ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வரும் போது, “இது ஏழை எளிய மக்களுக்கான அரசு” என்று ஒரு பொய்யினை அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால், ஆட்சி செயல்படும்போது, அவர்கள் யாருக்காகச் செயல்படுகிறார்கள் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகி விடும்.
எடுத்துக்காட்டாக, தற்போதைய மோடி அரசினைக் குறிப்பிடலாம்.மோடி தேர்தலின்போது ‘விவசாயிகள் தற்கொலையைத் தடுத்து நிறுத்துவேன்’, ’அனைவருக்கும் வேலை,’ ‘பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவேன்’ என்றெல்லாம் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தேவைகள் தொடர்பான வாக்குறுதிகளை அளித்தார்.
ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல,பெரு முதலாளிகளின் சொத்து, மூலதன அதிகரிப்பதற்கு இடையறாது பாடுபட்டு வருகிற அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது..பெரு முதலாளிகள் மற்றும் அந்நிய மூலதனத்தோடு அது கைகோர்த்துள்ளது என்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை.அவர்களின் சேவகனாக விசுவாசத்துடன் செயல்பட்டு வருகிறது.
அரசு என்பது என்ன?
உண்மையில் அரசு என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கங்களின் குரலாகவும்,அவர்களின் நலனைப் பாதுகாக்கும் ஏற்பாடாகவே உள்ளது.
மனிதச் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்டபோது அரசு தோன்றியது.ஆளும் வர்க்கங்களுக்கு, வெகு மக்களை அடக்கி, ஒடுக்கி ஆள்வதற்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது.அதற்கு அரசு இயந்திரம் பயன்பட்டு வந்துள்ளது..
மக்களை ஒடுக்குவதே,தற்கால முதலாளித்துவ அரசுகளின் செயல்பாடாக அமைந்துள்ளது.இந்த அரசைத் தகர்த்து, இதுகாறும் ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் புதிய அரசு மலர வேண்டும். இது தானாக உருவாகிவிடாது.
ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் வர்க்கக் ஒற்றுமை ஏற்பட்டு, வர்க்கக் கூட்டணி அமைய வேண்டும். அந்த வர்க்க கூட்டு நிகழ்த்தும் புரட்சியே முதலாளித்துவ அரசு அகற்றி,மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழி.
தொழிலாளிகள்.விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் வர்க்கங்களிடையே எவ்வாறு வர்க்க ஒற்றுமை ஏற்படும்.இங்குத்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு உள்ளது.வர்க்கக் ஒற்றுமை . கட்டி, வர்க்க கூட்டணி அமைத்துப் புரட்சியை முன் கொண்டு செல்வது, கம்யூனிஸ்ட் கட்சி .
துல்லியமான ஒரு ஆய்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் “சுதந்திரமும்,அதற்குப் பின்னரும்,”என்ற மூன்றாவது தலைப்பில் இந்தியச் சமுகத்தில் உள்ள வர்க்கங்கள்,அவர்களின் வாழ்க்கை நிலை, வேறுபட்ட பல வர்க்கங்களின் வாழ்வில் அரசின் கொள்கைகள் ஏற்படுத்தி வரும் தாக்கம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
இந்தத் தலைப்பின் கீழ் இந்தியச் சமுகத்தில் உள்ள வர்க்கங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பல கருத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது துல்லியமான ஒரு ஆய்வு. வர்க்கங்கள் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் வர்க்கங்களை, திரட்டிப் புரட்சிகர மாற்றம் ஏற்படுத்தும் பணி சாத்தியமில்லை.இந்த தேவையை மூன்றாவது அத்தியாயம் நிறைவேற்றுகிறது.
எதிரி யார்?
வர்க்கங்களை ஒடுக்கி ஆட்சி செய்து வரும் ஆளும் வர்க்கங்கள் எவை என்பதிலும் தெளிவு தேவை. எந்த எதிரிக்கு எதிராக வர்க்கக் கூட்டணி உருவாக்க வேண்டும்? இந்த அரசு யாருக்கானது?எந்த வர்க்கங்கள் இந்த அரசில் அங்கம் வகித்து மக்களை ஒடுக்கி வருகின்றன? இவை பற்றிய தெளிவு தேவைப்படுகிறது.
இதற்கான விடைகளை “அரசு கட்டமைப்பும் ஜனநாயகமும்” என்ற தலைப்பிலான ஐந்தாவது அத்தியாயம் கொண்டுள்ளது. துவக்கமாக வருகின்ற பத்தி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.
“இன்றைய இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றும் பொருட்டு, அன்னிய நிதி மூலதனத்துடனான தனது ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசின் பங்கையும், செயல்பாட்டையும் வர்க்கத் தன்மைதான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது”. (பாரா:5.1 )
மாபெரும் உட்கட்சி விவாதங்களால் உருப்பெற்ற நிர்ணயிப்பு இது.
