ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் – ஓர் அரசியல் கண்ணோட்டம்


முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மாற்று திட்டத்தின் கீழ், இடதுசாரி, ஜனநாயக சக்திகளை, ஒருங்கிணைக்க வேண்டும்; பிரம்மாண்டமான போராட்டங்களின் மூலம் நமது வர்க்கங்களை அணி திரட்ட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது கட்சி காங்கிரசின் முடிவு. காங்கிரஸ், பாஜக போன்ற பெருமுதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ பிரதிநிதிகளானாலும், நவீன தாராளமய கொள்கைகளைப் பின்பற்றும் பிரதான மாநில முதலாளித்துவ கட்சிகளானாலும், அவை கொள்கை ரீதியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் பின்னுள்ள உழைக்கும் மக்கள் இடதுசாரி அரசியல் நோக்கி வருவதற்கான அழுத்தத்தைக் கட்சியின்  அன்றாட நடவடிக்கைகள், போராட்டங்கள், தேர்தல் உத்தி உள்ளிட்ட முயற்சிகள் மூலம் உருவாக்க வேண்டும். இந்தப் பின்புலத்தில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பார்ப்போம்.

கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் ஏற்கனவே இடதுசாரி, ஜனநாயக சக்திகள் ஓரளவு அணி திரட்டப்பட்டுள்ளன. பல பத்தாண்டுகள் நடந்த வர்க்க போராட்டங்களின் மூலமாகவும், ஐக்கிய முன்னணி உத்தியின் மூலமாகவும், ஜனநாயகத்துக்கான இயக்கத்தின் மூலமாகவும்,  இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடும் அடக்குமுறைகளை சந்தித்து, மகத்தான தியாகங்களை செய்தே இந்த இடத்தை இடதுசாரிகள் எட்டியிருக்கின்றனர். இதன் மூலம் வர்க்க சேர்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவு இடதுசாரி அரசியலுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளில் வர்க்க எதிரிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் போராட்டங்களும் அதன் ஒரு பகுதியாகவே இருக்கின்றன.

கேரளா:

இடது ஜனநாயக முன்னணி, 2011இல் 68 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இத்தேர்தலில் மொத்தமுள்ள 140இல் 91 தொகுதிகளில் வென்று ஆட்சியை அமைத்திருக்கிறது. காங்கிரஸ் அணி, 73-லிருந்து 47 ஆகக் குறைந்துள்ளது. 2011 தேர்தலில் காங்கிரஸ் அணி இடது ஜனநாயக முன்னணியை விட 1,55,571 வாக்குகளும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 3,35,573 வாக்குகளும் அதிகம் பெற்றது. இடது ஜனநாயக முன்னணி 2015ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 3,19,820 வாக்குகள் அதிகம் பெற்ற நிலையிலிருந்து, இத்தேர்தலில் 9,17,196 வாக்குகள் என்ற உயர்வை அடைந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டால், காங்கிரஸ் அணியின் வாக்கு சதவீதம் 3.25 புள்ளிகள் குறைந்து, இடது ஜனநாயக முன்னணியின் வாக்கு சதவீதம் 3.65 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதாவது காங்கிரஸ் அணிக்கு சென்ற ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகள், இம்முறை இடது ஜனநாயக அணிக்கு மாறி வந்துள்ளன. பாஜக, நாடாளுமன்ற தேர்தலை விட, 0.89 புள்ளி வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

நாயர்கள் முதல் நாயாடிகள் வரை:

பொதுவாக, கேரளாவில் காங்கிரஸ் அணி – இடது ஜனநாயக முன்னணி என்ற இரு துருவ அரசியல்தான்  நீண்ட காலம் நடைமுறையில் இருந்து வந்தது. பாஜக தேர்தல் களத்தில் நின்றாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இம்முறை, பாஜக மதவாத அடிப்படையில் பிரச்சாரத்தை முடுக்கி விட்டது. சாதிய அமைப்புகளைத் தன் பக்கம் ஈர்த்தது. கேரளாவின் அடிப்படையான மதச்சார்பற்ற பாரம்பரியத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அதன் நடவடிக்கைகள் அமைந்தன. காங்கிரஸ் அணியோ பாஜக குறித்து மென்மையான அணுகுமுறையையே கடைப்பிடித்தது. பாஜகவின் மதவாதத் திட்டம் நிறைவேற  வேண்டுமானால், அதற்கு நேர்மாறான திட்டத்தைக் கொண்டுள்ள இடதுசாரிகள் பின்னடைவை சந்திக்க வேண்டும், அதற்கேற்ற முறையில்தான் பாஜகவின் பிரச்சாரம் நடைபெற்றது.

