மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கொரோனா முன்களத்தில், கியூபாவின் தனிச் சிறப்பு!


  • ஜி. ஆனந்தன்

கியூபாவின் மீதான பொருளாதார முற்றுகையை அமெரிக்கா மேலும் மேலும் இறுக்கிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் உயிர் வாழவே முடியாத அளவிற்கு கொடும் பொருளாதார முற்றுகையை அமெரிக்கா தொடர்கிறது. டொனல்ட் டிரம்ப் அரசாங்கம் முன்பே அறிவித்த பொருளாதார முற்றுகைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது பைடன் நிர்வாகம். இதே பைடன் துணை அதிபராக இருந்த போது, ஒபாமா அரசு ஹவானாவுடனான தனது உறவை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. ஒபாமாவே ஹாவானாவிற்கு சென்றார். ஆனால், பைடன் அதிபரான பிறகு, டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து மேலும் மேலும் பொருளாதார முற்றுகையை அதிகரிக்கிறார். இது கடும் குற்றம் என்றாலும், அமெரிக்காவை கட்டுபடுத்த எந்த சர்வதேச அமைப்புகளும் இல்லை.

டிரம்ப் கியூபாவின் மீதான தடைகளை விதித்த பிறகு, உலகம் முழுவதும் கொரோனா தொற்று கொள்ளை நோயாக பரவியது. உலக நாடுகளுக்கெல்லாம் மனித உரிமை பற்றி வாய்கிழிய பேசும் அமெரிக்கா, அத்தகைய சிரமமான காலத்தில்கூட கியூபா மீதோ அல்லது ஈரான், சிரியா போன்ற நாடுகளின் மீதான பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான முறையில்கூட விலக்கிக் கொள்ள தயாராக இல்லை. உணவு எரிபொருள், கட்டுமானப் பொருட்கள், நவீன தொழிற்நுட்பம் என எதுவுமே கியூபாவை சென்றடைய முடியாமல் பொருளாதார முற்றுகை இட்டுள்ள அமெரிக்கா, கொரோனா தொற்று வந்தபோது அத்துடன் கியூபா மக்கள் அழியட்டும் என மருத்துவ சப்ளைகளுக்கும் தடை விதித்து தனது பிடியை மேலும் இறுக்கியிருந்தது.

கொரோனா தொற்றை பொறுத்தவரை யாரிடமும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. அது வெள்ளைத் தோலை பாதித்ததைப் போலவே, கருப்புத் தோலையும், மாநிறத் தோலையும், மஞ்சள் தோலையும் பாதித்தது. உலகின் பணக்கார நாடுகளை தாக்கிய அந்த கிருமி, ஏழை நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. எவ்வளவு பெரிய இராணுவம் வைத்திருந்த நாட்டையும் அது விட்டு வைக்கவில்லை. அப்படியொரு சமதர்மம். ஆனால் பாதிப்பிற்குப் பிறகு விளைவுகள் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடும். அதற்கு காரணம், அந்தந்த நாட்டின் அரசியல்-பொருளாதார நிலைமைகள். நாட்டு மக்களின் உயிரைவிட மருந்துக் கம்பெனிகளின் லாப வேட்கையே முக்கியம் என்றிருக்கும் அமெரிக்காவிலேயே உலகில் மிக அதிகமான மக்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்தனர். அந்த நாட்டில் பாதிப்பு ஏழைகளுக்கு அதிகமாகவும், பணக்காரர்களுக்கு மிகக் குறைவாகவும் இருந்தது.

அமெரிக்காவில் அனைத்துமே வியாபாரம் என்றாகிவிட்ட நிலையில், அரசு அந்த வியாபாரத்தில் தலையிடக் கூடாது என்ற நிலையில், அமெரிக்க காங்கிரசும் செனட்டும் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்கான அமைப்பாக மாற்றப்பட்ட நிலையில், மக்களை எப்படி அமெரிக்காவால் காப்பாற்ற முடியும்? உலகிலேயே மிகவும் பணக்கார நாடான அமெரிக்காவில் உலகிலேயே மிக மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது தற்செயலானது அல்ல. கொரோனா தொற்று ஏற்பட்டால் அதனை உறுதி செய்யும் ஆர்.டி.பிசிஆர் சோதனை இன்று வரை அமெரிக்காவில் எந்த மருத்துவமனையிலும் இலவசம் கிடையாது. ரேபிட் டெஸ்ட் கிட்கள் பைடன் நிர்வாகம் வந்த பிறகு இலவசமாக பள்ளிகளிலும், வீடுகளிலும் வழங்கப்பட்ட போதிலும்.

அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு ஏன்?

அமெரிக்காவில் மிக நவீன சிகிச்சை உபகரணங்கள் இருந்தும் உயிரிழப்புகள் அதிகமானதிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, மருத்துவம் முழுமையாக தனியார் மயமானதால், வசதி உள்ளவர்களே சிகிச்சை எடுக்க முடியும். ஏழைகள் நோய் பாதித்தாலும் வீட்டிலேயே இருந்து மடிந்தனர். சாதாரண நாட்களிலேயே இதுதான் நிலைமை என்றால், மாபெரும் தொற்று நோய் வந்தபோது நிலைமை படுமோசமானது. அடுத்த பிரச்சனையும், தனியார் மயத்தின் மற்றொரு விளைவுதான். முதலில் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, நகரத்தின் மக்கட் தொகைக்கு ஏற்ப அவசர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருந்தன. அவையனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்காது. இருப்பினும் இவ்வளவு மக்கட் தொகைக்கேற்ப படுக்கைகள் இருந்தால்தான், மருத்துவ அவசர நிலைகளை சமாளிக்க முடியும் என்ற அடிப்படையில் அவை இருந்தன. இப்படிப்பட்ட பெருந் தொற்று காலங்களில் அவை பயன்பட்டிருக்கும்.

ஆனால், அதற்கு முன் அவசர நிலை மருத்துவம் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியன தனியார் மயமானபிறகு, ஒரு படுக்கையால் எவ்வளவு லாபம் என்பதே அடிப்படையாக மாற்றப்பட்டது. ஒரு படுக்கை இருந்தது என்றால், அது சாதாரண காலங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதனால் எந்த லாபமும் இல்லையென்றால், அந்த படுக்கை அப்புறப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவசரகால தேவைக்காக இருந்த கூடுதல் படுக்கைகள் அப்புறப்படுத்தப்பட்டதால், கொரோனா தொற்று ஏற்பட்டபோது, ஒரே நேரத்தில் கூட்டமாக மக்கள் பாதிக்கப்பட, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான கட்டமைப்பு இன்றி பலரும் சாக வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் கொரோனா தொற்றிற்கு பல லட்சக் கணக்கானவர்கள் இறந்ததற்கு அங்கு கடைபிடிக்கப்படும் முதலாளித்துவ லாப வேட்கையே முழுமையான காரணமாகும்.

கியூபாவின் மருத்துவ சேவை

2020 ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது மேலே குறிப்பிட்ட நாடுகளைத் தவிர, கியூபா மருத்துவர்கள் பல நாடுகளில் மருத்துவ சேவையாற்றினர். கியூபாவில் ஹென்றி ரீவ் பிரிகேட் என்ற மருத்துவ பிரிவு உண்டு. ஒபாமா ஹவானா சென்றபோது அமைக்கப்பட்ட மருத்துவ சேனை இது. இந்தப் படையே ஆப்ரிக்காவிற்கு எபொலா வைரஸ் பரவியபோது சென்றது. கொரோனா தொற்று ஏற்பட்டபோது இந்த குழுவில் 593 மருத்துவ நிபுணர்கள் சூரிநாம், ஜமாய்க்கா, டெமினிக், பிலேஸ், செயின்ட் வின்சண்ட், செயிண்ட் கிட்ஸ், வெனிசுவேலா, நிகராகுவா மற்றும் அர்ஜென்டைனா ஆகிய பகுதிகளில் மருத்துவ சேவையை வழங்கிக் கொண்டிருந்தனர்.

