தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகள் தரும் படிப்பினைகள்


பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. தேச உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதத்தை மட்டுமே, நாட்டு முன்னேற்றத்திற்கான அளவுகோலாக, முன்வைக்கும் ஆளும் வர்க்க அறிவுஜீவிகள், இக்கொள்கைகள் உழைப்பாளி மக்களுக்கு ஏற்படுத்திவரும் இன்னல்களை, கண்டு கொள்வதில்லை. பொருளாதார வளர்ச்சி விகிதத்திலும் தாராளமய கொள்கைகள் சாதனை படைக்கவில்லை என்பதும், கடந்த பத்து ஆண்டுகளாக வளர்ச்சி விகிதம் குறைந்துவருகிறது என்பதும், வறுமையும், வேலையின்மையும், விலைவாசியும் அதிகரித்து வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதேசமயம் இடதுசாரிகளின் தலைமையில் தாராளமய கொள்கைகளையும், அவற்றின் உழைக்கும் மக்கள் விரோத விளைவுகளையும் எதிர்த்தும், மாற்று கொள்கைகளை முன்வைத்தும், தொடர்ந்து வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களும் நடைபெற்று வந்துள்ளன. இதனால் மக்களின் வாழநிலையில் தாராளமய கொள்கைகளின் மோசமான விளைவுகளையும் மீறி சில முன்னேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. (அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி இத்தகைய முன்னேற்றங்களை சாத்தியமாக்குவதில் பங்காற்றியுள்ளது என்பதையும் நினைவில் கொள்க). நிகழ்ந்துள்ள முன்னேற்றத்தின் ஒரு அம்சம் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல்வாழ்வு தொடர்பானது. இக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் அதன் நிறைகுறைகள்  பற்றியும் அறிவதற்கு ஒன்றிய அரசு மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஆய்வுகளும், அவை தரும் தரவுகளும் நமக்கு உதவுகின்றன. கடந்த முப்பது ஆண்டுகளில் ஐந்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இவை ஒவ்வொன்றும் “தேசீய குடும்ப நல ஆய்வு” (National Family Health Survey – NFHS) என்று அழைக்கப்படுகின்றன. முதன் முறையாக 1992-93 ஆண்டில் NFHS 1, பின்னர் 1998-99 இல் NFHS 2 , 2005 – 06 இல் NFHS 3, 2015 – 16 இல்  NFHS 4, இறுதியாக அண்மையில் 2019-2021 இல்  NFHS 5 என்று ஐந்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.  அவற்றின் பல்வேறு அறிக்கைகளும் இணைய தளத்தில் கிடைக்கின்றன.  இந்த அறிக்கைகள் மூலம் நாம் நாட்டு மக்களின் நல்வாழ்வு முன்னேற்றம் குறித்து சில முக்கிய விஷயங்களை அறிந்துகொள்ள  முடிகிறது.

NFHS அறிக்கைகள் தரும் தரவுகள்

ஏராளமான தரவுகளை NFHS அறிக்கைகள் அளிக்கின்றன. ஒட்டுமொத்த விவரங்களின் அடிப்படையில் சில குறியீடுகளை (indicators) உருவாக்கி, கணக்கிட்டு, அட்டவணைகளாக அறிக்கைகள் நமக்கு தருகின்றன. அத்தகைய குறியீடுகளில் முக்கியமான சில வருமாறு:

  • : எழுத்தறிவு சதவிகிதம்; 10 ஆண்டுகளாவது பள்ளி படிப்பு பெற்றவர்கள் சதவிகிதம்; ரத்த சோகை சதவிகிதம்: ஒரு முறையாவது இணையதளம் பயன்படுத்தியவர்கள் சதவிகிதம்; தங்கள் பயன்பாட்டிற்கு அலைபேசி வைத்திருக்கும் பெண்கள் சதவிகிதம்; தங்கள் பெயரில் வங்கி/சேமிப்பு கணக்கு வைத்துக்கொண்டு பயன்படுத்தும் பெண்கள் சதவிகிதம்;18 முதல் 49 வயது வரையிலான  பெண்களில் கணவரின் வன்முறைக்கு உள்ளானவர் சதவிகிதம் ஆகிய குறியீடுகள்.       

