இந்துத்துவா இயக்கங்கள் பண்பாட்டுத் தளத்தில் தங்களது
கிளைகளைப் பரப்பி, பின்னர் அதனூடாக அரசியல்
தளத்தில் அதிகாரம் கைப்பற்றிட முனைகின்றன.
மத்திய அதிகார மையத்தில் ஆறு ஆண்டுகள் கோலோச்சிய பின்னர், அவர்களின் சாயம் வெளுத்ததால், அதிகாரத்திலிருந்து அவர்கள் விரட்டப்பட்டனர்.
எனினும், நமது நாட்டின் பண்பாட்டுத் தளத்தில் அவர்களின் பிடி விலகவில்லை. பண்பாட்டுத்தளம் முற்போக்கும் பிற்போக்கும் கலந்த கலவையாகவும் இரண்டும் மோதுகிற போர்க்களமாகவும் இருந்து வந்துள்ளது. அதனால் வகுப்புவாத வைரஸ் கிருமிகள் தழைக்க வாய்ப்பு வசதிகள் ஏராளம் உள்ளன.
தமிழ்ப் பண்பாட்டின் பல்வகைப் பரிமாணங்களை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்து பல நூல்களை ஆய்வாளர் ந. ரவீந்திரன் எழுதியுள்ளார். இந்துத்தவ சூழலில் புதிய பண்பாட்டு எழுச்சிக்கான செயல்படு தளங்களையும், புதிய அணுகுமுறைகளையும் முன் வைத்து அவர் எழுதியுள்ள நூல், “மதமும் மார்க்சியமும் – தமிழ்ப் பண்பாட்டுப் பார்வை” – (சவுத் விஷன்) மதம், பண்பாடு குறித்த பாரம்பர்ய பிரச்சினைகளில் மறுபிரவேசம் செய்து சில வெளிச்சங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நூல் குறித்த சில விமர்சனங்களுக்குச் செல்வதற்கு முன், இந்த நூல் முன்வைக்கும் சிந்தனைகள் சமூக மாற்ற போராளிகள் ஆழ்ந்து பரிசீலிக்கத் தக்கவை என்பதை முதலில் குறிப்பிட வேண்டியுள்ளது. தமிழகத்தில் இடதுசாரி மார்க்சிய இயக்கங்கள் உழைக்கும் வர்க்கங்களை பெருந்திரளாக முற்போக்கு சிந்தனைத்தளத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான கருத்துக்கள் உள்ளடங்கியதாக இந்நூல் விளங்குகிறது. சில விமர்சனக் கருத்துக்களை காண்போம்!
குழந்தைத்தனமான தவறு
“இந்துத்துவத்தின் வேர்கள் என முந்திய வரலாற்றில் எதையாயினும் தேடுவது இந்துத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதமையின் பேறு”, என்ற ரவீந்திரனின் கருத்து. நூற்றுக்குநூறு சரியானதாகும். இன்றைக்கும் தமிழகத்தில் பலர் இந்த தவறினைச் செய்கின்றனர். கடந்த நூற்றாண்டுகளில் நடந்த மத மோதல்களையும் குஜராத் படுகொலையையும் ஒப்பிடுகிற குழந்தைத் தனமான தவறினை பலர் செய்கின்றனர்.
ரோமிலா தாப்பார், பணிக்கர், பிபன் சந்திரா உள்ளிட்ட பலர் அறிவியல் ரீதியாக நிறுவிய ஒரு உண்மை – அதையே ந.ரவீந்திரனும் குறிப்பிடுகிறார். “சென்ற நூற்றாண்டின் இருபதாம் ஆண்டு களிலிருந்து தோன்றி வளர்ந்த புதிய அரசியல் போக்கு அது. அதற்கு புதிதாய் உருவாகியிருந்த மத்திய தர வர்க்கமும், அதற்கான பொருளாதாரப் பிரச்சனைகளும் காரணம்”.
“இந்து அடையாளத்தைப் பிற மத எதிர்ப்பாக வளர்க்கும் பல்வேறு எத்தனிப்புக்களில் இந்துத்துவவாதிகள் முயலும் இன்றைய அரசியற் செயற்பாடு, நூற்றாண்டுகளின் முந்தைய மதவாதத்தி லிருந்து வேறுபட்டது”.
இவ்வாறு ந.ரவீந்திரன் கூறுவதும் மிகச் சரியானதே. இருபதாம் நூற்றாண்டில் உருவான ஒரு நவீன நிகழ்வுதான் வகுப்புவாதம்.
