமெரிக்க உறவு

      “சீனாவுடனான உறவினை புதுப்பிக்கிற அதே சமயத்தில், சோசலிசத்தை கைவிடும்படி நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். சீனத்தின் கொள்கைகளை மென்மையாக்குவதற்கு இந்த உறவினை பயன்படுத்த வேண்டும். இந்த முக்கியமான விசயத்தில் நாம் உறுதியோடு இருக்க வேண்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். (1990, மே)

      அதன் பிறகு, 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், மக்கள் சீனத்தின் தலைவரான ஜி ஜின்பிங்கும் சந்தித்தனர். அமெரிக்காவிற்கும் – சீனாவுக்கும் இடையிலான உறவு, பெரிய நாடுகள் தங்களுக்கு இடையில் கொள்ளும் உறவுக்கான ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்று அறிவித்தார்கள். ஆனால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெறும் மேல் பூச்சுதான்.  2010 ஆம் ஆண்டிலேயே சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவினை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் மேற்கொண்டு விட்டது.

2015ஆம் ஆண்டில், ஜி ஜின்பிங் அமெரிக்காவின் சியாட்டில் துறைமுக நகரத்திற்கு சென்றார். அங்கே பேசும்போது, அமெரிக்காவின் அணுகுமுறைக்கு தனது பாணியில் எதிர்வினையாற்றினார்.

“அமைதியான போக்கில் வளர்ச்சியை சாதிப்பதுதான் சரியான வழியாகும் என்பது  உலக வரலாறு நமக்கு கற்பிக்கும் முக்கியமான பாடம்… வரலாற்றின் ஓட்டத்திற்கு மாறாக, வலிமையைக் கொண்டு  மேலாதிக்கத்தை சாதிக்க நினைக்கும் எந்த முயற்சியும் தோல்வியடையும். “நாடு இப்போது வலிமையாக இருக்கலாம், சண்டை அதன் அழிவுக்கு வழிவகுக்கும்” என்று சீனர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.

      மேலும், வளரும் நாடுகளின் பிரதிநிதியாக நின்று, நாடுகளுக்கிடையிலான உறவில் சமத்துவத்தை மேம்படுத்த வேண்டிய தேவையையும் சுட்டிக் காட்டினார். அனைத்து நாடுகளுக்கும் நன்மை தருவதாகவும், மனித குலத்தின் நன்மையை மனதில் கொண்டதாகவும் உலக நாடுகளுக்கு இடையிலான உறவினை மேம்படுத்த வேண்டும் என்றார்.

      அமெரிக்கா – சீனா இடையிலான உறவில் சிக்கல்கள் அதிகரிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். அப்போதே சீனா தனது பட்டுப்பாதை நிதியை உருவாக்கி, பெல்ட் & ரோட் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருந்தது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உருவாக்கம், ஆசிய- பசிபிக் பிரதேசத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் அது கவனம் செலுத்தியது. 2008ஆம் ஆண்டு வெளிப்பட்ட உலக பொருளாதார மந்த நிலையை தொடர்ந்து, பல துருவ உலகத்தை நோக்கிய போக்குகள் வலுப்பட்டும் வருகின்றன. சர்வதேச தொடர்புகள் விசயத்தில் சீனாவின் அணுகுமுறை பல துருவ உலகத்தை நோக்கியதாகவே உள்ளன.

      தற்போது நடந்து முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாட்டின் தொடக்க உரையில், வெளியில் இருந்து நடக்கும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ‘சர்வதேச தளத்தில் ஏற்பட்டு வரும் கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறோம், குறிப்பாக மிரட்டவும், கட்டுப்படுத்தவும், தடை விதிக்கவும் சீனாவின் மீது கூடுதலான அழுத்தங்களை சுமத்தவும்’ முயற்சிகள் நடக்கின்றன என சுட்டிக்காட்டுகிறார்கள். இனி வரும் நாட்கள், எதிர்பாராத சவால்களை உள்ளடக்கி இருக்கும் என்பது அவர்களின் கணிப்பு.     

