பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு……7
ஒரு நாட்டில் உழைக்கும் வர்க்கம் தனக்கு வழிகாட்டுகிற புரட்சிகர கட்சியின் தலைமையை ஏற்று, திரள்கிறபோதுதான் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறும்.இதுவே ரஷ்யப் புரட்சி அனுபவம். ஜார் மன்னராட்சியும்,பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு வந்த கெரென்ஸ்கி அரசும் வீழ்த்தப்பட்டு, ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றது.
அதாவது, முதலாளித்துவ,நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசை வீழ்த்தி,அந்த வர்க்கங்களால் ஆண்டாண்டுக் காலமாக அடக்கி ஒடுக்கபப்ட்டு,சுரண்டப்பட்டு வந்த பாட்டாளிவர்க்கம், ரஷ்யப் புரட்சியை நிகழ்த்தியது.இதனை தொழிலாளி,விவசாயி உள்ளடங்கிய பாட்டாளி வர்க்கம் சாதிக்க முடிந்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சியும்,அதன் அமைப்புக்களும் முக்கிய பங்காற்றின. இந்த கட்சி அமைப்புக்கள் இல்லாமல் “தனித்திறமை”,”வசீகரம்” கொண்ட தலைவர்கள் மட்டும் பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமையேற்றிருந்தால்,எதிரிகள் புரட்சியை முறியடித்திருப்பார்கள்.
நீண்ட காலமாக ரஷ்யப் புரட்சியை ஒரு கூட்டத்தின் சதி எனவும், அது லெனினது அரசியல் சாதுர்யத்தால் வெற்றி பெற்றது எனவும் வரலாறு எனும் பெயரில் பல புனைகதைகள் எழுதப்பட்டு வந்துள்ளன.
எனினும்,ஆராய்ச்சியாளர்கள் பலர் நடந்த உண்மைகளை உள்வாங்கி, பாரபட்சமின்றியும் எழுதியுள்ளனர்.அவ்வாறு எழுத முனைந்த வரலாற்றாசிரியர்கள் தவிர்க்க முடியாமல் கம்யூனிஸ்ட் அமைப்பு ஏற்படுத்திய தாக்கத்தை பதிவு செய்துள்ளனர்.
1970-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த “ரஷ்யா எவ்வாறு ஆளப்படுகிறது?”என்ற நூலில் பேராசிரியர் மேர்லே பெயின்சாட்(Merle Fainsod)எழுதினார்.
“1902-ஆம் ஆண்டு லெனின் தனது “என்ன செய்ய வேண்டும்?”நூலில் “புரட்சிக்காரர்கள் கொண்ட ஒரு கட்சி அமைப்பினை எங்களுக்கு கொடுங்கள்!ரஷ்யாவை முழுமையாக,அடியோடு மாற்றிக் காட்டுவோம்”என்று எழுதினார்.1917-ஆம் ஆண்டு அவரது இந்த வேண்டுகோள் நிறைவேறியது;ரஷ்யாவை அடியோடு மாற்றும் பணியும் நிறைவேறியது….”
புரட்சிகர கட்சி அமைப்பின் முக்கிய பங்கினையே பெயின்சாட் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
ஏன் புரட்சிகர கட்சி தேவை?
சமுக மாற்றத்திற்காக இயங்கும் இயக்கங்களே கூட தெளிவான நிலை எடுக்காமல் தடுமாறுகிற கேள்வி ‘ஏன் ஒரு புரட்சிகர கட்சி தேவை?’என்பது.
இதற்கான பதிலை அறிவதற்கு முன்னதாக மார்க்சின் இரண்டு கூற்றுக்களை ஆராய வேண்டும்.சுரண்டலிலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலையை பெறுவது எவ்வாறு என்ற கேள்விக்கு மார்க்ஸ் அழுத்தமாக சொன்ன பதில் இது: தொழிலாளி வர்க்கம்தான் ,தானே முன்முயற்சி மேற்கொண்டு விடுதலையை அடைய வேண்டும் என்றார் மார்க்ஸ்.
