மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்


முசாபர் அகமது

(“இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்” என்ற கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு: “தீக்கதிர்” நாளிதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டது. 1976 ஆம் ஆண்டு புதுமை புத்தகாலயம் சார்பில் நூல் வடிவில் வெளியிடப்பட்டது – சி.பி.ஐ(எம்) கருவூலம்)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925 டிசம்பரில்தான் ஸ்தாபிக்கப்ட்டது என்று 1959ல் கட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கருதுகிறது. “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தினம் 1920 அக்டோபர்-17” என்று கட்சியின் மத்தியக்குழு அறிவிக்கிறது. எப்படியெனில், அன்றுதான் சோவியத் நாட்டிலுள்ள தாஷ்கண்டில் ஒன்று கூடிய இந்தியப் புரட்சிவாதிகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தார்கள். அன்று முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், கட்சியையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பமானது.

ரஷ்யப் புரட்சியின் எதிரொலி

1917இல் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி நடந்தது. இந்தப் புரட்சியை பற்றி ஏகாதிபத்திய உலகம் ஏராளமான அவதூறுகளைப் பரப்பியது. எடுத்துக்காட்டாக, ரஷ்யாவில் பெண்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டனர் என்றும், குழந்தைகள் தாயிடமிருந்து பறிக்கப்பட்டனர் என்றும், இது போன்ற வேறு பல அவதூறுகளும் ஏகாதிபத்திய உலகத்தினால் பரப்பப்பட்டன. இப்படிப்பட்ட அவதூறுகள் அள்ளி வீசப்பட்டாலும் ரஷ்யப் புரட்சியின் எதிரொலி நமது நாட்டிலும் ஒலிக்கவே செய்தது.

கிலாபாத் இயக்கம்

மேற்கு வங்கத்தில் பயங்கரவாதப் புரட்சி இயக்கத்தின் ஆரம்ப முன்னேற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்ட போதிலும், அந்த ஆண்டில் ஏனைய பல இயக்கங்கள் வீறு கொண்டு முன்னேறின. கிலாபாத் இயக்கமும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் இயக்கமும் இங்கு குறிப்பிடத்தக்கவை. ஏராளமான பெரிய கூட்டங்களும், ஊர்வலங்களும், தடைசெய்யப்பட்டன.

அக்காலத்தில் கல்கத்தாவில் எல்லா கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் நான் கலந்து கொள்வது வழக்கம். 1918 முதல் பல இடங்களிலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் வெடித்தெழ ஆரம்பித்தன. 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. கொஞ்ச காலம் வரை நாட்டில் பெரும் கண்டன இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தன. 1919இல் சீர்திருத்தச்சட்டம் (The Reforms Act) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்தும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.

1920இல் அரசியலையே எனது வாழ்க்கையாக்கிக் கொள்ளுவது என முடிவு செய்தேன். அதற்கு முன்னர் நான் ஒரு இலக்கியக் கழகத்தின் முழு நேர ஊழியனாகப் பணிசெய்து வந்தேன். இந்தக் கழகத்தின் மூலம் 49ஆம் வங்க ரெஜிமெண்டின் (பட்டாளத்தின் ) ஹவில்தாராக இருந்த காஸி நஸ்ருல் இஸ்லாமை தெரிந்து கொண்டேன். அவர் பின்னர் ஒரு கவிஞராக நாடு முழுவதும் பிரபலமடைந்தார். வங்க ரெஜிமெண்ட் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அவர் என்னுடன் சேர்ந்து கல்கத்தாவில் வசிக்க ஆரம்பித்தார்.

‘நவ யுக்’ ஏடு

ஏ.கே பஸலுல் ஹக் என்பவர் அன்று ஓர் இடதுசாரித் தலைவராக அறிமுகமானார். அவர் வங்கத்தில் ஒரு பிரசுரம் கொண்டுவரத் தீர்மானித்தார். அதற்கு நஸ்ருல் இஸ்லாமும், நானும் பொறுப்பேற்றுக் கொண்டோம். எங்களது கூட்டு ஆசிரியர் குழுவின் சார்பில் ‘நவ யுக்’ என்னும் மாலை நாள் இதழ் வெளிவந்தது. நஸ்ருல் இஸ்லாமின் கனல் பறக்கும் எழுத்து வண்ணத்தினால் முதல் நாளிலிருந்தே பத்திரிக்கை பிரசித்தி பெற்றது. பெரும்பாலும் வழக்கமாகத் தலையங்கங்களை நான்தான் எழுதுவேன்.

‘நவ யுக்’ பத்திரிக்கையானது பிற வங்கப் பத்திரிக்கையிடமிருந்து வேறுபட்ட தன்மையுடையதாக இருந்தது. காரணம் அது தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகியோரைப் பற்றிய செய்திகளைக் கொண்டிருந்தது. திரு. பஸலுல் ஹக் (இடதுசாரி தலைவர் ) இதைத் தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. இந்தச் சிறப்பு அம்சத்தை ஊக்கப்படுத்தவும் செய்தார்.

உணர்ச்சிமயமானவை

என் நண்பர் ஒருவர் கூறினார் “வங்கப் பத்திரிக்கைகள் முழுமையாகவே உணர்ச்சிமயமானவை. நீங்கள் பத்திரிக்கையின் கொஞ்ச இடத்தை  சாதாரண மக்களைப்பற்றி – குறிப்பாக தொழிலாளர்களை, விவசாயிகளைப் பற்றி எழுதுவதற்கு ஒதுக்கி வையுங்கள்”

நான் அவரது வேண்டுதலுக்கு முற்றிலும் உடன்பட்டேன். ஏற்கனவே கப்பலில் வேலை செய்பவர்களுக்கும், விசைப்படகுகளில் வேலை செய்பவர்களுக்குமிடையே என் பணியை ஆரம்பித்திருந்தேன்.

நான் பிறந்த இடத்தில் வங்காள விரிகுடாவிலுள்ள ‘ஸான்ட்விப்’ என்னும் தீவில்தான் நான் பிறந்தேன்) வசிக்கும் மக்களில் அதிகமான பேர் வழக்கமாக கப்பலில் வேலை செய்பவர்கள்தாம். இப்பொழுதும் அங்குள்ள ஏராளமான மக்கள் கப்பலில் வேலை செய்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் கப்பல் ஊழியர்களைப் பற்றி நான் அதிகமாக எழுதினேன். இவர்களின் பிரச்சனைகளுக்கு ‘நவ யுக்’ பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுத்தேன். இந்தப் பத்திரிகையில் எழுதுவதன் வாயிலாக மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தை நோக்கி கவரப்படுவேன் என்பதை அன்று நான் கனவில்கூட கருதவில்லை.

கம்யூனிஸ்ட் அகிலம்

1920இல் கூடிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸ், காலனி நாடுகள் பற்றிய லெனினது கோட்பாட்டை ஏற்றுக் கொண்டது.  அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் அகிலம் காலனி நாடுகளுடன் தொடர்பு கொள்ள முயன்றது.

ரஷ்யப் புரட்சி நடந்தது முதலே பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் மிக அதிக எச்சரிக்கையுடன் இருக்கத் துவங்கியது. இங்கும் ஏதாவது நடந்து விடுமோ என்று – குறைந்தது ஒரு கம்யூனிஸ்ட்கட்சியாவது உருவாகிவிடுமோ என்று-  இந்திய அரசாங்கம் அஞ்சியது. அதனால், அரசாங்கம் தனக்கு ஒரு மத்திய ரகசிய புலனாய்வுத் துறையைப் புதிதாக உருவாக்கியது. பல்வேறு பிரதேசங்களிலிருந்த அரசியல் ஊழியர்களின் செயல்களை இந்தப் புலனாய்வுத்துறை மிகக் கவனமாக கண்காணித்து வந்தது.

மத்திய இரகசியப் புலனாய்வுத்துறையின் உளவாளிகள் நாடெங்கும் பரப்பப்பட்டனர். இந்த உளவாளிகள் உளவு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குக் கூட அனுப்பப்பட்டனர். இப்படிப்பட்டதொரு சூழலில் எங்களில் சிலர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகக் கஷ்டமான பணிகளை நிறைவேற்றச்சென்றோம்.

இலட்சியம்

எங்களது இலட்சியம், இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிக்க வேண்டுமென்பதாக இருந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தினால் நான் உத்வேகமூட்டப்பட்டேன் என்பதை உறுதியுடன் சொல்லுகிறேன். கல்கத்தா, பம்பாய், லாகூர் ஆகிய இடங்களை மையமாகக்கொண்டு நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம்.

