மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு


நிலோத்பல் பாசு

1920ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று தாஷ்கெண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட நிகழ்வினைக் கொண்டாடும் வகையில் கட்சி மேற்கொண்ட ஓராண்டு கால கொண்டாட்டங்கள் இன்று நிறைவுபெறுகின்றன.  எனினும் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஜனநாயக, மதசார்பற்ற, சாதி, இனம், மதம், பொருளாதார அந்தஸ்து ஆகியவற்றை எல்லாம் கடந்து சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கும் குடிமக்களைக் கொண்ட ஒரு மக்கள் குடியரசாக இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றி அமைப்பது என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் இன்னமும் நிறைவேறாமலே நீடித்து வருகிறது. மிக மோசமான பின்னடைவுகளையும் அது சந்தித்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சமீப ஆண்டுகளில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்த அடிப்படைக் குறிக்கோள்களே கேள்விக்கு உரியவையாக மாறியுள்ளன. ஏற்றத்தாழ்வு, சுரண்டல், அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் மதத்தின் அடிப்படையில் நீர்த்துப் போவது, சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாரபட்சம் ஆகியவற்றை மிக மோசமான அளவில் நாம் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். இத்தகையதொரு பின்னணியில் விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கை நினைவு கூர்வதென்பது முக்கியமானதாக ஆகிறது. இன்று அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அரசியல் ரீதியான சுதந்திரம், குடிமக்களின் சமத்துவம் ஆகிய இந்தக் கருத்துக்களை நிலைநிறுத்துவதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னணி

பிரிட்டிஷ் ஆட்சியின் வரலாறும் அது நமது மக்களை கொடூரமாகச் சுரண்டியதுமே விடுதலைக்கான நமது போராட்டத்தை உந்தித் தள்ளியது. இந்திய மக்களின் விரிந்து பரந்த, பல்வேறு வகைப்பட்ட நிலைமைகளில் மக்களின் எண்ணிலடங்கா போராட்டங்களே நாடு தழுவிய அளவிலான விடுதலைப் போராட்டமாக உருவெடுக்க வழிவகுத்தன. இந்தப் போராட்டங்கள் ஒவ்வொன்றின் உடனடிக் காரணமாக இருந்தது பிரிட்டிஷ் பேரரசினை நிலைத்து நிற்கச் செய்துவந்த முக்கிய செயலான கொள்ளையும் பறிமுதலுமே என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்த வேண்டியது பொருத்தமானதாக இருக்கும்.

இந்தக் காலனிய சுரண்டலுக்கு எதிரான முதலாவது அணிதிரட்டப்பட்ட வெளிப்பாடு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த இந்திய வீரர்களின் எழுச்சியில் வெளிப்பட்டது. இந்த எழுச்சி தொடங்கிய 1857 மே 10லிருந்து 1957 செப்டெம்பர் 20 அன்று மீண்டும் தில்லியை கைப்பற்றுவதற்கு பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு நான்கு மாதங்கள் பிடித்தன. ஆனால் கிளர்ந்து எழுந்த வீரர்களின் மீது மீண்டும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இந்த எழுச்சியின் பிடியில் இருந்த வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை மீண்டும் கைப்பற்றவும் அவர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆயிற்று.

காலனிய வரலாறு குறித்து எழுதப்பட்ட பெரும்பாலான எழுத்துக்கள் இந்தக் கலகத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவே முயற்சித்தன. எனினும் ஒரு சில எழுத்துக்கள் அப்போதிருந்த சூழலை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டின. இந்த எழுச்சிக்கான உடனடி தூண்டுதல் இந்திய சிற்றரசர்கள் ஆளும் பகுதிகளில் தங்களது ஆட்சியதிகாரத்தை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதிகளிடம் இழந்து நின்றவர்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரிடையே நிலவிய அதிருப்தி, இந்திய வீரர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பேரழிவை எதிர்கொண்டு வந்த பெருந்திரளான சாதாரண உழைக்கும் மக்கள் ஆகியோர் ஒன்று திரண்டு கிளர்ந்து எழுந்ததே ஆகும்.

நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட கிளர்ச்சியை ‘சிப்பாய் கலகம்’ என்று குறைத்து மதிப்பிட்டு, மக்களின் பங்கினை குறைத்துக் காட்டவும் முயற்சித்த பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் முயற்சிகளை மறுதலிக்கும் வகையில் இந்தக் கலகத்தை ‘இந்து-முஸ்லீம்களின் நாடுதழுவிய எழுச்சி’ என்று கார்ல் மார்க்ஸ் வகைப்படுத்தியது மட்டுமின்றி, “உண்மையில் ராணுவத்தில் ஏற்பட்ட எழுச்சி என்பது நாடு தழுவிய ஓர் எழுச்சியே” என்றும் குறிப்பிட்டார்.

இந்த எழுச்சியினால் ஏற்பட்ட மிகப் பெரும் தாக்கத்தைப் போலவே, அது நீடித்து நிற்கத்  தவறியதற்கான பாடங்களும் அதே அளவிற்கு மிகவும் ஆழமானவை. நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்ட இந்திய சிற்றரசர்கள் பலரும், பெரும் ஜமீன்தாரர்களும் பிரிட்டிஷாரின் பக்கத்தில் உறுதியாக நின்றனர். இதனை அங்கீகரித்த வகையில் அன்றைய கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு வெளிப்படையாகவே இவ்வாறு குறிப்பிட்டார்: “ அவர்கள் (சிற்றரசர்கள்) மட்டும் இந்தப் புயலின்போது தடுப்பணைகளாகச் செயல்படாமல் இருந்திருந்தால் இந்தப் பெருவெள்ளப் பேரலையில் நாங்கள் ஒரேயடியாக அடித்துச் செல்லப்பட்டிருப்போம்.”

இதற்கு பிரிட்டிஷாரின் எதிர்வினையானது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு பாடத்தை வலியுறுத்தியது: இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டமாகத்தான் இருக்க வேண்டும். பெரும் எண்ணிக்கையிலான விவசாய மக்களை விவசாய நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரட்டாமல், விடுதலைக்கான இயக்கம் எப்போதுமே வெற்றி பெறாது.

பிரிட்டிஷாரும் 1857 எழுச்சியில் தகுந்த பாடத்தைக் கற்றுக் கொண்டனர். இந்துக்கள், முஸ்லீம்கள், சிற்றரசர்கள் ஆகிய பிரிவினரை பொதுவானதொரு நோக்கம் உள்ளவர்களாக நீடிக்க அனுமதித்தால், பிரிட்டிஷ் ஆட்சியை நிலைத்துநிற்கச் செய்ய முடியாது என்பதே அந்தப் பாடமாகும். அக்காலத்திய சம்பவங்களை தொகுத்தளித்த பிரிட்டிஷ்காரரான தாமஸ் லோவே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:  “ பசுவை கொன்று  அதன் இறைச்சியை உண்பவர்களும், பசுவை வணங்குபவர்களும், பன்றியை வெறுப்பவர்களும், பன்றி இறைச்சியை உண்பவர்களும் ஒன்று சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும்!” இயற்கையாகவே இந்த முடிவுதான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ‘பிரித்து ஆளும்’ சூழ்ச்சியை தீவிரமாகச் செயல்படுத்தக் காரணமாக இருந்தது.

விடுதலைப் போராட்டத்தில் தங்களது பங்கினை வரையறுக்கும்போது கம்யூனிஸ்டுகள் இந்தப் பாடங்களை நன்கு உள்வாங்கிக் கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க ஆண்டுகள்

