(குரல்: தேவிபிரியா)
இர்ஃபான் ஹபீப்
தமிழில் ச. லெனின்
பகத்சிங் அவரின் உயிர் தியாகத்திற்காக கொண்டாடப்படுகிறார். பலர் இந்த உணர்ச்சிப் பெருக்கினாலேயே சிந்தனையாளராகவும், அறிவிஜீவியாகவும்
பகத்சிங்கின் பங்களிப்பை மறக்கின்றனர்; சிலர் வேண்டுமென்றே மறைக்கின்றனர்.
பகத்சிங்கிற்கு முன்பும், பின்பும் பலர் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் மற்றவர்களை போல் அல்லாமல் பகத்சிங்கிற்கு சுதந்திர இந்தியா பற்றிய ஒரு பார்வை இருந்தது. சமீப ஆண்டுகளாக, பகத்சிங்கை இந்தியாவின் முகமாக காட்டும் ஒரு வழக்கம் வளர்ந்துள்ளது. அதே நேரம் தேசியம் குறித்த அவரின் பார்வை அந்த அளவிற்கு பேசப்படுவதில்லை.
சுரண்டலிலிருந்து விடுதலை
வெறும் இருபது வயதே நிரம்பிய நிலையில் சர்வதேச நட்புறவை பேசிய பகத்சிங் போன்ற ஒரு இளைஞனை நாம் காண்பது அரிது. விடுதலை போராட்ட வரலாற்று நாயகர்களிலேயே இத்தகைய விசால பார்வை கொண்ட நபர் பகத்சிங்காகத்தான் இருக்கும்.
பகத்சிங் வெறும் தேசபக்தர் மட்டுமல்ல. சுதந்திர இந்தியா பன்முகம் கொண்ட, பொதுவுடமை சமூகமாக இருக்க வேண்டும் என்கிற பார்வையை கொண்டிருந்தார். தேசத்தின் மேல்தட்டில் உள்ள இரண்டு சதத்தினரால் ஆட்சி செய்யப்படாமல், 98 சதவீதமான எளிய மக்களால் இந்தியா ஆளப்பட வேண்டும் என்று எண்ணினார்.
அவருடைய “விடுதலை” என்கிற முழக்கம் வெறும் பிரிட்டிஷாரிடமிருந்தான விடுதலையை மட்டும் குறிக்கவில்லை. அது வறுமையிலிருந்து விடுதலை, தீண்டாமையிலிருந்து விடுதலை, மத மோதல்களிலிருந்து விடுதலை, அனைத்து விதமான பாகுபாடுகளிலிருந்தும், சுரண்டலிலிருந்துமான விடுதலை என்பதை உள்ளடங்கியதாக இருந்தது. பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு சரியாக இருபது நாட்களுக்கு முன்பாக 1931 மார்ச் 3ம் தேதி இளைஞர்களுக்கு அவர் அனுப்பிய செய்தியில்.. “தங்களுடைய சுய லாபத்திற்காக சாதாரண ஏழை உழைப்பாளர்களை சுரண்டும் கூட்டம் இருக்கும் வரை இந்தியாவில் அதற்கெதிரான போராட்டம் தொடரும். சுரண்டுபவர்கள் பிரிட்டிஷாராக இருந்தாலும், பிரிட்டிஷ் – இந்தியர்கள் கூட்டாக இருந்தாலும், அல்லது இந்தியர்களாகவே மட்டும் இருந்தாலும் சுரண்டலுக்கு எதிரான அப்போராட்டம் தொடரும்” என்றார்.
புரட்சி – முதலாளித்துவத்திற்கான சாவு மணி
பகத்சிங் முழங்கிய இன்குலாப் என்பது வெறும் அரசியல் புரட்சியை மட்டும் குறிக்கவில்லை. பழைய சமூக பாகுபாடுகளை உடைத்தெறியும் சமூக விடுதலையையும் உள்ளடக்கியதாக அவரின் முழக்கம் இருந்தது.
“புரட்சி ஓங்குக” என்கிற அவர்களின் முழக்கம் வெறும் உணர்ச்சிவயப்பட்ட முழக்கமல்ல; உயர்ந்த சிந்தனையை உள்ளடக்கியது என்பதை “இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன்” சார்பில் வெளியிடப்பட்ட “வெடிகுண்டின் தத்துவம்” என்கிற பிரசுரம் எடுத்துக்காட்டும்.
