மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இலங்கை: நெருக்கடியும், படிப்பினைகளும் !


– கே.பாலகிருஷ்ணன்

இலங்கையில், வரலாறு காணாத மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது.  அதிபர், ஆட்சியாளர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முழக்கம் வலுத்துள்ளது. ‘கோட்டா கோ ஹோம்’ என்ற முழக்கம் இலங்கையின் அனைத்து தரப்பினரிடமும், அனைத்து மொழிகளிலும் எதிரொலிக்கிறது. சில முதலாளித்துவ கட்சிகள், மக்கள் உணர்வோடு மாறுபட்டு பேசிவந்தாலும், மக்களின் போராட்டக் குரல், ஒவ்வொரு நாளும் வலிமையடைகிறது.

இதன் விளைவாக பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் குடும்பத்தோடு வெளிநாடு தப்பி ஓட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மக்கள் போராட்டத்தை அடக்கி ஒடுக்கவும், திசை திருப்பவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போயுள்ளன

போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பொதுமக்கள் திருப்பித் தாக்க தொடங்கினார்கள். ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே வீடுகள் உட்பட அரச பதவிகளில் உள்ள பலரின் வீடுகளும் எரிக்கப்படுவதும், தாக்கப்படுவதுமாக சூழல்  கடுமையாகியுள்ளது.

உலகமய, தாராளமய கொள்கைகளை கடைப்பிடித்த பல மூன்றாம் உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. மக்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதால், உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடும் காலமாக இந்த காலம் இருந்து வருகிறது.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக  பொலிவியா, நிகரகுவா, சிலி, பெரு, வெனிசுவேலா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். தாய்லாந்து உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகைய எழுச்சிகள் ஏற்பட்டதை கடந்த காலங்களில் காண முடிந்தது.

தற்போது, இலங்கையில், அந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்த உலகமய தாராளமய கொள்கையின் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் வீதிகளில் இறங்கி தீவிரமாக போராடி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவராகவும், 2020 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த நாட்டின் அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தினர் 7 முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். 40 க்கும் மேற்பட்ட ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கை அரசின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டு ஒட்டுமொத்த இலங்கை அரசும் ராஜபக்சேவின் குடும்ப அரசாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்களின் கோபம் குவிந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றினையும், உக்ரைன் – ரஷ்யா போரையும் நெருக்கடிக்கான காரணமாக காட்டிட ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.

போராட்டத்தின் தொடக்கம்:

கோத்தபய ராஜபக்சே அதிபரானதும், கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் பலனடையும் விதத்தில் சில வரிச் சலுகைகளை அறிவித்தார். அந்த சலுகையால் இழந்த வரி வருவாயை நேரடி வரியின் மூலம் ஈடுகட்டவும் இல்லை.

2019 – பேரி020 ஆண்டுகளில், கொரோனா பெருந்தொற்றினால் சர்வதேச போக்குவரத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், ஏற்றுமதிச் சந்தையில் ஏற்பட்ட பாதிப்புகளும் இலங்கை பொருளாதாரத்தை நேரடியாகவே தாக்கின. தேயிலை, ரப்பர், மசாலா பொருட்கள் மற்றும் ஆயத்தை ஆடை ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால் வரி வருவாய் மேலும் குறைந்தது, ஆனால் செலவினங்கள் அதிகரித்தன. ஏற்கனவே கடன் வெள்ளத்தில் மிதந்து வந்த இலங்கை, நெருக்கடியில் மூழ்க தொடங்கியது.

அன்றாட செலவுகளையும் கூட கடன் வாங்கி மேற்கொண்டதால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், பொதுக் கடனுக்கும் இடையிலான விகிதம் 119 ஆக உயர்ந்தது. பட்ஜெட் பற்றாக்குறை 10 சதவீதத்திற்கும் கூடுதலாக ஆகியது.

அன்னியச் செலவாணி கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கும் உழைப்பாளர்கள் தங்களுடைய வருவாயை மாற்று வழிகளில் குடும்பங்களுக்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இவையெல்லாம் மற்றொரு பக்கத்தில் அன்னியச் செலவாணி கையிருப்பில் சரிவை ஏற்படுத்தின. டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பும் குறைந்தது.