மேலும் பல குறியீடுகளை NFHS ஆய்வுகளில் இருந்து பெற இயலும், விவாதிக்க இயலும் என்றாலும் இக்கட்டுரையில் மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான குறியீடுகளின் விவரங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. முதலில் NFHS 5 தரவுகளை பரிசீலிப்போம். பின்னர் கடந்த 30 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ள ஐந்து ஆய்வுகளில் இருந்து ஆரோக்கிய புலத்தில் நிகழ்ந்துள்ள முன்னேற்றம் குறித்து பார்ப்போம்.

NFHS 5 (2020-21) தரவுகள்

தாய் – சேய் நலம்

இதில் மிக முக்கியமான குறியீடு சேய் இறப்பு விகிதம் ஆகும். உயிருடன் பிறக்கும் ஆயிரம் சேய்களில் ஒரு ஆண்டுக்குள் இறந்துவிடும் சேய்களின் எண்ணிக்கைதான் சேய் இறப்பு விகிதம். ஒரு சமூகத்தின் மிக முக்கிய ஆரோக்கிய குறியீடாக இது கருதப்படுகிறது. NFHS 5 தரும் விவரங்கள்படி அகில இந்திய அளவில் சேய் இறப்பு விகிதம் நகர்ப்புற பகுதியில் 28.6 ஊரகப்பகுதியில் 38.4, மொத்தத்தில் 35.2 என்று உள்ளது. கடந்த NFHS 4 (2015-16) அறிக்கையின்படி சேய் இறப்பு விகிதம் 40.7 ஆக இருந்தது. மொத்தத்தில் ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு பின்னால் தான் இந்தியா உள்ளது. இலங்கையின் விகிதம் 2020இல் 6 தான். NFHS 5 இன்படி இந்தியாவின் கேரளா மாநிலம் மட்டுமே அதைவிட குறைவாக 4.4 என்று உள்ளது. NFHS 5 இன்படி தமிழகத்தில் சேய் இறப்பு விகிதம் 18.6.  

இந்திய சமூகத்தில் ஆணாதிக்க முறைமையும், அதன் பகுதியாக ஆண் மகவையே கூடுதலாக விரும்பும் விழுமியமும் இருப்பது நாம் அறிந்ததே. சேய் நலம் பற்றிய ஒரு குறியீடு இதனை உறுதி செய்கிறது. அந்தக் குறியீடு உயிருடன் பிறக்கும் சிசுக்களின் பாலின விகிதம் என்பதாகும். ஆய்வுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் உயிருடன் பிறந்த சிசுக்களை கணக்கில் கொண்டு 1000 ஆண்மகவுக்கு எத்தனை பெண்மகவு நிகழ்ந்தது என்பது NFHS 5 யில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விகிதம் உலகளவில் சராசரியாக 1000 ஆண்மகவுக்கு 952 பெண்மகவு என உள்ளது. NFHS 5 தரும் விவரப்படி இந்த எண்ணிக்கை இந்தியாவில் 929 ஆக உள்ளது. NFHS 4 இல் இதைவிடக் குறைவாக 919 என இருந்தது. கேரளாவின் குறியீடு 951 என உலக சராசரியையொட்டி இருந்தது. தமிழ்நாட்டின் குறியீடு 878 என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது.

தாய் சேய் நலம் தொடர்பான மற்றொரு குறியீடு நிகழும் மொத்த பிரசவங்களில் என்ன சதவிகிதம் மருத்துவ நிறுவனங்களில் நிகழ்கிறது என்பதாகும். இதில் கடந்த 30 ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. NFHS 5 விவரப்படி ஆய்வுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் அகில இந்திய அளவில் நிகழ்ந்த பிரசவங்களில் 89% மருத்துவ நிறுவனங்களில் நடந்துள்ளதாக தெரிகிறது. NFHS 4 இல் இது 79% ஆக இருந்தது. கேரளா, தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கிட்டத்தட்ட அனைத்து பிரசவங்களுமே மருத்துவ நிறுவனங்களில் தான் நிகழ்கின்றன.

குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை

இந்த அம்சம் தொடர்பாக மூன்று குறியீடுகளை பரிசீலிப்போம்.

முதலாவதாக, 6 மாதத்திலிருந்து இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் போதுமான உணவு பெறும் குழந்தைகள் சதவிகிதம் என்ற குறியீட்டை எடுத்துக்கொள்வோம். NFHS 5 தெரிவிக்கும் தகவல் அகில இந்திய அளவில் 11.3 % குழந்தைகளுக்குத்தான் போதுமான உணவு கிடைக்கிறது என்பதாகும். NFHS 4 இல் இது 9.6% ஆக இருந்தது. எந்த அளவிற்கு நமது நாட்டில் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்கேற்ற போதுமான உணவு கிடைப்பதில்லை என்பதை இந்த விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. தமிழகத்தில் இந்த குறியீடு 16.3% என்ற அளவில் குறைவாக உள்ளது. கேரளாவிலும் கூட இந்த சதவிகிதம் 23.5 என்ற அளவில் தான் உள்ளது.

இரண்டாவதாக, ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் அடையாதவர்களின் சதவிகிதம் என்ற குறியீட்டை எடுத்துக்கொள்வோம். 

அகில இந்திய அளவில் 35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். தமிழ் நாட்டில் நான்கில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றியதாக உள்ளது. கேரளாவின் சதவிகிதம் 23.4.  நிலைமையில் பெரும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.

மூன்றாவது குறியீடு ஆறு மாதத்திலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளில் ரத்த சோகை உள்ளவர் சதவிகிதம் என்பதாகும். NFHS 5 அகில இந்திய அளவில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் ரத்த சோகை உள்ளவர்கள் என்று தெரிவிக்கிறது. தமிழகத்தில் இந்த சதவிகிதம் 57.4. கேரளாவில் நிலைமை மேலே இதை விட சற்று மேம்பட்டு உள்ளது. அங்கு ரத்த சோகை உள்ள குழந்தைகள் சதவிகிதம் 39.4 என உள்ளது.

ஒட்டுமொத்தமாக, குழந்தைகள் ஊட்ட சத்து நிலைமையில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவும், ஓரளவிற்கு தமிழகமும் அகில இந்திய நிலைமையை விட மேம்பட்டு உள்ளன. வேறு பல மாநிலங்களில், அகில இந்திய சராசரியை விட மோசமான நிலைமை உள்ளது. முப்பது ஆண்டுகளாக அமலாக்கப்பட்டு வரும் தாராளமய கொள்கைகள் தேச உற்பத்தி மதிப்பு வளர்ச்சியில் பெரும் சாதனை ஒன்றும் நிகழ்த்தவில்லை என்பது மட்டுமல்ல; ஆரோக்கியம் தொடர்பாகவும் இக்காலத்தில் ஓரளவு முன்னேற்றம் தான் நிகழ்ந்துள்ளது.

பெண்கள் முன்னேற்றம் குறித்து

15 ஆண்டுகள் முதல் 49 ஆண்டுகள் வரையிலான வயது கொண்ட பெண்கள் மற்றும் ஆண்கள்  தொடர்பாக NFHS 5 தரும் சில விவரங்கள் பெண் கல்வி, ஆரோக்கியம், பாலின சமத்துவம், பெண்கள் மீதான வன்முறை ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள உதவுகின்றன.