மார்க்ஸின் இந்தக் கருத்து,தொழிலாளி வர்க்கம் தானே தனது விடுதலையை சாதித்துக் கொள்ளும் என்றும்,வேறு யாருடைய உதவியும் அதற்கு தேவையில்லை என்றும் பொருள்படுவதாக உள்ளது. குறிப்பாக,கட்சி கட்டுவது,கட்சி கோட்பாடுகளோடு செயல்படுவது என்பதெல்லாம் தேவையில்லை என்ற முடிவுகளுக்கு இட்டுச் செல்வது போன்ற கூற்றாக மார்க்சின் கருத்து தோற்றமளிக்கிறது..
ஆனால் இத்துடன் மார்க்சின் மற்றொரு கூற்றையும் இணைத்துப்பார்க்க வேண்டும்.
“ஒவ்வொரு சமூகத்திலும் நிலவி வருகிற கருத்துக்கள் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே”
என மார்க்ஸ் எழுதினார்.
அதாவது, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தனது சுரண்டல் நலனுக்கான கருத்துக்களையே சமுகத்தின் கருத்தாக மாற்றிவிடுகிறது. முதலாளித்துவ அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஒருபுறம் முதலாளிகளின் மூலதனத்தைப் பெருக்கிடும்.மறுபுறம் உழைக்கும் மக்களின் நலனை பாதிக்கும்.ஆனால்,அந்தக் கொள்கைகள் , தனக்கும் பயன் தரும் என்று தொழிலாளியை நம்பிட வைத்து,தொழிலாளர்களையும் தனது செல்வாக்கு வளையத்திற்குள் முதலாளித்துவ வர்க்கம் தக்க வைத்துக் கொள்கிறது.
இந்நிலையில் முதலளித்துவ செல்வாக்கு மயக்கத்தில் இருக்கும் தொழிலாளி எவ்வாறு முதலாளித்துவ சுரண்டலிலிருந்து விடுவித்துக் கொள்வார்? முதலில் குறிப்பிட்ட ‘தொழிலாளி வர்க்கம் தனது விடுதலையை தானே சாதித்துக் கொள்ளும்’ என்று மார்க்ஸ் சொன்னது சாத்தியமா?
முரணாகத் தெரியும் மார்க்ஸின் இந்த இரண்டு கருத்துக்களும். மார்க்சின் குழப்பத்தினால் ஏற்பட்டதல்ல. இது எதார்த்த நிலைமையாக உள்ளது.
ஒருபுறம் தொழிலாளி வர்க்கத்தினால்தான் விடுதலையை சாதிக்க முடியும் என்பதும் எதார்த்தம்,அதே நேரத்தில் ஆளும் வர்க்கக் கருத்துக்கள் தொழிலாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி,தங்களது விடுதலையை அவர்கள் சாத்தித்துக் கொள்ள தடையாக இருக்கிறது,இதுவும் எதார்த்தமானதுதான்.
இந்த இரண்டுக்குமான முரணைத் தீர்த்திட மார்கசிய லெனினியம் உருவாக்கிய தீர்வுதான் புரட்சிகர கட்சி ஸ்தாபனம்.
ரஷ்யாவில் உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் முடங்கி, பின்தங்கிய உணர்வு நிலையில், இருந்தது.அதனை உணர்வுரீதியில் புரட்சிக்கு தயார் செய்தது,உள்ளூர் கிளையிலிருந்து,மேல்மட்டம்வரை கட்டப்பட்ட, கம்யூனிஸ்ட் அமைப்புக்கள்.
தொழிலாளியும்,கட்சியும்
லெனின் தனது “என்ன செய்ய வேண்டும்?” நூலில்
“தொழிலாளி வர்க்கம் தனது இயக்கங்களின் மூலமாக தொழிற்சங்க உணர்வை மட்டுமே அடைய முடியும்:இதுதான் உலக நாடுகளின் வரலாறு.சங்க வேலைகளில் ஈடுபடுவது,முதலாளியை எதிர்த்துப் போராடுவது,தொழிலாளர்கள் நல சட்டங்களை இயற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவது,போன்றவற்றை செய்வதற்கான உறுதியை மட்டுமே தொழிற்சங்க உணர்வு தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. “ என விளக்குகிறார்.