1921இல் பிரான்சிலும், சீனாவிலும் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுத்தவர்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் நாங்கள் மிகவும் குறைவானவர்களாக இருந்தோம். மிகக் குறைந்தபட்சம் எனது திறமையின்மை பற்றி முழுதும் உணர்ந்திருந்தேன்.  மார்க்சிசத்தைப் பற்றிய எனது ஞானம் ஆழமின்றி மேலோட்டமாக இருந்தது. அனுபவமில்லாத துறையில் நான் நுழைந்தபோது எனக்கிருந்த ஒரே கைமுதல் மக்களிடம் நான் பெற்றிருந்த நம்பிக்கையும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதல்களின் மீதான எனது நம்பிக்கையுமே என்பதை நான் உணர்ந்தேன்

என் கையில் பணமோ, ஜீவிதத்திற்கான வேறு மார்க்கமோ இல்லை. இப்படிப்பட்ட வேளையில் நான் மனமொடிந்து போகாமலிருந்ததற்கு முக்கிய காரணம் எனது மன வலிமைதான். அந்த மனவலிமை இல்லாமலிருந்திருந்தால் இன்று முப்பத்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் எங்கு போய்ச் சோந்திருப்பேன்! அதுபற்றி எண்ணும்போது நான் வியப்பில் மூழ்கிவிடுவேன்.

‘ஹிஜ்ரத்’ இயக்கம்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்காக கல்கத்தாவின் திட்டங்களைத் தயாரித்துக்கொண்டிருந்த சமயத்தில் கவிஞர் நஸ்ருல் இஸ்லாமும் அந்தப் பணியில் கலந்து கொண்டார். எனினும், அவர் இறுதியில்  கட்சியில் சேரவில்லை. ஆனால், அவர் எல்லா சமயங்களிலும் எங்கள் ஆதரவாளராக இருந்து வந்தார். பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட ‘லேபர் ஸ்வராஜ்’ என்ற கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராய் ஆனார் அவர்.

எனது பணிகளோடு இணைந்து முன்னேறிச் செல்ல விரும்புவதாக பயங்கரவாதப் புரட்சியாளர்கள் சிலர் என்னிடம் சொன்னார்கள். அந்த விஷயத்தில் தங்களது உதவியையும் தருவதாக அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அவர்களது நிலைப்பாட்டிற்கு எனது நிலைபாட்டோடு ஒருமைப்பாடு இல்லையென்பது பிறகு தெளிவானது.

1922இல் முதலில் அப்துல் ரசாக் கானும், அடுத்து அப்துல் ஹலீமும் என்னுடைய பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினர். ஒத்துழையாமை இயக்கம் நடந்த காலத்தில் ரசாக் கான் ஒருமுறையும், அப்துல் ஹலீம் மூன்று முறைகளும் சிறை தண்டனை ஏற்றனர்.

1922இல் வேறொருவரும் எங்கள் நண்பரானார். அவர் பெயர் குத்புதீன் அகமது. ஒரு காலத்தில் ‘அல் ஹிலால், அல் பிலால்’ ஆகியவற்றை நடத்துவதில் மௌலானா அப்துல்கலாம் ஆஸாத்தின் சக ஊழியராக இருந்தார். அக்காலத்தில், கல்கத்தாவில் மார்க்சிஸ்ட் இலக்கியங்கள் கிடைப்பது மிக மிக அரிதாக இருந்தது. அவை எங்கேனும் கிடைத்தால்கூட, அவற்றை வாங்க எங்களுக்கு யாதொரு வசதியுமில்லை. ஜனாப், குத்புதீன் ஏராளமான புத்தகங்கள் வாங்குவதையும், படிப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்துதான் நான் ஃப்லிப்ஸ் ரைஸர் எழுதிய ‘ரஷ்யப் புரட்சி பற்றிய எனது நினைவுகள்’ என்ற நூலை வாங்கிப் படித்தேன். ரஷ்யப் புரட்சி பற்றி நான் படித்த முதல் புத்தகம் அதுதான். 18 ஷில்லிங் விலையுள்ள அந்தப் புத்தகத்தை கொடுத்து வாங்க எங்களால் இயலவில்லை.

ஜனாப் குத்புதீனின் வீட்டு வாசல் எங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். பிறகு அவர் ‘லேபர் ஸ்வராஜ்’ என்ற மற்றொரு கட்சியின்  ஸ்தாபகரானார். இரண்டாவது உலகப் பெரும்போர் நடந்த காலத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1948 பிப்ரவரி1ம் தேதியன்று அவர் காலமானார்.

அந்தச் சமயத்தில் ஏனைய சிலரும் எங்களோடு சேர்ந்தனர். எல்லோரையும் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் இந்தக் கட்டுரை மிக அதிகம் நீண்டு விடும். ஆகவே, அதைச் செய்ய நான் துணியவில்லை.

பம்பாயைப் பற்றி குறிப்பிடும் போது ஸ்ரீபாத் அமிர்த டாங்கேயின் பெயரைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும். கல்லூரிப் புகுமுக வகுப்பில் படிக்கும்போது மாணவர் இயக்கத்தில் கலந்து கொண்டதால் அவர் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் காந்தியத் தத்துவத்தை விரும்பாததால், 1921லேயே “காந்தி வெர்சஸ் லெனின்” என்ற நூலொன்றை ஆங்கிலத்தில் எழுதினார். அது அந்தக் காலத்தில் செய்ய முடியாத பெருந்தீவிரச் செயலாக இருந்தது. 1922இல் அவர் “சோஷலிஸ்ட்” என்ற ஆங்கில வார இதழொன்றைத் துவக்கினார். இந்தப் பெயரில் வேறொரு இதழ் முன்னெப்போதும் வந்ததில்லை. டாங்கே தொழிலாளர்களுடன் என்னைக் காட்டிலும் அதிகத் தொடர்பு வைத்திருந்தார். பம்பாயிலிருந்த மற்றவர்களைப் பற்றி நான் பிறகு சொல்கிறேன்.

‘குலாம் ஹுசேன் லாகூரில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவர் ஓர் அரசாங்கக் கல்லூரியில் (பெஷாவரில் உள்ள இஸ்லாமியக் சுல்லூரியில்) பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஹுசேன், முகமத் அலியின் நண்பராக இருந்தார்.

ஒரு சமயம் லாகூர் மாணவர்கள் சிலர் புரட்சிப் பணிகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள இந்தியாவுக்கு வெளியே சென்றிருந்தார்கள். அக்குழுவில் முகமது அலியும் ஒருவர். ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் அவர் ரஷ்யாவுக்குச்சென்றார், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். குலாம் ஹு சேனை காபூலுக்கு அழைத்தவரும், அவருக்கு மார்கசிஸத்தின்பால் பற்று ஏற்பட செய்தவரும் அவர்தான்.

இறுதியில் குலாம் ஹுசேன் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்காக தம்முடைய அரசாங்க வேலையைத் துறந்தார். பின்னர் லாகூருக்குத் திரும்பினார். அங்கிருந்து அவர் “இன்குலாப்” என்ற உருது மாத இதழை ஆரம்பித்தார். பிரசித்தி பெற்ற தென்மேற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளரானார்.

கான்பூர் சிறையில்

1921இல் நான் கான்பூர் சிறையில்தான் முதலில் டாங்கேயைக் கண்டேன். எனினும், கடிதத்தின் வாயிலாக ஏற்கனவே அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன். ஆனால், குலாம் ஹுசேனை நான் ஒரு போதும் கண்டது இல்லை. அதுமட்டுமல்ல, கடிதத்தின் மூலம் கூட அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டதில்லை.

1922இல் சென்னையில் பழக்கம் வாய்ந்த வழக்கறிஞரான மலயாபுரம்  சிங்காரவேலு, தம்மை ஒரு கம்யூனிஸ்ட் என தாமாகவே அறிவித்துக்  கொண்டார். மார்க்சிஸ்ட் நூல்களைக் கொண்ட அவரது நூலகம் மிகப் பிரமாதமாக இருந்தது. அவர் தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.

இந்திய (கம்யூனிஸ்ட்) கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. அந்நிய நாட்டில்தான் என்பதை இங்குச் சுட்டிக்காட்டுகிறேன். 1920ஆம் ஆண்டின் நடுவில் ‘ஹிஜ்ரத்’ என்றழைக்கப்பட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கும், சக்தியும் கொண்ட ஓர் இயக்கம் சண்டீகரிலும், பஞ்சாபிலும் ஆரம்பமானது,

அடக்கு முறையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தன் நாட்டை விட்டு- தன் நண்பர்களை விட்டு வெளிநாடு செல்லுதல் என்பதே ‘ஹிஜ்ரத்’ என்னும் சொல்லின் பொருள். இந்த இயக்கத்தின் விளைவாக சுமார் 18 ஆயிரம் முஸ்லீம்கள் இந்தியாவை விட்டு ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றனர். பிறகு மக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதற்கான அனுமதியை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறுத்தது.