இப்படிப்பட்ட சூழலில், ராஜபக்சே அரசாங்கம் ‘எதேச்சதிகார முட்டாள்தனங்களை’ முன்னெடுத்தது. ரசாயன உரங்களின் இறக்குமதியை தடாலடியாக குறைத்தார்கள். உள்நாட்டு விவசாயிகள் மீது ‘இயற்கை உர’ பயன்பாட்டை திணித்தார்கள். ‘வேளாண் உற்பத்தியில் ரசாயன உரத்தின்  பயன்பாட்டை தடை செய்ததன் விளைவுகள் எதிர்பார்த்ததை விடவும் மோசமாக இருந்தன’ என்று சர்வதேச நிதியம் தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

ஆம், நெல் உற்பத்தி இந்த ஆண்டில் 40-45 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கால்நடைத் தீவன உற்பத்தியும் சரிந்தது. இதனால் இறைச்சி விலை அதிகரித்தது. தேயிலை உற்பத்தி 20 சதவீதம் வீழ்ந்தது. பாதிக்கப்பட்ட  விவசாயிகள் போராட்டக் களத்திற்கு வந்தார்கள். போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பரவியது. விவசாயிகளுக்கு ‘நிவாரணம்’ கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

நிவாரணமாக தரப்பட்ட தொகை, ரசாயன உர இறக்குமதிக்கு செய்திருக்க வேண்டிய செலவை விடவும் அதிகமாக இருந்தது. அத்தோடு, உள்நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டதால், அதையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.

இதனால், இலங்கையில் கடுமையான விலையேற்றம் உருவானது. மின்சார உற்பத்தி வீழ்ந்தது. மின்வெட்டு உருவானது. எரிபொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளால் அவைகளும் விலை உயர்ந்தன. டீசலும், பெட்ரோலும், சமயல் எரிவாயு தட்டுப்பாடும் ஒவ்வொரு வீட்டையுமே பாதித்தது.  அனைத்து அத்தியாவிசய பொருட்களும் விலை உயர்ந்தன. மின்சார தட்டுப்பாடு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. மீன், பழம், காய்கறி சேமித்து வைத்து விநியோகிக்கும் குளிர்பதன ஏற்பாடுகளில் நெருக்கடியை உருவாக்கியது.

உணவுக்காகவும், எரிபொருட்களுக்காகவும் வரிசையில் நிற்கும் மக்கள், அங்கேயே மரணமடைகிற துயரச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய ரூபாய் வேறு, இலங்கை ரூபாய் வேறு என்றாலும், அரிசி கிலோ ரூ.300, பால்பவுடர் ரூ.2 ஆயிரம் என  சாமானிய மனிதர்களுக்கு எட்டாத அளவுக்கு உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைக்காத, பதுக்கல், தட்டுப்பாடும் நிலவுகிறது.

இந்த நிலைமைகளை கண்டித்தே மாணவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்கள். இலங்கையின் நாடாளுமன்றத்தை சுற்றிலும் 3 கிராமங்களை அமைத்து, தங்கி போராட்டங்களை நடத்துகிறார்கள். பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பு போராடுகிறது. இந்த போராட்டங்களை போலீசாரைக் கொண்டும், தனியார் குண்டர்களைக் கொண்டும் அதட்டி அடக்கிவிடலாம் என்ற முயற்சிகள் பலிக்கவில்லை.

களத்தில் தொழிலாளி வர்க்கம்:

69 ஆண்டுகள் கழித்து, இலங்கை முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க முழு அடைப்பு போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இந்தப் போராட்டத்திற்கு மக்களிடையே ஏகோபித்த ஆதரவு நிலவியது. பாடசாலைகள், விமான நிலையங்கள் உட்பட மூடப்பட்டன. தனியார் போக்குவரத்து நிறுவனங்களும், தொடர் வண்டிச் சேவைகளும் இதில் பங்கேற்றனர்.

நெருக்கடியின் அடித்தளம்

இன்றைய நெருக்கடியை சரியாக புரிந்துகொள்ள, வரலாற்று பின்னணியை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும்.