உண்மையான வர்க்க உணர்வு என்பது வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் “பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்வது” என்கிறார் லெனின்.அதாவது,தனது,வேதனைகள்,துயரங்கள் ,உழைப்புச் சுரண்டல் கொடுமைகள் அனைத்திற்கும்,கண்ணுக்குப் புலப்படாத,கடவுள் மீது பாரத்தை சுமத்தி,அற்ப நிம்மதி காண்பதும்,அறிவியலற்ற பார்வையான தலைவிதியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் மூழ்கிக் கிடப்பதும், கருத்துமுதல் வாதப் பார்வை எனப்படும்.மாறாக நடக்கிற நிகழ்வுகளிலிருந்து உண்மைகளை அறிந்து கொள்ளும் பொருள்முதல்வாதப் பார்வைதான், மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் லெனின்.
இந்த பொருள்முதல்வாதப் பார்வை கொண்டு இதர வர்க்கங்களின் நிலைமைகளை சரியாகப் புரிந்து கொள்ளும் அளவிற்காண அரசியல் அறிவும் ஆற்றலும் கிடைத்து தொழிலாளி தனது நிலையை உயர்த்திக் கொள்கிறார்.அப்போது அவர் வர்க்க உணர்வு பெற்றவராகிறார்.
இந்த உயர் நிலையை தொழிலாளி வர்க்கம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்கிறார் லெனின்.அதாவது,வர்க்க,அரசியல் உணர்வு,வேலைத்தளத்தில் வராது. வெளியிலிருந்து வளர்க்கப் பட வேண்டும் என்பது லெனினியம். அதனை புரட்சிகர கட்சி செய்திட வேண்டும்.
லெனின் எழுதுகிறார்.
“வலுமிக்க,ஊசலாட்டமில்லாத,நிலையான கட்சி,உழைக்கும் மக்களிடம் விரிந்த செல்வாக்கைப் பெற்றிடும்.பல்வேறுபட்ட,தரமான,பன்முகத்தன்மை கொண்ட பிரிவினரை அது ஈர்த்திடும்…”
வர்க்க முன்னணிப் படை
கட்சியையும் வர்க்கத்தையும் ஒன்றாகப் பார்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது இந்த குழப்பத்தைப் போக்கிட, “கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை “என்ற பொன்னான வாசகத்தை லெனின் எழுதுகிறார்.
கட்சிக் கோட்பாடுகள் குறித்து 1904-ஆம் ஆண்டு கட்சி மாநாட்டில் கடும் சர்ச்சைகள் எழுந்தன.இறுதியில் போல்ஷ்விக்குகள்,மென்ஷ்விக்குகள் என கட்சியில் பிளவு ஏற்பட்டு மாநாடு முடிந்தது. அந்த சர்ச்சைக்களை “ஓரடி முன்னால்,ஈரடி பின்னால்”என்ற நூலில் விவரிக்கின்றார் லெனின்.
மாநாட்டில்,கட்சி விதிகள் பற்றிய விவாதம் கடுமையானதாக இருந்தது.கட்சி விதிகளின் முதல் பாராவே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தப் பாராவில், கட்சியின் முக்கிய தலைவரான மார்டவ் எழுதிய நகலில்,மார்டவ் கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்:
“ரஷ்ய சமுக ஜனநாயக தொழிலாளர் கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி) உறுப்பினர் என்பவர் கட்சிதிட்டத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.கட்சிக்கு நிதி அளித்து ஆதரிக்க வேண்டும்;கட்சிக்கு உதவிடும் வகையில், கட்சியின் ஒரு அமைப்பு சார்ந்த வழிகாட்டுதல் அடிப்படையில் தனது பணியினை தொடர்ச்சியாக அவர் செய்திட வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
லெனின் இதனை ஏற்காமல் வாதாடினார்.அந்தப் பாராவை மாற்றி எழுதினார் லெனின்.
“கட்சியின் உறுப்பினர் கட்சித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.கட்சிக்கு நிதி அளித்து ஆதரிக்க வேண்டும்.அத்துடன்,கட்சியின் ஒரு அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.”
மார்டவ் கருத்துக்கும்,லெனின் கருத்துக்கும் என்ன வித்தியாசம்?
