மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


19 ஆம் நூற்றாண்டு தென் தமிழக சமூக இயக்கம்


பேரா.  கா. அ. மணிக்குமார்

தற்கால தமிழகத்தில் சமூக எழுச்சி, சாதி எதிர்ப்பு இயக்கங்கள் எப்போதும் ஈ.வெ.ரா.  பெரியார், திராவிட இயக்கங்களாலேயே நடந்ததாகக் கருதப்படுகின்றன. துவக்க காலத்திய சாதிக் கட்டமைப்பு, சமூக ஏற்ற தாழ்வுகளுக்கு எதிரான போராட்டங்களில்  தீவிர பங்களிப்பு செய்த தனிநபர்கள், அமைப்புகளின் பெயர்கள் பொது விவாதத்தில் இடம் பெறாமல் போய் விட்டது.  மக்களைக் கவர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற தலைவரின் தலைமையில் இல்லாத கூட்டு இயக்கங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டனவாகவே உள்ளன. நாடார்கள் (சாணார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்) ஒரு சமூக பிரிவு என்ற வகையில் திராவிட இயக்கங்கள், ஈ.வெ.ரா பெரியாரின் காலத்திற்கு முன்பே, தென் தமிழகத்தில் பல சமூக எழுச்சி இயக்கங்களை நடத்தியுள்ளனர்.  சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்களின் முதல் எதிர்ப்பு இயக்கம் என்பது கிறித்தவ மதத்தை தழுவுதல் என்ற வகையில் அமைந்தது. இந்த மத மாற்றம் அவர்களுக்கு ஆங்கில கல்வி கற்கவும், அதன் மூலம் சமுதாயத்தில் அங்கீகாரம், அதிகாரம் பெற பயன்பட்டது. இதில் ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷினரிகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மதமாற்ற முறையை தேர்வு செய்யாதவர்கள், பின்னர் சிறு வியாபாரம், வணிகத்தில் ஈடுபட்டு, தங்களுக்கென்று சுதந்திரமான வாழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஐரோப்பிய வர்த்தகர்களின் நம்பிக்கை, நன்மதிப்பைப் பெற்ற நாடார் மக்கள், அவர்களின் அனுசரணையோடு பணப்பயிர்கள் பயிரிடுவது, பஞ்சு, புகையிலை வர்த்தக தரகுப் பணிகளில் ஈடுபட்டு, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தனர்.  இவர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், பண்பாடு, கலாச்சார ரீதியான மேம்பாட்டிற்கான எதிர்பார்ப்பை அவர்களிடையே ஏற்படுத்தியது. அக்காலத்தில் நிலவிய சமூக சூழலில், பின்தங்கிய பிரிவினராக இருந்த நாடார் சமுதாய மக்கள் எப்படி தங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்தினார்கள் என்பதையும், சமூக அமைப்பில் இருந்த ஏற்றத் தாழ்வுகளை எப்படி எதிர்த்து நின்றார்கள் என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

1

“ஒர் சமூக இயக்கம் என்பது ஒரு பொதுவான நலனை முன்னிறுத்தி, இலக்கை அடைவதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வெளியே எடுக்கும் கூட்டு முயற்சி” என்று வரையறுக்கப்படுகிறது. “சூழலியலும் – சமூகமும்: ஓர் அறிமுகம்”  என்ற நூலின் ஆசிரியர் லூக் மார்டெல் இன் கருத்துப்படி, இதில் மூன்று அம்சங்கள் உள்ளன :

  • 1.  சமூக இயக்கம் ஒரு பொது நலனை முன்னிறுத்தி, இலக்கை வென்றிட, கூட்டு இயக்கதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.
  • 2.  இது ஒர் சமூகப் பொது நலனை அடிப்படையாகக் கொண்டது.
  • 3.  இது அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு வெளியே தன் அரசியல், பண்பாட்டு இலக்குகளை அடைய தொடர் நடவடிக்கை எடுக்கும்.

            இந்த விளக்கம் தங்கள் குடியுரிமையை வலியுறுத்தி தென் தமிழகத்தில் நாடார்கள் நடத்திய இயக்கங்களுக்கு சரியாக பொருந்துவதாக உள்ளது.

உயர் சாதி என்று சொல்லப்பட்வர்களால் அடக்குமுறையையும், துன்பங்களையும் அனுபவித்து வந்த நாடார் சமுதாய மக்களிடையே, கிறிஸ்தவ மிஷினரிகள் சாதிய அமைப்பின் மீது ஏற்படுத்திய தாக்குதல்கள், கிறிஸ்தவ மதத்தை பரப்ப அவர்கள் எடுத்த முயற்சிகள் மிகச் சரியாக செயல்பட்டது.  1797ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார் சமூகத்தை சார்ந்த சுந்தரம் என்ற டேவிட், திருச்சபையின் உபதேசியராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடார் சமுதாய மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதை காண முடிந்தது.   அப்போது திருநெல்வேலி மாவட்ட முதலூரில் (தற்போது முதலூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது), முதல் கிறிஸ்தவ நாடார் குடியிருப்பு ஏற்படுத்திய பிறகு (1799), 40 ஆண்டுகள் கழித்து கால்டுவெல் திருநெல்வேலி வந்தார். 1841ஆம் ஆண்டின் இறுதியில் கால்டுவெல் திருநெல்வேலிக்கு வந்த போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 40,000 நாடார்  கிறிஸ்தவர்கள்  இருந்தார்கள். கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டத்தில் நாடார் மக்களோடு 30 ஆண்டுகள் இணைந்து பணிபுரிந்தார்.