கியூபா பற்றி ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட  பிம்பத்திற்கு மாறாக, கியூபாவின் சேவை மேற்கத்திய நாடுகளில் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்தாலி கொரோனா தொற்று ஏற்பட்டு முழு அடைப்பில் இருந்தபோது, கியூப மருத்துவர்கள் அங்கு சேவைக்காக சென்றது மேற்கத்திய உலகில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இத்தாலியின் லம்பார்டி பகுதியின் கிரிமா நகரில் 52 கியூபா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தினர். இதில் தீவிர சிகிச்சைக்கு 3 படுக்கைகள். இது குறித்து லம்பார்டி நகரின் உயர் சமூக நலத்துறை அதிகரி ஜூலியோ கல்லேரோ தெரிவிக்கையில், இது ஒரு குறியீடுதான். கிரிமா நகர மருத்துவமனை மிக மிக நெருக்கடியான நிலையில் திணறிக் கொண்டிருக்கிறது. அவசர நிலை சிகிச்சை பிரிவில் ஏற்கனவே நிரம்பியுள்ள நிலையில், மேலும் மேலும் நோயாளிகள் வருகையினால், மருத்துவர்களும், மருத்துவமனையும் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த உதவி கிடைத்துள்ளது என பாராட்டினார்.

ஸ்பெயின் நாட்டிற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே ஒரு சிறு நகரத்தின் பரப்பளவில் ஒரு நாடு உள்ளது. அதன் பெயர் அண்டோரா. இங்கும் கியூபா மருத்துவ சேவை குழுவினர் சென்றுள்ளனர். அமெரிக்கா இதர நாடுகளை கியூபா மருத்துவர்களை அனுமதிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்த பின்னணியில், அண்டோராவின் வெளியுறவு அமைச்சர், “எங்களுக்கு அமெரிக்காவின் நிலை பற்றி தெரியும். ஆனால் நாங்கள் ஒரு சுயாதிபத்தியம் உள்ள நாடு.  எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய யாரை தெரிவு செய்வது, யாருடன் உறவுகள் மேற்கொள்வது  என்ற முடிவுகளை எடுக்கும் உரிமை எங்களுக்குள்ளது” என்று அறிவித்தார்(அசோசியேட் பிரஸ்).

கியூபாவின் மருத்துவ சேவையைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, கியூபா மருத்துவ சேவையை இரண்டு விதமாக கொச்சைபடுத்தி வருகிறது. அவர்கள் மருத்துவ சேவை செய்வதன் மூலம், கம்யூனிச கொள்கைகளை பரப்புகிறார்கள் என்பது முதலாவது குற்றச்சாட்டு. இரண்டாவது, மிகவும் மோசமான தொற்றுகள் ஏற்படும் இடங்களில் தங்களின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி அவர்களின் உழைப்பை கியூபா அரசு சுரண்டுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை சமூக ஊடகத்தில்(டிவிட்டர்) செய்தியைப் பரப்பியது. தனது நாட்டில் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 15 டாலர் என்பதை நிர்ணயிக்க வக்கில்லாத அமெரிக்க அரசு, அமேசான்  கிட்டங்கிகளில் சிறுநீர் கழிக்க செல்லக்கூட அனுமதியில்லாமல், பாட்டில்களில் சிறுநீர் கழித்து பின்னர் அவற்றை சுத்தம் செய்து கொள்ளும் நிலையில் தொழிலாளர்களை வைத்துள்ள அமெரிக்கா, கியூபா மருத்துவர்களின் மகத்தான சேவையை கேவலப்படுத்துகிறது.

அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சில நாடுகளில் பணிபுரியும் கியூபா மருத்துவர்களை வெளியேற்றியும் உள்ளது. அதனை வெற்றியாகவும் கொண்டாடுகிறது. உதாரணமாக, பிரேசில் நாட்டில் டிரம்ப் போன்ற வலதுசாரி அடிமுட்டாளான பொல்சனரோ நீதிமன்ற தகிடுதத்தங்கள் மூலம் ஆட்சிக்கு வந்தார். அவர் அமெரிக்காவுடன் தனது நேசத்தையும், நெஞ்சமெல்லாம் பொங்கி வழியும் கம்யூனிச எதிர்ப்பும் கொண்டவர். தென் அமெரிக்க பகுதியில் கொரோனா தொற்றில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு, பிரேசில். அதற்கு காரணம் பொல்சனாரோ. அவர் கொரோனா தொற்று என்பதையே இன்றுவரை நம்பவில்லை. அது பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் மறுத்துவிட்டார். மேலும், மருத்துவமனைகளின் அவசரகால தேவைகளுக்கு அரசு சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. இந்த காரணங்களால் பிரேசில் நாட்டில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த சிகிச்சையும் பெற வழியின்று மடிந்து போயினர். மருத்துவமனைகளில் இடமும் இல்லாத நிலையில், மருத்துவர்களும் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்களின் தேவையைவிட குறைந்த எண்ணிக்கையிலே அங்கு மருத்துவர் இருந்தனர். கியூபா மருத்துவர்கள் அங்கு ஜோசப் லூலா டி சில்வா காலத்திலிருந்தே சேவை புரிந்து வந்தனர். அப்படி அங்கு ஏற்கனவே சேவையிலிருந்த கியூபா மருத்துவர்களை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க பிரேசில் வெளியேற்றியது. 

உலகம் முழுவதும் 65 நாடுகளில் சுமார் 30,000 கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்கள் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பல ஐ.நா. சபையின் சார்பில் நடைபெறுவது. சில குறிப்பிட்ட நாடுகளின் பேரில் நடைபெறுவது. ஆப்ரிக்கா கண்டத்தில், உலகமே அச்சப்படும் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது அந்தந்த நாட்டு மருத்துவர்களே சிகிச்சை அளிக்க அஞ்சியபோது, அஞ்சாமல் அங்கு சென்று மருத்துவ சேவையை மேற்கொண்டவர்கள் கியூபா நாட்டு மருத்துவ தூதர்கள். அந்த சேவையில் ஒரு கியூபா நாட்டு மருத்துவர்க்கு எபோலா தொற்று ஏற்பட்டு அவர் இறந்தார் என்றாலும், கியூபா தனது சேவையை தொடர்கின்றது.

கொரோனா தொற்றை கட்டுபடுத்துதல்

எல்லா நாடுகளைப் போல் கியூபாவிலும் கொரோனோ தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், கியூபா பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உபகரணங்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை. காரணம்  50 ஆண்டு கால அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை. அத்தகைய கடினமான சூழலில் அவர்கள் எவ்வாறு தொற்று பரவலை சமாளித்தனர் என்பதை அறிந்தால், கியூபா அரசு அமெரிக்கா சொல்வதைப் போல் எந்தளவுக்கு ‘மனிதாபிமானம்’ இல்லாத ஆட்சி என்பதன் “உண்மைத் தன்மையைப்” புரிந்து கொள்ளலாம்.

அதனை நாம் சொல்வதற்கு பதில், மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பு ஊடகங்கள் சொல்வதையே பார்க்கலாம். கியூபா கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர் கொண்ட விதத்தை மேற்கத்திய ஊடகங்களான, கார்டியன், சிஎன்பிசி, அசோசியேட் பிரஸ் ஆகியன சிலாகித்து எழுதியுள்ளன. அவை பெரும்பாலும் ஒரே மாதிரியிருந்தாலும், நாம் லண்டனிலிருந்து வெளிவரும் “கார்டியன்” பத்திரிக்கை எழுதுவதை பார்க்கலாம். கட்டுரையை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன்.

கார்டியன் பத்திரிக்கையின் வியப்பு

தலைப்பு என்ன தெரியுமா? “பணக்கார நாடுகளின் கோவிட் முயற்சிகளை, அவை ஏற்படுத்திய அளவீடுகளை கடந்து செல்லும்  கியூபாவின் தடுப்பூசி வெற்றிக் கதை”

ஜெனரல் மாக்சிமா கோமஸ் 19ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டு காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடியவர்களில் முக்கியமானவர். அவர் தெரிவித்த கருத்து, “கியூபர்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தவற விடுவார்கள்; அல்லது அதனை கடந்து சென்று கொண்டிருப்பார்கள்” என்றார்.

