மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்துத்துவா: உருவாக்கம், திட்டம், பரவல் …


ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் நூல் விமர்சனம்

வெறுப்பின் வேர்கள்

சிந்தன்

ஏ.ஜி. நூரானி எழுதிய, ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்ற நூல் அண்மையில் தமிழில் வெளியானது. ஃபிரண்ட்லைன் ஆங்கில இருவார இதழின் ஆசிரியராக இருந்த ஆர். விஜயசங்கர், தன் பணிக் காலத்திலேயே சுமார் 2 ஆண்டுகள் கடுமையான உழைப்பைச் செலுத்தி இந்த நூலை தமிழில் கொடுத்திருக்கிறார். பாரதி புத்தகாலயம் இந்த நூலை நேர்த்தியாக வடிவமைத்து, அச்சிட்டுள்ளது.

நேர்கோட்டில் எழுதப்பட்ட வரலாற்றுச் சித்திரமாக இது இல்லை. அதேசமயம், கடந்தகால வரலாற்றில் தொடங்கி சமகால அரசியல் வரையிலும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வாதங்களை, நுணுக்கமாகப் புரிந்துகொள்ள அவசியமான ஒரு கையேடாக இது பயன்படுகிறது. 824 பக்கங்களில் 25 கட்டுரைகளும், பின்இணைப்புகளும், ஆதாரங்களின் பட்டியலும் கொண்டு, கடுமையான உழைப்பில் வழங்கப்பட்டிருக்கும் ஆவணத் தொகுப்பாக இது உள்ளது.

புத்தகத்தின் ஊடாக, ஏ.ஜி. நூரானி இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்: ”நவீனத்தின் சவால்களை  சந்திக்கும் திறன் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கோ அதன் அரசியல்பிரிவான பிஜேபிக்கோ இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்பது நிதர்சனம். ஆனால் இந்தக் கேள்வியுடன் நின்றுவிடக் கூடாது. பொதுவாழ்வில் இதுபோன்ற தீயசக்தி எழுகிற அளவுக்கு நம்வரலாற்றில் என்னதான் நடந்தது என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஏன் சில நவீனத்துவவாதிகளான இந்துக்கள் உட்பட அவர்களை ஆதரிக்கிறார்கள்? அவர்களுடைய கவலைகளை உதாசீனம் செய்வது தவறாகும். நம் அரசியலின் அமைப்பு குறித்த அறிவார்ந்த ஆய்வுகள் நடத்தி இந்தப் பிரச்சினையின் வேர்களைக் கண்டறிவது அவசியம்.”

அது இந்தியாவை பாதுகாக்கும் அனைவருக்கும் முன்கடமை. அதற்கு உதவி செய்யும் நூல்களில் இந்த நூலும் முக்கியமான இடம் பெறும்.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமீபகால செயல்பாடுகள் வரையிலும் பின்தொடர்ந்து அதன் உள்அம்சங்களை இந்தநூல் விவரிக்கிறது. இந்த விமர்சன கட்டுரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் உருப்பெற்றதிலிருந்து, அதன் மோசடியான உத்திகளின் வழியாக அதிகாரத்தை சுவைக்க வழிவகுத்த ‘ராமஜென்மபூமி’ இயக்கம் வரையிலான காலகட்டம் பற்றியது. (முதல் 16 அத்தியாயங்கள், 386 பக்கங்கள்)

சமரசத்தில் பிறந்த ‘இந்துத்துவா’

முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு பின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சி நாடு தழுவிய அளவில் வளரத் தொடங்கியது. அதே காலகட்டத்தில்தான், ‘இந்துத்துவா’ கருத்தியலும் உருவானது.

அந்தமான் சிறையில் கைதியாக இருந்த விநாயக் தாமோதர் சாவர்க்கர் இழிபுகழ்பெற்ற பல மன்னிப்புக் கடிதங்களை எழுதினார். அவைகளில் ஏகாதிபத்தியத்தோடு சமரசரத்திற்கு தூதுவிட்டார். அதில்   அவரின் வகுப்புவாத கண்ணோட்டமும் கெட்டிப்பட்டது. ‘இந்துத்துவா’ கருத்தியலாக வடிவம் எடுத்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் அரசியல்திட்டத்திற்கு அது உகந்ததாகவும் அமைந்தது.

இந்துத்துவா பழைய சமூகத்தின் பிற்போக்கு அம்சங்களை மீட்டமைக்க விரும்பும் ‘இந்து மீட்புவாதத்தில்’ இருந்து எழுந்த ‘இந்துதேசியவாத’ கண்ணோட்டத்தை உள்ளடக்கியது. அதற்கு முன்பிருந்த மதவாதத்தில் இருந்து வேறுபட்டது. அதற்கான பல ஆதாரங்களை ஏ.ஜி.நூரானி தருகிறார்.