“புரட்சி முதலாளித்துவத்திற்கும், வர்க்க வேறுபாட்டிற்கும், சாவு மணி அடிக்கும். அது ஒரு புதிய சமூக முறைமையை கொண்ட புதிய அரசை உருவாக்கும்” என்று அப்பிரசுரத்தில் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம் “புரட்சி என்பது வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் கலாச்சாரம் அல்ல. அநீதிகளை அடிப்படையாக கொண்ட தற்போதைய நிலைமைகளை மாற்றுவதையே நாங்கள் புரட்சி என்கிறோம்” என்று 1929 ஜூன் 6 ஆம் தேதி பகத்சிங் நீதிமன்றத்தில் உறுதியாக தெரிவிக்கிறார்.
புரட்சி என்பது அராஜகவாதத்திற்கானதல்ல; அது சமூக நீதிக்கானது. இந்தியாவில் நிலவும் சமூக, அரசியல், பொருளாதார நிலையை ஒழித்து ஒரு புதிய சகாப்தத்தை படைப்பதே புரட்சி என்றும், அதுவே தங்களது இலக்கு என்றும் இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோசியேஷன் முன்வைத்தது.
இவைகளை எல்லாம் கருத்திலே கொள்ளாமல், அவர்களின் தீவிரமான சமூக திட்டங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பகத்சிங் மற்றும் அவரின் தோழர்களை வெறும் உணர்வு ரீதியான தேசபக்தர்களாகவும், காலனிய எதிர்ப்பாளர்களாகவும் மட்டும் பலர் சித்தரிப்பது சரியானதுமல்ல; முழுமையானதுமல்ல. சமூகம், அரசியல் குறித்த பகத்சிங்கின் எழுத்துக்களும், சாதி, வகுப்புவாதம் மொழி, அரசியல் பற்றிய அவரது பார்வையும், அவரின் அறிவார்ந்த சிந்தனையை எடுத்துக்காட்டும்.
“மார்க்சும், லெனினுமே பகத்சிங்கின் அரசியல் குருக்கள். அவருக்கு சோசலிசம் மீது உறுதியான நம்பிக்கை இருந்தது” என்கிறார் பகத்சிங்கின் நெருங்கிய தோழர் ஜெய்தேவ் கப்பூர். சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற, பொதுவுடைமை சமூகமாக இருக்க வேண்டுமென்றே அவர் கனவு கண்டார்.
பத்திரிக்கையின் பணி
“கீர்த்தி” இதழில் 1928ல் மே மாதம் எழுதிய “மதமும் நமது சுதந்திர போராட்டமும்” என்கிற கட்டுரையை பகத்சிங் எழுதியுள்ளார். அதில் அரசியலில் மதத்தின் பங்கு பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது இன்றும் நாம் இதன் ஆபத்தை எதிர்கொண்டு வருகிறோம்.
நம்பிக்கைகளை மத வழிபாட்டுடன் இணைத்த தத்துவமாக மதம் இருந்தால் அது உடனடியாக அகற்றப்பட வேண்டிய ஒன்று என்றும், மனிதனின் அடிப்படை தேவைகளை கொண்ட தத்துவமாக மதம் இருப்பின் அதற்கு ஒரு அர்த்தமுண்டு என்றும் அக்கட்டுரையில் பகத்சிங் குறிப்பிடுகிறார். மேலும், வழிபாட்டு முறைகளே தீண்டப்படுவோர், தீண்டப்படாதோர் என்கிற பிரிவினையை உருவாக்குகிறது.
இத்தகைய குறுகிய சிந்தனை கொண்ட மதத்தால் நம்மிடையே ஒற்றுமையை கொண்டுவர இயலாது.
நமக்கு விடுதலை என்பது பிரிட்டிஷ் காலனியத்திடமிருந்து மட்டுமான விடுதலை அல்ல. சாதி, மத தடைகளை கடந்து அனைவரும் இணைந்து வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையே முழுமையான விடுதலைக்கான அர்த்தம் என்கிறார் பகத்சிங்.
“பத்திரிக்கையின் பணி என்பது மக்களுக்கு கற்பிப்பதாகும். குறுகிய பிரிவினைவாதம், வகுப்புவாத உணர்வு இவைகளிலிருந்து மக்களை தெளிவுபடுத்தி உண்மையான தேசிய உணர்வை மக்களிடம் அது உருவாக்கிட வேண்டும். ஆனால் அவை மக்கள் மத்தியில் அறியாமையையும், ஆதிக்கத்தையும், பிரிவினையையும், வகுப்புவாதத்தையும் பரப்பி நமது பன்முக கலாச்சாரத்தையும், ஒன்றுபட்டு வளர்த்த பாரம்பரியத்தையும் அழிக்கிறது” என்று பகத்சிங் குறிப்பிட்டுள்ளது இன்றும் பொருந்துகிறது.