விசித்திரம் என்னவென்றால், நாடார் சமுதாயத்தைப் பற்றி கால்டுவெல்-இன் கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்தவர்கள் நாடார் சமுதாயத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களே. கால்டுவெல் எழுதிய “திருநெல்வேலி சாணார்கள்” என்ற நூலில் அவர் எழுதிய குறிப்பைப் பார்த்தால் இந்த ஆட்சேபணைக்கான காரணம் வெளிப்படையாக தெரியும். அந்த குறிப்பில் கால்டுவெல், “…மேற்கிந்திய தீவுகளில் வசிக்கும் விடுதலை பெற்ற அடிமைகளை சாணார் இன மக்களோடு ஒப்பீடு செய்தவர்கள், அறிவுத்திறமை, தேக பலம், சுறுசுறுப்பில் நீக்ரோக்கள் சாணார் மக்களை விட உயர்ந்தவர்களாக உள்ளனர் என்று கருதுகின்றனர்…  காலனி நாடுகளில் உடல் உழைப்புப் பணிகளில்  ஈடுபட்டுள்ள கடை நிலையில் உள்ள இந்துக்களை விட, நீக்ரோக்கள் மேம்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது, ஒரு இனத்தின் உடல் வலிமைக்கும், மனத்திண்மையை மேம்படுத்தும் திறமைக்கும்  பொதுவானதோர் சம்பந்தம் இருக்கிறது என்ற  கருத்து சரியானதென நிருபணமாகிறது” என்றார்.

    நாடார் சமுதாய மக்களை பிற தாழ்த்தப்பட்ட சாதி மக்களோடு ஒப்பீடு செய்த கால்டுவெல் “மேற்குக் கரையோர அடிமைகள் அல்லது மலைப்பகுதியை சார்ந்த அடிமைகளின் அறிவுத்திறன் பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆனால் சமூக படிநிலையில் மேல் நிலையில் உள்ள சாதிகள் தொடங்கி கீழ் நிலையில் உள்ள சாதிகள் வரை பார்த்தால், சாணார் சமுதாய மக்களின் பயம் கலந்த, குழப்பமான மனநிலையை வேறு யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாது என்பதில் உறுதியாக உள்ளேன்” … சாணார் மக்களைவிட உயர்சாதி மக்களோடு தங்களுடைய அன்றாட தொடர்புகளை கூடுதல் நெருக்கத்துடன் கொண்டுள்ள பறையர் இன மக்களின் அறிவுத்திறன் கூடியுள்ளது. அவர்களின் பேச்சு மற்றும் உச்சரிப்புத்திறன் கூட துல்லியம் அடைந்துள்ளது” என முடிக்கிறார்.

 நாடார் மக்களின் குணம், சரீரம், அறிவாற்றல் பற்றி கால்டுவெல்-இன் வரையறையை வெறும் பிதற்றல்கள் என்று தற்கால ஆய்வாளர்கள் கண்டித்து நிராகரிக்கின்றனர். கால்டுவெல்-இன் இந்த கருத்து “வெள்ளையர்கள்தான் உயர்ந்தவர்கள்” என்ற காலனி ஆதிக்க கருத்தோட்டத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது.  ஏனென்றால் அதே நேரத்தில் கிறிஸ்தவ பாதிரியார்கள் எடுத்துக்  கொண்ட முயற்சியின் விளைவாக நாடார் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கும் கால்டுவெல், நாடார்களை பண்படுத்தி நாகரீகமாக்க எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றது போல் “சாணார் இன மக்களின் பூர்வீக நிலைமை எப்படி இருந்திருந்தாலும் இப்போது தென் இந்தியாவில் உள்ள முற்போக்கான பூர்வ குடிமக்கள் மற்றும் சாதிகளில், இவர்கள் மிக உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்று நான் கருதுகிறேன்” என்று சொல்கிறார்.

சில குறிப்பிட்ட நாடார்களின் எதிர்ப்புகள் மட்டுமல்லாது, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களில் அருமைநாயகம் என்ற சட்டாம்பிள்ளையின் தலைமையில் ஒரு நாடார் பிரிவினர் கால்டுவெல் சொன்னது தவறு என்று நிரூபித்தனர். சரிசம வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்துகளில் பரிணமிக்க முடியும் என்பதற்கு அருமை நாயகம் ஒரு உதாரணம். அருமை நாயகம் ஒரு சிறந்த அறிவாளி. அவர் ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹீப்ரு, லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். அவர் மேற்கத்திய கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்தார். நாசரேத்தில் விவிலிய சேவையில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றிய அருள்திரு A.F. கேமியரர் என்ற பாதிரியாரின் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்தார். அருமைநாயகம் அவர் வகித்த பொறுப்பிலிருந்து திருச்சபையால் நீக்கப்பட்ட பின்னர், பிரகாசபுரத்தில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்து தேவாலயத்தை” தொடங்கினார். இந்த புதிய அமைப்பில் உடனடியாக சுமார் 2,500 பேர் உறுப்பினராக இணைந்தனர்.