2011 தேர்தலில் பெற்றதைவிட, பாஜக, இத்தேர்தலில் 8.93 புள்ளி  வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. SNDP (Sri Narayana Dharma Paripalana movement) என்று துவக்க காலத்தில் உருவான சமூக சீர்திருத்த அமைப்பு, பின்னர் சாதிய அமைப்பாக செயல்பட்டு, தற்போது வெள்ளப்பள்ளி நடேசன் தலைமையில் BDJS (Bharat Dharma Jana sena) என்ற அரசியல் கட்சியாக உருவெடுத்து, பாஜகவுடன் தேர்தல் கூட்டணியில் இடம் பெற்றது. 2014 நாடாளுமன்ற தேர்தலிலேயே எஸ்.என்.டி.பி. ஓர் அமைப்பாக பாஜக அணிக்கு ஆதரவு கொடுத்தது என்பதுடன் 2015 உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின், கேரளாவைக் குறி வைத்து, திட்டமிட்ட முறையில் ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டது. மதவாத/சாதிய அமைப்புகளை பாஜகவை நோக்கி ஈர்க்கும் வேலை நடந்தது. இந்து நாடாளுமன்றம் என்ற இயக்கத்தைத் துவங்கி நாயர் சமூகம் முதல் நாயாடி (பழங்குடியினத்தவர்) சமூகம் வரை, 104 சமூகத்தினரை இந்து மத அடிப்படையில் திரட்டும் செயல்பாடுகள் நடந்தன. இதன் தொடர்ச்சியாகவே மேற்கண்ட அரசியல் கட்சி உருவாக்கமும் ஏற்பட்டது. இந்த நிகழ்முறையின் போதே, சிபிஎம் இதன் பாதகமான விளைவுகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்தது. இது ஆர்.எஸ்.எஸ். சதி திட்டம் என்பதை அம்பலப்படுத்தியது. இதன் விளைவாக, இடது ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்களாக இருந்த ஈழவ சமூக பகுதியினரைப் பெருமளவு பாஜக அணியில் இடம்பெற்ற இந்தப் புதிய அரசியல் கட்சியினால் கலைக்க முடியவில்லை. இருப்பினும் 10 தொகுதிகளில் இக்கட்சி 25,000க்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி கணக்கில் எடுத்து, உரிய தலையீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

பாஜக அணி, 15.01% (30,20,886) வாக்குகளைப் பெற்றுள்ளது. முதன் முறையாக நேமம் தொகுதியில் வெற்றி பெற்று, கேரள சட்டமன்றத்தில் தன் கணக்கைத் துவங்கியுள்ளது. காங்கிரஸ் அணியின் ஒரு பகுதி வாக்குகள் பாஜகவுக்கு மாற்றப்பட்டதும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்.  இருப்பினும்,  பாஜகவின் நீண்ட கால மதவாத பிரச்சாரம், ஒரு பகுதி மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.என்.டி.பி., கேரள புலையர் மகாசபா (KPMS) உள்ளிட்ட சாதிய அமைப்புகளை பாஜக அணி திரட்டியது. கோவில்களைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், பக்தர்கள் என்ற அஸ்திவாரத்தின் மீது தம் கட்டுமானத்தை உருவாக்கவும் முயற்சி செய்தது. மத்திய ஆட்சி என்ற ஆயுதத்தையும் பயன்படுத்தியது. 7 தொகுதிகளில் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இடது ஜனநாயக முன்னணியின் மகத்தான வெற்றிக்குப் பின்னரும், வெற்றி விழா நிகழ்வுகளில் புகுந்து பாஜக தாக்குதல் நடத்தியது. 2 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டு, வேறு சிலர் காயமடைந்துள்ளனர். ஆனால், சிபிஎம் வன்முறையில் ஈடுபட்டது என்று பொய்களை முன் வைத்து டெல்லியில் ஆர்ப்பாட்டம், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு அலுவலகத்தின் மீது கல்வீச்சு போன்ற நடவடிக்கைகளில் இறங்கியது. தேர்தலுக்குப் பின்னும், பாஜக தேசிய தலைவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் கேரளாவைக் குறி வைத்து வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