1815 ஆம் ஆண்டு முதல், இலங்கை தீவு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. இலங்கையின் மலைப்பாங்கான நில வளத்தை அவர்கள் கைப்பற்றினார்கள். விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அடித்து பிடுங்கவும் செய்தார்கள். பின் ஐரோப்பிய சந்தையின் தேவைக்கு ஏற்ற விதத்தில், பயன்பாட்டை மாற்றி அமைத்தார்கள். அதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழைத்துச் சென்று, மிகக் கடுமையாக வேலை வாங்கினார்கள். இலங்கையின் மலைப் பகுதிகளில்  தேயிலை, காப்பி கொட்டை மற்றும் ரப்பர் தோட்டங்கள் உருவாகின.

1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலையடைந்தபோது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு, மலையக தோட்டங்களில் நடந்தது. விடுதலைக்கு பின், உள்நாட்டில் வளர்ந்து வந்த முதலாளிகளும் – நிலவுடமை வர்க்கமும் ஆட்சியாளர்களாக மாறினார்கள். அவர்கள் அந்த சமூகத்தில் அடிப்படையான மாற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை. இதனால், விடுதலைக்கு பிறகும், இலங்கையின் தோட்டத்தொழிலில் அன்னிய/தனியார்  மூலதனத்தின் ஆதிக்கமே தொடர்ந்தது. இதனால், தொழிலாளர்களின் கடும் உழைப்பில் விளைந்த உபரி அனைத்தும், வெளிநாடுகளுக்குச் சென்றது. அதே சமயத்தில், உள்நாட்டு தேவைக்கான உணவுப்பொருட்கள் உற்பத்திக்கு, சாகுபடி நிலப்பரப்பு  விரிவடையவில்லை. இதனால், தங்கள் உணவுத்தேவைக்காகவும் கூட இறக்குமதி செய்யும் நிலைமை தொடர்ந்தது.

இலங்கையின் சொந்த தேவைக்கான உணவு உட்பட இறக்குமதியை நம்பி இருப்பதும், உள்நாட்டு வளங்களை ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதுமான முரண்பட்ட சூழ்நிலைமை தொடர்ந்தது. இதுதான் இலங்கை தொடர்ந்து சந்தித்துவரும் நெருக்கடிக்கு அடிப்படையாகும். இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் இந்த அடிப்படையை மாற்றியமைக்கவில்லை.

கடனே தீர்வா?

இலங்கையின் விடுதலைக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டு, ஸ்ரீலங்கா விடுதலைக் கட்சி உருவானது, ஆட்சியையும் பிடித்தது.  அவர்கள் சில முற்போக்கான திட்டங்களை அரைமனதுடன் அறிமுகப்படுத்தினார்கள். இலவச கல்வி, இலவச மருத்துவம் ஆகிய நல்ல திட்டங்கள் மக்களுக்கு பலன் கொடுத்தன. வங்கித்துறை தேசியமயமாக்கப்பட்டது, சில ஆலைகள் தேசியமயமாகின.  ஆனால், பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியதும், நலத்திட்ட நடவடிக்கைகளே காவு வாங்கப்பட்டன.

இலங்கையின் அடிப்படை கட்டமைப்பை மாற்றியமைக்க தயாரில்லாத இலங்கையின் ஆட்சியாளர்கள், சர்வதேச நிதியத்தின் கடனுக்காக விண்ணப்பித்தார்கள். சர்வதேச நிதியமோ தனது கடன்களை ‘நிபந்தனைகளுடன்’ சேர்த்தே கொடுத்தது. இலங்கை தனது பட்ஜெட் செலவினங்களில், பற்றாக்குறையை குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு தரப்படும் மானியங்களை வெட்ட வேண்டும், தனியார் மற்றும் அன்னிய நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும், இலங்கை ரூபாயின் மதிப்பை 20 சதவீதம் குறைக்க வேண்டும் என நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றார்கள்.

1970களில், உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரத்தழுவி வரவேற்றது. அதன் நோக்கத்திற்கு உடன்பட்டு ‘திறந்த பொருளாதாரத்தை’  உருவாக்குவதாக, 1977-78, 1979-82 மற்றும் 1983-84 ஆண்டுகளில் சர்வதேச நிதியத்தின் கடன் உதவிகளை பெற்றார்கள். எப்போதும் போல, நிபந்தனைகளோடே அந்த கடன்கள் தரப்பட்டன. விலை கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டன, உணவுப்பொருட்களுக்கான மானியம் தொடர்ந்து குறைக்கப்பட்டது, தொழிலாளர்களுக்கு கூலி குறைந்தது, நிதிச் செலவினங்கள் குறைக்கப்பட்டன, தனியார் – அன்னிய மூலதனங்களுக்கான ஊக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சீனாவா? அமெரிக்காவா?