நவதாராள உலகமயம் மேலாதிக்கம்

      ஏகாதிபத்தியத்தின் நோக்கம் நிதி மூலதனத்திற்கு சாதகமான உலக சூழலை பராமரிப்பதே என்பதை மேலே கண்டோம். அதற்காக அரசியல், ராணுவ, பண்பாட்டு மேலாதிக்கத்தை பராமரிக்கிறது. பொருளாதார உறவுகளை தனக்கு சாதகமாக வடிவமைக்கிறது.

அமெரிக்க டாலர்தான் உலக நாடுகளால் ஏற்கப்பட்ட செலாவணியாக உள்ளது. உலக நாடுகளின் வசம் இருக்கும் அன்னியச் செலவாணி கையிருப்பில் 70 சதவீதம் அமெரிக்க டாலரே ஆகும். 68 சதவீதமான சர்வதேச ஒப்பந்தங்களில் டாலர் பயன்படுத்தப்படுகிறது. அன்னிய செலாவணி பரிமாற்றத்தில் 80 சதவீதமும்,சர்வதேச வங்கி பரிவர்த்தனையில் 90 சதவீதம் டாலரில் நடக்கிறது. அமெரிக்க டாலரின் இந்த மேலாதிக்கத்தின் காரணமாக, ஏழை நாடுகளின் கடன் சுமையும், வட்டிச்சுமையும் அதிகரிக்கின்றன. டாலர் மதிப்பு உயரும்போதும், சரியும்போதும் இந்த சமனற்ற நிலைமையின் சிக்கலை நாம் வெளிப்படையாக உணர்கிறோம்.

குறிப்பிட்ட துறைகளில் ஏகபோக ஆதிக்கம் மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது. உதாரணமாக உலகில் ஒட்டுமொத்த சோயாபீன்ஸ் உற்பத்தியையும் 5 பன்னாட்டு நிறுவனங்கள்தான் கட்டுப்படுத்துகின்றன. அதில் மான்சாண்டோ என்ற நிறுவனம் விதை உற்பத்திக்கான கச்சா பொருட்களை கட்டுப்படுத்துகிறது, மற்ற 4 நிறுவனங்கள் பயிர் செய்தல், வர்த்தகம் மற்றும் பிராசசிங் துறைகளை கட்டுப்படுத்துகின்றன. இந்த ஏகபோக நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, லாபத்தைக் குவிக்கிறார்கள்.

இதுபோல சமூகத்தின் சொத்துக்கள் மிகச் சில முதலாளித்துவ முதலைகளின் கைகளுக்கு மாற்றப்படுகிறது. ஏற்றத்தாழ்வுமும், லாபக்குவிப்பும் உலகம் தழுவியதாக நடக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு தரும் விபரங்களின்படி உலகத் தொழிலாளர்களில் 73 சதவீதம் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். மிகக் குறைந்த கூலியே பெறுகின்றனர். அதில் 40 சதவீதம்பேர் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளில் வாழ்கிறார்கள். அதே சமயத்தில் 500 தனியார் பெருநிறுவனங்களுடைய வருவாய், ஒட்டுமொத்த உலக வருவாயில் 30 சதவீதமாக உள்ளது.

நேரடியான ராணுவ மேலாதிக்கத்தையும் அமெரிக்கா தொடர்ந்து பராமரிக்கிறது. தனது  பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொள்கிற போதிலும் ராணுவச் செலவினத்தை அதிகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 193 நாடுகளில் சரிபாதியானவைகளில் அமெரிக்க படைகள் அத்துமீறி நுழைந்திருக்கின்றன. இந்த தாக்குதல்கள் சோவியத் ஒன்றியத்தின் தகர்வுக்கு பின் அதிகரித்துள்ளன. உலகப்போர் காலத்திற்கு பின் உலகின் 36 அரசாங்கங்களை அமெரிக்கா நேரடி தலையீட்டின் மூலம் கவிழ்த்துள்ளது. பல்வேறு நாடுகளில் நடந்த 85 தேர்தல்களில் தலையிட்டுள்ளது. 30 நாடுகளில் அப்பாவி மக்கள் குழுமியிருந்த இடங்களில் குண்டு வீசியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் 50 தலைவர்களை கொலை செய்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரின் பின்னணியில் இதுபற்றி நாம் கூடுதலாக பேசியிருக்கிறோம்.