கட்சியின் அமைப்புக்களான தொழிற்சங்கம்,விவசாய சங்கம்,இளைஞர் அமைப்பு போன்ற ஏதாவது பொருத்தமான அமைப்பில் பங்கேற்பதை கட்டாயமாக்குகிறார்,லெனின்.
அதனை மார்டவ்,கட்சி உறுப்பினர் அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார்!
வெகுமக்களை புரட்சிக்கு தயார் செய்யும் பணிக்காக கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு வெகு மக்கள் அமைப்பில் அயராமல் பணியாற்ற வேண்டும் என்பது லெனினது பார்வை.புரட்சி இலக்கிலிருந்து ஒரு சிறு பிரச்னை கூட லெனினது கூறிய பார்வையில் தப்பிட முடியாது என்பதற்கு 1904-ஆம் ஆண்டு கட்சி மாநாடு ஒரு எடுத்துக்காட்டு.
இந்தப் பிரச்னையில் பிளவு ஏற்பட்டது.
மார்க்சிய வழியில் லெனின் புரட்சிகட்சிக்க்ன கோட்பாடுகளை உருவாக்கி போல்ஷ்விக் கட்ச் உர்வ்வதர்கு வித்திட்டார்.
“ரஷ்யக் கம்யூனிஸ்ட்கள் ரஷ்ய நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஒரு ஸ்தாபனத்தைக் கட்ட வேண்டும்.அதன் வழியாக சமுக ஜனநாயகத்தை( கம்யூனிஸ்ட் கருத்துக்களை) பரப்பிட வேண்டும்.ஒரு அரசியல் சக்தியாக தொழிலாளி வர்க்கம் உருவாக கட்சி தேவை.”என லெனின் எழுதினார்.
1902-ஆம் ஆண்டிலிருந்தே புரட்சிகர கட்சி ஸ்தாபனம் பற்றி லெனின் எழுதி வந்தார்.அவரது பிரசித்தி பெற்ற “என்ன செய்ய வேண்டும்?”என்ற நூல் முதன் முதலாக ரஷ்ய நிலைமைகளுக்கு ஏற்றவாறு கட்சிக் கோட்பாடுகளை பேசுகிற நூல்.
லெனின், முற்றிலும் புதிதோர் கட்சி ஒன்று தேவை என்று வலியுறுத்தினார்.1904-ஆம் ஆண்டில் ரஷ்ய கம்யூனிஸ்ட்களுக்கு இடையே தீவிரமான விவாதம் நடந்தது.அது,ஒரு புரட்சிக் கட்சி எப்படியிருக்க வேண்டும் என்ற விவாதம்.
1917-புரட்சிக்கு முந்தைய காலங்களில் தலைமறைவான பணிகளை உள்ளூர் சார்ந்த கட்சி குழுக்கள் மேற்கொண்டன.இந்தக் கட்சி குழுக்கள் விவாதங்கள் நடத்தி,ஜனநாயகத் தன்மையுடன் செயல்பட்டு வந்தன.இந்தக் கட்சிக் குழுக்கள் அதிக அளவில் தொழிலாளர்களை சேர்ப்பதில் முனைப்பு காட்டின.
இந்தக் குழுக்களின் முக்கிய பணி ஜார் ஆட்சி தடை செய்த,சட்டவிரோதமான,புரட்சிகர இலக்கியங்களை கட்சியின் மேல்மட்ட மையத்திலிருந்து பெற்று விநியோகிப்பதும்,புதிய பிரசுரங்களை படைத்து அவற்றை விவாதிப்பது,விநியோகிப்பது,கிளர்ச்சி, பிரச்சாரம்,வேலை நிறுத்தம் தெருக்களில் ஆர்பாட்டம்,மறியல் போன்றவற்றை திட்டமிட்டு நடத்துவதையும் இந்தக் குழுக்கள் செய்தன.இந்த வேலைகள் அனைத்தும் ஜார் அரசின் கடும் அடக்குமுறைக்கு இடையே நடந்தன.
இவை அனைத்தும் புரட்சிகர கட்சியின் வலிமை பெருகிட உதவிற்று.