நாடார் சமுதாய மக்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் பூர்வீக குடிமக்கள் பற்றி விவாதிக்கும் போது, அவர் பின் வருமாறு எழுதுகிறார்: “பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாயக்கர்களும், பிற தெலுங்கு சாதி மக்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. அதுபோல வெள்ளாளர்கள் சோழ நாட்டிலிருந்தும், சாணார்கள் இலங்கையிலிருந்தும் வந்தவர்கள் என்றும் பொதுவாக கருதப்படுகிறது.” 

இது எந்தவித ஆதாரமும் இல்லாத வெற்று அறிக்கை. ஈழவர்கள் (அவர்கள் பெயர் குறிப்பிடுவது போல்) இலங்கையிலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள். வடக்கு கேரளாவில் உள்ள ஈழவர்கள் “தீயர்கள்” என்று அழைக்கப்பட்டனர். வரலாற்று ஆசிரியர் K.M. பணிக்கர்   “நாடார்கள் பாலிநேச பூர்வீகக் குடியினர். இவர்கள் பாரம்பரியமாக தென்னை மரம் வளர்த்தல், மரம் வெட்டுதலை தொழிலாக கொண்டவர்கள்” என்கிறார்.  ஈழவ மக்களைப் போன்று, பனை மரத்திலிருந்து கள் இறக்கும் தொழில் திருநெல்வேலியில் உள்ள சாணார்கள் செய்து வந்ததால், அவர்களும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்ற முடிவுக்கு கால்டுவெல் வந்திருக்கலாம். பின்னாளில் மாவட்டக் குறிப்புகள் தயாரித்த அதிகாரிகள் உட்பட அனைத்து  ஆய்வாளர்களும் கால்டுவெல் எழுதிய “திருநெல்வேலி மாவட்ட வரலாற்றை” முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் தங்களுக்குகந்தவாறு பயன்படுத்திக் கொண்டனர்.

இலங்கையின் வரலாற்றை முழுமையாக அறிந்த ஒரு நபர், சாணார்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்ற கால்டுவெல்-இன் கருத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள்.  மானுடவியலாளர்களிடையேயான ஒருமித்த கருத்து என்னவென்றால், ஆரியர்களின் வருகைக்கு முன்பே இலங்கையில் உள்ள பூர்வ குடிமக்களான வேடர்கள், நாகர்கள், மற்றும் யாக்கர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆரியர்களின் குடியேற்றம் என்று சொல்லப்பட்டது பெரும்பாலும் கி.பி. 4ஆம் அல்லது 5 ஆம் நூற்றாண்டில் கலிங்க நாட்டிலிருந்து விஜயன் என்ற அரசனின் வருகையை யொட்டி நடந்திருக்க வேண்டும் என்று கருதலாம். அதிலிருந்து இலங்கையோடு உள்ள எல்லா வித நடவடிக்கைகளும் தென் இந்தியாவிலிருந்தே நடந்து வந்துள்ளது.

இலங்கையை தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் கடல் பகுதி 20 மைல் தூரம் மட்டுமே என்பதால், தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்து மக்கள் புலம் பெயரவும், இலங்கையின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களோடு கலந்து வாழவும் செய்தனர். மகாபலிபுரம் ஒரு துறைமுகமாக செழித்து விளங்கியுள்ளது என்றும், பல்லவர்கள் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் வணிகம், கடற்பயணம் தழைத்தோங்கியிருந்திருந்தது என்றும் வரலாற்று அறிஞர் K. K. பிள்ளை எழுதுகிறார். தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பெருமளவு மக்கள் பயணம் செய்தது, தொடர்புகள் ஏற்பட்டது இக்கால கட்டத்திலிருந்து தொடங்கியிருக்கலாம். 16வது நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற சுமார் 40 சாதி மக்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர். அப்படி குடியேறியவர்களில் பிராமணர்கள், வெள்ளாளர்கள் தவிர செட்டியார்கள், அகமுடையார், மறவர்கள், மீனவர்கள், வன்னியர்கள், ஆசாரிகள், தச்சர்கள், வண்ணார்கள், சவரத்தொழிலாளர்கள் ஆகியோர் முக்கியமானவர்கள்.  பிற சாதிகளான வெள்ளாளர்கள், மறவர்கள், செட்டியார்கள் போன்று நாடார்கள், சாணார்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுக் குறிப்புகளில் தகவல்கள் ஏதும் கிடையாது. தற்போது இலங்கையில் உள்ள கள் இறக்கும் தொழிலாளர்கள் “துருவர்கள்” என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு காலத்தில் நாடார் மக்கள் பிறர் பொறாமைப்படும் அளவிலான இடத்தில் இருந்துள்ளார்கள் என்றும், அவர்கள் பாண்டிய மன்னர்களை எதிர்த்து நிற்கும் அளவிற்கு வலிமையாக இருந்துள்ளார்கள் என்றும் வாய் மொழி வரலாறு ஒன்று கூறுகிறது. அவர்களின் தகுதிக்கு மீறிய அகந்தையால் வெறுப்படைந்த ஒரு பாண்டிய மன்னர், நாடார் இன மக்களை தண்டிக்கும் வகையில், அவர்களை திருநெல்வேலி மாவட்டத்திற்குள் உள்ள வறண்ட, சாகுபடிக்கு உதவாத தரிசு நிலப்பகுதியில் வாழ வேண்டும் என்று உத்தரவிட்டு, அவர்களை அப்பகுதிக்குள் கட்டுப்படுத்தி வைத்தார். இருந்தாலும், தங்கள் கடின உழைப்பினால், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக காணப்படும் பனை மரங்களை வளர்த்து, பனை பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து முன்னேறினர்.