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வெடித்தெழுந்த இந்திய மக்களின் உள்ளூர் அளவிலான போராட்டங்கள் மற்றும் அதன் பல்வேறு நீரோட்டங்களையும் உள்வாங்கிக் கொள்வதில் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்தபோதிலும், அதற்கு உடனடியான ஊக்கம் அளித்தது மகத்தான அக்டோபர் புரட்சியின் வெற்றி என்பது மிகத் தெளிவான உண்மையாகும். குறிப்பாக, காலனியம் பற்றிய தனது கொள்கையின்மூலம் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்குவதற்கு வழிவகுத்தார். இந்தியாவில் மட்டுமின்றி, மற்ற இடங்களிலும் தொடக்கத்தில் புரட்சியாளர்கள் சிறு சிறு குழுக்களின் வடிவத்தில் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் குடியேறி மார்க்சியத்தை தழுவிக் கொண்டவர்கள் இதில் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதுபற்றி முசாஃபர் அகமது குறிப்பிட்டார்: “ வெளிநாட்டில் நிறுவப்பட்ட கட்சி ஸ்தாபனத்தின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகும்.” 1922-23ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளின் மீது திணிக்கப்பட்ட பெஷாவர் கம்யூனிஸ்ட் சதிவழக்கிலிருந்து இந்த உண்மை மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேரில் ஒன்பது பேர் கட்சியின் வெளிநாட்டுக் கிளையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்த இளம் கட்சியின்மீது பெஷாவர் சதிவழக்கு (1922-23), கான்பூர் சதிவழக்கு (1924), அரசுக்கு மோசமான இகழ்ச்சியைப் பெற்றுத் தந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான 31 தலைவர்கள் தண்டனை பெற்ற, மீரட் சதிவழக்கு (1929) ஆகியவற்றிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எத்தகைய அதிர்ச்சியை கொடுத்தது என்பதை நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

எனினும் பின்னாளில் என்ன நடக்கவிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், புதிதாகப் பிறந்த அந்தக் கட்சி இந்திய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற துடிப்புடன் 1921ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான விடுதலைக்கான தீர்மானம் ஒன்றை முன்வைத்தது. கட்சியின் சார்பில் இத்தீர்மானத்தை முன்வைத்த மவுலானா ஹஸ்ரத் மோஹானி, சுவாமி குமரானந்த் ஆகியோர் விடுதலைப் போராட்டத்தின் மிக உயிரோட்டமான எதிர்பார்ப்புகளை எடுத்துக் கூறினர். முழுமையான விடுதலை என்ற இந்தத் தீர்மானம் இறுதியில் 1929ஆம் ஆண்டில்தான் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மக்களுடனான தொடர்புகள்: விவசாய – தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அகமதாபாத் மாநாட்டில் கம்யூனிஸ்டுகள் இத்தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாக, எம். என். ராய், அபானி முகர்ஜி ஆகிய இருவரும் மாநாட்டிற்கு வெளிப்படையான  ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். காங்கிரஸ் கட்சியிடம் அக்கடிதம் இவ்வாறு கோரியிருந்தது: “ தொழிற்சங்கங்களின் குறைந்தபட்சக் கோரிக்கைகளை உங்களது சொந்தக் கோரிக்கைகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்; விவசாய சங்கங்களின் திட்டத்தை உங்களது சொந்தத் திட்டமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது எவ்விதமான தடைகளும் தடுத்து நிறுத்தமுடியாத ஒரு சக்தியாக காங்கிரஸ் மாறும். தங்களின் பொருளாயத நலன்களுக்காகப் போராடுகின்ற மக்கள் அனைவரின் தடுத்து நிறுத்தமுடியாத வலிமை அதன் பின்னே இருக்கும்.”

பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து விடுதலை பெறுவதற்கான ஒட்டுமொத்த தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கினை விரித்துக் கூறுவதாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இருந்தது. மிக விரிவான அளவில் தொழிலாளர்களையும், விவசாயிகளையும், சமூகரீதியான பாரபட்சம் மற்றும் சாதிய படிநிலை ஆகியவற்றால் பாதிப்பிற்கு ஆளானவர்களையும் சமூகப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களிலும், வர்க்கப் போராட்டங்களிலும் அணிதிரட்டுவதற்கு அழுத்தம் தரப்பட்டது. இது விடுதலைக்கு மட்டுமே ஆனதல்ல என்பது வெளிப்படை. மாறாக, சோஷலிசத்தை நிறுவுவது என்ற இறுதி நோக்கத்துடன் அவர்களது பொருளாயத நிலைமைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கானதாகும். சந்தேகத்திற்கு இடமின்றி இது தேசிய இயக்கத்தில் புதியதொரு போக்கே ஆகும்.