ஜனநாயக மத்தியத்துவம்
இன்று, லெனின் என்றாலே வன்முறை மூலம் அதிகாரத்தை அடைய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவராக சித்தரிக்கபபடுகிறார்.பள்ளிக்கல்வி பருவத்திலேயே அப்படிப்பட்ட கருத்தை விதைத்து விடுகின்றனர்.
உண்மையில் லெனினியம் அரசியல் ஜனநாயக வழிமுறைகளில்தான் சோசலிசப் புரட்சியை அடைய முடியும் என்பதில் உறுதியாக உள்ள தத்துவம்.
லெனின் கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.இந்தக் கோட்பாடும் ஒரு அதிகாரவர்க்க ஜனநாயக விரோத நடைமுறையாக சித்தரிக்கப்படுகிறது.
ஒரு பிரச்னையை விவாதிப்பதில் முழு ஜனநாயக சூழல் கட்சிக்குள் இருக்க வேண்டும்;அத்துடன் செயல் என்று வரும்போது கட்சி ஒருமித்த கருத்துடன், ஒரு ஒன்றுபட்ட சக்தியாக, களத்தில் இறங்க வேண்டும்.இதுதான் லெனினிய நோக்கில் ஜனநாயக மத்தியத்துவம்.இது கட்சிக்குள் சரியாக கடைபிடிக்கப்பட வேண்டும்.
இந்தக் கோட்பாட்டின் அமலாக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக இக்கோட்பாட்டையே கைவிடவேண்டும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.சில இடதுசாரி அறிவுஜீவிகளும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.இந்த கோட்பாடு குறித்த சரியான லெனினியப் புரிதல் தேவைபடுகிறது.
1906-ஆம் ஆண்டு லெனின் எழுதினார்:
“உள்ளூர் கட்சிக் குழுக்களின் சுயேச்சைத் தன்மை என்பதும்,ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு என்பதும், விமர்சனம் செய்வதற்கான முழு,நிறைவான சுதந்திரம்தான்.ஆனால் இது உறுதியான,தீர்க்கமான செயலில் இறங்குவதற்கு இடையூறாக அமைந்து விடாத வகையில் இருக்க வேண்டும்.கட்சி தீர்மானித்திருக்கிற முடிவினை முன்னெடுத்துச் செல்ல இடையூறாக இருக்கும் எந்த விமர்சனத்தையும் இந்தக் கோட்பாடு அனுமதிக்காது;அல்லது ஒருங்கிணைந்த செயல்பாட்டை தடுக்கிற விமர்சனங்களையும் இந்தக் கோட்பாடு அனுமதிப்பதில்லை.”(விமர்சன சுதந்திரமும்,செயலில் ஒற்றுமையும்”-லெனின் கட்டுரை).
இந்த லெனினிய வழிகாட்டுதல் அடிப்படையில் கட்சி செயல்படுகிறபோது,முதலாளித்துவக் கட்சிகளில் தென்படாத, உயர்ந்த ஜனநாயகம் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் நிலவிடும்.செயல்திறனும்,தத்துவத் திறனும் கொண்ட கட்சியைக் கட்ட வேண்டுமென்றால்,உண்மையான ஜனநாயக மத்தியத்துவம் தேவை.
தத்துவம்,நடைமுறை
1902-ல் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?”கம்யுனிஸ்ட்களுக்கு ஒரு வழிகாட்டி நூல்.முதலாளித்துவ அரசினை எதிர்த்த போராட்டங்கள் எழுவது இயல்பானது.ஆனால் கம்யுனிஸ்ட்கள் பின்தங்கிவிடக்கூடாது.போராட்டங்களுக்கான தத்துவப் பின்னணியை தொழிலாளர்களுக்கு விளக்கிட வேண்டும்.
அதாவது, முதலாளித்துவ முறைதான் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம்;அதனை தூக்கி ஏறிய வேண்டும் என்பதுதான் தத்துவ போதனை;முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களை அகற்ற உரிய நடைமுறைகளை வகுத்திட வேண்டும்.இந்த தத்துவம்,நடைமுறை என்ற இரண்டு உலகிலும் இடையறாமல் சஞ்சரித்து,இடையறாமல் பயணம் செய்யும் கட்சிதான் புரட்சியை சாதிக்கும்.அப்படிப்பட்ட கட்சியை கட்ட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்துவது லெனினியம்.