ஆப்கானிஸ்தான் இந்தியாவைக் காட்டிலும் பின் தங்கிய நாடாக  இருந்தது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் இந்தப் புதிய முயற்சியை இளைய முகாஜிர்மார்களும், (ஹிஜ்ரத் இயக்கத்தில் சேர்ந்தவர்களும்) விரும்பவில்லை. தாங்கள் துருக்கிக்குச் சென்று யுத்தத்தில் துருக்கி பக்கம் சேரப் போவதாக அவர்கள் நிர்ப்பந்திக்க ஆரம்பித்தனர். கடைசியில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

இந்த இளைஞர்கள் இந்துகுஷ் கணவாயைக் கடந்து திர்மீஸை (இப்போது இந்தப் பிரதேசம் தாஜிகஸ்தானில் இருக்கிறது) அடைந்தனர். அங்கிருந்து அவர்கள் படகு மூலம் அமுதாரியைக் கடக்கும் பொழுது டாக்மென் இனத்தைச் சேர்ந்த சிலர் அவர்களைத் தாக்கினர். இவர்களுக்குப் பிரிட்டிஷ் காரர்களிடமிருந்து பணமும், ஆயுதங்களும் கிடைப்பது வழக்கம்.

செம்படையினர் காப்பாற்றினர்

இந்தத் தாக்குதல் நடக்கும்போது செம்படை அங்கு வந்து சேர்ந்ததனால் இந்த முஸ்லீம் இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். முஸ்லிம்களான அவர்கள், முஸ்லீம்களான துருக்கியர்களால் தாக்கப்பட்டது அவர்களிடத்தில் பெரியதொரு பிரதிபலிப்பை உண்டாக்கியது. அதனால் அவர்கள் கிர்க்கியில் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிராக செம்படையுடன் சேர்ந்து ஆயுதமேந்திப் போராடினார்கள்.

பிறகு இந்த இளைஞர்களில் சிலர் தாஷ்கண்டிலிருக்கும் இராணுவப் பள்ளியில் சேர்ந்தனர். இந்தப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோதே, அவர்கள் மாஸ்கோவில் புதிதாக நிறுவப்பட்ட “ஈஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி” (கீழ்த்திசை பல்கலைக்கழகம்)யில் சேர்ந்தார்கள்.

அங்கு கொஞ்ச காலம் வரை படித்து பின்னர், மார்க்சிசமே தங்களது கொள்கையென உறுதிமொழி ஏற்றனர். அப்போது அவர்கள் அங்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர். அதற்குப் பிறகு “ஈஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி நீடித்திருந்தது வரை” இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கிளை அங்கு செயல்பட்டது. ஒரு சமயம் பஞ்சாபைச் சோத்த நமது நைனாசிங் அந்தக் கிளையின் செயலாளராகப் பணியாற்றினார்.

இந்தியாவுக்குத் திரும்புதல்

‘ஈஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி’ யில் ஒன்பது மாதங்கள் படித்த பின்னர் தங்களது சொந்த நாட்டுக்கு வருவதற்கும் அங்கு இயங்குவதற்கும் இந்திய தோழர்கள் விரும்பினர். அவர்களில் இருவர் இரான் நாட்டு வழியே இந்தியாவுக்குத் திரும்புவதில் வெற்றி பெற்றனர். மற்ற சிலரால் இந்தியாவுக்கு திரும்பி வருவதற்கான சரியான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பாமீர் வழியே இந்தியாவுக்குத் திரும்புவதற்காக ஆலோசித்தனர்.

அதன் விளைவாக, பாமீர் வரை அவர்களைக் கொண்டு சேர்க்க பாதுகாப்புக் குழு ஒன்றைக் கம்யூனிஸ்ட் அகிலம் அனுப்பி வைத்தது. இந்தியாவுக்கு உட்பட்டிருந்த சித்ரால் எனும் இடம் வரை அத்தோழர்களுடன் பாதுகாப்புக் குழுவினரும் வந்து சேர்ந்தனர். அங்கு அவர்களை இந்தியப் போலீஸ் கைது செய்தது. பிறகு அவர்கள் விசாரணைக் கைதிகளாக நீண்ட காலம் வரை பெஷாவர் சிறையிலிருந்தனர்.

பெஷாவர் சதிவழக்கும், தண்டனையும்

1923ஆம் ஆண்டில் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சிலருக்கு ஓராண்டு சிறையென்றும், இருவருக்கு பத்தாண்டுகள் கடுஞ்சிறையென்றும், ஒருவருக்குப் பத்தாண்டுகள் சிறையென்றும் தண்டனை விதிக்கப்பட்டது. பெஷாவர் சதிவழக்குத்தான் உண்மையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள்  மீதான முதலாவது சதிவழக்கு, எனினும், இந்தச் செய்தி அட்டோக்கு நதியின் இக்கரைக்கு வந்து சேரவில்லை. அக்காலத்தில் வடமேற்கு எல்லைப் பிரதேச நிலைமை அப்படி இருந்தது.

பெஷாவர் வழக்குக் கைதிகளில் – பின்னர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் மீர்அப்துல் மஜீத், பிரோஸ்தீன் மன்சூர், கூஹார் ரஹான் கான் ஆகியோர் ஆவர்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்கு இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்தியாவுக்கு வெளியிலும் நடத்திய முயற்சிகள்தாம் முதலில் சொல்லப்பட்டவை என்றாலும், 1925 டிசம்பருக்கு முன்பு கட்சியின் மத்தியக் கமிட்டி உருவாக்கப்படவில்லை.

கான்பூர் சதிவழக்கு

1923 மே மாதத்தில் கான்பூரில் சௌக்கத் உஸ்மானியும் (இவர் மாஸ்கோவிலிருந்து ஈரான் வழியாகத் திரும்பி வந்திருந்தார்) கல்கத்தாவில் நானும் கைது செய்யப்பட்டோம். சில நாட்களுக்குப்பிறகு லாகூரில் குலாம் ஹுசேனும் கைது செய்யப்பட்டார்.

வங்காளச் சிறைச்சட்டம் 1818ன்படி (1818வது ரெகுலேஷன் 111) எங்கள் மூவரையும் விசாரணையின்றி வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். 1923ஆம் ஆண்டு டிசம்பரில் நளினி குப்தாவையும் கைது செய்து விசாரணையில்லாமல் சிறையிலிட்டனர். அவர் எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினராக இருக்கவில்லை. என்றாலும், அவர் தம்மை ஒரு தேசியப் புரட்சிவாதியென்று அறிவித்துக் கொண்டார். அதிதீவிர செயல்களுடன் தாம் வைத்திருந்த பற்றின் காரணமாக, அவர் ஐரோப்பாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எங்களது செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார்.

இந்தியன் பீனல் கோடு, 121ஏ பிரிவின்படி இந்திய அரசாங்கத்திற்காக கான்பூர் மாவட்ட மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் 1924 மார்ச் மாதத்தில் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் பிரதிகளாக –

(1) எஸ் ஏ டாங்கே, (2) சௌக்கத் உஸ்மானி, (3) முசாபர் அகமது (4) நளினி குப்தா, (5) குலாம் ஹுசேன், (6) சிங்காரவேலர் (7) ராமச்சந்திரலால் சர்மா, (8) மனபேந்திர நாத் ராய் (எம்.என் ராய்) ஆகியோர் இருந்தனர்.

ஆரம்பத்தில் நால்வர் மட்டுமே கோர்ட்டில் ஆஜராக்கப்பட்டனர். சிங்காரவேலு செட்டியார் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரைக் கோர்ட்டுக்குக் கொண்டு வரவில்லை. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். குலாம் ஹுசேன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணைக்கு இரைஞ்சி தமது சுதந்திரத்தை விலைக்கு விற்றார்.

ராமச்சந்திரலால் சாமா பாண்டிச் சேரியில் இருந்ததனால், அவர் பிரெஞ்சு அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்தார். அதனால், அவரைக் கோர்ட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை. எம் என் ராய் ஐரோப்பாவில் இருந்தார். அதனால், அவரைக் கோர்ட்டுக்குக் கொண்டு வருவதென்ற பிரச்னையே எழவில்லை.

சோவியத் எதிர்ப்புக்காக

மத்திய இரகசிய புலனாய்வுத் துறையின் டைரக்டர் கானல் கேயின் வேண்டுகோளின்படி பத்திரிகைகள் இந்த வழக்கை கான்பூர் போல்ஷெவிக் சதிவழக்கு என்று விசேடமாகக் குறிப்பிட்டன. இதன் மூலம் சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத் தேவைக்காக சோவியத் ரஷ்யாவையும் உட்படுத்துவதென கேய் கருதினார்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, ஒருவரை அடிக்கடி பார்வையாளர் காலரியில் கண்டேன். அவரது பெயர் சத்யபக்தன். அது எவ்விதத்தில் பார்த்தாலும் அவரது தாய்-தந்தையர் இட்ட பெயராக இல்லை. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருக்கும் போது அவர் தமக்கு வைத்துக் கொண்ட பெயரே இது. ஒருவேளை, அங்கு அவருக்கு சத்தியத்துடன் ஏராளமான பரிசோதனைகள் நடந்திருக்க வேண்டும்.