கேரள வளர்ச்சிக்கு மைய இடம்

இடது ஜனநாயக அணியைப் பொறுத்த வரை, கார்ப்பரேட் மயம், ஊழல், மதவெறி எதிர்ப்பை முன் வைத்தது. மக்களுக்குப் புரியக் கூடிய விதத்தில், ”எல்.டி.எஃப். வரும் எல்லாம் சரியாகும்” என்ற முழக்கம் அனைத்து இடங்களிலும் எதிரொலித்தது. கேரள வளர்ச்சி குறித்து, சர்வதேச கேரள ஆய்வு மாநாட்டில் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளின் சாரம், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றது. இது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. மாநிலம் முழுதும் நவ கேரள மார்ச் நடந்தது. பெண்கள் நாடாளுமன்றம் என்ற நிகழ்வை நடத்தி பாலின நிகர்நிலை அம்சங்களுடன் வளர்ச்சியை இணைப்பது என்ற கருத்தியல் முன்வைக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு என்பதும் மைய பொருளாக உருவானது. வாலிபர் இயக்கத்தின் சார்பில், மத நல்லிணக்கத்துக்காக மாநிலம் தழுவிய பிரச்சாரம் நடந்தது. இத்தகைய நடவடிக்கைகள் தொகுதிவாரியாகவும் நடத்தப்பட்டன. சமூக வலைத்தளமும் சிறந்த முறையில் இயங்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும், மக்கள் பிரச்னைகளுக்காகவும் பல்வேறு பிரம்மாண்டமான இயக்கங்கள், பெரும் மக்கள் பங்கேற்புடன் நடந்தன. இயற்கை விவசாய முறையில் வீட்டு தோட்டங்கள், ஓணம் மார்க்கெட்டுகள், கடும் நோயால் பாதிக்கப்பட்டோருக்கான வலி நிவாரண நடவடிக்கைகள் போன்ற சமூக சேவை நடவடிக்கைகள் மக்களை ஈர்த்தன. கட்சி முழு ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தது. ஒரு புறம் காங்கிரஸ் அணி; மறுபுறம் பாஜக அணி என்ற இரட்டை அபாயங்களை முறியடித்து, வெற்றியை ஈட்டியுள்ளது. இது, ஒரு மாநில வெற்றி மட்டுமல்ல, தேசிய அரசியலில் இடதுசாரிகளின் பங்கை வலுப்படுத்தியுள்ள நிகழ்வுமாகும்.

மேற்குவங்கம்:

திரிணமூல்காங்கிரஸ் அணி மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 211-ஐ கைப்பற்றி மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. 45% வாக்குகளுடன் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வென்றுள்ளது. இடது முன்னணி மற்றுமுள்ள கூட்டணி கட்சிகள் 26.30%, காங்கிரஸ் 12.25% என்ற ரீதியில் வாக்குகள் பெற்று, 77 இடங்களில்(சிபிஎம் 25 உட்பட இடது முன்னணி 32, காங்கிரஸ் 44, இருவரும் ஆதரித்த சுயேச்சை 1) வெற்றி பெற்றுள்ளது. இதர கட்சிகளைப் பொறுத்த வரை பாஜக 3, GJM 3 தொகுதிகளை வென்றுள்ளன. வாக்குகள் என்று பார்க்கும் போது, திரிணமூல் காங்கிரஸ் அணி 2,46,20,785ம், (45.01%) இடது முன்னணி, கூட்டணி கட்சிகள், காங்கிரஸ், இந்த அணி ஆதரித்த சுயேச்சைகள் மொத்தம் 2,15,65,044ம் (39.43%) பெற்றுள்ளன. அதாவது 30 லட்சம் வாக்குகள் மற்றும் 5.58 புள்ளி வித்தியாசம். ஆனால் தொகுதிகளில் 134 வித்தியாசம். (விகிதாச்சார பிரதிநிதித்துவம் இருந்திருந்தால், இடது முன்னணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்திருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.)

சிபிஎம்-மின் சரிந்து வந்த வாக்கு சதவீதம் இத்தேர்தலில் மேலும் சரியாமல் பாதுகாக்கப் பட்டிருந்தாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 27 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில் இம்முறை இடது முன்னணி கூடுதலாக 5ல் வென்றிருந்தாலும், 2011 தேர்தலை விட (62 இடங்கள்) கணிசமான முன்னேற்றத்தை எதிர்பார்த்திருந்த சூழலில் இந்தத் தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை அளிக்கின்றன.