இந்தக் கருத்தைச் சரியாக புரிந்துகொள்ளாததால் மதச்சார் பற்றவர்களின் “பெரும்பாலான எழுத்துக்களில் இந்து சமயமும் இந்துத்துவம் வேறுபடுத்தாமல்” விவாதிக்கப்படுகிறது. “பிராமண மதம் இந்து சமயம், இந்துத்துவம் ஆகிய மூன்றையும் ஒன்றென குழம்பும் நிலை உண்டு” என்று சரியாகக் குறிப்பிடுகிறார் ரவீந்திரன். இந்து சமயம் என்ற ஒன்றே இல்லையென்று ஒரேயடியான தாக்குதல் வாதத்தினால் இந்துத்துவத்தை ஒழித்துவிடலாம் என்று சிலர் கருதுவதும் தவறானது. அதாவது, மத எதிர்ப்பு மூலம் இந்துத்துவ வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என்று இறங்குவது எதிர் விளைவையே ஏற்படுத்தும். மேலும் இந்துத்துவத்தின் வேர் போன்றது, மைனாரிட்டி எதிர்ப்பு எனும் கருத்தாக்கம். இத்தகு இந்துத்துவ கருத்தாக்கங்களின் தன்மைiயும், அவை ஏற்படுத்தும் தீய விளைவுகளையும் சரியாக புரிந்து கொள்ளாததால் தான் வெறும் மத எதிர்ப்பு ஆயுதமே போதுமானது என்று பலர் கருதுகின்றனர்.
மதங்களின் மக்கள் நலப் பக்கம்
‘மதங்கள்’ எனும் தலைப்பில் மதங்களின் தோற்றம், யூத, கிறிஸ்துவ, இஸ்லாம், நாட்டார், இந்து சமயங்கள், சமணம், பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களின் வரலாற்று வளர்ச்சியை ரவீந்திரன் விளக்குகிறார். இந்த அத்தியாயம் மதங்கள் பற்றிய ஒரு சிறந்த கல்வியாக அமைகிறது. வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படையில் இந்த நீண்ட விளக்கங்கள் அமைந்துள்ளன.
விவேகானந்தர் பற்றிய மதிப்பீடுகள் எல்லாம் மிகுந்த ஏற்புடையதாக அமைகிறது. பிற மத காழ்ப்புணர்வு இல்லாதது; இந்து மதத்தின் அதிகாரத்துவ சார்பான சீர்குலைவுகளை சாடியது; சமூக மாற்ற கிளர்ச்சியையொட்டி இந்து மதக்ககருத்துக்களை பயன்படுத்தியது போன்றவற்றை எடுத்துக்காட்டி விவேகானந்தர் பற்றி நல்மதிப் பீட்டை நமக்கு ரவீந்திரன் எடுத்துரைக்கிறார். திலகர் போன்றோரை இந்துத்துவத்தோடு பிரதிநிதித்துவப்படுத்துவது எந்த அளவு பேதமையானது என்பதையும் எடுத்துரைக்கிறார்.
‘வீரத்துறவி விவேகானந்தர் இந்து சமயத்தினுள்ளிருந்தே பிராமணத் தலைமையின் தகர்விற்குப்’ பாடுபட்ட வரலாற்றை சிறப்பாக விளக்குகிறார். ஆனால், விவேகனந்தரின் இந்த செயல்பாடு இந்து மதத்திற்கே உரிய போர்க்குணம் என்று கூறுவதும் இது இந்து மதத்தின் மக்கள் நலப் பக்கம் என்று வர்ணிப்பதும் பொருத்த முடையதாக இல்லை.
பொதுவாக மதங்களுக்கு மக்கள் நலப்பக்கம் உண்டு என்பது ஏற்புடையதே. அறநெறி, மனித நேயம் உள்ளிட்ட அம்சங்களில் மதத்தின் துணை கொண்டு சமூக வாழ்க்கையை செப்பனிடும் பணியைச் செய்திடலாம். ஆனால் இது முழுக்க முழுக்க உள்ளூர் சமூக நிலைமைகள் பொறுத்ததே. பஞ்சமும், வேலையின்மையும் தாண்டவமாடும் கிராமத்தில், தெய்வ குற்றம் நேர்ந்து விட்டதாகக் கருதி அதற்குப் பிராயச்சித்தம் எனும் பெயரில் பல மூட வழிபாட்டுச் சடங்குகள் நடைபெறும் போது, மதம் போர்க்குணமிக்கது என்று எப்படி கருத முடியும்?
இன்னொரு பக்கமும் இருக்கிறது. கிராமச் சமூகம் ஒன்றில் ஆண்டாண்டு காலமாக இந்து, முஸ்லீம், கிறித்துவர் ஒற்றுமை தழைத்தோங்குகிற நிலையில் அடிப்படைவாதிகள் கலகம் இழைக்க முற்பட்டால், அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்கிற போது, அங்கே மதத்தின் மக்கள் நலப்பக்கம் தெரிகிறது. ஆனால் இது உள்ளூர் நிலைமை சார்ந்ததே.
மற்றொரு இடத்தில், சங்கரரைப்பற்றிக் கூறுகிறபோது ‘வழிவழி வரும் போர்க்குணம் மிக்க சக்திகளுக்கு உதவும் நல்ல பல கருத்துக்களே சங்கரரிடம் இருந்தது” என்கிறார். அது விரிந்துரைக் கப்படவில்லை. வணிக வர்க்கச் சமூகத்தைவிட நிலப்பிரபுத்துவம் முற்போக்கு பாத்திரம் வகிப்பதை சுட்டிக்காட்டி, அந்த வரலாற்று ஓட்டத்தின் பிரதிபலிப்பு என்பதால் சங்கரரது கருத்துமுதல்வாதம் முற்போக்கானது என்கிறார் ரவீந்திரன்.