இந்த வழக்கு பிறகு செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. ஜட்ஜ் ஒவ்வொருவருக்கும் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். இந்த ஜட்ஜ் எச் எல் ஹோமே என்பவர் ஒரு பிரசித்தி பெற்ற நபர். இவர்தான்  பிரசித்தி பெற்ற சௌரி சௌரா வழக்கில் 172 பேரைத் தூக்கிலிட்டுக் கொல்ல தீர்ப்பளித்தார்.

வெவ்வேறான நான்கு சிறைகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த எங்களது கழுத்திலும், காலிலும் இரும்புச் சங்கிலிகள் பிணைக்கப் பட்டிருந்தன. அக்காலத்தில் உத்திரப்பிரதேச சிறைகளில் அப்படிச் செய்வதுதான் வழக்கமாக இருந்தது.

புற உலகிலிருந்து எங்களை முற்றிலும் தனிமைப்படுத்தினர். ஒரு பக்கத்தில் இப்படியிருக்க, மறு பக்கத்தில் முதலில் சொல்லப்பட்ட சத்ய பகதன் என்பவர் தாம் ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியிருப்பதாகப் பத்திரிகைகளில் அறிவித்தார்.

ஒரு தடவை ராய்பரேலி மாவட்டச் சிறையில் நான் இரத்த வாந்தி எடுத்தேன். சரியான உணவு தேவையான அளவு கிடைக்காததினாலும் தங்கும் வசதி மோசமாக இருந்ததனாலும் ஏற்பட்ட ஆரோக்கியச் சீர்குலைவே இதற்குக் காரணம்.

சிறையிலிருக்கும் சிவில் சர்ஜன் என் உடல்நிலையைப் பற்றிக் குறிப்பிடும்போது என் உடல்நிலை சிறிதும் மோசமில்லை என்று சொன்னாலும், நான் படிப்படியாக பலவீனமடைந்தே வந்தேன். கடுங்குளிரில் வாடுவதினால் எனக்கு மிக அதிகம் தூக்கம் குறைந்து போனது.

இந்த நிலையிலிருந்த என்னை அல்மோரா மாவட்டச் சிறைக்கு மாற்றினர். விடுதலைக்காலம் முடிவதற்கு முன்னரே உடல்நிலை மோசமான காரணத்தால் இந்திய அரசாங்க உத்தரவுப்படி 1925ஆம் ஆண்டு செப்டம்பரில் என்னை விடுதலை செய்தனர்.

கான்பூர் மாநாட்டில்

சத்தியபக்தனின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நான் அங்கு பத்திரிகையில் முதன்முதலில் படித்தறிந்தேன். டிசம்பர் கடைசி வாரத்தில் கான்பூரில் ஒரு கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கவிருக்கிறதென்பதையும் பத்திரிக்கைகளில் படித்தேன். மாநாட்டில் தலைமை வகிப்பதற்காக, லண்டனிலிருக்கும் சபூர்ஜி சாக்லத்வாலாவைக் கேட்டுக் கொண்டனர். முதலில் மாநாட்டில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டதாகவும், கடைசியில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு அதற்கான அனுமதியை வழங்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

அல்மோராவில் இருந்த எனக்கு சத்தியபக்தன் ஒரு கடிதம் அனுப்பிபினார். சிறையிலிருந்து விடுதலையான என்னை அதில் வாழ்த்தியிருந்தார். கான்பூர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் என்னை அவர் கடிதத்தில் அழைத்திருந்தார்.

தன்னம்பிக்கை

அந்த வேளையில், நான் பெரும்பாலும் உடல்நலமடைந்திருந்தேன். அதுமட்டுமன்றி, அல்மோராவில் தட்பவெப்ப நிலை டிசம்பர் கடைசியில் தண்ணீரைப் பனிக்கட்டியாக்கும் நிலையை அடைந்திருந்தது. கான்பூரை அடைந்தபோது அங்கு எஸ்.வி காட்டே, கே.எல் ஜோக்லேகர், ஆர். எஸ் நிங்கார் ஆகியோர் முன்கூட்டியே வந்திருந்ததைக் கண்டேன். அவர்களைக் கண்டபோது எனக்குத் தன்னம்பிக்கை – கிட்டத்தட்ட மீண்டும் கிடைத்தது.

எப்படியெனில், சிறையில் இருந்தபோது இந்த மூவரைப் பற்றியும் டாங்கேயிடமிருந்து தெரிந்து கொண்டேன். கான்பூரில் அயோத்யா பிரசாத், ஜானகி பிரசாத், பாகர்ஹட்டா முதலிய ஏனைய சிலரையும் நான் முதன்முதலாக தெரிந்து கொண்டேன்.

கான்பூர் மாநாடு

கான்பூர் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக மௌலானா ஹஸ்ரத் மொகானியும், முக்கியத் தலைவராக சிங்காரவேலு செட்டியாரும் இருந்தனர். (எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, சிங்காரவேலு செட்டியார் கான்பூர் கோர்ட்டில் ஆஜரான போதிலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் விரும்பவில்லை. உண்மையில் அவருக்கு எதிராக அதிகமான சான்றுகள் இல்லை) 

கருத்து மோதல்

மாநாட்டின் ஆரம்பத்திலேயே எங்களது கருத்து, சத்தியபக்தனின் கருத்தோடு மோதியது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழக்கப்படி கட்சியின் பெயர், ”கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா” என இருக்க வேண்டுமென்று நாங்கள் கருதினோம். சத்யபக்தனோ தனக்குச் சர்வ தேசியத்தில் நம்பிக்கை இல்லை என்பதைத் தெரிவித்தார். தம்முடைய கட்சி இந்தியத் தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பது அவரது கருத்து.

நாங்கள் எங்கள் கருத்தில் ஊன்றி நின்றோம். சத்திய பக்தன் தம்முடைய காகிதங்களையும் ஃபைல்களையும் விட்டுவிட்டு மாநாட்டு இடத்தை விட்டே போய்விட்டார். அவர் தமது கட்சியில் 300க்கு மேலான உறுப்பினர்கள் இருப்பதாகச்சொன்னார். இவர்கள் யார் யார் என்பதை எங்களால் ஒருபோதும் அறிய முடியவில்லை. மாநாட்டுக்குப் பிறகு நான் ஒருபோதும் சத்யபக்தனைக் காணவில்லை. ஒருமுறை பம்பாயில் அவரை எஸ்.வி.காட்டே கண்டதாகக் கேள்விப்பட்டேன். தான் அரசியலிலிருந்து விலகிவிட்டதாக காட்டேயிடம் சத்யபக்தன் சொன்னாராம்.

மத்தியக் கமிட்டி உருவானது

பல்வேறு இடங்களிலுள்ள கம்யூனிஸ்டுகளை ஒன்று சேர்த்து நாங்கள் கான்பூரில் முதலாவதாக ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) யின் ஒரு மத்தியக் கமிட்டியை அமைத்தோம். மாநாடு பகிரங்கமாக நடந்தது. அதனால் மத்திய கமிட்டியும் பகிரங்கமாகவே உருவாக்கப்பட்டது.

இதன்பேரில் நாட்டிற்குள்ளும் வெளியிலுமிருந்து வந்த ஏராளமான விமாசனங்களை நாங்கள் எதிர்நோக்க நேர்ந்தது. இந்த விமாசனங்களுக்கு நாங்கள் தகுதி உடையவர்கள்தாம். ஆனால் எங்களுக்கு வேறுவழி கிடைக்கவில்லை என்பதையும் மறக்கக் கூடாது.

கான்பூர் மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டிருக்கவில்லையெனில் சத்யபக்தனின் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்காலத்தில் எங்களது நடவடிக்கைகளை பெருமளவில் தடுத்திருக்கும்.

கான்பூர் மாநாட்டைத் தொடர்ந்து கொஞ்சகாலம் வரை மௌலானா ஹஜரத் மொஹானி எங்களோடு சேர்ந்து நின்றார். அவர் பிரபலமான உருது கவிஞராகவும், சுதந்திரப்போராட்டத்தில் முன்னணி வீரராகவும் திகழ்ந்தார். பலமுறை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏராளமான கொடுமைகளையும் ஏற்றிருக்கிறார். காங்கிரசின் அலகாபாத் மாநாட்டில் முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தை அவர் சமர்ப்பித்தார்.

இந்தத் தீர்மானத்தைப் பிரதிநிதிகள் நிராகரித்தனர். இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பித்த காரணத்திற்காக அவர் மீது செஷன்ஸ் கோர்ட் விசாரணை நடத்தி அவருக்கு ஆயுள் முழுவதும் சிறையிலிருக்கும் தண்டனை விதித்தது. எனினும், பம்பாய் ஹைகோர்ட் அந்தத் தண்டனையை ரத்து செய்தது. அவர் 1927இல் கட்சியை விட்டு விலகி முஸ்லீம் லீகில் சேர்ந்தார். முஸ்லீம் லீகில் சேர்ந்ததை நாங்கள் ஆதரிக்கவில்லை. எனினும் பெருந்தலைவர்கள், 1928 ஜனவரியில் கல்கத்தாவில் கூடிய மாநாட்டில் கலந்து கொண்டனர்.