“இந்தியாவைத் தந்தைநாடாகவும் (பித்ருபூமி) புண்ணியபூமியாகவும் கருதுபவனே ஓர் இந்து” என்கிறார் சாவர்க்கர். இது ஆன்மீக வகைப்பட்ட விளக்கம் அல்ல. நேரடியாகவே மக்களை பிளவுபடுத்தும் அரசியல் திட்டம். அதன்படி யார் இந்து என்று அறிவதற்கான சோதனையை இன்னும் தெளிவாக பின்வருமாறு விளக்குகிறார்: “சந்தால் பழங்குடியினர் முதல் சாதுக்கள் வரையில், ஒவ்வொரு இந்துவுக்கும் இந்த பாரதபூமி பித்ருபூவாகவும் புண்ணியபூவாகவும் இருக்கிறது. அதாவது ‘தந்தைபூமியாகவும்’, ‘புண்ணியபூமியாகவும்’ இருக்கிறது.”

மேலும், “நம் நாட்டுக்காரர்களாகிய முகமதியர்களோ, கிறிஸ்துவர்களோ, இந்துக்களுடன் சேர்ந்து ஒரே தந்தைநாட்டையும் ஒரு பொதுவான கலாச்சாரத்தின் சொத்துகளையும் – மொழி, சட்டம், வழக்கங்கள், நாட்டார்கதைகள், வரலாறு போன்றவற்றையும் வரித்துக் கொண்டிருந்தாலும், அவர்களை இந்துக்களாக அங்கீகரிக்க முடியாது; அங்கீகரிக்கக் கூடாது” என்கிறார் சாவர்க்கர்.

“இந்த வரையறையைச் செய்த விதத்தில் சாவர்க்கரின் இரு நோக்கங்கள் வெளிப்படுகின்றன” என்கிறார் அம்பேத்கர். முதல் நோக்கம்: முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும், பார்சிகளையும், யூதர்களையும் விலக்கி வைப்பது. இரண்டாவது நோக்கம்: இந்துவாக இருப்பதற்கு வேதங்களின் புனிதத்தில் நம்பிக்கை இருப்பது அவசியமில்லை என்று வலியுறுத்திக் கூறுவதன் மூலம் பவுத்தர்களையும், சமணர்களையும், சீக்கியர்களையும் சேர்த்துக் கொள்வது. இப்படி செய்வதன் மூலம், ஒரே நிலத்தில் ஆயிரம் ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தாலும்கூட, மதத்தின் அடிப்படையிலும், நம்பிக்கை அடிப்படையிலும் மக்களை கூறுபோடுவதுதான் ’இந்துத்துவா’ என்பதை அம்பேத்கர் தெளிவாக்கினார்.

இப்படிப்பட்ட புரிதலின் காரணமாகத்தான் 1924 ஆம் ஆண்டிலேயே, முதல் முறையாக நாட்டுப்பிரிவினைக்கான முழக்கத்தை சாவர்க்கர் முன்வைத்தார்.

உள்ளுக்குள்ளேயே எதிரிகள்

ஜூன் 21, 1940 வரை ஹெட்கேவாரும், அவரின் மறைவுக்குபின் கோல்வால்கரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்சங்சாலக் ஆக இருந்தார்கள். கோல்வால்கர்  ‘இந்துத்துவா’ கருத்தியலை மேலும் விரிவாக்கினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு அரசியலுக்கும், வன்முறைக்கும் தோதான ’உள்நாட்டு எதிரிகளை’ வகைப்படுத்தினார்.

கோல்வால்கரின் ‘சிந்தனைக்கொத்து’ என்ற நூலில்  ‘உள்நாட்டு அபாயங்கள்’ என்று தலைப்பிடப்பட்ட 12ஆம் அத்தியாயம் ”முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்” ஆகியோரை உள்நாட்டு எதிரிகளாக சுட்டுகிறது. “அன்னிய சக்திகளுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன: அவர்கள் தேசிய இனத்தில் ஐக்கியமாகி அதன் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது தேசியஇனம் அனுமதிக்கும்வரை அவர்கள் அந்த இனத்தின் கருணையில் வாழ்ந்து அது விரும்பும்போது வெளியேற வேண்டும்” என்கிறார் கோல்வால்கர். ”குடிமக்களின் உரிமைகள்கூட இல்லாமல் இந்துதேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிவதாக இருந்தால், நாட்டில் அவர்கள் தொடர்ந்து தங்கியிருக்கலாம். அவர்களுக்கு வேறுவழி ஏதுமில்லை;இருக்கவும் கூடாது” என்றும் கூறுகிறார்.

மேலேகுறிப்பிட்டுள்ள பத்திகளில் ‘அன்னியர்கள்’ என்பது, இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்துவரும் மக்களேஅன்றி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமோ பிற சுரண்டல் சக்திகளோ அல்ல. அதனால்தான் பிரிட்டிஷ் அரசின் உள்துறைச் செயலகம் 1943இல் தயாரித்த அறிக்கை, “ஆர்எஸ்எஸ், சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு உடனடி அபாயம் என்று வாதிடுவது கடினம்” என்றது.

