கேள்வி: மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இது அவசியமான பணியா?முதலாளித்துவக் கட்சிகளில் இது போன்ற எதுவும் நடப்பதில்லையே?
கம்யூனிஸ்ட் கட்சியில் கிளை மாநாடுகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பணி.
2018 ஏப்ரலில் கட்சிக் காங்கிரஸ் எனப்படும் இந்திய அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. முன்னதாக ,கிளையிலிருந்து துவங்கி , மாநில மட்டம் வரை மாநாடுகள் நடத்திட கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்துள்ளது.
மாநாடு எனும்போது,சாதாரணமாக வழக்கில் இருக்கும் புரிதலி்ருந்து மாறுபட்ட பொருள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உண்டு.
கடந்த மாநாட்டிற்குப் பிறகு, கட்சி மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தையும் அசை போடும் வாய்ப்பாக மாநாட்டு நிகழ்வு இருக்கும்.ஆனால், நடந்ததை நினைவுபடுத்திக் கொள்வது, அற்ப சந்தோஷத்திற்காக அல்ல.
உழைக்கும் மக்களை முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஒன்றுபடுத்துவது என்பது கட்சியின் அயராத போராட்டப்பணியாக அமைந்துள்ளது. இதில் மூன்று ஆண்டுக் கால முன்னேற்றம் என்ன என்பதை அறிவதுதான் கிளை மாநாட்டில் முக்கிய விவாதமாக அமையும். தொழிலாளிகள்,விவசாயிகள் உள்ளிட்ட வர்க்கப் பிரிவினரோடு கட்சி எப்படி உறவு கொண்டு, அவர்களிடம் ஆளும் அரசுகளுக்கு எதிரான உணர்வையும், இடதுசாரி மாற்று உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மாநாட்டின் முக்கிய கேள்வி.
தங்களது பகுதி மக்களிடையே சாதிய, மதவாத அடிப்படையில் எழுகிற சிந்தனைகளையும், இயக்கங்களையும் கட்சி எப்படி எதிர்கொண்டது என்று பரிசீலிக்கிற பணியும் மாநாட்டிற்கு உண்டு.
மக்களின் சமுக, பொருளாதார வாழ்வில் அரசு கொள்கைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டபோது கட்சி எப்படி களத்தில் அவர்களைத் திரட்டியது, உள்ளூர் பிரச்சினைகளுக்கான முன்முயற்சிகள், போராட்டங்கள் என அனைத்தும் மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன.
இவற்றை எல்லாம் விவாதித்து, எதிர்கால செயல்பாட்டுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஏற்கிற முடிவுகள் எடுக்கப்படும்.
வெகு மக்களை திரட்டும் புரட்சிக் கட்சியாக……
கொல்கத்தாவில் கட்சி நடத்திய பிளீனம் எனப்படும் சிறப்பு மாநாட்டில் புரட்சிகர கட்சி என்ற வகையில் வெகுமக்கள் பாதையில் முன்னேற வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது. மேற்கண்டவாறு விவாதம் மாநாட்டில் நடைபெறுகிறபோது, வெகுமக்களைத் திரட்டும் பாதையில், புரட்சிக் கட்சி செயல்பட்டிருக்கிறதா என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கம்யூனிஸ்ட்கள் தங்கள் குறைகளை மூடி மறைப்பதில்லை. மூன்றாண்டுகால செயல்பாட்டில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு அவற்றைக் களைவதற்கான திட்டங்கள், வரும் காலங்களில் புதிய உத்வேகத்தோடும், எழுச்சியோடும் பணியாற்றுவதற்கான வழிகள் ஆகியன அனைத்தையும் மாநாடு கண்டறியும்.
கம்யூனிஸ்ட் அல்லாத இதர கட்சிகளில் இந்த நடைமுறை இல்லை. திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் உள்ளூர் மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள பல வழிகளில் முயற்சிக்கின்றனர். ஆனால் அதற்கான நோக்கம், சுயநலம் சார்ந்தது. பணம், பதவி, அந்தஸ்து ஆகியவற்றை அடையவும், தேர்தல் ஆதாயம் அடையவும் அவர்கள் மக்களிடம் பணியாற்றுகின்றனர்; மக்களை திசை திருப்புகின்றனர்.
கம்யூனிஸ்ட்களுக்கு முதலாளித்துவ அமைப்பின் சுரண்டல் கொடுமையிலிருந்து மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அது மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கங்களே அதிகாரத்திற்கு வர வேண்டுமென்ற புரட்சி இலட்சியமும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
இதனால்தான் கட்சி உறுப்பினர் அனைவரும் கிளை மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் கடந்த கால வேலைகள் பற்றிய நிறை குறைகளை விவாதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்படுகிறது. மாற்று சமுதாயத்தை மக்கள் படைக்கிறார்கள்; ஆனால் மக்களைத் திரட்டி அவர்களை புரட்சிகரமாற்றத்திற்கு தயார் செய்யும் கடமை ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் உண்டு. அத்துடன் நடந்த பணிகள் பற்றி விமர்சிக்கும் ஜனநாயக உரிமையும் அவர்களுக்கு உண்டு. இது போன்ற உரிமைகள், கடமைகள் எதுவும் முதலாளித்துவக் கட்சிகளில் இருப்பதில்லை.
கட்சியின் பிளீனம் மாதாமாதம் கிளைக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும், அவற்றில் உறுப்பினர் கலந்து கொள்வது அவரது அடிப்படைக் கடமைகளில் ஒன்று என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதன் உள்ளார்ந்த பொருள் என்ன? முதலாளித்துவ கட்சியின் தலைமைதான் அக்கட்சியில் அதிகாரம் படைத்தது. மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டங்களில் உறுப்பினர் முழுமையாக கலந்து கொளவது என்பதற்கு மேலான நோக்கம் உண்டு.
அந்தப் பகுதி உழைக்கும் மக்களைத் திரட்டுவதற்கு தனது கருத்துக்களை கிளையில் பகிர்ந்து கொள்வதையும், முடிவுகள் எடுப்பதில் தனது பங்களிப்பையும் அவர் உறுதிப்படுத்துகிறார். கம்யூனிஸ்ட் கட்சியில்தான் உண்மையான ஜனநாயகம் நிலவுகிறது என்பதன் அடையாளமாக கட்சியின் மாநாட்டு நடைமுறைகள் அமைந்துள்ளன.
மக்கள் மனதை மாற்ற…..
கிளையின் இடையறாத அன்றாடப்பணிகளில் ஒன்று மக்கள் மனதை மாற்றுவதற்கான பிரச்சாரம். முதலாளித்துவ ஊடகப் பிரச்சாரம் ஆளும் வர்க்க கொள்கைகளை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதே போன்று, ஆளும் அரசுகளை விமர்சனம் செய்யும் சக்திகளும் சரியான தேர்வை மக்களுக்கு தெரிவிக்காமல், திசை திருப்ப பிரச்சாரம் செய்கின்றனர்.
மாறாக, வர்க்க ரீதியில் ஒற்றுமை கட்டி புரட்சிகர இலக்கை நோக்கிச் செல்வதற்கு கட்சிக்கிளை மக்களிடம் அன்றாட உரையாடல், பிரசுரங்கள், பத்திரிகை விற்பனை வழியாக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிளையும் ஓராண்டு தீக்கதிர் சந்தாவை கிளை மாநாடு நடைபெறுகிறபோது அளிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் இதழ் இந்த பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கிறது. இவை போன்ற செயல்பாடுகளும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
ஆக, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மாநாடு என்பது கட்சி வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம்.