கூட்டுச் செயலாளர்கள்

கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியை உருவாக்கியபோது எஸ். வி. காட்டே, ஜானகி பிரசாத், பாகர் ஹட்டா ஆகியோர் அதன் கூட்டுச் செயலாளர்களாயினர். 1927இல் ஜானகி பிரசாத்தின் நடவடிக்கையின் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதற்குப் போதிய காரணங்களும் இருந்தன. தம்மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்படாது என்பதை உணர்ந்தபோது, ஜானகி பிரசாத் தாமாகவே எங்களிடமிருந்து போய்விட்டார்.

பொதுச் செயலாளர்

அதற்குப் பின்னர் எஸ். வி. காட்டே கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். 1929 மார்ச் 20 வரை அவர் இந்தப் பதவியில் நீடித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1926 முதல் 1929 ஜனவரி வரை மத்தியக் கமிட்டியின் ஏராளமான இரகசிய கூட்டங்கள் நடந்தன. சில ஆண்டுகளில் மத்தியக்கமிட்டி நான்கு முறை கூட கூடியிருக்கிறது. 1928 அக்டோபரில் பம்பாயில் கூட மத்தியக் கமிட்டி கூட்டத்தை ‘யுத்தக்குழு’ என்று எதற்காக மீரத் செஷன்ஸ் கோர்ட் ஜடஜ் குறிப்பிட்டாரென்பது எனக்குத் தெரியவில்லை. 1928இல் கட்சிக்காக ஓர் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

‘தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சி’

இங்கு, தொழிலாளர்கள், விவசாயிகள் கட்சியைப் பற்றி சிலவற்றை சொல்வது அவசியம். நான் 1923இல் கைது செய்யப்பட்ட பிறகு, 1926 ஜனவரி 2இல் கல்கத்தாவுக்குத் திரும்பினேன். நான் கல்கத்தாவுக்கு திரும்புவதற்கு முன்பு அங்கு ஒரு கட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்திய காங்கிரஸின் லேபர் ஸ்வராஜ் கட்சி என்ற பெயரால் அது அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தக் கட்சியின் சார்பில் ‘லங்கால்’ என்றொரு வார இதழ் வெளியிடப்பட்டது. இக்கட்சியின் முதலாவது இதழில் நஸ்ருல் இஸ்லாமின் பிரசித்தி பெற்ற ’சாம்யவாதி’ என்னும் கவிதையொன்று வெளியிடப்பட்டது. இந்தக் கவிதை ரஷ்ய மொழியில் கூட மொழி பெயர்க்கப்பட்டிருந்தது என்பதைக் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அந்த மொழிபெயர்ப்பைப் பார்த்ததில்லை.

நான்கு நண்பர்கள் முன் முயற்சி செய்ததுதான் “லேபர்  ஸ்வராஜ்’ கட்சி உருவாக்கப்பட்டது. இரண்டு நண்பர்களின் பெயர்களை ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஹேமந்தகுமார் சர்க்கார், சம்ஸுதீன் ஹுசேன் ஆகியோர் ஏனைய இருவர். கடைசியாகக் குறிப்பிட்ட நண்பர் அப்துல் ஹலமின் சகோதரர். இன்று நஸ்ருல் இஸ்லாமை  தவிர மற்ற எவரும் உயிருடன் இல்லை. அவர்கூட மூளை செயலற்ற நிலையை அடைந்து இறந்தது போன்ற நிலையில் வாழ்கிறார்.

1926 பிப்ரவரியில் கிருஷ்ணா நகரில் (நாடியா மாவட்டம்) விவசாயிகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் லேபர் ஸ்வராஜ் கட்சியின் பெயரை ‘பெஸண்ட்ஸ் அண்ட் ஒர்க்காஸ் பார்ட்டி’ (விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி) என மாற்றினர். இனிமேல் இந்திய தேசியக் காங்கிரஸின் கீழ் இக்கட்சி செயல்படாது என்பதுதான் இதன் பொருள்.

கிருஷ்ணாநகர் மாநாட்டில் விவசாயிகளின் பிரதிநிதிகள் அதிகம் பேர் வந்திருந்ததால் கட்சிப் பெயரின் ஆரம்பத்தில் ‘ஓர்க்கர்ஸ்’ என்பதைச் சேர்க்க முடியவில்லை. எனவேதான் ‘பெசண்ட்ஸ்’ என்பது முதலில் வந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற மாநாட்டில் இந்தப் பெயர் ’ஓர்க்கர்ஸ் அண்ட பெசண்ட்ஸ்’ என மாற்றப்பட்டது. படிப்படியாக நான் கட்சியின் ‘லங்கால்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் ஓர் உறுப்பினரானேன். இந்தச் சமயத்தில் பத்திரிக்கையின் பெயர் ‘கண வாணி’ என மாற்றப்பட்டது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்படவில்லை என்றாலும், அதன் பெயரில் வெளிப்படையாகச் செயல்படுவது கஷ்டமாகவே இருந்தது.

தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மாநாடு

கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றிய தீர்மானங்கள் உண்மையில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மூலம் செயல்படுத்தப்பட்டன. இந்தக் கட்சியின் துண்டுப் பிரசுரங்கள் அனைத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டிதான் தயாரித்தது.

வங்கத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியில் கம்யூனிஸ்ட்கள் அல்லாதவர்கள்தான் அதிகம் பேர். அதனால் எங்களது நடவடிக்கைகளுக்கு ஒரு கஷ்டமும் ஏற்படவில்லை. 1927ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே பம்பாயிலும் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி உருவாக்கப்பட்டுவிட்டது. எஸ். எஸ். மிராஜ்கர், கட்சியின் செயலாளராக இருந்தார். அந்த ஆண்டில் நடந்த அகில இந்தியத் தொழிற்சங்க மாநாட்டில் பஞ்சாப்பைச் சேர்ந்த சோகன் சிங் ஜோஷ், பாக்சிங் கனேடியன் ஆகியோருடன் எங்களுக்கு ஆரம்பப் பழக்கம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சோகன் சிங் ‘கீர்த்தி’ என்ற ஒரு மாத இதழ் ஆசிரியராக இருந்தார். குருமுகி லிபியில் பஞ்சாபி மொழியில் அந்த இதழ் வெளிவந்துகொண்டிருந்தது.

மாஸ்கோவில் உள்ள ‘கிழக்கத்திய உழைப்பாளர் பல்கலைக்கழக’ கத்திலிருந்து திரும்பி வந்த சந்தோக் சிங் என்பவர் இந்த இதழின் ஸ்தாபகர். அவர் க்ஷயரோகத்தினால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு இறுதியில் நோயினாலேயே மாணம் அடைந்தார். அவருடனோ அப்துல் மஜீத்துடனோ எங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை.

1924இல் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவர் லாகூரில் தம்முடைய பணியை ஆரம்பித்தார். பஞ்சாபில் பிரபல நௌஜவான் பாரத் சபையின் ஸ்தாபகர்களாக இருந்த மிகச் சிலருள் ஒருவராக அப்துல் மஜீத் இருந்தார்.

சோகன்சிங்குடன் நாங்கள் சில விவாதங்கள் நடத்தினோம். சம்பந்தப்பட்ட விவாதங்களின் பலனாக, 1927இல் பஞ்சாபில் கீர்த்தி-கிஸான் எனும் கட்சி உருவாக்கப்பட்டது. பஞ்சாபிலும் தொழிற் சங்கப் பணிகள் பரவிக் கொண்டிருந்தன என்பதைச் சொல்லத் தேவையில்லையல்லவா?

விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி

மீரத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதையொட்டி நானும் பிலிப்ஸ் ப்ராட்டும்1928 அகடோபரில் மாநாட்டுக்குச் சென்றோம். அப்துல் மஜீத், சோகன்சிங் ஜோஷ். பூரண சந்திர  ஜோஷி (பி.ஸி.ஜோஷி) ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு அச் சமயத்தில் அலகாபாத்தில் சட்டக் கல்லூரியில் பி. ஸி. ஜோஷி படித்துக் கொண்டிருந்தார். கடிதங்கள் மூலம் அவருடன் தொடர்பு கொள்ள என்னால் முடிந்தது. மீரத் மாநாட்டில்தான் நான் அவரை முதன் முதலில் கண்டேன்.

மீரத் மாநாட்டில் உத்திரப் பிரதேசத்திற்கும் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக பி.ஸி. ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டிசம்பர் மாதக் கடைசி வாரத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் அகில இந்திய மாநாட்டைக் கல்கத்தாவில் நடத்தவேண்டுமென பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் கட்சிகளை ஒன்றுசேர்த்து, ஓர் அகில இந்திய தொழிலாளர்கள் – விவசாயிகள் கட்சியை உருவாக்க வேண்டுமெனவும்-மாநாடு நடப்பதற்கு முன்னரே நாங்கள் முடிவு செய்திருந்தோம் அதற்குப் பின்னர் மாநாடு நடத்தி, அகில இந்தியக்கட்சி உருவாக்கப்பட்டது. சோகன்சிங் ஜோஷ் மாநாட்டின் தலைவராக இருந்தார்.