பாசிச விருப்பங்கள்

     பிறந்தநாடு எதுவாக இருந்தாலும், புனிதபூமி எது என்பதை வைத்தே ‘அன்னியர்’ என்று வகைப்படுத்தும் அறிவியலற்ற விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘பித்ருபூமியாக’ பிரிட்டிஷ் ஏகாதியத்தியமும், ‘புனித பூமியாக’ ஜெர்மனியும், இத்தாலியும் உள்ளன. பாசிச அமைப்புகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் உள்ள நெருக்கமான பிணைப்பை இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது.ஜெர்மனியின் ஃப்யூரர் கோட்பாடு அதனுள் பதிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் சட்டத்தின் 12வதுபிரிவில் இது இடம்பெற்றுள்ளது.1931 மார்ச் 19 ஆம்தேதி மூஞ்சே, இத்தாலிக்குச் சென்று முசோலினியிடம் கூறியது இதுதான்: “இதேபோன்ற நோக்கங்களைக் கொண்ட ஓர் அமைப்பை நான் ஏற்கெனவே இந்தியாவில் தொடங்கிவிட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள பொதுமேடைகளில் உங்களுடைய பலில்லா போன்ற ஃபாசிஸ்டு அமைப்புகளைப் புகழ்ந்துபேசத் தயங்க மாட்டேன்.”

இப்போதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜகத்குரு (உலகிற்கே வழிகாட்டி) என்ற பேராசையினை தனக்குள் அடைகாக்கிறது. அந்த விருப்பத்துடனே அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நேசிக்கிறது. இஸ்ரேல் முன்னெடுக்கும் ஜியோனிச ராணுவ தாக்குதலை ஆதரிக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலை பற்றி ஆர்கனைசர் இதழில் 1967, ஜூன் 18 ஆம்தேதி இவ்வாறு எழுதியது: “உலகில் நமக்குரிய இடத்தை மீண்டும் அடைய வேத கலாச்சாரம் என்ன செய்யமுடியும் என்கிற சிறிய சிந்தனைப்பொறி இந்தப் போரில் இஸ்ரேலின் ஆயுதங்கள் பெற்ற வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.”

சிறுபான்மையை மறுத்தல்

‘சிறுபான்மை’ என்ற கருத்தாக்கத்தை ஆர்.எஸ்.எஸ் முற்றாக மறுக்கிறது. ஆனால் தேன் தடவிய சொற்களில் அதனை முன்வைக்கிறது. “இந்தியர்கள் அனைவருமே இந்துக்கள்” என்று பலமுறை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியதாக ஊடகங்களில் படித்திருப்போம்.அது சாதாரண பொருளில் சொல்லப்படுவது அல்ல; ‘கலாச்சார தேசியம்’ என்ற பழுதுபட்ட பார்வையின் வெளிப்பாடு. சிறுபான்மையினர் என்ற நிலையையே மறுதலிப்பதன் அபாயத்தை நூரானி விரிவாக விளக்குகிறார்.

கோல்வால்கர் பவுத்த, சமண சிறுபான்மையினர்களையும் கூட பின்வருமாறு சிறுமைப்படுத்துகிறார்: “பவுத்தம், சமணம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அவர்கள் சமூக, அரசியல் சிந்தனைகளுக்கு எந்தப் பங்கையும் அளிக்கவில்லை; அவற்றிலிருந்து நாம் எந்த அர்த்தசாஸ்திரத்தையும் (அரசியல், பொருளாதாரஞானம்) அல்லது தர்மசாஸ்திரத்தையும் (சமூகவிதிகள்) வரித்துக் கொள்ளவில்லை”.

தேசிய இயக்கத்தின் வலிமை

     தேசிய விடுதலை இயக்கத்தினூடாக எழுந்த மதச்சார்பின்மை கண்ணோட்டத்தின் காரணமாக,  ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய திட்டத்திற்கு மக்கள் ஆதரவை பெற முடியவில்லை. தேசிய இயக்கம் மதவாத கண்ணோட்டத்தை நிராகரித்தது என்பதற்கான ஏராளமான ஆதாரங்களை இந்த நூல் தருகிறது. நாட்டுப் பிரிவினைக்கான திட்டம் ஜூன் 3, 1947 அன்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 10ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல், பிர்லாவிற்கு பதில் கடிதம் ஒன்றை எழுதுகிறார். அவர் எழுதியது இதுதான்: “இந்துமதத்தை அரசின் மதமாகக் கொண்ட இந்துநாடாக இந்துஸ்தானைக் கருதுவதற்கு இயலாது என்று நினைக்கிறேன். வேறுசில சிறுபான்மையினர் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பது நம் முதன்மையான பொறுப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது. அரசு என்பது ஜாதி, மதங்களைக் கடந்து அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்.”

ஆனால் ஆர்.எஸ்.எஸ். இதை ஏற்கவில்லை.1946-47இல் பிரிவினையின்போது நடந்த மதக்கலவரங்களில் அது தீவிரமாகப் பங்கெடுத்தது. அதன் நச்சுக் கருத்தியலை செயல்படுத்தியது. பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பு என்ற உத்தியை தொடர்ந்ததுடன், பிரிட்டிஷார் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்; முஸ்லிம்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்று பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

இவ்வாறாக நூரானி பட்டியலிடும் 4 வரலாற்று உண்மைகள்:

 1. 1885 முதலே இந்தியா மதச்சார்பின்மைக் கொள்கையைத் தழுவிக் கொண்டது.