“இடதுசாரி கம்யூனிஸம்;ஒரு இளம்பருவக் கோளாறு”என்ற நூலில் ,லெனின் ஒரு உண்மையான கம்யுனிஸ்ட் கட்சிக்கு மூன்று முக்கிய அம்சங்கள் கட்டாயமாக தேவை என்று லெனின் வரையறுக்கின்றார்.
1.தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி முதற்படையான கட்சிக்கு புரட்சிகர வர்க்க உணர்வு அவசியம்.
2.அமைப்புரீதியாகத் திரண்ட புரட்சிக்காரர்கள் கொண்ட கட்சிக்கு ஒரு சரியான புரட்சி நடத்துவதற்கான தொலைநோக்கி உத்தியும்,அன்றைய சூழலுக்கான நடைமுறை உத்தியும் அவசியம்.
3.கட்சி,மிக விரிவான அளவில் உழைக்கும் மக்களோடு நெருங்கிய தொடர்பும் ,பிணைப்பும் கொண்டதாக இருக்க வேண்டும்.
இந்த மூன்று வரையறைகளை நன்கு ஆராய்ந்தால்,தத்துவப் பணியும் நடைமுறையும்,பின்னிப் பிணைந்திருப்பதைக் காண முடியும்.முதல் இரண்டு அம்சங்களும்,முக்கியமாக,தத்துவத் தளத்தில் கட்சி நடத்தும் போராட்டம்.மூன்றாவது அம்சம் கட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிற களப்போராட்டம்.
இந்த மூன்றும் இல்லாத கட்சி எப்படி இருக்கும்?
இதற்கு லெனின் வார்த்தைகள் கடுமையானவை.
இந்த மூன்றும் இல்லாத நிலையில் கட்சியில் மிஞ்சுவது “வார்த்தை சித்து விளையாட்டுக்களும்,கோமாளித்தனமும்தான்” என்கிறார் லெனின்.
சோவியத் வீழ்ச்சி அடைந்ததைக் காரணம் காட்டி, லெனினியம் இன்று பொருந்தாது என முதலாளித்துவம் பிரச்சாரம் செய்கிறது.உண்மையில்,சோவியத் வீழ்ச்சி, ரஷ்யப் புரட்சிப் பாரம்பர்யத்தின் வீழ்ச்சி அல்ல.அந்த பாரம்பர்யத்தை உருவாக்கிய லெனினியத்தின் வீழ்ச்சியும் அல்ல.
சோவியத் அரசு,முக்கியமாக தனது பிந்தைய காலங்களில், லெனினிய வழித்தடத்தில் செல்லாமல் விலகியதால் அங்கு சோசலிசம் பின்னடைவை சந்திக்க நேரிட்டது.இந்த விலகல்,கட்சி அமைப்பு உள்ளிட்டு,பொருளாதாரம்,அரசு செயல்பாடு என அனைத்திலும் ஏற்பட்டது.லெனினிய வழியில் செல்லாத காரணத்தினால்தான் வீழ்ச்சி ஏற்பட்டது.சோவியத் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய வேண்டுமானால்,சோவியத்தில் எவ்வாறு லெனினியம் மீறப்பட்டிருக்கிறது என்பதுதான் ஆய்வுக்களம்.
எனவே,சோவியத்தில் நிகழ்ந்த தவறுகளை அலசுவதற்கும் லெனினியமே தேவைப்படுகிறது.
இன்றும் தொடரும் பயணம்.
ரஷ்யப் புரட்சி உருவாக்கிய பாட்டாளி வர்க்க அரசான சோவியத் அரசு செய்த சாதனைகளை யாரும் இதுவரை நிகழ்த்திடவில்லை.
எழுதவும் படிக்கவும் தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு,அனைவருக்கும் எழுத்தறிவு அளிக்கும் பணியை அசுர வேகத்தில் செய்து முடித்தது.