சக மனிதனை சமமாக மதிக்காதது மதமா?
1928 ஜூன் மாதம் பகத்சிங் எழுதிய “தீண்டாதோர் குறித்து” மற்றும் “வகுப்புவாத மோதலும் அதற்கான தீர்வுகளும்” என்ற இரண்டு கட்டுரைகள் இன்றும் இந்த பிரச்சனைகள் குறித்து மிக சிறிய அளவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.
“ஆறு கோடி இந்திய பிரஜைகளை தீண்டப்படாதவர் என்று கூறும் தனித்தன்மை வாய்ந்த நாடாக நமது நாடு உள்ளது. அவர்கள் கோவிலுக்குள் சென்றால் கடவுள் தீட்டாகிவிடுவார் என்று இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கூறுவதெல்லாம் வெட்கக்கேடானதாகும். ஆன்மீக நாடு என்று பெருமை பேசும் நாம்தான் சக மனிதனை சமமாக பார்க்க தெரியாமல் உள்ளோம். பொருள்முதல்வாதம் பேசும் ஐரோப்பா நூற்றாண்டுகளாக புரட்சிகர செயல்களை பேசுகிறது.
அமெரிக்க, பிரெஞ்ச் புரட்சியின் போதே அவர்கள் சமத்துவத்தை முன்வைத்துவிட்டனர். ஆனால் நாமோ இன்றும் தீண்டத்தகாதவர்கள் பூணூல் அணிய உரிமை உண்டா? வேதத்தை அவர்கள் வாசிக்க அனுமதிக்கலாமா? என்று விவாதித்துக்கொண்டுள்ளோம்”.
“மிருகங்களை விட மோசமாக அவர்களை நடத்தினால், அவர்கள் தங்களை மனிதர்களாக மதித்து நடத்தும் மாற்று மதத்தில் கட்டாயம் சேர்வார்கள். ஆனால் இது கிறிஸ்தவமும், இஸ்லாமும் இந்துயிசத்தை தாக்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது” என்று விமர்சன பார்வையோடே அன்றைய மத நிறுவனங்களின் செயல்பாடுகளை அவர் பார்த்தார்.
உண்மையான மதச்சார்பின்மை
1926ல் லாகூரில் பகத்சிங் உருவாக்கிய நவ ஜவான் பாரத் சபாவில் இணைபவர்களிடம் “தனது சொந்த சமூகத்திற்கும் மேலாக தேச நலனை முன்னிறுத்துவேன்” என்கிற உறுதிமொழி பெறப்பட்டது. இது 1920 களில் மத ரீதியான அணி சேர்க்கையை தீவிரமாக மேற்கொண்ட ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இந்த இளைஞர் கூட்டம் இப்படி சிந்தித்து செயல்பட்டது குறிப்பிடத் தகுந்ததாகும்.
அதிதீவிர தேசியவாதத்தின் வலுவானதாக விளங்கிய லாலா லஜபதிராய் இந்து மகா சபையுடன் கைகோர்த்தபோது அவரையும் இந்த இளைஞர் கூட்டம் கடுமையாக சாடியது. “பஞ்சாப் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்” என்ற பிரசுரத்தில் லஜபதிராயை துரோகி என்று விமர்சித்து கேதர்நாத் சேகர் எழுதினார். பகத்சிங் ஒரு ரஷ்ய ஏஜெண்ட் என்றும், லெனினைப் போல் தன்னை ஆக்கிக் கொள்ள பார்க்கிறார் என்றும் லஜபதிராய் எதிர்வினையாற்றினார்.
பகத்சிங்கும் அவரது இயக்கமும் மத நல்லிணக்கத்தையே தங்களின் மையமான அரசியல் பொருளாக கொண்டிருந்தனர். காங்கிரஸ் தங்களின் மதச்சார்பின்மையை வெளிப்படுத்திக் கொள்ள “அல்லா உ அக்பர், சத் ஸ்ரீ அகால் (கடவுளே உண்மை -சீக்கியர்கள் சொல்வது) வந்தேமாதரம் என்று கூறி வந்தனர். இதற்கு மாறாக அந்த இளைஞர்கள் “புரட்சி ஓங்குக, இந்துஸ்தான் ஓங்குக” என்றே முழங்கினர்.