2. பழமையை மீட்டமைக்க விரும்பிய ‘இந்துமீட்புவாதம்’ இந்துமகாசபையும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் உருவாகக் காரணமாக இருந்தது.

3. இந்த இயக்கங்கள் அவை பிறந்தபோதிலிருந்தே இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியத்துடன் போர்புரியத் துவங்கிவிட்டன.

4. அவை விடுதலைப்போரில் பங்கேற்கவில்லை. மாறாக, காங்கிரசை ஓரங்கட்ட அல்லது ஒழிப்பதற்காக, பிரிட்டிஷ் அரசுடன் இணைந்து செயல்பட்டது.

காந்தியின்படுகொலை

     காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் கொண்டிருந்த தொடர்பினை இந்த நூல் விரிவாக விவரிக்கிறது. உத்திரபிரதேசத்தின் பிரதம அமைச்சராக இருந்த கோவிந்த் வல்லப பந்த், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக பெறப்பட்ட ஒரு டிரங்க் பெட்டி நிரம்ப சாட்சியங்கள் இருந்தபோதும் அந்த அமைப்பை ஏன் தப்பவிட்டார் என்ற கேள்வியையும் இந்தநூல் பலமுறை முன்வைக்கிறது.

வழக்கில் இருந்து சாவர்க்கர் தப்பித்தார். அப்ரூவராக மாறிய பாட்கேயின் சாட்சியம் உண்மையானதாக இருந்தாலும், அது தெளிவற்றது; போதுமானதாக இல்லை என்று சொல்லியே நீதிபதி ஆத்மசரண் சாவர்க்கரை விடுதலை செய்தார்.

ஆனால், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி கொலைவழக்கினை விசாரிக்க சுப்ரீம்கோர்ட் நீதிபதி ஜீவன்லால் கபூரின் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குள் சாவர்க்கர் மரணமடைந்து விட்டார் (1966) சாட்சியங்களைத் தீர விசாரித்த கபூர் செப்டம்பர் 30, 1969 அன்று, “இந்த விவரங்கள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது அவை சாவர்க்கரும் அவரது குழுவும் செய்த சதி காந்தியின் படுகொலைக்குக் காரணமில்லை என்கிற வாதத்தைத் தகர்க்கின்றன” என்றார்.

அப்படியானால், ஆத்மசரண் ஏன் வேறுவிதமாக தீர்ப்புக் கொடுத்தார்? என்ற கேள்விக்கும் இந்த நூல் விடைகொடுக்கிறது. சாவர்க்கரின் இரு உதவியாளர்கள் நீதிமன்றத்தில் ஏன் ஆஜராக்கப்படவில்லை? என நூரானி கேட்கிறார். அரசுக்கு உள்ளிருந்தே கோல்வால்கருக்கு கிடைத்துவந்த ஆதரவினை விவரிக்கிறார்.

ஒருவேளை ஆர்.எஸ்.எஸ். சதிச்செயல் பற்றிய ஆதாரங்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அது காந்தியை காப்பாற்றியிருக்கும். அல்லது சதிச்செயலை முற்றாக அம்பலப்படுத்தி, மொத்தமாக அந்த அமைப்பையே முடக்கியிருக்க முடியும் என்பது நூரானி வெளிப்படுத்தும் ஆதங்கம்.

காந்தி படுகொலை நிகழ்ந்த இரண்டுநாட்களுக்குள்ளாகவே, பிப்ரவரி 1, 1948 அன்று கோல்வால்கர் கைதுசெய்யப்பட்டார். பிப்ரவரி 4 அன்று, ஆர்எஸ்எஸ். ‘ஒரு சட்டவிரோத அமைப்பு’ என்று அறிவித்து அதனைத் தடைசெய்தது அரசு. இருப்பினும் தடைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தி வைக்கவில்லை. அது மாணவர்களை திரட்டத் துவங்கியது.

தன்னுடைய அமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய ஒப்புக்கொண்டு, அது இந்திய தேசத்துக்கு விசுவாசமானதாகவும், தேசியக்கொடியை மதிப்பதாகவும், ரகசிய முறைகளைத் தவிர்த்தும், வன்முறையைக் கைவிட்டும் நடக்கும் ஒரு ஜனநாயக, கலாச்சார இயக்கமாகச் செயல்படும் என்ற உறுதியைக் கொடுத்த அடிப்படையில் அதன் மீதான தடை விலக்கப்பட்டது.

காந்தியின் படுகொலைக்கு பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியலுக்கு பின்னடைவு ஏற்பட்டது. 1954இலிருந்து 1960 வரை மதக்கலவரங்களின் எண்ணிக்கை தெளிவாகவும் சீராகவும் குறைந்து வந்தது; 1960 இல் குறிப்பிடத்தக்க வகையில் 26 மதக்கலவரங்களே நாட்டில் நடந்தன.

அரசியலில் ஆர்.எஸ்.எஸ்.

     ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒரு ‘கலாச்சார’ அமைப்பு என்றும், ‘ஆன்மீக’ அமைப்பு என்றும், ‘சேவை’ அமைப்பு என்றும் அவ்வப்போது கூறிவந்தாலும், அது ஒரு அரசியல் இயக்கமே. அது முன்வைத்த மதவகைப்பட்ட தேசியம் என்ற பார்வையை மக்கள் நிராகரித்தபோதிலும், பெரும் தொழில் அதிபர்களுடைய ஆதரவை அது தொடர்ந்து பெற்று வந்துள்ளது. அதன் வழியாக தான் பெற்ற பண பலத்தையும், உறுப்பினர்களின் பலத்தையும் பயன்படுத்தி பல்வேறு கட்சிகளின்மீது செல்வாக்கு செலுத்தியது. அதில் அதற்குப் பலனும் கிடைத்தது.

அப்போது தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்குள்ளும், அரசு நிர்வாகத்திலும், நீதித்துறையிலும் அந்த அமைப்புக்கு இருந்த பிடிமானத்தை இந்த நூலின்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக ஒரு நிகழ்வினை குறிப்பிடலாம். 1949 அக்டோபர் 7 ஆம் தேதி கூடிய காங்கிரஸ் செயற்குழு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர்களாக இணையலாம் என்ற தீர்மானத்தினை நிறைவேற்றியது. அப்போது நேரு அமெரிக்கா சென்றிருந்தார். அவர் நாடு திரும்பியபின் அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு தன் முந்தைய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது. ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பதவியைக் கைவிட்டால் மட்டுமே ஒருவர் காங்கிரசில் சேரலாம் என்று முடிவெடுத்தது.

ஜனசங்கத்தின் உருவாக்கம்

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி இந்துத்துவா ஆதரவாளராகவும், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாகவும் இருந்தார். அவரைப் பற்றிய விரிவான பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.அவர் 1920 களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வங்க மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராக இருந்தார்.1939 ஆம் ஆண்டில் இந்துமகாசபையில் சேர்ந்தார்.1941 ஆம் ஆண்டில் வங்க மாகாணத்தின் ஃபஸ்லூல் ஹக் தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றார். அந்த ஃபஸ்லூல் ஹக் யார் என்று பார்த்தால், லாகூரில் மார்ச் 23, 1940 அன்று நடந்த முஸ்லிம்லீக் மாநாட்டில் பாகிஸ்தான் தீர்மானத்தை முன்வைத்தவர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்துகொண்டிருந்தபோது (1942) காங்கிரசை எப்படி நசுக்குவது என்று வங்க மாநில ஆளுநருக்கு ஆலோசனை வழங்கினார். அதிகாரத்திற்காக எப்படிப்பட்ட சமரசத்தையும் கொள்ளும் முகர்ஜியை, பாசிச இத்தாலி ஆட்சியின் துணை தூதரகம் ‘கூட்டாளி’ என்ற அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

அவரை முன்னிறுத்தி தனக்காக ஒரு ‘அரசியல் இயக்கத்தை’ தொடங்கிட ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்தது. அந்த ஒப்பந்தத்தில் பிறந்ததுதான் ‘ஜனசங்கம்’. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்களும், பணமும் இதில் பயன்பட்டன.

மரணமும், அம்பலப்பட்ட சதியும்

ஜன சங்கத்தின் தலைவராக இருந்த தீன்தயாள் உபாத்யாயா மரணமும், அதை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட இழிவான அரசியலையும் இந்த நூல் விவரிக்கிறது.

பிப்ரவரி 11, 1968 அன்று முகல்சராய் ரயில்நிலையத்தில் ஒரு முனையிலிருந்து 748 அடி தொலைவில் உபாத்யாயாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த மரணத்தை பயன்படுத்தி முஸ்லிம்கள்மீதும் கம்யூனிஸ்டுகள்மீதும் குற்றம்சாட்டியது ஜனசங்கம்.

இந்த வழக்கை விசாரிக்க சந்திரசூட் ஆணையம் அமைக்கப்பட்டது. உண்மையை துல்லியமாக வெளிப்படுத்தியது விசாரணை அறிக்கை. இந்த மரணத்தில் கம்யூனிஸ்டுகளுக்கோ அல்லது,  முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஏ.ஜெ. ஃபாரிதிக்கோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பில்லை என நிரூபணமானது. அதுமட்டும் அல்லாமல், “ஆதாரமாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலிஆவணத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டது சரியல்ல என்று நான் அழுத்திக் கூறுகிறேன்” என சந்திரசூட் ஆணையம் தெரிவிக்கிறது.

தன்னுடய சொந்த தலைவரின் மரணத்தையும் கூட, கீழ்த்தரமான விதத்தில் பயன்படுத்தி தன்னுடைய வன்முறை, வெறுப்பு திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் என்பது இந்த முறையும் வெளிப்பட்டது.