நாடார் இன மக்களின் காவல் தெய்வங்கள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தின் பத்ரகாளி (பத்ர என்றால் பனை ஓலை), வேறு பட்ட வடிவங்களை கொண்ட அய்யனார் போன்ற தெய்வங்களாகும். நாடார்களின் பூர்வீகம்  திருநெல்வேலி மாவட்டம் என்று உரிமை கொண்டாடுவதற்கு இது உதவுகிறது.  நாடார் மக்கள் கொற்கையை (கடல் கொண்டு அழிந்ததால் அதன் முக்கியத்துவத்தை இழந்த ஊர்) தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களின் சந்ததியினர் என்ற ஓர் கருத்தும் நிலவுகிறது. பிரச்சனை என்னவென்றால், பிற தாழ்த்தப்பட்ட சாதி மக்களைப் போலவே, நாடார் மக்களுக்கும் தங்கள் பூர்வீகத்தைப் பற்றி அறிய எழுத்து வடிவிலான ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் இல்லை. நாடார்களின் பூர்வீகம் எதுவாயினும், யதார்த்த நிலை என்பது, அவர்கள் மிக ஏழ் நிலையில் இருந்துள்ளார்கள். மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின்போது தீண்டப்படாத சாதிகளில் ஒன்றாகவே நாடார் சாதி இருந்துள்ளது.            

2

சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து வெளியேறி, அடுத்த கட்ட உயர்நிலைக்கு முன்னேற தங்களை ஆரியர்கள், சத்திரியர்கள் என கூறிக்கொண்டு சமஸ்கிருதப் பாதையில் செல்ல கட்டுக்கதைகளையும், புராணக் கதைகளையும் கற்பனையாக இட்டுக்கட்டி கூறுதல் என்பது எல்லா தீண்டத்தகாத சாதிகளாகக்  கருத்தப்பட்டவர்களின்  உரிய குணமாக இருந்து வந்துள்ளது.  இந்த பரிதாபப்படக்கூடியக் பைத்தியத்திற்கு நாடார்களும் விதிவிலக்கல்ல. நாடார் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் முன்னேறிய ஒரு பகுதியினர், 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து இதனை எவ்வித தொய்வும் இன்றி செய்து வந்துள்ளனர்.

கமுதி ஆலய நுழைவு வழக்கில் பிரதிவாதிகளான நாடார்கள் கொடுத்த வாக்குமூலத்தில் அவர்கள் பரம்பரையாக இராணுவ வம்சாவழி வந்தவர்கள் என்று உரிமை கோரியுள்ளனர்.  மதராஸ் உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரண்டு ஆங்கிலேய நீதிபதிகள், “வழக்கில் பிரதிவாதிகள் வாதிடுவது போன்று, அவர்கள் சத்திரியர்கள் அல்லது இந்து மதத்தை சார்ந்த இராணுவ வம்சாவழி வந்தவர்கள் என்றோ, அல்லது பாண்டியர், சேரர், சோழ அரசர்களின் வம்சாவழி வந்தவர்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்தது என்று கூட சொல்ல முடியவில்லை. சாணார்கள் இப்படி அரசகுலம், இராணுவ பரம்பரையோடு தங்களை தொடர்பு படுத்தி வீணாக, பொய்யாக, உரிமை கோர எடுத்த முயற்சி பரிகசிக்க வேண்டிய ஒன்று” என்று நாடார்கள் மீது எந்தவித பரிவுமின்றி கூறியுள்ளனர்.

1908ஆம் ஆண்டு சங்கரலிங்க நாடார் vs. ராஜராஜேஷ்வர துரை கமுதி ஆலய நுழைவு வழக்கில், மதராஸ் உயர்நீதிமன்றம் “சாணார்கள் கோயிலுக்குள் சென்றது என்பது, “சிவ வழிபாடு செய்யும் இந்துக்களின் மதக் கொள்கைக்கு எதிராகவும், கடவுளை வழிபடும் சாதி இந்துக்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கம், உணர்வுகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது” என்று கூறி மேல் முறையீடு செய்த நாடார் மனுதாரர்கள் கோயிலை சுத்தப்படுத்துவதற்கு ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் நாடார்கள் இந்த பிரச்சனையை இத்தோடு விட்டு விடவில்லை.

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த இந்து நாடார்கள், பத்தொன்பதாம் நாற்றாண்டின் பிற்பகுதியில் சமூக தளத்தில் தங்கள் உரிமைகளை வலியுறுத்த முயன்றபோது, பல கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். இது மேல் சாதி மக்களோடு மோதலுக்கு இட்டுச் சென்றது. சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து அவர்கள் கோயில்களுக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களின் போராடும் குணம், ஒற்றுமை தெளிவாக வெளிப்பட்டது.  1872இல் திருச்செந்தூர், 1874இல் மதுரை, 1876இல் திருத்தங்கல், 1897இல் கமுதி, உச்சகட்டமாக 1899இல் சிவகாசியில் என ஆலய நுழைவுப் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. அந்த நாட்களில் நாடார் மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளும் விதமாக, 1899ஆம் ஆண்டு நடந்த சிவகாசி கலவரம் பற்றிய சிறு குறிப்பு இங்கே கொடுப்பது பொருத்தமாகும்.