150 ஆண்டுகளுக்குப் பின் அது முதுமொழி போல் மெய்பிக்கப்பட்டுவிட்டது. கீழ்மட்ட நிலையில் உள்ள இந்த தீவு நாடு, தெரு விளக்குகளை எரியவிடுவதற்கே அல்லல்படும் இந்த நாடு, கோவிட்19 க்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய வளம் பொருந்திய நாடுகள் பலவற்றைவிட அதிகமான பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டது.

90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கட் தொகைக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது, கியூபாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  83 சதவீதம் பேர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கு மேல் மக்கட் தொகை கொண்ட நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட் மட்டுமே இந்தளவுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

“கியூபா மாஜிக்கல் ரியலிசத்தால் பீடிக்கப்பட்ட நாடு” என்கிறார் கனடாவின் டல்ஹவுசி பல்கலைக் கழகத்தில் லத்தீன் அமெரிக்க படிப்புகளுக்கான வருகைதரு பேராசிரியர் ஜான் கிரீக். “11 மில்லியன் மட்டுமே மக்கட் தொகை கொண்ட கியூபா, மிகவும் குறைவான வருவாய் உள்ள நாடு, பயோ டெக்னாலஜியில்  முன்னணி நாடு என்ற கருத்தை ஃபைசர் போன்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரால் கற்பனை செய்வது இயலாத காரியமாக இருக்கும்”.

இதர லத்தீன் அமெரிக்க நாடுகள் போல கியூபாவிற்கும் சர்வதேச சந்தையில் தடுப்பூசிகள் வாங்க வேண்டுமெனில் அது மிகவும் சிரமமான காரியம் என்பதை அறிந்தே வைத்திருந்தது. ஆகவே 2020 மார்ச் மாதத்தில், சுற்றுலா நின்று போனதாலும், வெறிகொண்ட அமெரிக்க பொருளாதார முற்றுகையாலும், அன்னிய செலவாணி கையிருப்பு படுபாதாளத்திற்கு சென்றபோது, கியூபா நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் பணிகளில் இறங்கினர்.

துணிந்து இறங்கிய அவர்களின் அந்த முயற்சி நல்ல பலன்களைக் கொடுத்தது: இந்த வசந்தத்தில் கியூபா உலகின் சின்னஞ்சிறு  நாடுகளில் முதன் முதலாக வெற்றிகரமாக தன்னுடைய சொந்த தடுப்பூசியை வளர்த்தெடுத்து அதனை உற்பத்தி செய்யும் நாடாக மாறியது.(சிவப்பு நிறம் கட்டுரையில் உள்ளது-மொ-ர்). அது தொடங்கியது முதல் பொது மருத்துவ சேவை தகர்ந்து கொண்டிருக்கிறது என்று கொண்டால்கூட, இதற்கு  போதுமான மனித சக்தி, அதற்கு தேவைப்படும் ஊசிகளை விரைவாக வெளியிட்டது.  அவர்கள் குழந்தைகளுக்குக்கூட தடுப்பூசி போட்டு விட்டனர். (அந்த நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவரவர் விருப்பம்).

இரண்டு தடுப்பூசிகளுமே 90 சதவீதத்திற்கு மேல் தடுக்கும் திறன் கொண்டவை.  கடந்த வசந்த காலத்தில் கியூபா அரசு நடத்திய மருத்துவமனை சோதனைகள் இதனை உறுதி செய்கின்றன. வெற்றிகரமாக தடுப்பூசி இயக்கத்தை நடத்தியதின் விளைவாக, கடந்த கோடையில் மேற்குலகத்தில் மிக அதிகமாக இருந்த தொற்று தற்போது மிகவும் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் ஒவ்வொரு வாரமும் நுற்றுக் கணக்கான கியூபர்கள் கோவிட்19 பாதித்து இறந்து கொண்டிருந்தனர். தற்போது 3 இறப்புகள் என்ற அளவில் உள்ளது.