இலங்கை அரசாங்கம் பெற்றிருக்கும் வெளிக் கடன்கள் அதிகரித்ததுதான் நெருக்கடிக்கான உடனடிக் காரணம் என்பதை மேலே பார்த்தோம். அமெரிக்க ஊடகங்களும், முதலாளித்துவ ஊடகங்களும் தற்போது இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு, சீனாதான் காரணம் என்று குற்றச்சாட்டுகளை பிரச்சாரம் செய்கிறார்கள். அது உண்மையா என்பதை சீர்தூக்கிப் பார்க்கலாம்.

 அந்த நாட்டின் கடன்களில் டாலர் அடிப்படையில் பெற்றவை 2012 ஆம் ஆண்டில் 36 சதவீதமாக இருந்தன. 2019 ஆம் ஆண்டில் 65 சதவீதமாக ஆகின. அதாவது இரட்டிப்பு ஆகின. சீனா நாட்டின் பணத்தில் பெறப்பட்ட கடன்கள் மொத்த கடனில் 2 சதவீதம் மட்டுமே ஆகும்.

இலங்கை வெளிச் சந்தையில் பெற்றிருக்கும் கடன்கள் 2004 ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாக இருந்தது ஆனால் அடுத்த 15 ஆண்டுகளில் 56.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதுவும் இலங்கை பெற்றிருக்கும் கடன்களில் 60 சதவீதம் பத்து ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டியவை ஆகும். சீனாவில் பெறப்பட்ட வெளிக்கடன்கள் 17.2 சதவீதம் மட்டுமே.

இப்படி, கடனும் அதற்கான வட்டியும் உயர்ந்துகொண்டே செல்ல, வருவாயோ வீழ்ச்சியை சந்தித்ததால் 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் வருவாயில் 95.4 சதவீதத்தை, கடனுக்காகவே  செலவிட வேண்டிய நிலைமைக்கு இலங்கை வந்துவிட்டது.

இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கான காரணம், இலங்கை அரசாங்கத்தால் அச்சரம் பிசகாமல் கடைப்பிடிக்கப்பட்ட உலகமய-தாராளயம கொள்கைகளும், அதனை உலக நாடுகள் மீது திணித்துவரும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்தானே அன்றி வேறல்ல.

ஆனால், இலங்கை ஆட்சியாளர்கள், 17 வது முறையாக சர்வதேச நிதியத்திடம் ‘நிபந்தனைக் கடன்கள்’ பெறுவதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளார்கள். புதிதாக வரவுள்ள நிபந்தனைகள், ‘பொதுத்துறைகளை தனியார்மயப்படுத்துவது, தொழிலாளர் சட்டப் பாதுகாப்புகளை அகற்றுவது, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் கட்டணத்தை உயர்த்துவது, ஓய்கூதிய விதிகளில் மாற்றம் செய்வது என மிக மோசமானவைகளாக இருக்கப்போகின்றன என்று தெரிகிறது. இந்த கண்மூடித்தனமான பாதையிலேயே இலங்கையின் ஆளும் வர்க்கம் பயணிக்கிறது.

பிரிவினை தந்திரங்கள்:

மக்கள் விரோத நடவடிக்கைகளால் இலங்கை மக்களிடையே எதிர்ப்புக் குரல் எழாமல் இல்லை. ஆனால் பிரிவினை விதைக்கும் அரசியல் சூழ்ச்சியைக் கொண்டே அதனை இதுவரையிலும் எதிர்கொண்டு வந்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

இலங்கையின் குடிமக்களில், சிங்கள மொழி பேசுவோர் 75 சதவீதம் உள்ளனர். பவுத்த மதத்தை பின்பற்றுவோர் 69 சதவீதம். 24 சதவீதம் தமிழ் மொழி பேசும் மக்களில் இஸ்லாமியர்களும், மலையக தோட்டத் தொழிலாளர்களும் அடக்கம்.

இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டக் களத்தில் தேசிய உணர்வு உருவெடுத்தது. ஆனால் இலங்கையில் அப்படியான தேசிய எழுச்சி உருவாகிடவில்லை. இதனால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை அப்போதே வலுவாக முன்னெடுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சாத்தியமானது.