அவசரநிலையும், மன்னிப்புக் கடிதங்களும்

1974ஆம் ஆண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயண் துவக்கிய முழுப்புரட்சி இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் இணைந்தது. மறுபுறத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் தேவரஸ் தன்னை சிறையிலிருந்து விடுவிக்கவும், ஆர்எஸ்எஸ் மீதிருந்த தடையை நீக்கவும் கோரி ரகசியக் கடிதங்களை இந்திரா காந்திக்கு எழுதிக் கொண்டிருந்தார். அந்தக் கடிதங்களில் அவசரநிலைக்கால அறிவிப்பைப் பின்வாங்குவது குறித்தும், பிற அரசியல் கைதிகளை விடுதலை செய்வது பற்றியும் ஒன்றும் இல்லை.

தேவரஸ் 6 மாத காலத்தில் 10 மன்னிப்புக் கடிதங்களை எழுதினார். அதில் மிக மோசமான ஒன்றை நவம்பர் 10, 1975 அன்று எழுதினார். அதில் தேவரஸ் கூறுகிறார் “உங்களுடைய தேர்தல் செல்லும் என்று ஐந்துநீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன்” அந்த கடிதத்தில் மேலும், “ஆர்எஸ்எஸ்ஸின் பெயர் காரணமேதுமின்றி குஜராத், பீஹார் மாநிலங்களில் நடக்கும் இயக்கங்களுடன் திரும்பத் திரும்ப இணைத்துப் பேசப்படுகிறது. இந்த இயக்கங்களுடன் சங் அமைப்பிற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை” என்றார். ஆம் அவர் அதில் ஜெயபிரகாஷ் நாராயணனை கைவிட்டார். சிறையில் நடந்த பவுதிக் என்கிற கூட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இன்னும் மோசமாக பேசினார்கள்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய விஷக் கொடுக்குகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர்கள் எதார்த்தத்திற்கு புறம்பாக எதிர்பார்த்தார்கள். அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். எப்படியெல்லாம் போக்குக் காட்டியது, இரட்டை வேடம் போட்டது என்பதை இந்த நூல் விரிவாக எடுத்துக் காட்டுகிறது. 1951இல் ஜனசங்கம் பிறந்தது முதல் 1977இல் அது கலைக்கப்பட்டு ஜனதா கட்சியுடன் ஐக்கியமானது. பிறகு அதிலிருந்து உடைத்துக்கொண்டு புதிய அரசியல் கட்சியை தொடங்கியது.

வழிக்கு வந்தது பாஜக

     ஜனதா கட்சியோடு நெருங்கி தன்னை சற்று வலுப்படுத்திக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பின் பாஜகவை உருவாக்கியது. பாஜகவின் தலைவர்கள் முதலில் ‘காந்திய சோசலிசம்’ பேசினார்கள். அத்வானியும், வாஜ்பாயும் ஆர்.எஸ்.எஸ். வழியில் இருந்து மாறி நடப்பது போல போக்குக் காட்டினார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக எழுதி வந்தது. அது பழைய ஜனசங்கத்தையே மீளுருவாக்க விரும்பியது என்கிறார் நூரானி.

“1985 மார்ச் 17,18 தேதிகளில் கூடிய பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு ஜனசங்கத்திற்கு புத்துயிர் கொடுப்பது குறித்து விவாதித்தது. பாஜக தோற்றுவிக்கப்பட்டு (ஏப்ரல் 5, 1980) ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னும்கூட ஜனசங்கத்தினை மீளுருவாக்கம் செய்வது குறித்து பேச்சு நிலவியது என்பதே புதிதாகத் தோன்றிய பாஜக வேரூன்றவில்லை என்பதையே காட்டுகிறது” என்கிறார். இறுதியாக, பாஜகவின் தேசிய நிர்வாகக்குழு தவிர்க்கமுடியாத வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அழுத்தத்திற்கு தலைவணங்கியது. காந்திய சோசலிசம் என்கிற தன் சந்தர்ப்பவாத முழக்கத்தை கைவிட்டது.

ராமர் கோயிலும்ஆர்.எஸ்.எஸ். திட்டமும் !

‘ராமஜென்ம பூமி’ பிரச்சாரம்தான் அதற்கு முதல்முறையாக வெகுஜன பரப்பில் ஊடுருவுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது.

பாபர்மசூதி குறித்த ஆர்எஸ்எஸ்ஸின் கோரிக்கைக்கு நியாயமே இல்லை என்பதை வரலாற்றுப்பூர்வமான காரணங்களோடு நூரானி பட்டியலிடுகிறார்.

1. 19ஆம் நூற்றாண்டில் பாபர்மசூதி குறித்து ஒரு மஹாந்த் தொடர்ந்த வழக்கில் மசூதிக்கு வெளியே இருந்த ராம்ச புத்ரா எனப்படும் பகுதிதான் ராமர் பிறந்த இடம் எனக் கூறப்பட்டது; மசூதி இருக்குமிடம் என்று எப்போதுமே கூறப்படவில்லை.

2. ராமர் எங்கு பிறந்தார் என்று குறிப்பாகச் சொல்லமுடியாதென்றே பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டனர். இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றத்தினால் தீர்வு சொல்ல முடியாது என்றும் அவை கூறின.

3. திலகர், லஜபதிராய், காந்தி, மதன்மோஹன் மாளவியா போன்றோர் அந்தக் கோரிக்கையை வைக்கவே இல்லை.