இவ்வாறு வாதிடும் பாங்கு சரியானதன்று. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பழமைக்கும் புதுமைக்குமான போராட்டம் நிகழ்ந்து வருகிறது. ஒரு கட்டத்தில் புதுமையென்றும் முற்போக் கென்றும் கருதப்படுவது மாறியுள்ள சூழலில் பிற்போக்கானதாகி விடுகிறது. அதனை உயர்த்திப் பிடிப்பது சமூக மாற்ற செயற் பாட்டுக்கு உதவிடாது.
அத்துடன், சங்கரரது வர்ணாசிரம ஆதரவு பிற்போக்கு கருத்துக்களை வலுவான ஆதாரங்களோடு தேவி பிரசாத் சட்டோத்யாயா தனது நூல்களில் விளக்குகிறார்.
“சாதிய – வர்க்க பேதங்களை நியாயப்படுத்தும் கடவுளாய் இல்லாமல், விடுதலைக்குரல் எழுப்புவதற்கான கடவுளர்களாக மதங்கள் கண்டறியும்போது மார்க்சியத்தை மதங்கள் அரவணைத்துள்ளன. இதற்கு உதாரணங்கள் பல உண்டு”.
மேற்கண்ட கருத்து நிச்சயமாய் உண்மையை எடுத்துரைப்பது தான். எனினும் இதன் இன்றைய தமிழகத்து பொருத்தப்பாடு என்ன?
சாதிய வர்க்க பேதங்களுக்கு கடவுள் துணைபோகும் சூழலையும், விடுதலைக் குரலுக்கு கடவுள் துணைபோகும் சூழலையும் எப்படிப் பிரித்தறிவது? இதற்கு ஏதாவது வரையறை செய்வது சாத்தியமா? நிச்சயமாக தமிழகந்தழுவிய அளவிலான சூத்திரம் உருவாக்கிடல் தீமையே விளைவிக்கும்.
மாறாக, மார்க்சிய இயக்க உருவாக்கம், விரிவாக்கம் ஊடாக மக்களிடையே உள்ளூர் மட்டத்தில் பணியாற்றும் தருவாயில் சரியான அணுகுமுறை பளிச்சிடும். பேதம் வளர்க்கும் மடமையிலிருந்து மக்களை விடுவித்து, திரட்டுவதும், உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பையும், ஒருங்கிணைப்பையும் போற்றும் (பொங்கல் போன்ற) பண்பாட்டு நிகழ்வுகளில் ஈடுபடும் போது, அவர்களோடு அணிசேர்வதும் இயக்க ஊழியர் கடமை. எனவே, உழைக்கும் மக்களை திரட்டும் நோக்கோடு உள்ளூர் சார்ந்த அணுகுமுறையை கையாள வேண்டும்.
முதலாளித்துவம், மதச்சார்பின்மை
ரவீந்திரனின் கீழ்க்கண்ட வரையறுப்பு விமர்சிக்கத்தக்கது.
“பெருமுதலாளி வர்க்கமும், அதற்கு எதிராகத் தேசிய முதலாளித்துவம் மற்றும் வர்க்கப் பிரிவினர் என்ற வர்க்க மோதுகையாக இந்துத்துவமும் மதச்சார்பின்மையும் என்ற கருத்தியல் வெளிப்பாடுகள் அமைகின்றன”. (பக்கம் – 27)
இது மிகவும் தவறான, நிர்ணயிப்பு ஆகும். பொருளாதாரத் தளத்தில் இந்துத்துவமும், மதச்சார்பின்மை பேசுகிற காங்கிரஸ் உள்ளிட்ட பல சக்திகளும் ஏன் ஒன்றுபட்டு நிற்கின்றன?
இவ்வாறு ஒன்றுபட்டு நிற்பதற்கான காரணம் இவ்விரு சக்திகளும் பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்க சார்பு கொண்டவை. ஏகாதிபத்திய உறவிலும் இரண்டுக்கும் பெரு வித்தியாசங்கள் இருப்பதில்லை.
இந்திய நாட்டுப் பெருமுதலாளித்துவ சக்திகளில் வலதுசாரி பிற்போக்குத் தன்மை கொண்டவையும் அடங்கும். அதன் வெளிப்பாடு, பா.ஜ.க. வின் மீது அந்தச் சக்திகள் கொள்கிற நேசம் இந்த நுட்பமான தன்மை இருப்பினும், பிரதானமாகத் தங்களது வர்க்கத் தேவைகளையொட்டியே பெருமுதலாளித்துவம் அரசியல் களத்தில் உள்ள முதலாளித்துவ கட்சிகளை தழுவிக் கொள்கிறது.
தேசிய முதலாளித்துவத்திற்கு மதச்சார்பின்மை, பெரு முதலாளித்துவத்திற்கு இந்துத்துவம் என்பதும் இதற்கிடையிலான வர்க்க மோதுகை நடப்பதாக கருதுவதும் உண்மை நிலைக்கு பொருந்தாதது; இது பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் ஒரு புறமும் உழைப்பாளி மக்கள் ஒரு புறமும் நின்று நடத்தும் வர்க்க மோதலை மறுப்பதாகும். மதச்சார்பின்மைக்கான போராட்டம் என்பதன் பின்புலம் இத்தகு வர்க்கப் போராட்டத்தின் பகுதியாக நடைபெற்று வருகிறது.