விடுதலைக்கு பின், 1956 சிங்களம் மட்டுமே ஆட்சி மற்றும் நிர்வாக மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழர் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இலங்கை, புதிய அரசமைப்பு சட்டத்தை ஏற்றது. இந்த அரசமைப்பு சிங்களமே ஆட்சிமொழி என்றும், பவுத்தமே முதன்மை மதம் என்றும் கூறியது. மதச்சார்பின்மை மற்றும் மொழி உரிமை மீதான தாக்குதலாக இது அமைந்தது.

அடுத்து வந்த தேர்தலில் ‘சிங்களர்கள் மட்டும்’ என்ற முழக்கத்தோடு தேர்தலை எதிர்கொண்ட ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சியைப் பிடித்தது. இந்த வெற்றியை பயன்படுத்தி அரசமைப்புச் சட்டம் மேலும் மோசமாக மாற்றியமைக்கப்பட்டது. அதிபர் ஆட்சி முறை வந்தது. அதிகாரக் குவிப்பு ஏற்பட்டது. நீதித்துறையும் நிர்வாகமும் தங்கள் சுயேட்சைத்தன்மையை  இழந்து, ஆளும் கட்சிகளின் தலையாட்டி பொம்மைகளாக ஆகின.

இப்போது போராட்டக் களத்தில் முன்நிற்கும் மக்கள், இந்த ஒற்றை ஆட்சி முறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்புகிறார்கள். சுயேட்சையான நீதித்துறையும், நிர்வாகமும் வேண்டும் என கோருகிறார்கள்.

உள்நாட்டு மோதல்கள்:

சொந்த மக்கள் மீது ஜனநாயக உரிமை பறிப்பு, அடக்குமுறைகளை ஏவிவிடுவது, அவசர நிலைகளை பிரகடனப்படுத்தி கொடூரமான தாக்குதல்களை தொடுப்பது போன்றவை இலங்கை ஆட்சியாளர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

இலங்கையின் ஆளும் வர்க்கம் சிங்கள இனவெறியை முன்னெடுத்த போதிலும், , அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடிய போது அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு கொஞ்சமும் தயங்கியதில்லை.

அரசின் முதலாளித்துவ கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் நடத்திய பிரம்மாண்டமான போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டன. பொது வேலை நிறுத்த போராட்டங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டுமென வற்புறுத்தி ஜனதா விமுக்தி பெரனா (ஜேவிபி) நடத்திய போராட்டங்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் தொடுக்கப்பட்டன. இதன் விளைவாக 1971 ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. இப்போராட்டத்தின் மீது ராணுவ தாக்குதல் ஏவிவிடப்பட்டு மொத்தத்தில் 14,000 இளைஞர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். சுமார் 20,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு வாழ்விழந்தார்கள். அரசியலின் எல்லாத் தரப்பிலும் முதலாளித்துவ சக்திகளே ஆதிக்கம் செலுத்தினார்கள்.

தமிழர் இயக்கங்கள்:

தமிழ் மக்களுக்கு, சம உரிமை கோரிய எழுச்சிகள் 1956, 1958, 1978, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன. ஆனால், நியாயமான உணர்வுகளை புறந்தள்ளிய ஆளும் வர்க்கங்கள், இனவாத அடக்குமுறைகளை முன்னெடுத்தார்கள்.1981 யாழ்ப்பான பொது நூலகம் எரித்து அழிக்கப்பட்டது. 1983 அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டது, தமிழ் மக்கள் கூடுதல் துயரங்களுக்கு ஆளாகினர்.

1972 ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்பது செல்வநாயகம் அவர்களால் துவங்கப்பட்டது. 1980களில் எல்டிடிஈ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோ, இபிடிபி,டெலொ உள்பட பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஈழத்திற்காக ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தன. ஆனால் ஒருகட்டத்திற்கு பின் இவற்றில் எல்டிடிஈ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும், தமிழர்கள் வாழும் பகுதிக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்தன. அவர்களை துரோகிகள் என்று கூறி தாக்கும் நிலைப்பாட்டை எல்.டி.டி.ஈ மேற்கொண்டது.

அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே ஒற்றுமையை கட்டமைக்கும் பாதையை புறந்தள்ளினார்கள். பொதுவாகவே இலங்கையில் தமிழர் மத்தியில் உருவான பெரும்பாலான அமைப்புகள் அங்குவாழும் மேட்டுக்குடியினர் மனநிலையை மட்டுமே பிரதிபலித்தது இங்கே குறிப்பிட வேண்டிய விசயம் ஆகும். மலையகத் தமிழர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நிலவிய உணர்வுகளைக் கூட அவர்களால் ஒன்றிணைக்க முடியவில்லை. இவையெல்லாம் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாகின.

தமிழ் நாட்டில் செயல்படும் பல பெரிய கட்சிகளும் கூட இங்குள்ள அரசியல் தேவைகளுக்காக ‘தனி ஈழம்’ என்ற முழக்கத்தை ஆதரித்தார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரம் என்ற சரியான நிலைப்பாட்டினை தொடர்ந்து வலியுறுத்திவந்தது.

2099 ஆம் ஆண்டில் இலங்கை அரசு, உள்நாட்டு யுத்தத்தை ரத்த வெள்ளத்தில் முடிவுக்கு கொண்டுவந்தது. இறுதிக்கட்ட போரில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு நீதிகேட்கும் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. ஆனால், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் எப்போதும் போல கண்டுகொள்ளாமலே விடப்பட்டுள்ளன.

2019 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ‘ஈஸ்டர் குண்டுவெடிப்பில்’ 250 பேர் பலியானார்கள். அதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதுவும் அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இந்த சூழ்நிலைமைகளில் இருந்து மாறுபட்டதொரு ஒற்றுமை இப்போது இலங்கையில் உருவாகும் சாத்தியம் தென்படுகிறது. மக்களிடையே பல ஆண்டுகளாக நிலவிவரும் சிங்களவர், தமிழர் என்ற இன வேறுபடுகளும், பவுத்தர், இந்து, முஸ்லிம், கிறுத்துவர் ஆகிய மத வேறுபாடுகளும் பின்னுக்குத் தள்ளப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளன.  அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்து உதவிகள் அனுப்புவதற்கான முயற்சிகளை எடுத்தபோது, இலங்கையின் அனைத்து மக்களுக்காகவும் நிவாரணப் பொருட்களை அனுப்புமாறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. நிலைமை மேலும் சாதகமாகிட, சிங்கள இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் மறு சிந்தனை மேலும் வலுப்பட வேண்டும். தமிழ் இயக்கங்களின் அணுகுமுறையிலும் பெரிய மாற்றங்கள் தேவைப்படுகிறது. அனைத்தும் சரியாக நடந்தால், போராட்டங்களில் ஒரு பண்பு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒன்றுபடும் புள்ளி:

அதற்கு, இலங்கையின் போராட்ட முழக்கம், நவதாராளமய கொள்கைகளுக்கு எதிரானதாக கூர்மையடைய வேண்டும். அரசின் செலவினங்களை அதிகரிக்காமல் நெருக்கடியில் இருந்து மீள முடியாது, ஆனால் சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகளும், நவதாராளமய கொள்கைகளும் அதை அனுமதிக்காது. மக்கள் நல நடவடிக்கைகளை கைவிடச் சொல்லி அரசை நிர்ப்பந்திக்கும். இது துயரங்களை மென்மேலும் அதிகரிக்கும்.

தமிழ் மக்களும், சிங்கள உழைக்கும் மக்களும் கடந்த கால அனுபவங்களை கணக்கில் கொண்டு, ஒற்றுமையை வலுப்படுத்தி  செயல்பட வேண்டும். போராட்டக் களத்தில் பிரிவினையை தூவுவதற்கு ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்திய சக்திகளும் தொடர்ந்து முயற்சிப்பார்கள். அதற்கு எதிரான வலுவான ஒற்றுமையை போராட்டக் களமே உருவாக்கிடும்.

இலங்கையில் தொடர்ந்துவரும் முதலாளித்துவ – நிலவுடமை அமைப்புக்கு முடிவு கட்டும் பாதையில், போராட்டங்கள் கெட்டிப்பட வேண்டும். நவதாராளமய போக்கிற்கு முடிவுரை எழுத வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகத்திற்கான பாதை. இது நடக்குமானால், இலங்கை மக்களின் துயரங்களை நீக்கிடும் ஒரு இடதுசாரி மாற்றத்தை சாதிப்பது சாத்தியமாகும்.



Leave a comment