ராமர்கோயில் இயக்கம் முழுக்க அரசியல் தன்மை கொண்டது. அதனை அத்வானியே பகிரங்கமாக பேசினார். “1985இல் இரண்டு பாராளுமன்ற இடங்களையே பெற்றிருந்த நாங்கள், 1991இல் 117 இடங்கள் என்கிற நிலையை அடைந்தோம். அயோத்திப் பிரச்சினையை நாங்கள் கையிலெடுத்ததே இதற்கு பிரதான காரணம்” என்றார்.

பாஜகவிற்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ்.தான் ராம ஜென்ம பூமி என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்தது. அது பலன் கொடுத்தது. அதனை பயன்படுத்தி வளர்ச்சி கண்டது. 38 முன்னணி அமைப்புகளின் வழியாக 50 லட்சம் பேரோடு தொடர்பினை உருவாக்கியது. தென்னிந்தியாவிலும் வளர்ச்சியடைந்தது.

ராமர்கோவிலைக் கட்டுவதற்காக 2,000க்கும் மேற்பட்ட ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ‘ராம்ஷிலா’ என்கிற பெயரில் பூஜையால் புனிதப்படுத்தப்பட்ட செங்கற்களை அயோத்தி நோக்கி சுமந்துசெல்லும் இந்த இயக்கத்தை விஎச்பி நடத்தியது. மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட இந்த இயக்கம் பரவலான கவனத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொடுத்தது. இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ். எழுச்சிபெற்றதும் பாஜகவின்மீது பிடிமானத்தை கூடுதலாக்கியது.

ஆர்.எஸ்.எஸ்., செயல்பாட்டுமுறை இதுதான்… முதலில் அது இந்துக்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது; பிறகு அதைப் பயன்படுத்தி அவர்கள் மேலாதிக்கம் பெறவேண்டும் என்கிற உணர்வைத் தூண்டுகிறது. வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட ‘கொடுமைகளுக்கு’ பழிதீர்க்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து உணர்ச்சியை கிளப்பியது.

இவ்வாறு அது மேற்கொண்ட அரசியல் விளையாட்டுகளின் உயிர்ப்பலி ஏராளம். இந்தப் பலிகள் 1993இல் இன்னும் அதிகரித்தன. 1990இல் நடந்த கலவரங்களில் 693 பேர் கொல்லப்பட்டதாகவும், 2773 பேர் காயமடைந்ததாகவும், மத்திய உள்துறை விபரங்கள் காட்டின.

.எம்.எஸ் செய்த எச்சரிக்கை

காங்கிரஸ் பலவீனமடைந்தபோது, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது சிபிஐ(எம்) முன்வைத்த காலப்பொருத்தமான எச்சரிக்கையை இந்தநூல் எடுத்துக் காட்டுகிறது. சி.பி.ஐ.(எம்) பொதுச்செயலாளராகஇருந்த  இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய ஒரு விரிவான கட்டுரையை நூரானி மேற்கோள் காட்டுகிறார். 

அதில், “ஆர்எஸ்எஸ்- பாஜகவின் கருத்தாக்கங்களான இந்துத்துவம், இந்துராஷ்டிரம் ஆகியவை மார்க்சிஸ்ட்கட்சியும் பிற இடதுசாரி கட்சிகளும் ஆதரிக்கும் உறுதியான  மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மேலும், ஜனதாதளம், தேசியமுன்னணி போன்ற கூட்டமைப்புகளில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் தார்மீக அரசியல் மதிப்பீடுகளும், பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் மதிப்பீடுகளுக்கு எதிரானவை. “எனவேதான் கம்யூனிஸ்டுகளான நாங்கள், ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற மதவாத, பிளவுசக்திகளுடனும், அவர்கள் எழுப்பும் மூன்று பிரச்சினைகள் (அரசியல்சட்டப்பிரிவு 370, பாபர்மசூதி, பொதுசிவில்சட்டம்) பற்றியும்  -அவர்களுடன் எந்தவித கூட்டணியையோ, தேர்தல் ஒப்பந்தத்தையோ அல்லது தொகுதி உடன்பாடுகளையோ செய்துகொள்வதனால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளில் இருக்கும் எங்கள் நண்பர்களை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த சக்திகளுடன் மதச்சார்பற்ற சக்திகள் ஒத்துப்போகவே முடியாது என்றும் சொல்கிறோம்.”

“இந்த இந்துப் பேரினவாத அமைப்புடன் கூட்டணி வைத்துக்கொள்வதோ அல்லது தொகுதிஉடன்பாடுகள் செய்துகொள்வதோ தேசஒற்றுமைக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு உடன்படுவது போன்றதாகும்” என இ.எம்.எஸ். எச்சரித்தார். பழமைக்குத் திரும்பும் ‘மீட்புவாதம்’ என்பது பெரும்பான்மையினரின் அடிப்படைவாதமென்றும் அதைச் சுமந்துசெல்லும் வாகனம் ஆர்எஸ்எஸ் என்கிற அரைப்பாசிச அமைப்பு என்றும் எழுதிய அவர், “எந்தவிதப் பதட்டத்திலும் தலையிட்டு அதனை மதக்கலவரமாக மாற்ற ஆர்எஸ்எஸ் தீவிரமாகச் செயல்படும்” என்றும் சுட்டிக் காட்டினார். பிஜேபியை தனியான ஒரு ஆளுங்கட்சியாகவோ அல்லது ஒரு கூட்டணிஅரசின் வலுமிக்க அங்கமாகவோ ஆக அனுமதிப்பது தேசத்தின் சிதைவின் தொடக்கமாக இருக்கும் என்றும் அவர் தெளிவாக எச்சரித்தார். இஎம்எஸ் அவர்களின் எச்சரிக்கையை  பலரும் ஏற்கவில்லை. இதுதான் ஆர்.எஸ்.எஸ்/பாஜக வளர்ச்சிக்கு சாதகமாக இருந்தது.