சிவகாசியில் வணிகம் மற்றும் வியாபாரம் சிறிது சிறிதாக முஸ்லீம்கள் கையிலிருந்து நாடார்கள் கைகளுக்கு மாறியது. இந்த வியாபார போட்டியின் காரணமாக முஸ்லீம்களுக்கும் நாடார்களுக்குமிடையே பகைமை இருந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் – 1876 முதல் 1878 வரையான தாது வருடப்பஞ்சம் குறிப்பிடத்தக்க ஒன்று – அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டது. விவசாயத்தை நம்பியிருந்த சாதி என்ற வகையில் தேவர் சமூகத்தினர் (முக்குலத்தோர்: கள்ளர், மறவர், அகமுடையார்) பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர்.  அதே நேரம், வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நாடார் சமுதாயத்தினர் உணவு தானியங்கள் பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிக அளவில் லாபம் சம்பாதித்தனர். இதனால் இந்த கால கட்டத்தில் இவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டு, இரு சமுதாயத்தினரிடையேயான உறவு மோசமடைந்தது.

நாடார்கள் கோயில் நுழைவில் தங்கள் உரிமையை வலியுறுத்துவதும், அதுவரை உயர் சாதி இந்துக்கள் சமூகத்தில் அனுபவித்து வந்த சில சலுகைகளை கேட்பதும், பிற இந்து ஆதிக்க சாதியினருக்கு நாடார் மக்கள் மீது மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது. இவையெல்லாம் சேர்ந்து “சிவகாசி அழிவிற்கு” அடிப்படையான காரணமாக அமைந்தது.

1895ஆம் ஆண்டு சிவகாசி நாடார்கள் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் அறங்காவலர்களாக நாடார்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியபோது பிரச்சனை வெடிக்கத் தொடங்கியது. நாடார்களுக்கு சிவகாசியின் புறநகர் பகுதியில் மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில்கள் இருந்தன. கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால் அவர்கள் இந்த இரண்டு கோயில்களையும் கட்டியிருந்தனர்.  இந்த கோயில்களில் வள்ளுவர் சாதியை சார்ந்த “பண்டாரம்” எனப்படுபவர்கள் பூஜை செய்து வந்தனர். 1897ஆம் ஆண்டு நாடார்கள் சிதம்பரத்திலிருந்து பிராமண புரோகிதர்களை வரவழைத்து இந்த கோயில்களில் பூஜை செய்தனர்.  மேலும் பிராமண புரோகிதர்கள் வசதி படைத்த நாடார்கள் வீடுகளுக்கு சென்று சடங்குகளும், பூஜைகளும் செய்தனர்.  இது சாதி இந்துக்களை கூடுதலாக கோபமடையச் செய்தது. 1898ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, நாடார்கள் கோயில் கதவை உடைத்துக் கொண்டு கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைந்தனர். இத் தகவல் பரவியதும், கோபத்தின் உச்சிக்கு சென்ற சாதி இந்துக்கள், பத்ரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்த தோட்டத்திற்கு நெருப்பு வைத்தனர். இந்த மோதலில் ஒன்பது நாடார்கள் கைது செய்யப்பட்டு சாட்சியங்கள் முறையாக இல்லாததால் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

1899ஆம் ஆண்டு நாடார் சமுதாய மக்களின் சேமிப்பு கிடங்கிகளை தேவர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் தீ வைத்து கொளுத்தியதால் சிவகாசி சாதி கலவரம் வெடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடார்கள் தேவர் சமுதாய மக்களின் குடியிருப்புகளை தாக்கினர். இதன் விளைவாக தேவர்-நாடார் மக்களிடையே மூர்க்கத்தனமான மோதல் வெடித்தது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கார்டோசன் என்பவர் தன் போலீஸ் படையோடு கலவரப் பகுதிக்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்தினார். அவர் 15 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்த பின்னரே கலவரக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆனால், தேவர் சமுகத்தினர் சமாதானம் அடையவில்லை. அவர்கள் இந்த சம்பவத்திற்கு பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்தும், ராமநாதபுரத்தின் கிழக்குப் பகுதியிலும் உள்ள பல கிராமங்களிலிருந்தும் தேவர் சமுதாய மக்களை திரட்டினர்.

பிராமணர்கள், பிள்ளைமார்கள், மறவர் சமுதாய ஜமீன்தார்கள் ஆதரவோடு, அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அப்போதிருந்த பள்ளர் சமுதாய விவசாயத்தொழிலாளர்கள், முஸ்லீம்கள் என சுமார் 5000 பேர் 1899ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாள்  சிவகாசியில் உள்ள நாடார் மக்களின் வீடுகளைத் தாக்கி அவர்களின் உடமைகளை சூறையாடினர். பின்னர் அவர்கள் சிவகாசியைச் சுற்றியுள்ள 150 கிராமங்களை தாக்கி கொள்ளையடித்தனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் இறந்தனர். காயம்பட்ட மூன்று பேர் பின்னர் இறந்தனர். அவர்களில் ஒருவர் பெண். சிவகாசி நாடார்கள் “இந்த தாக்குதலில் தாங்கள் ரூ. 43,000 மதிப்புள்ள பொருட்களை இழந்தோம்” என்று அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பினர் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த “தானே” என்ற அதிகாரி கூறியுள்ளார். இந்த தாக்குதலில் சிவகாசிப் பகுதியில் மொத்தம் 4,000 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன என மற்றொரு புள்ளிவிவரம்  கூறுகிறது. மொத்தம் கைது செய்யப்பட்ட 1958 பேரில், 552 பேர் குற்றவாளி என தண்டிக்கப்பட்டனர். ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