தடுப்பூசி வெற்றி தனித்துவமாக பிரகாசிக்கிறது. ஏனெனில் இதர மருத்துவ துறைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பின்னணியில், இதனை பார்க்க வேண்டியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் பண வருவாய் பாதியாய் குறைந்து விட்ட நிலையில், ஆண்டி பாயடிக் மருந்துகள் மிகவும் அரிதாகிவிட்டன.  20 மாத்திரைகள் கொண்ட அமாக்சலின் மருந்து கருப்பு சந்தையில் விற்கப்படும் விலை ஒரு மாத குறைந்தபட்ச ஊதியத்திற்கு சமமாக உள்ளது. எலும்பு முறிவிற்கு கட்டுபோடும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் இல்லாமல் பல பிரதேசங்களில் மருத்துவர்கள் அட்டைகளை கொண்டு எலும்பு முறிவிற்கு கட்டுபோட வேண்டிய நிலையில் உள்ளனர்.

1959 புரட்சி முதலே கியூபர்கள் இத்தகைய பிரம்மாண்டமான கனவுகளை நடைமுறைப்படுத்துகின்றனர், சில சமயம் அவைகள் பைத்தியக்காரத் தனமாக இருக்கும்.  இருப்பினும் பெரும்பாலும், அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்” என்கிறார் ஹவானாவில் சட்டத் தொழில் புரிந்து வரும், கிரிகோரி பினியோவ்ஸ்கி.

பினியோவ்ஸ்கி மேலும் கூறுகையில், “இதற்கு முதன்மையான உதாரணம், சோவியத் யூனியன் தகர்ந்தபோது, ஃபிடல் காஸ்ட்ரோ பயோடெக் தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவெடுத்ததை கூறலாம். “நிதானமாக ஆலோசனை கூறும் எவருமே, 25 வருடங்கள் கழித்து பலனளிக்கும் ஒரு துறையில் முதலீடு செய்வதற்கு உகந்த நேரம் இதுவல்ல என எதிரான ஆலோசனையே வழங்கியிருப்பர். இப்போது நாங்கள் இங்கிருக்கிறோம்….. பயோடெக்கில் முதலீடு செய்தததின் விளைவாக உயிர்களை காப்பாற்றிக் கொண்டு”

“வேறு சில முயற்சிகள் நாடக பாணியில் தோல்வியில் முடிந்துள்ளன: 1970களில் பத்து மில்லியன் டன் கரும்பு விவசாயம் செய்து, அதன் மூலம் இதுவரை அறியப்படாத அளவிற்கு சர்க்கரை உற்பத்தி செய்து பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது என்பதாகும். ஆனால் கரும்பை அறுவடை செய்யவே இதர தொழிற்சாலைகளிலிருந்து நிரந்தர பணியாட்களை கொண்டு வர வேண்டியதாயிற்று, இது தொழிற்சாலைகளை முடக்கியது; பொருளாதாரத்தில் கடும் சீரழிவுகளை ஏற்படுத்தியது.

கடந்த வருடம் கியூபா அறுவடை செய்த கரும்பு 1959இல் அறுவடை செய்ததைவிட 7 மடங்கு குறைவு.

ஹால் கிளிப்பாக் இவர் கனடாவின் ராயல் மிலிட்டரி கல்லூரியில் வருகைதரு வரலாறு மற்றும் உத்திகள் துறை பேராசிரியர். இவர் கியூபாவை பற்றி தெரிவிக்கையில், ஒரு நாடாகப் பார்க்கும் போது மிகப் பெரிய விஷயங்களை நிறைவேற்றும் போக்கு காணப்படுகிறது, அதே சமயம் அன்றாட விஷயங்களில் படு மோசமாக இருக்கும் நிலையும் காணப்படுகிறது என்கிறார்.