தோல்விக்கு அரசியல், ஸ்தாபன காரணங்கள் உண்டு. அரசியல் காரணங்கள் என்று பார்க்கும் போது, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நடைமுறை உத்திக்கும், மத்தியக்குழு வழிகாட்டுதலுக்கும் முரணாக, மேற்கு வங்கக் கட்சி, காங்கிரசுடன் தேர்தல் உடன்பாடு கண்டது ஒரு காரணம். பொதுவாக மக்கள் அதை ஏற்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.  திரிணமூலின் வன்முறையைக் காங்கிரசின் மாநில தலைமை எதிர்த்ததே தவிர, களத்தில் இறங்கிப் போராடவில்லை. பாஜகவின் பொருளாதார கொள்கைகளுடன் உடன்பாடு இருப்பதால், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிலையையும் எடுக்க முடியவில்லை. காங்கிரஸ் அகில இந்திய தலைமை, தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் திரிணமூல் எதிர்ப்பு நிலைபாட்டை எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னும், பின்னும் காங்கிரஸ் ஊழியர்கள், ஆதரவாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் திரிணமூலுக்குச் சென்று விட்டனர்.

மேலும் திரிணமூல் கட்சி, காவல்துறை மற்றும் சமூக விரோதிகளின் உதவியோடு கடும் அராஜகம், வன்முறை போன்றவற்றை நடத்தியது. எதிர்ப்பவர்கள் மீது தாக்குதல், குடியிருப்பிலிருந்து துரத்துவது போன்ற நடவடிக்கைகள் மிகுந்த அச்சுறுத்தலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. இடது முன்னணியின் நடமாட்டத்தையும், தேர்தல் பணிகளையும் முடக்க முயற்சித்தது. ஊழல் செய்து உருவாக்கிய பெரும் நிதியைத் தேர்தலுக்காகப் பயன்படுத்தியது. அரசு நல திட்டங்கள், 100 நாள் வேலைக்கான கூலி போன்றவற்றை ஒரு வருடத்துக்கு மேல் நிறுத்தி வைத்து, தேர்தலுக்கு சற்று முன், அவரவர் வங்கிக் கணக்குக்கு அனுப்பியது. கால தாமதம் என்ற கோபத்தை விட, கணிசமான தொகை வங்கிக் கணக்கில் ஏறியது என்பதையே மக்கள் பார்த்தனர். மேலும் பலரிடம், தேர்தலுக்குப் பின் தருவதாகக் கூறி, அவர்கள் வாக்குகளையும் உறுதி செய்தது. வேலை அட்டை, ரேஷன் அட்டைகளைப் பறித்து வைத்துக் கொண்டு, வாக்களித்த பிறகு திருப்பித் தருவதான மிரட்டலும் இருந்தது. மேலும், இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளைத் தாஜா செய்யும் அணுகுமுறையும், குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற்றுத் தந்தது. இருப்பினும், அச்சுறுத்தலால் மட்டுமே அவர்களுக்கு அனைத்து வாக்குகளும் கிடைத்ததாகக் கூற முடியாது. உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மலிவு விலையில் அரிசி/கோதுமை, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டம், பரவலாக இருக்கும் இளைஞர் கிளப்புகளுக்கு (youth club) நிறைய நிதி உதவி போன்றவை, சம்பந்தப்பட்ட மக்கள் பகுதியினரிடம் ஆதரவைத் திரட்ட உதவியது.

பாஜக – திரிணமூல் மறைமுக உடன்பாடு இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், திரிணமூல் ஊழல் குறித்துக் காட்டமான விமர்சனம் செய்த மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு மௌனமே சாதித்தார். திரிணமூல் தலைவர்களின் சாரதா ஊழல் குறித்த வழக்கில் மத்திய புலனாய்வு பிரிவு மந்தமான செயல்பாட்டையே மேற்கொண்டது. ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளும், அதன் பரிவார அமைப்புகளின் நடவடிக்கைகளும் பல மடங்கு அதிகரித்தன. ஆனால் திரிணமூல் அரசு, அதைக் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது. தேர்தலுக்குப் பிறகும் கூட, மாநில பாஜக மீதான திரிணமூல் காங்கிரசின் வன்முறையை, மாநில தலைமைதான் எதிர்க்கிறதே தவிர, அகில இந்திய தலைமை வேறு அரசியல் காரணங்களுக்காக நழுவிப் போகும் நிலையைக் காணலாம்.

பாஜக இத்தேர்தலில் 10% வாக்குகளைப் பெற்றுள்ளது. 2011ல் பெற்ற 4.06 சதவீதத்தை விட அதிகம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 16.84%ஐ விடக் குறைவு. நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளை வென்றதுடன், 24 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இத்தேர்தலில் 3 இடங்களைப் பெற்றுள்ளது. நடுத்தர வர்க்கம் மற்றும் முதன்முறை வாக்காளர்களின் ஒரு பகுதியினர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இடது முன்னணி அதிகம் முன்வைத்த சாரதா ஊழல், நாரதா ஊழல், கொல்கத்தா மேம்பால விபத்து போன்றவை கிராமப்புற மக்களிடம் எதிர்பார்த்த அளவு செல்வாக்கு செலுத்தவில்லை.