அமெரிக்காவின் ஆசியா – பசுபிக் உத்தி, சீனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்திலானதாகும். தனது நோக்கத்தில் இந்தியாவையும் துணைக்கு இழுக்கிறது. எதிரி வலிமையாவதாக உணர்ந்தால் அதனை வம்புச் சண்டைக்கு இழுக்க வேண்டும் என்ற உத்தியைத்தான் அமெரிக்கா பின்பற்றுகிறது என்கின்றனர் மேற்கத்திய வல்லுனர்கள்.

மேற்சொன்ன ஏகாதிபத்தியத்தின் 5 வெளிப்பாடுகளை, 5 தன்மைகளை கீழ்க்காணும் விதத்தில் வகைப்படுத்தலாம்.

1) உலகத்தின் சந்தையை கட்டுப்படுத்தும் நிதி மூலதனம்,

2) பூமியின் இயற்கை வளங்களை கட்டுப்படுத்தும் ஏகபோக பெருநிறுவனங்கள்.

3) ஊடகங்கள், தகவல் தொடர்பை கட்டுப்படுத்துவதன் வழியாக மக்களின் பண்பாட்டில், சிந்தனையில் ஆதிக்கம்

4) பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் ஏகபோக உடைமை

5) தொழில்நுட்பங்கள், அறிவுசார் சொத்துக்கள் மீதான கட்டுப்பாடு

சீனாவுடன் மோதல் போக்கு

      முதலாளித்துவத்தின் உச்ச கட்டமே ஏகாதிபத்தியம் என்பதை லெனின் வரையறுத்தார். மேலும் அவர் குறிப்பிடும்போது  “ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவம் ஆகும்; அது ஒட்டுண்ணி வகைப்பட்ட, அழுகல் நிலையில் உள்ள முதலாளித்துவம்; மரணக் கட்டிலில் உள்ள முதலாளித்துவம்” என்றார். அந்த வார்த்தைகள் இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கச்சிதமாக சுட்டுகிறது.

      நிலைமையை மாற்றியமைக்கும் புரட்சிகர போராட்டத்தை பின்னுக்கு இழுக்கவும், தாமதப்படுத்தவும் அது தொடர்ந்து முயலும். தனது அனைத்து உத்திகளையும் பயன்படுத்தும். சீனாவின் விசயத்தை பொருத்தமட்டில் அதை தன்னுடைய கேந்திர போட்டியாளராக அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. தான் மற்றும் தனது நண்பர்கள், கூட்டாளிகளின் நலனை பாதுகாக்கும் விதத்தில் சீனாவின் புறச் சூழலை மாற்றியமைப்பதே அமெரிக்காவின் உத்தியாக வகுத்துள்ளது. சீனாவை கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் வேண்டும் என்கிறது.

சீனா ஒரு சோசலிச நாடாக தொடர்வதும், வலிமையடைவதும் ஒரு துருவ ஏற்பாட்டிற்கும் சவாலாக அவர்கள் பார்க்கிறார்கள்.

அண்மைய நிகழ்வுகள்

2022 ஆகஸ்ட் 2022 அன்று அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். இதனை சீனா கடுமையாக எதிர்த்தது.

தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஒன்று. சீன புரட்சி சமயத்தில் தைவானில் தஞ்சம் புகுந்த எதிர்ப் புரட்சி சக்திகள், அங்கே ஏற்படுத்திய முதலாளித்துவ அரசாங்கத்தை சீனா முற்றாக அழித்து ஒழிக்கவில்லை. அமைதியான முறையில் நாட்டை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற முடிவினை எடுத்தார்கள். இருப்பினும் அதற்கு சாதகமான சூழல் இப்போதுவரை உருவாகவில்லை.

இந்த நிலையில், தைவான் ஆட்சியாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமான பயணத்தை பெலோசி மேற்கொண்டார். இந்த பயணம் அவருடைய தனிப்பட்ட முடிவு என்பது போல அமெரிக்கா காட்டிக் கொண்டது. ஆனால் அங்கே அவர் ‘தைவான் செமிகண்டெக்டர் உற்பத்தி நிறுவனத்தினரோடு’ சந்திப்பு மேற்கொண்டார்.