“நாடு முழுவதையும் பத்தாண்டுகளுக்குள் மின்மயமாக்குவது, இரண்டரை ஆண்டுகளில், படிப்பின்மையைப் போக்குவது, மருத்துவ சர்வதேசியம் போன்றவைகள் பை த்தியக்காரத்தனமான திட்டங்களாகத்தான் தெரியும். ஆனால் அவையனைத்தும் நிறைவேற்றப்பட்டன” என்கிறார். இவ்வாறு கார்டியன் பத்திரிக்கை கோவிட்-19 சிகிச்சையில் கியூபாவின் வெற்றியை எழுதுகிறது.

கொரோனா தடுப்பூசி சாதனை

இன்றைய தேதி வரை கியூபாவின் அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் 4 கொரோனா தடுப்பூசிகளை தயாரித்துள்ளன. அவை மருத்துவ  சோதனைகளும் முடிந்து மக்களுக்கும் போடப்பட்டு வருகின்றன. கியூபாவில் உள்ள உலக சுகாதார மையம் அந்த நாட்டில் இதனை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

கியூபா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் சபரினா 1, சபரினா 2 மற்றும் அப்தலா ஆகியவை ஊசி மூலம் செலுத்தக் கூடிய புரத சத்து அடிப்படையிலான தடுப்பூசிகள். மாம்பிசா என்ற தடுப்பூசி உலகிலேயே மூக்கில் ஸ்பேரே அடித்துக் கொள்ளக் கூடிய ஒரே தடுப்பு மருந்து. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை இதர மூன்றாம் உலக நாடுகளுக்கு கொடுக்க மறுத்து வருகின்றன. அதே சமயம் அவற்றின் உற்பத்தியில் பெரும்பகுதியை ஜி-7 நாடுகளே தங்கள் கிட்டங்கிகளில் பதுக்கிக் கொள்கின்றன.

மேலும், அமெரிக்காவின் இரண்டு பெரிய தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் மடர்னா ஆகியவை எம் ஆர் என் ஏ வகையைச் சேர்ந்ததால், அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல, அங்கு பயன்படுத்தும் வரை பாதுகாக்க நீர் உறைநிலைக்கு கீழே 70 டிகிரி (-70 செல்சியஸ்) என்ற நிலைக்கே அதிகம் செலவிட வேண்டும். ஆனால் கியூபா நாட்டு தடுப்பூசிகள் குளிர்சாதனப் பெட்டிகளில் கொண்டுசெல்லும் வகையில் உள்ளது.

இந்த தடுப்பூசிகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உலக சுகாதார மையம் அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆனால், அங்கும் மேற்கத்திய நாடுகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, பைசர், மெடர்னா, அஸ்ட்ரா, ஜெனிக்கா போன்ற நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்ய கியூபாவின் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கவிடாமல் தடுத்து வருகின்றன. உலகில் வேறெந்த நாட்டின் திறனுக்கும் சற்றும் குறைவில்லாத கியூபா நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற தரத்துடன் இந்த ஆராய்ச்சி சாலைகள் இல்லை என்று சொட்டை சொல் சொல்லி இந்த தடுப்பூசிகளின் தடுக்கும் திறன் சிறப்பாக இருந்தும் அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கவிடாமல் தடுத்து வருகின்றன.

எய்ட்ஸ் நோய் கட்டுபடுத்துதல்

1980-90 கியூபாவிற்கு மிகவும் நெருக்கடியான கால கட்டம். கியூபர்கள் மூன்றொலொரு பங்கினர் தென் ஆப்ரிக்காவின் அங்கோலா விடுதலைப் போரில் பங்கேற்றனர். கரிபியன் தீவுப் பகுதிகளில் எய்ட்ஸ் நோய்ப் பரவல் மிக அதிகமாக இருந்தது. 1986இல் கியூபாவில் முதல் எய்ட்ஸ் நோயாளி உயிரிழக்கிறார். தொடர்ந்து கியூபாவின் மிகப் பெரிய மருத்துவ சவாலாக எய்ட்ஸ் நோய்ப் பரவல் இருந்தது. இந்த சமயத்தில் சோவியத் யூனியனும் வீழ்கிறது. கியூபாவின் பொருளாதாரத்திற்கு ஆண்டிற்கு சுமார் 5 பில்லியன் டாலர் அளவிற்கு மான்யங்களை வழங்கி வந்த சோவியத் வீழ்ந்தது ஒரு புறம். மற்றொரு புறம் சர்வதேச வணிகத்தில் ஈடுபடமுடியாதபடி அமெரிக்க பொருளாதார முற்றுகை என கியூபா பெரும் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் எய்ட்ஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அந்த தீவு நாட்டை அச்சுறுத்தியது. தென் ஆப்ரிக்காவிற்கு அடுத்தபடியாக மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் எய்ட்ஸ் நோயால் கரிபீயன் தீவுகளில் பீடிக்கப்பட்டிருந்தனர். ஹெச்ஐவி-எய்ட்ஸ் மருந்துக்கு கூட அமெரிக்க தடைவிதித்திருந்தது.