கடும் வன்முறைக்கு நடுவில், தினசரி நடக்கும் தாக்குதல்களுக்கு மத்தியில், மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் துணிச்சலாக நின்று தேர்தலை சந்தித்துள்ளனர்.  இடது முன்னணியின் சார்பில் தேர்தலுக்கு முன் 6 மாத காலமாகப் பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. தலைமை செயலகம் நோக்கிய பேரணி, அதில் காவல்துறையின் அடக்குமுறை, விவசாய இயக்கங்களின் பேரணி அதிலும் காவல்துறையின் கடும் அராஜகம், வாக்குச்சாவடி மட்ட இயக்கங்கள், 11 இடதுசாரி கட்சிகளின் வர்க்க வெகுஜன அமைப்புகளின் மேடையை உருவாக்கி அதன் மூலம் இயக்கங்கள் இவற்றில் எல்லாம் மக்களின் பங்கேற்பு வலுவாக இருந்தது. பிளீனத்தை ஒட்டி கல்கத்தாவில் பிரிகேட் மைதானத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்ற பொது கூட்டம் போன்றவை நிச்சயம் ஒரு தாக்கத்தை இடதுசாரிகளுக்கு ஆதரவாக உருவாக்கியிருக்கிறது.

மிகுந்த நெருக்கடியில், இடது முன்னணியையும், அதன் தோழர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் காங்கிரசுடன் தேர்தல் உடன்பாடு கண்டதை நியாயப்படுத்தி சில வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.  திரிணமூல் மற்றும் பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகளைத் திரட்டுவது என்பதற்கேற்பவே காங்கிரசுடன் உடன்பாடு எட்டப்பட்டது என்பது அதில் ஒரு முக்கிய வாதம். ஆனால், பெருமுதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கக் கட்சியை ஜனநாயக சக்தியாக வரையறுக்க முடியாது.  அதே போல், காங்கிரசையும் இணைத்த மாநில அரசாங்கம், ஒரு குறைந்தபட்ச பொது திட்டத்தின் கீழ் அமையும் என்ற அறிவிப்பு, 25 ஆண்டு கால நடைமுறை உத்திகளைப் பரிசீலித்து உருவாக்கப்பட்ட 21வது கட்சி காங்கிரசின் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் முரணானது.

திரிணமூல் காங்கிரஸ், நவீன தாராளமயக்கொள்கைகளைக் கடைப்பிடித்து, ஆளும் வர்க்கத்தின் கருவியாக செயல்படுகிறது. பிற்போக்கு சக்திகள், சமூக விரோதிகளைத் தன்னகத்தே வைத்திருக்கிறது. கடந்த காலத்தில் கடைந்தெடுத்த வலதுசாரி சக்திகள் துவங்கி அதிதீவிர மாவோயிஸ்டுகள் வரை இணைத்து, ஒரு வானவில் கூட்டணியை உருவாக்கியிருந்தது. இத்தேர்தலில் அத்தகைய அணி சேர்க்கை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றாலும், இடதுசாரி அரசியலுக்குப் பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்றால், சிபிஎம்-முக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், அதற்கு சிபிஎம்-மின் பிரதான அங்கமாகவும், இந்திய இடதுசாரி இயக்கத்தின் கலங்கரை விளக்கமாகவும் உள்ள மேற்குவங்கத்தில் சிபிஎம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்கிற ஆளும் வர்க்க நிகழ்ச்சி நிரலில் நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தின் கிராமப்புறங்களில் நடந்து கொண்டிருக்கும் மோதல்/போராட்டம் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான சராசரியான அரசியல் பகை அல்ல ; நில சீர்திருத்தத்தின் மூலம் விவசாயிகளின் கையில் கிடைத்த நிலத்தைப் பறிக்க நினைக்கும் கடந்த கால நில உடமையாளர்களின் வாரிசுகள், அவர்களுக்கு பக்கபலமாக உள்ள திரிணமூல் ரவுடிகளுக்கும், நிலத்தை எளிய விவசாயிகளின் கையில் நீடிக்க வைக்க முனையும் செங்கொடி இயக்கம் மற்றும் அதனுடன் இணைந்து நிற்கும் மக்களுக்கும் நடக்கும் வர்க்க போராட்டத்தின் ஒரு பகுதி. எனவேதான், இதர பகுதிகளில் செயல்படும் இந்திய பெருமுதலாளித்துவ/முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