தொடக்க நாட்களிலிருந்தே இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வளர்த்தெடுப்பது என்ற பிரச்சனையில் கம்யூனிஸ்ட் கட்சி தலையீடு செய்தது. பிரிட்டிஷாரின் ஆதரவு பெற்ற, இந்து மகாசபா, முஸ்லீம் லீக் ஆகியவற்றால் பின்பற்றப்பட்டு வந்த வகுப்புவாதப் பிரிவினைகளை அது எதிர்த்துப் போராடியது.

கம்யூனிஸ்ட் தலையீட்டின் மற்றொரு அம்சம் சாதிய ஒடுக்குமுறை போன்ற சமூகப் பிரச்சனைகளில் தலையீடு செய்ததாகும். நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிகழ்ச்சிநிரலுடன் இதை இணைக்கவும் முயற்சிக்கப்பட்டது. இதன் நோக்கம் சாதிய அமைப்பினை சீர்திருத்துவதல்ல; மாறாக, அதனை முற்றிலுமாக அழித்தொழிப்பதே ஆகும்.

தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியினால் அணிதிரட்டப்பட்ட விவசாயிகள் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து நிற்க காங்கிரஸ் மறுத்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் மீது நம்பிக்கை இழந்தனர். இது தங்களின் சொந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் அணிதிரள வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடையே வளர்வதற்கும் வழிவகுத்தது. உள்ளூர் அளவிலும், பகுதி அளவிலும் போராட்டங்கள் வெடித்தெழுந்தன. அதிலும் குறிப்பாக,  இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய எழுச்சியின் ஒரு பகுதியாக அவை வேகமெடுத்தன.  வங்கத்தில் தேபகா போராட்டம், கேரளாவின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற விவசாயிகளின் எண்ணற்ற போராட்டங்கள், மகாராஷ்ட்ராவில் வார்லி ஆதிவாசி மக்களின் போராட்டம், பீகாரில் பக்ஷாத் போராட்டம், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு விவசாயிகளின் போராட்டம் என பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் போராட்டங்களில் அணிதிரண்டனர். இவை அனைத்திலுமே மிகப் பெரியதாக அமைந்திருந்தது நிஜாமின் ஆட்சிக்கு எதிராக தெலுங்கானாவில் ஒரு ஆயுதப் போராட்டம் என்ற வடிவத்தை மேற்கொண்ட விவசாயிகளின் எழுச்சியே ஆகும்.

அதேபோன்று கல்கத்தா, கான்பூர், பம்பாய், சென்னை போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரயில்வே, நிலக்கரி சுரங்கங்கள், சணல், பருத்தி, தேயிலைத் தோட்டங்கள் போன்ற மிக முக்கியமான தொழில் துறைகளிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது பம்பாயில் கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து பம்பாய் நகர தொழிலாளர்கள் அனைவரும் வீதிகளில் வந்திறங்கியது அரசியல் தன்மை கொண்ட ஒன்றாகவும் மாறியது.

பல்வேறு போக்குகள்: கத்தார் கட்சி, புரட்சிகர தேசிய வாதிகள், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி

அக்டோபர் புரட்சியின் மகத்தான தாக்கமும் சோவியத் யூனியனின் உருவாக்கமும் உழைக்கும் மக்களிடையே நம்பிக்கையை தோற்றுவித்தது. சமரசமற்ற வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு கொண்ட தீவிரமான இயக்கங்கள் மற்றும் அரசியல் வடிவங்களுக்கும் அது உத்வேகம் அளித்தது. கனடாவிலும் அமெரிக்காவிலும் சென்று குடியேறியவர்களை பெரிதும் உள்ளடக்கியிருந்த கத்தார் இயக்கமும் இவற்றில் அடங்கும். பெரும்பாலும் பஞ்சாபிலிருந்து சென்று இந்த நாடுகளில் குடியேறியவர்களின் போராட்டமானது இறுதியில் கத்தார் கட்சி தோன்றுவதற்கு வழிவகுத்தது. இந்தியாவிற்குத் திரும்பி வந்த பெரும்பாலான கத்தார் கட்சி உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கிக் கவரப்பட்டதோடு, பெருமளவில் விவசாய சங்கத்தின் மூலம் பணிகளில் ஈடுபட்டனர்.