அனைவருக்குமான சுகாதார வசதி,அனைவருக்கும் கல்வி வசதி,குடியிருப்புக்கான வீடு உரிமை,வேலைக்கான உரிமை,என பொதுச் சேவை வசதிகளை மக்களுக்கு உரித்தாக்கிய அரசு சோவியத் அரசு. அது மட்டுமல்லாது இன,சாதி,மத வெறியினைத் தூண்டி அதில் தங்களை வளர்த்துக் கொள்கிற முதலாளித்துவ சக்திகளுக்கும்,அவற்றின் சமுகக் கேடுகளுக்கு மாற்றாக, உண்மையான சமத்துவம் சகோதரத்துவம்,மனிதநேயம் போற்றும் மாற்றுப் பண்பாட்டை உருவாக்கிய சமுகம் சோவியத் சமுகம்;அதற்கு வித்திட்ட ரஷ்யப் புரட்சியை மனித இனம் மறந்திடாது;அதனை யார் மறைக்க முயன்றாலும் உழைக்கும் வர்க்கம், அதனை முறியடித்து, ரஷ்யபுரட்சியின் பாரம்பர்யத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
இன்றைய உலகக் கார்ப்பரேட் ஊடக நிறுவனங்கள் புரட்சி வரலாற்றை ஓயாமல் அவதூறு செய்கின்றனர்.”பாசிசத்தை விட மோசமானது,போஷிவிசம்” என்று ஒரு எழுத்தாளர் எழுதுகிறார்.மற்றொருவர், ஹிட்லரை விட மோசமானவர் ஸ்டாலின் என்று நூல் வெளியிடுகிறார்.இவை அனைத்தும் சோசலிசப் புரட்சி மீண்டும் நிகழ்ந்து, முதலாளித்துவத்திற்கு ஆபத்து வந்துவிடக்கூடாது எனும் உள்நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன.
1930-ஆம் ஆண்டுகளில், பாசிசம் உலகிற்கு ஆபத்தாக எழுந்தபோது கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து உலகைக் காப்பாற்றிய பெருமை சோவியத் அரசிற்கே உண்டு.பாசிசம் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளை அச்சுறுத்திய போதெல்லாம் அந்த நாடுகளுக்கு உதவி செய்த சர்வதேசிய மனிதநேயம் கொண்ட நாடாகவும் சோவியத் நாடு விளங்கியது. இது அனைத்தும் லெனின் தலைமையில் நடந்த ரஷ்யப் புரட்சி உருவாக்கிய பாரம்பர்யம்.
ரஷ்யப் புரட்சி நிகழ்ந்து முடிந்து நூற்றாண்டு நிறைவை நோக்கி வரலாறு நகர்கிறது.இன்று நிலைமைகள் மாறியிருக்கலாம்.ஆனால்,ஏகாதிபத்தியம் இன்றும்,உலகை இலாப,மூலதன வேட்டைக்கு சூறையாடுகிற பொருளாதார ஆதிக்க வெறியுடன் இயங்கி வருகிறது.இராணுவ வல்லமை கொண்டதால் நாடுகளை வேட்டையாடி மக்களை கொன்று வருகிறது.
சோவியத் சமுகம் படைத்த சமத்துவ,சகோரத்துவ,மனிதநேயப் பண்பாடு உலகில் தழைக்க வேண்டும்.அதனை லெனினிய புரட்சிகளே சாதிக்கும்.
முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்த சூழலில், மார்க்சியத்தை வளர்த்து,புதியப் பங்களிப்புக்களை உருவாக்கியர் லெனின். புரட்சி மாற்றத்தை நிகழ்த்திட, அரசியல் வியுகங்களையும் கட்சிக் கோட்பாடுகளையும் உருவாக்கிய மகத்துவம் லெனினையே சாரும்.இன்றைய சவால்களை சந்திக்கவும் லெனினியமே தேவை.
நிச்சயமாக, லெனின் வாழ்ந்து கொண்டிருக்கிறார். புதிய சவால்களை சந்திக்க அவர் லெனினியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.! ரஷ்யப் புரட்சி துவக்கிய உலக சோஷலிச சகாப்தத்தின் பயணம் தொடரும்.அது வெற்றியை ஈட்டும்.!