இவ்வளவுக்கும் நடுவே, திரிணமூல் மற்றும் பாஜகவை எதிர்த்து 2 கோடிக்கும் மேல் வாக்குகள் பெற்றிருப்பது, நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. இடது முன்னணியிடமிருந்து விலகிப் போன பகுதிகளை மீட்டெடுக்கும் பணியை, இந்த அஸ்திவாரத்தின் மீதே செய்ய வேண்டும். இது மேற்கு வங்க கட்சியின் பணி மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கும் இடதுசாரிகள் பங்கேற்க வேண்டிய மகத்தான போராட்டம்.

தமிழ்நாடு:

அதிமுக  அணி 134 தொகுதிகளிலும் (40.8%), திமுக அணி 98 தொகுதிகளிலும் (39.7%), வெற்றி பெற்றுள்ளன. இரண்டு அணிகளுக்கும் வாக்கு வித்தியாசம் 1.1 புள்ளிகள் மட்டுமே. தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாக அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி  அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளன.

இந்நிலைக்கான அரசியல் காரணங்களைப் பார்க்கும்போது, பொதுவாக வலுவான வாக்கு வங்கிகளைக் கொண்ட இரு பெரும் கட்சிகளாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக – அதிமுக தமிழக அரசியல்வெளியில் இயங்குகின்றன.  இவை கடைப்பிடிக்கும் தாராளமய கொள்கைகளின் பலனை அனுபவிக்கும் கார்ப்பரேட்டுகள், முதலாளிகள், கிராமப்புற பணக்கார வர்க்கங்கள் ஆகியவை அதிமுக – திமுக இரண்டில் ஒன்று ஆட்சிக்கு வருவதையே ஆதரித்தன. ஊடகங்களும் பொதுவாக இதனையே பிரதிபலித்தன. இரு கட்சிகளின் மூலமும் நடந்த பெரும் பணப் பயன்பாடு தேர்தலில், தீர்மானிக்கிற சக்தியாக இல்லாவிட்டாலும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படிப் பயன்படுத்தப்படும் பணம் பிரதானமாக உயர்மட்ட ஊழலிலிருந்து வருகிறது.  அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்வதும், ஊழலைப் பயன்படுத்தி அதிகாரத்திற்கு வருவதும் என்பதான விஷ சக்கரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது ஜனநாயக முறைமையையே தளர்ந்து போக வைக்கும்.  பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கலாம் என்ற மனநிலை உருவாவது பண்பாட்டு சீரழிவின் ஓர் அம்சம்; ஊழல் அரசியல் மாறாது; நமக்கான பங்கினை நாம் பெற்றுக் கொள்வோம் என்ற முறையில்  மக்களின் சமூக உளவியல் தவறாக வடிவமைக்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் தாண்டி, வாக்குகளில் ஒரு மாற்றத்தை அல்லது திருப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அரசியல் ஸ்தாபன வீச்சை நாம் உருவாக்கிய மாற்று அணியால் ஏற்படுத்த முடியவில்லை.

தமிழகத்தில், கடந்த மாநில மாநாடும், பின்னர் கூடிய மாநிலக் குழுவும் தேர்தல் உத்தியை வரையறுத்தது. பெருமுதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளான காங்கிரஸ்/பாஜக, அதே போல் நவீன தாராளமய கொள்கைகளை ஆதரிப்பதுடன், மாநிலத்தில் அமல்படுத்துகிற திமுக/அதிமுக, சாதிய அரசியலைப்பின்பற்றுகிற பாமக இவற்றுக்கு மாற்றை நிறுவுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கான ஆவணத்தை உருவாக்கினாலும், அதை நோக்கிய வலுவான நடவடிக்கைகளை இனிமேல் தான் திட்டமிட வேண்டியிருக்கிறது. தேர்தல் உத்தி இதற்கு உதவக் கூடிய விதத்தில் அமைக்கப்படுவதற்கு முயற்சித்தோம். சிபிஎம் சிபிஐ தவிர மற்ற இடதுசாரி கட்சிகள் வலுவாக இல்லாத சூழலில், மாநில மதச்சார்பற்ற கட்சிகள் சிலவற்றுடன் தொடர்பு கொண்டோம்.  நவீன தாராளமய கொள்கைகளுக்கு உறுதியான எதிர்ப்பு நிலை எடுக்காத கட்சிகளாக இருந்தாலும், மேலே கூறிய ஐந்து கட்சிகளுடன் உடன்பாடில்லை என்ற நமது தேர்தல் அணுகுமுறைக்கு ஏற்புத்தன்மை உள்ளதாக இவை இருந்தன. நான்கு கட்சிகளை ஒன்றிணைத்த மக்கள் நல கூட்டியக்கம், மக்கள் பிரச்னைகளில் இயக்கம், பின்னர் தேர்தலை சந்திக்க மக்கள் நலக் கூட்டணி போன்ற நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. தமிழகத்தில் முதன்முறையாக, குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையிலான மாற்று உருவாக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையிலும், கல்வி, சுகாதார சேவைகள் இலவசமாக அளிக்கப் படும் என்ற மாற்றுக் கொள்கைகயின் அம்சங்கள் இணைக்கப்பட்டன.