3

நாடார் மக்களின் சமூக இயக்கத்தை விவரிக்கும் போது தென் திருவிதாங்கூர் பகுதியில் (தற்போது கன்யாகுமரி மாவட்டம்) நடந்த முக்கியமான சாதி எதிர்ப்பு எழுச்சியை நாம் தவிர்க்க முடியாது. அங்கு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. ஜேம்ஸ் போர்ப்ஸ் எழுதிய “கீழ்த் திசை நாடுகளின் நினைவுகுறிப்புகள்” என்ற புத்தகத்தில் அவர்  எடுத்துக்காட்டியுள்ள கொடுமையான நிகழ்ச்சிகள் கூர்ந்து கவனிக்கத் தக்கது:

“தங்களின் உடற் காற்றினால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதிலிருந்து தவிர்ப்பதற்காக, தீண்டத்தகாதவர்கள் தாங்களாகவே குழிக்குள் மறைந்து கொள்ள வேண்டும்; அல்லது மரங்களின் மேல் ஏறி தங்களை மறைத்து கொள்ள வேண்டும்.  நாயர் சாதியை சார்ந்த ஒருவர் எதேச்சையாக இவர்களில் ஒருவரை சாலையில் சந்தித்தால், எவ்வித பச்சாதபமும் இல்லாமல் கொடூர மிருகத்தை கொல்வது போல் வாளால் வெட்டி கொன்று விடுவார்.  பசுவை விற்பவர் அல்லது அதை இறைச்சிக்கு விற்பவர் கொலை செய்யப்படுவார். 1772ஆம் ஆண்டு ஐரோப்பியர் ஒருவருக்கு மாடு ஒன்றை விற்பனை செய்த ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் தங்கள் மார்பை மூடக்கூடாது. அரச குடும்பத்தை சார்ந்த ஒருவரின் முன்னால் நிற்கும் போது, மேலாடையுடன் காணப்பட்ட பெண்களின் மார்பகங்கள் வெட்டி எறியப்படும்”

“சாதிய ஒடுக்குமுறையின் கொடுமை எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு கேரளா சிறந்த உதாரணமாக இருந்தது. அங்கு தீண்டத்தகாதவர்களை, உயர் சாதியினர் பார்வையிலிருந்து விலகி இருக்க வேண்டிய தூரத்தை வைத்து தீண்டாமை தரவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது” என்று வரலாற்றறிஞர் K.M. பணிக்கர் குறிப்பிடுகிறார். 1809ஆம் ஆண்டு மைலாடியில் இலண்டன் மெஷினரி சபை (LMS) தொடங்கப்பட்டதிலிருந்து, கிறிஸ்தவ மிஷினரிகள் ஒடுக்கப்பட்ட மக்களை குறிவைத்து மதமாற்றம்  செய்தனர். அருள்திரு. T. ரிங்கல்டாப் என்ற பாதிரியார் முதலில் ஒரு கணிசமான அளவிற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரை (குறிப்பாக நாடார், ஈழவர்களை) வெற்றிகரமாக மதமாற்றம் செய்தார். அவர் 1813இல் LMS சபையில் 600 கிறிஸ்தவர்கள் இருந்தனர் என்கிறார்.  கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களின் மனநிலை, பழக்க வழக்கங்களை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, கிறிஸ்தவ மிஷினரிகள் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பள்ளிக் கூடங்கள் தொடங்கினர். இந்த பள்ளிக்கூடங்களில் பெண்களின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் தையல், எம்பிராய்டரிங் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கிறிஸ்தவ மிஷினரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அப்போதைய திவான் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தான பிரிட்டீஷ் பிரதிநிதியுமான கர்னல் ஜான் மன்றோவின் ஆதரவுடன் 1814ஆம் ஆண்டு கிறிஸ்தவ நாடார் பெண்கள் மட்டும் குட்டையான கை வைத்த தொள தொளப்பான மேல்சட்டை அணிய அனுமதிக்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் உத்தரவு இருந்தபோதும், பிற நாயர் சாதி பெண்களைப் போல கிறிஸ்தவ நாடார் பெண்கள் பொது இடங்களில் மேல் சட்டை அணிந்து தோன்றினால், அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கும் உள்ளானார்கள். பெண் மிஷினரிகள் வடிவமைத்த பெண்களுக்கான மேல் சட்டையும் கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. எனவே, கிறிஸ்தவ நாடார் பெண்கள் – ஆண்கள் போராட்ட நடவடிக்கையில் இறங்கினர். இதற்கிடையே, இப்பிரச்சனையில் நீதிமன்றத்தின் தலையீடு கோரி உள்ளூர் நீதிமன்றத்தையும் அவர்கள் அணுகினர்.