கல்வி

 NFHS 5 அகில இந்திய அளவில் பதினைந்து முதல் நாற்பத்தொன்பது வயது வரம்புகளுக்குட்பட்டவர்களின் எழுத்தறிவு பெண்களுக்கு 71.5% சதவிகிதம் ஆகவும் ஆண்களுக்கு 84.4% என்றும் மதிப்பிடுகிறது. NFHS 5 படி தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர் பெண்களில் 84% ஆண்களில் 90.7%. கேரளாவில் பெண்கள் எழுத்தறிவு விகிதம் 97.4%, ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 97.1%.

  அகில இந்திய அளவில் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள் பள்ளிக்கல்வி பெற்றவர் பெண்களில் 41%, ஆண்களில் 50.2% என்றும் NFHS 5 மதிப்பிடுகிறது.  தமிழகத்தில் இந்த சதவிகிதங்கள் முறையே 56.6, 59.1. கேரளாவில் முறையே  77%, 73.3%.

ரத்த சோகை விகிதம்

பெண்கள் உடல் நலம் குறித்த ஒரு முக்கிய அம்சம் ரத்த சோகை பாதிப்பு. NFHS 5 விவரப்படி அகில இந்திய அளவில், 15 முதல் 49 ஆண்டுகள் வயதுவரம்புகளில் வரும் பெண்களில் 60.2% ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த சதவிகிதம் 53.4 ஆக உள்ளது, கேரளத்தில் 36.3% ஆக உள்ளது.

இணைய தள பயன்பாடு

       NFHS 5 ஆய்வில் 15 முதல் 49 வயதுக்குட்பட்டோரின் இணைய தள பயன்பாடு பற்றி விவரங்கள் கிடைக்கின்றன. அதன்படி, அகில இந்திய அளவில் பெண்களில் 33.3%, ஆண்களில் 57.1% குறைந்த பட்சம் ஒரு முறையாவது இணைய தளத்தை பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் இந்த சதவிகிதங்கள் முறையே 46.9%, 70.2% என்றுள்ளன. கேரளாவில்  முறையே பெண்களில் 61.1%, ஆண்களில் 76.1% என்று இணையதள பயன்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து மாநிலங்களிலும் அகில இந்திய அளவிலும் இவ்விஷயத்தில் பாலின இடைவெளி அதிகமாக உள்ளது. தமிழ் நாட்டில் மிக அதிகமாக உள்ளது.

சுய அலைபேசி பயன்பாடு 

கடந்த இருபது ஆண்டுகளில் உலக அளவிலும் நம் நாட்டிலும் அலைபேசி பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதுபற்றி NFHS 5 தரவுகள் நமக்கு தெரிவிக்கும் ஒரு செய்தி அகில இந்திய அளவில் பெண்களில் பாதிக்கு மேலானவர்கள் – 54% – சொந்தமாக அலைபேசி வைத்திருக்கின்றனர்; அதனை பயன்படுத்துகின்றனர் என்பதாகும். NFHS 4 இன் படி 2015-16 இல் இது 45.9% ஆக இருந்தது.  தமிழகத்திலும் கேரளத்திலும் பெரும்பாலான பெண்கள் சொந்தமாக அலைபேசி வைத்துள்ளனர்; பயன்படுத்துகின்றனர். NFHS 5 விவரப்படி கேரளத்தில் 86.6% பெண்கள், தமிழ் நாட்டில் 74.6% பெண்கள் என்று உள்ளது.