இதேபோன்ற செயல்முறை தங்களது ரகசிய குழுக்களின் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக தனிப்பட்ட ஆயுதம் தாங்கிய செயல்களில் ஈடுபட்டு வந்த புரட்சிகர தேசியவாதிகளை கவர்ந்திழுத்தது. இதைத் தொடர்ந்து இத்தகைய புரட்சியாளர்கள் பெரும்பகுதியினர் கம்யூனிஸ்ட் கட்சியின் சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வினால் கவரப்பட்டனர். இந்தக் குழுக்களுக்கு உள்ளேயே தத்துவார்த்த ரீதியான போராட்டம் உருவானது. பகத்சிங் மற்றும் இதரர்களின் தலைமையிலான இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு ராணுவம் இந்தப் போராட்டத்தை சிறப்பாக வெளிக் கொண்டு வந்தது. அதேபோன்று வங்காளம், பஞ்சாப், வட இந்தியாவின் சில பகுதிகளில் செயல்பட்டு வந்த குழுக்களும் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி கவர்ந்திழுக்கப்ப்ட்டன.

மற்றொரு முக்கியமான நிகழ்வு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உருவானதாகும். தேசிய இயக்கத்தின் மிக முக்கியமான அரசியல் அமைப்பு என்ற வகையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருந்த போதிலும், காங்கிரஸ் தலைமையின் சமரசங்களால் நம்பிக்கையிழந்து போன காங்கிரஸின் சில பிரிவினர் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கினர். அதேநேரத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான உழைக்கும் மக்களை விடுதலைப் போராட்டத்தில் அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை அதிகமான அளவில் உணர்ந்திருந்த நிலையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியினர் கம்யூனிஸ்டுகளுக்கு நெருக்கமாக வந்தனர். எனினும் ஒரு அடிப்படையான வேறுபாட்டை இங்கு வலியுறுத்த வேண்டும். காங்கிரஸிற்குள் இருந்தபடியே செயல்பட்டு வந்த காங்கிரஸ் சோஷலிஸ்டுகள், காங்கிரஸ் கட்சியை உண்மையானதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வந்தனர். அதேநேரத்தில் கம்யூனிஸ்டுகளின் அடிப்படையான அணுகுமுறை என்பது காங்கிரஸ் கட்சியுடன் எந்தவித மோதலும் இன்றி, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான உழைக்கும் மக்களை சுயேச்சையானதொரு அரசியல் சக்தியாக உருமாற்றுவது என்பதாகவே இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்குள்ளும் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்டுகளிடம் இந்தப் போக்கு தொடர்ந்து இருந்து வந்தது. எனினும் இது இறுதியில் ஒரு பிளவிற்கு வழிவகுத்து, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் அங்கமாக மாறினர்.

தனது தனித்துவமான குறிக்கோளை தொடர்ந்து பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரித்தது. அதே நேரத்தில் இதர தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு கொண்ட அரசியல் அமைப்புகளோடு தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததன் மூலம் தேசத்தின் மீது பற்று கொண்ட விரிவான பகுதியினரை கவர்ந்திழுக்கவும் அதனால் முடிந்தது.

விரிவான அடித்தளத்துடன் வெகுஜன அமைப்புகள்

1920ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதனோடு கூடவே அதே ஆண்டில் தொழிற்சங்க அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸும் (ஏஐடியுசி) உருவானது. தொடக்க காலத்தில் ஒரு சில குறிப்பான சீர்திருத்தப் போக்குகள் அதில் நிலவிய போதிலும், தொழிற்சங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பானது விரிவான அடித்தளம் கொண்ட ஒரு தொழிற்சங்க மேடைக்கான வழியை உருவாக்கியது.