1823ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும் கண்ணியமான உடை அணியும் நாடார் பெண்கள், உயர்சாதி என்று சொல்லப்பட்டவர்களால் தெருக்களிலும், பொது வெளியிலும் துன்புறுத்தப்படுவது தொடர்ந்தது. கிறிஸ்தவ மிஷினரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, 1829ஆம் ஆண்டு இறுதியில் திருவிதாங்கூர் அரசு, கிறிஸ்தவ நாடார் பெண்கள் மேல்சட்டை அணிய அனுமதியளித்து உத்தரவிட்டது.  ஆனால் நீதிமன்ற தீர்ப்போ, அல்லது திருவிதாங்கூர் அரசின் அறிவிப்போ, இந்து நாடார் பெண்களுக்கு பொருந்தவில்லை. இந்து நாடார் பெண்களின் பிரச்சனை அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்டசாமி அவர்களால் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

முத்துக்குட்டி என்ற வைகுண்டசாமி தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மக்களுக்கு உதவி செய்து அவர்களின் அடிமை விலங்கை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு அம்மக்களை ஒருங்கிணைத்தார். 1830களின் மத்தியில் வைகுண்டர் நடத்திய இயக்கங்கள் மற்றும் அவர் உருவாக்கிய அய்யா வழி என்ற புதிய மதக்கோட்பாடு கிறிஸ்தவ மிஷினரிகளின் மதமாற்ற முயற்சிகளை எதிர்த்து வந்த நாடார் மக்களை, குறிப்பாக வசதி படைத்த தென் திருவிதாங்கோடு பகுதியை சார்ந்த நாடார்களை வெகுவாக ஈர்த்தது. மேலும் வைகுண்டர், ஒடுக்கப்பட்ட மக்கள் நாகரீக, நவீன பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வைகுண்டரின் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் தன் கொள்கைகளையும், கருத்துக்களையும் பின்பற்றும் பெண்களை மேல்சட்டை அணியும்படி உபதேசித்தார். வைகுண்டர் மேற்கத்திய கிறிஸ்தவக் கலாச்சாரத்தை கடைபிடிக்கிறார் என்று மேல் சாதி இந்துக்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். அதே போல, கிறிஸ்தவ மிஷினரிகள் வைகுண்டர் மீதும், அவர் தொடங்கிய புதிய மத வழிமுறை பற்றியும் கேலியும் கிண்டலும் செய்தனர். எதிர்ப்புகள் இருந்தாலும், வைகுண்டசாமி அதிகப்படியான நாடார் இன மக்களை தன் வயப்படுத்தினார். இது தென் திருவிதாங்கூர் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை மேலும் பரப்புவதற்கு பெரும் முட்டு கட்டையாக இருந்தது.

1851ஆம் ஆண்டு வைகுண்டர் இறந்த போதிலும், அவரின் ஆவி கிறிஸ்தவ மிஷினரிகளை தொடர்ந்து மிரளச்செய்தது என்ற நம்பிக்கை நிலவியது. அவர் இறந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1864ஆம் ஆண்டு நாகர்கோவில் கிறிஸ்தவ மிஷினரி மாவட்டத்திலிருந்து கொடுத்த அறிக்கையில் “வைகுண்டரின் கொள்கையை பின்பற்றுபவர்கள் முன் நாட்களில் உயிர்த்தெழுதல் கோட்பாடு பற்றி தெரியாதவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் “முத்துக்குட்டி மீண்டும் வருவார். மரணமடைந்த அவரின் பக்தர்களை உயிர்த்தெழச் செய்து, அவர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வார் என்று சொல்கிறார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.  அதற்கு பத்தாண்டுகளுக்கு பிறகும் கூட, வைகுண்டசாமி  எதிப்பு இயக்கத்தின் தாக்கம் தொடர்ந்து இருந்ததாக மிஷினரிகள் உணர்ந்தார்கள். 1874இல் நாகர்கோவில் கிறிஸ்தவ மிஷினரி மாவட்டம் கொடுத்த அறிக்கையை மீண்டும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.  அந்த அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “சாத்தானின் தந்திரமான சூழ்ச்சியினால், இந்த பகுதியில் நமது முன்னேற்றம் பெருமளவு தடைபட்டுள்ளது. இச் சூழ்ச்சியை முறியடிக்க நாம் இடைவிடாது போராட வேண்டும். நம்முடைய ஆயுதம் பலம் வாய்ந்தது… நம் பக்கம் உண்மை உள்ளது. இதற்கு எதிராக “முத்துக்குட்டியிசமோ “அல்லது வேறு ஏதோ நரகத்தின் வாசலோ” ஒன்றும் செய்து விட முடியாது. நமக்கு தேவையானது எல்லாம், கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதே. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, முத்துகுட்டி எந்த தளத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டாரோ, இன்றும் கிறிஸ்துவிடமிருந்து கைப்பற்ற முயற்சிக்கிறாரோ, அந்த தளத்திலிருந்து அவமானப்பட்டு இழிவடைந்து ஒதுங்கிவிடுவார் “.

வைகுண்ட சாமியைப் பற்றி கிறிஸ்தவ தேவாலயங்களின் ஆவணங்களில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை பார்க்கும் போது, வைகுண்டரின் இயக்கம், அவர் இறந்த பின்பு கூட எந்த அளவிற்கு துடிப்பாக இருந்தது என்பது விளங்கும்.

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் தான், தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 1858ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரிட்டீஷ் மகாராணியின் அறிவிப்பு பின்வருமாறு கூறியது: ” பிரிட்டீஷ் அரசு தன் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியோடு இதை அறிவிக்கிறது…அவரவர்களுடைய மத நம்பிக்கை அல்லது மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதால் யாரும் அவமானப்படுத்தப்படவோ, வெறுப்புடன் நடத்தப்படவோ கூடாது. யாருக்கும் கூடுதல் சலுகை காட்டக் கூடாது. எந்தவித பாகுபாடும் இன்றி சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்”.