இந்த மாநாட்டின் சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி இரண்டு முறை கூடியது. ஒரு கூட்டம், மாநாடு நடந்து கொண்டிருந்தபோது நடந்தது. மற்றொரு கூட்டம் 1929 ஜனவரியின் ஆரம்பத்தில்-அதாவது மாநாட்டின் கடைசியில் கூடியது.

இரண்டாவது கூட்டத்தில் எனது பரிந்துரையின் பேரில் பி.ஸி. ஜோஷியும், சோகன்சிங் ஜோஷும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர் மத்தியிலிருந்து முதலாவதாக அதிகாரப் பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர் சோகன்சிங் ஜோஷ்தான். சந்தோக் சிங்கை கட்சியின் உறுப்பினராக மதிப்பிடுவதென்றால் சோகன்சிங்குக்கு இரண்டாவது இடம்தான் கிடைக்கும்.

பி.ஸி.ஜோஷியின் பெயரை ஓரிடத்திலும் எழுதக்கூடாதென்று தீர்மாணிக்கப்பட்டது. 1927-28இல் குறிப்பாக1928இல் நடந்த தொழிலாளர் போராட்டத்திற்குப்பிறகு அடக்குமுறையின் ஆபத்து உருவாகுமென்பது எங்களுக்குத் தோன்றியது. அதனால் இளைஞரான பி.ஸி ஜோஷியைப் பாதுகாப்பதற்காக அவரைப் பொறுத்தளவில் முதலில் சொல்லப்பட்டவாறு தீர்மானித்தோம். ஆனால் நாங்கள் எண்ணியவாறு அவரைப் பாதுகாக்க முடியவில்லை.

கல்கத்தாவில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மாநாடு நடந்துகொண்டிருந்தபோது, தோழர் கங்காதர் அதிகாரி ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். ஆறு ஆண்டு காலம் வரை அவர் ஜெர்மனியில் இருந்தார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் பௌதீக இரசாயனத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றபின், டாக்டர் அதிகாரி, கொஞ்சகாலம் அங்கு பணி செய்தார். அவர் ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததால் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டோம். மத்தியக்கமிட்டிதான் இதற்கான முடிவு செய்தது.

அதுவரை இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் அகிலத்துடன் அதிகாரபூர்வமாக இணைக்கப்படவில்லை. நாங்கள் விரும்பியிருந்தால் அது நடந்திருக்கும். கட்சி உறுப்பினர்கள் மிகக் குறைவானவர்களாக இருந்ததால் நாங்கள் அதற்குத் திட்டமிடவேயில்லை. எனினும் கம்யூனிஸ்ட் அகிலமானது தனது ஓர் அங்கம் என்ற நிலையில் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது காங்கிரஸின் நிர்வாகக் குழுக்கூட்டத்தில் எங்கள் கட்சியைச்சேர்ந்த உறுப்பினர்கள் இருவரை குழுவுக்கு மாற்றுப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிந்தோம். எங்களது மத்தியக் கமிட்டிக் கூட்டமும் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்தது. இந்தப் பிரதிநிதிகள் இருவரில் ஒருவரை கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழுவுக்கு அனுப்புவதென மத்தியக்கமிட்டி முடிவு செய்தது. ஆனால் இதைச் செய்வதற்கு முன்பே மீரத் சம்பவங்கள் எங்கள் மீது விழுந்தன.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் விமர்சனம்

தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மாநாட்டிற்கு கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழு ஒரு செய்தி அனுப்பியது. மாநாட்டின் ஆரம்பத்தில் இந்தச்செய்தி எங்களுக்குக் கிடைத்தது. செய்தியின் ஆரம்பத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு பகுதி அல்லவென்பது தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. இரண்டு வர்க்கங்களின் அடிப்படையில் ஒரு கட்சியை உருவாக்குவதற்கு எதிரான விமர்சனம் அதில் இருந்தது. அதனால் ஒரே வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டியதிருந்தது. அந்தச் சமயத்தில் இது குறித்து ஏதாவது விவாதிப்பதற்கு எங்களால் முடியவில்லை. ஏனெனில், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டிக் கூட்டம் அப்போதுதான் நடந்து முடிந்துவிட்டிருந்தது. எனினும் தனிப்பட்ட அளவில் எங்களில் பெரும்பாலானவர்களுக்கும் இந்த விமர்சனத்தின் பிரதான உள்ளடக்கம் என்னவென்பது புரிந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியும், மறக்கவொண்ணா மீரத் சதிவழக்கும்

1927ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பல பகுதிகளிலும்  தொழிலாளர்களின் போராட்டங்கள் துவங்கின. 1928இல் இந்தப் போராட்டங்கள் வலிமை பெற்று விரிந்தளவில் பற்றிப் படர்ந்தது.

கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மட்டுமல்ல; தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியின் உறுப்பினர்களும் பரந்த அளவில் உணர்வுபூர்வமாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். வேலை நிறுத்தக் கூட்டங்களில் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமல்ல; அரசியல் பிரச்சினைகளைப் பற்றியும் சொற்பொழிவுகள் நடந்தன

பம்பாயிலும், வங்கத்தில் சில இடங்களிலும் தொழிலாளர் மத்தியில் நமது தலைமை வலிமைப்படுத்தப்பட்டது. 1928இல் தொழிலாளர் போராட்டங்களின் விளைவினால் தொழிற்சங்க இயக்கம் போராட்ட வலிமை படைத்த புதியதொரு வடிவத்தைப் பெற்றது. இந்த இயக்கத்தின் தன்மை முற்றிலும் புதியதாக இருந்தது.

1923இல் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் வழியாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு வலிமை கொண்ட கட்சியாக ஆக்குவதற்கு ஏற்றதொரு மகத்தான சந்தர்ப்பம் கிட்டியது. தொழிலாளர்களிடையே இருந்த புரட்சிகரமான ஒரு பகுதியினர் கட்சியில் சேருவதற்கு இச்சந்தர்ப்பம் இடமளித்தது.

முதல் முழக்கம்

1928இல் நடந்த போராட்டத்திற்கு உழைக்கும் மக்களிடையில் பொதுவாக செல்வாக்கைப் பெறவும் முடிந்தது. அவர்களில் ஏராளமானவர்கள் கட்சிக்கு வருவதற்குத் தயாராயினர். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் எங்களைக் கடுமையாகத் தாக்குவதற்காக தனது ஆயுதங்களை கூர்மையாக்கிக் கொண்டிருந்தது. சட்ட மன்றத்தில் பொதுப் பாதுகாப்புச் சட்டம் வந்தபோது அதன் உட்பொருள் எங்களுக்குப் புரிந்தது

அந்தக் காலத்தில் தலைமறைவாகச் செயல்படுவதற்கு தேவையான யாதொரு ஏற்பாடும் எங்களிடம் இருக்கவில்லை. இக்காலத்தில்தான் பம்பாயில் எஸ்.வி தேஷ்பாண்டேயும் பி.டி.ரணதிவேயும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். ஒத்துழையாமை இயக்க நாட்களில் தேஷ்பாண்டே தம்முடைய சகஊழியர்களை ஈடுபடுத்தினார்.

பி.டி. ரணதிவே பல்கலைக்கழகத்தில் பெயர்பெற்ற மாணவராய் விளங்கினார். அவருக்கு எம் ஏ பொருளியலில் முதல் மார்க கிடைத்தது. டாகடர் காங்காதர் அதிகாரி, அவரது சிற்றன்னை மகன் ஆவார். டாக்டர் அதிகாரியிடமிருந்து உத்வேகம் பெற்ற ரணதிவே கம்யூனிஸ்ட் கட்சிக்கு கவரப்பட்டார்.

1929 பிப்ரவரியில் சைமன் கமிஷனுக்கு எதிராகப் பெரியதொரு ஊர்வலம் நடத்துவதற்கு நாங்கள் கல்கத்தாவில் இந்திய தேசியக் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தோம். எங்கள் சார்பாக பலவகை முழக்கங்களைக் கொண்ட அட்டைகள் ஊர்வலத்தில் தாங்கி வரப்பட்டன. இதுதான் அந்த ஊர்வலத்தில்  இருந்த ஒரு சிறப்பு:

“புரட்சி ஓங்குக !” இந்த முழக்கத்தைத்தான் அந்த ஊர்வலத்தில் நாங்கள் முதன் முறையாக ஒலித்தோம்.

முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தைக் காங்கிரஸின் அகமதாபாத் மாநாட்டில் சமர்ப்பித்த குற்றத்திற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் தனக்கு எதிராகக் குற்றஞ் சாட்டித் தொடுத்த வழக்கின் நடுவே, மௌலானா ஹஸ்ரத் மொஹானிதான் இந்த முழக்கத்தை இந்தியாவில் முதலாவதாக எழுப்பினாரெனச் சிலர் சொல்வதுண்டு.  