வங்கி கணக்கு வைத்துள்ள பெண்கள்

கடந்த இருபது ஆண்டுகளாக  பெண்கள் வங்கி கணக்குகள் வைத்திருப்பது பரவலாகி வருகிறது. அகில இந்திய அளவில் NFHS 4 2015-16 தரும் தகவல் என்னவென்றால், குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்புக்குள் உள்ள பெண்களில்  53% பெண்கள் தான் வங்கி/சேமிப்பு கணக்கு வைத்திருந்தனர். NFHS 5 2019 – 2021 கணக்குப்படி, இது 78.6% ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு பல ஆண்டுகளாகவே இந்த அம்சத்தில் முன்னணியில் இருந்துவருகிறது. NFHS 4 2015-16 தரும் விவரப்படி தமிழகத்தில் 77% பெண்கள் வங்கி/சேமிப்பு கணக்கு வைத்திருந்தனர். அச்சமயம் கேரளத்தில் 70.6% பெண்களிடம் வங்கி/சேமிப்பு கணக்கு இருந்தது.   NFHS 5 2019 – 2021 கணக்குப்படி கேரளத்தில் ஓரளவு தான் இத்தொகை அதிகரித்தது, 70.6% இல் இருந்து 78.5% ஆக உயர்ந்தது. இது அகில இந்திய சராசரி அளவு தான். ஆனால், ஏற்கெனவே முன்னணியில் இருந்த  தமிழ் நாட்டில் இக்குறியீட்டில் வேகமான அதிகரிப்பு நிகழ்ந்து, 92.2% என்று ஆகியுள்ளது.

கணவனின் வன்முறை எனும் பிரச்சினை  

 ஆணாதிக்க விழுமியங்கள் வலுவாக உள்ள நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை நீண்ட காலமாக உள்ள பிரச்சினை. முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரமும், தொடரும் நிலப்ரபுத்துவ சமூக விழுமியங்களும் இப்பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணங்கள். விழிப்புணர்வு பெற்றுவரும் பெண்கள் இத்தகைய வன்முறைக்கு எதிராக ஜனநாயக மாதர் இயக்கங்களாலும் முற்போக்கு சக்திகளாலும் திரட்டப்படுகின்றனர். எனினும் இப்பிரச்சினை தொடர்கிறது. NFHS 4, NFHS 5 அறிக்கைகளில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் உள்ளன.

18 முதல் 49 வயதுவரை உள்ள திருமணமான பெண்களில் கணவனின் வன்முறைக்கு உள்ளான பெண்கள் சதவிகிதம் என்ற குறியீட்டின் விவரங்கள் இவ்விரண்டு ஆய்வுகளின் அகில இந்திய, மாநில அறிக்கைகளில் தரப்பட்டுள்ளன. இவை தரும் செய்திகள் வருமாறு:

கணவனின் வன்முறைக்கு உள்ளாகிய பெண்கள் சதவிகிதம்

இந்தியா             தமிழ் நாடு           கேரளம்

NFHS 4  (2015-16)            31.2                     40.7                  14.3            

NFHS 5  (2019-2021)          29.3                     38.1                   9.9

அகில இந்திய அளவில் கணவன் வன்முறையால் ஏறத்தாழ 30% பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலைமையில் கடந்த பல ஆண்டுகளாக மிகச்சிறிய அளவிலான முன்னேற்றம் தான் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு இக்குறியீட்டில் முன்னணியில் இருப்பது பாலின சமத்துவமும் பாலின வன்முறை ஒழிப்பும் வெகு தூரத்தில் உள்ளன என்று நமக்கு உணர்த்துகின்றன. கேரளாவில் ஒப்பீட்டளவில் பெண்கள் மீதான கணவன் வன்முறை என்பது குறைவாக உள்ளது. மேலும் குறைந்தும் வந்துள்ளது. ஆனால் இதுவும் ஏற்கத்தக்கது அல்ல.

   பொதுவான முன்னேற்றம்

தாராளமய கொள்கைகளாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் – பாஜக அரசுகளின் அதி தீவிர மக்கள் விரோத நடவடிக்கைகளாலும் உழைக்கும் மக்களும் பெண்களும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படும் மக்களும்   கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வந்துள்ளனர். எனினும் இதற்கு  மத்தியிலும் முற்போக்கு சக்திகளின் தொடர் தலையீடுகளாலும் மக்களின் வர்க்க வெகுஜன போராட்டங்களாலும் பொதுவான அறிவியல்-தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாகவும் மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் ஒருசிலவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் முன்வைத்துள்ள தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