நாடார்கள், அப்போதய திவான் மாதவராவ்- ஐ சந்தித்து மகாராணியின் உத்தரவை அமுல்படுத்த அவர் தலையீட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.  இதற்குப் பதிலடியாக திருவிதாங்கூர் அரசு மனுதாரர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவியது. இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு பிறகு, நாடார்கள் இந்த பிரச்சனையில் ஒரு இறுதி கட்ட நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர். இந்து, கிறிஸ்தவ நாடார்கள் இணைந்து போராட முடிவு செய்தனர். மத நம்பிக்கையை விட சாதிப்பற்று மேலோங்கி இருந்ததால், நாடார் பெண்கள் மேல் சட்டை அணியும் உரிமைக்கான போராட்டத்தில் அய்யாவழி இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர்கள் கூட கிறிஸ்தவ நாடார்களுடன் இணைந்து போராடுவதில் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

பெரும்பான்மையான இந்து நாடார்கள் “அய்யா வழி”யை  பின்பற்றுபவர்களாக இருந்தனர். தங்களுடைய நீண்ட காலப் போராட்டத்தில் கிறிஸ்தவ நாடார்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததால் வெறுப்படைந்த இந்து நாடார்கள் இந்த இயக்கத்தில் கிறிஸ்தவ மிஷினரிகளின் தலையீட்டை எதிர்த்தனர். ஆகவே, கிறிஸ்தவ மிஷினரிகள் இதற்கு மறைமுக ஆதரவு மட்டுமே கொடுத்தனர். நாடார் பெண்கள் மேல்சட்டை அணிய உரிமை கோரிய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.  இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டு நடத்திய உறுதியான போராட்டத்தினால், 1859ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த பிரகடனம் பின் வருமாறு சொல்கிறது: “அனைத்து பிரிவைச் சார்ந்த சாணார் இனப் பெண்கள் பிற கிறிஸ்தவ சாணார் இனப் பெண்களைப் போல் மேல் சட்டை அணிவதற்கோ அல்லது கோரா துணியிலான உடை அணிவதற்கோ அல்லது மீனவ இனப் பெண்கள் அணிவது போல் கோரா துணியை சுற்றிக் கொள்வதற்கோ அல்லது வேறு வடிவத்தில் மார்புப் பகுதியை மறைத்துக் கொள்வதற்கோ எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் உயர்சாதி பெண்கள் அணிவது போல் உடை அணியக்கூடாது “.

4

நாடார்களின் சமூக இயக்கம் நடந்து கொண்டிருந்தாலும், அடுத்த பத்தாண்டுகளில் ஈ. வெ. ரா பெரியாரின் சுயமரியாதை இயக்கம், மகாத்மா காந்தியின் ஆதரவோடு இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டங்களுக்குப் பின்னர்தான் தென்தமிழ் நாட்டில் நாடார்கள் கோயிலில் நுழையும் கோரிக்கை நிறைவேறியது. காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த முயற்சிகள், நிறைவேற்றிய தீர்மானங்கள் இறுதியில் நடைமுறைக்கு வந்தன. குருவாயூர் ஆலய நுழைவு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ராஜாஜி மதராஸ் ராஜதானிக்கு பிரதம மந்திரியாக இருந்த போது, 1939ஆம் ஆண்டு அவர் தலைமையிலான மந்திரிசபையில் “ஆலய நுழைவு உரிமை மற்றும் இழப்பீடு சட்டம்” இயற்றப்பட்டது.

கல்வி மற்றும் வியாபாரம் மூலமாக சமூகத்தில் அந்தஸ்து பெற்ற நாடார் சமூகத்தினர், தற்போது கல்வி, சமூக, பொருளாதார தளத்தில் வளர்ச்சியடைந்திருப்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினால் அல்ல. அரசாங்கத்தின் ஆதரவை மட்டும் நம்பி இருக்காது, கல்வி கற்பதன் மூலம் சுயசார்பு நிலையை அடைந்து, ஒரு சுதந்திரமான வாழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நாடார் சங்கம் விரும்பியது. 1913இல் நாடார் என்ற பெயர் பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலில் இடம் பெற்றிருந்தது. பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு பகுதி நாடார்கள் (அவர்கள் நாடார் மகாஜன சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களாக இருந்தனர்) நாடார் சாதி பெயரை பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலிருந்து எடுக்க வேண்டும் என்று1917இல் வலியுறுத்தினர்.

1921 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தங்கள் சாதிப் பெயரை நாடார் சத்திரியர் என்று பதிவு செய்வதில் நாடார் மகாஜன சங்கம் வெற்றி கண்டது. சென்னை மாகாணத்தின் முதன்மை செயலாளராக இருந்த G.T. போக் என்பவர் “1911இல் சாணார் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டவர்கள் தற்போது “நாடார்” என பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது சென்னை மாகாண அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளது. நாடார் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு ஆவணங்களில் “சாணார்” என்ற வார்த்தை இனி பயன்படுத்தக் கூடாது” என்று பதிவு செய்துள்ளார்.  நாடார்களும் விரைவில் தங்கள் முட்டாள் தனத்தை உணர்ந்து சென்னை மாகாண அரசாங்கத்திடம், நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று 1935, 1940, 1950ஆம் ஆண்டுகளில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கை 1957இல் தான் நிறைவேறியது. 

தமிழில் – ஆர்.எஸ். துரைராஜ்

(Article published in Social Scientist, March-April, 2022)



Leave a comment