ஒருநாள் தமது அறிக்கையை அவர் எனக்கு வாசித்துக் காட்டினார். அந்த முழக்கம் அவரது அறிக்கையில் இருந்ததா என்பது இப்போது எனக்கு நினைவில்லை. அந்த முழக்கம் அவரது அறிக்கையில் இருந்ததென்றால், அதை இந்தியாவில் முதலாவதாக எழுப்பிய பெருமை அவரையே சேரும். இல்லையெனில், அந்த முழக்கத்தை இந்தியாவில் முதலாவதாக எழுப்பியவர்கள் நாங்கள் தான்.

இதற்குப் பிறகு கல்கத்தாவில் எங்களது கடைசி இயக்கம் கிளைவ் சணல் ஆலையில் நடத்திய வேலை நிறுத்தம்தான். திடீரென மறக்க முடியாத 1929 மார்ச் 20 வந்து சேர்ந்தது.

மீரத் சதிவழக்கு

உண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் 1929 மார்ச் 20.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து நாங்கள் எதிர்நோக்கியிருந்த ஆபத்தான தாக்குதல் முடிவில் வந்து சேர்ந்தது அன்றுதான். அன்றைய தினம் மீரத்தில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட்டின் வாரண்டின்படி, இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் 31 பேர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெஞ்சமின், ப்ரான்சிஸ், ப்ராட்லியையும், ப்லிப்ஸ் ஸ்ப்ராட்டுவும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கட்டளைப்படி எங்களுக்கு உதவி செய்ய வந்தவர்கள்.

முசாபர் அகமது, சாஸுல் ஹுடா, அயோத்யா பிரசாத், சோஹன் சிங் ஜோஷ், மீர்அப்துல் மஜீத், பூரணசந்திர ஜோசி, ஸ்ரீபாத் அமிர்த டாங்கே, சச்சிதானந்த விஷ்ணு காட்டே, கேசவுநில் ஜோகலேகர், சாந்தாராம் சவ்லா, ராமமிராஜ்கர், ரகுநாத் சிவராம் நிம்புகார், காங்காதர் மொரேஸ்வார் அதிகாரி, சௌகத் உஸ்மானி, ஆகியோர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர்.

பிரதிவாதிகளின் பட்டியலில் கடைசியாக மேலும் இருவர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் எச்.எல். ஹச்சின்ஸன் என்பவரும் ஒருவர். எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராய் இருக்கவில்லை. அமீர் ஹைதர் கான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராய் இருந்தார். அவரைக் கைது செய்ய முடியவில்லை.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் ராதாரமன் மித்ரா தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியில் சேருவதென்ற தமது ஆவலைத் தெரிவித்திருந்தார். சிபநாத் பானர்ஜியும். கிசோரிலால் கோஷூம் யாதொரு கட்சியிலும் உறுப்பினராக இருக்கவில்லை. எனினும் அவர்கள் எங்களது ஒரு நல்ல நண்பராக இருந்தனர். ஏனைய பிரதிவாதிகள் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியில் அங்கத்தினராயிருந்தனர்.

வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஓர் அறிக்கை வெளியிடுவதற்கான வாய்ப்பு பிரதிவாதிகளுக்குக் கிடைத்தது. தருகின்ற அறிக்கையானது, இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் நாடெங்கும் பரப்புவதற்கு ஏற்ற வகையிலுள்ள ஓர் அறிக்கையாக இருக்க வேண்டுமெனத் தீர்மானித்திருந்தோம்.

கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் மார்க்சிஸம் பயின்றது எங்கே?

கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கையில் ஒவ்வொரு பிரதிவாதியும் ஒவ்வொரு அறிக்கையைத் தந்தனர். தொழிலாளர்கள் – விவசாயிகள் கட்சியைச் சோந்த பலர் தாங்கள் கட்சியின் உறுப்பினர்களென்பதை ஒப்புக்கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகள், முன்னரே நிச்சயித்தபடி அறிக்கைகள் தந்தனர். தனித்தனியாக அறிக்கைகள் தருவதற்குப் பதிலாக அவர்கள் ஒரு கூட்டறிக்கையாகத் தந்தனர்.

நமது கட்சி உறுப்பினர்கள் இந்த அறிக்கையை வாசித்தார்களென்றால்-குறிப்பாக கூட்டறிக்கையை வாசித்தார்களென்றால் அவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் கட்சியின் உறுப்பினர்கள்தான் என்பதை கோர்ட்டில் ஒப்புக்கொண்டனர்.

தரணிகாந்த் கோஸ்வாமி, கோபேந்தர கிருஷ்ண சக்கரவர்த்தி, கோபால் பாசக் ராதாரமன் மித்ரா, ஆகியோர் மனச் சாட்சிப்படி தாங்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்பதை அறிவித்தனர். கட்சியின் ஆலோசனைப்படி பி.சி.ஜோஷியும் அத்தகையதொரு அறிக்கையை அளித்தார். அவ்வாறு அவர் அறிவிக்கக் காரணம், அவர் இந்திய கமயூனிஸ்ட் கட்சியில் ஓர் உறுப்பினர்தான் என்பதற்கு எவ்விடத்திலும் யாதொரு சான்றும் இருந்ததில்லை.

சௌதரி தரம்பீர் சிங், மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் விடுதலை செய்யப்பட்டார். சிவநாத் பானர்ஜியும், கிஸோரிலால் கோஷூம் செஷன்ஸ் கோர்ட் மூலம் விடுதலையாயினர் எஞ்சியவர்களில் சிலரை ஆயுள்காலம் முழுவதும் நாடுகடத்துவதற்கும், மற்ற சிலரை 12 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 8 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 4ஆண்டுகள் என சிறைத் தண்டனை அனுபவிக்கவும் கோர்ட் தீர்ப்பளித்தது.

செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன்பு 68 வயதான பழைய இஞ்சினியர் பண்டிராஜ் தேஜ்டி காலமானார். ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவர் புனாவுக்குச் சென்றிருந்தார். அவர் பம்பாயில் உள்ள தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் தலைவராக இருந்தார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டில் ‘கமிட்’ செய்யப்பட்ட பின்னர் அரசாங்தத் தரப்பு வக்கீல் லாங்போர்ட் ஜேம்ஸ் காலமானார்.

உலகத்தின் மிகப்பெரிய வழக்குகளில் ஒன்று

1929 மார்ச் 20-ம் தேதிதான் நாங்கள் கைது செய்யப்பட்டோம். 1933 ஜனவரி 16-ம் தேதியன்று செஷன்ஸ் ஜட்ஜ் தீர்ப்பை வாசித்தார். இந்த வழக்கிற்காக அச்சிடப்பட்ட காகிதங்கள் பத்தாயிரம் முழுப்பக்கங்கள் வரும்.  மீரத் சதிவழக்கு என்பது உலகத்தின் மிகப் பெரிய வழக்குகளில் ஒன்றாயிருந்தது.

செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை அறிவிப்பதற்குச் சற்று நேரத்திற்குமுன் சௌக்கத் உஷ்மானி கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதைத் தவிர வேறு யாதொரு வழியுமில்லை என்ற விதத்தில் நடந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆயுள் காலம் முழுவதும் நாடு கடத்தலும், ஆண்டுகள் பலவாக கடுஞ்சிறையும்.  12 ஆண்டுகால கடுஞ்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபிறகு நிம்ப்கரின்  பலவீனம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மீரத் சதிவழக்கின் கால கட்டத்திலிருந்துதான் கம்யூனிஸ்ட் கொள்கையும், கருத்தும் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டன. வங்காளச் சிறைகளிலும், தனிமைச் சிறைகளிலும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் மார்க்சிய இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்தனர்.

சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு அவர்களில் பலர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். 1929இல் எங்கள் மீதான வழக்குகள் ஆரம்பமானதற்குப் பிறகு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து எம்.என்.ராய் வெளியேற்றப்பட்டார்.

ஒருசமயம் அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிழக்குப் பிரிவின் தலைவராக இருந்தார். அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கான காரணம் என்னவென்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் அவரது நடவடிக்கையில் எனக்கு ஆட்சேபணை இருந்தது. அவரை வெளியேற்றியதற்கான காரணங்களில் ஒன்றாக எனது ஆட்சேபனையும் இருக்குமோ என்பது பற்றிய விவரம் கிடைப்பதற்கு எனக்கு எவ்வித சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை

கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து எதாவது ஒரு செயலில் ஈடுபடுவார் என்று நாங்கள் கருதியிருந்தோம். உண்மையில் அவர் அவ்வாறே செய்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் ‘புரட்சிக் குழு’ என்பதன் பேரில் அவர் இரகசியக் குறிப்புக்களை விநியோகிக்க ஆரம்பித்தார்.

மீரத் சதி வழக்கிற்குப் பிறகு

1930-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்துடன் இணைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் ‘புரட்சிக்குழு’வின் பேரில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதை எம்.என். ராய் நிறுத்திக் கொண்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கம்பூனிஸ்ட் அகிலத்தில் இணைப்புக் கிடைத்த சமயத்தில்தான் இந்தோ-சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலுக்கான நகல்திட்டம் பிரசுரிக்கப்பட்டது.