மற்றொரு இடத்தில் (பக்கம் 39) “தேசிய முதலாளித்துவப் பிராமணியத்தின் இந்து மத உணர்வையும், பெருமுதலாளித்துவப் பிராமணிய இந்துத்துவத்தையும் நாம் வேறுபடுத்தியாக வேண்டும்” என்கிறார்.
பொருளாதார உற்பத்தித் தளத்தில் மூலதனப் போட்டி எனும் வகையில் தேசிய முதலாளித்துவ வர்க்கங்களுக்கும் பெரு முதலாளித்துவ வர்க்கங்களுக்கும் எழுகிற முரண்பாடுகளை புரட்சிகர சக்திகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மதக் கருத்துக்கள், மத உணர்வுகள் என்கிற வகையில் ஏற்படும் வித்தியாசங்கள் நிரந்தரமானதல்ல. இதையொட்டி ஒரு புரட்சிகர கட்சியோ, சமூக மாற்ற சக்திகளோ அடிப்படை நிலைபாடுகளை அமைத்துக் கொள்வது சரியல்ல. மதப்பழமைவாதம் மற்றும் இந்துத்துவத்தின் வேர்கள் நீடித்த நிலப்பிரபுத்துவத்தோடு தொடர்புடையைவை. முதலாளித்துவம் தனது வர்க்கத் தேவைகளை பிரதானமாகக் கொண்டு தான் மதப் போக்குகளை சுவீகரிக்கின்றது; அல்லது நிராகரிக்கின்றது.
கீழ்க்கண்ட அவரது மற்றொரு கருத்தும் உண்மை நிலைக்கு பொருந்தவில்லை. “உலக முதலாளி வர்க்கம் அரசியல் பொரு ளாதாரப் போராட்ட களத்தை பண்பாட்டுத்தளத்துக்கு மாற்றிக் கொண்டு விட்டது.” (பக்கம் 145) இப்படிச் சொல்வதால் சமூகப் புரட்சியாளர் பணி பண்பாட்டுத் தளத்தில் இருந்தால் போதும் என்று ஆகிவிடாதா? நிச்சயம், பண்பாட்டுத்தளம் முக்கியமான போராட்டக்களம்தான். ஆனால் பன்னாட்டு நிதி மூலதனம் பொருளாதாரத்தளத்தில் ஏழைகளை ஒடுக்கிச் சுரண்டி வருகின்றது. இதற்கு எதிரான போராட்டம் மிக முக்கியமானது; அடிப் படையானதும் கூட.
ஒரு உள்ளூர் சமூகம் என எடுத்துக் கொண்டால், சுரண்டல் பொருளாதாரத் தளத்தில் நடைபெறுகிறதா அல்லது பண்பாட்டுத் தளத்தில் நடைபெறுகிறதா எனப் பிரித்து பார்க்க இயலாத வண்ணம் இரண்டும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காண இயலும். எனவே ஏக காலத்தில் இரண்டு போராட்டங்களும் சேர்ந்து நடத்திடும் தளமாக உள்ளூர் சமூகமே அமைந்துள்ளது.
அரசியல் வெற்றியை சமய வழி சாத்தியமாக்குமா?
‘இந்து சமயம் என ஒன்றில்லை, இருப்பதாகச் சொல்லும் பிராமணியமே இந்தியச் சமூகக் கேடுகள் அனைத்துக்கும் காரணம்’ என்று வாதிடுவோரைப் பற்றி ரவீந்திரன் வலுவாக அம்பலப் படுத்துகிறார். இப்படி வாதிடுகிறவர்கள் பிற அதிகார மையங்களைக் கண்டு கொள்வதில்லை. “தனியே பிராமண வெறுப்பைக் கொள்ளும்போது இவர்கள் தேடும் ஆதாரங்களும் குறையுடையன” என்று ரவீந்திரன் கூறுவது சரியானது.
இந்த வாதத்திற்கு எதிர்வாதம் செய்கிறபோது, ஒரு அதீத நிலைக்கு ரவீந்திரன் சென்றுவிடுவதாகத் தோன்றுகிறது. இந்து மதம் பன்முகத் தன்மை கொண்டது என்று சொல்வது சரி; ஆனால் அதற்குரிய ‘போர்க்குணம்’ மற்றும் அதன் ‘மதச்சார்பற்ற பண்பாடு’ பற்றி சிலாகிக்கிற போது இந்த அதீத நிலை வெளிப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் அவர் அதிகம் பயன்படுத்தும் சொற்றொடர் ‘இந்து விடுதலை நெறி’ என்பது.
“மத உணர்வு மற்ற மதத்தை பகையாக்க அவசியமின்றியே அரசியல் வெற்றியை ஈட்ட முடியும்…” என்று கூறுகிற போதும், “இஸ்லாத்தின் விடுதலை இறையியலும் இந்து விடுதலை நெறியும் கைகோர்த்து நற்பலன்கள்” ஈட்டித் தந்ததாகக் கூறுகிற போதும், சமய வழி மூலமாக அரசியல் வெற்றிகள் சாத்தியமாகும் என்ற கருத்து உருவாகிவிடும் வகையில் வாதங்கள் முன்வைக்கப்படுகிறது.