அதிமுக – திமுகவுடன் இருந்த வரை, தேர்தல் காலங்களில் மாற்றுக் கொள்கைகளை முன் வைக்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இம்முறை மக்கள் நல கூட்டணி சார்பில் சில மாற்றுக்கொள்கைகளை முன்னிறுத்த முடிந்திருக்கிறது. இடதுசாரிகள் 50 தொகுதிகளில் போட்டியிட முடிந்திருக்கிறது. நமது 25 தொகுதிகளில் சிறப்பான பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்றிருக்கிறோம். இந்த அணி தோல்வியுற்றிருந்தாலும் அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற முழக்கம் தமிழகத்து மக்கள் மத்தியில் ஓரளவு சென்றுள்ளது.  இந்த அணி பெற்ற மொத்த வாக்குகள் 26,18,250. வாக்கு சதவீதம் 6.1%. பொதுவாக பண பலத்தையும், ஊடக திசை திருப்பலையும், சாதிய – வகுப்புவாத சிந்தனை போக்குகளையும் தாண்டியே இந்த வாக்குகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், சிபிஎம் பெற்றிருக்கும் வாக்குகள், மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே குறைவானவை. ஸ்தாபன பலவீனங்கள் ஒரு புறம், கடந்த காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருந்த சில தளங்களும் கரைந்துள்ளன என்பது மறுபுறம். மேலும் இக்கால கட்டத்தில் சில இயக்கங்களை நடத்தியிருந்தாலும், மாநிலம் முழுதும் வீச்சான வர்க்க இயக்கங்கள்/சமூக ஒடுக்குமுறைக்கெதிரான இயக்கங்கள் குறைவு; நடந்த இடத்திலும் இடதுசாரி அரசியலுக்கு ஆதரவாக தொடர்புகளைத் திருப்ப முடியவில்லை என்பதும் ஒரு காரணம்.

இத்தேர்தலில் பாமக/பாஜக பெற்றுள்ள ஆதரவும், வாக்குகளும் வர்க்க அரசியலை பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளன. சாதிய, மதவாத சிந்தனை போக்குகளை எதிர்த்த தத்துவார்த்த மோதல்களை உருவாக்குவதும், இவர்களது ஆதரவு தளமாக உருவாகியிருக்கக் கூடிய மக்கள் பகுதியினரின் வாழ்வுரிமை பிரச்னைகளில் இயக்கம் நடத்துவதுமே இவர்களின் பின்னுள்ள உழைப்பாளி வர்க்கங்களை வென்றெடுக்க உதவும்.