1930 டிசம்பர் 19ஆம் தேதியன்று நகல் திட்டம் ‘இன்டர் நேஷனல் ‘கரஸ்பான்டன்ஸ்’ என்ற பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது. பம்பாயைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு, அகில இந்திய கட்சி விஷயத்தில் ஏற்பட்ட பிளவு, கருத்து வேறுபாடுகள் ஆகியவை காரணமாக இந்தச்சமயத்தில் கம்யூனிஸ்ட் அகிலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்திருந்த இணைப்பை ரத்து செய்துவிட்டது.

கல்கத்தாவை சேர்ந்த தோழர்கள் (ஹலீம் உள்பட) கல்கத்தா கமிட்டி ஆஃப் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தாகுழு) என்னும் பெயரில் செயல்பட ஆரம்பித்தனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு விரிந்த கூட்டத்திலோ கம்யூனிஸ்ட் அகிலத்தின் மத்தியக்கமிட்டி கூட்டத்திலோ, கல்கத்தாவின் கமிட்டியை குறித்து ஸ்டாலின் குறிப்பிட்டார். எந்தக் கூட்டத்தில் என்பது எனக்குத் தெளிவாக நினைவில்லை

கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் அகில இந்திய வடிவம் தரவேண்டுமென கல்கத்தா கமிட்டி எழுப்பிய வேண்டுகோளுக்கு பம்பாயிலிருந்து யாதொரு பிரதிபலிப்பும் உண்டாகவில்லை. அப்போது அவர்கள் பல வழிகளின் மூலம் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு அறிக்கைகள் அனுப்பினர்.

1932ஆம் ஆண்டின் கடைசியில் ப்லிப்ஸ் ஸ்பாரட்டுக்கும், பெல் ப்ராட்டுக்கும் எனக்கும் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு அறிக்கை அனுப்புவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இந்த அறிக்கைகள் பயனளிப்பவையாக இருந்தன.

அடக்குமுறை கொடுமைகளுக்கிடையிலும் மீண்டும் கட்சியை புனரமைத்தல்

1932 மேமாதம் சீனா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்திய கமிட்டிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பகிரங்கக்கடிதம் அனுப்பின, அந்தக் கடிதத்தில் அக்கட்சிகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், நடவடிக்கை முறைகளை கடுமையாக விமர்சித்திருந்தன. நடவடிக்கைக்கான நகல் திட்டத்தின் அடிப்படையில் அகில இந்தியக் கட்சியை உருவாக்க நிர்பந்திக்கவும் செய்தன.

ஓராண்டுக்கு மேலான பின்னர்,1933 ஜூலை 16ஆம் தேதியன்று மீண்டும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கடிதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தது. இந்தக் கடிதத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனம் கிட்டத்தட்ட கடுமையாகவும் உறுதியாகவும் இருந்தது.

சோவியத், சீனக் கம்யூனிஸ்ட கட்சிகளின் நடவடிக்கைகளிலிருந்து பல உதாரணங்களைத் தந்து இந்தியாவில் ஓர் அகில இந்தியக் கட்சியை உருவாக்குவதற்கான தேவையை இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்குப் பல வழிகளிலும் விளக்கிட சீன கம்யூனிஸ்ட் கட்சி முயன்றது. தொடர்ந்து அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா கமிட்டியினுடைய நடவடிக்கைகளை வாழ்த்தவும் செய்தது. மேலும் பின்வருமாறு குறிப்பிடவும் செய்தது:

“எனவேதான். ஓர் அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென்ற அறைகூவலை விடாப்பிடியாக ஏற்றுக் கொண்டும், கட்சி வேலைகளை அகில இந்திய மட்டத்தில் விரிவுபடுத்த வேண்டிய தேவையைப் புரிந்து கொண்டும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படுகின்ற தேவையில்லாத கோஷ்டிப் பூசல்களை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டும், வலுவான, ஒருமைப்படுத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைத் தட்டியெழுப்பி, புதியதொரு அத்தியாயத்தை உருவாக வேண்டுமென வேண்டுகோள் விடுத்துக் கொண்டும்,  வரும் ‘கல்கத்தா கமிட்டி ஆப் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியாவை (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா குழுவை) நாங்கள் வாழ்த்துகிறோம்.

மீரத் சதிவழக்கில் எங்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட மோசமான தண்டனைக்கு எதிராக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தோம். 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று இந்த அப்பீலின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. எங்கள் மீதான தண்டனைகள் தளர்த்தப்பட்டன. டாங்கே, உஸ்மானி ஆகியோர் மீதும், என் மீதும் உள்ள தண்டனை 3 ஆண்டுகள் கடுஞ்சிறையாகத் தளர்த்தப்பட்டது.

பிலிபஸ் ஸ்ப்ராட்டின் மீதான தண்டனை 2 ஆண்டுகள் கடுஞ்சிறையாகவும் காட்டே, பென்பராட்லி மிராஜ்கர் ஜோகலேக்கர், நிம்ப்கார், சோகன்சிங் ஜோஷ், அப்துல் மஜீத், தரானி கோஸ்வாமி ஆகியோரின் மீதான தண்டனை 1 ஆண்டு கடுஞ்சிறையாகவும், கோபால் சகரவர்த்தி மீதான தண்டனை 7 மாதங்கள் கடுஞ்சிறையாகவும் தளர்த்தப்பட்டது. தேசாயி ஹச்சின்ஸன் ராமன்மித்ரா முதலிய 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

டாகடர் அதிகாரி, பி.ஸி ஜோஷி அயோத்யா பிரசாத், ஷாம்ஸுல் ஹூதா, கோபால் பாஸ்க் ஆகியோர் அதுவரை அனுபவித்த சிறைத் தண்டனையை (1933 ஆகஸ்ட் 30 வரை) அவர்களுக்கு தண்டனையாக வழங்கப்பட்டது. அதாவது அதே நாளில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பதே அதன் பொருள். ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் கல்கத்தா கமிட்டியின் உதவியுடன் மீண்டும் கட்சியை உருவாக்க முயன்றனர். பம்பாய் தோழர்கள் சிலர் இந்த முயற்சிக்கு வந்தனர். சிலர் வரவில்லை. இந்த முயற்சியின் பயனாக 1933 டிசம்பர் மாதத்தில் கட்சியின் ஒரு இரகசிய மாநாடு கல்கத்தாவில் நடந்தது. அந்த மாநாட்டில் கட்சிக்குப் புதியதொரு அரசியல் திட்டமும், அமைப்புச் சட்டமும் நிறைவேற்றப்பட்டன. புதிய மத்தியக் கமிட்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டது. டாக்டர் அதிகாரி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் செய்திகள் அடங்கிய அறிக்கையுடன் பென் பிராட்லி ஐரோப்பாவிற்குச் சென்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மறுபடியும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உறுப்பினரானது.

நடைமுறையில் சட்ட விரோதமாக இருந்தாலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை இந்திய அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக தடை செய்துவிட்டதாக ஒருபோதும் அறிவித்திருக்கவில்லை. மீரத் சதிவழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சட்ட விரோதமானதாக அறிவித்துள்ள ஓர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தினால் முடிந்தது. அதனால் 1934இல் கம்யூனிஸ்ட் சுட்சியை சட்ட விரோதமானது என அறிவிக்கும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தது.

கடைசியாக ஒன்று…

ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு நான் எனது கட்டுரையை முடித்து கொள்கிறேன். ஆர். பாமி தத்தும், பென் பிராட்லியும் சேர்ந்து ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக முன்னணி’ அறிக்கையை எழுதி உருவாக்குவதற்கு முன்னர், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினர்களாக இருந்ததில்லை என்று நமது தோழர்களில் பலர் கருதுகின்றனர். இந்தக் கருத்து தவறானதாகும். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முயன்றவர்கள் காங்கிரஸ் கட்சியிலும் இருந்திருக்கிறார்கள்.

1926க்கு முன்பு நான் மட்டுமே காங்கிரசில் உறுப்பினனாக இல்லாமலிருந்தேன். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியில் (1925இல் உருவாக்கப்பட்டது) இருந்த 3 உறுப்பினர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியிலும் உறுப்பினராயிருந்தனர். மீரத் சதிவழக்கின் பிரதிவாதிகளில் எழுவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்தவர்களே. இந்த எழுவரில் ஐவர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்கள்.

இந்திய தேசிய காங்கிரசுக்குள் நாட்டின் முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக மீண்டும் மீண்டும் போராடியது கம்யூனிஸ்ட் கட்சி. எல்லா சமயங்களிலும் அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. தவறான கருத்தின் அடிப்படையில் வரலாற்று ரீதியான பிசகு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருதித்தான் இந்த உண்மைகளை நான் இங்கு சுட்டிக் காட்டியிருக்கிறேன்.



Leave a comment