“தனியார், சமூகம், மதம் என்பனவற்றை மதச்சார்பற்ற மையத்தளத்தில் சந்திக்கச் செய்யும் செயற்பாடுகளை” பன்மைப் பரிமாணப் பண்பு ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார். ஆனால், இந்தப் பன்மைப் பரிமாணப் பண்பு மதம் சார்ந்தது மட்டும் இல்லை. கூட்டு உழைப்பு உள்ளிட்ட பல மதம் சாராத பண்பாட்டுச் சமூகச் செயற்பாடுகள் இதில் செயலாற்றுகின்றன என்பதை ஏன் ரவீந்திரன் எடுத்துக் கொள்ளவில்லை? மக்களின் ‘இணைவுப் புள்ளிக்கு’ மதம் மட்டும்தான் காரணமா?
அதே நேரத்தில், ரவீந்திரன் எடுத்துரைக்கும் நமது பாரம்பரிய மதநல்லிணக்க வரலாறு ஆழ்ந்து நோக்கத்தக்கது. முடியாட்சிக் காலந்தொட்டே பெரும்பாலான அரசர்களும் மக்களும் வேற்று மதத்தாரோடு இணங்கி வாழ்ந்து வந்துள்ளனர் என்பது முக்கியமானது. (சில மதமோதல்கள் தவிர்த்து) இந்த வகையிலான மதச்சார்பற்ற பாரம்பரியத்தினை அழிக்கவே இந்துத்துவவாதிகள் முயல்கின்றனர்.
மதங்களிடையேயான உட்பிரிவுகள், சைவ, வைணவ பேதங்கள், ஒற்றுமைப்படுத்தும் வகையிலான தல புராணங்கள், நாட்டார் பிரிவுகளிடையேயான தொடர்புகள், ஆறுமுக நாவலர் போன்றோரின் பங்கு குறித்த மதிப்பீடு ஆகியன அனைத்தும் நமது அறிவை ஆழமாக்கிட உதவுகின்றன.
இந்த விளக்கங்களையொட்டி, அவர் வந்தடையும் ஒரு வரையறை இது: “வர்க்க சமூகத்தில் சாதிகளாக்கப்பட்ட இனக்குழு முறைமையின் குல தெய்வங்களையும், வர்க்க சமூகத்துக்கான ஒரு பரம்பொருள் கோட்பாட்டையும் உடைய மதம் இந்து சமயம்”. (பக்கம் 54)
இந்த வரையறையிலேயே ஒரு கேள்வி எழுகிறது. இனக்குழு முறைமையின் குல தெய்வ வழிபாடுகள் பன்முகத் தன்மை கொண்டவை. இது முந்தைய பக்கங்களில் விளக்கப்படுகிறது. ஆனால், இந்த பன்முகத் தன்மை கொண்ட நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைமைகளை ‘இந்து சமயம்’ என்று பொதுவில் உள்ளடக்குவது சரியானதா? எனினும், மற்றொரு இடத்தில் மேற்கண்ட வரையறைக் கூற்றின் முரண்பாடாகத் தொனித்தாலும், ஒரு சரியான கருத்து வெளிப்படுத்தப்படுகிறது. “அதன் (இந்து சமயத்தின்) இந்த பன்மைப் பண்பை மறுத்துக் குறுகிய அரசியல் நோக்கத்துக்கு அதனை கேடயமாக்குவது இந்துத்துவம்” என்கிறார் ரவீந்திரன்.
அறிவியல் நோக்கத்தில் வரலாறு
அறிவியல் நோக்கு கொண்ட தொழில் முறை வரலாற்றாசிரியர்கள் பரிசீலிக்க வேண்டிய சில கூற்றுக்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்று.
“குப்தப் பேரரசர் காலத்தில் புதிதாய்ப் பிறந்தது இந்த இந்து மதம். முன்னர் இருந்து வந்த பிராமண மதம், பிராமண மதத்தினுள் கலந்து விடாமலிருந்த சிந்துவெளிப்பண்பாட்டாளரின் வேறு மதங்கள் புதிய இனக்குழுவினரின் சடங்காசாரங்கள் ஆகியவற்றின் இணைப்பில் புதிதாய் பிறந்த இந்து மதத்திற்கு ஆயிரத்து அறநூறு வருடங்கள் ஆகின்றது”.
குப்தர் காலத்தில் இவ்வாறு இந்து மதம் புதிதாய் பிறந்ததாக கூறுவது ஒரு வரலாற்றுக் கூற்று. இன்று வரலாற்று ஆராய்ச்சி என்பது அறிவியல் கருவிகளைக் கொண்டு மொழியியல், தொல்லியல் என பலதுறை ஒருங்கிணைப்போடு வளர்ந்து வரும் நிலையில், ஒரு வரலாற்றுக் கூற்றை வலுவான ஆதாரங்கள் இன்றி கூறுவது சரியானதாக இருக்காது. புதிய அறிவியல் ரீதியான பண்பாட்டை வளர்த்தெடுக்க அது உதவாது.