      ராணுவ நடவடிக்கைகளை தூண்டுவது போல தொடங்கிய இந்த நிகழ்வுப்போக்கு, சீனாவின் மீது மட்டுமல்லாமல், தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் தாக்கம் செலுத்தியது. ஏற்கனவே வறுமையில் உள்ள நாடுகள் பலவும் தங்கள் தற்காப்புக்காக ராணுவ செலவினங்களை அதிகப்படுத்தினார்கள். சீனாவை பொருத்தமட்டில் அமெரிக்காவின் இந்த நகர்வு உயர் தொழில்நுட்பங்கள் மீதான கட்டுப்பாட்டை நோக்கியதாகவும் இருந்தது.

பலமும், பலவீனமும்

      இப்போதும் சீனாவின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் முதன்மையான நாடு அமெரிக்காவே ஆகும். அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு செல்லும் நேரடி முதலீடும் அதிகரித்தே வருகிறது. உலகமய காலத்தில், உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதார நலன்களும் பிரிக்க முடியாத விதத்தில் பிணைந்திருக்கின்றன.

அதே சமயத்தில், ஒபாமா காலத்தில்  இருந்தே சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், சீனாவின் மீதான இனவாத வெறுப்பும், பொருளாதார தடைகளும் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட்டன.

5ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஹுவாவை நிறுவனம் உட்பட சில நிறுவனங்களை முடக்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. கைது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவில் ‘சிப்புகள் மற்றும் அறிவியல் சட்டம்’ என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர சந்தை, உலகமயம் ஆகிய தாரக மந்திரங்களுக்கு நேர்மாறான இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க ஏகபோக பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தை தொடரும் நோக்குடனே எடுக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள், 5ஜி, செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள், தொழில் இணையம், அதிவேக இணைய உபகரணங்கள் தயாரிப்பிலும், அறிவியல் தொழில்நுட்ப துறையிலும் சீனாவை பின்னுக்கு தள்ளும் என்று அமெரிக்கா கருதுகிறது.

சீனா, உலகின் இரண்டாவது பொருளாதாரம் என்ற நிலைமையை எட்டியுள்ள போதிலும், இப்போதும் அது வளரும் நாடுதான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ரோபாட்டிக்ஸ், மின்சார வாகனங்கள் மற்றும் சிப்/செமிகண்டெக்டர் உற்பத்திக்காக அது இறக்குமதிகளையும், பிறநாட்டு அறிவுசார் கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்ப கருவிகளையும் அதிகம் சார்ந்திருக்கிறது.

அண்மை ஆண்டுகளில் ஆராய்ச்சிகளில் சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளது எனினும் அமெரிக்கா மேற்கொள்வதில் அது பாதியளவுதான் என்பதும், மேலும், அமெரிக்கா பல ஆண்டுகளாகவே ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்திருப்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். அறிவுசார் வளங்களை எடுத்துக் கொண்டால், சீனா செய்துவரும் பங்களிப்பை போல 6 மடங்கு இறக்குமதி செய்கிறது. எனவே, அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பது உண்மையே.

அதுவும், அமெரிக்காவின் சமீபத்திய கட்டுப்பாடுகள் உற்பத்தி இயந்திரங்களை மறுப்பதாகவும், முக்கிய கச்சாப்பொருட்களை மறுப்பதாகவும் உள்ளதுடன் தொழில்நுட்பம் படித்த, அமெரிக்க குடியுரிமை கொண்ட நிபுணர்கள், சீனாவில் வேலை பார்ப்பதை மட்டுமல்ல, சீனாவுக்காக உற்பத்தி நடந்தால் அதில் பங்கெடுப்பதையும் கூட தடை செய்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சில தொழில்நுட்பங்களையும் கூட சீனாவில் மேற்கொள்ளும் உற்பத்தியில் பயன்படுத்த முடியாது என்று இந்த விதிகள் நெருக்குகின்றன.

உலகச் சந்தையில் 40 லட்சம் கோடி புழங்கும் சிப்/செமிகண்டெக்டர் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் 8 ஆண்டுகளில் அதன் சந்தை இருமடங்காக உயரும் என்றும் கணிக்கிறார்கள்.

அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் 16 நானோமீட்டர், 14 நானோமீட்டர் அல்லது அதற்கும் குறைந்த அளவிலான லாஜிக் சிப்கள், 18 நானோமீட்டர் கொண்ட டைனமிக் ராம் சிப்கள், 128 லேயர் கொண்ட மெமரி சிப்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு கொண்ட சிப்கள் குறைவான மின் பயன்பாடு கொண்டவையாகும், அதிவேக செயல்திறன் கொண்டவை எனவே இவற்றை நுகர்வோர் பயன்பாட்டுக்கானவை. உலகத்தின் மொத்த உற்பத்தியில் 18.4 சதவீதம் சீனாவில் நடக்கும் நிலைமையில் சீனாவை இதில் இருந்து அகற்றுவது எளிதல்ல.

இதன் உற்பத்திச் சங்கிலி உலகம் தழுவியதாக உள்ளது. எனவே இந்த துறையில் இருந்து சீனாவை மட்டும் தனிமைப்படுத்துவது எளிதல்ல. உதாரணமாக, சிப்/ செமிகண்டக்டர் எப்படி இருக்க வேண்டும் என்ற வடிவமைப்பு பிரதானமாக அமெரிக்காவில் செய்யப்படுகிறது. அதற்கான சிலிகான் தகடுகள் ஜப்பானில் உற்பத்தியாகின்றன. அந்த தகடுகளில் இழை சேர்ப்பது, சாயப் பூச்சு ஆகியவை அமெரிக்கா, தைவான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் நடக்கிறது. சரியாக அடுக்கி பரிசோதிப்பது மலேசியாவில் நடக்கிறது. சிங்கப்பூரில் இருந்து அது கப்பலில் ஏற்றப்படுகிறது. சீனாவில் அது பல்வேறு உபகரணங்களில் இணைக்கப்பட்டு சந்தைக்கான பொருளாக வடிவம் பெறுகிறது. உலகச் சந்தையில் விற்கப்படுகிறது. இந்த உற்பத்தி சங்கிலி பாதிக்கப்பட்டால் உலகம் முழுவதும் பாதிப்பு இருக்கும்.

அமெரிக்க நிறுவனங்களே முன்னணியில் இருக்கும்போதும், தன்னுடைய வருமானத்தில் 18 சதவீதத்தை ஆய்வுக்காக செலவிடும் சிப்/செமிகண்டெக்டர் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு, இனி வரும் காலத்தில் அவற்றின் மேம்பட்ட நிலையையே சரியச் செய்யக் கூடும். சீனா தனது ஆராய்ச்சியில் முன்னேறினால் அது சீனாவிற்கு சாதகங்களை அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது.

முடிவாக…

      உலகம் தழுவிய நிதி மூலதனத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் உற்பத்தி தளங்கள் இருப்பதும், விநியோகம் உலகளாவியதாக இருப்பதன் காரணமாக, ஏகபோக நிறுவனங்கள், தமக்குள்ளாக ஒரு கூட்டணியை அமைத்துக் கொண்டு, குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டுகிறார்கள். உலகச் சந்தையையும் கட்டுப்படுத்துகிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியோடு தமக்கு சாதகமான உலக ஒழுங்கினை பராமரிக்கிறார்கள்.

அமெரிக்காவின் ராணுவ பலமும், ராணுவ தலையீடுகளும், அமெரிக்க டாலரின் ஆதிக்கமும், உயர்ந்த தொழில்நுட்பங்களின் மீது அமெரிக்கா கொண்டிருக்கும் கட்டுப்பாடும் ஏழை/வளரும் நாடுகளுக்கு பாதகமாக இருக்கின்றன.

சோசலிச சீனா வலுப்படுமானால் அது இந்த ஆதிக்கத்துக்கு சவாலாக இருக்கும் என்பதாலேயே, சீனாவை கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கிறது அமெரிக்கா. ஆனால், உலக முதலாளித்துவம் நெருக்கடியிலேயே இருக்கிறது. தனது நெருக்கடிகளை உலக நாடுகளின் மீது தள்ளிவிடுவதும் தொடர்கிறது. இந்த நிலைமைகளை உணர்ந்திருக்கும் சீனா, சவால்களை எதிர்கொண்டு சோசலிச கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவோம் என்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் வெல்வது சோசலிசமா, லாபவெறி மேலாதிக்கமா என்பதைப் பொருத்தே மனித குலத்தின் எதிர்காலம் அமையும். 



Leave a comment