1930களில் அதிகரித்துக் கொண்டே வந்த வெகுஜன போராட்டங்களின் பின்னணியில் விரிவான அடித்தளம் கொண்ட அகில இந்திய அமைப்புகளுக்கான அவசியமும் தேவையும் உணரப்பட்டது. இறுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் 1936ஆம் ஆண்டில் உருவாயின. மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த மேடைகளும் அமைப்புகளும் தங்களுக்குத் தொடர்பான துறைகளில் இருந்த அறிவுசார் பிரிவினரை இணைப்பதற்கான கருவிகளாக மாறின. இந்த அமைப்புகள் கம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கப்பட்டதோடு, குறிப்பிட்ட வர்க்கத்தின் மற்றும் சாதாரண மக்களின் பிரச்சனைகளை கையிலெடுக்க மக்களை ஒன்றிணைக்கும் வலுவான கருவிகளாகவும் உருமாற்றம் பெற்றன. விரிவான மக்கள் பிரிவினரை அணிதிரட்டியதன் மூலம் விடுதலைக்கான இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் பங்கினையும் இவை ஆற்றின. மேலும் பிரிட்டிஷ் அரசின் உந்துதலால் உருவான ‘பிரித்தாளும்’ கொள்கைக்கு எதிராகவும் இவை திறம்படச் செயல்பட்டன.

போருக்குப் பிந்தைய எழுச்சி

இரண்டாம் உலகப் பெரும்போர் நடைபெற்று வந்த காலத்தில் (1939-45), இக்காலப்பகுதியில் கட்சியின் மீதான தடை தொடர்ந்து நீடித்து வந்த போதிலும், தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்களிடையே கட்சி மேற்கொண்ட  தொடர்ச்சியான பணிகளின் விளைவாக கட்சி ஸ்தாபனம் குறிப்பிட்ட சில பகுதிகளில் விரிவடைந்தது.  போருக்குப் பின்பு வெடித்தெழுந்த வெகுஜன போராட்டங்களின் எழுச்சியில் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்த நடவடிக்கைகள், விவசாயப் போராட்டங்கள், மாணவர்களின் கிளர்ச்சி ஆகியவற்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் மிக முக்கியமான பங்கினை வகித்தன. இந்திய கப்பற்படை மாலுமிகளின் எழுச்சிக்கு ஆதரவாகவும், (நேதாஜியின்) இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்றும், கட்சி மேற்கொண்ட அரசியல் ரீதியான தலையீடு கம்யூனிஸ்டுகளின் முக்கியமான பங்கினை எடுத்துக் காட்டின. அதிகாரத்தை இந்தியர்களிடம் ஒப்படைத்து விட்டு பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறும் செயல்முறையையும் அது விரைவுபடுத்தியது.

மக்களின் ஒற்றுமையை நோக்கி… ஜனநாயக, மதசார்பற்ற குடியரசைப் பாதுகாக்க…

இன்று நாம் எதிர்கொண்டுவரும் அச்சுறுத்தல் என்பது இதுவரை நாம் கண்டிராத தன்மை கொண்டதாகும். கம்யூனிஸ்டுகளுக்கு உத்வேகமூட்டிய தொலைநோக்கு, விடுதலைப் போராட்டத்தின்போது அவர்களின் பங்கேற்பும், எண்ணிலடங்காத் தியாகங்களும் நவீனமான, முன்னோக்கிய பார்வை கொண்ட, ஜனநாயக ரீதியான, மதசார்பற்றதொரு குடியரசாக தன்னைத் தகவமைத்துக் கொண்ட சுதந்திரமானதொரு இந்தியாவிற்காகவே ஆகும். துரதிர்ஷ்டவசமாக, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் எந்தவிதமான பங்கையும் வகித்திராத, அதிகபட்சமாகப் போனால், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் போராட்டத்தின்போது மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க மட்டுமே முயற்சித்து வந்த அதே சக்திகள், இப்போது தங்களது திட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் மிகப்பெரும் தடையாக இருப்பதைக் காண்கின்றனர். எனவே, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் நாம் வகித்த பங்கினையும், அந்த மகத்தான பாரம்பரியத்தில் இருந்து நேரடியாக வெளிப்படும் அரசியல் அமைப்புச் சட்ட மதிப்பீடுகளையும் உறுதியுடன் பாதுகாப்பதே கம்யூனிஸ்ட் கட்சி உருவான நூற்றாண்டினை கொண்டாடுவதை அர்த்தமுள்ளதாகச் செய்யும்.

அக்டோபர் 18, 2020

பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் வெளியானது

தமிழில்: வீ. பா. கணேசன்



Leave a comment