அதே போன்று வரலாற்று ஆதாரங்களோடு நிறுவிட வேண்டிய வேறு கருத்தையும் அவர் முன்வைக்கிறார். “சாதிகளாய் பிளவுபட்டிருந்த மக்களை ஓரணியில் ஒன்று திரட்டிய சாதனை தமிழகப் பக்தி பேரியக்கத்துக்கும் உண்டு.”
அதனை “சமூக மாற்றத்தை வென்றெடுத்த முற்போக்கு கருவி” என்றும் அவர் போற்றுகிறார். இதெல்லாம் அறிவியல் ரீதியான வரலாற்றுப் பரிசோதனைக் களத்தில் நிறுவப்பட வேண்டியவை.
சாதித் தோற்றம் என்பது அறிவியல் கண்கொண்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒன்று. சாதி இறுக்கம் பெற்ற சூழல் வர்க்கப் பிளவுகள் வளர்ந்த கட்டத்தில் உருவானது என்பது தெளிவானது.
இது அல்லாமல், சாதியைப் புகுத்தியவர்கள் ஆரியர்களா அல்லது ஏற்கனவே திராவிடர்களிடம் இருந்து வந்தள்ளதா போன்றவற்றில் வரலாற்று அறிவியல் ஆதாரங்களின் துணையை நாடாமல் விவாதிக்கிற பழக்கம் தமிழகத்தில் உள்ளது. அவரவர் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப வியாக்கியானம் செய்வதுண்டு. இந்த வகைப்பட்டதுதான் சங்பரிவாரங்கள் செய்து வருகிற – ஆரியர்கள் பூர்வகுடிகள் எனும் பிரச்சாரம். அத்துடன் திராவிட இயக்கம், பிரச்சாரம் செய்த சாதி ஆரியர்களால் புகுத்தப்பட்டதுதான்’ என்ற வாதமும் இதே வகைப்பட்டதுதான்.
இதில் ரவீந்திரன், திராவிடர்களின் “திணை வேறுபாட்டுடன் ஆரியர்களின் வர்ணக் கோட்பாடும் இணைந்த பின்னரே சாதி வாழ்முறை வடிவமைக்கப்பட்டது” என்கிறார். இதுவே ‘தமிழனுபவம்” என்கிறார். இவ்வாறு ‘அனுபவ’ வாயிலாக முடிவுக்கு வருவதற்கு பதில் அறிவியல் துணை கொண்டு முடிவுகளை எட்டுவதுதான் சரியான வழியாக அமைந்திடும்.
அத்துடன் ஆரியர்கள் “இனக்குழு வாழ்முறையைச் சமத்துவத் துடன் வாழ்ந்தனர்” என்று அவர் கூறுவதும் பல வரலாற்றாசிரி யர்களின் கருத்துக்கு இசைவாக இல்லை.
ஆரியர்கள் பல பகுதிகளில் நாடோடிக் கூட்டங்களாக இடம் பெயர்ந்து வருகையில் அவர்களிடம் இருந்த ஓரளவு ஒற்றுமைத் தன்மை என்பது மொழியில்தான். அது கூட ஒரே மொழியன்று. ‘ஆரிய’ என்றழைக்கப்படும் மொழிச்சாயல் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர் என்பதும், உண்மையில் ‘ஆரிய’ என்பது இனக்குழுவை குறிப்பிடும் சொல் அல்ல என்பதும், ஆரியர்கள் ஒரே இனக்குழு அல்ல என்பதும் ரோமிலா தாப்பரின் ஆய்வு முடிவுகள்.
பண்பாட்டு நேச அணிக்கு
திருக்குறள், பாரதி, பெரியார் பற்றிய ஆய்வை நிகழ்த்துகிறார் ரவீந்திரன். மதச்சார்பின்மை நூலாக திருக்குறளை அவர் பார்க்கின்றார். அதே போன்று பாரதியை இயங்கியல் பொருள் முதல்வாதியாகவும் பார்க்கின்றார். இந்து சமய தொன்மங்களை விடுதலைப் போராட்ட எழுச்சி உணர்வை ஏற்படுத்த அவர் முயற்சித்ததை எடுத்துக் காட்டுகிறார். தாகூரோடு அவருக்கு இருந்த ஒப்புமையையும் எடுத்துரைக்கின்றார். அதே போன்று பெரியார் குறித்து அவரது கருத்துக்களும் சிந்திக்கத்தக்கன. இவை நிச்சயம் சமூக மாற்றப் போராட்டத்திற்கு வலு சேர்த்திட உதவிடும். தமிழகத்தில் இவை பற்றியும் மற்றும் சமகால எழுத்துக்கள், சிந்தனைகள் பற்றியும் தரமான விவாதங்கள் எழவில்லை என்பதும் உணரப்பட வேண்டிய குறைபாடாக உள்ளது. ஜெயகாந்தன், ஜெயமோகன் போன்றோரையும் ரவீந்திரன் எடை போடுகின்றார்.