NFHS 1 முதல் NFHS 5 வரை நமக்கு கிடைத்துள்ள தரவுகள் தாய் சேய் நலம் விஷயத்தில் பொது முன்னேற்றம் நிகழ்ந்துள்ளதை காட்டுகின்றன. சேய் இறப்பு விகிதம் பொதுவாக நாடு முழுவதும் தொடர்ந்து குறைந்து வருகின்றது. எனினும் ஆரோக்கியத்திற்கு போதுமான நிதி ஒதுக்குவதிலும் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் சுணக்கம் காட்டும் அரசுகளின் கொள்கைகளும் ஆணாதிக்க சமூகமும் இன்னும் வேகமாக சேய் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு முட்டுக்கட்டைகளாக உள்ளன. மொத்த பிரசவங்களில் மருத்துவ நிறுவனங்களில் நிகழும் பிரசவங்களின் சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதில் சில மாநிலங்கள் பின்தங்கியுள்ளன என்றாலும் பொதுவாக முன்னேற்றம் உள்ளது.   

குழந்தைகள், பெண்கள் ஊட்டச்சத்து நிலையை பொருத்தவரையில் நிலைமையில் பொதுவான  முன்னேற்றம் இருப்பதாக சொல்ல இயலாது. சில அம்சங்களில் பின்னடைவு கூட காணப்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இது இன்னும் வலுவான, அறிவியல் பூர்வமான தலையீடுகளின் அவசியத்தை உணர்த்துகிறது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குமுன் துவக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் திட்டம் – ICDS – போதுமான அளவு அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் தொடர்ந்து பெரும் சவால்களை சந்தித்துவருகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை ஓரளவு முன்னேற்றத்தை சாத்தியமாக்கியிருந்தாலும், அரசுகளின் அணுகுமுறை வேகமான மேம்பாட்டிற்கு தடையாக உள்ளது. பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் பொழுது ஏறத்தாழ அனைத்துக் குறியீடுகளிலும் மிகச்சிறந்த மாநிலமாக திகழ்வது கேரளா என்பது தெளிவாகிறது.

கிராம-நகர ஏற்றத்தாழ்வுகள்

NFHS தரவுகள் பெரும்பாலான குறியீடுகளில் பொதுவாக நாடு முழுவதும் மற்றும் மாநில வாரியாகவும் ஓரளவு முன்னேற்றம் நிகழ்ந்துள்ளதை தெரிவிக்கின்றன. ஆனால் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக நீடிப்பதையும் பார்க்க முடிகிறது, இதில் பல பரிமாணங்கள் இருந்தாலும், பிரதானமாக நகர்ப்புற – கிராமப்புற இடைவெளி என்பது அதிகமாக உள்ளது. சேய் இறப்பு விகிதம் உள்ளிட்டு பல அம்சங்களில் இதைக் காணமுடிகிறது. அகில இந்திய அளவிலும்  பின்தங்கிய மாநிலங்களிலும் மட்டுமின்றி ஓரளவு முன்னணியில் உள்ள தமிழ் நாடு போன்ற மாநிலங்களிலும் கூட பல குறியீடுகளைப் பொறுத்தவரையில் கிராம நகர இடைவெளி கணிசமாக உள்ளது.  இதில் விதிவிலக்காக உள்ளது கேரளா மாநிலம். அங்கு பெரும்பாலான குறியீடுகளில்  கிராம நகர இடைவெளி மிகக் குறைவு. அதேபோல் முக்கியமான குறியீடுகளில், பாலின இடைவெளியும் குறைவு. தாய் சேய் நலத்திலும் பொது சுகாதாரத்திலும் கேரளா அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

நிறைவாக

ஏராளமான தரவுகள் தரும் NFHS பல சுற்று ஆய்வுகளுக்கு ஒரு அறிமுகமாக மட்டுமே இக்கட்டுரை உள்ளது.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளவும், பரிசீலிக்கவும் கீழ்க்கண்ட இணைய தளங்கள் உதவும்:    

http://www.rchiips.org/nfhs

http://www.iipsindia.ac.in

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s