மதச்சார்பின்மைக்கான அவசியம்

     ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தியலை வீழ்த்துவதற்கு முக்கியமான ஆயுதம் ‘உறுதியான மதச்சார்பின்மையே’. இந்த கருத்தியல் வலிமை சி.பி.ஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளிடம் மட்டுமே இருந்தது என்கிறார் நூரானி. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் போன்ற அறிவுஜீவிகள், ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த புனைசுருட்டுக்களை எதிர்த்தார்கள். அவர்கள் ராமஜென்மபூமி என்கிற புனைவினை அம்பலப்படுத்தினார்கள்.  இந்தியப் பண்பின் மதச்சார்பற்ற அடித்தளத்தில் இருந்து எழுந்த எதிர்ப்பு இது.

     ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை அரசியல் களத்தில் எதிர்கொண்ட பிராந்திய கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பின்மை விசயத்தில் உறுதியற்று இயங்கினார்கள். முஸ்லிம் அமைப்புகள் சூழலை மிகமோசமாக கையாண்டார்கள். ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் முஸ்லிம் ‘செயல்’ குழுக்களை அமைத்தனர்.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு எதிராக ஒரு மதச்சார்பற்ற அணுகுமுறையும் தேசம்தழுவிய இயக்கமும்தான் தேவையாக இருந்தது. ஆனால் அந்த அமைப்பிற்கு  ‘உண்மையான சவால் ஏதும் ஏற்படவே இல்லை’ என்று இந்த நூல் கவலையுடன் பதிவு செய்கிறது.

சில விமர்சனங்கள்:

ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் பெருமுதலாளிகளுக்கும் இடையிலான உறவுகுறித்து இந்த நூலில் குறைவான தகவல்களே இருப்பது பெரும் குறையாகும். அதன் காரணமாக, இந்த நூல் ஒரு காலில் மட்டும் நடக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் இருந்தார்கள் என்பதை சில தனிநபர் சார்ந்த பிரச்சனையாகவே எழுத்தாளர் கருதுவதாக அய்யம் எழுகிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்து வந்தது. இப்போதும் அதன் வர்க்கச்சார்பு தொடர்கிறது என்ற மார்க்சிய புரிதல், இந்தச் சிக்கலை அவிழ்ப்பதற்கு அவசியமான ஒன்றாகும்.

பாஜக கடைப்பிடிக்க வேண்டிய ‘வெகுஜன’ அணுகுமுறை பற்றிய கருத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளிப்படுத்தி வந்த அதிருப்தி மற்றும் சமரசத்தை விளக்குவதற்கான ஏராளமான உழைப்பை நூல் ஆசிரியர் செலுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் தனக்கான வாகனங்களில் ஒன்றாகவே பாஜகவை உருவாக்கியது என்பதை அது நிறுவினாலும் சற்று குறைவான விபரங்களிலேயே அதனை சொல்லியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

‘ராமஜென்மபூமி’ இயக்கம் பற்றிய பகுதிகள் முக்கியமானவை. அதற்கு வெகுஜன ஆதரவு கிடைத்ததற்கான காரணங்களில் ஒன்று ஆளும் வர்க்கங்கள் கொடுத்த ஒத்துழைப்பு. அதனையும் வர்க்கக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்க வேண்டும்.

பாஜக/ஆர்.எஸ்.எஸ் வலுப்பட்ட காலத்தில் காங்கிரஸ் சரிவை எதிர்கொண்டு வந்தது. இதே காலகட்டத்தில் முன்னுக்கு வந்த பிற இயக்கங்களை பற்றி குறைவாகவே பேசுகிறார். விடுதலைக்குப்பின், காங்கிரசுக்கு மாற்றாக இடதுசாரி மாற்றுக் கொள்கைகள் எழுந்தன. மாநில கட்சிகள் முன்னுக்கு வந்தார்கள். சமூகநீதிக்கான முழக்கங்களும் எழுந்தன. 1980களுக்குப் பின் நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் தீவிரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.1991 ஆம் ஆண்டில் உலகமய கொள்கைகளை இந்தியா ஏற்றது. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று ஊடாடிய நிகழ்வுகள் என்பதால் அதற்காக ஒரு அத்தியாயம் எழுதப்பட்டிருந்தால், சிக்கலான இந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு பருந்துப்பார்வை கிடைத்திருக்கும்.



Leave a comment