இதையொட்டி அவர் பண்பாட்டுத் தளத்தில் ஒரு நேச அணி உருவாக்குவதற்கான சிறந்ததோர் உத்தியையும் வழங்குகிறார். “மரபுப் பண்பாடு – எதிர் பண்பாடு – புதிய பண்பாடு என்பவற்றில், ஒருவர் எந்த தளத்தில் நிற்கிறார் எனப் பார்க்க வேண்டும். அவசியப்படின் முற்போக்காளரா? பிற்போக்களரா? என்பதை அடையாளப்படுத்த முனையலாம். இல்லையெனில், பண்பாடு – எதிர்பண்பாடு – புதிய பண்பாடு ஆகியவற்றுள் எந்தத் தளத்துக்கு உரியவர் என்பதை மதிப்பிடலாம்.” என்கிறார் ரவீந்திரன் இதில் நபர் என்பதோடு இலக்கிய போக்குகளையும் சேர்த்து வகைப்படுத்தி ஒற்றுமை நாட்ட முயற்சிக்கலாம்.
இதிலும் பெரியாரது நாத்திகம் வெகுஜனப்பட்டதாக அவர் கூறுவது திராவிட இயக்கத்தின் இதர பரிமாணங்களை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. சாதிய ஒடுக்குமுறையை நிகழ்த்தும் பிராமணீயத்தை தகர்க்க வேண்டுமென்ற தேவை, அடிமட்ட வர்க்கங்களிடம் இருந்தது. அதற்கு இடஒதுக்கீடு, சாதி ஒழிப்பு உள்ளிட்ட பல கருத்தாக்கங்கள் மக்கள் திரட்டலுக்கு உதவியது. அவற்றுள் ஒன்றாகவே நாத்திகமும் உள்ளது. எனினும், அது தமிழகத்தில் பரவலாக வேரூன்றிய தன்மை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நிகழ்வு.
‘இரட்டைத் தேசியம்’ பற்றி…
தேசியம் பற்றி எழுதுகிறபோது, மார்க்சிய வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்ஸ்வாம், ‘ஐக்கியப்பட்டுள்ள, அரசியல் மற்றும் தேச ரீதியான அலகு எனும் கோட்பாட்டை’ பின்பற்றுகிறார்.
பா.ஜ.க. வினர் இந்தியாவை ஒரே தேசிய இனமாக, ஒரே தேசமாக பிரச்சாரம் செய்கின்றனர். கலாச்சார தேசியம் எனும் பெயரில் இனத் தனித்துவங்களை எல்லாம் அழிக்க முயற்சிக்கின்றனர்.
இரட்டைத் தேசியம் பற்றி ரவீந்திரன் எடுத்துரைக்கின்ற கருத்துக்கள் குழப்பதையே ஏற்படுத்துகின்றன. ‘தேசியம்’ என்பதற்கு ந.ரவீந்திரன் தனது பார்வை என்ன என்பதை தெளிவுபடுத்தி யிருந்தால் ஒருவேளை இக்குழப்பம் ஏற்பட்டிருக்காது.
இதனால் தான் “சுதந்திரப் போராட்டம் பிராமணிய தேசீயமாக வடிவங்கொள்வதை மராட்டியத்தின் ஜோதிராவ்புலே இனங்கண்டார்” என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத கருத்தமைவுகளாக உள்ளன.
அதைவிட மற்றொன்று தமிழகத்தைப் பற்றியது. “தமிழகமே முதன் முதலில் பிராமணத் தேசியத்தை தகர்த்து, ஒரு வடிவத்திலான எதிர்த்தேசியத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த முதல் மாநில மாகிறது”. அது என்ன ‘ஒரு வடிவத்திலான’ என்பது? பிறகு, ‘எதிர்த்தேசியம்’ என்ற கருத்து எதை விளக்குகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழகத்தில் 1967 இல் ஏற்பட்ட மாற்றம் என்பது காங்கிரஸ் என்ற ஏகபோக முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஒரு வர்க்க சக்தி, விடுதலைப்போரின் போது தான் திரட்டியிருந்த மக்களின் நம்பிக்கையை இழந்து போன கட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுதான். தமிழகத்திலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த நிகழ்வு ஏற்பட்டது. காங்கிரஸின் செல்வாக்குத் தகர்வு அதன் பிராமணத் தேசியத்தால் அல்ல, அதன் வர்க்கக் கொள்கைகளால் தான். இதைப் பிராமணியத் தேசியம் என்பதும், எதிராக நிகழ்ந்த மாற்றத்தை எதிர்த் தேசியம் என்பதும் சரியானதா? உழைக்கும் மக்களின் வர்க்க பண்பாட்டு உணர்வுகளை பிரதிபலிக்கும் இயக்கமாக திராவிட இயக்கம் தன்னை முன்னிறுத்தி வெற்றி கண்டது. இரட்டைத் தேசியக் கோட்பாட்டை ந.ரவீந்திரன் விளக்கமாக சொல்ல வேண்டுவது மட்டுமல்ல, அக்கோட்பாட்டின் இன்றைய தேவையையும் விளக்கிச் சொல்வது நன்று.