தேசப்பிரிவினைக்கே ஊக்கமளித்த வகுப்புவாத போக்கை ஊக்குவிக்கும் கொள்கைகளை பகத்சிங் கேள்வி எழுப்பினார். அரசிலிருந்தும், அரசியலிலிருந்தும் மதத்தை ஒதுக்கி வைப்பதே உண்மையான மதச்சார்பின்மை என்பதை வலியுறுத்தும் நவீன தேசிய தலைவர்களின் வரிசையில் பகத்சிங் முன்னணியில் உள்ளார்.
சிறந்த அரசியல் சிந்தனையாளர்
பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சிறையில் இருந்த இரண்டாண்டுகள் அவரை சிறந்த அரசியல் சிந்தனையாளராக மாற்றியது. அவரின் அரசியல் பரிணாமத்தை சிறை குறிப்புகளே எடுத்துக்காட்டும். அது அவரின் வாசிப்பு பழக்கத்தையும், மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெட்ராண்ட் ரசூல், டி.பெயின், அப்டன் சிங்க்ளர், லெனின், வில்லியம் வேர்ட்ஸ்வேர்த், டென்னிசன், தாகூர், புக்காரின்,
டிராட்ஸ்கி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் நூல் வரிசையும் தெளிவுப்படுத்துகிறது. அவரின் சிறந்த புத்தகங்களின் ஒன்றான “நான் நாத்திகன் ஏன்?” என்கிற புத்தகமும் சிறையில் எழுதப்பட்டதே.
மதம் என்பது சுரண்டுபவர்களிடம் உள்ள ஒரு ஆயுதம். தங்களின் சுயநலனுக்காக கடவுளின் பெயரை சொல்லி பயம் ஏற்படுத்தி வெகுஜனத்தை ஆட்டி வைக்கின்றனர் என்று பகத்சிங் மிகத்தெளிவாகவேஉணர்ந்திருந்தார் என்கிறார் அவரின் நெருங்கிய தோழர் மன்மதநாத் குப்தா. பசி கொண்ட வயிற்றிற்கு மதமும், வெற்று மத போதனைகளாலும் எந்த பயனுமில்லை. அவர்களுக்கு உணவே கடவுள் என்பதை இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷனில் உள்ள அனைவரும் உணர்ந்தே இருந்தனர்.
“பட்டினியால் வாடும் வயிற்றை நிரப்ப மீன்பிடிப்பவனுக்கும், குளிர்கால இரவில், சாலையின் ஓரத்தில் இருக்க இடம் தேடுபவனுக்கும் கடவுளும், அறநெறியும் வெறும் வார்த்தைகளே” என்கிற ஓரஸ் கிரீலியின் வரிகளை தனது சிறை குறிப்பில் எழுதி வைத்திருந்தார் பகத்சிங்.
அந்த காலக்கட்டத்தில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையோடு இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன் வளர்ந்திருந்தது. அதிலிருந்த பலர் சோஷலிச, கம்யூனிச கருத்து நிலையோடு மிக நெருங்கி வந்திருந்தனர். தனி நபர் பயங்கரவாதத்தை விட மக்கள் இயக்கமே அவசியம் என்பதையும் உணர்ந்திருந்தனர்.
சமூக மற்றும் பொருளாதார நீதியை முன்வைத்த பகத்சிகின் மாற்று அரசு குறித்த கனவை நாம் மிகுந்த பெருமிதத்தோடு நினைவு கூற வேண்டும். உலகமய சூழலில் அவர் சொன்ன சோஷலிசத்தின் பால் பலர் ஈர்ப்புடன் இல்லாவிட்டாலும், சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள அம்சங்களில் கூடுதல் கவனம் அவசியம் என்பதை இன்றைய நிலையும் வலியுறுத்துகிறது. குறுகிய சாதிய, மதவாத மனோநிலையிலிருந்து வெளியேறி, மேன்மையான ஒன்றை உருவாக்குவது என்கிற பகத்சிங்கின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய மிக சிக்கலான காலத்தில் நாம் உள்ளோம். இதை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டியுள்ளது.
(2017 அக்டோபர் – டிசம்பர் மாத மார்க்சிஸ்ட் ஆங்கில இதழில் இர்ஃபான் ஹபீப் எழுதிய கட்டுரையின் சுருக்கம்)