இந்திய அரசு இந்தியாவில் உள்ள முதலாளித்துவ வர்க்கங்கள் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் கருவியாகச் செயல்படுவதைக் கட்சித் திட்டத்தின் இந்தப் பத்தி அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.
மற்றொரு தெளிவையும் இது வரையறுக்கிறது. முதலாளி வர்க்கப் பிரிவுகளில் எந்தப் பிரிவு ஆதிக்கம் செலுத்துகிறது?பெரு முதலாளித்துவ வர்க்கமே அரசின் தலைமை வர்க்கமாக உள்ளது.அதாவது,இந்த ஆட்சி முதலாளித்துவ ஆட்சியாக இருந்தாலும், பெருமுதலாளி வர்க்கத்தின் நலம் தான் ஆட்சியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் முக்கிய அடிப்படையாக உள்ளது.
தற்போதைய நிலையில் இது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. அரசின் அந்நிய மூலதனத்தை இந்தியப் பொருளாதாரத்தில் தடையின்றி நுழைத்திட ஏராளமான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.அரசின் இந்தக் கொள்கைகளால் பெருமுதலாளிகள் அல்லாத பல பிரிவினர் அதிருப்தி அடைகின்றனர்.எனினும் பெரு முதலாளிகளின் இலாப வேட்டைக்கும்,மூலதனக் குவியலுக்கும் இது உதவிடும் என்பதால் இந்தக் கொள்கையை விடாப்பிடியாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.எனவே ஆளும் வர்க்கக் கூட்டிற்குப் பெரு முதலாளிகளே தலைமை தாங்குகின்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அல்லாத பல கட்சிகள் ஆளும் வர்க்கக் கட்டமைப்பு பற்றித் தெளிவான பார்வை கொண்டிருக்கவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் சில மாறுதல்கள் இருந்தாலும் பெருமுதலாளிகள் தலைமை என்பதை இன்னமும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. முதலாளித்துவக் கூட்டணியில் வலுவான, குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்துகின்றனர் என்றே அவர்கள் கருதுகின்றனர். ஆனால் இது உண்மை நிலைக்கு மாறானது. அதிலும் நவீன தாராளமயக் காலத்தில் பெரு முதலாளிகளின் பலம்தான் அதிகரித்துள்ளது, அவர்களது மூலதனக் குவியலும் அதிகரித்துள்ளது.
இந்திய அரசினைக் கட்டுப்படுத்துகிற, முதலாளித்துவ வர்க்கக் கூட்டணியில் பெரு முதலாளிகள் தலைமைப் பொறுப்பில் உள்ளனர் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உண்மையானது என்பதனை இன்றைய இந்திய அரசியல் நடப்புகள் தெளிவாக்குகின்றன.
மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், நிலப்பிரபுத்துவம் ஆட்சி அதிகாரத்தின் அங்கமாக இருக்கிறது என்று வரையறுக்கிறது. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிலப்பிரபுத்துவம் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்று மட்டுமே குறிப்பிடுகிறது.இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும் பெரு முதலாளிகள் தலைமை எனும் கருத்தாக்கத்தை ஏற்கவில்லை.அதிகாரத்தில் நிலப்பிரபுத்துவத்தின் இடம் குறித்தும் அவர்களுக்கு மாறுபட்ட பார்வை உண்டு.
கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் அரசின் வர்க்கத் தன்மை குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையிலிருந்து மாறுபட்ட பார்வையுடன் இதர இயக்கங்கள் செயல்படுகின்றன.எனினும் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, அந்நிய நிதிமூலதன நலன்களைப் பாதுகாக்கும் கருவியாக இந்திய அரசு செயல்படுகிறது என்பதில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குள் மாறுபட்ட கருத்து இல்லை. அதனால்தான், தற்போது இடதுசாரி மேடையில் கூட்டுச் செயல்பாடுகள், கூட்டு இயக்கங்கள் அதிகரித்து வருகின்றன.
திட்டவட்டமான நிலைமைகள் குறித்த திட்டவட்டமான ஆய்வே, மார்க்சியத்தின் முக்கிய சாராம்சமும், மார்க்சியத்தின் உயிர்த்துடிப்புள்ள ஆன்மாவும் ஆகும் என்றார்,லெனின்.
இந்த லெனினிய பார்வையுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அமைந்துள்ளது. இந்திய சமுகத்தின் வர்க்கக் கட்டமைப்பு, உழைக்கும் பாட்டாளி வர்க்கங்களின் மீது ஒடுக்குமுறை, சுரண்டலை நிகழ்த்தும் ஆளும் வர்க்கக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் பிசிறின்றி விளக்கிடும் ஆவணமாகக் கட்சி திட்டம் அமைந்துள்ளது. வர்க்கக் கட்டமைப்புகள் பற்றிய இந்தப் பார்வை பாட்டாளி வர்க்கம் புரட்சிக் கடமையை ஆற்றிட வழிகாட்டுகிறது.