மூன்று பார்வைகள்
“வள்ளுவம், பாரதியம், பெரியாரியம் என்பன மதம் பற்றிய முப்பரிமாணப் பார்வைகளை வழங்குகின்றன” எனக்கூறி ஒவ்வொன்றையும் விளக்குகிறார். உண்மையில் மதச்சார்பற்ற உணர்வுகளையும், கொள்கைகளையும் பாதுகாக்கிற போராட் டத்தை நடத்திட மேற்கண்ட மூன்றும் தமிழ்ப்பண்பாடு வழங்கிய மகத்தான கொடைகள்தான். ஆனால், இவைகளையும் விமர்சனமற்ற முறையில் ஜீரணிக்க முயல்வதும், மேற்கண்ட மூன்றும் தழைத்தோங்கிய காலச் சூழலை கணக்கிலெடுக்காது அப்படியே இன்றைய நிலையை பார்ப்பதும் சரியானதாக இருக்காது. மேற்கண்ட மூன்றையும் சரியாகப் பொருத்தி முன்னேறுவது முற்போக்காளர்களின் கடமை. இதற்கு ரவீந்திரன் விளக்கங்கள் உதவிடும். இன்றைய நிலையையும் மேற்கண்ட மூன்று பார்வைகளை எங்கே இணைப்பது என்பதையும் ந.ரவீந்திரன் விளக்காதது குறை.
“ஒரு சமூகம் எவ்வடிவில் சமூக மாற்ற எழுச்சியை கோருகிறதோ அதனைக் கண்டறிவது அவசியம்”. (ப.287)
“இன்றைய புரட்சியின் புதிய கோரிக்கை புதிய பண்பாட்டு இயக்க எழுச்சியாகும்”.
புரட்சி எனப்படுவது மார்க்சிய அர்த்தத்தில் பேசப்படுகிற போது அது அடிப்படையில் உற்பத்திச் சாதனங்கள் சமூக உடைமையாக்கப்படுவதற்கு அரசு அதிகாரத்தை தொழிலாளி விவசாய வர்க்கங்கள் கைப்பற்றுவதை மையமாகக் கொண்டாலும், பண்பாட்டு ரீதியான முற்போக்கு சிந்தனைகளும் உணர்வுகளும் வளர்ச்சியடையாமல் அது சாத்தியமல்ல. இந்த புரிதலோடு ரவீந்திரன் புதிய பண்பாட்டு இயக்க எழுச்சி குறிப்பிடுகிறார் எனில் நிச்சயமாக அந்த எழுச்சியை ஏற்படுத்துவது அவசியம். இந்த அத்தியாயத்தில் மத்தியதர வர்க்கங்களிடையே வளர்ந்து வரும் பண்பாட்டுப் போக்குகளை நன்கு விமர்சித்துள்ளார். ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ உள்ளிட்டு பல தத்துவங்கள் பிற்போக்கு திசை வழியில் இழுத்துச் செல்வதை நன்கு எச்சரித்துள்ளார்.
மத அணுகுமுறையில் வித்தியாசமான பல அனுபவங்களை விளக்குகிறார் ரவீந்திரன். கியூபா, சீனா, லத்தீன் அமெரிக்க அனுபவம் பற்றி விரிவாக அவர் விளக்குவது பயனுள்ளது.
பிடல் காஸ்ட்ரோ, மா.சே.துங் மற்றும் பல்வேறு கம்யூனிஸ்ட் தலைவர்கள் நோக்கில் மதம் பற்றிய அணுகுமுறை புரட்சி நிலைப்பாட்டிலிருந்து விளக்கப்பட்டிருக்கிறது. எனினும், வரலாற்று மாற்றங்கள் மேலிருந்து எடுக்கப்படும் முயற்சியினால் மட்டும் ஏற்படுபவை அல்ல. கீழ்மட்ட மக்களின் செயல்பாடே தீர்மானகரமான பங்கினை வகிப்பவை. அத்தகு வரலாற்று அனுபவங்கள், உள்ளூர் சமூக மட்டத்திலான அனுபவ வரலாறு தொகுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நூல் அந்த ஆய்வுப் பகுதிக்கு ஆய்வாளர்கள் பயணித்திட வழிவகுத்துள்ளது.
மதம் குறித்து கட்சி ஸ்தாபனம் கையாள வேண்டிய அணுகுமுறை குறித்து நூலில் பேசப்படுகிற பல விஷயங்கள் பொருத்தமுடையன. மக்களின் மத நம்பிக்கையை மதித்து நடக்கிற பாங்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு நிச்சயமாக தேவை.
மக்கள் திரள் கலந்து கொள்ளும் மத நடவடிக்கைகளில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்கலாம் என்று பொதுமைப்படுத்துவதை விட, உள்ளூர் சமூகம் சார்ந்த நோக்கில் இப்பிரச்சினை கையாளப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உணர்வை மேம்படுத்தும் நோக்கோடு, இதற்கு உதவிடும் வகையிலான கலாச்சார நடவடிக்கைகளில் மக்களோடு இணைந்து நிற்பதை கம்யூனிஸ்ட்டுகள் தங்களது வழக்கமாக கொள்ள வேண்டும்.
Leave a Reply