இந்த நிலையில் கியூபாவின் பயோ டெக்னாலஜி ஆய்வகங்கள், ஹெச்ஐவி கண்டறியும் சோதனைகளை உள்நாட்டிலேயே 1987ஆம் ஆண்டிலேயே தயாரித்தன. இதன் விளைவாக 1993ஆம் ஆண்டிற்குள் 12 மில்லியன் ஹெச்.ஐ.வி. சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தீவு நாட்டின் ஓரிணச் சேர்க்கை பிரிவினர் இந்த நோயால் மிகுந்த அளவில் பீடிக்கப்பட்டனர். அரசு செலவில் ஓரின சேர்க்கை பிரிவினருக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு எதிர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் ஆணுறைகள் அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டு, அவை இலவசமாக வழங்கப்பட்டன. அதேபோல் ஆண்டி வைரல் மருந்துகளும் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டன. தீவிர சிகிச்சைகள் மூலம் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  இத்தகைய தீவிர சிகிச்சைகள் நோய்ப் பரவலை கட்டுபடுத்த சோதனைகள் வாயிலாக எய்ட்ஸ் நோயை கட்டுபடுத்துவதில் கியூபா வரலாற்று சாதனை படைத்தது. உலகிலேயே தாயிலிருந்து கருவிற்கு ஹெச்ஐவி நோய்ப் பரவலை தடுக்க மருந்தும் சிகிச்சையும் கொண்ட ஒரே நாடு கியூபா மட்டுமே. 1990களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் இருநூறு என்ற அளவுக்கு அங்கு கட்டுக்குள் வைக்கப்பட்டது. அதே சமயம் கியூபாவைப் போன்ற மக்கட்தொகை கொண்ட நியூயார்க் நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,000 ஆக இருந்தது (மன்த்லி ரிவ்யூ, ஜூன் 1, 2020)

கியூபாவின் இதர தடுப்பூசிகள்: மெனின்ஜைட்டிஸ் -பி எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு 1985லேயே தடுப்பூசி கண்டுபிடித்த ஒரே நாடு கியூபா மட்டும்தான். பின்னர் மஞ்சள்காமாலை பி எனப்படும் ஹெப்படிட்டிஸ் பி வைரஸ் கிருமிக்கும், டெங்கே கிருமிக்கும் தடுப்பூசிகளை (2000க்கு முன்பே) கண்டுபிடித்த நாடு கியூபாவாகும்.

ஒரு புறத்தில் அமெரிக்காவில் மருத்துவத்தை தனியார்மயமாக்கிய பிறகு ஒரு மருத்துவ படுக்கையால் எந்தளவுக்கு லாபம் என்ற பார்வையும் அதற்கேற்ற நடைமுறைகளும் ஏற்பட்டபோது, அன்றாட வாழ்க்கையில்  மூன்று  வேளை உணவே கடும் தட்டுபாடான ஒரு நாட்டில், உலகில் வேறெங்கும் கிடைக்காத அளவிற்கு தடுப்பூசிகளும், சிகிச்சையும் கிடைப்பதை  சோசலிச பொருளாதாரத்தின் சாதனை என்பதைத் தவிர வேறெப்படி அழைக்க முடியும்?



Leave a comment