அடுத்து திமுக – அதிமுகவின் வாக்கு தளத்தைக் கரைக்காமல், மார்க்சிஸ்ட் கட்சிக்கான வெகுஜன தளத்தை உருவாக்காமல், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாது. கட்சியின் சொந்த பல அதிகரிப்பும், தேர்தல் வெற்றியும் ஒன்றோடொன்று தொடர்புடையது. சொந்த பலம் அதிகரிப்பு என்பது அரசியல்-ஸ்தாபன-தத்துவார்த்த தரம் பெற்ற அனைத்து மட்ட தலைமை/ஊழியர்கள் என்பதோடு, பிரச்னைகளில் தலையீடு செய்யும் திறன் உயர்வதுடனும் இணைந்தது. குறிப்பாக, கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்துவதும், அதிமுக – திமுக ஆட்சிக்கு வருவதை விரும்புவதுமான நிலப்பிரபுத்துவ மற்றும் இதர பணக்கார வர்க்கங்களின் உள்ளூர்/ஊராட்சி/கூட்டுறவு முறைகேடுகள், நில ஆக்கிரமிப்பு, இயற்கை வளங்களை அபகரித்தலுக்கு  எதிராக, பாதிக்கப்படும் சிறு, குறு விவசாயிகள், கிராமப்புற தொழிலாளர்களைத் திரட்டும் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. நிலக் குவியலுக்கு எதிராகவும், நில மறு விநியோகத்தை வலியுறுத்தியும் போராட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இளைஞர்களை ஈர்க்கும் மேடைகளை உருவாக்குவது அவசியம். வர்க்க, வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர்களை அரசியல்படுத்துவதற்கான முறையான திட்டமிடல் உடனடி தேவை. திராவிட இயக்கங்களுக்கு மாற்றான தத்துவ போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் பங்கேற்புடன் கூடிய சுயேச்சையான இயக்கங்களையும், கூட்டு இயக்கங்களையும் அதிகப்படுத்தி, உண்மையான மாற்றாக உள்ள இடது ஜனநாயக சக்திகளைத் திரட்டும் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கட்சியின் வேலை முறை மாற வேண்டும். ஸ்தாபனம் குறித்த பிளீனம் கொடுத்திருக்கும் வழிகாட்டலை, குறிப்பாக, “மக்களுடன் உயிரோட்டமான தொடர்பை உருவாக்குதல், பராமரித்தல்” என்பதை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கும், தேர்தல் வரை நிலைத்து நிற்பதற்குமான முயற்சிகள் சிபிஎம் தரப்பில்  எடுக்கப் பட்டன. மாஹே தொகுதியில் நமது கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றது என்பது நீண்ட காலத்துக்குப் பிறகு புதுச்சேரி சட்டமன்றத்தில் இடதுசாரிகளின் குரல் ஒலிக்க வகை செய்துள்ளது.

அசாம்:

அசாமைப் பொறுத்த வரை, பாஜகவின் அணி, இரண்டில் மூன்று பங்கு தொகுதிகளைக் கைப்பற்றி முதன் முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இது வட கிழக்கு பிராந்தியத்தில் பாஜக ஒரு கேந்திரமான தலையீட்டை செலுத்த அழுத்தம் கொடுக்கும். திரிபுராவும் இந்த பிராந்தியத்தில் இருக்கிறது என்பதும், இக்காலத்தில் அங்கு நடந்த இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜகவே இரண்டாம் இடத்துக்கு வந்தது என்பதும், எவ்வளவு எச்சரிக்கையாக இடதுசாரி சக்திகள் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஆறு இடதுசாரி கட்சிகள் ஓரணியாக நின்று தேர்தலை சந்தித்தன. ”காங்கிரஸ் பாஜகவை முறியடிப்போம், இடதுசாரிகளுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிப்போம்” என்கிற முழக்கத்துடன் மக்களை இந்த அணி சந்தித்தது. 44 தொகுதிகளில் நின்று 1.50 லட்சம் வாக்குகளைப் பெற்றது. ஸ்தாபன பலவீனம் என்பது, கூடுதல் வாக்குகள் பெற முடியாமல் போனதற்கான ஒரு முக்கிய காரணம். பிளீனம் முடிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் முதன்மை கடமையாக இருக்க முடியும்.

மொத்தத்தில் இத்தேர்தல்களில் பாஜக ஆதாயம் அடைந்திருக்கிறது. இதன் காரணம் அல்லது விளைவு என்ன? மெல்ல கொல்லும் விஷமாக மதவெறி பரவிக் கொண்டிருக்கிறது. வர்க்க அரசியல் பின்னுக்குப் போகிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. காங்கிரசைப் பொறுத்தவரை புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது, கேரளாவிலும், அசாமிலும் ஆட்சியை இழந்திருக்கிறது, மேற்கு வங்கத்தில் சற்று முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தமிழகத்திலும் சிறு முன்னேற்றம் பெற்றிருக்கிறது. இவற்றுக்கு மாற்றான இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்குக் கேரளாவில் வெற்றி, மேற்கு வங்கத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை, மற்ற மாநிலங்களில் ஏமாற்றம் அளிக்கும் முடிவுகள் என்பதே நிலை. இச்சூழலில் வர்க்க சேர்க்கையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய விதத்தில் நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும், இடதுசாரி, ஜனநாயக சக்திகளைத் திரட்ட வேண்டும், சிபிஎம்-மின் சொந்த பலம் அதிகரிக்க வேண்டும், திமுக – அதிமுகவுக்கு மாற்று என்ற துவக்கத்தை மேலும்  வலுப்படுத்த வேண்டும் என்பதே படிப்பினை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s